(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)
தரம்பால்…
வரலாற்று வானம் வழங்கிய வளமான மழையா?
பருவம் தவறிப் பெய்த மாமழையா?
அதை வெள்ளமாய்க் கடல் சென்று கலக்கவிட்ட வீணர்களா நாம்?
புதிய பயிர்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா அதன் வண்டல் மண் படிவுகளால்?
தரம்பால் ஒரு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறார். ஆனால், அவருடைய ஆய்வு சரியான நேரத்தில் செய்யப்பட்டதுதானா? அவர் செய்த சாதனையை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக் கிறோமா? இன்றைய நிலையில் அது நமக்கு எந்தவகையிலேனும் பயன்படுமா?
இந்துஸ்தான் என்பது பூர்வகுடிகளான திராவிடர்களை வந்தேறி களான ஆரியர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு. முஸ்லிம்களால் ஆளப்பட்ட நாடு; அங்கு இருக்கும் இந்துக்கள் காட்டுமிராண்டிகளைவிட சற்று மேம்பட்டவர்கள் மட்டுமே (காட்டுமிராண்டிகளைவிட நாம் மோசமானவர்கள் என்றும் சிலர் சொல்வதுண்டு); கறுப்பு பூதங்களை, பேய்களை வழிபடுபவர்கள்; ஒழுக்கம் சிறிதும் இல்லாதவர்கள்; ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள்; ஜாதி வெறி கொண்டவர்கள்;
கணவன் இறந்தால் மனைவியை தீயில் தள்ளிக் கொன்றுவிடுவார்கள். குழந்தைகளை ஆற்றில் வீசிவிடுவார்கள். யானையும், பாம்பும் உலவும் காட்டுப் பகுதி; அம்மை, காலரா என நோய்களால் கொத்துக் கொத்தாக இறப்பார்கள்; சுத்தம், சுகாதாரம் என்று எதுவுமே கிடையாது; அம்மணமாகத் திரிபவர்கள்; அவர்களுக்கும் அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் சம்பந்தமே கிடையாது. அவர்களுக்கு எழுத்தறிவே கிடையாது;
இந்துஸ்தானிகளுக்கு வரலாற்றைப் பதிவு செய்யவே தெரியாது. கதை, கட்டுக்கதை, புராணம் என எழுதிவைப்பார்கள். கிரேக்கர்கள், சீனர்கள், அராபியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற அந்நியர்கள் எழுதியிருப்பவற்றின் அடிப்படையில்தான் இந்துஸ்தானத்தின் வரலாறை உருவாக்கவே முடியும். இவைதான் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் நம்மைப் பற்றிச் சொல்லியிருக்கும் ’பேருண்மைகள்’.
இவற்றில் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பொய்ச் சித்திரங்களை தரம்பால் தனது ஆய்வுகளின் மூலம் மாற்றிஅமைத்திருக்கிறார்.
இந்துஸ்தானை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்த முடிந்ததற்கு சமஸ்தானப் போர்கள் நீங்கலாக, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.
ஒன்று அவர்களுடைய வெள்ளை நிறம்.
ஒருவேளை ஐரோப்பியர்கள் கறுப்பு நிறத்தினராக இருந்திருந்தால் இப்படி உலகை வெல்லும் வெறி வந்திருக்காது. உலகின் பிற பகுதிகள் அவர்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கவும் செய்யாது. வெள்ளை நிறம் என்பது மனித மனங்களில் செலுத்தும் ஆதிக்கம் அப்படியானது. ஒட்டு மொத்த இந்தியர் மனங்களிலும் பிரிட்டிஷார் மீதான பிரமிப்பு இருந்தது. அதைக் கொண்டே அவர்கள் நம்மை எளிதில் அடக்கி ஆண்டனர்.
வெள்ளை நிற ஆரியர்கள் முன்பு படையெடுத்து பாரதத்தை ஆக்கிரமித்தனர். இப்போது அந்த ஆரியர்களின் வழித்தோன்றல் களான நாம் வந்திருக்கிறோம். ஒருவகையில் பாரதம் நம் முன்னோர்களுடையதுதான் என்பதுதான் ஐரோப்பியர்கள் ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை உருவாக்கியதற்குக் காரணமாகவும் இருந்தது. இந்தியாவில் இருந்த ‘ஆரியர்கள்’ சிலரும் ஐரோப்பியரைத் தமது வம்சாவழியினராகக் கருதிக்கொண்டதும் நடந்தது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது வெள்ளை நிறமே.
இரண்டாவதாக, நம்மைப் பற்றி ஐரோப்பியர் எழுதிய, சொன்ன அவதூறுகள், இழிவுபடுத்தல்கள்… இவற்றை மிகவும் தந்திரமாக நாமே நம்பும்படியாகச் சொன்னார்கள்.
நிறம் சார்ந்த சாதக அம்சம் இந்திய எளிய மக்கள் மனதில் அழுத்தமான பாதிப்பை உருவாக்கியது. படித்த, மேட்டுக்குடி மக்கள் மத்தியிலும் அது செயல்பட்டது என்றாலும் அவர்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக பொய்யான சமூக விமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டன. ஜாதி பற்றி இழிவான, மிகைப்படுத்தப்பட்ட சித்திரம் உருவாக்கப்பட்டது. ஆணாதிக்கம் பற்றி மிகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பொருளாதாரச் சுரண்டல், சமூக அநீதி, படிப்பறிவின்மை, ஒழுக்கமின்மை, ஆன்மிக வீழ்ச்சி (?) என விமர்சனங்கள் நம் மீது வைக்கப்பட்டன.
இந்த விஷயங்கள் அனைத்திலும் மனித இனம் உலகம் முழுவதிலும் எப்படி நடந்துகொண்டனவோ அதைவிட மிதமாகவே நாம் நடந்துகொண்டிருந்த நிலையிலும் பாரதமே அனைத்திலும் கீழானது, கொடூரமானது என்று வரலாறு உருவாக்கி வைத்தனர். அவற்றைப் படித்த நம் நாட்டு மேட்டுக்குடி வர்க்கம் அதை அப்படியே நம்பிக் கூனிக் குறுகி நின்றது.
தரம்பால் நம்மைப் பற்றி ஐரோப்பியர்கள் உருவாக்கி வைத்திருந்த அந்தச் சித்திரத்தை மாற்றி வரைந்தார்.
அந்நிய நாட்டினர் எழுதிய வரலாறுகள் என்பது அவர்களுடைய அரசியல் நோக்கங்களை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கொண்டதாகவே இருக்கும் என்ற உண்மையைப் பலரும் யோசித்துப் பார்ப்பதே இல்லை.
சதி என்ற உடன் கட்டை ஏறும் வழக்கத்தையே எடுத்துக்கொண்டால், அது இந்து தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது; இந்தியா முழுவதும் எண்ணற்ற பெண்கள் இதுபோல் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்பதாகவே ஒரு சித்திரம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்து தர்ம சாஸ்திரங்களில் அது அப்படியான கறாரான விதியாக விதிக்கப்பட்டிருக்கவில்லை; இந்து புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றிலேயே கூட கணவன் இறந்த பின் செல்வாக்குடன் திகழ்ந்த பெண்கள் பற்றியெல்லாம் நிறையவே குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதோடு அனைத்து ஜாதியினரும் அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை. பின்பற்றிய ஜாதியினர் மற்றும் பிராந்தியத்தினரும் கூட சொற்ப அளவிலேயே பின்பற்றியிருக்கிறார்கள். நூறு ஆண்கள் (கணவன்) இறந்திருந்தால் ஐந்துக்கும் குறைவான பெண்களே (மனைவியரே) உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள்.
தீர்க்க சுமங்கலிகளுக்குக் கிடைக்காத பாக்கியம் இது என்று சொல்லி ஆத்மார்த்தமாக தன் கணவருடைய சிதையில் இறங்கி உயிர்விட்டவர்களும் உண்டு. அந்நிய மத வெறியர்களின் கைகளில் சிக்கிச் சின்னாப்பின்னமாவதில் இருந்து தப்பிக்க கண்ணியமாக, மானத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டதே மிக அதிகம் என்பது போன்ற காரணங்கள் எதுவுமே பேசப்படுவது இல்லை.
அதுபோல், ஜாதி இந்துக்களின் ஜாதி வெறி பற்றியும், பட்டியலின மக்களுக்கு பிரிட்டிஷார் செய்த நன்மைகள் என்றும் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்திவருகிறார்கள். ஆனால், அதே பிரிட்டிஷாரால் தோட்டப் பணிகளுக்காக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் எத்தனை சதவிகிதம் பட்டியல் ஜாதியினர் என்ற கேள்விக்கான பதில் அந்த ஆவணங்களில் இருப்பதில்லை. அதிகபட்சமாக அந்த தோட்டத் தொழிலாளிகளுக்கு கங்காணியாக இருந்த இடை நிலை ஜாதியினர் பற்றிய குறிப்புகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.
தாமிரபரணி நதிக்கரையில் புஷ்கரணி விழா நடைபெற்றதாக பிஷ்ப் கால்டுவெல் சொல்லவே இல்லை என்று அதைத் தூக்கிக்கொண்டு வருபவர்கள், பறையர் ஜாதியினர் திருவிழா காலங்களில் யானை மேல் அமர்ந்து ஸ்வாமி சிலையைத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்ற உண்மையைப் பேசவே மாட்டார்கள்.
ஒரு வரலாற்றாசிரியருக்கு வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமே நோக்கம். இதுபோன்ற பல தரப்பட்ட பார்வைகளை முன்வைப்பது அவருடைய பணி அல்ல என்று தப்பிக்கப் பார்ப்பார்கள். உண்மையில் வரலாற்றில் எதையெல்லாம் பதிவு செய்கிறீர்கள்… எதையெல்லாம் விடுகிறீர்கள்… எதையெல்லாம் மிகைப்படுத்து கிறீர்கள் என்பதில்தான் இந்த அரசியலே ஒளிந்திருக்கிறது.
கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பாக, இந்துஸ்தானம் பற்றி ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களால் அரசியல் உள்நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அதே ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் ஆவணங்களைக் கொண்டே தரம்பால் உடைத்தெறிந்திருக்கிறார். இந்துஸ்தானியர் எழுதியவற்றைத்தானே புராணம் என்று ஒதுக்கிவிடுவீர்கள். ஐரோப்பியர் எழுதியதை என்ன செய்ய முடியும்?
ஐரோப்பியர் எழுதியிருக்கும் வரலாற்றில் இந்தியா பற்றி உயர்வாகச் சொல்லியிருப்பதெல்லாம் உண்மை; மற்றவையெல்லாம் அரசியல் நோக்கம் கொண்டவையா என்றொரு கேள்வி கேட்கப்படும். இதற்கான பதில் ’ஆம்’ என்பதுதான்.
ஒருவரைப் பற்றி இழிவாக அவருடைய எதிரி சொல்லும் அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அந்த எதிரியே ஒருவரைப் புகழ்ந்து ஏதேனும் சொல்லியிருந்தால் அதி நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். இதைப் புரிந்துகொள்ள அடிப்படை அறிவு இருந்தாலே போதும்.
ஒருவருமே படிக்கவில்லை என்று சொல்வதில் மிகை கலந்திருக்கவே செய்யும். ஆனால், 100 பள்ளிக்கூடம் இருந்தன என்று சொல்லியிருந்தால் ஆயிரம் பள்ளிக்கூடம் இருந்திருக்கும் என்றுகூட நம்ப வாய்ப்பு உண்டு. எனவே ஐரோப்பியர்கள் எழுதிய ஆவணங்களில் நம்மை இழிவுபடுத்துபவற்றைக் கேள்விக்கு உட்படுத்தத்தான்வேண்டும். புகழ்ந்து சொல்லியிருப்பவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளலாம். அந்தவகையில் தரம்பால் தொகுத்திருக்கும் ஆவணங்கள் முழுவதுமே உண்மையென்று ஏற்றுக்கொள்ளவேண்டியவையாகவே இருக்கின்றன.
(தொடரும்)