செய்தி: முருகன் தமிழ் கடவுள், அவர் அண்ணன் விநாயகர் மட்டும் இந்திக்கடவுளா? திருமா கேள்வி.
உண்மையில் திருமாவளவன் கேட்டது நியாயமான கேள்வி. சும்மா தமிழ் கடவுள்,தெலுங்கு கடவுள் என்பதெல்லாம் அயோக்கியத்தனமான புழுகு. ஹிந்து கடவுள்கள் என்பதுதான் சரி. ஹிந்து மதத்தை வெறுக்கிறோம், சடங்குகளை வெறுக்கிறோம் என்றால் சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் என எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்க வேண்டும். இதைத்தான் பெரியார் செய்தார். அந்த வகையில் அவருக்கு நேர்மை இருந்தது.
இந்த அடிப்படை நேர்மை கூட தமிழன் வேறு ஹிந்துக்கள் வேறு என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இல்லை. தமிழர்களின் பெருமை என்று சொல்லப்படுகிற கோவில்கள்,இலக்கியங்கள், பண்பாடு விழுமியம் எல்லாம் வேண்டும். ஆனால் தமிழனுக்கு மதமில்லை என்ற உருட்டும் வேண்டும் என்றால் இது ஒரு மோசடிவாதமில்லையா?
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும். சங்கப்பாடலில் சொல்கிற தெய்வங்களுக்கும் வேதக் கடவுளர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் Iconography ல் என்ன வேறுபாடு உள்ளது? கீழே உள்ள குறுந்தொகை கடவுள் வாழ்த்துப்பாடலை கவனியுங்கள்.
தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
— பாரதம் பாடிய பெருந்தேவனார்
இதன் பொருள்: தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.
எவ்வளவு தெளிவாக முருகன் பவழம் போல சிவந்தவன்,வேல் படையை உடையவன்,தாரக வதமான கிரவுஞ்ச மலையை எறிந்தது என வரிசையாக கந்தபுராணத்தையே பாடிவிட்டார்கள்?
நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே.
— ஐங்குறுநூறு
நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்று அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்தையே சொல்லிவிட்டது சங்கப்பாடல். ஆலமர்செல்வன், முக்கண் முதல்வன் என்றெல்லாம் தெளிவாக சிவனைப் பற்றி ஆகமங்களும் புராணங்களும் போற்றும் உருவத்தையே ஒப்பிடுகிறது சங்கப்பாடலும்.
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை,நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே,மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே,வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்
— புறநானூறு 56
மேலே கண்ட புறப்பாடல் தெளிவாக தெய்வ அடையாளங்களை சொல்கிறது. மதுரை கணக்காயனார் மகன் நக்கீரன் பாண்டியன் இலவந்திகை பள்ளித் துஞ்சிய நன்மாறனை பற்றி புகழ்ந்து பாடியது. இதன் காலம் பொதுயுகம் 2ம் நூற்றாண்டு என்கிறார்கள்.
அந்தப் பாடல் பாண்டியனை இப்படிப் புகழ்கிறது.
“காளைமாட்டு ஊர்தி,
தீ போன்று விரிந்த செஞ்சடை,
கையில் கணிச்சி ஆயுதப் படை,
கழுத்தில் நீலநிற நஞ்சுமணி
ஆகியவற்றை உடைய சிவபெருமான் என்று கூறும்படி
இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.
கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,
கலப்பை ஆயுதப் படை, பனைமரக் கொடி ஆகியவற்றை உடைய
பலராமன் போல் வலிமை கொண்டவன்.
கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,
கருடப்பறவைக் கொடி ஆகியவற்றை உடைய
திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்.
மயில் கொடி, பிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்டு
வெற்றியாளனாக விளங்கும் முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்”.
தெளிவாகவே மேலே கண்ட பாடலும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள். Iconography ல் எந்த மாற்றத்தையும் இது சொல்லவில்லை என்பதை வாசித்தாலே புரியும்.
இதில் பிணிமுகம் என்ற முருகனின் வாகனமான யானை பற்றிய தகவல் நமது புராணத்திலேயே உண்டு. முருகன் சூரனை வதம் செய்வதற்கு முன்னர் அவருடைய வாகனங்களில் ஒன்று பிணிமுகம் என்கிற யானை. இதன் உட்பொருள் யானையும் மயிலும் பிரணவ சொரூபம். மயில் மீது வருவதற்கும் பிணிமுகத்தின் மீது வருவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தோகை விரித்த மயில் மீது முருகன் வீற்றிருப்பது பிரணவத்தின் உட்பொருளாக முருகன் உள்ளான் என்பதையும், பிணிமுகத்தில் அமரும்போது பிரணவத்தை இயக்குபவனாக இருந்து முருகன் அதனைச் செலுத்துகிறான் எனப் பொருள்படும்.
பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் புகழும் இரண்டாம் பத்து பாடலில் தெளிவாகவே முருகனின் புராண செய்தி வருகிறது.
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு..
துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்,சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த பெரும் புகழையுடைய,கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான் தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல என்று நெடுஞ்சேரலாதனின் போர் பரணியை பாடுகிறார் புலவர்.
இதில் நேரடியாகவே சூரன் மாமரமாக ஆகியிருந்ததையும் அவனை அறுத்தெறிந்த சூரசம்ஹாரத்தையுமே விளக்கிவிட்டார்கள். இதில் கஜவாகனனாக முருகன் உவமை செய்யப்படுகிறார்.
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்”
என கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடுகிற புகழ்பெற்ற பாடல் சொல்வது என்ன?
இந்திரர் என்றால் தேவர்கள் என்று பொருள்.அமிர்தம் என்பது தேவர்களுக்கு கிடைத்தது,அவர்கள் பருகுவது என்பதே ஹிந்து தொன்மங்கள் சொல்வது.அதை நேரிடையாக குறிப்பிடுகிறது மேற்கண்ட பாடல்.
திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பினானே.
— புறநானூறு 241
வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வஜ்ஜிரம் என்னும் ஆயுதத்தையும்,பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில் போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன.அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.
வீரசுவர்க்கம் புகுந்த ஆய் அண்டிரனை இந்திரன் வரவேற்றான் என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார். இதில் இந்திரன் வஜ்ஜிராயுதத்தை உடையவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சொர்க்கத்தின் அதிபதி என்பதும் தெரிய வருகிறது. பிறகு இந்த இந்த இந்திரன் வேறு அந்த இந்திரன் வேறு என்றெல்லாம் உளருவதை சகிக்க முடியவில்லை.
“இட்டெண்ணி தலைகொடுக்கும் எயினர் “என்று கொற்றவைக்கு முன்னால் தலையைக் கொடுக்கும் சிலை இன்று வரை எல்லா சிவன் கோவிலிலும் துர்க்கைக்கு அருகே அதே வடிவத்தோடு நிற்கிறது.
இத்தனை சாட்சிகள் தொடர் சாட்சியாய், சாஸ்வத தர்மமாக இங்கே வீற்றிருக்கிறது. ஆனால் இத்தனையையும் மறைத்துவிட்டு தமிழ் கடவுள், தெலுங்கு கடவுள் என்று சொல்லி ஹிந்துக்கடவுள் என்ற உண்மையை மறைக்கிறது ஒரு திருட்டுக் கூட்டம்.
ஆகவே,சிவனின் ஒரு மகன் மராட்டியனாகவும் இன்னொரு மகன் தமிழனாகவும் இருக்க முடியாது. எனவே இவர்கள் மொத்தமாகவே ஹிந்து கடவுள்கள் என்பதை ஆணி அடித்தது போல எடுத்துச் சொன்ன திரு.திருமாவளவன் MPக்கு நன்றி.
கட்டுரையாசிரியர் சுந்தர்ராஜ சோழன் தமிழ்நாடு அரசியல், தேசிய அரசியல், சமூகப் பிரசினைகள் மற்றும் வரலாறு குறித்து தொடர்ந்து காத்திரமான, சுவாரஸ்யமான பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்.
Great.True.
அகத்தியருக்கு தமிழுரைத்தவன் முருகன் என்பது நம்பிக்கை. அதனால் தமிழ்க் கடவுள் முருகன் என்பதும் நம்பிக்கை. நாத்திகர்களோடு சேர்ந்து மரபார்ந்த நம்பிக்கைகளை விடப்போகிறோமா