நம்மிடையே புழங்கும் பலவிதமான கம்பர் உருவங்களின் ஒரு தொகுப்பு கீழே.
இதில் காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். இந்திய அரசு தபால் தலையும், சென்னை கடற்கரை சிலையும் அதன் வார்ப்பில் அமைந்தவை. இரண்டுமே அழகாக உள்ளன.
ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். கரப்பான் பூச்சி மீசையும் கிராப்புத் தலையும் கொண்ட வினோதமான கம்பன் உருவம், டி.கே.சிதம்பரநாத முதலியார், ம,பொ.சிவஞானம் போன்ற ஒரு முகத்தை கம்பனுக்குக் கொடுப்பது போல வலிந்து செய்யப் பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது துரதிர்ஷ்ட வசமானது. பிறகு சிலர் இதை முறுக்குமீசையாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இனி வரும் காலங்களில், கம்பன் கழகங்களும், கம்பராமாயண பதிப்பாளர்களும், பாடப்புத்தகங்களும் எல்லாம் ஆதாரபூர்வமான வடிவத்தையும், அதோடு ஓரளவாவது ஒப்புமை உள்ள படங்களையும் பயன்படுத்துவதே நல்லது, சரியானது.
தமிழின் மகத்தான பெருங்காவியமாக இராமகாதையை நமக்களித்த கவிச்சக்கரவர்த்தியின் உருவத்தை குழப்படிகள் இல்லாமல் சரியான முறையில் சித்தரிப்பது நமது கடமை.