மலைப்பகுதிகளிலும் கானகங்களிலும் வசிக்கும் மக்களை நமது இந்திய மரபு சார்ந்த பழைய இலக்கியங்களும் நூல்களும் மலைவாசிகள், வனவாசிகள் என்று அவர்கள் வசிப்பிடத்தைக் குறிப்பிட்டே அழைக்கின்றன. ஆதிவாசிகள் (aboriginal), பழங்குடியினர் (tribal) போன்ற சொற்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி காலத்தில் வழக்கில் புகுந்து இன்று அரசு ஆவணங்களிலும் பொதுவழக்கிலும் அவ்வாறே குறிப்பிடும் துரதிர்ஷ்டவசமான நிலை உருவாகியுள்ளது.
மேலும், கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல. இயற்கை வழிபாட்டையும், “சிறு தெய்வ” வழிபாடுகளையும் செய்பவர்கள் – இதுபோன்ற சிறிதும் ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. பின்பு அவற்றை அப்படியே அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்ட சுயசிந்தனையற்ற கல்வியாளர்களும், இந்தியக் கலாசாரத்தை எப்போதும் பிளவுபட்டதாகவே சித்தரிப்பதில் முனைப்பு கொண்ட மார்க்சிய வரலாற்றாசிரியர்களும் இக்கருத்துக்களை மேலும் வளர்த்தெடுத்தனர். தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
அடர் கானகத்திற்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் காளஹஸ்தி மலை. நஞ்சை அமுது செய்து அருளிய நாயகர் திருவருளைச் சிந்தித்த படியே வந்து கொண்டிருக்கிறார் திருஞான சம்பந்தர். கானகத்தில் வாழும் குடியினரின் தினைப் புனங்களில், பயிர்களைக் கவர வரும் மான்களையும் பன்றிகளையும் கிளிகளையும் கவணில் கற்கள் எறிந்து துரத்துகின்றனர் பெண்கள். சாதாரணக் கற்கள் அல்ல, அவர்களது ஆபரணங்களில் உள்ள பொன்னும், மணியுமான கற்கள்.
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு
மாகடல் விடம்
தானமுது செய்தருள் புரிந்த சிவன் மேவு மலை
தன்னை வினவில்
ஏனம் இளமானினொடு கிள்ளை தினை கொள்ள
எழிலார் கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகு
காளத்தி மலையே.
[தானவர்கள் – அரக்கர்; வாதை – துயரம்; மாகடல் – பெரிய கடல்; வினவில் – கேட்டால்; ஏனம் – பன்றி; கிள்ளை – கிளி]
சம்பந்தரின் எல்லா பாடல்களிலும் ஒரு பொதுவான அழகிய அமைப்பு உண்டு. முதல் இரண்டு வரிகளில் சிவபெருமானது பெருமைகளும் அடுத்த இரண்டு வரிகளில் குறிப்பிட்ட தலத்தின் இயற்கை வர்ணனையும் அதன் பெருமைகள் குறித்த செய்திகளும் இருக்கும். அதன்படியே இப்பாடலிலும் காளத்தி மலையில் வசிக்கும் கானக மக்களின் செல்வச் சிறப்பும் பேசப்படுகிறது. சைவர்கள் அன்றாடம் ஓதும் திருமுறைகளில் உள்ள பாடலில் கானகவாசிப் பெண்கள் “கானவர் தம் மாமகளிர்” என்று மிகவும் உயர்வாகக் குறிப்பிடப் பட்டுள்ளார்கள். அவர்கள் கீழாகவோ அன்னியமாகவோ கருதப்படவில்லை. மாறாக அந்த மலையுடனும் அங்கு உறையும் இறைவனுடனும் இணைத்துப் பேசப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது.
இன்னொரு காட்சி.
மதுரை மாநகரின் புறத்தே அழகர் மலைமீது ஏறிக் கொண்டிருக்கிறார் பெரியாழ்வார். மாலிருஞ்சோலையில் உறையும் மாதவனின் அடியார் என்ற வீறுடன் நடக்கிறார். மலை மேலே கோயிலில் மட்டுமல்ல, மலை வழியெங்கும் நடந்து கொண்டிருக்கிறது வழிபாடு! மலைக்குறவர் இனங்கள் தங்கள் புனத்திலே விளைந்த புதிய தானியத்தை சமர்ப்பித்து திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார்.
உனக்குப் பணி செய்திருக்கும் தவம்
உடையேன், இனிப்போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன்
பொன்னடி வாழ்க என்று
இனக் குறவர் புதிய(து) உண்ணும்
எழில் மாலிருஞ் சோலை எந்தாய்!
[கடைத்தலை – வாசல்; சாயை – புகழ்; புனத்தினை – தானியத்தை; புது அவி – புதிய வேள்விப் பொருள், அதாவது நைவேத்தியம்; எந்தாய் – என் தந்தையே]
இப்பாடலில் மலைவாசி மக்களுக்கு இனக்குறவர் என்று பெருமைமிகு அடைமொழியைக் கொடுக்கிறார் ஆழ்வார். அவர்கள் தங்கள் புனத்தில் அறுவடை செய்த தானியங்களை திருமாலுக்கு அர்ப்பணிப்பதை வேள்வியில் தரப்படும் ஆகுதிக்கு ஒப்பிட்டு “புது அவி காட்டி” என்று கூறுகிறார். அழகர் கோயிலில் புது அறுவடை முடிந்ததும் அப்பகுதி மக்கள் தானியங்களைக் கொண்டுவந்து இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் முன்மண்டபத்தை இன்றும் காணலாம். பல நூற்றாண்டுகளாக வரும் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு இதைவிடப் பெரிய சான்று வேறு என்ன வேண்டும்?
இயற்கையின் வண்ணங்களிலும், அன்றாட வாழ்க்கையின் மகிழ்வுகளிலும் நிறைவுகளிலும் கூட தெய்வீகத்தை ஸ்பரிசித்தனர் நம் இந்துமதத்தின் குருமார்கள், ஆசாரியர்கள். அதனால் தான், புண்ணியத் தலங்களைக் கூறும்போது அவற்றின் இயற்கை வளம், அங்குள்ள மக்களின் பெருமை, அவர்களின் வாழ்க்கை முறை எல்லாவற்றையும் இணைத்தே பெருமைப் படுத்துகின்றர். எனவே, கோயில்களை மட்டுமல்ல, இவை அனைத்தையும் பேணிப் பாதுகாப்பதும் நமது கலாசாரக் கடமையாகிறது.