புதிய பொற்காலத்தை நோக்கி – 8

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

தரம்பால் செய்திருக்கும் மகத்தான வரலாற்று ஆய்வு  தொடர்பாக எழும் முக்கியமான முதல் கேள்வி: அந்த ஆய்வுகள் சரியான நேரத்தில் செய்யப்பட்டனவா?

இது தரம்பால் மீதான விமர்சனமாக அல்ல; அவர் தன் வாழ்வின் 40களில் அந்த ஆய்வை ஆரம்பித்தார். அவரளவில் அது மிகவும் சரியான, நியாயமான செயலே. ஆனால், அவர் பிறப்பதற்கு வெகு முன்னதாகவே ஐரோப்பியர் உருவாக்கிய பொய்ச் சித்திரங்கள் தமது இலக்கை மிகவும் தெளிவாகப் பூர்த்திசெய்துவிட்டன. உண்மை, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் பொய், உலகத்தை ஒன்பது முறை சுற்றிவந்துவிட்டது

காந்தி 1930 வட்ட மேஜை மாநாட்டில் இந்தியாவின் கல்வி முறை பிரிட்டிஷாரின் கல்வி முறையைவிடச் சிறப்பாக இருந்தது. பிரிட்டிஷார் அமல்படுத்திய கல்வி முறையே இந்தியாவின் பாரம்பரியக் கல்விமுறையை அழித்துவிட்டது என்று சொன்னார். ஆனால் இதற்கான ஆதாரத்தை பிரிட்டிஷார் கேட்டபோது காந்தியால் தரமுடிந்திருக்கவில்லை. சுதந்தரப் போராட்டம் சிறை வாசம் என அவருடைய வாழ்க்கை கழிந்துவிட்டது. 1980களில்தான் தரம் பால் பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே இந்தியாவில் இருந்த பாரம்பரியக் கல்வி முறையின் சிறப்புகளை வெளிக்கொண்டுவந்தார். அதுபோல் இந்தியாவின் பாரம்பரிய அறிவியல், தொழில்நுட்பம் இவற்றின் சிறப்புகள் பற்றியும் 1970-ல் தான் வெளிக்கொண்டுவந்தார். ஆனால், இதற்குள் இந்தியாவுக்கு சுதந்தரம் கிடைத்து இந்தியாவில் எதுவுமே இல்லை என்ற வரலாறு இந்திய பாடத்திட்டங்களில் நேருவாலும் அவர் நியமித்த இஸ்லாமிய கல்வி அமைச்சர்களாலும் இட்துசாரி கல்வியாளர்களாலும் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. 

நிரபராதியான ஒருவரைக் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதி தூக்கு தண்டனையும் நிறைவேற்றிவிட்டதுபோல் இந்துஸ்தான் தொடர்பாக பிழையான  சித்திரம் உருவாக்கப்பட்டு அது அழுத்தமாக நம் மனங்களிலும் உலக அறிவுச்சூழலிலும் நிலைபெற்றுவிட்டது. சுமார் 200 ஆண்டுகள் கழித்து வந்து தூக்கு தண்டனை தரப்பட்ட வழக்கை அலசி ஆராய்ந்து, அந்த நபர் நிரபராதி என்று நிரூபிக்கும் வக்கீலைப்போல் தரம்பால் செயல்பட்டிருக்கிறார். அவருடைய வாதங்கள் அபாரமானவை. உண்மையானவை. நியாயமானவை. ஆனால், அவற்றால் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவியை உயிர்ப்பிக்கமுடியுமா?

இது மிகவும் வேதனைக்குரிய நிலைதான். என்றாலும் அநியாயமாகக் கொல்லப்பட்ட அந்த அப்பாவியின் வாரிசு, ’கொலைகாரனின் குழந்தை’ என்ற பழிச்சொல்லில் இருந்து தப்பிக்க அந்த வழக்கறிஞரின் வாதம் உதவுகிறது அல்லவா. அதுபோல் நம் கடந்த காலம் குறித்து நமக்கு உண்மை புரியவர தரம்பாலின் வரலாற்று ஆய்வுகள் பெரிதும் உதவியிருக்கின்றன. அந்த வகையில் அவர் ஒரு மகத்தான சாதனையையே செய்திருக்கிறார். பருவம் தவறிப் பெய்த மாமழைதான். என்றாலும் நிலத்தின் தீராத தகிப்பை அது சாந்தப்படுத்தியிருக்கிறது.

ஆனால்… தரம்பாலின் வரலாற்றாய்வு என்ன தாக்கத்தை உலகில் ஏற்படுத்தியது?

சர்வதேச அளவில், குறிப்பாக இந்திய வரலாற்று, அறிவுப்புலங்களில், இந்துஸ்தானம் பற்றிய உண்மையான வரலாறை வெளிப்படுத்தும் ஐரோப்பிய ஆவணங்கள் பற்றி மிகப் பெரிய கள்ள மௌனமே நிலவுகிறது. அப்படியான ஆவணங்கள் இருப்பதாகவே காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறது. வெற்றி பெற்ற பின்னும் பதக்கம் அணிவிக்கப்படவில்லை என்பதுபோன்ற ஒரு நிலை நீடித்துவருகிறது.

நம் நாட்டு அரசியல் தலைவர்களும் அதிகாரவர்க்கக் கட்டமைப்பும் பிரிட்டிஷ் கால காலனியத்தின் நீட்சியாகவே இருப்பதால் நம் அரசும் அந்த உண்மைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரவே இல்லை. தரம்பால் முன்வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் நமது கல்வி, வரலாற்றுப் பாடங்கள், சமூகவியல் பாடங்கள், அறிவியல் தொழில்நுட்பப் பாடங்கள், விவசாயம், மருத்துவம், வானவியல் என அனைத்துமே மறு சீரமைப்பு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்திருக்கவில்லை என்பது பெரும் துரதிஷ்டமே.

அரசுக் கல்விப்புலம் தான் அப்படியென்றால் பிற தனிப்பட்ட புத்தகப் பதிப்பக உலகமும் தரம்பாலின் ஆய்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. அவருடைய புத்தகங்கள் பல வருடங்கள் மறு பதிப்பு காணவே இல்லை. அவர் ஆரம்பித்துவைத்த ஆய்வுகளை யாரும் முன்னெடுத்துச் செல்லவில்லை. பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர் ஆராய்ச்சி செய்ததென்பது பத்தில் ஒரு பங்குமட்டுமே. உப்பு வேலி, இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு (ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள்) என ராய் மாக்ஸம் போன்றவர்கள் தொடந்து இந்த திசையில் இப்போது செயல்பட்டுவருகிறார்கள் என்றாலும் நமது கடந்த காலம் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியதில் பத்தில் எட்டு பங்குக்கு மேல் இன்னும் பிரிட்டிஷ் நூலகங்களில் புதையுண்டே கிடக்கின்றன.

அவையெல்லாம் இந்துஸ்தானின் மேன்மை பற்றிப் பேசுவதால் இடதுசாரி அறிவுஜீவி, ஆய்வுப்புலம் அவற்றை முற்றாக மறைத்து, மறுத்துவருகிறது. வலதுசாரி ஒருவருக்கு மட்டுமல்ல நடுநிலையான ஆய்வாளருக்குக்கூட அந்த காலனிய ஏகாதிபத்திய நூலகத்தின் கதவுகள் திறப்பதே இல்லை.

ஆக, இடதுசாரி ஆய்வுலகம் இந்துஸ்தானின் மேன்மை பற்றிய உண்மையை ஆராய்ந்து சொல்லவே செய்யாது. வலதுசாரியினர் ஆராய்ந்து சொன்னால் அதைக் கண்டுகொள்ளவே செய்யாது. தலை விழுந்தால் நான் ஜெயித்தேன். பூ விழுந்தால் நீ தோற்றாய் என்ற தெளிவான விதிமுறையை அழுத்தமாக வகுத்துவைத்திருக்கிறார்கள்.

இது ஒருபக்கமென்றால் கண்டுபிடிக்கப்பட்ட சொற்ப உண்மைகள்கூட உரியவகையில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப் பட்டிருக்கவில்லை. 

அனைத்து ஜாதியினரும் திண்ணைப் பள்ளிகளில் படித்திருக் கிறார்கள்; சில ஊர்களில் பிராமணர்களைவிட அதிக எண்ணிக்கையில் பிராமணரல்லாதவர்கள் படித்திருக்கிறார்கள்; அவர்களில் பட்டியல் ஜாதியினரும் அடங்குவர் என்ற ஆவணத்தை தரம்பால் முன்வைத்தபின்னரும் 2000 ஆண்டுகளாக பிராமணரல்லாதவர்களைப் படிக்கவிடவில்லை என்ற பொய் முழக்கம் ஓயவில்லை.

சில வாரங்களுக்கு முன் 2021-பிப்ரவரி-மார்ச்சில் புத்தகக் கண்காட்சி வாசலில் பபாசி ஏற்பாடு செய்திருந்த தி.க. பிரசாரக்கூட்டத்தில் கி.வீரமணி 100 ஆண்டுக்கு முன்பாக இந்தப் புத்தகக் கண்காட்சி நடந்திருந்தால் இவ்வளவு கூட்டம் வந்திருக்குமா… நம்மைத்தான் 2000 ஆண்டுகளாக எழுதப் படிக்கவே விடவில்லையே. நீதிக் கட்சி வந்தபின் தானே நாமெல்லாம் எழுத்துக்கூட்டியே படிக்க முடிந்தது என்று பெரும் கரகோஷங்களுக்கு இடையே கையை உயர்த்தி முழங்கினார். அதே புத்தகக் கண்காட்சியில் அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றது தொடர்பாக தரம்பால் பதிப்பித்த பிரிட்டிஷ் ஆவணங்கள் கட்டுக்கட்டாக அச்சடிக்கப்பட்டு ஒரு ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டுத்தான் இருந்தன.

சூத்திரர்களை வேசி மகன்கள் என்று இந்து தர்ம சாஸ்திரங்கள் சொல்வதாக வீரமணி முழங்கிவருகிறார். அதற்கு ஆதாரம் கேட்டால் அவர் தந்ததே இல்லை.

சூத்திரர்கள் ஏழுவகைப்படுவார்கள். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன் (ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415)

இதைத்தான் அவர்கள் எடுத்துக்கொண்டு வருவார்கள். தாசிக்குப் பிறந்தவர்கள் சூத்திரராகக் கருதப்படுவார் என்பதை சூத்திரர் அனைவரும் வேசிக்குப் பிறந்தவர்கள் என்று திரித்துப் பொருள் கூறுகிறார்கள். அந்த அடிப்படையே தவறு. அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதானால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பவர்கள் மூடரைப் பேரறிஞர் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களைக் கொல்ல உதவிய, பிரபாகரனின் அம்மாவுக்கு சிகிச்சை தராமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியைத் தமிழினத் தலைவர் என்று மதிப்பார்கள். 1950 முதல் 1967 வரை ஈ.வெ.ரா.வை வண்டை வண்டையாகத் திட்டியவர்கள். மலிவு விலை மதுவை அமல்படுத்தியவர்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் அவர்களுடைய அருமை பெருமைகளைப் பட்டியலிடும்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்படுபவர்கள் எல்லாருமே திமுகவினர் என்று புரிந்துகொண்டால் அது எவ்வளவு தவறாக இருக்கும். அது போன்றதுதான் சூத்திரர் எல்லாம் வேசி மகன்கள் என்று சொல்வதும்.

சஹஸ்ரநாமம் சொன்னால் பிராமணர்களுக்கு கல்வி மேன்மையும். க்ஷத்ரியர்களுக்கு வெற்றியும் வைஸ்யர்களுக்கு செல்வ வளமும் சூத்திரர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சூத்திரர்கள் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் என்று இந்து தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை ஒருவர் ஏற்கவேண்டாம். ஆனால், பிரிட்டிஷார் சொல்வதை ஏற்றுத்தானே ஆகவேண்டும்.  பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றியபோது இந்துஸ்தானில் இருந்த சமஸ்தானங்களின் மன்னராக இருந்தவர்களில் 72% பேர் நான்காம் வர்ணத்தினரான சூத்திரர்களே என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆவணமும் அதே புத்தகக் கண்காட்சியில் இருக்கத்தான் செய்தது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இன்னும் நாம் தரம்பாலையே அதாவது, நம்மைப் பற்றிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சொற்ப உண்மை வரலாறையே நம் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்ற வேதனையான விஷயமே நமக்குத் தெரியவருகிறது. இது ஏதோ கண்காட்சி வாசலில் மேடை கிடைத்த சந்தோஷத்தில் யாரோ எதையோ சொல்லிச் சென்ற விஷயம் அல்ல. ஈ.வெ.ரா. யுனெஸ்கோ பரிசு பெற்றார் என்ற பொய்யான தகவலைத் தெளிவாக அம்பலப்படுத்திய பின்னும் அதையே நமது பள்ளி வினாத்தாளில் கேள்வியாகத் திணிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்த கும்பலின் பார்வை, வரலாற்று அறிவு இதுதான்.

தரம்பால் எவ்வளவு சிரமப்பட்டு, என்ன பெரிய உண்மையைக் கண்டு சொல்லியிருந்தால்தான் என்ன? அது எங்கும் யாராலும் அங்கீகரிக்கப்படவில்லையென்றால் அந்த சாதனைக்கு என்னதான் மதிப்பு? எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் நீர் முழுவதையும் கடலுக்கு அனுப்பிவிடும் வீணர்களே அதிகாரத்தில் இருந்தால் அந்த மழையால் என்னதான் பலன் கிடைக்கும்?  

மூன்றாவதாக, இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஐரோப்பியர் நம்மைப் பற்றி உருவாக்கிய பொய்யான வரலாற்றுச் சித்திரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இன்றைய ஐரோப்பிய அமெரிக்கர்கள் செய்திருக்கும் சாதனைகளே தெரிந்திருக்கின்றன. அவர்களிடம் சென்று தரம்பால் ஆராய்ந்து சொல்லியிருக்கும் வரலாற்று உண்மைகளைச் சொன்னால் எந்தச் சலனமும் இருப்பதில்லை.

இன்று நாம் அலோபதி மருத்துவத்தின் மகத்தான முன்னேற்றத்தைப் பயன்படுத்திவருகிறோம். அம்மை நோய்க்கு 300-400 ஆண்டுகளுக்கு முன் நாம் கண்டுபிடித்த மருந்து பிரிட்டிஷாரைவிட ஐரோப்பியரைவிட சிறப்பாக இருந்தது என்று சொல்வதால் என்ன பலன்? இன்று அலோபதி எட்டியிருக்கும் மருத்துவ உயர்நிலையை நம் பாரம்பரிய மருத்துவங்கள் ஏன் எட்டவில்லை என்ற கேள்விதானே இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள்.

நாம் வெகு பழங்காலத்திலேயே கிரகணத்தைத் துல்லியமாகக் கணிதத்தையோ சூரியன், சந்திரன், கிரஹங்கள் இவற்றின் நகர்வைத் துல்லியமாகக் கணித்ததையோ சொன்னால் இன்றைய நாசாவின் சாதனைகளுக்கு முன் அவற்றின் இடம் என்ன என்று கேட்பார்கள்.

இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எதுவுமே நம்முடையது அல்ல. டி.வி. ரேடியோ, கணினி, செல்போன், கார், பைக், மிக்ஸி, க்ரைண்டர் என எதுவாக இருந்தாலும் எதுவுமே நம்முடைய கண்டுபிடிப்பு அல்ல. இந்த உண்மை நம்முடைய பழம் பெருமை அனைத்தையும் ஒரேயடியில் காலி செய்துவிடக்கூடியதாகவே இருக்கிறது.

நமது கடந்த கால சாதனைகளாக நாம் சொல்லும் அனைத்துமே இன்று அந்தந்தத் துறைகளில் பின்தங்கிவிட்ட நிலையில் நமது அந்த சாதனைகளின் இன்றைய முக்கியத்துவம் என்னவாக இருக்கமுடியும்?

மனித குல வரலாற்றில் நடந்த பந்தயத்தில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புவரை நாம் முன்னணியில் இருந்திருக்கிறோம். ஆனால், இன்று நம்மைவிட உலகம் பலமடங்கு தூரம் முன்னேறிவிட்டது. நேற்றைய நம் வைரங்கள் இன்று கண்ணாடித்துண்டுகளாகிவிட்டன. இன்றைய கோஹினூரோ மேற்கத்திய மணி மகுடத்தில் ஜொலிக்கிறது.

உலகத்தினர் இருபது மதிப்பெண் பெற்றிருந்தபோது நாம் ஐம்பது மதிப்பெண் பெற்றிருந்தோம். இப்போது உலகம் 80 மதிப்பெண் பெற்றுவிட்டது. நாமோ அதே ஐம்பதில்தான் இருக்கிறோம். அல்லது 60 க்கு நகர்ந்திருக்கிறோம். நேற்று நாம் அதிக மதிப்பெண் பெற்றதைச் சொல்லி என்ன பயன்? இன்று நாம் பின்தங்கித்தானே இருக்கிறோம். இதை எப்படிச் சமாளிப்பது?

நேற்று உலகம் 20 மதிப்பெண் பெற்றிருந்தபோது நாம் 50 மதிப்பெண் பெற்றிருந்தோமே. நாம் இயல்பாக நம் வழியில் முன்னேற அனுமதிக்கப்பட்டிருந்தால் இன்று 90 மதிப்பெண் பெற்றிருப்போம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு தரம்பாலின் வரலாற்று ஆய்வுகள் மிகவும் அவசியம்.

எந்தவொரு சமூகமும் தனது கடந்த கால சாதனைகளை நினைத்துப் பெருமிதம் கொள்வது அவசியம். அது தரும் தன்னம்பிக்கையே புதிய சாதனைகளைச் செய்ய உத்வேகத்தைத் தரும். பொய்யான வரலாற்று வாசகங்களால் சோர்வடையச் செய்யப்பட்ட மக்களால் உற்சாகத்துடன் எதையும் செய்ய முடியாது. உன் முன்னோர்கள் முட்டாள்கள், பலவீனமானவர்கள் என்றெல்லாம் சொன்னால் நிச்சயம் மனம் தளர்ந்துவிடும். எனவே நம்முடைய நேற்றைய சாதனைகளை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அது இன்றைய நிலையில் முக்கியத்துவம் இழந்துவிட்டிருக்கும் நிலையிலும் அந்த உண்மை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கையைத் தரும். அந்த வகையில் தரம்பாலின் வரலாற்று ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையே.

அதோடு, நம்முடைய இந்தப் பின்தங்கியநிலையானது நம் மீது திணிக்கப்பட்டது. இன்று நாம் உலக அறிவியல்-தொழில்நுட்ப ஓட்டப்பந்தயத்தில் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் நம்முடைய கால்கள் முடமாக்கப்பட்டதுதான். நாம் உண்மையில் பலவீனமானவர்கள் அல்ல என்பது நமக்குத் தெரிந்தாகவேண்டும்.

ஆனால்…

(தொடரும்)

One Reply to “புதிய பொற்காலத்தை நோக்கி – 8”

  1. // இதற்குள் இந்தியாவுக்கு சுதந்தரம் கிடைத்து இந்தியாவில் எதுவுமே இல்லை என்ற வரலாறு இந்திய பாடத்திட்டங்களில் நேருவாலும் அவர் நியமித்த இஸ்லாமிய கல்வி அமைச்சர்களாலும் இட்துசாரி கல்வியாளர்களாலும் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. // ஆசிரியரின் சார்புநிலை நன்றாகவே தெரிகிறது. வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் நேரு, ஆசாத் எல்லாரும் சேர்ந்து வேண்டுமென்றே ஒரு பொய்க்கதையைக் நிறுவினார்கள் என்கிறீர்கள். நேரு அரசுக்கு முன்னால் இந்தியாவில் எல்லாம் இருந்தது என்ற நிலையா மாற்றப்பட்டது? விட்டால் மெக்காலேயின் (அ)புகழ் பெற்ற உரையையே நேருதான் எழுதிக் கொடுத்தார் என்பீர்கள் போலிருக்கிறதே!

    https://siliconshelf.wordpress.com/2019/09/11/மெக்காலேயின்-கல்வித்-திட/

    https://siliconshelf.wordpress.com/2012/04/27/தரம்பால்-எழுதிய-பியூட்ட/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *