புதிய பொற்காலத்தை நோக்கி – 16

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

நம் அடிப்படைப் பார்வையில் ஏற்படவேண்டிய மாற்றம் இது. காலனிய அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டும். உலக நாடுகள் தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை வைக்கிறார்கள். ஜன் ஆயுஷில் அதே மருந்தை நாலில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குகிறார்கள். இது அற்புதமான இந்திய அணுகுமுறை. பன்னாட்டு பெரு நிறுவனங்கள் கோடிகளைக் கொட்டி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த மருந்துகளை காப்பியடித்து குறைந்த விலையில் மருந்து தயாரிப்பது தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.

இதற்கு மூன்று பதில்கள் சொல்லமுடியும். 

முதலாவதாக அந்த ஆய்வுகளில் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளும் உண்டு. எனவே அது இந்தியாவுக்கும் சொந்தமானதுதான்.

இரண்டாவதாக, மருத்துவம் போன்ற சேவைகள் நியாயமான லாபம் சம்பாதிக்கலாம். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக இருப்பது தவறு.

மூன்றாவதாக, உலகை காலனியாக்கி பூர்வகுடிகளை அழித்தொழித்து வளங்களையெல்லாம் சுரண்டி இன்று வல்லரசாக ஆகியிருக்கும் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளுக்கும் அங்கு இயங்கும் நிறுவனங்களுக்கும் இப்படியான இண்டலெக்சுவல் காப்புரிமை பற்றிப் பேச எந்த தார்மிக அதிகாரமும் உரிமையும் கிடையாது.

இந்திய மருத்துவ ஆய்வு என்பது வெறும் நகலெடுப்பு மட்டுமே அல்ல. கோ வாக்ஸின் என உலக நாடுகளுக்கே உற்பத்தி செய்து கொடுக்கும் திறமையும் விசால மனமுமே இருக்கத்தான் செய்கிறது. பரோபகாரார்த்தம் இதம் சரீரம். பிறருக்கு சேவை செய்யவே இந்த வாழ்க்கை என்பதே நம் இந்திய மருத்துவத்தின் முத்திரை முழக்கமாக இருக்கவேண்டும்.

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு இருதயத்தை உடனடியாகப் பரிசோதித்து உரிய மருந்து வழங்கும் சிகிச்சையில் ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட அரை மணி நேரம்- ஒரு மணி நேரத்துக்குள் அந்த மருந்தைத் தந்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த மருந்து தரவேண்டுமானால் அந்தக் கருவி கொண்டு உடனே பரிசோதனை செய்தாகவேண்டும். அந்தக் கருவிகள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தன. அவற்றின் விலையும் பல லட்சங்களில் இருந்தது. இதனால் கிராமப்புறங்களில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை நகரங்களுக்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முடியாத நிலை இருந்தது. பணம் மற்றும் தொலைவு ஆகிய இரண்டுமே பிரச்னையாக இருந்தது.

இந்த இடத்தில்தான் இந்திய அணுகுமுறையுடன் டி.சி.எஸ். நிறுவனம் இதுதொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியது. கிராமங்களில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுவர அதிக நேரம் ஆகிறது. ஆம்புலன்ஸிலேயே அந்த பரிசோதனையைச் செய்யும் வசதியைக் கொண்டுவந்துவிட்டால் ஆம்புலன்ஸ் நோயாளியின் வீட்டுக்குச் சென்று சேர்ந்த மறு நிமிடமே சிகிச்சையைத் தந்துவிடமுடியும்.

டிசிஎஸ் நிறுவனம் இதற்கான கருவியைக் கண்டுபிடித்தது. ஆம்புலன்ஸில் நோயாளி ஏற்றப்பட்டதுமே அந்தக் கருவி பொருத்தப்பட்டு இருதயத்தின் நிலை சோதிக்கப்படும். நகரத்தில் இருக்கும் மருத்துவருக்கு அந்த இருதயத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட படம் உடனே அனுப்பப்படும். அவர் அங்கிருந்தபடியே தேவையான மருந்தைத் தரும்படிச் சொல்வார். ஆம்புலன்ஸில் இருக்கும் மருத்துவ உதவியாளரே அந்த மருந்தைத் தந்து நோயாளியைக் காப்பாற்றிவிட முடியும். இது ஒருவகையான முதலுதவி சிகிச்சை போன்றதுதான். ஆனால், இது மிகவும் அவசியம்.

இந்த நடமாடும் இருதய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதனால்தான் இந்த சிகிச்சை சாத்தியமானது. இந்தக் கருவியின் விலையானது பெரு நகர மருத்துவமனையில் இருக்கும் பரிசோதனைக் கருவியின் விலையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக பணம், தொலைவு ஆகிய இரண்டு பிரச்னையையுமே ஒரே நொடியில் இந்தக் கண்டுபிடிப்பு தீர்த்துவிட்டது. இந்திய அணுகுமுறையே இதற்கு அடிப்படை. இன்று உலக நாடுகள் இந்தக் கருவியை உற்பத்தி செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

அப்துல்கலாம் தயாரித்த செயற்கைக் கால் தொடங்கி நமது மருத்துவ உலகம் குறைந்த விலையில் கண்டுபிடித்த பல உயிர் காக்கும் மருந்துகள் நமது இன்றைய சாதனையாகத் திகழ்கின்றன.

நாம் நமது பழைய பெருமையை மெள்ள மீட்டெடுத்து வருகிறோம்.

இதுபோன்று பல விஷயங்களில் நம் கவனம் நம்முடைய தேசம் சார்ந்து, நம்முடைய படைப்பூக்கம் சார்ந்து மேலும் குவியவேண்டும்.

இந்தக் கோணத்தில்  நமது பாரம்பரிய அணுகுமுறை உடனடியாக அமலாக வேண்டிய துறை என்பது மாமிச உணவுத்துறையில்தான். அதிலும் பசுவை தெய்வமாக மதிக்கும் நம் தேசம் உடனடியாக இதற்கொரு தீர்வு கண்டாகவேண்டும். போலியோ இல்லாத தேசம் என்பதற்கு எத்தனை முக்கியத்துவம் தரப்பட்டதோ தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று எந்த அளவுக்கு ஆர்வம் காட்டப்பட்டதோ அந்த அளவுக்குத் தீவிரமாக இதில் ஈடுபடவேண்டும். எம் தேசத்தில் ஒரு பசுவும் கொல்லப்படாது என்று நாம் பெருமித்த்துடன் சொல்லமுடியவேண்டும்.

இந்த விஷயத்தில் வட நாட்டு மஹாவீரர்-புத்தர் தொடங்கி தென்னாட்டு வள்ளுவர், வள்ளலார் வரை அனைவருமே பசுவை மட்டுமல்ல எந்தவொரு உயிரையுமே கொல்லக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பட்டியலின இயக்கத்தின் முக்கிய தலைவரான டாக்டர் அம்பேத்கர் பௌத்தமே தமது மக்களுக்கான வாழ்வியல் நெறி என்று சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கங்கள் வள்ளுவரே தமது ஆசான் என்று சொல்லிவருகிறார்கள். வள்லலார் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்து சக்திகள் பசுவே தமது தெய்வம் என்று சொல்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு திருவிழாவின் போது கிராம தெய்வத்துக்கு ஒரே ஒரு ஆடை மட்டும் பலி கொடுக்கச் சொல்லி, நேர்ந்துவிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகளைக் காப்பாற்றினார். எனவே இந்த சக்திகள் அனைத்துமே ஒரணியின் திரண்டு மாமிச உணவுப் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்கவேண்டும்.

உலகில் இன்று மாமிசப் புரதத்தை செயற்கையான சோதனைச்சாலையில் தயாரித்து செயற்கை மாமிசம் (கல்ச்சர்ட் மீட் – அறிவியல் அர்த்தம் வேறு என்றாலும் நாகரிகரிகத்தின் படியில் ஒரு அடி மேலே ஏற உதவுவதால் நாகரிக மாமிசம் என்றே இதைச் சொல்லலாம்) தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவையோ அப்படியே கொல்லப்பட்ட விலங்கின் மாமிசம் போலவே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் மிக மிக அதிக விலையில் இருந்த அந்த நாகரிக மாமிசம் இன்று நம்ப முடியாத அளவுக்குக் குறைந்துவிட்டிருக்கிறது. அதை உற்பத்தி செய்த விஞ்ஞானிகள் பெரு நிறுவனங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்தால் இன்னும் விலை கணிசமாகக் குறையும். துடி துடிக்கக் கொல்லப்படும் ஆடு, கோழி, மாடு, பன்றி இவற்றின் இறைச்சி என்ன விலையில் விற்கிறோமோ அதே விலையில் சோதனைச் சாலையில் தயாரித்த இந்த நாகரிக மாமிசத்தையும் விற்க முடியும் என்று சொல்கிறார்கள்.

உலகம் இதை ஒரு விஞ்ஞான சாதனை என்ற வகையிலும் வணிக வாய்ப்பு என்ற வகையிலும் செய்துவருகிறது. பாரதம் இதை தனது ஆன்மிகக் கடமையாக முன்னெடுத்துச் செய்யவேண்டும். மிகக் குறைந்த விலைக்கு நாகரிக மாமிசத்தை உற்பத்தி செய்து உயிர்களையெல்லாம் கொடூரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும். உலகுக்கு இந்தியாவின் மகத்தான கொடையாக இது இருக்கவேண்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *