கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்

மூலம்: எஸ்.குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரை
தமிழில்: ஸ்ரீதர் திருச்செந்துறை

தற்போது மருத்துவமனைகளின் விநியோகத் தொடர்களில் தோன்றியுள்ள இடையூறுகளுக்கு அரசே காரணம் என்று உரத்து ஒலிக்கும் குரல்கள், முக்கியமான உண்மைகளைக் கண்டு கொள்ளவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 15 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  “இந்திய மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கில் கடந்த ஏழு நாட்களாக கோவிட் -19 பாதிப்புகள் ஏதும்  பதிவாகவில்லை.   ஏறுமுகமாக இருந்த நோய்த்தொற்று ஏற்ற இறக்கமின்றி சீராக உள்ளது.” என்று அறிவித்தார்.  கடந்த ஆண்டு 90,000 என்று இருந்த நோய்த்தொற்று, 9,000 க்கும் குறைவாக ஆகியிருந்தது.  ஆனால், ஏப்ரலில் இது வரலாறு காணாத பெரும் பாதிப்பாக மாறியது
( அட்டவணையைப் பார்க்கவும்).

இந்த நெருக்கடியை சமாளிக்க இந்தியா தீவிரமாக இறங்க வேண்டியுள்ளது.  டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இறப்புகளால், உண்மைகளும், காரணங்களும் ஒதுக்கப்பட்டு, உணர்ச்சிபூர்வமான கோஷங்கள் தொடங்கின.  உண்மைகள் மறைக்கப் பட்டதால், விவாதங்கள் திசை திரும்பி, நாடு கோவிடை எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியைக் குலைத்துள்ளன.  மறைக்கப் பட்ட முக்கியமான உண்மைகளை இப்போது பார்ப்போம். 

கொள்ளை லாபம் பெறுவோரின் புகார்

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நேர்ந்த மரணங்கள் முதலில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தொடங்கின.  இந்த மருத்துவமனைகள் பெருந்தொற்று காலங்களில் மிக அதிக லாபம் பார்த்தன.  இது தொடர்பாக, நேஷனல் ஹெரால்டில் 20.6.2020 அன்று ”கோவிட்-19 காலங்களில் லாபம் – தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதா?” (Profit in times of COVID-19: Is it time to take over private hospitals?) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது.  அதில் “₹25,090, ₹53,090, ₹75,590, ₹5,00,000, ₹6,00,000, ₹12,00,000 – இவை என்ன? இவை கொரோனா நோயாளி ஒருவர் டெல்லி மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு, ஒவ்வொரு நாளும், இரண்டு வாரங்களுக்கு மொத்தமாகவும் கொடுக்க வேண்டிய கட்டணங்கள். இவை தவிர தனி நபர் காப்பு உடை (PPE), சோதனைகள், மருந்துகள் ஆகியவற்றை சேர்த்தால், இந்தியனின் சராசரி ஆண்டு வருமானத்திற்கு ஈடான கட்டணங்கள்.  வீட்டு சிகிச்சை கட்டணமும் ஒன்றும் குறைவில்லை – ஒரு நாளைக்கு ₹5,700 முதல் ₹21,000 வரை – இது தவிர சோதனைகளுக்கான செலவு.” என்கிறது.  ஹெரால்ட், உச்ச நீதி மன்றத்தில், இந்தக் கொள்ளைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட  ஒரு வழக்கை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.  

இதைத் தொடர்ந்து, மருத்துவ உதவி வழங்குவோர் சங்கமும் (Association of Healthcare Providers – AHP) FICCI  உறுப்பினர்களும் தங்கள் வணிக முறைகளை சீர்படுத்த ஒப்புக்கொண்டனர்.  சீர் செய்தபின் அவர்கள் அறிவித்த கட்டணங்கள் என்ன?  AHP அறிவித்தவை – பொது வார்டுகளில் ₹15,000, ஆக்ஸிஜனுக்கு ₹5,000 தீவிர சிகிச்சை பிரிவுக்கு ₹25,000, வெண்டிலேட்டருக்கு ₹10,000.  FICCIயின் கட்டணங்கள் இன்னும் அதிகம் – ₹17,000 முதல் ₹45,000 வரை.  இன்னும் இருக்கிறது – மருத்துவமனைகள், PPEக்களை ₹375-500க்கு வாங்கி, 10 முதல் 12 மடங்கு விலை வைத்து நோயாளிகளிடம் விற்றுள்ளனர்.  சென்னையிலும் மும்பயிலும் இதே கதைதான் என்கிறது ஹெரால்ட்.

இதே மருத்துவமனைகள்தான் வாழும் உரிமை என்ற பெயரில் அரசு ஆக்ஸிஜனை வினியோகிக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளன.  அதே ஆக்ஸிஜனுக்கு அவர்கள், நோயாளிகளிடமிருந்து ₹5,000 வசூலிக்கப் போகின்றனர்.  ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான கூச்சல்களில், யாராவது இந்தக் கொள்ளைகளைப் பற்றி பேசியுள்ளனரா? இது ஒரு முக்கியமான விஷயம் – ஏனென்றால், இந்த மருத்துவமனைகளே குறைந்த செலவில் ஆக்ஸிஜனை தயாரித்திருக்க முடியும்.

தனியார்மயமாக்கப்பட்ட, தளைகளற்ற ஆக்ஸிஜன் வணிகம்

ஆக்ஸிஜனின் தயாரிப்பு, வணிகம், சேமிப்பு ஆகியன தனியார்மயமானவை.  மருத்துவத் தேவைக்கான ஆக்ஸிஜனின் விலை, இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மருந்தக விலை ஆணையத்தால் (NPPA)  நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், அதன் வர்த்தகம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.  ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள், தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தனிப்பட்ட ஒப்பந்தப்படி ஆக்ஸிஜன் வழங்குகின்றனர்.  மருத்துவமனைகள் தங்கள் தேவை, தயாரித்து அனுப்பத் தேவையான கால அவகாசம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு திட்டமிட்டு ஆக்ஸிஜனைக் கொள்முதல் செய்கின்றனர். இந்தக் கால அவகாசமும், தொழிற்சாலையிலிருந்து மருத்துவமனைகளின், முக்கியமாக டெல்லி மருத்துவமனைகளின்  தூரமும் மிக அதிகம்.  ஏனென்றால், ஆக்ஸிஜன் பல மாநிலங்களில் தயாரிக்கப் பட்டு, வெகு தூரம் கடந்தே நகரங்களை அடைய முடியும்.  கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்களில் தயாரிக்கப்பட்டு டிரக்குகள் மூலம் அவை டெல்லி சென்றடைகின்றன.  சாதாரண காலங்களில்கூட இதை மிகத் துல்லியமாகத் திட்டமிட வேண்டும்.  ஆனால், மருத்துவமனைகள், செலவை மிச்சப்படுத்த, அவசரத் தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் சேமிப்பை சரியாகத் திட்டமிடவில்லை. கடந்த 10 நாட்களாக எழுந்த கூச்சல்களில் யாராவது இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா?

தட்டுப்பாடு இல்லை

ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதே உண்மை.  நாம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் ஆக்ஸிஜனைத் தயாரிக்கிறோம்.  குஜராத்திலுள்ள ஒரு நிறுவனம் அதில் 20% தயாரிக்கிறது.  மொத்தத் தயாரிப்பில், மிகச்சிறிய அளவே, அதாவது 1% மட்டுமே, மருத்துவத் தேவைக்கானது.  கோவிட் கால நெருக்கடியில் கூட இது 5-6% மட்டுமே இருக்கும். தொலை தூர மாநிலங்களில் மட்டுமே ஆக்ஸிஜன் தயாரிக்கப்படுகிறது. திரவ நிலையில் வாங்கப்படும் ஆக்ஸிஜன், பாதுகாப்பான கனரக வாகங்களில் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனமும் சுமார் 45 லட்ச ரூபாய்.  மேலும் வெறும் முன்னூறு ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜன், ₹10,000 மதிப்புள்ள கொள்கலன்களில் சேமிக்கப் படுகிறது.  தொலை தூரத் தயாரிப்பு, விலை உயர்ந்த வாகனங்கள் மூலம் வினியோகம் ஆகியன சாதாரண காலத்தில்கூட, விபத்து போன்ற பிரச்சினைகளுக்குள்ளானதுதான்.  பெருந்தொற்று காலத்தில் இந்த வினியோக முறை கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லியில் கொரோனா மரணங்களுக்குக் காரணமாகியுள்ளது.

தவறு செய்தவர்கள் கொள்ளை லாபம் பெறும் மருத்துவமனைகள் ஆனால், பழி அரசின் மீது

கடந்த ஆண்டு கோவிட் முதல் அலைக்குப் பின், ஒவ்வொரு (டெல்லி) மருத்துவமனையும் தங்களின் இடத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனத்தை அமைத்திருக்க வேண்டும். 40 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளடக்கி 240 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சாதாரண காலங்களில் மாதத்திற்கு ₹5 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது என்று தி பிரிண்டின் கட்டுரை கூறுகிறது. பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (PSA) ஆக்ஸிஜன் ஆலை அமைக்க ₹50 லட்சம் செலவாகும்.  இந்த முதலை, 18 மாதங்களுக்குள் எடுத்துவிடலாம்.  அனைத்து டெல்லி மருத்துவமனைகளாலும் அதை வாங்க முடியும். ஆனால் ஒரு ஆக்ஸிஜன் ஆலைக்கு விலைமதிப்பற்ற இடத்தை ஒதுக்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் இடத்திலேயே தயாரிப்பதற்குப் பதிலாக ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆக்ஸிஜனை வாங்க முயல்கின்றனர்.  கேரளாவின் திரிசூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின், மயக்க மருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுகளைச் சேர்ந்த செரிஷ் பால், ஜான் பால் மற்றும் அகில் பாபு ஆகியோர் ஆக்ஸிஜனின் விநியோகத் தொடரில் உள்ள நம்பகத்தன்மையின்மை பற்றி எழுதியுள்ளனர்.  மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வினியோகம்:  இந்திய மருத்துவமனைகளின் பேரிடர் தயார் நிலை பற்றிய கணக்கெடுப்பு  (Hospital oxygen supply: A survey of disaster preparedness of Indian hospitals) என்ற தலைப்பில் இந்தியன் ஜர்னல் ஆஃப் ரெஸ்பிரேட்டரி கேரில் (Indian Journal of Respiratory Care) அவர்கள் எழுதிய கட்டுரையில் – பெரும்பாலான மருத்துவமனைகள் ஒரே ஒரு உற்பத்தியாளரிடமிருந்து ஒரே வழியில் ஆக்ஸிஜன் கொண்டுவரப்படுவதால், பேரிடர் காலங்களில் அவை நம்பத்தகுந்தவை அல்ல என்று கூறியுள்ளனர்.  பல உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, மருத்துவமனைக்கு அருகில் உள்ள தொழிற்சாலையிலிருந்து திரவ ஆக்ஸிஜனைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

இந்த எச்சரிக்கையை டெல்லி மருத்துவமனைகளின் நிலையில் பாருங்கள்.  அவர்களால் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை.  பேரழிவின் போது தடையின்றி ஆக்ஸிஜனைப் பெற அவர்கள் ஒருபோதும் திட்டமிடவில்லை.  அவர்கள் பெறவேண்டிய ஆக்ஸிஜனைப் பெற இயலாதபோது, அரசியலமைப்பின்படி வாழ்வுரிமையை மேற்கோள் காட்டி, ஆக்ஸிஜனைக் கொடுக்குமாறு அரசாங்கங்களுக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தை கேட்டார்கள்!  நீதி மன்றங்களின் மேம்போக்கான உணர்வுபூர்வமான உத்தரவின்படி, பழியை அரசின் பக்கம் திருப்பிவிட்டனர்.  அது கோவிட் பற்றிய விவாதங்களை திசை திருப்பிவிட்டது.  கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இச்சம்பவங்களின் உண்மையான பின்னணி பற்றி மக்கள் அறிவார்களா?

129 ஆக்ஸிஜன் ஆலைகள் என்ற திட்டத்தை மருத்துவமனைகள் குலைத்தன

தற்போது உரத்த குரலில் நடக்கும் விவாதங்களில் உண்மை இல்லை.  மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் வினியோகக் குளறுபடியை அரசின் மீது சுமத்துகையில் ஒரு முக்கிய உண்மையையும் மறைக்கப் படிகிறது.  இத்தகைய நெருக்கடி நிலைமையை எதிர்பார்த்து மோதி அரசு, இந்தியா முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக  ₹200 கோடி செலவில் 162 PSA  சாதனங்களை வாங்க உத்தரவு இட்டிருந்தது.  இதனால் நிமிடத்திற்கு 80,500 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைத்திருக்கும்.   கிட்டத்தட்ட ஒவ்வொரு சாதனத்திலிருந்தும் ஒரு நாளைக்கு ஒரு டன் திரவ ஆக்ஸிஜன்.  162 மருத்துவமனைகளுக்கு அளித்தும் 33 மருத்துவமனைகளே இந்தச் சாதனத்தை நிறுவியுள்ளன.  ஏன்? பல மாநில அரசு மருத்துவமனைகள் கூட அவர்கள் இடத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகளுக்கான மத்திய அரசின் திட்டத்தை முறியடித்தன.

டிசம்பர் மாதத்தில் ஆர்டர்கள் அனுப்பப்பட்டன, ஆனால் விற்பனையாளர்கள் சாதனத்தை நிறுவ மருத்துவமனைகளை அடைந்தபோது, ​​பலர் அங்கு “எதிர்ப்பை சந்தித்தனர்”, “இடம் இல்லை” என்று சால்ஜாப்பு கூறப்பட்டது – உண்மையான காரணம் என்னவென்றால், தங்கள் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனை தயாரிப்பதை விட செலவு செய்து, வெளியிலிருந்து ஆக்ஸிஜன் வாங்குவதையே விரும்பினர் – என்று தி ப்ரிண்ட் கூறுகிறது. மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்குவதற்கான முன்கூட்டியே திட்டமிட்டும்,  மாநில அரசு நடத்தும் மருத்துவமனைகளால் அது எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் உரத்த விவாதங்களைத் தாண்டி, அரசாங்கத்தின் இந்த தொலைநோக்குள்ள நடவடிக்கை பற்றி, தி ப்ரிண்ட் தவிர யாராவது பேசியிருக்கிறார்களா?

புதிய கோவிட் சுனாமி பழையது அல்ல

ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த விவாதங்களில் இல்லாத ஒரு மிக முக்கியமான உண்மை என்னவென்றால், தற்போதைய கோவிட் சுனாமி பழையது அல்ல, மாறாக முற்றிலும் எதிர்பாராத வேகத்தில் தாக்குகிறது. மார்ச் முதல் வாரத்தில் இருந்து உயரத் தொடங்கிய கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, மார்ச் இறுதியில் வேகம் பிடித்து, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் மிக வேகமாக உயர்ந்தது, பின்னர் சுனாமியாக மாறியது. ஏழே வாரங்களில், பீகாரில் தினசரி புதிய பாதிப்புகள் 522 மடங்கு, உ.பியில் 399 மடங்கு, ஆந்திராவில் 186 மடங்கு, டெல்லி மற்றும் ஜார்க்கண்ட்டில் 150 மடங்கு, மேற்கு வங்கத்தில் 142 மடங்கு மற்றும் ராஜஸ்தானில் 123 மடங்கு அதிகரித்துள்ள இப்பேரழிவு, எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் தாண்டிய ஒரு சுனாமி. இது கடந்த ஆண்டு கோவிட் 1.0 போல அல்ல. மரபணுவில் இருமுறை மாறி வந்துள்ள இந்திய வகையாகும், இது கோவிட் 1.0 பாதித்த ஒவ்வொரு இடத்திலும் உருவாகியுள்ளது. எந்த நிபுணரும் இதை எதிர்பார்க்கவில்லை.

 தேவை – நாடு தழுவிய மன உறுதி

வரலாறு காணாத இந்த சுனாமியை எதிர்கொள்ள எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. உண்மைகளை மறைக்காமல், விவாதங்களை திசை திருப்பாமல், பிற மீது பழி போடாமல், ஒட்டு மொத்தமாக எல்லோரும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.  கோவிட் போன்ற பேரிடர் காலத்திலும் ஒத்து உறுதியுடன் செயல் படாதது கவலை அளிக்கின்றது.  அவசரகால பயன்பாட்டிற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வாறு விஷம பிரச்சாரம் செய்தன என்பது இந்த தேசியக் குறைபாட்டைக் காட்டுகிறது.  காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சஷி தரூர், மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கோவாக்சினுக்கு எதிராக சேர்ந்து கூச்சலிட்டனர். இது ஆபத்தானது என்று ஆனந்த் சர்மா கூறினார். ராஜஸ்தான் தவிர, எதிர்க்கட்சி ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, மேற்கு வங்கம்,ஜார்கண்ட் மாநிலங்களில் தடுப்பூசிகள் குறித்து மக்களின் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்தின. முடிவு, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கினர். ஜனவரி மாதத்தில் 33% பயனாளிகள் மட்டுமே ஊசி போட்டுக்கொள்ளத் தயாராக இருந்தனர், 40% காத்திருக்க விரும்பினர், 16% பேர் ‘ஊசி போட்டுக்கொள்ளப் போவதில்லை’ என்று கூறினர். மார்ச் மாதத்தில், விருப்பமுள்ளவர்கள் 57% ஆக உயர்ந்தனர், காத்திருக்க விரும்பியவர்களின் எண்ணிக்கை பாதியானது; மறுத்தவர்கள்  6% ஆக குறைந்தனர். மூன்று விலைமதிப்பற்ற மாதங்களை இழந்தோம்.

மார்ச் வரை, சராசரியாக தினசரி 30 லட்சம் தடுப்பூசி, மாதத்திற்கு 9 கோடி என்று. 10.8 கோடி மக்கள் மட்டுமே முதல் தவணை ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். 1.6 கோடி பேர் மட்டுமே இரண்டு தவணைகளை முடித்துள்ளனர். மக்கள் தயங்காமல் போட்டுக்கொண்டிருந்தால் இது இரு மடங்காகியிருக்கும்.  நாம் ஜாக்கிரதையாக இருக்க மறந்துவிட்டோம்.  கூகிளின் மொபிலிடி தகவலகளைப் பார்க்கும்போது, கோவிட் காலத்திலும் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்துள்ளோம்.  லாக்-டவுனுக்கு முன்புள்ள நிலையுடன் ஒப்பிடும்போது, 78% கேளிக்கை நிகழ்ச்சிகளில், 87% பூங்காக்களில், 92% போக்குவரத்துகளில், 120% கடைவீதிகளில், பெரும்பாலும் சமூக இடைவெளியின்றி, முகக்கவசங்களின்றி இருந்துள்ளனர். இப்போது நம் முன்னே கோவிட் பெரும் சவாலாக உள்ளது – இதை எதிர்கொள்ள நமக்கு, இந்த தேசத்திற்கு மன உறுதி உள்ளதா?

இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை முதலில் சஞ்சிகை இணையதளத்தில் வெளிவந்தது. தமிழ்ஹிந்து இணையதளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *