தமிழின் தெய்வீகத்தன்மைக்கு அடிப்படையாக இருக்கும் முதன்மை திருநூல் தொகுப்புகளில் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் அதி முக்கியமானது. அதனை அதன் ஆழ்பொருளையும், தத்துவ தரிசன செரிவையும் இசைச்சுவையையும் தமிழ்சுவையையும் சேர்த்து அனைத்து மக்களிடமும் கொண்டு சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
‘பாமர மக்களிடமும் ‘ என்று ஒரு பதம் இப்போதெல்லாம் பழகி வருகிறது. இப்படி சொல்கிறவர்களுக்கு நம்மைத் தவிர மற்றவரெல்லாம் பாமர மக்கள்தான். ஆனால் படித்தவர் என நினைப்பவர்களும் பண்பட்டவர்கள் என தம்மை நினைப்பவர்களும் திருவருள் திறத்தாலும் அறத்தாலும் கீழானோராக இருப்பார்கள். எனவே எவரையும் பாமரர் என கருதாமல் அனைத்து தளத்திலும் அனைத்து படிநிலைகளிலும் உள்ள மக்களுக்கு நம் இந்து சமயத்தின் தெய்வத்தமிழ் மறைகளை கொண்டு சென்று சேர்த்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் போல தமிழுக்கு தொண்டு செய்த மகாத்மாக்களை காண்பது அரிது. நாகர்கோவிலில் டிவிடி பள்ளிக்கூடத்தில் அவர் உரைகள் நடக்கும் சிறுவயதில் தவறாமல் சென்று கேட்பேன். அவர் கதா காலட்சேபம் செய்கிற மாதிரி அவரை மிமிக்கரி பண்ணுவது எளிது. பலரும் அதை செய்கிறார்கள். வேடிக்கையாகவும் தொழிலாகவும். மேலோட்டமாக அவரது நகைச்சுவையையும் செய்து பார்ப்பதுண்டு. ஆனால் அவரது ஒரு பேச்சுக்கு பின்னால் இருக்கும் அவரது மாணவ பருவ ஆழ்ந்த படிப்பையும் அறிவையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. அவரது கருத்தின் சாகர விரிவிலும் அந்தமற்ற ஆழத்திலும் ஒரு துளியை நம்மால் உள்வாங்க முடிந்தால், ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல நாமும் அறிவாளிகள் ஆகிவிடுவோம் இன்றைய சூழலில். ஆனால் அதற்கே ஆளில்லை இங்கே.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அறிவு அவரது திருப்புகழமிர்தம் என்கிற பத்திரிகை மூலமும், பல தொகுதிகளாக இருக்கும் திருப்புகள் விரிவுரை நூல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை திராவிடப்பதர்களும் தெய்வத் தமிழுக்கு செய்த தீமையை அனலில் இட்ட பஞ்சாக அழிக்கும் வலிமை சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரைக்கு உண்டு.
ஒரு உதாரணம் மட்டும்.
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு முகமான…
இது சிதம்பரம் திருப்புகழ். இதில் ’முதுஞான சொருபகிரி’ என்பதற்கு வாரியார் சுவாமிகள் தரும் விளக்கம் இது:
”ஞானம்-அறிவு. அறிவு சிறிது சிறிதாக நமக்கு வளர்ச்சியுறுகின்றது. இறைவனிடமுள்ளது முற்றறிவு; பேரறிவு தானே எல்லாவற்றையும் அறிவது ஆதலின் முதுஞானம் என்றனர். முதுஞானம் பழுத்த ஞானம். அந்த ஞானமே இறைவனுக்கு வடிவம். நம்மைப் போன்ற ஏழு தாதுக்களாலான உடம்பு இறைவனுக்கில்லை.
ஞானந் தான் உரு வாகிய நாயக னியல்பை
யானும் நீயுமா யிசைத்துமென் றாலஃதெளிதோ
மோனந் தீர்கலா முனிவரும் தேற்றிலா முழுதுந்
தானுங் காண்கிலன் இன்னமுந் தன் பெருந் தலைமை
என்றனன் சிங்கமுகன்.
அறிவும் அறியாமையுங் கடந்த
அறிவு திருமேனி யென்றுணர்ந்துங்
அருண சரணாரவிந் தமென்று அடைவேனோ (திருப்புகழ்)
அறிவே சொரூபமாகிய ஆண்டவனை அறிவினாலேயேதான் அடையவும் முடியும்.
ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
நாட்டமே நாட்டத்து நிறைந்த வானமே – தாயுமானார்.
இதையே முருகவேள் சிவபெருமானுக்கு உபதேசித்தருளினார். “ (திருப்புகழ் விரிவுரை ஒன்பதாம் தொகுதி பக்.275)
இப்படிப்பட்ட மகானின் திருப்புகழ் குரு மதுரை பிரம்மஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஐயர்.
வெளியே அதிகம் தெரியாமல் வாழ்ந்த இவரது ஞானம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது வாரியாரைப் பார்க்கும் போது தெரிகிறது. வேத ரிஷிகள் என்றைக்கோ வாழ்ந்து மறைந்துவிடவில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நம் புண்ணிய பலமின்மை நமக்கு தெரிகிறவர்களெல்லாம் போலிகள். இது. தமிழுக்கு உண்மையிலேயே தொண்டு செய்தவர்கள் இவர்களெல்லாம் தான்.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு).