மூலம்: ஸ்வராஜ்யா இதழில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய Why Koenraad Elst Is Important For Hindutva என்ற கட்டுரை.
தமிழில்: எஸ்.எஸ்.ராகவேந்திரன்
கோய்ன்ராட் எல்ஸ்ட் எழுதிய ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை என்ற நூலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. முப்பது காத்திரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
Still No Trace of an Aryan Invasion: A Collection on Indo-European Origins. Koenraad Elst. Aryan Books International. Rs 750. 465 pages.
பெல்ஜிய இந்தியவியலாளர் டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரி ஊடகங்களும், அரைகுறை அறிஞர்களும், அவரை PN ஓக் போன்ற கிருக்குகளுடனும், NS ராஜாராம் போன்ற ஆர்வக் கோளாறுகளுடனும் சேர்ப்பதற்கு வன்மத்துடன் முயற்சி செய்கின்றன. இன்னொருபுறம், ஆசாரவாதிகளும், சமூகவளைதளக் காவிகளுக்கும் அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது. அவரது நூல்கள் ஹிந்துத்துவத்துக்குச் சிறந்த சான்றுகள். அவை நமது சித்தாந்தத்தை மிகவும் நேர்மையான முறையில் ஆழமாக நிறுவும் ஆதாரங்கள். மேலே சொன்ன சலலப்புகளைக் கடந்து, காலத்தை வென்று இந்நூல்கள் நிற்கும் என்று தோன்றுகிறது. இவருடைய அணுகுமுறை நேரடியாக உள்ளது, ஆனால் நேர்மையானது.
மனுவாதம் சமத்துவவாதத்துகு எதிரான ஆயுதம்
முதல் கட்டுரை “மனுவாதம் சமத்துவவாதத்துக்கு எதிரான ஆயுதம்”. 50 பக்கம் உள்ள இந்தக் கட்டுரையை ஒவ்வொரு ஹிந்துத்துவவாதியும் படிக்க வேண்டும். நாம் எந்தக் கொள்கையைக் காப்பாற்றப் போராடுகிறோம்? இன்றைய காலகட்டத்தில் அந்தக் கொள்கையின் நிலை என்ன? என்று தெளிவான புரிதலுக்கு இந்தக் கட்டுரை வழிவகுக்கும். இடதுசாரிகள் பிரசாரம் செய்வதுபோல், மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது என்கிறார் எல்ஸ்ட். மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. எல்ஸ்ட் ஒரு முக்கியக் கருத்தை முன்வைக்கிறார். “‘தீட்டு’ என்று சொல்லப்படும் தொழில்களில் ஈடுபட்ட ஜாதிகள் வர்ணக்கலப்பினால் உருவானவை என்று மனு நிரூபிக்க முயல்கிறார்.
மனுவைப் பொறுத்த அளவில், ‘சண்டாளன்’ என்றால், வேலைக்காரத் தந்தைக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவன். மனுவின் அணுகுமுறை அறிவுசார்ந்த நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டினால் மனு ‘நிதர்சனத்தை எளிமையான உருப்படிவங்களுகுள் கொண்டுவர முயல்கிறார். வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது’ என்கிறார் எல்ஸ்ட். ஏனென்றால், அந்தக் காலத்தில் வர்ணக்கலப்பினால் தோன்றும் குழந்தைகள் தனியான ஜாதிகளாக மாறவில்லை. மாறாக, பெற்றோர்களின் இரண்டு ஜாதிகளில் ஏதோ ஒரு ஜாதியில் சேர்க்கப்பட்டனர். இங்கே மனுவின் வர்ணக்கலப்புக்கு எதிரான தனிப்பட்ட மனப்பாங்குதான் வெளிப்பட்டுள்ளது என்பது எல்ஸ்ட்டின் வாதம்.
நீச்சேவின் இனவாதமும், யூதவெறுப்பும் மனுவிடம் இருந்து வரவில்லை என்று குறிப்பிடுகிறார் எல்ஸ்ட். மனுவை தவறாகப் படித்துவிட்டு, நீச்சே தன்னுடைய சொந்த உணர்வுகளுக்கு இது ஆதாரம் என்று நினைத்தார். நீச்சேவுடைய இனவாத வேர்கள் ஐரோப்பிய இனவெறியில் இருந்து தோன்றியவை என்று விளக்குகிறார். சண்டாளன் எனும் பதம் நீசேவின் பல கருத்துகளுக்கு அடிப்படை.
ஆனால்,
இந்த வார்த்தைக்கு மனுவின் விளக்கத்தை விட்டு நீச்சே வெகுதூரம் சென்றுவிட்டார். சண்டாளன் எனும் பதத்தை சமூக-உளவியல் தகுதியாக மாற்றி, அதன்மூலம் யூத தேசியத் மனநிலையையும், கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் உள்ளார்ந்த வெறுப்புணர்வையும் விளக்க முயல்கிறார். - ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை, பக்கம்-49
அதே நேரத்தில், ‘மனுவின் ஜாதிக்கலப்புக்கு எதிரான பார்வை நீச்சேவின் பிரபுத்துவக் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறது.’ இதன் மூலம் ‘அப்போது ஐரோப்பாவில் உருவான இனவாதப் பார்வைக்கும், அவற்றைப் பற்றிய நீச்சேவின் வாதங்களுக்கும் உபயோகப்பட்டது.’
இந்த நூலுக்கு தலைப்பு கிடைத்த விதம்/ கேமரோன் பெட்ரி 2011 விரிவுரை
எல்ஸ்ட் 2011ல் கேம்ப்ரிட்ஜ் தொல்லியல் துறையை சேர்ந்த கேமரோன் பெட்ரி உரை ஒன்றைக் கேட்டார். ஹரப்பா தொல்லியல் ஆய்வு பற்றிய பேச்சு அது. பெட்ரி முதலில் கக்கர் நதியின் (இதுதான் வேதகால சரஸ்வதி நதி என்று நம்பப்படுகிறது) வரைபடத்தைக் காட்டி, தனது உரையைத் துவங்கினார். அது மைகேல் டானினோ தனது சரஸ்வதி நதி பற்றிய புத்தகத்தில் உபயோகித்த வரைபடம். ஆனால் இரண்டு படங்களுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருந்தது. டானினோ வரைபடத்தில் இருந்த பல ஹரப்பா இடங்களை இந்தப் படத்தில் காணவில்லை. பெட்ரி வரைபடத்தில் மிகவும் சொற்பமான இடங்களே இருந்தன.
இதைப் பார்த்த எல்ஸ்ட் ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்தார். “ஆனால் பெட்ரி பேசிய அடுத்த விஷயம் இந்தப் பார்வையை மாற்றியது. “இன்னமும் அகழப்படாத நூற்றுக்கணக்கான இடங்கள் ஹரப்பாவில் உள்ளன” என்கிறது அடுத்த ஸ்லைட். இதன் அடிப்படையில் ஒரு கேள்வியை கேமரோன் பெட்ரியிடம் முன்வைத்துக் கட்டுரையை நிறைவு செய்கிறார் எல்ஸ்ட். “நீங்கள் களத்தில் பணியாற்றும் ஒரு அகழ்வாராய்ச்சி நிபுணர். இப்போது கூட நீங்கள் சில இடங்களை ஆய்வு செய்து இருக்கிறீர்கள். ஆரியப் படையெடுப்புக்கான நேரடி ஆதாரம் எதேனும் அங்கே இருந்ததா?” இந்தக் கேள்வியும், அதன்பின் நடந்த கருத்துப் பரிமாற்றங்களும் இந்த நூலின் தலைப்புக்கு அடிப்படையாக அமைந்தது.
பெட்ரி புன்னகைத்தார், அதுபோன்ற பரபரப்பான கண்டுபிடிப்பு எதுவும் அதுவரை இல்லை என்றார். இது 2011ல் இருக்கும் நிலவரம். அதாவது, பல ஆண்டுகள், அதிகமான பணச்செலவு, உழைப்பு இவற்றுக்குப் பிறகும்கூட, ஆரியப் படையெடுப்புக் கொள்கைக்கு ஒரே ஒரு தொல்லியல் ஆதாரம் கூடக் கிடைக்கவில்லை என்கிறார். - ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை, பக்கம்:62
புத்தரும் ஜாதியும்
“புத்தரும் ஜாதியும்” எனும் கட்டுரை புத்தர், பௌத்த மதம் பற்றிய பல கட்டுக்கதைகளைத் தகர்கிறது. இன்று அம்பேத்கரிய வாதிகள் சொல்வதுபோல், புத்த மதம் ‘வைதீக அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் சமத்துவ இயக்கம்’ கிடையாது. ஆனால், இந்தக் கருத்தைப் பலர் கேள்வி கேட்காமல் அப்படியே நம்புகிறோம். இதனை மறுக்கும் விதமாக எல்ஸ்ட் கூறுவது:
பௌத்த மதத்தில் சேர்ந்தவர்கள் 80% உயர்ஜாதிகளை சேர்ந்த ஆண்கள்தான். அதிலும் 40% பிராமணர்கள்... ‘எதிர்காலத்தின் புத்தர்’ என்று கூறப்படும் மைத்ரேயா ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறப்பார் என்று புத்தரே கூறியுள்ளார். - ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை, பக்கம்:74-5
வருங்காலத்தில் புத்தர் பிறக்கப்போவது ஒரு பிராமண குடும்பத்தில்தான் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். புத்தரை ஹிந்துக்கள் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகப் பார்கிறார்கள். இதைச் சொன்னால், உடனே ஹிந்துவிரோதிகள் “அது பௌத்த மதத்தை அழிக்கும் பார்பனர் சதி!” என்பார்கள். ஆனால், இந்தக் கருத்தைத் துவங்கியதே புத்தர்தான் என்று, பௌத்த மத நூல்களின் ஆதாரத்துடன், எல்ஸ்ட் சுட்டிக்காட்டுகிறார்.
பௌத்த மதநூல்கள் புத்தரின் உயர்ந்த பிறப்பைப் பற்றிப் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, அவர் சூர்ய குலத்தில் பிறந்த ராமரின் உறவினர் என்று கூறுகின்றன. பௌத்த மதத்தின் ஜாதகா கதைகளில் ராமாயணத்தை விவரிக்கிறார் புத்தர். அந்த இடத்தில், அவரே தன்னை ராமரின் மறுபிறப்பு என்று சொல்கிறார். அவர் தன்னை சர்வசக்தராகிய விஷ்ணுவுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார். பின்னாளில் ராமர், புத்தர் இருவரையும் ஹிந்துக்கள் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறினார். இதனை “நான் ராமரின் அவதாரம்” என்று சொல்லித் துவக்கி வைத்தது புத்தர்தான். - ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை பக்கம்:76
சாத்தானின் வழக்கறிஞராக, சற்று நகைச்சுவையுடன் பேசும் எல்ஸ்ட், காலனி ஆட்சிக்காலத்தில் உருவான புத்தரின் ‘முற்போக்கு’த் தோற்றம்கூட இனவெறியின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என்கிறார்:
புத்தர் பற்றிய ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்தை, இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்தைய இனவெறியாளர்கள் சிலர் பெரிதாகப் பேசுகின்றனர். “உயரமான வெள்ளை நிறம் கொண்டவர்” எனும் கருத்தை அவர்கள் இவ்வளவு உற்சாகத்துடன் பேசியதற்கு அது நார்டிக் இனத்தின் ‘ஆரியத் தோற்றம்’ என்பது காரணமாக இருக்கலாம். - ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை, பக்கம்:76
இதைவிட சுவாரசியமான விஷயம், இந்த மனநிலை இன்னமும் தொடர்வதுதான்- இவர்களுக்கு ஒரு பற்று (அதை வெறி என்று கூடச் சொல்லலாம்) இவ்விஷயத்தில் இன்றும் உள்ளது- மைக்கேல் விட்ஸல் போன்ற இந்தியவியலாளர்கள் “உயரமான, வெள்ளை நிறம் கொண்ட” தோற்றத்தை வைத்து, புத்தரின் சாக்கிய இனத்திற்கு ஈரானிய வேர்களைத் தேடுகிறார்கள்.
‘ஹரப்பாவில் அழுகுணி ஆட்டம்’: ஒரு மறுபரிசீலனை
மைக்கேல் விட்ஸல் பற்றிப் பேசும்போது, கோயன்ராட் எல்ஸ்ட் இந்த ஹாவர்ட் சம்ஸ்க்ருத அறிஞரின் திறமையை மதிக்கிறார். பல ஹிந்துத்துவ அறிஞர்கள் விட்ஸல் மீது நடத்திய தாக்குதல்களை, குறிப்பாக NS ராஜாராம் வைத்த விமர்சனத்தை, எல்ஸ்ட் மறுக்கிறார். NS ராஜாராம் செய்த ஒரு சிறு தவறை வேண்டுமென்றே விட்ஸல் ஊதிப் பெரிதாக்கிவிட்டார். அதை வைத்து ‘ஹிந்துத்துவ சதி’ எனும் அளவுக்கு ஒரு பெரிய கோட்பாட்டையே உருவாக்கியுள்ளார்.
இந்த வருந்தத்தக்க சம்பவம் பற்றி “‘ஹரப்பாவில் அழுகுணி ஆட்டம்’ ஒரு மறுபரிசீலனை” எனும் கட்டுரையில் விவரிக்கிறார். (பக்கம் 210-4)
இக்கட்டுரையில், ஹரப்பாவின் குறியீடுகளை ராஜாராம், ஜா ஆகியோர் மொழிபெயர்த்த விதத்தை எல்ஸ்ட் தெளிவாக எதிர்க்கிறார். உதாரணமாக “‘ஏகஸ்ருங்கி’ என்று அழைக்கப்படும் ஒற்றைக் கொம்புள்ள குதிரையின் படம். இதனை ராஜாராம் “ஓம்காரத்தின் சுருக்கெழுத்து வடிவம்” என்று விளக்குவதை எல்ஸ்ட் வருத்ததுடன் வியக்கிறார். காரணம் ஓம்காரத்தின் இன்றைய வடிவம், தேவநாகரி எழுத்தில்தான் உருவானது. ஹரப்பாவுக்கு 2000 ஆண்டுகள் பிந்திய பிராம்மி எழுத்துருவில் கூட இந்த வடிவம் கிடையாது.” மேலும், இந்தத் தவறைப் பெரிதுபடுத்திய ஃப்ரண்ட்லைன் கட்டுரைக்கு ராஜாராம் பதிலளித்த விதம் “ஹரப்பாவின் குதிரை வடிவங்கள் சமந்தமான இன்னொரு ஆதாரமற்ற வாதமாக மாறி, இன்னமும் நகைப்புக்கு உள்ளாக்கியது.”
ஆனால், குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்குகிறார் எல்ஸ்ட். இங்கே, ராஜாராம் மீது நடந்த ‘விசாரணையின்றி கொல்லும்’ போக்குடைய ஊடகத் தாக்குதலையும் எல்ஸ்ட் கண்டிக்கிறார். அதனை ராஜாராம் எதிர்கொண்ட விதத்தைத் தான் வியந்ததாக எழுதியுள்ளார்.
இந்நிகழ்வின் ஒட்டுமொத்த விளைவு, இந்துத்துவ அறிஞர்களின் நம்பகத்தைமைக்கு உலகளாவிய ஊடக, அறிவுசார் தளங்களில் கெட்ட பெயர் உருவாக்கியது உண்மை. அதிலும், விட்ஸல்- ஃரண்ட்லைன் இணைந்தது செய்த பிரச்சாரத்தினால், பல தவறான வினைகள் எதிர்காலத்தில் உருவாயின. முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர் PN ஓக் போன்ற “பண்டைய ஹிந்து உலக” கற்பனையாளர்களை ராஜாராம் நிராகரிக்கிறார். ஆனால், ராஜாராமை ஓக் போன்றோரின் கிறுக்குக் கூட்டத்தில் சேர்த்துவிடுகிறார்கள். அதைவிட வேடிக்கை, இவர்கள் இருவரையும் மறுக்கும் எல்ஸ்ட்டும் இதே கூட்டத்துடன் சேர்க்கப்படுவதுதான். இது ‘கூட இருந்த குற்றத்துக்காக’ எல்ஸ்டின் கருத்துகளைப் புறந்தள்ளும் ஒரு எளிய உத்திதான்.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “க்ரிஸ்டியானிடி” என்றால், கிருஷ்ண நீதி, அப்ரஹாம் என்பது பிரம்மாவின் மறுவடிவம் என்று துவங்கி, பல்வேறு வார்த்தை விளையாட்டுகளால், உலகின் எல்லா மதங்களுமே இந்து மதம்தான் என்ற வாதத்தை முன்வைத்தார் புருஷோத்தம் நாகேஷ் ஓக். இவரது கருத்துகளை ஆதி காலத்தில் இருந்தே நேர்மையான அறிஞர்கள் மறுத்து வருகின்றனர்)
விட்ஸல் எழுதிய உலகப் புராணங்கள் பற்றிய நூலில் இனவெறி உள்ளதாக குற்றம் சாட்டினார் ராஜாராம். இவ்விஷயத்தில் விட்ஸல் பக்கம் நிற்கிறார் எல்ஸ்ட். (ராஜாராம், விட்ஸல் மற்றும் இனவெறி, பக்கம் 215-24). அந்த நூலில் இனவெறி கிடையாது என்பதால், ராஜாராமின் இந்தக் குற்றச்சாட்டை கண்டிக்கிறார்.
விட்ஸல் எழுதிய “உலகப் புராணங்களின் தோற்றம் ஒரு விமர்சனம்” (Review of Origins of World Myth — a Book by Michael Witzel)
விட்ஸல் புத்தகம் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. உலகப் புராணங்களின் தோற்றம் எனும் நூல் 2013ல் வெளிவந்தது. இந்தக் கட்டுரையில், “இந்த விமர்சனத்தை நான் இந்தோ-ஐரோப்பிய ஆய்வுப் பட்டியலுக்கு சமர்பித்தேன். இதனை விட்ஸலின் தொண்டரடிப்பொடியான ஸ்டீவ் ஃபார்மர் எடுத்த எடுப்பிலேயே பிரசுரிக்க மறுத்துவிட்டார். அதற்கு ஃபார்மர் “இக்கட்டுரையில் அதீத அரசியல், அதீத ‘விட்ஸல்-எதிர்ப்பு’ உள்ளது!” என்று காரணம் கூறினார்.” என்று வாசகர்களுக்குத் தெரிவிக்கிறார் எல்ஸ்ட். ஆனால் இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது (பக்கம் 148-58) அது அரசியலோ, அல்லது விட்ஸல்-எதிர்ப்போ கொண்டது இல்லை என்று புரியும். இந்த விமர்சனம் ஸ்வராஜ்யா இணைய இதழில் வெளியாகியுள்ளது. “கார்ல் யூங் கொடுத்ததைவிடவும், புராணங்களுக்கு ஒரு சிறந்த விளக்கம்” என்றுதான் உலகப் புராணங்களின் தோற்றம் புத்தகம் பற்றி எல்ஸ்ட் பாராட்டியுள்ளார்.
விட்ஸல் இந்த புத்தகத்தில் ஒரு “உலக புராண குடும்ப விருட்சத்தை” உருவகப்படுத்தி இருக்கிறார். இதனை எல்ஸ்ட் ‘மானுடத்தின் ஒற்றுமை’ என்று பார்க்கிறார். இந்தப் பார்வை இனவெறிக்கு எதிரானது என்பது எல்ஸ்ட் முன்வைக்கும் வாதம்.
விட்ஸல் பண்டைய புராணங்களை இரண்டாகப் பிரிக்கிறார். கேயா-குழுமம் தொடர்பான கோண்ட்வானா புராணங்களை பழைய பகுதி என்றும், லாரேஷியப் புராணத் தொகுதியை புதிய புராணங்கள் என்றும் பகுக்கிறார். இந்தப் பிரிவினையை ஏறக்குறைய ஒப்புக்கொள்கிறார் எல்ஸ்ட். விட்ஸல் கூற்றின்படி, “ஷாமன்களின் உஷ்ணம்” எனும் கொள்கை பழைய கேயா-குழுமத்தின் புராணத்தை சேந்தது. இந்த உஷ்ணத்தை கவனமாகப் பாதுகாப்பதும் பழைய புராண நம்பிக்கைதான். “இதை இடைக்கால இந்தியர்கள் ‘குண்டலினி யோகம்’ என்ற பெயரில் வழிதொடர்ந்தனர். அதுபோல், ஒரு நாயகன் கொடிய மிருகம் அல்லது அரக்கனை அழிக்கும் கதையமைப்பு லாரேஷிய புராணக் காலத்தை சேர்ந்தது.
‘கோண்ட்வானா’ என்பது ஆப்ரிக்காவில் இருந்து வெளிப்போந்த புராணத் தொகுதியாக இருந்தாலும்; தற்காலத்துக்கு 40,000 ஆண்டுகள் முன்பு கோண்ட்வானா புராண அமைப்பின் சில அம்சங்கள் இருந்தன. லாரேஷிய புராணத் தொகுதி தற்காலத்துக்கு 20,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முற்காலத்தை சேர்ந்தது. இதனை, பரந்த தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் தற்காலத்துக்கு 40,000 ஆண்டுகள் முன்பு இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறார் விட்ஸல் (விட்ஸல், 2013, ப.291.) இது சரியாக இருந்தால், தற்போதைய சமூகக் கலாசார அனுமானங்களில் சில சிக்கல்கள் வரும்.
இந்த சிக்கல்களில் ஒன்றைப் பற்றி எல்ஸ்ட் அதிர்ச்சிகரமான முறையில் முன்வைக்கிறார். ஷாமன் கலாசாரத்தில், கோண்ட்வானா காலத்தில், ஆவேச நடனம் மட்டுமே இருந்தது. ‘ஷாமன் ஆட்டத்தில் தாளவாத்தியம் பின்னாளில் வந்த சைபீரிய சேர்க்கை. மேலும், தனிப்பட்ட உடைகளையும் இந்தக் குறிசொல்லிகள் அணியவில்லை’ என்பது விட்ஸல் முன்வைக்கும் கருத்து. இதன் அடிப்படையில் எல்ஸ்ட் கூறுகிறார்:
தென்னிந்தியாவின் பறையர்களை (ஆம் இந்த வார்த்தையில் இருந்துதான் ஆங்கிலத்தில் pariah எனும் வார்த்தை உருவானது) ஒரு எல்லை கோடாகப் பார்க்கலாம். அவர்கள் பறை அல்லது உடுக்கடித்து, அதன் மூலம் உன்மத்த நிலையை அடைந்தனர் (மருளாடுதல்). இந்தப் பழக்கம் ஹிந்து மதத்தின் வேதக் கலாசாரத்தில் இருந்து மாறுபட்டு, ஷாமன் கலாசாரத்தின் அடையாளாமாக உள்ளது. சமீப காலம்வரை அவர்களை பிராமண புரோகிதர்கள் “தீண்டத்தகாதவர்கள்” என்று கூறித் தள்ளிவைத்து இருந்தனர். இதற்கு அவர்கள்மீது இருந்த அருவருப்பு காரணம் இல்லை (ஒரு பகுதி சமூக கட்டமைப்பில் இதுவும் உண்மை). மாறாக, அவர்கள் மீது இருந்த பயமே முக்கியக் காரணம். இந்த மருளாட்டத்தின் காரணமாக அவர்கள் ஆவி, பேய்கள் என்று இறந்தவர் உலகத்தோடு கொண்டிருந்த தொடர்பின் மீதுள்ள பயம்.
- ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை பக்கம்: 154
இன்று தமிழகத்தில் இருக்கும் பறையர் சமூகம் பட்டியல் இனமாக இருக்கலாம். ஆனால், அவர்களை “ஆவி, பேய்கள்… மீதுள்ள பயம்” காரணமாக பிராமணர்கள் தள்ளிவைக்கவும் இல்லை. அவர்கள் மட்டுமே உன்மத்தம் கொள்ளச் செய்யும் தாள வாத்தியங்களை உபயோகித்தனர் என்பதும் தவறு. பறையர் சமூகத்தையும், அவர்கள் குருக்களாக இருந்த வள்ளுவர்களையும் தனியாகப் பிரிப்பது, அவர்களுக்கு இருந்த ஜோதிட அறிவுதான். திருவள்ளுவர் அந்த சமூகத்தில் வந்த மிகப்பெரிய ஞானக்கவிஞர்.
பேராசிரியர் கஸ்டாவ் ஓப்பர்ட் மதராஸ் ப்ரெஸிடன்ஸி கல்லூரியில், ஒப்பீட்டு மொழியியல் துறையில் பணியாற்றியவர். அவர் “இதியாவின் மூலமுதல் குடிகள்” எனும் தனது படைப்பில் வள்ளுவர் சமூகப் பற்றிப் பேசுகிறார். வள்ளுவர்கள் பறையர்களின் பாரம்பரியப் புரோகிதர்களாக இருந்ததைக் குறிப்பிடுகிறார். (அவர் பள்ளர் சமூகத்தையும் இதனுடன் தவறாக இணைக்கிறார்.) அவர் கூறுவது:
வள்ளுவர்களின் இன்றைய நிலை சுவாரசியமானது. ஒரு வள்ளுவன் தனது உயர்ந்த ஜோதிட அரிவாள் மதிக்கப்படுகிறார். பலபேர் அவரிடம் ஜாதகம் எழுத வருகிறார்கள். சமூகத்தின் விலக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், பிராமணர்கள் மதிப்பை பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக பிராமணப் பெண்கள் பலர் வள்ளுவர்களின் அறிவுரையைக் கேட்கின்றனர். வள்ளுவர் பிராமணர்கள் அணியும் யஜ்ஞோபவீதம் (தமிழில் பூணூல்) அணிந்துள்ளார். பறையர், பள்ளர் சமூகத்தின் திருமணச் சடங்குகளில் சம்ஸ்க்ருத மந்திரங்களை சொல்கிறார். அவற்றுக்கு பொருள் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. பிராமண புரோஹிதர்கள் தங்கள் மந்திரங்களை மிகவும் பொறாமையுடன் காப்பாற்றுகிறார்கள். இந்நிலையில், வள்ளுவர்கள் அந்த மந்திரங்களை அறிந்து உபயோகிப்பது ஆச்சரியம்.
- Gustav Oppert, On the original inhabitants of Bharatavarsa or India, 1893, pp.67-8
இந்த முரண்பாட்டை ஆரிய-திராவிடக் கோட்பாட்டைக் கொண்டு விளக்க முயல்கிறார் ஓப்பர்ட். “ஆதி குடிகளான வள்ளுவர்கள் வந்தேறிகளான பிராமணர்களுடன் நட்பாக இருந்த காலத்தில் மந்திரங்களைக் கற்று இருக்கலாம்” என்கிறார்.
தமிழின் மிகவுயர்ந்த, ஆழமான பல தத்துவ நூல்கள் வள்ளுவர்களால் இயற்றப்பட்டவை. ஓப்பர்ட் ‘ஞான வெட்டியான்’ எனும் நூலை மேற்கோள் காட்டுகிறார். (இது வள்ளுவர் ஒருவரால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இதற்கும் திருவள்ளுவருக்கும் சம்மந்தம் கிடையாது. இந்த நூலில் வெட்டியான் பணியை பாரம்பரியமாக மேற்கொண்ட பறையர் சமூகத்தின் ஞானம் புலனாகிறது).
பூணூல் தரித்து கொள்வோம் –சிவ சிவ பொறியுமைம் புலனை தொழுது கொள்வோம் வேன விருதுகளும் விகிதமாய் வெண்குடை வெண்சாமரமும் பிடித்துகொள்வோம் வானவர் முனிவர் தொழும் பொன்விசிறி மரகத குண்டலத்தின் கவசங்களும் ஞானபிரகாச ஒளி –திவ்வியரச நாத விந்தர்சனைகளில் நாம் துதிப்போம். - ஞானவெட்டியான் பாடல் 40
மக்களை நோக்கி “பூணூல் அணியுங்கள், வெண்குடை, சாமரம் ஆகிய மரியாதைகளுடன், வெண்சோழிகளையும் கையில் வைத்துக்கொள்ளுங்கள்… தேவர்களுக்கும் ஞானிகளுக்கும் உரிய பொன் சாமரங்களை கைகொள்ளுங்கள்… அழகிய சின்னங்களையும், உடைகளையும் அணியுங்கள்” என்று கூறும் ஞான வெட்டியான் மேலும் “ஓம்காரத்தின் முடிவையும் துவக்கத்தையும் தொழுவோம். அது ஞானத்தின் ஒளியும், தெய்வீக சாரமும் நிறைந்தது” என்கிறார்.
இந்த ஆதாரங்கள் மூலம், வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது. இன்று பிராமணர்களுக்கு இருக்கும் மதிப்பு அவர்களுக்கும் இருந்தது. சோழர் காலத்தில் இந்த நிலை சிறிது மாறுபட்டது. ஆனால், பல முக்கியமாக கோவில்களில் வள்ளுவர்கள் மேலான இடத்தில் இருந்தனர். ஆங்கில மொழியில் ‘Pariah’ என்ற சொல்லுக்கு ‘விலக்கப்பட்டவர்’ என்ற பொருள் இருந்தாலும், ‘யானை ஏறும் பெரும்பறையர்’ எனும் உயர்ந்த இடத்தையே அவர்களுக்கு ஹிந்து தர்மம் அளித்துள்ளது.
பறையர் சமூகம் அனுபவித்த துன்பங்களும், விலக்கப்பட்ட நிலையும் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த சமூக அரசியல் மாற்றங்களால் நிகழ்ந்தது. இதற்கும், ஷாமன் கலாசாரம், கோண்ட்வானா-லாரேஷிய புராணத் தொகுதிகள், உலக புராணக் கட்டமைப்பு போன்ற விஷயங்களுக்கும், எந்த சம்மந்தமும் கிடையாது.
இருப்பினும், எல்ஸ்ட் இந்தக் கட்டுரையில் அறிவுசார் ஆதாரங்களையே முன்வைக்கிறார். குறிப்பாக, தனிமனிதத் தாக்குதல் எதுவும் இல்லை. (அவரை எதிர்க்கருத்து கொண்டவர்கள் தனிப்பட்ட முறையில் அதிகம் தாக்கினாலும், இந்தப் பண்பு எல்ஸ்ட் எழுத்துகளில் அதிகம் காணப்படுகிறது. வழக்கமான இடதுசாரி கல்வியமைப்பு மட்டும் இல்லாமல், அவரை எதிர்க்கும் வரிசையில் சில ஹிந்துத்துவவாதிகளும் அடக்கம்.)
ஷெல்டன் பொல்லாக் (Sheldon Pollock) பற்றிய கட்டுரைகள்
இந்தத் தொகுதியில் இரண்ண்டு கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. அவை ஷெல்டன் பொல்லாக் முன்வைக்கும் வாதங்களை விமர்சிகின்றன. “நாஜி கொள்கைக் கோட்பாடுகளுக்கு (கடைசியில் நடந்த படுகொலைகள் உள்பட) ஹிந்து ஆன்மீக தர்சனங்கள் -குறிப்பாக மீமாம்ஸை-தான் காரணம் என்ற வாதத்தை நிறுவ முயன்று வருகிறார் பொல்லாக். இதனை ‘A Nazi Out-of-India Theory’ (பக். 97-105) மற்றும் ‘Sheldon Pollock’s idea of a National -Socialist Indology’ (பக்.397-420). எனும் இரண்டு கட்டுரைகளில் காணலாம்.
‘உயர்ந்த இடங்களில்’ ஹிந்துத்துவத்துக்கு எதிராக இன்று உருவாகும் புதிய குற்றச்சாட்டுகள் பற்றி நாம் அறிவதற்கு இந்தக் கட்டுரைகள் இரண்டும் முக்கியமானவை. “ஆரியர் படையெடுப்புக் கொள்கை காலநிவாதம் வெள்ளை இனவெறி ஆகியவற்றில் இருந்து கிளைத்தது என்று பலமுறை ஹிந்துக்கள் ஒருபக்கம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம், குறைந்தது 1993 துவங்கி, ஷெல்டன் பொல்லாக் மற்றும், அவரது அல்லக்கைகள் “ஜெர்மனி இந்தியவியல் ஆய்வில் அதிகம் ஈடுபட்டது. அதன் அடிப்படையில் தங்களை “ஆரியர்கள்” என்று கூறி, யூதர்களிடம் இருந்து தனிப்படுத்தினர்” எனும் கொள்கையை உருவாக்கி, பரப்புரை செய்து வருகின்றனர்.
ஷெல்டன் பொல்லாக் தற்போது சம்ஸ்க்ருத இலக்கியக் காப்பக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்குப் பின்னணி அவருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய ஹிந்து தொழில் குடும்பத்தின் ஆதரவு. இதனை எதிர்த்து பொல்லாக் மீது பல விமர்சனங்கள் ஹிந்துத்துவவாதிகளால் வைக்கப்பட்டது. பொல்லாக் நெடுநாளாகவே ஹிந்துமதத்தின் மீது துவேஷம் கொள்ள இந்நிலை காரணமாக அமைந்தது. இந்த மொத்த வன்மத்தையும் கூர்தீட்டி, ஒரே ஆய்வுக்கட்டுரையின் மூலம், தேசியவாத ஹிந்துத்துவ அமைப்பின் மீது, பொல்லாக் வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார் எல்ஸ்ட். இந்தியவியலும், குடிப்பாக இந்தியாவில் இருந்து வெளிப்போதல் கொள்கையும் நாஜி சித்தாந்தக் கட்டமைப்புக்கு அடிப்படை என்கிறது பொல்லாக்கின் ஆய்வு.
International Journal of Hindu Studies எனும் ஆய்விதழில் ‘Pride and prejudice: Orientalism and German Indology’ எனும் விஷ்வா அதுலூரி எழுதிய கட்டுரை வெளியானது. அதற்கு ரெயினோல்ட் க்ருனேந்தால் ‘History in the making: on Sheldon Pollock’s ‘NS Indology’ எனும் அறிக்கையில் அதே ஆய்விதழில் மறுப்புகளும் தெரிவித்தார். இவற்றை தனது ‘A Nazi Out of India Theory’ (2012) கட்டுரையில் எல்ஸ்ட் மேற்கோள் காட்டுகிறார்.
நாஜிக் கோட்பாட்டுடன் இந்தியாவில் இருந்து வெளிப்போதல் [OIT] கொள்கையை முடிச்சுபோடுவதில் பொல்லாக் தவறு செய்துள்ளார் என்று எனக்கு லேசாகத் தெரியும். ஆனால் அது இவ்வளவு தீவிரமான தவறாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது முதல் கருத்து, இந்தியா நாஜிக்களின் சிந்தனைக்கு மையப்புள்ளி என்பது. இதனை (பல புனைவுகளுடன்) மிக உறுதியாக முன்வைக்கிறார் பொல்லாக். அவர் கூறியதால் இது ஒரு உண்மை என்றும் ஆகிவிட்டது. ஆனால், இதற்கு எதிராகத் தகுந்த, நடுநிலையான ஆதாரங்களை க்ருனேந்தால் கொடுக்கிறார். நாஜிக்கள் இந்தியவியல் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பண்டைய தூரக்கிழக்கு, மற்றும் சீனவியல் துறைகளுடன் ஒப்பிட்டால், இந்தியவியல் ஆய்வு நாஜி ஜெர்மனியில் மிகக்குறைவு. கீழைநாட்டு மரபு, குறிப்பாக இந்தியா மீது நாஜி ஆட்சிக்காலத்தில் சிறப்பான கவனம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லபோனால், ‘இந்தோ-ஜெர்மானிய கல்வியில்’ காரணமாக ஜெர்மானியர்களின் இந்தியா மீதான நோக்குநிலை சீராக அமையவில்லை.
- ‘Still no Trace of an Aryan Invasion’, pp.101-2
‘Surprising Aryan Mediations between German Indology and Nazism: Research and the Adluri/Grunendahl Debate’ எனும் கட்டுரையைப் படிக்குமாறு இந்த விமர்சகன் பரிந்துரைக்கிறேன். Karla Poewe and Irving Hexham (University of Calgary) எழுதிய இந்த அறிக்கை, அதே ஆய்விதழில் 2015ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. ஜெர்மானியர்களின் இந்தியவியல் பார்வையை இரண்டு வேறுபட்ட கூறுகளாக, இந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள் பிரித்துள்ளனர். இது ‘ஆரியன்’ எனும் வார்த்தைக்கு இரண்டு மாறுபட்ட பொருள்களை வெவ்வேறு காலங்களில் உருவாக்கியது என்று கூறுகிறது இந்தக் கட்டுரை:
அதுலூரி கூறுவதுபோல், ஜெர்மானிய இந்தியவியலாளர்கள் குறுகிய ரோமானிய தேசியத்தின் பின்னால் போகவில்லை. அதன் மூலம், ஆங்கிலேய, அமெரிக்க, இந்திய அறிஞர்களைவிட அறிவுசார் தளத்தில் ஜெர்மனி எப்படியோ உயர்ந்துவிடும் என்றும் ஜெர்மானிய அறிஞர்கள் எண்ணவில்லை. அவர்கள் ஒரு தனியான பார்வையைக் கட்டமைத்தனர்: முதலில் இந்தியாவின் ஹிந்துப் பாரம்பரியம், புராணங்கள், கதைகள், காலத்துடன் நிகழ்ந்த சம்பவங்கள், போன்றவை ஜெர்மனியின் ரோமானிய நோக்குடன் ஒத்துப்போவதாக நினைத்தனர். இதன் மூலம், யூத-கிறிஸ்தவ கலாச்சாரத்துக்கு எதிரான சில முரண்களும் இருந்தன. அனால் SS Ancestral Heritage Foundation போன்ற நாஜி அமைப்புகள் கையில் இத்தகைய ஆய்வுகள் சிக்கிய பிறகு, பார்வை மாறியது. ஆரியன் எனும் வார்த்தை யூதர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டவும், யூதப் படுகொலைகளை கெஸ்டபோ, SS போன்ற அமைப்புகளை வைத்து மறைக்கவுமே பயன்பட்டது.
- Karla Poewe & Irving Hexham, 2015
இந்த ஆய்வு எத்திசையில் செல்லும் என்பதைப் பற்றி மேற்கண்ட அறிக்கை கோடிக்காட்டுகிறது. உதாரணமாக, போவே ஹெக்ஸ்ஹேல் இருவரும், தங்களது முடிவுரையில் “ஒருசில நபர்கள் மட்டுமே ஐரோப்பிய சர்வாதிகாரக் கொள்கைகளை அணுகியுள்ளனர். அவர்களுக்கு கொடுத்ததைவிட அதிகமாகவே விமர்சனங்கள் கிடைத்தன.” என்கிறார்கள்.
2011ல் வெளியான Breaking India (Malhotra and Neelakandan) புத்தகத்தில் இந்தப் புதிய எதிர்ப்பு ஹிந்துமதத்துக்கு எதிராக உருவாகிறது என்று எச்சரிக்கை செய்தோம். Wilhelm Halbfass 1997ஆம் ஆண்டிலேயே பொல்லாக்கின் இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளார். அதனையும் அந்நூலில் மேற்கோள் காட்டினோம்.
அந்த விமர்சனத்தை மீண்டும் பார்ப்பது அவசியமாகிறது. “அதீதமான கொடூரத்துடன் கூடிய, அணுகுமுறை; அதிகாரம் மேலாதிக்கம் ஆகியவற்றின் மீது மிதமற்ற பற்று ஆகியவை தேசிய சோஷலிசத்தின் இயல்புகள். இந்த இயல்புகள் இவைபோன்ற மற்ற கட்டமைப்புகளிலும், குறைந்த அளவில் இருக்கலாம், என்பதற்கு நாஜி அமைப்பு நம்மை எச்சரிக்கிறது.“ என்று துவங்குகிறார் Halbfass. பொல்லாக்கின் திட்டம் பற்றி அறிஞர்களை எச்சரித்தார். “வலிமை சார்ந்த பேச்சுகள், செயலாக்கம், வெளிப்பாடுகள், இவை அனைத்துமே, ஒரே சித்தாந்த அடிப்படையில் உருவானவைதான். இவற்றுக்கு அடி நாதமாக இருப்பது, ‘ஆழ்ந்த கீழைநாட்டு மரபியல்’. இதன் மூலம் எத்தகைய தவறான திரிபுகள் செய்யப்படலாம் என்று Halbfass விளக்குகிறார்:
“இந்த உள்ளார்ந்த கொள்கையை ஏன் “ஆழ்ந்த நாஜியிசம்” அல்லது “ஆழ்ந்த மீமாம்ஸை” என்று கூறலாகாது? குமாரில பட்டரையும், சர் வில்லியம் ஜோன்ஸையும் ‘கடைந்தெடுத்த நாஜிக்கள்’ என்றும்; ஹிட்லரை ‘ஆழ்ந்த மீமாம்ஸகர்’ என்றும் கூறலாமா? வில்லயம் ஜோன்ஸ் ‘இந்தோ-ஐரோப்பிய மொழிகள்’ என்ற பதத்தை முதன்முதலில் கூறிய மொழியிழல் ஆய்வாளர். வால்தர் வஸ்ட், ஹிட்லரின் வலதுகரமாக செயல்பட்ட ஹிம்லருக்கு அறிவியல் ஆலோசகர். பொல்லாக் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நேர்கோடு வரைகிறார். அதன்மூலம், பண்டைய இந்திய சமூகவியலில் மீமாம்ஸகர்களும் பிற சித்தாந்தவாதிகளும் கட்டமைத்த சம்ஸ்க்ருத தத்துவங்களின் ஆளுமையை, ஆங்கிலக் காலநிவதம், நாஜி இனவாதம் இவற்றின் ஆதிக்க நோக்குடன் ஒப்பிடுகிறார். இந்த அடிப்படையில் ‘சட்டபூர்வமான இனப்படுகொலை’ ‘கீழ்த்திசை நாடுகளின் ஆதிக்கம்’ என்று நிறுவ முயல்கிறார். இவையெல்லாம் நம்மை நவீன, அறிவுசார்ந்த இந்தியவியளுக்குக் கொண்டுசெல்லுமா? அந்த இந்தியவியல் எத்தகையதாக இருக்கும்? பொல்லாக் தனது சிந்தனைகள் மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளன என்று ஒப்புக்கொள்கிறார். பொல்லாக்கின் கருத்துகள் இன்றைய நிலையில் ஆழமான ஆய்வோ, பொறுமையான அவதானிப்போ இல்லாதவை. அறிவார்ந்த, தர்கரீதியான சிந்தனைகள் என்று இவற்றை தற்போது ஏற்க முடியாது. அறிவுசார் தளத்தில் கலக நோக்கத்துக்கு இடமில்லை.”
- Wilhelm Halbfass, ‘Research and Reflection: Responses to my Respondents’ (1997) in ‘Beyond Orientalism: The Work of Wilhelm Halbfass and Its Impact on Indian Cross-cultural Studies’, (E C., Eli Franco, Karin Preisendanz & Wilhelm Halbfass), 2007, pp.17-8
1997இல் ‘ஆரம்ப நிலையில்’ இருந்த இந்த ஆய்வு, இருபது ஆண்டுகளில் ஒரு அறிவுசார் கொள்கையாக உருமாறி, சக்திவாய்ந்த பொதுமைப்படுத்தும் கருவியாக நிற்கிறது. ஆனால் Halbfass கூறிய ‘ஆழமான ஆய்வோ, பொறுமையான அவதானிப்போ இல்லாதவை’ என்ற விமர்சனம் இன்றும் இந்தக் கருத்துகளுக்குப் பொருந்தும்.
இந்த பொதுமைப்படுத்துதலும், ஹிந்து தர்சனங்களை தவறாகத் திரிப்பதும், இன்று அறிவுசார் தளத்தில் ஹிந்து வெறுப்பு எனும் உரத்துடன் மிகப்பெரிய விஷ விருட்சமாக வளர்ந்து வருகிறது என்று எல்ஸ்ட் எச்சரிக்கிறார்.
பொல்லாக் மற்றும் ‘நாஜி இந்தியவியல்’ பற்றிய கட்டுரையில் எல்ஸ்ட் இந்த வாதத்தின் அடிப்படையற்ற தன்மையை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்:
பொல்லாக் மேற்கோள் காட்டும் நாஜி-இந்தியவியலாரர்களின் திரும்பத் திரும்ப ஒரே ஒரு ஹிந்துவின் பெயர்தான் உள்ளது. அது புத்தரின் பெயர் என்பதை கவனிக்க வேண்டும். நாஜிக்கள் இந்திய சாத்திரங்களை ஒட்டி, தங்கள் சட்டங்களை வடிவமைத்தனர் என்று நிறுவ முயல்கிறார் பொல்லாக் [இனவெறியாளர்களாக இருக்க அவர்களுக்கு மீமாம்ஸை தேவையா என்பதே தனிக் கேள்வி). ஆனால் ஒரே ஒரு நாஜியிடம் இருந்துகூட இதற்கான நேரடி மேற்கோளை பெற அவரால் முடியவில்லை. பனிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பட்ட லக்ஷ்மிதரர் என்பவரது சாஸ்திர பாஷ்யங்களை அடிக்கடி சமூக ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படையாகச் சொல்கிறார். அதே சமயம் புத்தரை இந்த ‘வைதீக ஏற்றதாழ்வுக்கு’ மாற்றுமருந்தாகச் சித்தரிக்கிறார். ஆனால், இந்த லக்ஷ்மிதரர் யாரென்றே நாஜிக்களுக்கு தெரியுமோ தெரியாதோ, நிச்சயமாக புத்தர் அவர்களிடையே மிகவும் பிரபலம்.
- ‘Still No Trace of an Aryan Invasion’, p.409
இது ஷெல்டன் பொல்லாக் எனும் ஒரு தனிப்பட்ட ஹிந்து வெறுப்பாளர் கருத்து என்று நினைக்கவேண்டாம். ‘தற்காலத்தின் பொதுவான, ஆழமற்ற கருத்துகளை மேய்ந்து’ அதற்குத் தனது அங்கீகாரத்தை கொடுத்துள்ளார் பொல்லாக். இந்த ஆழமற்ற கருத்துகள் ஹிந்துமதத்தை எப்படியாவது குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவை. பொல்லாக் விஷயத்தில் இவற்றுக்கு சான்றுகளும் இல்லை. ‘யூத இனப்படுகொலையின் பொறுப்பை ஹிந்துமதத்தின் தலைமீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டுதான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது’ [ப. 418]
ஆரியப் படையெடுப்புக்கான டோனி ஜோசப்பின் மரபணு ஆதாரம்
இந்த 465 பக்க நூலில் கடைசிக் கட்டுரை ஆரியப் படையெடுப்புக்கு டோனி ஜோசப் மரபணு ரீதியாக ஆதாரம் சேகரிக்கும் முயற்சி பற்றியது.
டோனி ஜோசப்பின் ஆய்வில் உள்ள ஒருசார்புத் தன்மை பற்றி சரியாகவே விமர்சிக்கும் எல்ஸ்ட், எதிரணியில் இருக்கும் அறிஞர்கள் கவனத்துக்கு இன்னொரு பிரச்சனையையும் முன்வைக்கிறார்.
“ஆண்கள் மட்டுமே படையெடுத்து வந்தனர், அதனால் Y மரபணுவில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்தது எனும் இந்த வாதம் இந்திய சரித்திரத்தின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது ஆரியர் படையெடுப்பை நிரூபிக்கவும் முயலலாம். தனது ஆய்வில் இவை எதனையும் முடிவாக டோனி சொல்லவில்லை. ஆனால், அத்தகைய கருத்தை ஏற்கும் மனப்பாங்கு மிகவும் ஆழமாகப் பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ள நமக்கு ஆழமாக ஆராய்ச்சியும், விவாதத் திறனும் தேவை. இதன் மூலம் மட்டுமே சிந்தனை மாற்றம் உருவாகும்.
- ”Still No Trace of an Aryan Invasion’, pp.456-7
இந்த நூல் ஆரியர் பற்றிய ஆய்வில் 2008 முதல் 2017 வரை எல்ஸ்ட் எழுதிய பல கட்டுரைகள், வலைதளப் பதிவுகள், ஆய்வறிக்கைகளின் தொகுப்பு. உலகளாவிய கல்வியமைப்புகளிடம் தொடர்புள்ளவர் எல்ஸ்ட். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு அறிவுசார் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இவரிடம் இருக்கும் கூர்மையான கல்விசார்ந்த ஆய்வும், சார்பற்ற தன்மையும் இன்றைய சூழலில், இக்கொள்கையை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இடையே காண அரிதான ஒன்று.
ஹிந்துத்துவ அமைப்புக்கு எதிராகப் பின்னப்படும் வலைகள், உருவாக்கப்படும் பொய்கள் பற்றிய ஆழமான அறிவு உள்ள ஹிந்துக்களின் பக்கம் இருக்கும் மனிதர் எல்ஸ்ட். இந்த ஆபத்தின் தீவிரம் புரிந்த காரணத்தால் அவரும் மிகத்தீவிரமான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதிலும் குறிப்பாக, தன்னைத் தானே பாராட்டிக்கொள்ளும் ஹிந்துக்களை சரியாக விமர்சிக்கிறார்.
இந்த நூல் காட்டும் ஹிந்துக்களுக்கான எச்சரிக்கை:
“ஆரியர் பற்றிய விவாதம் ஏதேனும் பலன் அளிக்க வேண்டும் என்றால், ‘இந்தியாவில் இருந்து வெளிப்போதல்’ கொள்கையின் சார்பில் இருக்கும் அறிஞர்கள் கடந்த இருநூறு ஆண்டுகளின் ஆய்வுகளை, எவ்விதமான விலக்குகளும் இன்று, புறந்தள்ள வேண்டும். மாக்ஸ் மல்லர், மைக்கேல் விட்ஸல் எல்லாம் இனி வேண்டாம்! நிதர்சன உலகில், பல அறிஞர்களுடன் நேரடியாகப் பழகியதன் மூலம் எனக்கு இன்றைய உண்மை நிலை தெரியும். எல்லா முக்கியமான கல்வித் தளங்களிலும் இன்று ஆரியர் படையெடுப்புக் கொள்கை பாடமாக உள்ளது. அவ்வாறு இல்லை என்று யாரேனும் கூறினால், அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளைத் தவிர வேறு எதையும் கவனிக்காமல், கனவுலகில் வாழ்கிறார்கள் என்று பொருள். இந்த மேம்போக்கான வாதங்களைக் கடந்து, நம்மால் ஆய்வு செய்ய இயலும். அதிர்ஷ்டவசமாக கடந்த இருநூறு ஆண்டுகளைத் தாண்டிய ஆதாரங்கள் ஹிந்துமதத்தில் உள்ளன.
- ”Still No Trace of an Aryan Invasion, p.209
எல்ஸ்ட் கூறும் இந்தக் கருத்து, ஆரியர் பற்றிய விவாதத்தில் ஏற்கனவே வெற்றிகண்டுவிட்டோம் என்று நினைக்கும் ஹிந்துக்களிடம் நல்லபெயர் சம்பாதிக்க வழியில்லை. ஆனால் முழுமையான நிஜத்தோல்வியில் இருந்து நம்மைக் காப்பாற்றும் கருத்து.
எல்ஸ்ட் எழுதிய தொடர்புடைய மூன்று நூல்கள். இவை மூன்றும் ஆரியர் விவாதத்தின் முன்னேற்றங்கள், தற்போதைய நிலை ஆகியவற்றை அறிவுசார் தளங்களில் இருந்து மிகத்தெளிவாகக் காட்டுகின்றன.
Decolonizing the Hindu Mind (Rupa, 2005) எனும் ஒரே ஒரு புத்தகம் தவிர, பிற நூல்கள் பாடப் புத்தகம் போன்ற தோற்றம் கொண்டவை. இந்தப் புத்தகம் ஒரு வரவேற்கத்தக்க விதிவிலக்கு. அட்டைப்படம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. ஹிந்து அறிவுஜீவிகளும், அறிவுசார் குழுக்களும் இந்த நூல்களை பிரபலப்படுத்த வேண்டும், இவற்றைப் பற்றி விவாதங்களும், ஆசிரியர் கேள்விபதில் போன்ற நிகழ்சிகளும் நடத்த வேண்டும் என்பது நமது விருப்பம்.
இந்தப் புத்தகத்தை ஹிந்துக்களிடையே பரப்புவதன் மூலமும், இதனைப்பற்றி பேசி, விவாதிப்பதன் மூலமும் நமக்கே நாம் ஒரு மிகப்பெரிய சேவையை செய்தவர்களாவோம். எதிர்வரும் போராட்டங்களில் நமக்கு இவை பயன்படும். ஒருவேளை இந்தப் புத்தகம் அத்தகைய வரவேற்பைப் பெறவில்லை என்றால், அது எல்ஸ்ட் அவர்களின் (இல்லாத) விற்பனைத் திறத்தில் தோல்வி கிடையாது. மாறாக, சரஸ்வதியின் மீது நமக்குள்ள மரியாதையின் தோல்வி.