(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)
அறியாமை இருளில் இருந்த இந்தியாவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்ததே பிரிட்டிஷார்தான்.
கிழக்கிந்திய கம்பெனியின் அராஜகங்களுக்கும் பிரிட்டிஷ் அரசாட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தியா கல்வியின் பின் தங்கிய நாடு (2000 ஆண்டுகளாக எங்களைப் படிக்கவே விடவில்லை என்று திராவிட இயக்கம் இதை இன்றும் பிடித்துக்கொண்டு தொங்குகிறது).
இந்தியர்களுக்கும் அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இவைதான் பிரிட்டிஷார் உருவாக்கிய சில முக்கியமான பொய்யுரைகள். தரம்பால் பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே இந்தப் பொய்யுரைகளை எப்படி அம்பலப்படுத்தி இருக்கிறார் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
செல்வாக்கு மிகுந்த பிரிட்டிஷார், ஐரோப்பியர் இந்தியா பற்றி என்ன நினைத்திருந்தார்கள் என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.
ஜேம்ஸ் மில், வில்பர் ஃபோர்ஸ், மெக்காலே, கார்ல் மார்க்ஸ் போன்றோரையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய கோட்பாடுகளை யும் பொறுத்தவரையில் இந்தியர்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், நாகரிகம் எல்லாமே காட்டுமிராண்டித்தனமானவை. இந்தியா தன்னுடைய இந்தியத்தன்மையை விட்டொழித்தால் மட்டுமே நாகரிக சமுதாயமாக ஆக முடியும் என்று திடமாக நம்பினார்கள்.
மில்லைப் பொறுத்தவரையில் பயன்பாட்டியலை (யுடிலிடேரியனிஸம்) முழு அளவில் இந்தியர்கள் பின்பற்றியாகவேண்டும். வில்பர் ஃபோர்ஸைப் பொறுத்தவரை அவர் முன்வைக்கும் ஒரு வகையான கிறிஸ்தவத்தை இந்தியர்கள் பின்பற்றியாகவேண்டும். மெக்காலேயைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் ஆங்கிலேயமயமாக வேண்டும். கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரையில் மேற்கத்தியமயமாகவேண்டும். இதுதான் இந்தியர்களது மீட்சிக்கான வழி.
லண்டனில் இருந்துகொண்டு இந்தியாவை 20 நீண்ட ஆண்டுகள் ஆண்ட ஹென்றி டண்டாஸுக்கு இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதாது; அவர்கள் மூலம் கிடைக்கவிருக்கும் ‘நன்மைகள், ஞானம் ஆகியவற்றுக்கும் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்காகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கவேண்டும். நாகரிகமானவர்கள் என்று சொல்லத்தகுந்த அளவுக்குத் தகுதி உடையவர்களாக ஆகும் வரை நம்மால் பாதுகாக்கப்பட்டவர்களாக இருப்பது குறித்தும் அது தொடரவேண்டும் என்றும் நினைக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்’.
இதுதான் இந்தியா பற்றிய ஐரோப்பியர்களின் பார்வை. ஐரோப்பியர்களிடையே இந்தியா தொடர்பான சாதகமான குரல்களும் ஒலித்தன. அவர்களில் முக்கியமானவர் வோல்டர்.
‘தார்த்தாரியர்களுக்கும் நமக்கும் (பிரிட்டிஷார்-ஐரோப்பியர்) இந்தியர்களைப்பற்றித் தெரியவந்திருக்காவிட்டால் இந்த உலகிலேயே இந்தியர்கள்தான் மிகவும் சந்தோஷமானவர்களாக இருந்திருப்பார்கள்’
ஆனால் இவரைப் போன்றவர்களுடைய குரல் மிகவும் மெலிதாகவே ஒலித்தன.
மார்க்ஸ் 1853-ல் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம்:
இங்கிலாந்துக்கு இந்தியாவில் செய்து முடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு இருக்கிறது. ஒன்று ஆசிய பாரம்பரிய அமைப்பை அழித்தல், இரண்டாவது ஆசியாவில் மேற்கத்திய சமுதாயத்துக்கு அடித்தளம் அமைத்துத் தருதல்.
இதை அவர்கள் மிகத் திறமையாகச் செய்து முடித்தார்கள். அவர்கள் இந்தியாவோரு நின்றுவிடவும் இல்லை. தரம்பால் இது தொடர்பாகச் சொல்லும் ஆய்வு முடிவுகள் மிகுந்த வேதனையைத் தரக்கூடியவையாகவே இருக்கின்றன.
இதுபோன்ற அழித்தொழிப்புக்கு ஆளானது இந்தியா மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகள் குறிப்பாக அமெரிக்காவும் ஆஃப்ரிக்காவும் இதுபோன்ற மாபெரும் அழித்தொழிப்பைச் சந்தித்திருக்கின்றன. பொ.யு. 1500 காலகட்டத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் மூலமாக அமெரிக்கப் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். அது ஒரு மாபெரும் துயர நிகழ்வு.
நவீன ஆய்வறிஞர்கள் பொ.யு. 1500 வாக்கில் அமெரிக்கப் பூர்வகுடிகளின் எண்ணிக்கை சுமார் 9 கோடியில் இருந்து 12 கோடியாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். அப்போதைய ஐரோப்பிய மக்கள் தொகையைவிட அது அதிகம். 19-ம் நூற்றாண்டுவாக்கில் அமெரிக்கப் பூர்வகுடிகளின் எண்ணிக்கை வெறும் சில லட்சங்களாகக் குறைந்து விட்டிருந்தது. இந்த எண்ணிக்கையில் சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கக்கூடும். ஆனால், இப்படியான ஒரு அழித்தொழிப்பு மனித குல வரலாற்றில் அந்நிய ஆக்கிரமிப்பினாலும் படையெடுப்பினாலும் நிகழ்ந்திருக்கின்றது. உலகின் எந்தப் பகுதி மக்களும் இதுபோன்ற அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை. கி.பி. 1500க்கு முந்தைய உலகம் எப்படியாக இருந்தபோதிலும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பினால் அதற்கு முந்தைய புராதன, உயிர்த்துடிப்பான கலாசாரங்கள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டன அல்லது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டன. இந்த உண்மைக்கு சான்றுகள் ஏராளம் உண்டு. அது ஊரறிந்த உண்மை.
ஐரோப்பியர்கள் கால் வைத்த பிறகு உலகின் பிற பகுதிகளின் சமூக அமைப்புகள், அறிவியல், தொழில்நுட்பங்கள் எல்லாம் அதற்கு 50-100 வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல் தொடர முடிந்திருக்க வில்லை. அந்த நாடுகளின் அரசாட்சியும் இறையாண்மையும் சுதந்தரமும் பறிக்கப்பட்டதைப் போலவே இந்த அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஐரோப்பா அல்லாத இந்த சமூகங்கள் எல்லாமே ‘பின்தங்கியவையாகவும் காட்டுமிராண்டித்தனம் மிகுந்தவையாகவுமே’ 1820 வாக்கில் ஐரோப்பிய சிந்தையிலும் பெரும்பாலான வரலாற்றுப் படைப்புகளிலும் குறிப்பிடப்படத் தொடங்கிவிட்டன. நிஜத்தில் அவை அப்படி இருந்திருக்கவில்லை.
இந்தியர்கள் தொடர்பான பிரிட்டிஷரின் பார்வையை வடிவமைத்ததில் ஜேம்ஸ் மில்லின் கருத்துகள், படைப்புகளுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இந்தியக் கலாசாரம், நாகரிகத்தை முற்றாக நிராகரிக்கும் பொறுப்பு உண்மையில் ஜேம்ஸ் மில்லுக்குத் தரப்பட்டுவிட்டது என்று நம்பும் அளவுக்கு அவர் செயல்பட்டிருக் கிறார்.
ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா என்ற தன்னுடைய மூன்று தொகுப்புகள் கொண்ட மிகப் பெரிய நூலில் அவர் அதையே செய்திருக்கிறார். அந்த நூலின் முதல் பதிப்பு 1817-ல் வெளியானது. அதன் பிறகு பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்ஜியத்தில் பணிபுரிய விரும்பும் அனைவருக்குமான ஆதார நூலாக அது ஆனது. அந்த நூல் வெளியானதில் இருந்து சமீப காலம்வரையிலும் அந்த ஹிஸ்டரி’ நூலே இந்தியாவின் வரலாறு பற்றி எழுதியவர்களுக்கு அடிப்படைச் சட்டகத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. எனவே, இந்தியர்களையும் இந்தியாவையும் பற்றி உருவான தீர்மானங்களில் ஜேம்ஸ் மில்லின் கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
‘இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரேவிதமாக நம்பகமின்மை, விசுவாசமின்மை, நம்பிக்கைத் துரோகம் மிகுந்தவர்கள்; அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராதவர்கள்; ஊழல், ஒழுக்கமின்மை மிகுந்தவர்கள். முஸ்லிம்கள் கையில் பணமிருந்தால் கேளிக்கை, கொண்டாட்டங்கள் என ஈடுபடுவார்கள். இந்துக்கள் வறுமையில் உழல்பவர்கள். எதிலும் ஆர்வம் இல்லாதவர்கள், துறவியைப் போன்று வாழ்பவர்கள். உண்மையில் இந்துக்கள் ஆண்மையற்றவர்களைப்போல் அடிமைப் பண்புகளில் தலைசிறந்து விளங்குபவர்கள். ‘ஒரு நாகரிகமற்ற சமுதாயத்தில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றுக்காரர்களாகவும் பொய், நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களாகவும் இருப் பார்களோ அதைவிட இந்துக்கள் படுமோசமானவர்கள்.’
சீனர்களைப்போல் இந்துக்களும் அவர்களைப் பற்றிய விஷயங்களில் எல்லாவற்றையும் மிகைப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். இருவருமே கோழைகள், பிறருடைய உணர்வுகளுக்கு மரியாதை தராதவர்கள். அடுத்தவர்கள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டவர்கள். இருவரும் அருவருக்கத்தக்க அளவு அசிங்கமானவர்கள்; அசுத்தமானவர்கள். அவர்களுடைய வீடுகளும் அப்படியே அசுத்தமாகவே இருக்கும்.’
மில்லைப் பொறுத்தவரையில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்து ஐரோப்பியர்கள்கூடத் தத்துவ ஞானத்தில் இந்தியர்களைவிட மேலானவர்கள் (ரோமன் சர்ச்சின் தீய செயல்களையும் அறிஞர்களின் குறைகளையும் விலக்கிவிட்டுப் பார்த்தால்) மேலும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் குறைகளையும் தாண்டி அரசமைப்பு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பியர்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள்.
இந்துக்களின் கவிதையோடு ஒப்பிடுகையில் ஐரோப்பியர்களின் கவிதைகள் வெகு உயர்ந்தவை. ஐரோப்பா போன்ற தேசங்களின் போர்த்திறமையோடு ஒப்பிடுகையில் இந்தியா மிக மிக பலவீனமானது என்பதைத் தனியே சொல்லத் தேவையே இல்லை. ஐரோப்பியர்களின் விவசாயம் ஹிந்துக்களின் விவசாயத்தைவிடப் பல படிகள் உயர்ந்தது. இந்தியாவில் சாலைகள் என்பவை காட்டுப்பாதையைவிடக் கொஞ்சம் மேலானவை அவ்வளவுதான். ஆறுகளின் மேலே பாலங்களே கிடையாது
மருத்துவம் பற்றி அறிவியல்பூர்வமான ஒற்றை நூல் கூடக் கிடையாது. இந்துக்களுக்கு அறுவை சிகிச்சை என்பதே தெரியாது. நடத்தை, பழக்க வழக்கங்கள், வீரம், ஆண்மை இவற்றில் ஐரோப்பியர்கள் இந்துக்களைவிடப் பல மடங்கு உயர்ந்தவர்கள்.
ஐரோப்பியர்களைவிட இந்துக்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள் என்னவென்று பார்த்தால், நெசவு, நூல் நூற்றல், சாயம் ஆகியவற்றில் இந்துக்கள் ஐரோப்பியர்களைவிட சிறந்து விளங்குகிறார்கள். அழகுப் பொருட்கள் குறிப்பாக நவரத்தினக் கற்களைச் சுத்தப்படுத்துவதிலும் அவற்றை வைத்து நகைகள் செய்வதிலும் இந்துக்கள் சிறந்தவர்கள். பெண்மை மிகுந்தவர்கள், பேச்சுக் கலையில் தேர்ந்தவர்கள். ஆனால் ஓவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகியவற்றில் ஐரோப்பியர்களுக்கு இணையாகச் சொல்லவே முடியாது.
இந்துக்களின் தறியைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டதாகவே தோன்றும். ஆனால், அது உற்பத்தி செய்யும் துணிகளின் மென்மையும் தரமும் ஆச்சரியமூட்டும் வகையில் சிறப்பாக இருக்கும்
கைவினைத்தொழில்களில் இந்தியர்கள் பெற்ற மேதைமைகூட அவர்களுடைய குறையாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘தன்னிடம் இருக்கும் முழுமையற்ற கருவிகளைத் திறம்படப் பயன்படுத்துவது என்பது பண்படாத சமூகத்தின் பொதுவான ஓர் அம்சமே’ என்றே அதை ஒரு குறையாகவே மில் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துகளும் முன்முடிவுகளும் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு அவரைக் கொண்டுவந்தது. மில் எழுதுகிறார்:
நமது முன்னோர் எவ்வளவுதான் கரடுமுரடானவர்களாக இருந்த போதிலும் நேர்மையானவர்களாக அர்ப்பண உணர்வு மிகுந்தவர் களாக இருந்தனர். ஆனால், இந்துக்களின் பளபளப்பான வெளித் தோற்றத்துக்கு அடியில் ஒருவித ஏமாற்றுத்தனமும் துரோகமுமே இருக்கிறது. நாடோடி மத்திய கால கோதிக் மக்கள் ஓரளவுக்கு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்ததும் என்னவிதமான நாகரிக மான நிலையை எட்டுவார்களோ அந்த நிலையிலேயே இந்துக்கள் இருக்கிறார்கள்.
இப்படியாக பிரிட்டிஷார் நம்மைப் பற்றி எப்படி நினைத்திருந்தார்கள் என்பதை விவரித்த தரம்பால் அதன் பின் அதே பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டு அவர்களுடைய கூற்றுகள் ஒவ்வொன்றையும் மறுத்திருக்கிறார். இந்த இடத்தில் அப்படி இந்தியாவைப் பற்றி உயர்வான அதாவது உண்மையான வரலாறை பிரிட்டிஷார் பதிவு செய்ய எது காரணமாக இருந்தது என்பதாக தரம்பால் சொல்லியிருப்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
1750களில் ஆரம்பித்த எடின்பர்க் அறிவொளி இயக்கத்தினர்களுக்கு ஒரு பயம் இருந்தது. வரலாற்று அனுபவம் (அமெரிக்காவின் பூர்வ குடி நாகரிகங்கள் அடியோடு அழிக்கப்பட்ட நிகழ்வு), தத்துவார்த்த அவதானிப்பு மற்றும் வெளிப்பாடுகள் இவற்றின் மூலம் ஓர் உண்மை அவர்களுக்குத் தெரியவந்திருந்தது: ஒரு நாகரிகத்தை ஆக்கிரமித்துத் தோற்கடிப்பது என்பது அந்த நாகரிகத்தைச் சிதைத்துவிடுவதோடு அந்த நாகரித்தின் அனைத்து அரிய அறிவுச் சேகரிப்புகளையும் ஒரேயடியாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது. எனவே, ஒரு சமூகத்தின் யதார்த்தமான நிலைமை என்ன என்பதை அப்படியே ஆவணப்படுத்தவேண்டும்; வாரனாசி போன்ற கல்வியில் சிறந்த பகுதிகளில் இருந்து எதையெல்லாம் எடுத்துக்கொள்ளமுடியும் என்பதைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.
இந்த மனோபாவமே இந்தியா பற்றிய உண்மை வரலாறைப் பதிவு செய்ய பிரிட்டிஷாரை வழிநடத்தியது. இப்போது அந்த ஆவணங்களில் இருந்து தெரியவரும் முதல் உண்மை என்ன என்று பார்ப்போம்.
பொதுவாக பிரிட்டிஷார் செய்த அராஜகங்கள், சுரண்டல்கள், அத்துமீறல்கள் பற்றிய ஆவணங்கள் பொது வெளிக்கு வந்தபோது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் தமது ஆட்சியாளர்கள், மக்களைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு வாதத்தை முன்வைத்தனர். அதாவது, காலனிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று, வணிகத்துக்குச் சென்று ஆக்கிமித்தவர்கள் பிரிட்டிஷ் சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள். அந்த கிழக்கிந்திய கம்பெனியினருக்கு பிரிட்டிஷ் மேட்டுக்குடியினர் போல் ஜனநாயகம், நாகரிகம், அரச நிர்வாகம் இவையெல்லாம் போதுமான அளவுக்குத் தெரியாது. எனவே அவர்கள் செய்த தவறுகளுக்கு பிரிட்டிஷ் அரசாட்சியைக் காரணமாகச் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். தரம்பால் இந்த வாதத்தை மிக நிதானமாக மறுதலிக்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனி ஒருபோதும் தனியாக, தன் விருப்பப்படி நடந்துகொண்டதில்லை. 1600-ல் பிரிட்டன் அரசு கொடுத்த உத்தரவின் பேரிலேயே கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் பலர் சாகச விரும்பிகளாகவும் சுரண்டல் பேர்வழி-களாகவும் இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே கம்பெனியின் அனைத்து விரிவாக்கச் செயல்பாடுகளுக்கும் பிரிட்டிஷ் கடற்-படையின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ராணுவமும் கூட இதற்குப் பெருமளவுக்கு உதவிகள் செய்திருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனிக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பொருளாதார ,நிர்வாக நடைமுறைகள் பற்றி அவர் மேலும் விவரிக்கிறார்:
தொடக்க காலத்திலிருந்தே கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கணிசமான தொகையைத் (மில்லியன் கணக்கிலான பவுண்ட்ஸ் ஸ்டெர்லிங்) தந்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசுக்குக் குறைந்த வட்டியில் பெரும் தொகையைக் கடனாகவும் வழங்கியிருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் கிழக்கிந்திய கம்பெனிக்குத் தொடர்ந்து கிடைத்து-வந்திருக்கிறது. சில நேரங்களில் கிழக்கிந்திய கம்பெனியின் சில விவகாரங்கள் பிரிட்டிஷ் கடற்படைத் தலைவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றன. அந்தக் கடற்படைத் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசர் மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவராகவே இருந்திருக்கிறார்கள். ஆரம்ப காலகட்ட ஆவணங்களில் இது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள், வழிகாட்டுதல்கள் ஆகியவையே பெருமளவுக்கு இருக்கின்றன.
கிழக்கிந்திய கம்பெனிக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான தந்திரமான கூட்டுறவை ஃபெர்கூஸன் சொல்லியிருப்பதைவிடத் தெளிவாக யாராலும் சொல்லிவிடமுடியாது.
‘இந்தியாவில் இருந்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு செல்வ வளங்களை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்ல-வேண்டும் என்பதே இந்தியாவை ஆட்சி செய்வதற்கான முக்கியமான நோக்கம். இந்தப் பணியை பிரிட்டிஷ் அரசின் பணியாளர்கள் மற்றும் அரச அமைப்புகளைக் கொண்டு செய்விக்க முடியாது. அவர்களெல்லாம் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்வ வளங்களைக் கொண்டு செல்ல-வேண்டுமென்றால் அதற்கு விதிமுறைகளை, சட்ட திட்டங்களை வளைத்தும் மீறியும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும். அரசாங்க அமைப்புகளையும் அரசுப் பணியாளர்களை யும் கொண்டு பெரிய அளவிலான சுரண்டல், கொள்ளையடிப்பு இவற்றைத் திறம்படச் செய்யவே முடியாது. எனவே, இந்தியாவின் நிர்வாகப் பொறுப்-பானது கிழக்கிந்திய கம்பெனி போன்ற ஓர் அமைப்பின் நேரடிப் பொறுப்பில் விடப்படவேண்டும். அந்த அமைப்பின் உறுப்பினர்-களுக்குத்தான் தேவைப்படும் நேரங்களில் விதிகளை மீற முடியும். அதேநேரம் அந்த கம்பெனியானது அரசால் நியமிக்கப்பட்ட ஒரு உயர் நிலை அதிகாரக் குழுவினால் மேற்பார்வை செய்யப்படவும்-வேண்டும்’.
இதன் பின்னரும் ஒருவர் கிழக்கிந்திய கம்பெனிதான் மோசம்; பிரிட்டிஷ் ஆட்சியாளர் நல்லவர்கள். கம்பெனிக்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்றெல்லாம் சொல்வாரென்றால் அவர் தரவுகளின் அடிப்படையில் பேசுபவர் அல்ல; தனது முன் முடிவுகளுக்கு ஏற்பப் பேசுபவர் என்றே கருத வேண்டியிருக்கும்.
வான சாஸ்திரம், கணிதம், மருத்துவம், எஃகு உற்பத்தி, செயற்கை முறையில் பனிக்கட்டி தயாரித்தல், விவசாயம் போன்றவற்றில் எல்லாம் இந்தியா எப்படிச் சிறந்து விளங்கியது என்பது பற்றி பிரிடிட்ஷார்களின் ஆவணங்கள் சொல்வதை இனி பார்ப்போம்.
பழங்கால இந்தியா சிறந்து விளங்கிய துறைகளில் மிகவும் முக்கியமானது வான சாஸ்திரம். இன்றும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல் போன்றவற்றில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகின் பல நாடுகள் மிகக் குறைந்த செலவில் அதி நேர்த்தியுடன் செயல்படும் நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையையே தமது செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக அணுகுகிறார்கள். இந்த வான் ஆராய்ச்சித் துறையின் மேதமைக்கான விதைகள் இந்திய வான சாஸ்திரத்தில் பொதிந்திருக்கின்றன.
பேராசிரியர் ஜான் ப்ளேஃபெயர் எடின்பர்க் பல்கலையில் கணிதவியல் துறையில் பேராசிரியராக இருந்தவர். இந்திய வான சாஸ்திரம் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்து இந்தியர்களின் வான சாஸ்திரக் கணிப்புகளானது அனைத்துவகையான விஞ்ஞானபூர்வ சோதனைகளாலும் சோதித்துப் பார்த்து சரியென்று நிரூபிக்கப்-பட்டிருக்கிறது.
பிராமணர்களுடைய வான சாஸ்திர நூல்களை ஆராய்ந்து பார்த்தவர் அது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
பிராமணர்கள் கிரஹ நிலைகள் தொடர்பாக எழுதி வைத்திருக்கும் அட்டவணைகளைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஜியாமெட்டரி, எண் கணிதம், திரிகோணமிதிக்கு இணையான கால்குலஸ் போன்றவையெல்லாம் நன்கு தெரிந்திருக்கவேண்டும்
இந்திய வானவியல் பற்றிய தகவல்களைச் சேகரித்த இன்னொரு பிரிட்டிஷரான கர்னல் ட்டி.டி.பியர்ஸ் லண்டனில் இருந்த ராயல் சொசைட்டிக்கு ஓர் ஆவணம் அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பவை:
வியாழன் கிரகத்தைச் சுற்றி நான்கு பெண்கள் நடனமாடிக் கொண்டிருப்ப தாக இந்திய பாரம்பரிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பிராமணர்கள் அப்படிக் குறிப்பிட்டிருப்பதில் இருந்து இந்துக்களுக்கு அபாரமான வானவியல் அறிவு இருந்திருப்பது தெரியவருகிறது. நான்கு நடனப் பெண்கள் வியாழன் கிரகத்தின் நான்கு நிலவுகளைக் குறிப்பிடுகின்றன.
இந்து மரபில் சனீஸ்வரருக்கு ஏழு கைகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த கிரஹத்துக்கு ஏழு நிலவுகள் இருப்பதைத்தான் குறிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சனி கிரஹத்தின் இந்த நிலவுகள் எல்லாமே மிகவும் சிறியவை. அதோடு அந்தக் கிரஹமோ பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. வலிமை மிகுந்த தொலைநோக்கிகள் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ‘ஏழாவது கரம் அந்த வளையத்தைப் பற்றியிருப்பதாகச்’ சித்திரிப்பதில் இருந்து அந்தக் குறியீடு வளைய வடிவிலான அந்தச் சுற்றுப்பாதையைத்தான் சித்திரிக்கிறது என்பதையே உணர்த்துகிறது அல்லவா? பழங்கால இந்திய வானவியலாளர்-களிடம் நவீன கால வான் தொலைநோக்குக் கருவிகளில் இருந்து மாறுபட்ட ஆனால், மிகவும் சக்தி வாய்ந்தவை இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.’
இன்றும் கிரகணங்களைக் கணிப்பதில் பாரம்பரியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் நம் ஜோதிடர்களின் செய்நேர்த்தியானது நவீன விஞ்ஞானத்தை பிரமிக்கவைப்பதாகவே இருக்கிறது.
வாரணாசியில் இருக்கும் பழங்கால வான் ஆராய்ச்சிக்கூடமானது அன்றைய காலகட்டத்தில் உலகில் இருந்த மிகச் சிறந்த ஐந்து வான் ஆராய்ச்சிக் கூடங்களில் ஒன்று என்று 1823 என்சைக்ளோபீடியா பதிப்புகள் வரை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வான சாஸ்திரத்தினோடு தொடர்புடைய கணிதத்திலும் பண்டைய இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது. பூஜ்ஜியம் தொடங்கி தசம வரிசை எண்களை பாரதமே கண்டுபிடித்தது. நம்மிடமிருந்து அரேபியர்கள் கற்றுக்கொண்டு சென்றனர். அவர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்றுக்கொண்டு அதை அரேபிய எண்கள் என்று சொன்னதையொட்டி அந்தப் பெயரிலேயே அவை அறியப்படுகின்றன.
அல்ஜீப்ராவும் இதுபோல் இந்தியாவில் இருந்தே அராபியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் தெரியவந்திருக்கும் என்று பிரிட்டிஷ் கணக்கியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
‘இந்திய அல்ஜீப்ராவானது கிரேக்க டைபந்தஸ்ஸின் அல்ஜீப்ராவைவிட அபாரமான படிமுறைத் தீர்வு (Algorithm) கொண்டதாகப் பல மடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது.
– என்று இரண்டையும் ஒப்பீட்டாய்வு செய்த திரு ஹெச்.ட்டி.கோல்ப்ரூக் குறிப்பிட்டிருக்கிறார்.கிரேக்கர்களிடமிருந்தே இந்தியர்கள் அல்ஜீப்ராவைக் கற்றுக்கொண்டு அதேநேரம் கிரேக்கர்களைவிட செழுமைப்படுத்தியிருப்பார்கள் என்று ஒரு வித்தியாசமான விளக்கத்தை கோல்ப்ரூக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், நவம்பர் 1817 எடின்பர்க் ரிவ்யூ இதழில் ‘எண் கணிதம் மற்றும் அளவியலுடனான அல்ஜீப்ரா’ என்ற நூல் பற்றிய மதிப்புரையில் இந்திய அல்ஜீப்ரா நிச்சயம் கிரேக்க அறிஞர் களிடமிருந்து பெறப்பட்டதல்ல’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது:
‘அல்ஜீப்ரா கணக்கீடுகளானது கிரேக்கத்தில் இருந்தே இந்தியாவுக்கு வந்திருக்கும் என்று நம்பவே திரு கோல்ப்ரூக் விரும்புகிறார். இந்தத் தீர்மானத்தைச் சந்தேகிக்கிறோம். இந்தியர்களுக்குக் கற்றுத் தரும்படியாக கிரேக்கர்களின் இந்தத் துறையில் எதுவும் இருந்திருக்கவில்லை. ஹெச்.ட்டி.கோல்ப்ரூக் அந்த முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தார் என்பதை எங்களால் புரிந்துகொள்ளமுடிய-வில்லை.
அல்ஜீப்ராவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இந்த தீர்மானத்துக்கு வரும்படியாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பெருந்தன்மையும் தாராளமனப்பான்மையும் கொண்டவராக இருக்க விரும்பிய அவர், இந்து அறிஞர்களின் மேதமையை வைத்துப் பார்க்கும்போது கிரேக்கத்தில் ஆரம்பகட்டத்தில் இருந்த அந்த அல்ஜீப்ரா இந்தியாவில் வெகுவாகச் செழுமையடைந்து முழு வடிவம் பெற்றத் தனி கணிதவியல் துறையாகப் பரிணமித்தது என்று நம்ப இடமுண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஹிந்து அல்ஜீப்ரா’ என்பது பற்றியும் ஹெச்.ட்டி.கோல்ப்ரூக் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். பிரம்மகுப்தர், பாஸ்கரர் ஆகியோரின் ‘எண் கணித, அளவியல் கணிப்புகளுடன் அல்ஜீப்ரா’ என்ற மொழி-பெயர்ப்புப் புத்தகத்தின் முன்னுரையில் ரூபன் பரோ இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘பழங்கால இந்துக்களுக்கு பைனாமியல் தியரம் (ஈருறுப்புத் தேற்றம்- இருபடித் தேற்றம்) தெரிந்திருந்தது’.
ப்ளேஃப்யர் வேறொரு இடத்தில் கூறுகிறார்:
அல்ஜீப்ரா பற்றி இரண்டாம் பாஸ்கரர் எழுதிய பீஜகணிதம் நூலுக்கு 1602-ல் எழுதப்பட்ட விளக்கவுரையானது அல்ஜீப்ரா பற்றி பல்வேறு கோட்பாடுகள், சூத்திரங்கள், விதிகள் பற்றிய விரிவான தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. 1621-ல் வேறொரு மேதை அந்த நூல் பற்றி இன்னும் விரிவாக வேறொரு நூலை எழுதியிருக்கிறார். இன்றைய இந்துக்களுக்கு அவர்களுடைய கடந்த கால அறிவுத் துறை சார்ந்த புத்தகங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது உண்மையென்றால் அந்த அறிவுப் பாரம்பரியம் வெகு விரைவில் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவே அர்த்தம். ஏனென்றால், இன்றிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் அறிவுத் துறைகள் கணிசமான ஒளியுடன் பிரகாசித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரம்மகுப்தர் மிகவும் கடினமான கணிதக் கோட்பாடுகள் தேரவியலா கணக்குகளுக்குத் (Indeterminate Problems) தீர்வுகளை முன்வைத்திருக்கிறார்
மிகவும் சிக்கலான கணிதக் கேள்விகளுக்கு 1200 வருடங்களுக்கு முன்பே இந்திய அல்ஜீப்ரா நிபுணர் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் அவர்களுக்கு இணையான திறமையும் தேடலும் கொண்ட கணித மேதைகள் இருந்திருக்கவில்லை.
பிரம்ம குப்தர் அந்த விடையை குத்து மதிப்பாக தற்செயலாகக் கண்டுபிடித்திருப்பார் என்ற விமர்சனத்தை ப்ளேஃபெயர் மறுக்கிறார்.
‘திறமையும் அறிவும் குறைவான நபர்கள் தற்செயலாக அதிர்ஷ்டவச-மாக மிகப் பெரிய சாதனைகளைச் செய்வதென்பது உலகில் சில துறைகளில் நடந்திருக்கிறது. ஆனால் கணிதத்துறையில் அது சாத்தியமில்லை. தேடல் குணம் இல்லாத ஒருவரால் எதையும் இந்தத் துறையில் கண்டுபிடிக்க முடியாது. தீர்க்கமான சிந்தனை, பொறுமையான ஆய்வு இவற்றுக்கு மட்டுமே இங்கு பரிசுகள், கண்டுபிடிப்புகள் கிடைக்கும்’.
மருத்துவத்துறையில் பாரதம் அன்றைய காலகட்டத்து ஐரோப்பாவைவிட மேம்பட்ட நிலையிலேயே இருந்திருக்கிறது.
இந்திய மருத்துவத்துறையினர் (18-ம் நூற்றாண்டுவாக்கில் அவர்கள் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருந்தாலும்) இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அறுவை சிகிச்சைத் தொழில் நுட்பத்தைத் திறம்படப் பின்பற்றியிருந்திருக்கிறார்கள். கர்னல் கிட் (Colonel Kyd) இதுபற்றிக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அறுவை சிகிச்சைத்துறையில் (இந்தியர்கள் அதில் நம்மைவிட மிகவும் பின்தங்கியதாகக் கருதுகிறோம்) வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துதல், மிக மோசமான கொப்பளங்கள் (பெரியம்மை போன்றவை) போன்றவற்றையெல்லாம் நமது அறுவை சிகிச்சை மருத்துவர்களே ஆச்சரியப்படும்வகையில் இந்தியர்கள் குணப்படுத்து கிறார்கள். நாம் மேற்கொள்ளும் வழிமுறைகளுக்கு நேர்மாறாக, ஒருவருடைய உடலில் கொப்பளங்களை செயற்கையாக உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் குணப்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெகு பழங்காலத்தில் இருந்தே செய்துவந்துமிருக்கிறார்கள்.
டாக்டர் ஹெச்.ஸ்காட் இந்தியாவின் மேற்குப் பகுதி நகரங்களில் உடல் உருமாற்று சிகிச்சை (plastic Surgery) மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் ராயல் சொசைட்டிக்கு 1872-ல் அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:
‘மருத்துவத்துறையில் இவர்களை (இந்தியர்களை) நான் பெரிதாகப் புகழ முடியாது. மிகவும் நுட்பமான அந்த அறிவுத்துறையானது போர், ஒடுக்குமுறை, சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிகள் இவற்றைத் தாக்குப் பிடிக்கும் திறன் இல்லாதது. ஆனால், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் பாராட்டியாகவேண்டும். விழித்திரை லென்ஸின் ஒளி ஊடுருவும் திறன் குறைவுபடும்போது அதைச் சரி செய்து பார்வைத்திறனை மீட்டெடுக் கிறார்கள். சிறுநீரகக் கல்லை நீக்க வயிற்றில் தற்போது ஐரோப்பாவில் எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறார்களோ அதே இடத்தில் இந்தியர்களும் செய்கிறார்கள். இதை அவர்கள் காலகாலமாகச் செய்து வருகிறார்கள். இந்த வழிமுறைகள் நமக்கு முன்பே தெரியாதவை.
‘மூக்கு அறுபட்டவர்களுக்கு (புதிய) மூக்கைப் பொருத்துகிறார்கள்’ .
அதோடு அதற்குப் பயன்படும் ‘உடைந்த உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும்’ பசையை டாக்டர் ஸ்காட் லண்டனுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.
பழங்கால இந்திய மருத்துவத்தின் அபாரமான சாதனைகள் ஒன்றாக பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்து இருந்திருக்கிறது. துருக்கிக்கான பிரிட்டிஷ் தூதருடைய மனைவி 1720 வாக்கில் தன் குழந்தைகளுக்குப் பெரியம்மை தடுப்பு ஊசி போடப்பட்டதைத் தொடர்ந்து அதை பிரிட்டனிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்கு முன்புவரை பிரிட்டனின் மருத்துவத்துறையில் அது பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
திரு டாக்டர் ஹோவெல் குறிப்பிட்டிருப்பதில் இருந்து தெரியவரும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரியம்மை நோய்க்கான அந்தத் தடுப்பு சிகிச்சையை மேற்கொண்ட 18-ம் நூற்றாண்டு மத்திம கால இந்திய மருத்துவர்களிடையே பாக்டீரியா தொற்றினால் இந்த நோய் ஏற்படுகிறது என்ற புரிதல் இருந்தது தெரியவருகிறது.
‘பெரியம்மை நோயானது பெருமளவிலானவர்களை ஒரே நேரத்தில் தாக்கும் தொற்று நோய். அது தீவிரமானதாகவோ மிதமானதாகவோ இருப்பதென்பது காற்றில் அந்த நுண்கிருமி (அதாவது பாக்டீரியா) எந்த அளவுக்குப் பரவுகிறது என்பதைப் பொறுத்தது. மேலும் அந்தக் கிருமிகள் கொழுப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், மீன் உணவு, பால் போன்றவற்றில் பெருமளவில் நிறைந்தும் காணப்படுகிறது. இப்படிக் காற்றில் மிதக்கும் இந்த நுண்கிருமிகளே பெரும்பாலான தொற்று நோய்களுக்குக் காரணம்; குறிப்பாக பெரியம்மை நோய்க்கு அவையே முக்கிய காரணம்.
விலங்குகள் மூச்சை இழுக்கும்போது அவற்றின் உடலுக்குள் செல்கின்றன. அவை மூச்சை வெளியே விடும்போது பிறவற்றுக்குத் தொற்றுகின்றன. விலங்குகளில் இவை எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. மனிதர்களுடைய சுவாசத்தில் கலந்து உடலில் ஊடுருவுவதனாலும் எந்த நோயும் ஏற்படுவதில்லை. ஆனால், உணவின் மூலமாக உடலில் கலக்கும்போது நிலைமை வேறு. அப்போது அந்தக் கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. அந்தக் கிருமிகள் உடலில் ஒருவித கெட்ட திரவங்களை உற்பத்தி செய்கின்றன. அதனால் தோலில் கொப்பளங்கள் ஏற்படுகின்றன’.
(தொடரும்)