டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

பெங்களூர் ராமகிருஷ்ண மடம் வெளியிடும் இந்து தரும கலைக்களஞ்சியத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் உத்வேகம் தருகிறது. சுவாமிஜிகளுக்கும் இங்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் எனது பிரணாமங்கள்.

இந்த மூன்றுபாகங்கள் கொண்ட சுருக்கமானதோர் இந்து தரும கலைக்களஞ்சியத்தின் பரிணாம உருவாக்கம் சுவாமி ஹர்ஷானந்தாஜியின் ஒரு வாழ்க்கையின் அர்ப்பணிப்பால் எழுந்த சிறப்பான பங்களிப்பாகும். இந்து தருமத்தின் பரிணாம வளர்ச்சி 7000 ஆண்டுகளுக்கும் மேலானது எனக்கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் மானுட வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் சமயத்தை செழிப்பாக்கியுள்ளன. தத்துவம் ஒழுக்கம், நம்பிக்கை கலை பண்பாடு அறிவியல் மற்றும் இலக்கியம் என அனைத்து புலங்களிலும் செழுமையாக்கியுள்ளது.

இந்த கலைக்களஞ்சியமானது ஆதாரப்பூர்வமாக, மிகச்சிறந்த விதத்தில் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட சான்றாதாரமாக அறிஞர்கள், மாணாக்கர்கள், மற்றும் சமயத்தை பயில்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்து தருமத்தை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் சமுதாயத்தை நன்மை அடைய செய்வதற்கு சிறப்பாக பயன்படப்போகிறது என்பதில் ஐயமில்லை.நான் இந்த கலைக்களஞ்சியத்தின் முதல் பாகத்தில் கடவுள் எனும் தலைப்பின் கீழ் உள்ளவற்றை படித்தேன். அதில் ஆசிரியர் கூறுகிறார்:

இந்து வேதங்கள் கடவுளின் பண்புகளை மிக சிறப்பாக விவரிக்கின்றன. அவர் அனைத்தும் அறிந்தவராகவும் அனைத்து சக்தியும் உடையவராகவும் நீதி அன்பு அழகு ஆகியபற்றின் உருவமாகவும் திகழ்கிறார். உண்மையிலேயே அவர் மனிதனால் உருவகிக்க முடிந்த அனைத்து திவ்ய பண்புகளின் முழு உருவமாகவே திகழ்கிறார். அவர் சிருஷ்டிக்கு அருளையும் தயையையும் ஆசிகளையும் எப்போதும் மழையென பொழிய தயாராக இருக்கிறார். அவரது இந்த சிருஷ்டிக்கு காரணமே அவர் இந்த உலகின் அனைத்து சிருஷ்டிக்கும் அவரது அருள் மழையை பொழிந்து பூரண நிலையை நோக்கி அவற்றினை மெதுவாக பரிணமிக்க வைப்பதுதான். அவர் மிக எளிதாக அவரது பக்தர்களின் பிரார்த்தனைகளாலும்
கோரிக்கைகளாலும் ப்ரீதி செய்யப்பட்டு விடுகிறார். ஆனால் அவர் நம் இந்த பிரார்த்தனைகளுக்கு செவிமடுக்கும் விதமானது பிரபஞ்ச விதியான
உலக நன்மை மற்றும் தனிமனிதரின் நன்மையை தீர்மானிக்கும் கர்ம விதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே அமைகின்றன.

சுவாமிஜி இறைவனை உருவகித்திருக்கும் விதமானது மிக அரிதானதாகும். எனக்கு என் தினசரி நமாஸை இது நினைவுப்படுத்தியது. நான் நமாஸினை அல்லாவைக் கொண்டு ஆரம்பிக்கிறேன் – பேரருளாளனாக, பெருங்கருணையாளனாக பெரும் கீர்த்தி வாய்ந்தவனாக.

தர்மம் – நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது. எனக்கு நல்லொழுக்கம் குறித்து ஒரு தெய்வீகக் கவிதை நினைவுக்கு வந்தது.

அறவொழுக்கம்

 • எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்.
 • எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்
 • எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும்
 • எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ அப்போது உலகில் அமைதி நிலவும்

இதயம் நன்னடத்தை, தேசம் மற்றும் உலகம் ஆகியவற்றை இணைக்கும் அழகிய உறவினை நாம் இங்கு காணமுடிகிறது. ஒரு சமுதாயத்தில் அதன் அனைத்து பாகங்களிலும் நாம் அறத்தினை வளர்க்க வேண்டும். ஒரு சமுதாயம் முழுவதும் அறமுடையதாக இருக்க குடும்பத்தில், கல்வியில், சேவையில், வேலை வாய்ப்பில், வர்த்தகத்தில், ஆட்சி நிர்வாகத்தில், தொழிற்சாலைகளில், அரசியலில், அரசாங்கத்தில் நீதித்துறையில் அறவுணர்வு இருத்தல் வேண்டும்.

இந்த சூழ்நிலையில் மீரட்டில் நான் ஒரு தெய்வீக சுழலில் அன்பும் சந்தோஷமும் புன்னகையும் பிரகாசிப்பதை அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மீரட்டில் கூட்டுக்குடும்ப ஸ்தாபனம் ஒன்றைக் குறித்து கேள்விப்பட்டேன். இதன் பெயர் கிருஹஸ்த ஆஸ்ரமம்.60 முதல் 70 பேர் கொண்ட இந்த குடும்பம் மூன்று தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.

 • (அ) அனைவரையும் ஈஸ்வர சொரூபமாக- காண்பது.
 • (ஆ) ஈஸ்வர கருணையில் உள்ளார்ந்த நம்பிக்கை
 • (இ) பகவானின் நாம ஜெபத்தையே சார்ந்திருத்தல்

நான் இந்த மீரட் ஆன்மிக குடும்பம் குறித்து மிகவும் கேள்விப்பட்டிருந்தமையால் அண்மையில் அங்கு சென்றிருந்த போது இந்த குடும்பத்தை சென்று பார்த்தேன். இந்த குடும்பம் பாட்டி-தாத்தாக்கள் பேரக்குழந்தைகள் இளைஞர்கள் முதல் அனுபவசாலிகள் என மீரட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்களைக் கொண்டிருந்தது. இந்த கூட்டுக்குடும்ப தொடர்பால் இவர்கள் அனைவருமே எவ்வாறு வாழ்க்கையில் மாற்றமடைந்தார்கள் என கூறினார்கள். நான் அவர்களின் பஜனை அவதானித்த போது அவர்கள் ஒவ்வொருவரும் அதனை அனுபவித்து பாடினார்கள் ஒவ்வொருவரிடமும் உற்சாகம் கொப்பளித்தது. சுருக்கமாக பிரார்த்தனை நேரத்தில் அங்கே முழுக் குடும்பமும் புதியதோர் ஆனந்த தளத்தில் இருந்தனர்.

அந்த குடும்பத்தினரிடம் நான் கலந்துரையாடியபோது அதில் எனக்கு தெரிந்த ஒரு விஷயம் அவர்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதனை ஈஸ்வர அர்ப்பணமாக செய்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் இறைப்புனிதத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. உதாரணமாக தோட்ட வேலை செய்பவர் தான் செய்யும் தோட்ட வேலை இறைவழிபாட்டில் மலர்களை அளிக்க உதவுகிறது எனும் உணர்வுடன் தோட்டத்தில் உழைக்கிறார்.இறை கீர்த்தனைகளை பாடுபவர்கள் இசை அமைக்கிறார்கள். அவர்கள் இசைக்கருவிகள் மூலம் அந்த புனித சூழலுக்கு தகுந்த பண்களை இசைக்கிறார்கள். பகவத் லயம் அந்த இடத்தில் சுடர்விடுகிறது ஏனெனில் அவர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இறை மகிமையை பாடுகிறார்கள். குடும்பத் தலைவருக்கு அங்கு குழுமியிருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பகவானின் சொரூபமே ஆவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்பவர்கள் ஒவ்வொருவித கல்வி பயில்பவர்கள். அவர்கள் அனைவருமே அவர்களது செயல்பாட்டு திறமைகளை இந்த புனிதமான குடும்ப சூழல் திறம்பட உயர்த்திருப்பதாக உணர்ந்தார்கள்.

அத்துடன் அது அவர்கள் அனைவரையுமே மனநிறைவும் ஆனந்தமும் அடைய வைத்தது.இத்தகைய தெய்வீக சூழல் நிலவும் கூட்டுக்குடும்பங்கள் நிச்சயமாக நம் தேசத்தில் பல்வேறு இடங்களில் பல்சமய சூழல்களில் இருக்கின்றன. நிச்சயமாக வீடுகளில் நிலவும் இணக்கமான சூழல் தேசத்தில் சீர்மையையும் அதன் மூலம் உலகத்துக்கு அமைதியையும் அளிக்கும்.

அன்புள்ள நண்பர்களே எனக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் நடத்தும் ஆன்மிக மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சிறார்களுக்கான அன்பு இல்லங்கள் ஆகியவற்றுக்கு நான் சென்றுள்ளேன். தேசிய இளைஞர் தினமாக தேசம் முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததின விழாக்களிலும் இத்தேசத்தின் பல இடங்களில் நடத்தப்பட்ட விழாக்களில் நான் கலந்துள்ளேன். பல சமய வெளியீடுகளைக் கொண்டுவருவதிலும் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் புகழ்பெற்றது.

நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறுகிறார்:

ஆழ் சமுத்திரத்தில் முத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கண்டெடுக்க ஒருவர் அனைத்து ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டும். ஒரு முறை மூழ்குவதில் முத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் மூழ்கி முயற்சி செய்யவேண்டும். நிச்சயமாக இறுதியில் உங்களுக்கு வெற்றி கிட்டும். அவ்வாறே இந்த உலகத்திலேயே பகவானை காண்பது என்பதும். உங்கள் முதல் முயற்சி பலனளிக்கவில்லை என்றால் இதயம் தளர்ந்துவிடாதீர்கள். முயற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுங்கள். நிச்சயமாக இறுதியில் நீங்கள் ஈஸ்வர அனுபவம் அடைவீர்கள்.

மானுடகுலம் தளரா முயற்சியில் ஈடுபட்டிட எத்தனை அழகிய அறிவுரை இது. சுவாமி விவேகானந்தர் அளிக்கும் செய்தி மிக அற்புதமானது. உலகிற்கு அவசியமானது. அவர் சொல்கிறார்: “என் பெயரல்ல பிரதானப்படுத்தப் படவேண்டியது. எனது எண்ணங்களையே செயல்படுத்தவேண்டும்.” ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்க அமைப்புகள் இதனையே இந்த தேசத்திலும் உலகெங்கிலும் செய்து வருகின்றன.நான் இந்த அமைதி ததும்பும் சூழ்நிலையில் உள்ளதால் என் அமைதி பிரார்த்தனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியுங்கள்.

எனது அமைதி பிரார்த்தனை

சர்வ வல்லமை பொருந்திய இறை சக்தியே, ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கான எண்ணங்களை எம் தேச மக்களின் மனதில் உருவாக்குவாயாக. நல்லறத்தின் பாதையில் என் மக்கள் நடக்க ஆசிர்வதிப்பாய். ஏனெனில் நல்லறத்திலிருந்தே ஒழுக்கத்தின் வலிமை ஏற்படுகிறது.
பிரிவினை வாத சக்திகளை எதிர்க்கும் சக்தியை என் நாட்டு மக்களுக்கு வழங்கும் படி அனைத்து சமய தலைவர்களுக்கும் உதவி செய்.
என் தேச மக்களுக்கு பல்வேறு கோட்பாடுகளையும் மதிக்கும் மனநிலையை கொடுத்து தனிமனிதர், அமைப்புகள், தேசங்கள் ஆகியவற்றினிடையே நிலவும் எதிரி மனப்பான்மையை நட்பாகவும் ஒத்திசைவாகவும் மாற்று.
ஓ இறைவா! பயங்கரவாதம் என்பது மானுட குலத்துக்கே ஒரு சாபகேடு. அப்பாவி மக்களை கொல்பவர்கள் கொடூர மனத்தவர்கள். மக்கள் படும் வேதனை இந்த கொடூரக்காரர்களின் மனதை மாற்றட்டும்.*
ஓ இறைவா என் மக்களை விடாமுயற்சியுடன் உழைத்து இந்த தேசத்தை அமைதியும் வளமும் நிறைந்த தேசமாக மாற்றிட அருள்வாய்.

(* : பயங்கரவாதிகள் குறித்து கலாம் கூறுவதுடன் இதனை ஒப்பிடுக “வஜ்ர சக்தியை கொண்ட இறைவா உன் அருட்சக்தியால் கொடியவர்களும் சான்றோர்களாக மாறினார்கள். அதைப்போல நாங்களும் எங்கள் பகைவர்களை வென்றிட அருளுவாய்” – ரிக் வேதம்: 6:22:10)

இந்த வார்த்தைகளுடன் சுவாமி ஹர்ஷானந்த மகராஜின் இந்து சமய கலைக்களஞ்சியத்தின் முதல் பிரதியை வாங்குவதில் நான் மகிழ்ச்சி
அடைகிறேன். மனங்களின் ஒற்றுமை மூலம் ஆன்மிகத்தை வளர்க்கும் ராமகிருஷ்ண மிஷனுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

இந்த வார்த்தைகளுடன் சுவாமி ஹர்ஷானந்த மகராஜின் இந்து சமய கலைக்களஞ்சியத்தின் முதல் பிரதியை வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மனங்களின் ஒற்றுமை மூலம் ஆன்மிகத்தை வளர்க்கும் ராமகிருஷ்ண மிஷனுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

10 Replies to “டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்”

 1. அன்பு தமிழ் இந்து டாட் காம் குழுவினருக்கும் திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கும்,

  மேதகு அப்துல் கலாம் ஆற்றிய உரையின் தமிழாக்கம் படித்தேன் மிக்க அருமை. உங்கள் தளம் ஆன்மீக தேடல் உள்ளோர்க்கும், இந்து மதம் பற்றி அறிய விளைவோர்க்கும் சரியான இடமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. தொடருட்டம் உங்களது ஆன்மீகப் பனி.

  அன்பன்,

  ஜெயக்குமார்

 2. அருமையான மொழி பெயர்ப்பு அரவிந்தன். உங்களையும் மேதகு அப்துல் கலாம் அவர்களையும் ஆண்டவன் பரிபூர்ணமாக ஆசீர்வதிக்கட்டும்

  அன்புடன்
  ச.திருமலை

 3. Thank you so much.
  God Bless.
  Very happy to read your website articles.
  Anbudan,
  srinivasan.

 4. இந்த வார்த்தைகளுடன் சுவாமி ஹர்ஷானந்த மகராஜின் இந்து சமய கலைக்களஞ்சியத்தின் முதல் பிரதியை வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மனங்களின் ஒற்றுமை மூலம் ஆன்மிகத்தை வளர்க்கும் ராமகிருஷ்ண மிஷனுக்கு எனது வாழ்த்துக்கள்//

  This para has come twice.

  Please.check.

 5. மிகவும் அருமையாக இல்லது ஜி ……

  நான் சமிபத்தில் கண்ணியாகுமரில் உங்களை சந்தித்துள்ளேன் ……..

  (தர்ம ரக்ஷன சமிதி ஆன்மிக வகுப்பில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *