புதிய பொற்காலத்தை நோக்கி – 20

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் முக்கியமானது நமது வழிபாடு சார்ந்தது. அதற்கு முன் நம் தேசத்தில் சனாதன தர்மம், பௌத்தம், சமணம், பார்ஸி, சீக்கியம் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றில் பௌத்தம் மட்டுமே மத மாற்ற நோக்கத்தைக் கொண்டது. மற்றவையெல்லாம் பிறப்பின் அடிப்படையில் பெற்றோரின் மதமே குழந்தைகளுக்கு என்ற வழிமுறையை அடிப்படையாகக் கொண்டவை. பௌத்தத்திலும் பௌத்தத்துக்கு மாறியவர்களின் குழந்தைகளுக்கு பெற்றோரின் மதமே வந்து சேரும் என்றாலும் ஒருவர் விரும்பினால் புதிதாக அதில் சேர/சேர்க்க வழி உண்டு. சனாதன தர்மத்தில் அதற்கான வழியே கிடையாது. இஸ்லாம், கிறிஸ்தவ பிரிட்டிஷ் வருகைக்குப் பின் இந்த வாழ்க்கை முறைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதிலும் பிரிட்டிஷ் வருகைக்குப் பின் குறிப்பாக தேசத்துக்கு அரசியல் சுதந்தரம் கிடைத்தபின் மத மாற்றம் உச்சத்தை எட்டிவிட்டிருக்கிறது. இதைஎப்படிக் கையாள்வது என்பதுதான் நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி. நவீன மயமாக்கம், தொழில்புரட்சி மயமாக்கம், நகரமயமாக்கம், மேற்கத்திய மயமாக்கம் இவையெல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை கிறிஸ்தவ-இஸ்லாமியமயமாக்கம் தான். ஒருவகையில் நவீனமயமாக்கம், நகரமயமாக்கம், மேற்கத்தியமயமாக்கம் போன்றவையெல்லாமே கிறிஸ்தவமயமாக்கத்தின் வெவ்வேறு வடிவங்களாகவே நம் தேசத்தில் இருந்துவருகிறது.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

பாரம்பரிய வழிபாட்டு முறைக்குத் திரும்புவதும் திருப்புவதுதான் அதற்கான தீர்வாக இருக்கும். தேசம் அரசியல் சுதந்தரம் அடைந்துவிட்டது. ஆனால், ஆன்மிக சுதந்தரம் அடையவில்லை. குறிப்பாக இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மாறியிருக்கும் நேற்றைய இந்துக்கள் இன்னும் சிறைக்கைதிகளாகவே இருக்கிறார்கள். சொந்தமக்களால் ஆளப்படுவதுதான் அரசியல் சுதந்தரம் என்றால் சொந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதுதான் ஆன்மிக சுதந்தரம்.  மதம் மாற்றப்பட்டிருக்கும் இந்து சொந்தங்கள் அனைவரும் என்றைக்கு தாய் மதம்/தாய் ஜாதிக்குத் திரும்புகிறார்களோ அன்றைக்குத்தான் அவர்கள் ஆன்மிக விடுதலை பெற்றவர்களாவார்கள். அவர்கள் ஆன்மிக விடுதலை பெற்றால்தான் நம் தேசம் ஆன்மிக விடுதலை பெற்றதாக ஆகும்.

ஜாதிக்கொடுமையினால்தான் மதம் மாறினோம் என்று அவர்கள் சொல்வதில் இருக்கும் வரலாற்றுப் பிழையை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். அதைவிட முக்கியமாக அதை நாம் புரிந்துகொண்டாகவேண்டும்.

இதற்கு இரண்டு பதில்களைச் சொல்லமுடியும். முதலாவதாக, ஜாதிரீதியாக அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. இஸ்லாமுக்கு மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் முன்னோர்கள் வாளின் முனையில் பயமுறுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு மதம் திணிக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் பொய்யுரைகளால் சொற்ப ஆதாயங்களினால் மதம் மாறியவர்களே அதிகம்.

இரண்டாவதாக நேற்று இருந்ததாகச் சொல்லப்பட்ட ஜாதிக் கொடுமைகள் எதுவும் இன்று(ம்) இல்லை. இன்று கடைநிலை ஜாதியினருக்குக் கூடுதல் சலுகைகளும் பாதுகாப்பும் தரப்படுகின்றன. இன்று அந்தச் சலுகைகளுக்காக அரசாங்கச் சான்றிதழ்களில் இந்துவாக வேடம் அணிந்துகொண்டு மறைவாக கிறிஸ்தவ-முஸ்லீமாக இருப்பவர்கள் மிக அதிகம். எதற்காக இந்த இரட்டை வேடம். இன்றைய இந்து அரசு தரும் சலுகைகள் வேண்டும். அதே நேரம் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள் பக்கமும் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு அடிப்படையில் மிகவும் இழிவானது. அபாயகரமானது. 

ஆக வன்முறை மற்றும் ஏய்ப்பு நடவடிக்கைகளினால் மதம் மாற்றப்பட்ட உண்மையையும் ஏற்கத் தயாராக இல்லை. இன்று இந்து அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைகள், வசதி வாய்ப்புகளுக்கும் நன்றி விசுவாசம் கிடையாது. இப்படியான ஒரு துர்பாக்கியமான நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நம் இந்து சகோதரர்களுக்கு அது நிச்சயம் தொடரவேகூடாது. இஸ்லாமிய கிறிஸ்தவ அரசியல் சக்திகள்தான் நாட்டில் இருந்து போய்விட்டிருக்கின்றன. அந்த வல்லாதிக்க மதங்களின் அடிப்படைவாத சக்திகள் இன்னும் நம் தேசத்தில் அழுத்தமாகக் கால் ஊன்றி நிற்கின்றன. இந்த வீழ்ச்சியில் இருந்து மேலெழ மதம் திணிக்கப்பட்ட இந்து சகோதரர்கள் முதல் கட்டமாக, ஒற்றைக் கடவுள் கோட்பாட்டை நிராகரிக்கவேண்டும். உருவ வழிபாட்டைப் பின்பற்றவேண்டும். அவர்களுடைய முன்னோர் பின்பற்றிய அவரவர் குல தெய்வ வழிபாட்டைத் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். முருகப் பெருமானை முப்பாட்டன் என்று சொல்லியெல்லாம் கீழிறக்கக்கூடாது.

இந்துவாகவோ பழைய ஜாதிக்கோ உடனே திரும்பிவிட வேண்டியதில்லை. ஆனால், நான் இந்திய கிறிஸ்தவர். இந்திய முஸ்லிம்… எனது குல தெய்வத்தையும் கும்பிடுவேன் என்று உரத்த குரலில் சொல்லவேண்டும். அதுவே ஆன்மிக விடுதலையின் முதல் படி.

ஒரு மருத்துவர் வெகு பழங்காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்த பாரம்பரியத்தில் வந்தவர் நான் என்று பெருமிதம் கொள்ளவேண்டும். ஒரு கணித நிபுணர் உலகில் முதன் முதலாக பூஜ்ஜியத்தையும் தசம எண் முறையையும் கண்டு சொன்ன மேதைகளின் வழி வந்தவர் என்று பெருமிதம் கொள்ளவேண்டும். ஒரு சிற்பியும் கட்டடக்கலை நிபுணரும் விஞ்ஞான எந்திர யுகத்தில் கூடச் செய்ய முடியாத மாபெரும் கலைப்படைப்புகளைச் செய்த பரம்பரையில் பிறந்தவர் என்று பெருமிதம் கொள்ளவேண்டும். ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் வெகு பழங்காலத்திலேயே கிரஹ நிலைகளைக் கணித்த பரம்பரையில் வந்தவர் என்று பெருமிதம் கொள்ளவேண்டும். ஒரு எஃகு உற்பத்தியாளர் உலகிலேயே அதி உன்னதமான இரும்பை முதன் முதலாகத் தயாரித்த வம்சாவளியில் வந்தவர் நான் என்று பெருமிதம் கொள்ளவேண்டும். அதுபோலவே ஒவ்வொரு ஜாதிக்காரரும்  சத்தியம் ஒன்றே; அதன் வடிவங்கள் வெவ்வேறு என்ற ஆன்மிக உண்மையை முதன் முதலாக உலகில் கண்டு சொன்ன சனாதன தர்ம பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று பெருமிதம் கொள்ளவேண்டும்.

சனாதன தர்மம் என்பது ஏதோ பிராமண தெய்வங்களையும் அவர்களுடைய மதிப்பீடுகளையும் மட்டுமே குறிப்பதாக ஒரு பொய்யுரை பரப்பப்பட்டுவருகிறது. ஜாதியம் என்பதைக்கூட பிராமணியம் என்ற வார்த்தையால் குறிப்பிடும் கயமைக்கு நிகரானதுதான் இது. சிறு தெய்வ வழிபாடு என்று ஒன்றைச் சொல்லி அது சனாதன தர்மத்துக்கு எதிரானது என்ற கதையாடலை முன்வைத்துவருகிறார்கள். உருவ வழிபாடு, பிற கடவுள் வழிபாட்டை அழிக்கவோ ஒடுக்கவோ நினைக்காத பண்பு, தீப வழிபாடு, விபூதி, குங்குமம், திருமண் என திலகங்கள் அணிதல், இறைவனுக்கு முன்பாக முழுமையாக விழுந்து வணங்குதல், கை கூப்பித் தொழுவது, நீத்தார் கடன், முன்னோர் வழிபாடு, பூ வழிபாடு, பிரசாதம் வழங்குதல் என அனைத்துமே பிராமண வழிபாடு என்றும் சிறுதெய்வ வழிபாடு என்றும் வலிந்து பிரித்துச் சொல்லப்படும் வழிபாடுகளுக்கு இடையிலான பொதுவான அம்சங்கள்.  எனவே சனாதன தர்மம் என்ற வகைப்பாட்டில் இந்த இரண்டுமே அடங்கும். மாமிசப் படையல் கிடையாது என்ற ஒன்றை மட்டுமே வைத்து இந்த இரண்டும் வேறு என்று சொல்வதும் அவை எதிரிகள் என்றும் சொல்வது தவறு. பழங்குடி காலத்தில் இருந்த மாமிசப் படையல் வழிபாடும் அதில் இருந்து மேலெழுந்த பூ செய் வழிபாடும் ஒன்றுக்கொன்று அந்த விஷயத்தில் மட்டுமே மாறுபட்டவை. மற்ற விஷயங்கள் அனைத்திலும் அவை ஒன்றுபட்டவையே. நிச்சயம் எதிரிகள் என்று சொல்லவே முடியாது. எனவே அதி அந்தம் தெரியாமல் நிலைத்து நிற்கும் இந்த இரு மரபுகளையும் உள்ளடக்கியதுதான் சனாதன தர்மம். சூரியனும் நிலவும் எப்படி ஒரே வானில் இருக்கின்றனவோ பகலும் இரவும் எப்படி ஒரே நாளில் அங்கமாகத் திகழ்கின்றனவோ அதுபோலவே இந்த இரு மரபுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. எனவே அந்நிய மதம் திணிக்கப்பட்டவர்கள் இந்த சனாதன தர்மத்தின் அவரவர் கிளைக்கு திரும்பவேண்டும். அதுவே நமக்கான விடுதலையாக அடையாளமாக வெற்றியாக இருக்கும்.

அடுத்ததாக இந்து மதத்துக்குள் இருப்பவர்கள் தமது வழிபாடு சார்ந்து செய்துகொண்டிருக்கும் மாற்றங்களில் எவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பார்போம்.

பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது தெய்வங்களை தத்தமது சடங்கு சம்பிரதாயங்களின் அடிப்படையில் வணங்கி வந்தனர். முதன் முதலாக ஆலய நுழைவு என்ற பெயரில் சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பசுவை மதித்துப் போற்றுபவர்களின் ஆலயங்களுக்குள் பசுவை மதித்துப் போற்றாதவர்கள் நுழைய அனுமதி தரவேண்டும்; மாமிசம் உண்ணாதவர்களின் கோவில்களுக்குள் மாமிசம் உண்பவர்கள் நுழைய வேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கை.

முற்காலத்திலும் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை குல தெய்வமாக வழிபட்டுவந்தவர்கள் வேறொரு ஜாதியினரின் தெய்வத்தை வழிபட விரும்பியது உண்டு. அப்போது அவர்கள் சொந்த ஜாதிக்கும் முன்னோருக்கும் துரோகம் இழைப்பவராகவே பார்க்கப்பட்டார்.  சமத்துவப் போராளியாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், மாமிச உணவில் இருந்து ஒருவர் விலகி வரவிரும்புகிறாரென்றால் அது நிச்சயம் உயர்ந்த நிலையாகவே சமுதாயத்தில் அனைவராலும் மதித்து வரவேற்கப்பட்டது. நம் தேசத்தில் பிறந்த அனைத்து ஞானிகளும் ஒரே குரலில் உரக்கச் சொன்ன ஒரே அறிவுரை கொல்லாமைதான். நம் தட்டில் என்ன இருக்கவேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தனர்.  அதற்கு அவர்கள் வழிமுறையும் செய்துவைத்திருந்தனர். மாமிசப் படையல் இல்லாத தெய்வத்தை வழிபட விரும்பினால் மாமிச உணவைத் தவிர்ப்பேன் என்பது உள்ளிட்ட சத்திய பிரமாணத்தை எடுத்து தீட்சை பெற்று அந்த ஆலயங்களுக்குள்  நுழைய வழி இருந்தது. அதைத்தான் முன்வைத்திருக்கவேண்டும். ஏதோ அங்கு சமத்துவ உணர்வு இல்லை  என்று சொல்லிப் போராடியது அடிப்படையில் தவறு.

இஸ்லாத்தில் பன்றி மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பன்றி மாமிசம் தின்பது என் உரிமை என்று சொல்லிக்கொண்டு மசூதிக்குள் நுழைய விரும்பினால் அனுமதிப்பார்களா. ஐந்து நேரத்தொழுகை அழைப்பைத் தமிழில் சொல்லப் போகிறேன் என்று ஒருவர் புறப்பட்டால் விடுவார்களா. பாவமன்னிப்பு வழங்கும் உரிமை ஆண் பாதிரிகளுக்குத்தான் உண்டு. ஒரு கன்யாஸ்த்ரீ தனக்கு அந்த உரிமை  உண்டு என்று சொன்னால் அனுமதிப்பார்களா.  தமது குல தெய்வங்களின் சிலைகளை சர்ச்சில் வைத்து வழிபட விரும்பினால் அனுமதிப்பார்களா.  இப்படியான உரிமை கோரல் கலகங்களின் பின்னால் இருக்கும் அரசியலை ஒருவர் புரிந்துகொண்டாகவேண்டும்.

கருவறைக்குள் அனைவரும் நுழைய வேண்டும், கருவறைக்குள் தமிழில் மந்திரங்கள் சொல்லப்படவேண்டும்,  பிராமன அர்ச்சகர்கள் இருக்கும் கோவில்களில் அனைவரும் அர்ச்சகராகவேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன.  இன்று அனைத்து ஜாதியினரும் ஆலயங்களுக்கு அனுமதிக்கப்பட்டாயிற்றே.. அதுபோல் இவற்றையும் அனுமதிக்கவேண்டும் என்று ஒருவாதம் முன்வைக்கப்படுவதுண்டு. ஒரு தவறு இன்னொரு தவறுக்கான நியாயமாகிவிடாது.

கருவறைக்குள் பிராமன குலத்திலேயே அனைவரும் நுழைய முடியாது. அவர்கள் அதை ஒடுக்குமுறை என்றா சொல்கிறார்கள். பழங்கால ஆலயங்களைக் கட்டிய மூவேந்தர்களும் செல்வம் கொடுத்த வைசிய முன்னோர்களும் விதிமுறைகளை வகுத்த ஆகம சாஸ்திர நிபுணர்களும் பக்தர்கள் குழுவினரும் ஒரு மனதாக உருவாக்கிய வழிமுறைகள் இவை. இவற்றை மாற்றையமைக்க யாருக்கும் உரிமை கிடையாது.

இந்த சீர்திருத்தக் கருத்துகள் எல்லாம் நவீன காலத்துக்குத் தேவை என்றும் சரி என்றும் கருதுபவர்கள் நவீன கோவில்களைக் கட்டி அவற்றில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால மரபில் மாற்றம் செய்ய விரும்புவதென்பது தேசியக் கொடியின் நிறத்தை மாற்ற முன்வருவதற்குச் சமம். அதாவது, நமது அரசியல் சாசனத்தை வகுத்தவர்கள் நமது கொடியில் நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். பன்மைத்துவம் என்றால் அனைத்து நிறங்களுக்கும் இடம் தரவேண்டும். நீலம் என்பது பட்டியல் ஜாதியினரின் அடையாளம். கறுப்பு என்பது நாத்திகர்களின் நிறம். சிவப்பு என்பது பாட்டாளிகளின் நிறம். மஞ்சள் என்பது மங்கலகரமான நிறம். ரோஜா நிறம் பெண்களின் உரிமையைக் குறிக்கும் என்றெல்லாம் சொல்லி தேசியக் கொடியின் நிறத்தை மாற்ற முன்வருவதற்குச் சமம். இதுவுமே முற்போக்கான பார்வைதானே. அனைத்து தரப்புக்குள் இடம் தரும் நல்ல விஷயம்தானே. செய்வார்களா. மாட்டார்கள். ஏனென்றால் அரசியல் சாசனத்தில் சில அடிப்படைகள் இப்படித்தான் என்று வரையறுத்துவிட்டிருக் கிறார்கள். அதை நாம் மாற்றவே கூடாது.

ஏதேனும் ஒரு கட்சி இந்த வானவில் நிறங்களை விரும்பினால் தனது கட்சியின் கொடியாக அதை வைத்துக்கொள்ளலாம். தேசியக் கொடியில் கைவைக்கக்கூடாது. அதுபோன்றதுதான் ஆகம விதிகளும். அவை கோவில்களுக்கான அரசியல் சாசனம். சாசனங்களில் திருத்தங்களுக்கு இடமுண்டு. ஆனால், அதன் அடிப்படைகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோலவே ஆகம விதிகளிலும் சில மாறுதல்களுக்கு இடம் உண்டு. ஆனால், அடிப்படைகளை மாற்றக்கூடாது. உண்மையில் ராஜ ராஜன் காலத்தில் ராஜ கோபுரத்தின் மீது காவி நிறக்கொடி பறந்திருக்கிறது. அதற்கான கொடி மரக் குழி இன்றும் கோபுரத்தில் இருக்கிறது. ராஜ ராஜன் கட்டிய கோவிலில் அவர் சொல்லாத வகையில் தமிழில் குடமுழுக்கு செய்யவேண்டும் என்று சொல்பவர்களுக்கு நாம் சொல்லவேண்டிய பதில் ராஜராஜன் ஏற்றிய காவிக் கொடியை முதலில் அங்கு பறக்கவிடுவதுதான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *