புதிய பொற்காலத்தை நோக்கி – 6

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

தொடரின் மற்ற பகுதிகள்

இந்துஸ்தானில் பல்வேறு ராஜ்ஜியங்கள் பழங்காலம் தொட்டே இருந்துவந்திருக்கின்றன. த்ரேதாயுகத்தில் ஸ்ரீராமர் அமைத்த ராஜ்ஜியம், பாண்டவர்களின் ராஜ்ஜியம் என பெரும் சக்கரவர்த்திகளாக பாரதம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆண்டிருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன், சத்ரபதி சிவாஜி, அசோகர் போன்றவர்கள் முழு இந்தியாவையும் இல்லையென்றாலும் கணிசமான பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பொதுவாகவே பாரதம் என்பது 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவே ஆளப்பட்டிருக்கிறது. தமிழகமும் கூட மூவேந்தர்கள் மட்டுமல்ல எண்ணற்ற குறு நில மன்னர்களாலேயே நிர்வாகம் செய்யப்பட்டிருக்கிறது. மையம் அழிந்த ஆட்சி நிர்வாகம் தான் பாரதத்தின் ஆன்மவாகவே இருந்திருக்கிறது. இதனால் தான் இஸ்லாமியப் படையெடுப்பாகட்டும் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பாகட்டும் மிக எளிதில் அரங்கேறிவிட்டது.

நம் தேசம் கலாசாரரீதியாக இந்துமதிப்பீடுகளைக் கொண்டதாக இருந்தது. அரசியல்ரீதியாக பல்வேறு சமஸ்தானங்களாக சுயாட்சி அதிகாரத்துடன் இருந்தன. நாம் இந்து என்ற உணர்வு அரசியல்ரீதியாகவும் இருந்திருந்தால் வடகோடியில் ஒரு சமஸ்தானம் தாக்கப்பட்டபோதே தென் கோடியில் இருந்தும் உதவிக் கரம் நீண்டிருக்கும். துரதிஷ்டவசமாக அப்படியான அரசியல், ராணுவ கட்டமைப்பு நம்மிடம் இருந்திருக்கவில்லை. அதோடு நமது போர்வழிமுறைகள் எல்லாம் தர்மத்தின்பாற்பட்டவை. நாள், நட்சத்திரம் குறித்து, இடம் குறித்து க்ஷத்ரியர்கள் மட்டுமே ஆயுதமேந்தி போர்க்களத்துக்கு வந்து போரிடவேண்டும். இதுதான் நமது மரபு. வில் ஏந்தியவர் இன்னொரு வில்லாளியுடன் மட்டுமே போரிடுவார். எதிரிகளில் வாள் ஏந்தி நிற்பவர் மீது அம்பை எய்யமாட்டார். சூரிய உதயத்துக்குப் பின் போர் ஆரம்பிக்கும். நூரிய அஸ்தமனத்தோடு முடிந்துவிடும். இரு தரப்புக்கும் உணவு, மருத்துவம் எல்லாம் இரு தரப்பு ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் என இரு தரப்புக்குமே தமிழக மன்னர் உணவு அளித்திருக்கிறார்.

முஸ்லிம்களுடைய போர் என்பது மிகவும் கொடூரமானது. எந்தவொரு தர்ம நியாயத்துக்கும் கட்டுப்பட்டது இல்லை. வெற்றி ஒன்றே இலக்கு என்ற நோக்கத்தில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவிப்பார்கள். சிறைப்பிடிப்பார்கள். நள்ளிரவில் திடீரென்று தாக்குவார்கள். அமைதிப் பேச்சுக்கு வருபவர்களைக் கொல்வார்கள். காட்டு மிராண்டிகளைவிட மோசமான போர்முறை அவர்களுடையது.  பிரிட்டிஷாருடைய போர் முறையும் கிட்டத்தட்ட அதுதான். வாஸ்கோடகாமா வணிகத்துக்காக இந்தியாவுக்கு வந்த முதல் பயணத்திலேயே கேரள மன்னர்களுடன் போரிடத்தான் செய்திருக்கிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. வாள்கொண்டு அடிமைப்படுத்திய பாரதத்தை வாளாலேயே ஆண்டனர். கிறிஸ்தவ பிரிட்டிஷாரோ துப்பாக்கி, பீரங்கியால் அடிமைப்படுத்திய இந்தியாவை வேறு வழியில் நிர்வகிக்க விரும்பினர். தமது மேலாதிக்கத்தை விரும்பி ஏற்கும்படியாக இந்துஸ்தானிகளை மூளைக்கறை செய்யத் தீர்மானித்தனர்.

இந்துஸ்தானியரிடையே ஆரிய-திராவிடர், இந்து-முஸ்லிம், ஜாதி இந்து-பட்டியலினத்தினர் என தெளிவான திட்டமிடலுடன் காய் நகர்த்தினர். அதன் ஓர் அங்கமாக இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பாரம்பரிய அமைப்புகள் அனைத்தையும் கைப்பற்றி அழித்தனர்.  அதில் மிக முக்கியமானது நமது பாரம்பரியக் கல்வி அமைப்பு. தட்சசீலம், நாலந்தா, வல்லபி, விக்ரமசீலா, புஷ்பகிரி, ஜகதலா, ஒதந்தபுரி, சோமபுரா, பிக்ராம்பூர், வாரணாசி, சாரதாபீடம், ரத்னகிரி, மிதிலா, உஜ்ஜயினி, காஞ்சிபுரம் போன்ற பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், நூல்கள் எல்லாம் இஸ்லாமிய படையெடுப்பை அடுத்து  அழிந்துவிட்டிருந்தன. இருந்தபோதிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி என மிகப் பெரிய கல்வி வலைப்பின்னல் நிறுவப்பட்டு இளைய தலைமுறையினரின் தேவைக்கு ஏற்ற கல்வியானது இந்துஸ்தானத்தில் இருந்து வந்திருக்கிறது. அதற்கு என்ன நேர்ந்தது என்பதை மகாத்மா காந்தியின் இந்த வரிகள் மிகத் தெளிவாக அழுத்தமாக விளக்குகின்றன.

‘பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் யதார்த்த நிலையை வளர்த்தெடுக்காமல் அவற்றை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டார்கள். மண்ணைத் தோண்டி வேரை வெளியில் எடுத்து மரத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது.’

பிரிட்டிஷார் இந்தியாவை மக்களை நிறுவனமயப்படுத்தி, எளிய, சட்டத்துக்குட்பட்ட கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்கவேண்டும்; அதற்கு ஓரளவுக்கு எழுத்தறிவும் கல்வி கற்பித்தலும் அவசியம் என்று ஐரோப்பியர்கள் நினைத்தார்கள். இந்த விஷயங்கள் கிரேட் பிரிட்டனில்கூட அப்போது தான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு முன்புவரை அங்கும் பள்ளிக் கல்வி பெரிய அளவில் இருந்திருக்கவே இல்லை.

பிரிட்டனில் நவீன பள்ளிக்கூடங்கள் 18-ம் நூற்றாண்டுவாக்கில் ஆரம்பிக்கப்பட்டு கடைநிலைப் பணியாளர்களின் குழந்தைகளை அதில் சேர்க்க ஆரம்பித்ததன் முக்கிய நோக்கமே ஞாயிற்றுக் கிழமை நடக்கும் சர்ச் வழிபாட்டுகளின் போது பைபிளை வாசிக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதுதான். அதே நோக்கத்தை இந்தியாவிலும் நிறைவேற்றவும் கிறிஸ்தவ ‘ஒளி’யையும் ‘ஞான’த்தை யும் மக்களுக்கு வழங்கவும்தான் பல்வேறு இந்திய மொழிகளின் இலக்கணத்தை உடனடியாக உருவாக்க முயன்றார்கள். வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் இதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்:

‘புனித வேதாகமங்கள் உள்ளூர் மொழிகளில் உலா வரவேண்டும்’, கிறிஸ்தவம் மக்களிடையே பரவவேண்டும். ‘இந்தியர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே கிறிஸ்தவர்களாக மாறிவிடவேண்டும்.’

பொதுவாக நம் நாட்டில் அனைவருக்கும் கல்வியை பிரிட்டிஷார்தான் கொண்டுவந்தார்கள் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளாக பிராமணரல்லாதவர் களுக்குக் கல்வி தரப்பட்டிருக்கவில்லை என்ற ஒற்றைப் பொய்யின் அடிப்படையில் உருவான இயக்கங்கள் தான் நீதிக் கட்சி, திக. திமுக போன்றவை. சங்க காலம் தொடங்கி பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை பிராமணரல்லாதவர்களால் எழுதப்பட்டவையே. எங்களைப் படிக்கவிடவில்லை என்ற இந்தப் பொய்யானது இன்று வெகுவாக அம்பலப்பட்டுவிட்டது. ஆனால், இரு பிறப்பாளர்களுக்கும் நாலாம் வருணத்தினருக்கும் கூட கல்வி கிடைத்தது. பட்டியல் இனத்தினருக்குக் கல்வி பிரிடிட்ஷார் வந்த பின்னரே தரப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் ஆதி காலத்தில்ருந்தே அனைவருக்கும் கல்வி தரப்பட்டிருந்தது என்றுதான் பலரும் நம்பிவருகிறார்கள். தரம்பால் இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாகவும் மிக விரிவான ஆவணங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். அவற்றில் பிரிட்டனில் கல்வியின் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிவாக்கில் பிரிட்ட னில் 500 இடைநிலைப் பள்ளிகள் இருந்தன. எனினும் இந்தக் கல்விமையங்களும் கல்வியும் மேட்டுக்குடியினருக்கு மட்டுமே கிடைத்தது. 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் குறுகலானது. ப்ராட்டஸ்டண்ட் புரட்சிக்குப் பிறகு பெரும்பாலான மடாலயங்கள் மூடப்பட்டன. அரசு அவற்றின் வருவாயையும் சொத்துகளையும் பெரும் கெடுபிடிகளுக்குள்ளாக்கியது.

ஏ.இ.டோப்ஸ் எழுதிய எஜுகேஷன் அண்ட் சோஷியல் மூவ்மெண்ட்ஸ் 1750–1850, (கல்வி மற்றும் சமுதாய இயக்கங்கள் 1750–1850) என்ற நூலில் பக் 105-ல் எட்டாம் ஹென்றி அமல்படுத்திய சட்டம் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்த சட்டம் 1542–43-ல் வெளியிடப்பட்டது.  அதில், எந்த தேவாலயத்திலும் பைபிள் ஆங்கிலத்தில் வாசிக்கப்படக்கூடாது. எந்தவொரு கைவினைக் கலைஞரும் உதவியாளர்களும் பயணிகளும் சேவகர்களும் பெண்களும் பண்ணையாட்களும் உழைப்பாளர்களும் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் படிக்கக்கூடாது. அரசரின் உத்தரவுக்கு மாறாக எதுவும் கற்றுத் தரக்கூடாது. அரசரின் உத்தரவை மீறி எந்த மத போதகர் போதித்தாலோ கற்றுக்கொடுத்தாலோ எதிராக எதுவும் செய்தாலோ அல்லது செய்யவைக்கப்பட்டாலோ குற்றவாளியாகக் கருதப்படுவார். முதல் குற்றம் அரச ஆணை மறுதலிப்பு. இரண்டாவதாக மூன்றாவதாக அவர் மத விரோதியாகக் கருதப்படுவார். இந்தக் குற்றங்களுக்குத் தண்டனையாக உயிருடன் எரிக்கப்படுவார். அவருடைய உடமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். அந்தச் சட்டத்தின் பெயர்: உண்மையான ஞானத்தின் வளர்ச்சிக்கான சட்டம்.

பள்ளிகளில் அல்லாமல் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளுதல் என்பது மன்னர்கள், நிலப் பிரபுக்கள், வணிகர்கள் போன்ற உயர்குடியினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. கைவினைக் கலைஞர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், விவசாயிகள், பண்ணையாட்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ‘புனித நூல்களைப் படிப்பதால் வரும் ஒழுங்கின்மையைத் தடுக்கும் நோக்கில்’ அவை மறுக்கப்பட்டிருந்தன. 16-ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தில் இன்னொரு விஷயமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘உழவரின் மகன் உழவுத்தொழிலில் ஈடுபடவேண்டும்; கைவினைக் கலைஞரின் மகன் அந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும்; கனவான்களின் குழந்தைகள் ஆட்சி நிர்வாகம், அதிகாரம் குறித்துக் கற்கவேண்டும். பிற தேசங்களைப் போலவே நமக்கும் உழவர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவேண்டியது அவசியமில்லை’

இதுதான் பிரிட்டனில் 16-ம் நூற்றாண்டுவரை நிலைமை. 17-ம் நூற்றாண்டின் முடிவு வாக்கில் அனைவருக்குமான பரோபகாரப் பள்ளிகள் (common schools) தொடங்கப்பட்டன. மத போதனைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்தவேண்டும் என்பதே இந்தக் கல்விமையங்களின் நோக்கமாக இருந்தது. வேல்ஸில் ‘ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டில் பைபிள் படிக்கவும் மதம் சார்ந்த பிற விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் ஏழைகளைத் தயார்படுத்த வேண்டும்’ என்பதே இந்தக் கல்வியின் நோக்கமாக இருந்தது.

1834 வரையில்கூட நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் கூட மத போதனைகள், வாசிப்பு, எழுத்து, கணிதம் என்பதாகவே இருந்தன. ‘தீய விளைவுகள் ஏற்படும்’ என்று கருதிச் சில கிராமத்துப் பள்ளிகளில் எழுதக் கற்றுத் தரவில்லை.

டே ஸ்கூல் இயக்கத்துக்குப் பெரிய உந்துதல் ‘பீல்ஸ் ஆக்ட் ஆஃப் 1802’ மூலம் கிடைத்தது. அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த ஒரு விஷயம்:

‘சிறுவர்களைப் பணியில் அமர்த்திக் கொள்பவர்கள் ஏழுவருடப் பயிற்சிக் காலத்தில் நான்கு வருடங்களுக்கு எழுதப் படிக்கவும், கணிதமும் கற்றுத் தந்தாகவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேர மத போதனை தரவேண்டும். அனைத்துக் குழந்தைகளையும் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் பங்குபெற வைக்கவேண்டும்’.

இதே காலகட்டத்தில்தான் ஜோசஃப் லங்காஸ்டர் முன்வைத்த மானிடோரியல் கல்வி முறை (Monitorial System of Education) நடைமுறைக்கு வந்தது. இதில் திறமைசாலியான மாணவர்கள் ஆசிரியர்களோடு சேர்ந்து பிற மாணவர்களுக்குக் கற்றுத் தருவார்கள். சென்னையில் தான் இப்படியான கல்வி முறையை லங்காஸ்டர் பார்த்து அதை பிரிட்டனில் அமல்படுத்தியிருக்கிறார். ஆண்ட்ரூ பெல்லும் இதையே முன்வைத்தார். அவரும் இந்தியக் கல்வி முறையில் இருந்துதான் இதற்கான உந்துதலைப் பெற்றிருக்கவேண்டும்.இப்படியான நிலையில் இந்துஸ்தானில் கல்வி எப்படி இருந்தது என்பது தொடர்பான பிரிட்டிஷாரின் ஆவணங்களை இனி பார்ப்போம்.

கல்வி தொடர்பான ஆய்வுகளில் மிகவும் புகழ் பெற்றதும் அதிக சர்ச்சைக்குள்ளானதுமான கருத்து வில்லியம் ஆடம்மினால் சொல்லப்பட்டதுதான். அவர் தன்னுடைய முதல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

1830களில் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்தன.

தாமஸ் மன்ரோ, மதராஸ் பிரஸிடென்ஸியில் ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது’ என்று கூறியிருக்கிறார். ஜி.எல். பிரெண்டெர்கஸ்ட் போன்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

‘1820களில் விரிவாக்கப்பட்ட பாம்பே பிரஸிடென்ஸியில் சிறிய கிராமமானாலும் பெரிய கிராமமானாலும் ஒரு கிராமத்துக்குக் குறைந்தது ஒரு பள்ளியாவது இருக்கிறது. பெரிய கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன’.

1882ல் டாக்டர் ஜி.டபிள்யூ லெய்ட்னரின் கூற்றுப்படி 1850வாக்கில் பஞ்சாப் பகுதிகளில் பள்ளிகளின் எண்ணிக்கை இதற்கு இணையாக இருந்ததாகவே குறிப்பிட்டிருக்கிறது.

1800களில் இங்கிலாந்தில் ஏழை மாணவர்களுக்கென்று சொற்ப பள்ளிகள் மட்டுமே இருந்தன. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகள் கூட மிகவும் மோசமான நிலையிலேயே இருந்திருக்கின்றன. மேலும் இந்தியாவைப்பற்றி எழுதியவர்கள் (அவர்கள் கல்வியைப் பற்றி எழுதியிருந்தாலும் தொழில் துறை கைவினைத் தொழில்கள் பற்றியானாலும் பிரிட்டிஷ் தொழிலாளர்களோடு ஒப்பிட்டு இந்திய விவசாயத் தொழிலாளர் களின் கூலி பற்றி எழுதியிருந்தாலும்) எல்லாரும் 18-ம் நூற்றாண்டின் பிந்தைய மற்றும் 19-ம் நூற்றாண்டின் முன்பகுதியைச் சேர்ந்தவர்களே. எனவே, இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது என்று அவர்கள் எழுதியது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாக இருந்திரா விட்டாலும் பிரிட்டனுடைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். அவர்கள் இப்படி ஒப்பிட்டுத் தமது ஆய்வு முடிவுகளைச் சொல்லியிருக்கவில்லை என்றாலும் முற்றிலும் மாறு பட்ட அந்தச் சூழலே அப்படிச் சொல்ல வைத்திருக்கும் என்று ஒருவர் எடுத்துக்கொள்ளலாம்.

பள்ளிகளின் எண்ணிக்கை பிரிட்டனைவிட இந்தியாவில் மிக அதிகமாக இருந்திருக்கும் நிலையில் ஆசிரியர்கள் பற்றிய ஒப்பீடும் மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது.

லங்காஸ்டர் தனது படைப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறர்.

பிரிட்டிஷ் பள்ளிகளின் ‘ஆசிரியர்கள் திறமையற்றவர்களாகவே இருந்தனர். அறிவு குறைந்தவர்களாக மட்டுமல்லாமல் குடிகாரர் களாகவும் இருந்தனர்’.

பிரிட்டிஷ் கல்வியாளர் டோப்ஸ் பிரிட்டிஷ் பள்ளிகளில் மாணவர்கள் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

‘பள்ளிக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை. அதைவிட்டுவிட்டு மிகவும் பெருந்தன்மையாகக் கணக்கிட்டுப் பார்த்தாலும் 1835—ல் சராசரி பள்ளிப்பருவம் என்பது ஒரு வருடமாக மட்டுமே இருந்தது. 1851-ல் அது இரண்டு வருடங்களாக ஆனது.’  

இவற்றோடு ஒப்பிடும்போது இந்தியாவில் ஆசிரியர்கள் எல்லாம் தெய்வத்துக்கு சமமாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆச்சார்ய தேவோ பவ… மாதா, பிதா, குரு தெய்வம் என்று பெற்றோருக்கும் தெய்வத்துக்கும் இணையாக மதித்துப் போற்றும்படியாகவே இருந்திருக்கிறார்கள்.

பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருந்த 1822–25 காலகட்டத்தில்கூட மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையானது 1800களின் இங்கிலாந்து பள்ளிகளோடு ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.

1822–25 காலகட்டத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1,50,000. சுமார் 20- 30 வருடங்களுக்கு முன்பாக இதைவிட அதிகப் பள்ளிகள் இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த சாத்தியக்கூறை நிச்சயம் ஒருவர் மறுக்கவே முடியாது. மதராஸ் பிரஸிடென்ஸியில் 1823-ல் மொத்த மக்கள் தொகை 1,28,50,941. இங்கிலாந்தின் மக்கள் தொகை 1811-ல் 95,43,610. இரு பகுதிகளின் மக்கள் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் இங்கிலாந்தில் அனைத்துவிதமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை (சாரிட்டி, சண்டே, சர்குலேட்டிங் என அனைத்துப் பள்ளிகளையும் சேர்த்து) 75000. மதராஸ் பிரஸிடென்ஸியில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம். மேலும் பிரிட்டனில் இருந்த 75,000 பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் பள்ளி நடந்ததே வெறும் 2–3 மணிநேரம் மட்டுமே. அதுவும் ஞாயிறுகளில் மட்டுமே அந்தப் பள்ளிகள் நடந்தன.

(தொடரும்)

One Reply to “புதிய பொற்காலத்தை நோக்கி – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *