(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)
இந்தியாவில் இருந்து சுரண்டப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்ட செல்வத்தைக் கொண்டு பிரிட்டனில் தொழில் புரட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பெரிய பெரிய நூற்பாலைகள் முளைத்தன. அவற்றுக்கு அதிகப் பருத்தி தேவையாக இருந்தது. எனவே இந்தியாவில் இருந்த வயல்களில் எல்லாம் உணவுப் பயிர்களுக்குப் பதிலாக பிரிட்டிஷாருக்குத் தேவையான பணப்பயிர்கள் பயிரிட நிர்பந்திக்கப்பட்டார்கள். அதோடு எஞ்சிய விளை நிலங்களில் விளையும் பயிர்கள், தானியங்களையும் அவற்றின் விற்பனையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசென்றனர்.
நில வருவாயில் ஐம்பது சதவிகிதம் வரியாகப் பிடுங்கப்பட்டன. 1850களில் ரயத்வாரி முறை அமலில் இருந்த மதராஸ் பிரஸிடன்ஸியில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் விவசாயம் கைவிடப்பட்டது. ஏனென்றால், அந்தப் பகுதியில் நில வரியாகத் தரவேண்டியிருந்த தொகையானது அந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஏறத்தாழ சமமாக இருந்தது. சில நேரங்களில் விளைச்சலைவிட அதிக வரிகொடுக்கவும் வேண்டியிருந்தது.
மழை பொய்க்கும் காலங்களில் பதுக்கலும் ஏற்றுமதியும் தொடர்ந்து நடந்ததால் பெருமளவில் பஞ்சத்தில் இறக்க நேரிட்டது. உப்புக்கு வரி விதித்து வடக்கே பஞ்சாபில் ஆரம்பித்து ஒரிஸா வரையிலுமாக பெரியதொரு முள்வேலி போடப்பட்டது. இதனால் உணவுப் பொருட்கள் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முன்பெல்லாம் வறட்சி ஏற்பட்டால் மக்கள் இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்குச் சென்றுவிடுவார்கள். வறட்சி பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்து உணவுப் பொருட்கள் தாராளமாகக் கொண்டுவரப்படும். கோவில்களுக்காக முன்னோர்கள் தானமாகக் கொடுத்த நிலங்களில் இருந்து தானியங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். கஞ்சித் தொட்டிகள் அமைத்து பசிப் பிணி போக்கப்படும். நம் கோவில்களில் பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவற்றின் முக்கிய நோக்கமே பசிப்பிணியைப் போக்குவதுதானே. அதன் நீட்சியாகத்தானே அறிவின் ஆலயமான பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டமே கொண்டுவரப்பட்டது.
பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்திய பாரம்பரிய அமைப்பில் இருந்த இதுபோன்ற நிவாரணக் கட்டமைப்புகள் முற்றாக சிதைக்கப்பட்டதால் வறட்சி பஞ்சம் ஏற்பட்டபோது கொத்துக் கொத்தாக மக்கள் இறக்க நேரிட்டது. அது ஒருவகையில் பிரிட்டிஷ் காலனிய அரசு மேற்கொண்ட படுகொலை என்றே நேர்மையும் நியாயமும் கொண்ட வரலாற்றாசிரியர்கள் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லிவருகிறார்கள். தரம்பாலின் அடியொற்றி பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் ராய் மாக்ஸம் இந்த செயற்கைப் பஞ்சம் பற்றி மிக விரிவாக, உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார். வங்காளத்தின் நில வளம் பற்றி பிரிட்டிஷார் பதிவு செய்து வைத்திருப்பதில் இருந்து இதைப் பார்க்கலாம்.
வங்காளத்தின் பெரும்பகுதியில் ஆண்டுக்கு மூன்று போகங்கள் அறுவடை நடக்கும். வசந்த காலத்தில் பருப்புவகைகளின் சிறிய அறுவடை இருக்கும். செப்டெம்பரில் ஒரு நெல் அறுவடை இருக்கும். டிசம்பரில் மிகப் பெரியதொரு நெல் அறுவடை இருக்கும். இந்தியாவின் மிகவும் வளமான பகுதிகளில் வங்காளமும் ஒன்று. உலகம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்தவரான இத்தாலிய லுடோவிகோ டி வர்தெமா 16-ம் நூற்றாண்டில் எழுதியது: ‘இந்த நாடு அனைத்து வகை தானியங்களிலும் சர்க்கரை, இஞ்சியிலும் செழித்து நிற்கிறது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் சிறந்த இடம் இதுவே’.
இப்படி வளமான மாநிலத்தில்தான் பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். 1760களில் மழை பொய்த்தது. பீஹாரின் அதிகாரியாக இருந்த அலெக்சாண்டர் வங்காள கவர்னருக்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருந்தார், அதில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
‘விரைவில் நிலைமை மோசமாகப் போகிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பேரிழப்பையே ஏற்படுத்தும். பாட்னாவில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது உள் நாட்டில் நிலைமை மேலும் மோசமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கடந்த பத்து நாட்களில் தெருக்களில் நாளொன்றுக்கு அறுபதுக்கு மேற்பட்டவர்கள் கொலைப் பட்டினியினால் இறந்து-விட்டிருக்-கிறார்கள்’.
ஆனால் வங்காள கவர்னரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிப்ரவரியில் கர்டியர், ‘வரி வசூலிப்பில் எந்த வீழ்ச்சியும் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அவருடைய அரசு வரியை பத்து சதவிகிதம் மேலும் அதிகரித்தது. மே மாதத்தில் ஏதோ பயங்கரமான இழப்பு நடந்துகொண்டிருக்கிறது என்பது நிர்வாகத்துக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது.
‘உயிர் இழப்பும் பிச்சை எடுப்பும் அதிகரித்துவிட்டிருக்கிறது. செழிப்பான பகுதியாக இருந்த பர்னியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இறந்துவிட்டார்கள். பிற பகுதிகளிலும் நிலைமை இதுவே’.
கோடைக்காலம் முழுவதும் பஞ்சம் நீடித்தது. பர்னியாவின் நீதிபதியான மொஹம்மது ஆலா கான் கல்கத்தாவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது:
‘குறைந்தது முப்பது நாற்பது பேர் தினமும் இறக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பட்டினியினால் இறக்கிறார்கள். விதை நெல்லை உணவாக விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கால்நடைகள், சட்டி சாமான்கள் எல்லாம் விற்கப்படுகின்றன. குழந்தைகளை விற்றாலும் வாங்க ஆளில்லை.’
வருவாய் கலெக்டர் ஜெசோர் எழுதியது:
‘பக்கத்துக் காடுகளில் இருந்து இலைகளைப் பறித்துக்-கொண்டு-வந்து கொடுத்து உணவு கேட்கிறார்கள். தமது மகன்கள், மகள்களை விலைக்குக் கொடுக்கிறார்கள். பல குத்தகைதாரர்கள் வயலை விட்டு ஓடிவிட்டார்கள்.’
தர்பாரின் பிரிட்டிஷ் பிரதிநிதி சொல்கிறார்:
‘கோரக் காட்சிகள் நீள்கின்றன. மனித குலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்தக் கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. இறந்தவர்களைத் தின்று வாழும் நிலைக்குப் போய்விட்டார்கள் சில இடங்களில். இந்தச் சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதினாறில் ஆறு பேர் என்பதாக ஆகிவிட்டது.’
ஜூலை மத்தியில் ஒரு வழியாக மழை வந்தது. கவர்னருக்கும் கவுன்சிலுக்கும் அவர் எழுதியது:
‘முன்பு சொன்னவையெல்லாம் இப்போது நடந்திருக்கும் கஷ்டங்களோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. மூர்ஷிதாபாதில் மட்டுமே நாளொன்றுக்கு 500 பேர் இறந்திருப்-பார்கள். கிராமங்களிலும் அக்கம் பக்கம் இருக்கும் இடங்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை நம்பவே முடியவில்லை. புதிய அறுவடைக்கு யாரேனும் எஞ்சியிருந்தால் நிலைமை சற்று மேம்படக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குள்ளேயே அனைவரும் இறந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. என்னைச் சுற்றிலும் இறந்து விழுபவர்களைப் பார்க்கும்போது ஒரு மனிதனாக மிக மிக அதிகமாக வேதனைப்படுகிறேன். கம்பெனியின் பணியாளர் என்ற வகையில் அதன் வருவாய்க்கு ஏற்படும் பேரிழப்பு குறித்து எனக்கு நன்கு புரியவும் செய்கிறது.’
1770-ன் பிற்பாதியில் பெய்த மழை அபரிமிதமாக இருந்தது. பட்டினியைப் போக்கத் தின்னப்படாத விதைநெல்கள் வளமானவையாக இருந்தன. பயிர் செய்ய மனிதர்கள் எஞ்சியிருந்த பகுதிகளில் விளைச்சல் அபாரமாக இருந்தது. ஆனால், பலருக்கு அது காலம் தாழ்த்தி வந்த மழையே. 1772-ல் இறப்பு விகிதம் பற்றிக் கணக்கெடுக்க ஆங்கிலேய அதிகாரிகள் கம்பெனி பகுதிகளுக்குச் சென்றனர். மூன்று கோடி மக்களில் ஒரு கோடி பேர் இறந்திருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. மக்கள் இல்லாததால் வங்காளத்தின் பெரும்பாலான வளமான நிலப்பகுதி பல காலம் பயிர் செய்யப்படாமலேயே விடப்பட்டு புதராக, காடாக மண்டிப்-போனது. கொள்ளையடித்தேயாக வேண்டியவர்களின் கூடாரமாகிப் போனது.
கம்பெனியினர் ஆட்சியாளர்களாக ஆகாமல் இருந்திருந்தால் வங்காளத்திலும் பிஹாரிலும் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்று கணிப்பது சிரமமே. நிச்சயம் குறைவாகவே இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஏனென்றால் வழி வழியாக அதற்கு முன்பெல்லாம் பஞ்சம் வந்தால் நில வரி போன்றவையெல்லாம் அதற்கு ஏற்றாற்போல் குறைத்துக்கொள்ளப்பட்டிருக்கும். நிச்சயம் அதிகரிக்கப்பட்டிருக்காது. அதோடு சேகரித்த பணமெல்லாம் வங்காளத்திலேயே இருந்திருக்கும். எனவே மக்களிடமும் அரச நிர்வாகத்தினரிடமும் பிற பகுதிகளில் இருந்து தானியங்களை வாங்க முடிந்திருக்கும். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் 13 ஆண்டுகளில் பிரிட்டிஷாரால் செய்யப்பட்ட கெடுதலானது முந்தைய நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்த ஒட்டு மொத்த கொடுமைகளையும்விட மிக மிக அதிகம் என்று ராய் மாக்ஸம் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
போதிய அளவு அரசுமுறை நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததன் மூலம் பஞ்சங்களில் தலையிட பரிட்டிஷார் மறுத்து வந்தனர். மூன்று வகையான கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் அதற்கு நியாயம் கற்பக்க முனைந்தனர்: தாராள வர்த்தகக் கொள்கைகள் (விளைபொருள் சந்தைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்திகளில் தலையிடக்கூடாது), மால்தூஸின் மக்கள்தொகைக் கோட்பாடு (மண்ணின் சக்திக்கு மீறி மக்கள்தொகை பெருகினால் தவிர்க்க இயலாத மரணங்களுக்கு வழிவகுக்கும்; அதன் மூலம் மக்கள்தொகையின் “சரியான’ அளவு மீட்கப்படும்) மற்றும் திட்டமிட்ட நிதி நிர்வாகம் (பட்ஜெட்டில் இல்லாத விஷயங்களுக்காக செலவு செய்யக் கூடாது). பஞ்சத்தை மட்டுமல்ல பிளேக் போன்ற நோயையும் அயல்நாட்டினர் ஒருவகையில் வரவேற்கவே செய்திருக்கின்றனர். ‘அளவற்ற மக்கள்தொகையைக்கட்டுப்படுத்த தேவன் தரும் தீர்வு’ என அமெரிக்க அரசியல் தலைவரும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மூன்று முறை இருந்தவருமான வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் குறிப்பிட்டிருக்கிறார்.
1866 ஒரிசா பஞ்சத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் பட்டினியால் இறந்தபோது பிரிட்டிஷார் எந்தக் கவலையும் இல்லாமல் 20 கோடி பவுண்டு அரிசியை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தனர் (ஒரு பவுண்டு = ஏறக்குறைய அரை கிலோ).
1876-77 பெரும் பஞ்சத்தை வைஸ்ராய் லிட்டன் பிரபு தவறான முறையில் கையாண்டார். லெப்டினன்ட் ரொனால்டு அஸ்பார்ன் இந்த பயங்கரம் குறித்து 1877-ல் இவ்வாறு உருக்கமாக எழுதினார்:
‘உறவினர்களால் வழக்கமான இறுதிச் சடங்குகளைக்கூட செய்ய முடியாத அளவுக்கு சாவுகள் கணக்கிலடங்காமல் இருந்ததால் கொத்துக் கொத்தாக சடலங்கள் பழைய கிணறுகளுக்குள் தள்ளப்பட்டன. ஒருநேர அரைகுறை உணவுக்காக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையும் விற்றனர். பசிக்கொடுமையால் படும் துன்பங்களைக் காண விரும்பாமல் ஆண்கள் தங்கள் மனைவியரை குளம் குட்டைகளுக்குள் தள்ளினர். இத்தகைய கோர மரணக் காட்சிகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடைய அமைதியையும் ஆனந்தத்தையும் எவ்விதக் குறையுமின்றி பராமரித்தது. செய்தித்தாள்கள் மௌனம் சாதிக்குமாறு வற்புறுத்தப்பட்டன. பசியால் குடிமக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் வெளியில் காட்டிக்கொள்ளக்கூடாது என கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன’.
1897-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் மற்றொரு பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போதும் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் வைர விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
உலகின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்றாக இருந்த 1943 வங்காள பஞ்சத்துக்கு பிரிட்டிஷாரே முழு காரணமாக இருந்தனர். பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் இனப்படுகொலை என்று அழைக்கப்படக்கூடிய வகையில் அது இருந்தது. பட்டினி கிடந்த குடிமக்களுக்கு சேர வேண்டிய உணவு தானியங்களை அவர்கள், சர்ச்சிலின் தனிப்பட்ட கட்டளைகள் மூலம், நன்றாக தின்று கொழுத்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய ஈவு இரக்கமற்ற பொருளாதாரக் கொள்கைகளால் 3-3.50 கோடி இந்திய மக்கள் பட்டினியால் மாண்டனர். இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த நேரத்திலும்கூட இங்கிருந்து பிரிட்டனுக்கு பல கோடி டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.
1943 பஞ்சம் முடிவுக்கு வந்தபோது ஏறக்குறைய 40 லட்சம் வங்காளிகள் பட்டினியால் இறந்துபோயிருந்தனர். அந்த சூழலில் அன்றைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான நடவடிக்கைகளை யாராலும் மன்னிக்க முடியாது. இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியபோது, உணவுத் தானியங்களை பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் கிரீஸிலும் பிற நாடுகளிலும் ஐரோப்பிய தானியக்கிடங்குகளை மேலும் பெரிதாக்கினார். ‘வலிமை மிகு கிரேக்கர்களின் பட்டினியைவிட, எப்படியானாலும் அரைகுறை உணவுடன்தான் வாழ்ந்துவந்த வங்காளிகளின் பட்டினி அதிக கவனம் கொடுத்துப் பார்க்கவேண்டிய ஒன்றல்ல’ என சர்ச்சில் சொன்னார்.
இந்தியர்களின் துயரம் பற்றி அவருக்கு நினைவூட்டப்பட்டபோது, ‘பஞ்சத்துக்கு முழு காரணம் அவர்கள்தான். முயல்களைப்போல பெற்றுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னார். மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் அவருடைய தவறான முடிவுகளால் ஏற்பட்ட அவலத்தின் ஆழத்தை தந்தி ஒன்றில் சுட்டிக் காட்டியபோது அவர், ‘எத்தனையோ இந்தியர் இறந்ததாகச் சொல்கிறீர்கள். இந்த காந்தி ஏன் இன்னும் சாகவில்லை?’ என எரிச்சலுடன் கேட்டார்.
இந்தியா சந்தித்த மிகப் பெரிய பஞ்சங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோன்றியவை என்பதைக் கவனிக்க வேண்டும்; அப்போதிலிருந்து இன்றுவரை அப்படி ஒரு பஞ்சம் எதுவும் இந்தியாவில் வரவில்லை. பிரிட்டிஷாருக்கு முன்பாக ஏற்பட்டிருக்கவும் இல்லை.
பிரிட்டிஷார் வருவதற்கு முன் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரங்களில் இந்திய மன்னர்கள் வரி விலக்கு, தானிய விலைக் குறைப்பு, வறட்சிப் பகுதிகளில் இருந்து ஏற்றுமதிக்கு தடை போன்ற கொள்கைகளால் மக்களுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் எல்லா நேரங்களிலும், குறிப்பாக பஞ்ச காலங்களில், தனிமனிதர்களின் தான தர்மம் என்ற வலுவான பாரம்பரியம் இருந்தது. சோதனையான காலங்களில், நிலக்கிழார்கள், வணிகர்கள் உள்ளிட்ட செல்வந்த இந்தியர்கள் ஏழை மக்களுக்கு வேலை தருவது, உணவளிப்பது போன்ற உதவிகளைச் செய்யும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதுடன் சந்தை விலைக்குக் குறைவாக விற்பதன் மூலம் தானியங்களின் விலையையும்கூடக் குறைத்துக்கொண்டனர்.
பொதுமக்களுக்கு உதவி செய்ய ஏராளமான செல்வந்த இந்தியர்கள் இருந்தனர். கிணறு வெட்டுதல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், மரம் நடுதல் என சமூக நலப்பணிகள் நீண்ட நெடுங்காலமாக நடந்துவந்திருந்தன. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தக் கட்டமைப்புகள் எல்லாம் சிதைக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஏற்பட்ட கொடிய பஞ்சங்களின் கொடூரமான பட்டியல்: வங்காள பெரும் பஞ்சம் (1770), மெட்ராஸ் (1782-83), சலிசா பஞ்சம் (1783-84), டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில், தோஜி பரா பஞ்சம் (1791-92,) ஐதராபாத்தை சுற்றி ஏற்பட்ட பஞ்சம் (1837-38), ஒரிசா பஞ்சம் (1866), பீகார் பஞ்சம் (1873-74), தென்னிந்திய பஞ்சம் (1876-77), இந்தியப் பஞ்சம் (உத்தேசமாக 1896-1900), பம்பாய் பஞ்சம் (1905-06) மற்றும் மிகக் கொடுமையான வங்காள பஞ்சம் (1943-44).
இவற்றில் பலியானவர்களின் எண்ணிக்கை திகிலூட்டக்கூடியது: 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வந்த ஐந்து பஞ்சங்களில் பலியான 1.50 கோடி பேரையும் சேர்த்து, 1770 முதல் 1900 வரை மொத்தம் 2.50 கோடி இந்தியர்கள் மடிந்தனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை நிச்சயம் 3.50 கோடியைத் தாண்டிவிடும். உலக அளவில், 1793 முதல் 1900 வரையிலான 170 ஆண்டுகளில் நடந்த போர்கள் அனைத்திலுமாக மொத்தம் 50 லட்சம் மக்கள் இறந்தனர்; ஆனால், இந்தியாவில் 1891 முதல் 1900 வரையிலான பத்தே ஆண்டுகளில் பஞ்சத்தால் மட்டும் 1.90 கோடி பேர் மரணம் அடைந்தனர் என்பதை வில்லியம் டிக்பி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது போன்ற மரணங்களை வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாதுதான். ஆனால், சில உண்மைகள் அழுத்தமாகப் புரியவேண்டுமென்றால் அது அவசியம் என்றே தோன்றுகிறது. ரஷ்யாவில் ஸ்டாலினின் கூட்டுப்பண்ணை விவசாய நடவடிக்கை மற்றும் அரசியல் களையெடுப்புகளின் போது 2.50 கோடி பேர் மாண்டனர்; மாசே துங்கின் (மாவோ) கலாசாரப் புரட்சியின்போது 4.50 கோடி மக்கள் இறந்தனர்; இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உலகம் முழுவதுமாக 5.50 கோடி பேர் மடிந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சத்தாலும் கொள்ளை நோய்களாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3.50 கோடி. ஆக, நவீன காலத்தில் மனிதன் மீது மனிதன் பிரயோகித்த மிருகத்தனத்தின் அவல உதாரணங்களுக்கு இணையாக காலனி ஆட்சிக்கால உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது. கம்யூனிஸ மாவோயிஸ கொடுங்கோலர்கள் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரிட்டிஷ்காரர்களோ இவ்வளவு பெரிய கொடுமையைச் செய்த பின்னரும் இந்தியாவுக்கு நன்மை செய்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடக்கம் என்பது வேதனையான நகைமுரணே.
(தொடரும்)
There is a very good book on this written by Madhusree Mukerjee “Hitler’s secret war”.
Of all the invaders, British were the most barbaric , inhumane invaders who not only looted and killed Indians in millions but destroyed our ancient, age old culture and way of life.