தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்து விரோத கருத்தியல் கொண்டவர்களும், பிரிவினைவாதிகளும், பல சமயங்களில் அன்னிய மதத்தினரும் கூட இவற்றை முனைந்து பரப்புகின்றனர். இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.
- தமிழ் மொழியிலுள்ள பன்னிரு திருமுறைகளும், பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களும் சைவத்தின் அடிப்படை ஆதாரமான புனித நூல்கள் என்பதில் எங்களுக்கு உறுதியான அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.
ௐ நமசிவாய.
- சமஸ்கிருத மொழியிலுள்ள நான்கு வேதங்களும், இருபத்தெட்டு சிவாகமங்களும் இறை வாக்குகள் என்பதில் எங்களுக்கு உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கொருமுறையான ஒவ்வொரு படைப்புக் காலங்களிலும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுவதாலும், பிற்பட்ட பல்வேறு காலங்களில் ரிஷிகளால் வாக்காகவும், எழுத்தாகவும் வடிவம் பெறுவதாலும் இவற்றுக்கு எமது மானுடப் பிரயத்தனங்களினால் காலங் கூறமுடியாது என்றும் நம்புகிறோம்.
ௐ நமசிவாய.
- ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத இறையை சைவர்களாகிய நாம் சிவம் என்ற பெயரால் அழைக்கிறோம். நாம ரூபமும், பிறப்பு இறப்பும் இல்லாத பரசிவம் நம் மீதுள்ள ஒப்பற்ற பெருங்கருணையால் உருவமும், பெயருந் தாங்கி வெளிப்படும்போது நாம் சிவன் என்று வணங்குகிறோம். முக்காலங்களிலும் சமயங்களும், அறிவுகளும் ஆய்வுகளும் தேடுகின்ற உண்மை இதுவேயாகும். இதுவே காரணங்களுக்கெல்லாம் காரணம்; இதுவே மெய்யான சத்தியம்; இதுவே நாம் சென்றடையவேண்டிய இலக்கு.
ௐ நமசிவாய.
- இறைக்கு எம்மீதுள்ள பெருங்கருணையே எம்மை இறையுடன் தொடர்புபடுத்துகின்றது. இந்த உறவுத் தொடரான அருளையே நாம் சக்தி என்று இறையின் மனைவியாகப் பார்க்கின்றோம். எல்லாம் வல்ல பரசிவன் தனது அருளினால் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் என்று பலவிதமான நாம ரூபங்களுடன் வெளிப்பட்டுச் செயற்படும்பொழுது சக்தியும் சரஸ்வதி, இலக்குமி, உமை, மனோன்மணி, மகேஸ்வரி என்று அவ்வவ் மூர்த்தங்களின் சக்திகளாக வடிவெடுக்கின்றது. இறையின் பேரருளாகிய சக்தியின் பல்வேறு அம்சங்களையே இறையின் மனைவியாகவும், மனைவியராகவும் காண்கின்றோம். சிவமும், சிவத்தின் பிரிக்க முடியாத பேரருளாகிய இந்த சக்தியும் நாம் நம்பும் ஒரே இறையின் இரு வேறு பக்கங்களே.
ௐ நமசிவாய.
- சிவன் மும்மூர்த்திகளாகிய பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களில் ஒருவனல்லன்; மும்மூர்த்திகளுக்கும் அப்பதவியும், அதிகாரமும் கொடுத்து அருளியவனே சிவன். எமது சமயம் மட்டுமல்ல கடந்தகால, நிகழ்கால, இனி வரப்போகின்ற காலத்துச் சமயங்கள் எல்லாம் கூறும் கடவுளர்க்கும், தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் அதிகாரம் அளிப்பவனும், அவர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களூடாக அவ்வவ் வழி மார்க்கங்கள் கூறும் பேறுகளையும், பதங்களையும் அளிப்பவனும் சிவனே.
ௐ நமசிவாய.
- சைவம் கூறும் முப்பொருள்களான பதி என்னும் கடவுள், பசு என்னும் எண்ணற்ற உயிர்கள், உயிர்களை பந்தித்திருக்கும் பாசம் என்னும் மும் மலங்கள் ஆகிய மூன்றுமே என்றும் உள்ள அழிவற்ற உண்மைகளாம். இவற்றுக்கு தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை; இவற்றை இறைவன் தோற்றுவிப்பதும் இல்லை. ஆணவம், கர்மம், மாயை என்பனவே ஆன்மாவைப் பீடித்திருக்கும் மூன்று அழுக்குகளாம். கரி பிடித்த பாத்திரத்தை விளக்க நாம் சாம்பலும் மண்ணும் பாவிப்பது போல மூல அழுக்காகிய ஆணவத்தை நீக்க இறைவன் கர்மம், மாயை என்னும் அழுக்குகளைச் சேர்க்கிறான். மாயையில் இருந்தே இறைவன் இந்த உலகங்களையும், அதிலுள்ள அனுபவப் பொருட்களையும், பல்வேறுபட்ட உயிர்களுக்கான உடல்களையும், கை- கால் முதலான கருவிகளையும், மனம் முதலான கரணங்களையும் ஆக்கியளிக்கின்றான்.
ௐ நமசிவாய.
- பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன், நாம் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு படிநிலைகளில் முதிர்ந்து பக்குவ நிலை அடையும்போது மனித வடிவில் உள்ள குருவின் ஆன்மாவைத் தனது சரீரமாகக் கொண்டு எம்மை ஆட்கொண்டு அருளுவார்.
• சரியையாவது உடலினால் செய்யும் சிவ புண்ணியங்களாகும்;
• கிரியையாவது உடலினால் மன ஈடுபாட்டுடன் செய்யும் சிவ புண்ணியங்களாகும்;
• யோகமாவது முழுமனக்கட்டுப்பாட்டுடன் செய்யும் சிவபுண்ணியங்களாகும்;
• ஞானமாவது அபர ஞானம், பர ஞானம் என இரு படி நிலைப்படும்.
அபர ஞானமாவது, இவ்விதமான ஆன்மீக விடயங்களையும், நூல்களையும் கற்றறிதல், மற்றவர்கள் கற்பதற்கு ஒழுங்கு செய்தல், இவற்றை மற்றவர்களுக்குக் கற்பித்தல், இவற்றைத் தக்கோரிடம் தாம் கேட்டு அறிதல், அறிந்தவற்றைச் சிந்தித்தல் என ஐந்து படிநிலைகளாம்.
ௐ நமசிவாய.
- பல்வேறு பிறவிகளினூடாகக் கைகூடி வருகின்ற இந்தப் படிநிலைகளில் வழிகாட்ட சமய குரு, தீட்சா குரு, வித்தியாகுரு, யோக குரு, புரோகித குரு போன்ற பல குருமார்கள் சமய சாத்திர நூல்களுக்கு அமைவாக வழிகாட்டுவார்கள். இறுதியாக இறைவனே ஞானகுருவாக வந்து எமக்கு ஞானத்தை உணர்த்தும்போதுதான் ஆணவ மலம் விலக பரஞானம் அநுபூதியாக, அநுபவமாகக் கைகூடும்.
ௐ நமசிவாய.
- சைவத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பரஞான அநுபூதி பெற்ற ஞானிகள். இந்த ஞானிகளின் வரலாறு எமது வழிகாட்டலுக்காக சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டத்தொகையினாலும், சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த பெரிய புராணத்தினாலும் இறைவனால் நெறிப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன. இந்த ஞானிகளின் குருபூசை தினங்களும் நமக்கு மிகவும் முகியமானவை. அதிலும் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரினதும், சந்தான குரவர்களாகிய மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரினதும், பெரிய புராணம் அருளிச்செய்த சேக்கிழார் நாயனாரினதும், தமிழ் மறையாகிய திருக்குறளை அருளிச்செய்த திருவள்ளுவ நாயனாரினதும் குருபூசை தினங்கள் சைவர்கள் அனைவரும்அத்தியாவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய பத்து குருபூசை தினங்களாம்.இவர்களில் மாணிக்க வாசகர், சேக்கிழார், திருவள்ளுவர் ஆகியோர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அடங்காதவர்கள்.
ௐ நமசிவாய.
- சிவ சின்னங்கள் ஆகிய திருநீறு, உருத்திராட்சம் என்பவையும், ஆலய வழிபாடும், அடியார் கூட்டமும் சைவசமயம் கூறும் ஆன்ம விடுதலைக்கு உதவும் அத்தியாவசியமான சாதனங்களாம்.
ௐ நமசிவாய.
டாக்டர் லம்போதரன் இராமநாதன் கனடாவில் வாழ்ந்து வரும் மருத்துவர். IMHO – International Medical Health Organization என்னும் சேவை அமைப்பை நிறுவி அதன் இயக்குனராக இருந்து வருகிறார். குறிப்பாக இந்த அமைப்பு இலங்கையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சைவசித்தாந்த பீடம் என்னும் ஆன்மீக அமைப்பையும் நிறுவி, அதன்மூலம் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ்ச் சமுதாயத்தினரிடையே ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் விவரங்கள் இந்த இணையதளத்தில் காணலாம். தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து சைவசமயம் குறித்து எழுதி வருகிறார்.
Wonderful ji
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே! – திருப்பாசுரம்!