புதிய பொற்காலத்தை நோக்கி – 12

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

ஜாதி சமூகத்தில் என்ன விதமான நெருக்கடிகள் இருந்தன என்பதை மிகையாக எடுத்துக்கொண்டதால் மிகையான போராட்ட வடிவங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். அமெரிக்க கறுப்பின உரிமைப் போராட்டம் போல் இந்திய ஜாதி அமைப்பையும் நினைத்துவிட்டார்கள். நிற வெறி, இன வெறி, மத வெறி போல் நாம்-பிறர் என்று இரு துருவ எதிர் நிலை ஜாதி சமூகத்தில் இருந்திருக்கவில்லை. ஏற்றத் தாழ்வானது பல அடுக்குகளாகப் பிரிந்திருந்தது. ஒருவரிடம் எல்லாமே குவிந்திருந்தது. இன்னொருவரிடம் எதுவுமே இல்லை என்பதுபோலவோ இரண்டு பேரில் ஒருவருக்கு இன்னொருவர் மீது தாங்க முடியாத வெறுப்பு என்ற இருண்மை நிலையோ இருந்திருக்கவில்லை.

உணவுப் பழக்கத்தை வைத்து இதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். உயர் அடுக்கில் இருந்தவர்கள் மாமிச உணவை முற்றாகத் தவிர்த்தனர். இரண்டாம் அடுக்கில் இருந்தவர்கள் ஆடு, கோழி என சாப்பிட்டு வந்தனர். கடலோரங்களில் இருந்தவர்களுக்கு மீன் எளிதில் கிடைத்தது. அடுத்த அடுக்கில் இருந்தவர்கள் மாட்டிறைச்சியை உண்டனர். அவர்களுக்கு அடுத்த அடுக்கில் இருந்தவர்கள் பூனை, அணில், காடை, கௌதாரி என சாப்பிட்டனர். ஒவ்வொரு அடுக்கில் இருந்த ஜாதியினருக்கான உணவுப் பழக்கம்/உரிமை/பாரம்பரியம் என்பதன் அடிப்படையில் இருந்த உணவு வளம் முழுவதும் அருமையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. எதுவும் எங்கும் குவிந்திருக்கவில்லை. யாருக்கும் எதுவும் இல்லாமலாக்கப் பட்டிருக்கவில்லை.

புல் தின்னும் பசுவுக்குத் தொழுவம்; கொள் தின்னும் குதிரைக்கு லாயம். யானைக்கு கொட்டடி. நாய்க்குத் தெரு. கழுதைக்கு மந்தைவெளி. ஆட்டுக்குக் கிடை. கோழிக்குக் கூண்டு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வசிப்பிடம் இருந்ததுபோல் ஒவ்வொரு ஜாதியினரும் சேர்ந்து வாழும் இடங்கள் அவர்களுக்கான சேரியாக இருந்தது. வேள்வி செய்து வந்தவர்கள் வாழ்ந்த இடம் வேள்விசேரி. வட (ஆல) மரத்தின் அருகில் அமைந்த சேரி வட சேரி.

இன்று சேரி என்பது வாழத் தகுதியற்ற இடத்தைக் குறிக்கிறது. இது உலகம் முழுவதுமே ஓரிரு நூற்றாண்டுக்குள் உருவான இழி நிலைதான். இதை வைத்து இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே காலகாலமாக இப்படியாகவே மோசமான வகையில் வாழ்ந்துவந்ததாக நினைப்பது தவறு.

இன்றும் கிராமப்புறங்களில் கடைநிலை ஜாதியினரின் வீடு சாணமிட்டு மொழுகப்பட்டு அதி தூய்மையாகவே பராமரிக்கப்பட்டுவருவதைப் பார்க்கமுடியும். கூவம் இன்றுதான் சாக்கடை நதி. நூறு ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஓடிய நதியே.

அந்தவகையில் ஜாதி சமூகம் ஒப்பீட்டளவில் மிதமான ஏற்றத் தாழ்வையும் வேதனையையும் கொண்டதாகவே இருந்திருக்கிறது. உரிமை சார்ந்த போராட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில்தான் அது மோசமான விளைவுகளைத் தர ஆரம்பித்திருக்கிறது. மருத்துவரும் அவருடைய பிழையான சிகிச்சை முறையுமே நோயை அதிகப்படுத்தியிருக்கிறது.

இதை இன்னும் புரியும்படியாகச் சொல்வதென்றால் இன்றைய வர்க்க பேதத்தை எடுத்துக்கொள்வோம். பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வை மிகப் பெரிய அநீதியாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் வர்க்க ரீதியான ஏற்றத்தாழ்வை அப்படிச் சொல்வதே இல்லை. கம்யூனிஸ்ட்கள் மாத்திரமே வர்க்க ஏற்றத் தாழ்வை விமர்சிப்பார்கள். கம்யூன் வாழ்க்கையே லட்சியம் என்று சொல்லும் அவர்கள்கூட ஒரு கம்பெனியில் ஒவ்வொரு அடுக்கில் இருப்பவருக்கு ஒவ்வொருவிதமான சம்பளம், ஊக்கத் தொகைகள் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதே இல்லை.

அவர்களுடைய கட்சியிலேயே தலைவர்கள் 25 கோடி வாங்கிக் கொள்வார்கள். தொண்டர்களை உண்டியல் குலுக்கி சம்பாதித்துக்கொள்ளச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் ஒரு குறுங்குழுவினர் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு  காட்டாட்சி நடத்துவார்கள் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். கோட்பாட்டளவில் வர்க்க  ஏற்றத்தாழ்வை நிராகரிப்பவர்கள் அவர்கள் என்பதை கோட்பாட்டளவில் நாமும் ஏற்றுக்கொள்வோம்.

ஒரு திரையரங்கத்தை எடுத்துக் கொள்வோம். அதில் தரை டிக்கெட்டுக்கு ஐம்பது ரூபாய். பெஞ்சுக்கு 100 ரூபாய். குஷன் சீட்களுக்கு 150 ரூபாய். பால்கனிக்கு 200 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்திருப்பார்கள். இதில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக யாருமே சொல்வதே இல்லை. எல்லாருமே சமம் தானே. எல்லாருக்குமே ஒரே விலை, ஒரே விதமான குஷன் சீட் தரவேண்டியதுதானே என்று யாரும் போராடுவதில்லை.

என்ன சொல்வார்களென்றால் இன்று தரை டிக்கெட் எடுத்திருப்பவர் நாளைக்கு 200 ரூபாய் கொடுத்தால் பால்கனி சீட்டில் அமர்ந்து படம் பார்த்துக்கொள்ளலாம். யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால், ஜாதி சமூகத்தில் தரை டிக்கெட்காரர்கள் எக்காலத்திலும் பால்கனிக்குச் செல்லவே முடியாது. எனவே, அதுதான் மிகவும் கொடூரமானது. இந்தப் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வு சரிதான் என்று சொல்வார்கள்.

ஒரு கம்யூனிஸ்ட் இந்த வர்க்க வேறுபாட்டைப் போக்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். எல்லாரும் சமம் தான். ஐம்பது ரூபாய் கொடுத்து தரை டிக்கெட் எடுத்தவருக்கும் பால்கனியில் உட்கார்ந்து பார்க்க உரிமை உண்டு என்று சொல்லி சமத்துவப் போராட்டத்தை ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

பால்கனிகாரர்கள் அதை எதிர்ப்பார்கள். குஷன் சீட்காரர்களும் எதிர்ப்பார்கள். திரையரங்க உரிமையாளரும் எதிர்ப்பார். காவலரும் எதிர்ப்பார். சட்டமும் எதிர்க்கும். ஒருவர் எந்த அளவுக்கு இதில் அடாவடியாகப் போராடுகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு அடி கிடைக்கும். இப்போது அடிப்பவர்கள் மீது தவறு இருக்கிறதா? தரை டிக்கெட் எடுத்துவிட்டு பால்கனியில் உட்காருவேன் என்று சொல்பவர் மீது தவறு இருக்கிறதா? அனைவரும் சம்மாக உட்கார்ந்து பார்க்கவேண்டுமென்றால் அரங்கத்தை அதற்கு ஏற்ப வடிவமைக்கவேண்டும். அதைவிட்டு விட்டு பால்கனி நுழைவுப் போராட்டம் நடத்தினால் அது பெரும் தவறு.

சமத்துவத்தின் எல்லை புரிகிறதா? அதை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது புரிகிறதா?

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை, குறிப்பிட்ட வகையில் வணங்கி வந்தவர்கள் இன்னொரு தெய்வத்தை வணங்க விரும்பினால் அங்கு பேச வேண்டியது எல்லாரும் சமம் தானே என்பதா? அது தரை டிக்கெட் எடுத்தவர் பால்கனியில் உட்காருவேன் என்று சொல்வதற்கு சமம். 200 ரூபாய் சம்பாதித்து விட்டு வா என்று சொல்லி அனுப்புவதுபோல் இந்தக் கோவிலுக்கான ஆசாரங்களை கடைப்பிடித்துவிட்டு வா என்று தான் சொல்லவேண்டும். தீட்சை பெறுதல் என அதற்கான வழிமுறைகள் எல்லா கோவில்களிலும் காலகாலமாகவே இருந்து வந்துள்ளன. அதைத்தான் சீர்திருத்தவாதிகள் முன்னெடுத்திருக்கவேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஜாதி உரிமைப் போராட்டங்களில் பிராமணர்களுக்கு நாங்கள் சமம் என்று முன்னெடுக்கப்பட்டவற்றில் வன்முறை மிகவும் குறைவு. இடை நிலை ஜாதியினரை எதிர்த்து நடந்த ஜாதி உரிமைப் போராட்டங்களில் வன்முறை மிக அதிகம். ஈகோ காயப்படுத்தப்படும்போது யார் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதன் பின்னால் அந்தந்த சமூகத்தின் ஆன்மிக உணர்வும் தமது மேலாண்மையை எந்த அளவுக்குத் தன்னால் நிலைநிறுத்திக்கொண்டுவிட முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்திருக்கிறது. இருந்துவருகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், கிறிஸ்தவ இஸ்லாமியர் செய்த 80% கொடுமைகள் மறைக்கப்பட்டன. 20 சதவிகித நன்மைகள் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டன. இந்துக்கள் செய்த சாதனைகள், நன்மைகள், சுமுகமான சமூக கூட்டுறவு இவையெல்லாம் 80% மறைக்கப்பட்டன. அவர்கள் செய்த 20% தவறுகள் பூதாகரப்படுத்தப்பட்டன.

இந்தியா இன்று விரைந்து முன்னேறும் நாற்கரச் சாலை இதுவாகவே இருக்கிறது. நாம் கைவிட்டுச் சென்றதால் பாழடைந்து கிடக்கும் நம் கோவிலுக்கு நாம் சென்றடைய வேண்டுமென்றால் இந்த தங்க நாற்கரச் சாலையில் இருந்து நாம் கிளை பிரிந்தாகவேண்டும்.

ஐரோப்பிய-பிரிட்டிஷ் பாணியிலான பள்ளிக்கூடக் கல்வியானது உலக அளவில் மிகப் பெரிய கருவிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க உதவியிருக்கின்றன. நோபல் பரிசு பெற்றவர்களில் பலரும் குலத் தொழில், குலக் கல்வி பெற்றவர்கள் அல்ல. இன்றைய காலகட்டடத்தில் முன்னணியில் இருக்கும் விளையாட்டு வீரர்களாகட்டும், விஞ்ஞானிகளாகட்டும், அரசியல் பெரும் தலைவர்களாகட்டும், பொருளாதார மேதைகளாகட்டும் பெரும்பாலானவர்கள் குலக் கல்வி/குலத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அல்ல.

உலகம் மாறிவிட்டது. குலத் தொழில்/குலக்கல்வி பெற்றவர்கள் கடந்த காலத்தில் செய்த சாதனைகளைவிட நவீன காலக் கல்வி/தொழிலில் ஈடுபட்டவர் களுடைய சாதனைகள் மிக மிக அதிகம். எனவே நவீனக் கல்வியை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இது ஒருவகையில் உண்மைதான். நமது ஆட்சி மொழி, இணைப்பு மொழி, மருத்துவம், கல்வி, அரசியல் கட்டமைப்பு, நிர்வாகக் கட்டமைப்பு, உடை, உணவு, தனி நபர் சிந்தனை, குடும்ப உறவுகள் பிரியத் தொடங்கியது என அனைத்துவகையிலும் மேற்குலகின் நகலாகவே நாம் ஆகிவிட்டிருக்கும் நிலையில் கடந்த காலத்தில் நாம் முன்னணியில் இருந்தோம் என்பதோ ஐரோப்பியரே நம்மை முடக்கினர் என்றோ சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால், இன்று இந்தியா மேற்குலகின் தோளில்தான் அமர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் மேற்கத்திய மயமாக்கத்தால்தான் நடந்துவருகிறது. மேற்குலகினர் நம்மை முடக்கினார்கள் என்பதைச் சொல்லும் தார்மிகத் தகுதியை அரை மேற்கத்தியராக ஆகிவிட்டிருக்கும் நாம் இழந்துவிட்டிருக் கிறோம். அந்த உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாம் நம் கடந்த காலத்துக்குத் திரும்பியாகவேண்டும்.

மாட்டுவண்டி, திண்ணைப் பள்ளி, பாட்டி வைத்தியம், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, அரை ஆடை, பிரசவ கால மரணங்கள், மண் ரோடு, கமலை ஏற்றம், ராட்டை, கிட்டிப்புள், கபடி, மரத்தடி பஞ்சாயத்து எனத் திரும்பியாகவேண்டும்.

இது சாத்தியமா?

ஆங்கிலம், கார், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அலோபதி மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மின் விளக்குகள், ஃப்ரிட்ஜ், டி.வி, செல்போன், குளிர்பானங்கள் என எதையும் பயன்படுத்தக்கூடாது.  மேற்குலகின் கண்டுபிடிப்புகள் வேண்டும். மேற்குலகைப் பழிக்கவும் வேண்டும் என்றால் எப்படி நியாயம் என்று ஒரு கேள்வி இங்கு எழுகிறது.

பின் தங்கியதாக நாம் கருதும் நம் நேற்றைய வாழ்க்கைமுறையானது அடிப்படையில் இயற்கைக்கு இசைவானது. இன்றைய வளர்ச்சி என்பது இயற்கைக்கு எதிரானது. அதுபோல், சமத்துவம் பற்றிப் பேசுகிறதே தவிர இன்றைய நவீன காலகட்டத்தில்தான் ஏழை பணக்காரர் இடைவெளி மிக மிக அதிகமாக இருக்கிறது.

பெண் சுதந்தரம் என்ற பெயரில் பெண்களை வீட்டில் இருந்து வெளியே வரவைத்திருக்கிறதே தவிர பணியிடங்களில், வெளியிடங்களில் என அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் அதிகரித்துவருகின்றன. கணவர் சொல்லும் வேலையைச் செய்தால் அடிமைத்தனம்; அலுவலகத்தில் பாஸ் சொல்லும் வேலையைச் செய்தால் சுதந்தரம் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இந்திரா நூயி… ஒரு கீதா கோபிநாத் என்று வெற்றிகரமான பெண்களின் பட்டியலைக் காட்டி பெண் சுதந்தரம் அவசியம் என்று சொல்பவர்கள் மீதி 98 பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளிலும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும்  சிரமப்படும் பெண்களை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

திரையுலகம் என்பது எப்படி ரோஸ் கன்னங்கள் கொண்ட நாயகிகளை மட்டுமே கொண்டது அல்ல; எண்ணற்ற துணை நடிகைகளையும் கொண்டதாக இருக்கிறதோ… ஏன் அந்த கதாநாயகிகளுமே கூட எப்படியான வேதனைகளை வெளியே சொல்லாமல் மனதுக்குள் அடக்கி வைத்துகொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே அது வெளிச்சம். எனவே வெளியில் தெரியும் மினுமினுப்பை வைத்து எடைபோட்டுவிடக்கூடாது. பெண்கள் சமையலறையுடன் முடங்கவேண்டும் என்று சொல்வது நிச்சயம் சரியல்ல. அதே நேரம்  எந்தப் பாதுகாப்பும் இன்றி நவீன நடுத்தெருவில் விடப்படுவதுமே சரியல்ல. அந்தர்ஜனம் என்று வீட்டுக்குள் முடங்கிய பெண்ணின் கன்ணீர் கதையை விவரித்துப் பேசும் நாம் பாஹர் ஜனங்களின் வேதனையையும் கொஞ்சம் பொருட்படுத்தவேண்டும்.

மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு முன்னேற்றங்கள் நடந்திருக் கின்றனவோ அதே அளவுக்கு அது வியாபாரமயமாகிவிட்டிருக்கிறது. நேற்றைய நம் பாரம்பரிய மருத்துவத்தில் அது சேவையாகவே இருந்தது. 90 வயது 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடிந்தது. இன்று எழுபதைத் தாண்டினாலே அதிசயம். அதுவுமே 40 வயதில் இருந்து மருந்துகளால்தான் வாழ்வே முடியும் என்ற நிலையே இருக்கிறது.

இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது நேற்றைய மன்னராட்சியைவிட மக்களை கிள்ளுகீரையாக மதிக்கிறது. இன்றைய நீதிமன்றங்களில் நீதியைவிட அநீதியே கோலோச்சுகிறது.

இன்றைய விவசாயத்தில் விளைச்சல் அதிகம் கிடைப்பது உண்மையே. ஆனால், வேதி உரங்களினால் மண் மலடாகி வருகிறது. மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமையினால் நீரழிவு, உடல் பருமன், மாரடைப்பு என ஏராளமான வியாதிகள் பெருகத் தொடங்கிவிட்டன. உலக அளவில் ஐம்பதுவருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பத்து பேரில் ஒருவர்தான் அதிக குண்டாக இருப்பார். இப்போதோ பத்துக்கு நான்கு என அதிகரித்துவிட்டது. இன்று அதிக உணவு கிடைக்கிறது. ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. இதுவா வளர்ச்சி?

அனைவருக்கும் கல்வி தரப்படுகிறது. ஆனால் தரப்படும் கல்வியின் தரம் என்னவாக இருக்கிறது? படித்து முடிக்கும் படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம் எவ்வளவு இடைவெளி இருக்கிறது? படித்து முடித்து டிகிரி பெற்றாலும் வேலைக்குத் தயார்படுத்த தனி கல்வி/பயிற்சி தரப்படுவதென்பது எதைக் காட்டுகிறது. கட்டட வேலை, வீட்டுக்கு வெள்ளையடித்தல், ஹோட்டல் சர்வர், டோர் டெலிவரி பாய் என முறைசாரா தொழில்களில் ஈடுபடும் நபர்களே மிக அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஏன் டிகிரி வரை கூட படித்து முடித்தவர்களே. பத்து பன்னிரண்டு வருடங்கள் ஒரு ஆசிரியரை பள்ளியை நம்பிப் படித்த பின்னரும் இந்த சம்பந்தமில்லாத வேலைக்குத் தான் போக முடியுமென்றால் அதை எதுவுமே படிக்காமலேயே செய்யப் போயிருக்கலாமே.

இதில் கொடுமை என்னவென்றால் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு வேலைக்குச் செல்லும் இன்ஜினியர்கள் மிக அதிகம். இப்படியான மோசமான நிலை எதுவுமே குலக்கல்வி வழி முறையில் இருந்திருக்கவே இல்லை. கடைநிலை ஜாதியைச் சேர்ந்த பத்திருபது சதவிகித்தினர் வேண்டுமானால் மேம்பட்ட நிலைக்கு வந்திருக்கலாம். மற்றபடி பெருவாரியானவர்கள் இன்றும் அடிமட்ட்த்திலேயே இருக்கிறார்கள். மேல் நிலைக்கு வந்துவிட்டவர்களுடைய இட ஒதுக்கீட்டை பின் தங்கியவர்களுக்குத் தரச் சொன்னால் முதல் வேலையாக அதை எதிர்ப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் மனுவே காரணம் என்பது எளிய தப்பித்தலுக்கான வழியாக இருக்கிறது. 

இன்றைய நமது கல்வி என்பது லட்சம் பேருக்குத் தரப்படுகிறது. அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் உள்ளிட்ட கண்ணியமான பணியிடமோ ஆயிரம் தான் இருக்கிறது. லட்சம் பேரில் இருந்து ஆயிரம் பேரை வடிகட்டித் தேர்ந்தெடுக்கவே எக்கச்சக்கமாக, அரைகுறையாக் கற்றுத் தரப்படுகின்றன.

நேற்றைய கல்வி முறை குல வழியாக இருந்தது. அந்தந்தத் தொழிலில் அந்தந்தக் குலம் நிபுணத்துவம் பெற்று விளங்கியது. அதிகப்படியாக நல்லொழுக்கம், பக்தி, இலக்கியம் என கற்றுக் கொள்ளப்பட்டன. அவரவர் தொழிலுக்குத் தேவையான கணிதம் கற்றுக்கொள்ளப்பட்டன. படிப்பு என்பது சுமையாக அன்று இருந்திருக்கவில்லை. ஒருமுகப்பட்டதாக செயல் திறனை மேம்படுத்துவதாக இருந்திருக்கிறது. நேற்றைய கால சிற்பிகள் செய்த சாதனைகள் இன்றைய எந்திரங்களால் கூடச் செய்ய முடியாதவையே. நேற்றைய கொல்லர்கள் தயாரித்து இரும்பு உலகிலேயே அதி உன்னதமானதாக இருந்திருக்கிறது. அன்றைய பொறியியலாளர்கள் எழுப்பிய கோவில்கள், அணைகள் எல்லாம் அபாரமான சாதனைகளாகத் திகழ்கின்றன.

கொக்கக்கோலா உலகம் முழுவதும் விற்பனையாகிறது. இளநி, மோர், நன்னாரி சர்பத், நுங்கு போன்ற பாரம்பரிய பானங்கள் குறைவாகவே விற்பனையாகின்றன. விற்பனையின் அடிப்படையில் பார்த்தால் கொக்க கோலாவே உயர்ந்தது என்று தோன்றும். தாகம் தணிக்கும் சுவையான பானம் என்று பார்த்தால் நம் நாட்டு பாரம்பரிய பானங்கள் எந்தவகையிலும் சளைத்தவை அல்ல என்பது தெரியும்.

இப்படியாக எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் நவீன காலப் பொருட்கள், அறிவியல், தொழில்நுட்பங்கள் இவற்றுக்கு கடந்த காலப் பொருட்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் எவையும் சளைத்தவை அல்ல. நாம் மேற்கத்தியமயமாகியிருக்கிறோம் என்பதனாலேயே அதுவே உயர்ந்தது என்று அர்த்தமில்லை.

(தொடரும்)

2 Replies to “புதிய பொற்காலத்தை நோக்கி – 12”

  1. Excellent article. Just as an aside, in Australia you pay the same money for all tickets in movie theater, it doesn’t matter where you sit.

  2. அவசரப்பட்டுவிட்டேனோ என்று தோன்றுகிறது!

    // ஒரு கம்யூனிஸ்ட் இந்த வர்க்க வேறுபாட்டைப் போக்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். எல்லாரும் சமம் தான். ஐம்பது ரூபாய் கொடுத்து தரை டிக்கெட் எடுத்தவருக்கும் பால்கனியில் உட்கார்ந்து பார்க்க உரிமை உண்டு என்று சொல்லி சமத்துவப் போராட்டத்தை ஆரம்பித்தால் என்ன நடக்கும்? // அதாவது “கீழ்ஜாதியினர்” 50 ரூபாய் கொடுத்து தரை டிக்கெட் எடுத்தவர்கள்! பிராமணர்கள் பால்கனி டிக்கெட் எடுத்தவர்கள்! நானும் பக்கத்து தெருவில் பிறப்பவனும் என் அப்பா அம்மாவின் ஜாதியை வைத்து வேறு வேறு டிக்கெட் கொடுத்துவிடுவீர்கள்! டிக்கெட் கொடுக்க நீங்கள் யார்?

    குலக்கல்வி சிறந்த முறை. பெண் வீட்டில் கணவன் சொல்லும் வேலையை செய்ய வேண்டும். பேஷ் பேஷ்!

    இதை விட வெளிப்படையான ஜாதித்திமிரை பார்த்து ரொம்ப நாளாகிறது. தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாசிரியர்கள் ஜாதி உயர்வு தாழ்வை கொண்டாடிக் கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *