இந்துக்களின் கடவுள்கள் குறித்தும் கோவில்கள் குறித்தும் இந்துமத வெறுப்பாளர்கள் பலவித குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்துக்களின் மனதை வருத்தி வருகிறார்கள்.
இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன் என்பது பொதுவாக பலரும் போகிறபோக்கில் ஏனோதானோவென்று கேட்டு விட்டுச் செல்லும் கேள்விகளுள் ஒன்று,
நம் சனாதன மதத்தைப் பற்றி நமக்கே சரியாகத் தெரிவதில்லை. மூத்தோர் கூறும் சம்பிரதாயங்களை மூடப் பழக்கங்களாக ஒதுக்கித்தள்ளும் நாகரிகம் ஓங்கியுள்ளது.
சனாதன தர்மம் என்றால் என்ன? அதனை எங்கிருந்து எவ்வாறு அறிவது? பண்டிகைகளை ஏன் கொண்டாடுகிறோம்? எதைக் கொண்டு பண்டிகைகளின் வருகையைக் கணக்கிடுகிறோம்? இயற்கைக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு? நதிகள், சூரியன், பூமி, பசுமாடு இவையெல்லாம் கூட தெய்வங்களா? இது போன்ற கேள்விகளை இன்றைய இளைஞர்கள் கேட்டால் பெரியவர்களுக்குக் கூட சரியாக பதில் கூறத் தெரிவதில்லை.
‘இது நம் சனாதன தர்மம்’ என்ற நூலில் பிரம்மஸ்ரீ டாக்டர் சாமவேதம் சண்முக சர்மா அவர்கள் அறிவியல்பூர்வமாக அளிக்கும் விளக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நூலில் நாத்திகர் கேட்கும் கேள்விகளுக்கும் ஆத்திகருக்கு எழும் ஐயங்களுக்கும் பதில்கள் உள்ளன. இந்த நூல் சனாதனதர்மம் குறித்த என்சைக்ளோபீடியா என்றால் மிகையில்லை. இதில் உள்ள 195 சின்னச்சின்ன கட்டுரைகளும் கற்கண்டு கட்டிகளாக இனிப்பதோடு நம்மை சிந்திக்கவும் தூண்டுகின்றன. அவற்றிலிருந்து சில துண்டுகள் நம் சிந்தனைக்கு இங்கே!
“சாதாரண மனிதர்களுக்கு பனி என்பது ஒரே விதமாக வெண்மையாகவே தென்படும். எனவே ‘பனி’ என்றால் எல்லா பனியும் ஒன்றே என்று எண்ணுவோம். ஆனால் பனியோடு அதிக சமீபத்தில் வாழும் துருவப் பிரதேசவாசிகளான எஸ்கிமோக்களுக்கு பனியில் பல ரகங்களைத் தெரியும்.
பனியில் 48 விதங்கள் இருப்பதாக அவர்களின் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அத்தனை வித பனிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு ஏற்படக் காரணம் பனியோடு அவர்களுக்குள்ள அருகாமையும், நெருக்கமுமே. அதைப்போல ‘ஒன்றே கடவுள்!’ என்று உணர்ந்து நிரூபித்து விளக்கிய போதிலும் கடவுளோடு அதிக நெருக்கமும் முழுமையான அனுபவமும் பெற்ற காரணத்தால் இறைவனை அனேக வித தேவதைகளின் வடிவத்தில் ஹிந்து தர்மம் தரிசிக்க முடிந்தது. விவரிக்கவும் முடிந்தது. கடவுளோடு அப்படி ஒரு நெருங்கிய, நித்தியத் தொடர்பு கொண்ட உண்மையான தெய்வ தரிசனம் ஹிந்துக்களுடையது”
இப்படிக் கூறியது டேவிட் ப்ராலே என்ற அமெரிக்க அறிஞர். ஹிந்து தர்ம நூல்களையும், பிற தேசங்களின் விசுவாச கொள்கைகளையும், உலகின் அனைத்து தத்துவ சிந்தனைகளையும் கூர்ந்து ஆராய்ந்து, சத்தியத்தின் தேடலில் பயணித்த இந்த ஞானிக்கு ஹிந்து மதத்தில் பதில் கிடைத்தது. தன் பெயரை வாமதேவ சாஸ்திரி என்று மாற்றிக்கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வேதிக் ஸ்டடீஸ் என்ற அமைப்பை உருவாக்கி, இந்து மத தத்துவ நூல்கள் பலவற்றை விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இப்படி நம் சனாதன தர்மத்தை ஆராய்ந்து பார்த்து இது சிறப்பான, புராதனமான, சாசுவதமான சித்தாந்தம் என்று புரிந்து கொண்ட அறிஞர்கள் பலர் உள்ளனர்.
இவர்கள் பிரசங்கங்கள் மூலமோ, பிரச்சாரங்கள் மூலமோ ஈர்க்கப்படவில்லை. தெளிவான நேர்மையான ஆராய்ச்சி நோக்கத்தில் உண்மையை உணர்ந்த அசலான மேதாவிகள். கடந்த நூற்றாண்டில் சிஸ்டர் நிவேதிதா, பாண்டிச்சேரி மதர், அன்னிபெசன்ட், டாக்டர் ஜான்உட்ராப் போன்ற பலர் சனாதன பாரதிய தத்துவ சிந்தனையில் மூழ்கி உய்வடைந்தனர். பிரான்சிஸ் கோதியே, ராபின்ஸ் போன்ற எண்ணற்ற மேல் நாட்டவர் நம் நாட்டு தத்துவத்தை ஆராய்ந்து சிறந்த நூல்களைப் படைத்துள்ளனர்.
டாக்டர் ஜான். டி. மில்வே என்ற கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர், காசி க்ஷேத்ரத்தில் உள்ள பன்னிரண்டு சூரியன் கோவில்களை ஆராய்ச்சி செய்து பார்த்து, சூரிய சக்தியை ஏராளமாக கிரகிக்கும் கேந்திரங்களாக அவை அமைக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார். காசியில் உள்ள 56 கணபதி கோயில்களும் விஸ்வ சக்தியை குவிக்கும் கேந்திரங்கள் என்று கண்டறிந்து நிரூபித்துள்ளார்.
“நாங்கள் விஞ்ஞான கருவிகளின் உதவி கொண்டுதான் இவற்றைக் கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால் எந்த வித கருவியும் இன்றி புராதன காலத்திலேயே பாரத நாட்டு விஞ்ஞானிகள் இந்த கோயில் கட்டப்பட்ட இடங்களில் திவ்ய சக்தி குவிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிந்து ஆலயங்களை நிர்மாணித்தார்களோ! ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை அந்த மகரிஷிகள் அதற்குத் தகுந்த விஞ்ஞானத்தை அறிந்திருந்தார்கள் போலும். அல்லது அற்புதமான தியான சக்தியைக் கொண்டு கண்டறிந்திருக்க வேண்டும்” என்று கூறி அவர் வியப்புற்றார்.
அதேபோல் மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினியில் ஒரு மலை உள்ளது. அங்கு ‘மங்கள நாதர்’ கோவில் உள்ளது. அது அங்காரக தேவதை பிரதிஷ்டை செய்த சிவாலயம் என்பது தலவரலாறு. அங்கு சிவனுக்கு பூஜை செய்தால் செவ்வாய் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மற்றொரு விந்தையான செய்தி என்னவென்றால் அதற்கு அருகிலேயே ‘விண்வெளி கிரக, நட்சத்திர ஆராய்ச்சி மையம்’ உள்ளது. அந்த இடம் செவ்வாய் கிரகத்தை படித்து அறிவதற்கேற்ற சூழல் கொண்டது என்று அறிவியல் அறிஞர்கள் நிர்ணயித்து அந்த ஆப்சர்வேட்டரியை அமைத்துள்ளார்கள். அங்கிருந்து கொண்டு கருவிகளின் உதவியால் செவ்வாய் கிரகத்தை ஆராய முடியும். அந்த இடத்தில் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய ஆலயத்தை புராதன காலத்திலேயே கட்டி வைத்த நம்மவர்களின் விஞ்ஞான அறிவைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நடராஜர் சிலைகளில் உள்ள விஞ்ஞான சக்தியை கண்டு மேல் நாட்டு அணு விஞ்ஞானி அறிஞர் டாக்டர் பிரிட்ஜாப் காப்ரா என்பவர் வியந்து போனார். “அணு மண்டலத்தில் உள்ள சைதன்ய உயிர்ப்புச் சக்திக்கு இது ஒரு உதாரணம்” என்றார்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்கள் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு அணுவில் மட்டுமின்றி பிரம்மாண்டத்திலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த சைதன்ய ஜாலங்களே சிவ தாண்டவம். இதனை ஆதாரமாகக் கொண்டு நிர்மாணித்த நடராஜர் உருவம் உலகின் இயங்கு சக்தியின் வடிவமே என்று புகழ்ந்தார் காப்ரா. ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ என்ற நூலில் சிவனின் தாண்டவத்தை ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று புகழ்ந்து வர்ணித்து அதனை ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்தார். அவருக்குப் பிறகு டாக்டர் கென்னத் பார்ட், டேவிட் ஸ்மித் போன்றோர் நடராஜரின் மேல் பரிசோதனை நடத்தி சிறந்த நூல்களை எழுதியுள்ளனர்.
அதோடு கூட, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம சாஸ்திரம் உள்ளது. புருஷ விக்ரகம் செதுக்கும் பாறை வேறு, பெண் விக்ரகம் செதுக்கும் பாறை வேறு. மூல விக்ரகத்திற்கு உபயோகிக்கும் பாறை வேறு, பரிவார தேவதைகளுக்கான பாறை வேறு. இப்படி கற்களில் கூட சிறப்பு வேறுபாடுகள் உள்ளன.
ஆலயத்தின் அளவுகளில் கூட வேறுபாடுகள் உள்ளன. ஆலயம், கோபுரம், கர்ப்பகிருகம், அதிலுள்ள லிங்கம், மூல விக்ரகம் இவற்றை அமைப்பதற்கான நிச்சயமான சாஸ்திர பரிமாணங்கள் உள்ளன. எந்தெந்த திசையில் எந்தெந்த சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் சாஸ்திரம் உளது. அதே போல் அந்தந்த கோயில்களில் நிர்வகிக்கப்படும் பூஜை கைங்கர்யங்களால் வெளிப்படும் தெய்வ சக்தியின் அளவில் கூட சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்துப் பார்க்கையில், நாம் ஏதோ வேண்டுதலுக்காக உள்ளே சென்று கும்பிடு போட்டு விட்டு வரக் கூடிய சர்வ சாதாரணமான விஷயம் அல்ல கோயில் என்பது புரிய வருகிறது. வாரத்தில் ஒரு முறை போய் மன்னிப்பு கோரும் இடங்கள் அல்ல நம் கோயில்கள்.
நம் ஆலயங்களின் கட்டட அமைப்பின் பின்னால் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அபூர்வமான கலையின் சௌந்தர்யம் மட்டுமின்றி கட்டப்பட்ட முறையிலுள்ள நெளிவு சுளிவுகளை உற்று கவனித்தால், அந்தந்த பகுதியின் இயற்கை சூழ்நிலை, நீர்நிலைகள், இடம், காடுகள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை செழிப்பாக்கும் விஞ்ஞான ரகசியம் அவற்றில் மறைந்திருப்பது புரிய வரும். ஆனால், அந்தோ! நம் அரசியல் பலமுள்ள மேதாவிகளோ, விஞ்ஞானிகளோ இவற்றை கண்டுகொள்வதில்லை.
ஒவ்வொரு கோயிலுக்கும் அதற்கான பிரத்யேகமான சிறப்பு உள்ளது. ஆன்மிகம், விஞ்ஞானம், சமுதாயம், தெய்வீகம், கல்வி, கலை இவற்றின் ஒன்றிணைந்த அமைப்பே பாரத நாட்டு ஆலயங்களின் கட்டட அமைப்பு. நம் கோயில்களும் அவற்றில் உள்ள கட்டுமானத் திறனும், விஞ்ஞானச் செல்வமும் உலக நாகரீகத்திலேயே சிறந்தவை.
பழங்கால கோயில்களுக்கு வெறும் கட்டடம் மட்டும் முக்கியமன்று. அவை கட்டப்பட்ட இடத்திலும் அற்புத சக்தி ரகசியம் மறைந்துள்ளது. இவற்றைக் கொண்டு, நம் இஷ்டத்திற்கு பழங்கால கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகளையும் அவற்றின் இடங்களையும் மாற்றக் கூடாதென்பது புரிகிறது.
ஏதேதோ வியாபாரத் தொடர்புகளை ஆலய நிர்வாகத்தில் புகுத்துகின்ற அரசியல் வியாபாரிகள் கோவில்களின் பழமையையும் தெய்வீக வைபவத்தையும் புரிந்து கொள்ளாமல் அவற்றின் ஸ்தானங்களை அசைத்து விட வேண்டும் என்றும் அகற்றிவிட வேண்டும் என்றும் துடிதுடிக்கிறார்கள்.
‘நம் முன்னோர்கள் விஞ்ஞான அறிவு அற்றவர்கள்’ என்ற பாவனை நம்மில் திடமாக ஊன்றி விட்ட காரணத்தால்தான் இத்தனை அலட்சியமாக நம் ஆலயங்களை மதிப்பிடுகிறோம். இது வருந்தத்தக்க விஷயம்.
இதுவரை எத்தனையோ சக்தி மிகுந்த க்ஷேத்திரங்களையும் ஆலயச் செல்வங்களையும் சாத்திர நூல்களையும் அந்நியர் ஆட்சியிலும் படையெடுப்பிலும் நாம் இழந்துவிட்டோம். தற்போது நம் அலட்சியப் போக்காலும் வெளிநாட்டு மோகத்தால் மேலும் அழிவைச் சந்தித்து வருகிறோம்.
இதற்கு நம்முடைய சனாதன தர்மத்தின் மீது புரிதல் இல்லாமை என்பது ஒரு பெரிய காரணம். “என் மதம் உயர்ந்தது. எனக்குத் தாய் போன்றது! தத்துவச் சிந்தனை, தர்மம், கலாச்சாரம் போன்ற உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது” என்ற தன்மானம் நமக்கு இல்லாமல் போனது மற்றுமொரு காரணம். நம் தலைமுறைப் பெரியவர்கள் நம் பாரம்பரியத்தைத் தாமும் கடைபிடிக்காமல் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்காமல் போனது இன்னொரு காரணம். ஆடம்பரத்திற்கு அடிமையாகி பேராசைக்கு ஆளாகும் பாவச் சிந்தனை முக்கியக் காரணம். கல்வி அமைப்பில் நம் கலாச்சாரம், நம் சித்தாந்தங்களின் அறிவு போன்ற போதனைகள் இல்லாமல் இருப்பது கூட இவற்றுக்கு உதவி செய்கிறது.
நம் புண்ணியத் தலங்கள் மற்றும் கலாச்சாரம், கலை, யோகம், மந்திரம் முதலிய பாரம்பரிய செல்வங்களின் சிறப்பினை உலகமே கவனித்து பாராட்டும் தருணத்தில் அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இல்லையா?
இது நம் சனாதன தர்மம்
தெலுங்கு மூலம் – பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
பக்கங்கள்: 673
விலை- ₹ 350.
(தபால் செலவு தனி)
வெளியீடு: ரிஷிபீடம்
நூலைப்பெற பதிப்பாளரை கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்:Rushipeetham Charitable Trust,
Plot No. 1-19-46, HIG-A-40,
Dr.A.S.Rao Nagar,
Hyderabad – 500062
Ph: 040-27134557, 040-27132550, 9441677389
Email: sales.subscriptions@rushipeetham.org
Website: www.rushipeetham.org
// சூரிய சக்தியை ஏராளமாக கிரகிக்கும் கேந்திரங்களாக //, // விஸ்வ சக்தியை குவிக்கும் கேந்திரங்கள் //, என்றால் என்ன? இப்படி கிரகித்து, குவித்து என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது?
// பழங்கால கோயில்… கட்டப்பட்ட இடத்திலும் அற்புத சக்தி ரகசியம் // என்ன ரகசியம்? இந்த ரகசியம் ஆசிரியருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?
// ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ என்ற நூலில் சிவனின் தாண்டவத்தை ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று புகழ்ந்து வர்ணித்து அதனை ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்தார். // சிவதாண்டவத்தை எப்படி நிரூபிப்பது?