நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்

இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டுவரும் பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ்.

சரியாகச் சொல்வதானால், ஆர்.எஸ்.எஸை எதிர்க்கும் இந்து விரோத, தேச விரோத சக்திகள் எல்லாம் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லாம் அவதூறு பரப்பவில்லை. இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடையேயும் ஆர்.எஸ்.எஸ் என்ன மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தேச விரோத இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அளவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதெல்லாம் புரிந்ததனால்தான் எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸைக் கட்டம்கட்டி அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

நம் தேசத்தில் நடக்கும் அனைத்து நற்செயல்களுக்கும் வேர் என்பது ஆர்.எஸ்.எஸில் தான் இருக்கிறது என்பதால் அந்த வேரில் அமிலத்தை ஊற்றிவருகிறார்கள்.

தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு என்ன, கோட்பாடு என்ன என்பது பற்றியெல்லாம் பொதுவெளியில், ஊடகங்களில், கல்விப் புலங்களில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்றும் தாய்க்குச் செய்யும் தொண்டை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்றும் ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே… பலவீனமும் அதுவே.

தான் ஒரு நன்மை செய்துவிட்டு ஒன்பது நன்மை செய்ததாகச் சொல்லிக் கொள்ளும் நபர்கள் இருக்கும் உலகம் மட்டுமல்ல இது. எதிரி ஒரு தவறு செய்தால் அதை ஒன்பதாகப் பெருக்கிக் காட்டும் உலகாகவும் இருக்கிறது.

என்னைப் பற்றிய உண்மைகளை நானே ஏன் சொல்லிக் கொண்டு நடக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஒரு நத்தை போல் கூட்டுக்குள் சுருங்கிக்கொண்டுவிடுவதால், கண்டவர்கள் எல்லாம் பரப்பும் கட்டுக்கதைகளே ஆர்.எஸ்.எஸின் கதையாகிப் போய்விடுகிறது.

தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தால் மட்டும் போதாது. எதிரில் நின்று சேற்றை வாரியிறைக்கும் அயோக்கியர்களுக்கு எதிர்வினை புரிந்தாகவும் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸோ தான் செய்யும் நல்ல விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதுபோலவே தன் மீது வீசப்படும் சேறுகளையும் தடுக்கவோ போக்கவோ முயற்சி செய்வதே இல்லை. இதனால் என்ன ஆகிறது ஆர்.எஸ்.எஸ் கறைபடிந்த ஆடையுடனே காலம் கழிக்க நேருகிறது.

இப்படியான நிலையில், ஆர்.எஸ்.எஸைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற எளிய நோக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ்-ன் உண்மைக் குறிக்கோள் என்ன?

வர்ணங்கள் பற்றி சாதி , தீண்டாமை பற்றி ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது?

பட்டியல் சமுகத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு என்னவெல்லாம் செய்து வருகிறது?

மனு ஸ்மிருதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கலப்புத் திருமணம், இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது?

டாக்டர் அம்பேத்கரைப் பற்றி ஆர்எஸ்எஸ் என்ன சொல்லியிருக்கிறது? என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸின் ஆதார நூல்களையும் இந்து மதத்தின் புனித நூல்களையும் மேற்கோள்காட்டியும் தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

இது பூக்கடைக்குச் செய்யப்படும் விளம்பரம் அல்ல; சாக்கடைகளுக்குச் சொல்லப்படும் பதில்.

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன்
(ஓர் அம்பேத்கரியரின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்)
ஆசிரியர்: ம.வெங்கடேசன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 250


இணையத்தில் இங்கு வாங்கலாம்.

தொலைபேசி மூலம் 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97 ஆகிய எண்களில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *