புதிய பொற்காலத்தை நோக்கி – 18

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

தரம்பால் என்ற பெயரை முதலில் கேட்டபோது சற்று நெருடலாகவே இருந்தது. உண்மையில் தர்ம பாலர் என்ற அவருடைய பெயரை ஆங்கிலேயர் யாரோ தவறாக உச்சரித்திருப்பதாகவே நினைத்தேன். இப்போதுமே அந்த எண்ணம் இருக்கவே செய்கிறது. இது ஒரு பக்கமென்றால் தரம்பாலின் ஆய்வு முழுக்கவுமே தூய வரலாற்றுவாத நோக்கில் அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க மத, பாரம்பரிய நீக்கம் செய்யப்பட்டதாக இருக்கிறது. நவீன கால அறிவுப்புலத்தில் இப்படியான போக்கை அனைத்துத் துறையிலும் பார்க்கமுடியும்.

நவீன கால கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், சாதனைகள், இலக்கியங்கள் என அனைத்துமே பெரும்பாலும் மத நீக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கும்.  ஐன்ஸ்டீன் எந்த மதம் என்பது எங்குமே முன்னிறுத்தப்படாது. நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் மதம் கடந்தவர்களாகவே முன்னிறுத்தப்படுவார்கள். இது ஒருவகையில் சரிதான். நவீன உலகில், கல்விப் புலத்தில் இருந்து மதம் நீக்கப்பட்டுத்தான் காணப்படுகிறது. ஆனால், வரலாற்று அறிவுப் புலத்திலும் அது அப்படியாக இருப்பதென்பது சரியல்ல.

இந்தியாவில் முதன் முதலாகக் கால் பதித்த வாஸ்கோடகாமா கிழக்கத்திய நாடுகளில் ஒரு கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியத்தைத் தேடியே தன் பயணத்தை ஆரம்பித்திருந்தார். அனைத்து ஐரோப்பிய காலனிகளின் உருவாக்கத்திலும் சர்ச்களின் பங்கு மிக மிக அதிகம். உலகம் முழுவதையும் மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் காலனியமயமாக்கமே நடந்தது என்று சொல்லும் அளவுக்கு ஏகாதிபத்திய விஸ்தரிப்பும் மதமாற்றமும் கைகோர்த்தே இருந்திருக்கின்றன.

இஸ்லாமியப் படையெடுப்புகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு என்பது இரண்டாம் பட்சமே.வாள் கொண்டு மதத்தைப் பரப்புவதே அதன் ஒரே இலக்கு. அப்படியான பெரும் மதவாத சக்திகளின் வரலாறை எழுதும்போது மத நீக்கம் என்பதும் தூய வரலாற்றுப் பார்வை என்பதும் முற்றிலும் தவிர்க்க முடியாத ஒன்றே. அந்த வரலாற்றை எழுதியதும் அவர்களே என்பதால் இந்த  காலனிய ஆட்சியில் நடந்த தீமைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களே காரணம் என்பதாக ஒரு பெருங்கதையாடலை உருவாக்கியிருக் கிறார்கள்.

அதே கையோடு இந்தியாவில் இருந்த  உயரிய நிலைக்கு இந்து மதம் காரணம் என்ற அம்சத்தையும் ஒதுக்கிவிட்டார்கள். தூய வரலாற்றுப் பார்வை என்ற நோக்கில்  செயல்படுவதன் மூலம் கிறிஸ்தவத்தையும் பிரிட்டிஷ் அராஜகத்தையும் பிரித்து வகைப்படுத்திவிட்டார்கள். இந்துஸ்தானின் மேன்மையான காலத்தை இந்து மதத்திலிருந்து பிரித்தும் வைத்துவிட்டார்கள்.  குற்றவாளியை நிரபராதி என்று சொன்ன கையோடு நிரபராதியைத் தூக்கில் தொங்கவும் விடும் சாமர்த்தியம். இதுதான் தூய வரலாற்றுவாதம்.

இந்தியாவில் இருந்த காலம் முழுவதும் ஒவ்வொரு பிரிட்டிஷாரும் ஒவ்வொரு ஞாயிறிலும் சர்ச்சுக்குச் சென்று அந்த வாரம் செய்த பாவங்களுக்கெல்லம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் புதிய பாவங்களைச் செய்து வந்திருக்கிறார்கள்.  ஒருவகையில் பாவமன்னிப்பு என்ற வழிமுறையும் இயேசு அதுவரை செய்யப்பட்ட பாவங்களுக்கு மட்டுமல்ல அவருக்குப் பின்னால் செய்யப்படப் போகிற பாவங்களுக்கும் சேர்த்தே தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார் என்ற நம்பிக்கையே பிரிட்டிஷாரை மேலும் மேலும் பாவங்களைச் செய்யத் தூண்டியிருக்கிறது. அந்த ஆன்மிக அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லையென்றால் அவர்கள் அந்த அளவுக்கு ஒருவேளை கொடூரங்கள் செய்திருக்கமாட்டார்கள்.

பிரிட்டிஷாருக்கும் கிறிஸ்தவத்துக்குமான பிணைப்பு இதுவென்றால், இந்தியாவில் இருந்தவர்கள் ஒரு மண்வெட்டி செய்வதாக இருந்தாலும் வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் வான் ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அம்மை நோய்க்கு மருந்து தயாரிப்பதாக இருந்தாலும் அனைத்தையும் தெய்வ நம்பிக்கையோடு பக்தியோடு இறைவனைக் கும்பிட்டுவிட்டே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் அராஜகத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்துப் பேசாமல் இருந்ததில் என்ன அரசியல் இருந்ததோ அதுவே இந்துஸ்தானத்தில் இருந்தவர்களின் மேன்மையை இந்து மதத்தோடு இணைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் தரப்பட்ட கல்வி பற்றிய ஆவணத்தில் அந்தப் பள்ளிகள் சரஸ்வதி வணக்கத்துடன் தான் ஆரம்பித்தது என்ற குறிப்பு எங்குமே இல்லை.  

பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே இந்திய வரலாறை மீட்டுருவாக்கம் செய்திருப்பதால் தரம்பாலும் 17-18-ம் நூற்றாண்டு இந்தியாவின் ஒப்பீட்டளவிலான மேல்நிலையை இந்து மதத்தோடு பிணைத்து எங்குமே பேசியிருக்கவில்லை. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் பிரிட்டிஷாரையும் கிறிஸ்தவத்தையும் ஒருபோதும் இணைத்துப் பேசவே மாட்டார்கள். நாம் பேசியாக வேண்டும். இந்தியாவின் உன்னத நிலையை இந்து மதத்துடன் இணைத்துப் பேசவே மாட்டார்கள். நாம் பேசியாகவேண்டும். இது வரலாற்று ஆய்வு அல்ல. இந்துத்துவ ஆய்வு என்று சொல்வார்கள். இந்துசமூக அமைப்பின் மேன்மையைப் பற்றிய ஆய்வும் தரவுகளும் இந்துத்துவ ஆய்வாகவேதானே இருந்தாகவேண்டியிருக்கும்.

இந்துஸ்தானில் இருந்தவர்களின் 17-18-ம் நூற்றாண்டு புகைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் ஒன்று திருநீற்றுப் பட்டையுடன் இருப்பாகள். அல்லது திருமண் தரித்திருப்பார்கள். பெண்கள் அனைவருமே குங்குமம் அணிந்திருப்பார்கள்.  அந்த அடையாளத்தை நீக்கிவிட்டுப் பதிவு செய்யப்படும் வரலாறு அரசியல் நோக்கம் கொண்டதா.. அவர்களை அந்த அடையாளத்துடனே பார்க்கவேண்டும் என்று சொல்லும் வரலாறு அரசியல் நோக்கம் கொண்டதா?

தரம்பாலின் ஆய்வுகள் (இனிமேல் தர்மபாலர் என்றே சொல்லிக்கொள்ளலாமா) பெரும்பாலும் இந்திய பாரம்பரியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரிதும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சமூக அமைப்புகள் சார்ந்து அவர் பெரிதாக எதுவும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து உருவாக்கி முன்வைத்திருக்கவில்லை. எனினும் சமூக விஷயங்கள் சார்ந்தும் நாம் சில மாற்றங்களை முன்னெடுத்தாகவேண்டும்.

பால்ய விவாகம், சதி, வைதவ்யம், கலப்புத் திருமணம், விவாகரத்து, பெண்கள் வேலைகளுக்குச் செல்லுவது என பிரிட்டிஷாரின் ஆட்சிக்குப் பின் நம் தேசத்தில் குடும்ப உறவு சார்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் என்ற கோணத்தில் அணுகி பழங்காலத்தை முற்றாக நிராகரிக்கும் போக்கையும் பார்க்க முடிகிறது. இது தொடர்பாகவும் நாம் பெரிதாக எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை. உலகம் இந்த விஷயங்களில் எப்படி நடந்துகொண்டதோ அப்படித்தான் நாமும் நடந்துகொண்டிருக்கிறோம். பல விஷயங்களில் நாம் செய்தது உலக  நாடுகள் செய்ததைவிட மேலானதாகவே இருந்திருக்கிறது.

இன்றைய உலகில் நடக்கும் பாலிய வன்கொடுமைகளை அடிப்படையாக வைத்து இந்த நவீன சமுதாயத்தைக் காட்டுமிராண்டி சமூகம் என்று சொல்ல ஒரு நொடி ஆகாது. ஆணாதிக்க சமூகம் என்று சொல்லப்படும் நேற்றைய பாரம்பரிய சமூகத்தில் நிச்சயம் இந்தத் தவறுகள் இந்த அளவுக்கு இருந்திருக்கவே இல்லை. அந்தவகையில் அது பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பையே தந்திருக்கிறது. திரைப்படங்களில், விளம்பரங்களில் பெண்கள் காட்சிப்படுத்தப்படும் விதம், விளையாட்டுப் போட்டிகளின் சியர் கேர்ள்ஸ் அரைகுறை ஆடையுடன் ஆடுவது இவையெல்லாம் பெண் சுதந்தரத்தின் கேர்ள் பவரின் வெளிப்பாடாகப் பார்க்கச் சொல்லும் தந்திரம் மிகவும் அபாயகரமானது. உடம்பைக் காட்டக்கூடாதென்பது பெண்களின் சுதந்திரத்தை முடக்கும் செயல் என்று சொல்லும் பெண்ணியவாதி உண்மையில் ஒரு பெண் பித்தனின் வலையில் அவரை அறியாமல் விழுந்துகிடக்கும் விட்டில் பூச்சியே.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *