தமிழ்ஹிந்து இணையதளத்தில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்த தஞ்சை வெ.கோபாலன் தமது 84 வயதில் காலமானார். அவரது மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலி. அவர் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி.
எனது ஆதர்ஷ குருநாதர் காலமானார்.
பேச்சிலும் எழுத்திலும் தேசியமே சிந்தனையாகக் கொண்டு இலங்கியவர்; இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்; தஞ்சையின் அடையாளமாக இருந்த எழுத்தாளர்; எனது ஆதர்ஷ குருநாதர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா மண்ணுலகை விட்டு மறைந்தார்.
மகாகவி பாரதியின் மகா பக்தர்; பாரதி புகழ் பரப்புவதற்காகவே, ’திருவையாறு பாரதி இயக்கம்’, ‘பாரதி இலக்கியப் பயிலகம்’ என்ற அமைப்புகளை நடத்தியவர். தஞ்சையில் இருந்தபடியே, தனியொருவராக பாரதி இலக்கியப் பயிலகம் மூலமாக அஞ்சல்வழியில் பாரதி பாடங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வந்தவர். 2001ஆம் ஆண்டு, அவரது பாரதி இயல் பாடத் திட்டங்களை அஞ்சல் வழியில் பெற்று நான் படித்திருக்கிறேன்.
கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்; ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தஞ்சை குபேர நாட்டியாஞ்சலி ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்தவர். ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலியை மிகச் சிறப்பாக நடத்தியவர்.
திரு. துளசி ஐயா வாண்டையார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அவருக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.
நாடு எதிர்கொண்டிருக்கும் பிரிவினைவாதப் போக்குகள் குறித்து எப்போதும் கவலையுடன் பேசுவார். நான் கேட்டுக் கொண்டதற்காக பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். நான் பல கட்டுரைகளை எழுதவும் ஊக்கமளித்திருக்கிறார்.
பல்வேறு பத்திரிகைகளில் எழுதியவர். சுதந்திர தினச் சிறப்பிதழ் என்றால் உடனடியாக கட்டுரை அளித்து விடுவார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரைப் பற்றிக் கேட்டாலும், முழு வரலாறும் கூறத் தெரிந்திருந்த தேசிய அகராதி அவர். ‘சுதந்திர கர்ஜனை, தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?’ ஆகிய இரு நூல்கள் கொழுந்து விட்டெரியும் அவரது தேசியப் பற்றுக்கு அடையாளம்.
மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ’தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு’, ’பாரதி போற்றிய பெரியோர்கள்’, ’திருவையாறு வரலாறு’ ஆகியவை இவரது வரலாற்று நூல்கள். ‘சுதந்திரச் சுவடுகளின் வழியே’ என்ற இவரது ஆய்வுப் பயணம் குறிப்பிட வேண்டிய முன்முயற்சி.
இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவர். வீடே புத்தகங்களால் நிறைந்திருக்கும். ‘பட்டினத்தடிகள் பாடல்கள், உரைநடையில் கம்ப ராமாயணம், இனியவை நாற்பது’ என்பவை இவர் அளித்துள்ள இலக்கியப் படையல்கள்.
திரு. ம.பொ.சி.அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். ’சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்’ என்ற நூல், இவரது குரு காணிக்கை.
பாரதி இலக்கியப் பயிலகம், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகள், கம்ப ராமாயணம்- ஆகிய வலைப்பூக்கள் வாயிலாக எழுதிக் குவித்தவர். இந்தத் தளங்களில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஆவணங்கள். அவற்றின் சுட்டிகள்:
- https://ilakkiyapayilagam.blogspot.com
- https://www.tamilnaduthyagigal.blogspot.com
- https://kambaramayanam-thanjavooraan.blogspot.com
ஆயுள் காப்பீட்டுக் கழகம் நிறுவனத்தில். பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தனது மக்களுடன் செல்லாமல் தஞ்சையிலேயே தனியே தங்கி அந்த மண்ணில் தேசிய, தெய்வீகப் பணி வளர்த்தவர்.
தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் தழைக்க வேண்டும் என்பதே முழு மூச்சாகக் கொண்டிருந்தவர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மிகச் சிறந்த நேர்மை, பண்பாட்டு ஒழுக்கச் சீலர். என்மீது மிகுந்த அன்பைக் காட்டியவர். எனது எந்த ஒரு புதிய முயற்சியிலும் அவரது பங்களிப்பும் உதவியும் இருந்து வந்துள்ளன. ஒருமுறை தஞ்சை சென்று அவரது வீட்டில் தங்கி அவரது சமையலைச் சாப்பிட்டு வந்தேன். என்னை மனமார ஆசிர்வதித்த பெருமகன்.
”தஞ்சையில் தனியே இருக்கிறீர்களே, மகன் அல்லது மகளுடன் இருக்கலாமே?’’ என்று அவரைக் கேட்டபோது, ’’பாரதி இயல் பணிகளை தஞ்சையில் இருந்தால் தானே தொடர்ந்து செய்ய முடியும்?’’ என்றார். அவரைச் சுற்றிலும் ஒரு குழு உடன் இயங்கும். அனைவரையும் ஒருங்கிணைத்துப் பணி புரிவதில் அவர் பண்பாளர்.
அவர் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆனால், விதியின் அழைப்பை யாரும் தவிர்க்க இயலாது. 1936 ஜூலை 15-இல் இந்த உலகிற்கு வந்தார்; 2021 மே 05-இல் நம்மைப் பிரிந்திருக்கிறார்.
சென்ற ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். அப்போது மகன் வீட்டில் ஓய்வில் இருப்பதாகச் சொன்னார். அதன்பிறகும் கூட அவரது உத்வேகம் மிகுந்த உழைப்பு குறையவில்லை. இன்று அவர் மாரடைப்பால் நம்மிடமிருந்து பிரிந்திருக்கிறார். ஐயாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரது உள விழைவுகள் அனைத்தும் இந்த மண்ணில் நல்ல மரமாகும்; நாட்டு மக்களுக்கு நிழலாகும். அவரது நூல்கள் என்றும் நமக்கு வழிகாட்டும்.
ஓம் சாந்தி.
(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
வெ.கோபாலன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி. ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அவரது படைப்புக்கள் நிரம்பிய வலைப்பக்கங்கள் அவருக்குப் பிறகு காலப்போக்கில் காணாமல் போகக் கூடும். அவற்றை தமிழ் ஹிந்து தளத்துடன் இணைத்து படைப்புகளைக் காக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இது போலவே, அமரர் முனைவர் சி.என்.முத்துக்குமாரசுவாமி அவர்களது படைப்புகளையும் பாதுகாக்க ஏற்பாடு செய்யலாம்.
Great Soul. OM Shanthi
நான் கோபாலன் ஐயாவுடன் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்துவந்துள்ளேன். இருமுறை இந்தியா வந்தபோதும், அவரைச் சந்திக்க இயலாது போய்விட்டது. அவரின் இழப்பு ஒரு சிறந்த அண்ணாவை இழந்ததுபோல உள்ளது. அவர் சிவபதவி அடையப் பிராத்திக்கிறேன்.