(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)
நவீன காலகட்ட கிறிஸ்தவத்துக்கு உலக மொழிகளை அங்கீகரித்து அவற்றைத் தொகுக்கும் மொழியாக பாலமாக இருக்கும் பண்பும் பக்குவமும் இல்லை. அது பிற மதங்களை நிராகரிக்கும் கிறிஸ்தவம் போலவே மொழிகளை நிராகரிக்கும் குணத்தையே கொண்டிருக்கிறது. அதனால்தான் சம்ஸ்கிருதம் பாரதம் முழுவதும் கற்றுத் தரப்பட்டபோதிலும் அது ஒரு தனி மொழியாக மட்டுமே கற்றுத் தரப்பட்டது. பிற வகுப்புகள் அனைத்தும் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் பாதிரிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட கான்வெண்ட்கள் உலகின் அனைத்து தாய்மொழிக் கல்வியையும் அழித்தொழித்தன.
இரண்டாவதாக, ஆங்கிலப் பாடத்தில் மேற்கத்திய, கிறிஸ்தவ அம்சங்களே கற்றுத் தரப்படுகின்றன. ஏ ஃபார் அம்மன் என்றோ ஆர் ஃபார் ராமன் என்றோ எஸ் ஃபார் சிவன் என்றோ சொல்லித்தரப்படுவதில்லை. எக்ஸ் ஃபார் எக்ஸ் (கிறிஸ்ட்) மஸ் என்றே கற்றும் தரப்படுகிறது. இந்தியா முழுவதுமான குழந்தைகள் படிப்பதெல்லாம் ரெயின் ரெயின் கோ அவே என்ற பனிப் பிரதேச மழை விரட்டிப் பாடல்களே. ரிங்கா ரிங்கா ரோஸஸ்… வி ஆல் ஃபால் டவுன் போன்ற பாடல்களே. அமெரிக்காவில் ஜனவரியில் என்ன முளைக்கும், பிப்ரவரியில் என்ன முளைக்கும் என்பதில் ஆரம்பித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் கேட்கும் மாதமே டிசம்பர் என்பதாகவே ஆங்கில மாதங்கள் கற்றுத் தரப்படுகின்றன. சித்திரை, வைகாசி கற்றுத் தரப்படுவதில்லை. மேரி டீச்சஸ் கிராமர் என்று வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க மையக் கருத்துகள், அமெரிக்க, ஐரோப்பிய ஆசிரியர்கள் எழுதும் பாடங்கள் இவையே இடம்பெறுகின்றன. வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனை பற்றிய விரிவான பாடம் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த இந்துக்கள் பற்றி எதுவும் கிடையாது. தெரேசா பற்றிய பாடமுண்டு. அன்ன சத்திரங்களும் ஆதுர சாலைகளும் குளங்களும் கோவில்களும் கட்டி சமூக சேவை செய்த இந்து சமூகம் பற்றிய எதுவும் கிடையாது.
ஒரு கிறிஸ்தவ மதிப்பீடு இடம்பெறுகிறதென்றால் ஒன்பது இந்து மதிப்பீடுகள் இந்தியக் கல்வியில் இடம்பெற்றாகவேண்டும். தீபாவளிக்குப் பட்டாசுகள் வெடிப்பது தவறு என்று குழந்தைகளுக்கு சூழலியல் சார் கல்வி போதிக்கப்படும்போது இந்தியக் குழந்தைகள் தினமாக கோகுலாஷ்டமியே இருக்கவேண்டும் என்று சொல்லும் குரலும் எழவேண்டும். உலக இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்றுத் தரப்படும் அதே நேரம் இந்திய இணைப்பு மொழியாக ஹிந்தியும் பாரத பழங்கால அறிவுச் சுரங்கத்தின் திறவுகோலாக சம்ஸ்கிருதமும் கற்றுத் தரப்படவேண்டும். முக்கியமாக கல்வி என்பது தாய்மொழியிலும் இவை மொழிப்பாடங்களாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் சொந்த கலாசாரம், தேச பக்தி, உயர் மதிப்பீடுகள் போன்றவை கல்வியின் அடிப்படையாக இருக்கவேண்டும். பொருளாதார, சர்வதேச அம்சங்கள் இரண்டாம்பட்சமானதாக இருக்கவேண்டும்.
பள்ளித் தோட்டங்களில் துளசி முதலான மூலிகைகளை நடுதல், பள்ளியில் நில வேம்பு குடிநீர் தருவதுபோல் பல்வேறு மூலிகைச் சாறுகளையும் தருதல் என பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரியவைக்கவேண்டும். பள்ளி மாணவர்களின் பிறந்த நாள் விழாக்களின்போது அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபடச் சொல்லித் தரவேண்டும்.
இந்திய அளவில் சிறுபான்மையினர் என்று உரிமை கோரும் உலகளாவிய வல்லாதிக்க மதத்தினருக்குக் கல்வி மையங்கள் நடத்த தரப்படும் அரசின் சலுகைகளுக்கு பிரதிகாரமாக இந்து கலாசாரம், இந்திய மேன்மை பற்றிய கல்வி அங்கு கட்டாயமாக்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இந்திய அரசின் சலுகைகள் பெற்று கல்வி நிறுவனம் நடத்துவதானால், இந்திய அரசியல் சாசனத்தின் செக்குலரிஸத்துக்கு இணக்கமாகவே அதை நடத்த வேண்டும் என்பது மிக அடிப்படையான நிபந்தனைதானே . அனைத்து சிறுபான்மை கல்வி நிலையங்களின் முகப்பிலும் தேசியக் கொடி நாள் முழுவதும் பறக்கவிடப்படவேண்டும். அல்லது அவற்றின் முகப்பு பெயர் பலகையில் மூவர்ணம் அல்லது மூன்று சிங்க முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும். இந்திய அளவில் செக்குலரிஸம் என்பதை மத நீக்கம் என்று அல்லாமல் மத நல்லிணக்கம் என்றுதானே சொல்கிறோம். கான்வெண்ட்களில், மதரஸாக்களில் தினமும் மும் மத பிரார்த்தனை நடக்கவேண்டும்.
உடை விஷயத்தை எடுத்துக்கொண்டால் நமது பாரம்பரியமான வேஷ்டி, சட்டை என்பது நமது தேசத்தின் தட்ப வெப்பநிலைக்கு மிகவும் சரியானது. கோட், சூட், பேண்ட், டை, ஷூ, சல்வார் போன்றவையெல்லாம் குளிர் மற்றும் வெப்பம் நிறைந்த பகுதிகளுக்கான உடைகள். நாம் நமது தட்ப வெப்ப நிலைக்கு உகந்தவகையில் வேஷ்டி துண்டு என்ற உடைக்கு மாறவேண்டும். இன்று நம் தேசத்தில் அர்ச்சக குலத்தினர் மட்டுமே இந்த உடையை அணிகிறார்கள். அதிலும் பட்டு என்பது தவிர்க்கப்படவேண்டியது. கதரில் நெய்த வேஷ்டி துண்டு என்பதே நமக்கான உடையாக இருக்கவேண்டும். இதில் நாம் மரபுக்கு முழுமையாக திரும்பலாம். முதல் கட்டமாக கோவில் போன்ற பாரம்பரியமான இடங்களுக்குச் செல்லும்போது பாரம்பரிய உடையை அணிவது என்பதில் இருந்து இதை ஆரம்பிக்கலாம். அதுவரையில் நவீன உடைகளை அலுவலகம் போன்றவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அதிவிரைவிலேயே பாரம்பரிய உடைகளுக்கு, நம் சூழலுக்கு உகந்த உடைகளுக்குத் திரும்பியாகவேண்டும்.
அதுபோல், மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால் முற்றாக நவீன அலோபதி என்றோ முழுவதுமாக பாரம்பரிய சித்த, ஆயுர்வேத முறை என்றோ போகவேண்டியதில்லை. அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றுக்கு நவீன அலோபதி. நோய் வராமல் தடுக்க சித்த ஆயுர்வேத முறை என்று வைத்துக்கொள்ளலாம். நவீன மருத்துவக் கருவிகளை நோயை அடையாளம் காணப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட நாள் இருக்கும் நோய்களுக்கு பாரம்பரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். அப்படியாக இரண்டையும் கலந்து ஒரு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு முறையைப் பின்பற்றிவரலாம்.
கூட்டுக் குடும்பம் என்பது நமது பாரம்பரிய வழிமுறை. அது இன்று வழக்கொழிந்துவருகிறது. என்னதான் சொன்னாலும் குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கம் வேறெதிலும் வராது. இன்று வேலை வாய்ப்பு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை உலகம் முழுவதற்கும் வீசி எறிந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு குடும்ப உறுப்பினரின் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று ஒரே குடும்பமாக சில நாட்களைக் கழிக்கவேண்டும்.
திருமணம், மரணம் போன்றவற்றுக்காக வந்துபோவதென்பது போதுமானதல்ல. ஏனென்றால் திருமணம் என்பதில் உறவினர்கள் மட்டுமல்ல ஏராளமான நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரை கவனித்துக்கொள்ள வேண்டிவருகிறது. நெருக்கமான குடும்ப உறவினருடன் அதிக நேரம் செலவழிப்பதென்பது முடிவதில்லை. மரண வீட்டிலென்றால் அது சோகமயமான சூழலாக இருக்கும். அந்நேரத்தைய ஆறுதலுக்காக அருகே இருப்பது அவசியமே. என்றாலும் குடும்ப உறவுகள் கொண்டாட்டமாக இருக்க வேண்டியதும் அவசியமே. ஒட்டு மொத்த தேசத்தினரும் தத்தமது குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் விழாவாக தீபாவளி போல் எதையாவது ஆரம்பித்தால் கூட நல்லது. அப்போதுதான் அனைவரும் விடுமுறை எடுத்து வந்துபோக முடியும்.
இணையம் என்பது அனைவரையும் அருகே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இணைய வழி வகுப்புகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் போல் இணைய வழி குடும்ப நிகழ்ச்சிகள் மாதம்தோறும் நடத்தப்படலாம். உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு குடும்பத்தினர் கையில் குத்து விளக்கை ஏந்தியபடி ஒரு நிமிடம் தியானிப்பதென்பது அற்புதமான காட்சியாக இருக்கும்.
குலத் தொழில் வழக்கொழிந்து போய்விட்டதால் முன்பு தொழில் குலங்களுக்கு இடையே இருந்த நெருக்கம் மறைந்துபோய்விட்டது. நவீனத் தொழில்களில் அனைத்து ஜாதியினரும் ஈடுபடுவதால் ஜாதி உணர்வைத் தாண்டி ஒரு நெருக்கம் வர வழியும் இல்லை. மனிதர்களைத் தனித்தனியாக்கிப் பிரிக்கும் இந்த தனி நபர் வாதம் என்பது மிகவும் தவறானதுதான். தாவரங்களைப் போலவே, விலங்குகளைப் போலவே மனிதர்களும் குழுவாக வாழ்ந்து வந்தவர்களே. என்ன நவீன மாற்றங்கள் வந்தாலும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இன்றும் தமது குழு மனப்பான்மையை கைவிடவே இல்லை. என்ன தனி நபர் வாதம் பேசினாலும் கிறிஸ்தவ உலகில் கிறிஸ்தவ குழு மனப்பான்மைகொண்ட சக்திகள் தீவிரமாக மிகுந்த செல்வாக்குடனே இருக்கின்றன. நாம் நவீனத்துவத்தைப் பார்த்து நமதுகுழு அடையாளத்தைத் தொலைத்தால் கடைசியில் வேரற்று, அடையாளமற்று மேற்குலகின் நகல்களாகவே கேலிச் சித்திரங்களாகவே ஆகி நிற்போம். இந்த நவீன வாழ்க்கைமுறை ஓரிரு நூற்றாண்டாகத்தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே கூடிய விரைவிலேயே இந்த மாயையில் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். ஈச் இட் நியூ என்று நவீனத்துவம் கேள்வி கேட்கச் சொன்னால், ஈஸ் இட் அவர் ட்ரெடிஷன் என்று நாம் கேட்க வேண்டும்.
குலத்தொழில், குடும்ப உறவுகள் சிதைந்திருக்கும் நிலையில் நாம் நமக்கான குழு அடையாளத்தை வேறு வகையில் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
முதல்கட்டமாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரே குடியிருப்பில் வசிப்பதுஎன்பதாக ஆரம்பிக்கலாம். சி.இ.ஓ., மேனேஜர், சூப்பர்வைசர், தொழிலாளர், கார் ஓட்டுபவர், வாயில் காப்பாளர் என ஒரு அலுவலகத்தில் பல பணிகளைச் செய்பவர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே துறையில் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்ற வகையில் வரும் பந்தம் கூடுதலாக இருக்கும் அல்லவா. அது ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதுபோன்ற உணர்வை உருவாக்கும். அனைத்து விழாக்களையும் இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுவதென்பது நிச்சயம் மிகுந்த மனநிறைவையும் அவர்களிடையே ஒற்றுமையையும் கொண்டுவரும். மேற்கத்திய நவீன பணிகளினால் உருவான தனி நபர் என்ற சிந்தனையை இல்லாமலாக்கி ஒரு குழு அடையாளத்தை, பாதுகாப்பை, பந்தத்தை அது தரும். குடும்பம், குலம் என்று வாழ்ந்து வந்த நமக்கு அது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகவும் இருக்கும்.
யோகா என்பது நம்முடைய பாரம்பரிய விஷயங்களில் இன்றும் முன்னெடுக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. உலக யோகா தினம் என்று அறிவிக்கப்பட்டு அனைத்து நாடுகளுக்கும் அது கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இதில் ஒரு சிறிய பிரச்னை இருக்கிறது. அது இந்து மறுமலர்ச்சியாக நடக்கவில்லை. உலகம் யோக சாஸ்திரத்தின் ஆதார ஆன்மிக இலக்கை ஒதுக்கிவிட்டு அதை வெறும் உடல் மற்றும் மனப் பயிற்சி என்ற அளவுக்குக் குறுக்கிவிட்டது. இது சரியல்ல.
உலகம் முதலில் இவற்றை உடல் பயிற்சி என்றாவது ஏற்றுக்கொள்ளட்டும். அதன் பின்னர் மெள்ள மெள்ள அதில் ஆர்வம் வந்து அதன் உண்மையான இலக்கை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. யோகா, தியானம் இவையெல்லாம் மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். திறம்படச் செயல்பட ஈடுபடவும் உதவும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், யோகாவின் உண்மையான இலக்குகள் கற்றுத் தரப்படவேண்டும். அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், ப்ரஹ்மச்சரியம், அபரிக்ரஹா ஆகிய மதிப்பீடுகளில் தொடங்கி நியமம், ஆசனம், ப்ராணாயாம்ம், ப்ரத்யாகாரம், தாரணா, த்யானம், சமதி என அது பயணிக்கவேண்டும். முதலில் இந்து மத்த்துக்கும் யோகாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோன்ற பார்வை தவிர்க்கப்படவேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதிலும் பாரம்பரியமா, நவீனமா, இரண்டும் கலந்த கலவையா மூன்றில் எது என்று யோசித்துச் செயல்படலாம்.
(தொடரும்)