ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்

ஆதிசைவர் என்ற சொல்லின் பொருளும் அவ்வாறு அழைக்கப்படும் மரபார் குறித்த தெளிவின்மையும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் இந்த வினா விடைத் தொகுப்பை எழுதியுள்ளேன். இத்தொகுப்பு இது தொடர்பில் அறிய விழைவோருக்கு பயன்படும் என நம்புகிறேன்.

(1) ஆதிசைவர்கள் என்போர் யாவர்?

ஆதிசைவர்கள் என்போர் தமிழக அந்தணர்களில் ஒரு பிரிவினர். எல்லா சமூகங்களிலும் உள்ளது போல, தமிழ்நாட்டு பிராமணர்களிடையேயும் உட்பிரிவுகள் உள்ளன. அடிப்படையாக, எந்த வேத சாகையை, அதாவது கிளையை சார்ந்தவர் (ரிக்வேதம், சுக்ல யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம், சாமவேதம்), எந்த கோத்திரத்தை சார்ந்தவர் (பாரத்வாஜ, கௌசிக, ஸ்ரீவத்ஸ..) என்பது தான் ஒவ்வொரு அந்தணர் குடும்பத்திற்கும் உள்ள தொன்மையான பாரம்பரிய அடையாளமாகும். ஆயினும், இத்துடன் கூட ஐயர் (ஸ்மார்த்தர்), ஐயங்கார் (ஸ்ரீவைஷ்ணவர்), குருக்கள் (ஆதிசைவர்), மாத்வர் போன்றவற்றோடு அஷ்டசஹஸ்ரம், பிரஹசரணம், வாத்திமர், வடமர், சோழியர், வைகானசம், பாஞ்சராத்ரம், வடகலை, தென்கலை போன்ற உட்பிரிவுகளும் உள்ளன. இது போன்ற ஒரு பிரிவே ஆதிசைவர் என்பதாகும். வர்ணத்தின் படி பிராமணரான இவர்கள் சிறப்பாக சிவப்பிராமணர் அல்லது சிவ வேதியர் என அழைக்கப்படுகின்றனர்.

(2) ஆதிசைவர் என்போர் தமிழகத்தில் பழங்காலத்திலிருந்து உள்ள ஒரு தனிப்பட்ட பிரிவினர் என்று சிலர் கூறுகிறார்களே?

அது சிறிதும் ஆதாரமற்ற கருத்து. சங்க இலக்கியங்களில் நான்கு வேதங்களைப் பயின்று முத்தீ வளர்த்து வேள்வி செய்யும் அந்தணர்கள் என்றே குறிப்பு உள்ளது. ஆதிசைவர் என்றெல்லாம் தனியாக எந்தக் குறிப்பும் இல்லை. தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பகுப்பு உள்ளதன்றி வேறு எந்தத் தனிப் பிரிவும் சொல்லப்படவில்லை. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மரபார்ந்த குடியினரும் இந்த நான்கு பகுப்புகளில் ஒன்றைச் சேர்ந்தவராகவே இருந்தனர். இதன்படி ஆதிசைவர்களது தொழில் என்பது முழுமையாக கோயில் சார்ந்த ஆகம வழிபாட்டு பாரம்பரியம் என்பதால், அவர்களை அரசர், வணிகர், வேளாளர் என்ற பகுப்புகளில் அடக்குவதற்கு சாத்தியமே இல்லை. மேலும், ஆதிசைவர்கள் செய்யும் பணி என்பது தொல்காப்பியம் கூறும் அந்தணர்க்குரியதான அறுதொழில்களே ஆகும் (ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்). ஆகவே ஆதிசைவர் அந்தணர் தாம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத்தெளிவாக புரிந்து கொள்ளத்தக்கதாகும்.

கோயில் வழிபாடு என்பது தொன்மையான வேதவேள்விகளின் உருமாற்றமடைந்த மற்றொரு வடிவம் என்றும் கோயில்களின் அமைப்பும், அதன் அனைத்து சடங்குகளும் வேதவேள்விகளை ஒட்டியே எழுந்துள்ளன என்றும் சாஸ்திர விற்பன்னர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சங்ககாலத்திற்குப் பின்பு கோயில்களும் அவை சார்ந்த சடங்குகளும், அவற்றை விளக்க எழுந்த ஆகமங்களும் மிகப்பெரியதாக, விரிவானதாக வளர்ந்து சென்றபோது, வேதியர்களில் ஒரு சாரார் சைவ, வைணவ ஆகமங்களை விசேஷமாக பயின்று அதிலுள்ள கிரியைகளிலும், சடங்குகளிலும் தேர்ச்சி பெற்று, பின்பு அதன் அடிப்படையில் வழிவழியாக கோயில் சார்ந்த ஆகமவழி பூசகர்களாகவே தொடர்ந்தனர் என்பது வரலாற்று ரீதியாக சரியான கருத்தாகிறது.

(3) ஆதி சைவர்களின் தோற்றம் தொடர்பான ஐதிகங்கள், வரலாறுகள் குறித்து…?

ஆகமங்களில் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலிருந்து ஆதிசைவர்கள் தோன்றினர் என்ற புராண ஐதிகம் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில் இத்தகைய செய்திகள் சொல்லப்பட்டாலும், வரலாற்று அடிப்படையில் நர்மதை நதிக்கரையிலிருந்த நான்கு சைவ மடங்கள் மற்றும் அதிலிருந்து தோன்றிய பதினெட்டு உப மடங்களின் தலைவர்களாக இருந்த அந்தணர்களே சைவ ஆகம மரபினராக, ஆதிசைவராக மாறினர் என்ற கருத்து ஏற்கப்படுகிறது. ஆமர்த்தகம், ரணபத்ரம், கோளகிரி, புஷ்பகிரி என்பவை அந்த நான்கு ஆதி மடங்களின் பெயர்களாகும். எப்படிப் பார்த்தாலும், சைவாகமங்கள் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பொதுயுகம் 5ம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன. இதன்படி, சைவாகம மரபு 1500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிபடக் கூறலாம்.

பல்லவர் காலத்திற்குச் சற்றே பிற்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆதிசைவர் என்றே சொல்லப்படுகிறார். ஆக, தமிழகத்தில் ஆதிசைவர் தம்மை அக்காலம் தொட்டு தனிப்பட்ட அந்தணர் பிரிவாக வளர்ச்சியடையச் செய்திருக்கலாம். அதன் வழி, பிற்காலச் சோழர் காலத்தில் (பொ.யு, 9ம் நூற்றாண்டு முதல்) இவர்கள் சோழ அரசர்களின் குலகுரு என்ற உயர் நிலையை அடைந்திருந்தார்கள்.

(4) இவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளனரா?

பெரும்பான்மை தமிழகத்திலும் சிறுபான்மை ஆந்திரா, கர்நாடகா முதலிய இடங்களிலும் இலங்கையிலும் உள்ளனர். இப்போது உலகளாவிய நிலையில் பல நாடுகளிலும் பரந்துள்ளனர்

(5) இவர்களது சமய மரபின் தனித்தன்மை என்ன?

ஆதிசைவர்கள் அடிப்படையில் வைதிகர்கள் என்பதால், மற்ற பிராமணர்களைப் போலவே, இந்த சமூகத்தினரின் ஆண்களும் உபநயனம் (பூணுல்) என்ற சடங்கின் மூலம் பிரம்மோபதேசம் பெற்று வேதங்களை ஓதுவதற்கும் வேள்விக் கிரியைகளை செய்வதற்கும் தகுதி பெறுகின்றனர். மற்ற பிராமணர்களைப் போலவே, இவர்கள் போதாயனம், ஆபஸ்தம்பம் முதலிய க்ருஹ்ய ஸூத்ரங்களின் படி தம் வாழ்வியற் சடங்குகளை (பூர்வ, அபர கிரியைகள்) செய்து வருகிறார்கள். அத்துடன், சிறப்பாக சிவபெருமானை பரம்பொருளாக கொண்டாடும் இவர்கள் சிவாகமங்களை கற்பதோடு, சைவ தீட்சைகளையும் பெற்று சிவன் கோயில் பூஜைகளை செய்வர். அதனால் இவர்கள் சிவாச்சார்யர் எனப்படுவர். தத்துவ மரபில் சிவாத்வைதம் அல்லது ஆகம சித்தாந்த மரபை கைக்கொள்கின்றனர்.

(6) அப்படியாகில் இவர்கள் வேதம் ஓதும் வேதியர்கள் தானா?

முன்பு சொன்னது போல அதில் சந்தேகமே வேண்டாம். ஆகமம் சார்ந்த ஐதிகத்தின் படி பஞ்சரிஷி கோத்திரத்தவர் என்று சொன்னாலும், நடைமுறையில் இவர்களிடமும் பல்வேறு (ஸ்ரீ வத்ஸ முதலிய) வைதிக கோத்திரங்களும் தமிழகத்திலேயே உண்டு. பெரும்பாலும் இவர்கள் கிருஷ்ண யஜுர் வேதிகளாவர்.

பிற்கால நூல்களில் ஒரு பகுதியினரை உயர்த்தியும் இன்னொரு பகுதியினரை தாழ்த்தியும் சொல்லும் செய்திகள் இருப்பினும் உண்மையில் இவர்கள் வேதம் ஓதும் வேதியரே. மேலதிகமாக ஆகம அறிவும் கொண்டவர்கள்.

(7) அவ்வாறாயின் கடந்த காலங்களில் ஏன் பிற அந்தணர்கள் கோயில் அர்ச்சகர்களை, குறிப்பாக ஆதிசைவர்களை ஒதுக்கி வைத்தனர்?

இது ஒரு வருந்த தக்க வரலாற்று நிகழ்வு. ஆனால் அதுவும் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வே ஆகும். அதற்கு முன்பு இத்தகைய போக்கு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இதற்குக் காரணம் சாஸ்திரமோ, சம்பிரதாயமோ அல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அக்கிரகாரங்களில் பெருமளவு வறுமையில் வாழ்ந்த தமிழக அந்தணர் குடிகள் பலரும் நவீனக் கல்வி கற்று நல்ல நிலை அடைந்து, அவர்களில் ஒரு சாரார் நகரங்களுக்கும் புலம்பெயர்ந்து அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால் பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்களான இவர்கள் தமக்குள் குறுகி கோயில் குடிகளாகி அவ்வாறு செய்ய இயலாமற் போனமையே இதற்கு காரணம்.

இப்போது உலகெலாம் பரவியுள்ள இக்குடிகள் ஏனைய அந்தணர்கள் போலவே வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வருகிறார்கள்.

நாம் தெளிய வேண்டியது இது பிறப்பு சார் பிரிவினை அல்ல. கல்வி, பதவி, பொருளாதாரத்தால் ஏற்பட்ட பின்னடைவாகும். அது இப்போது வேகமாக அகன்று வருவது நம்பிக்கை தருவதாகும்.

(8) இலக்கியங்களில் ஆதிசைவர் இடம்பெறுகின்றனரா?

ஆகம நூல்களில் நிறையவே சிறப்பாக சொல்லப்படுகிறார்கள். தவிர பெரிய புராணம் முதலிய சைவ இலக்கியங்களிலும் பெருமைப்படுத்தப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்கள் சிவ வேதியர், சிவ பிராமணர், மறையவர், அந்தணர் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. சிறப்பாக பெரிய புராணம் ‘மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலம்’ என்றே ஆதிசைவரை அறிமுகப்படுத்துகிறது.

(9) இவர்கள் ஸ்ம்ருதிகள் எனப்படும் தர்மசாஸ்திரங்களை ஏற்பரா?

வைதிகர் என்பதால் ஏற்பர். ஆயினும் இவர்களுக்கு சைவ ஆகமமே முக்கிய பிரமாணம். எவ்வாறாயினும் தங்கள் பூர்வ, அபர கிரியைகளை ஸ்ம்ருதிகள் சார்ந்த கிருஹ்ய சூத்திரங்களின் படி (பெரும்பாலும் போதாயனம், சிறுபான்மை ஆபஸ்தம்பம்) தான் செய்து கொள்கிறார்கள்

(10) இலங்கையில் ஆதிசைவர் இருப்பதாக சொன்னீர்கள். இலங்கையிலுள்ள அந்தணர்கள் என்பது இவர்கள் தானா?

உண்மையில் பல இடங்களிலும் அந்தணர்கள் உட்பிரிவுகளை பொருட்படுத்தாது கோத்திரங்களை மட்டுமே முக்கியமாகக் கொண்டு திருமண உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆயினும், தமிழகத்தில் ஆதிசைவர் இடையில் சில நூறாண்டுகளாவது தனித்த குழு ஆகியிருக்கிறார்கள். இலங்கையில் அப்படி அல்ல. இங்கே அப்போதும் இப்போதும் உட்பிரிவுகள் பாராமல் அந்தணர்கள் தம்முள் கலந்து உள்ளனர். எவ்வாறாயினும் தம்மை ஆதிசைவராகவே அடையாளப்படுத்துவர். அதற்கு ஆதிசைவ சமூகத்தவரே பெரும்பான்மையாக இலங்கை வந்ததும் காரணமாகலாம்.

(11) உமாபதி சிவம், அகோர சிவாச்சார்யார், சுந்தரர் ,நீலகண்டர், திருஞானசம்பந்தர் போன்றோர் ஆதிசைவரா?

உமாபதி சிவம் ஆதிசைவரா? வேறு தீட்சித மரபா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. அகோர சிவாச்சார்யார் பற்றியும் இருவகை கருத்துண்டு. நீலகண்டர் என்ற பிரம்ம ஸூத்ர பாஷ்யகாரருக்கும் அவ்வாறான கருத்தே உண்டு.

சுந்தரர் ஆதிசைவர். ஞானசம்பந்தரை மகாசைவர் என்பர். ஹர தத்தர் வைஷ்ணவ பிராமண மரபில் பிறந்தவர். ஆனால் சிறப்பாக ஹர தத்த சிவாச்சார்யார் என்பர்.

ஆக இவர்கள் எல்லோரும் அந்தண சிவபக்தர்கள். அது மட்டுமே தெளிவானது

(12) இப்போது வேறு சில சமூகங்களும் தம்மை ஆதிசைவர் என்று சொல்வதை அவதானித்துள்ளேன்…?

ஆம். தமிழகத்தில் தொண்டை மண்டல முதலியார்களில் சிலரும் திருநெல்வேலி மற்றும் வேதாரணியத்து வேளாளர்களில் சிலரும் இலங்கையில் ஒரு சிறு சமூகம் (வேளாண் மரபினராகலாம்) ஒன்றும் தம்மை ஆதிசைவர் என அழைத்துக் கொள்வதோடு “குருக்கள்” பட்டமும் இட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், இது ஆகமங்களின் நெறிமுறைகளுக்கும், சைவ மரபுக்கும் முற்றிலும் விரோதமானது. ஆதிசைவர்கள் என்பார் அந்தணர்களில் ஒரு பிரிவினர் என்பதை மேலே பல சான்றுகளின் மூலம் கண்டோம்

(13) ஆதி சைவ மரபார் இப்போது செய்ய வேண்டிய பணி யாது?

இப்போது ஏனைய அந்தணர்கள் போல ஓரளவு கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் இவர்கள் தம் குழந்தைகளுக்கு மரபுக்கல்வியோடு கட்டாயமாக நவீன கல்வியையும் அளிக்க வேண்டும்.

நம்பிக்கை அடிப்படையான செய்திகளுக்கு அப்பால் கிடைக்கும் ஆகமங்களை பிற்சேர்க்கை, இடைச்செருகல்கள் இல்லாமல் துறைசார் (மொழி, வரலாற்று) அறிஞர் துணையோடு ஓரளவேனும் கட்டமைத்து பதிப்பிக்க வேண்டும்.

அதே வேளை தம் மரபில் ஈடுபாட்டோடும் இறை பக்தியோடும் சிவபூஜை, வழிபாட்டில் ஆழ்ந்த பிடிப்போடு வெற்றி நடை போட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.

3 Replies to “ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்”

 1. ஐக்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் திமுகவின் புதிய உளறலான “ஒன்றிய அரசு” எனும் வார்த்தையினை கண்டித்திருக்கின்றார் நயினார் நாகேந்திரன்

  ஆச்சரியமாக இதற்கு வெளிநடப்பு செய்யாமல் பதில் கூறியிருக்கின்றார் முதல்வர், அதாவது கூட்டட்சி தத்துவ அடிப்படையில் “ஒன்றிய அரசு” என சொன்னாராம் இன்னும் சொல்லிகொண்டே இருப்பாராம்

  இதை கேட்டு அப்படியே பதிலளிக்காமல் அமர்ந்துவிட்டார் நாகேந்திரன்

  உண்மையில் நாகேந்திரன் என்ன கேட்டிருக்க வேண்டும்?

  “அய்யா முதல்வரே, கழகம் என்றால் தமிழகத்தில் மூன்று கழகம் உண்டு. ஒன்றியம் என்றால் ஊராட்சி ஒன்றியம் முதல் வியாபாரி ஒன்றியம், கல்வி ஒன்றியம்,மருத்துவ ஒன்றியம் என பல உண்டு

  ஐரோப்பிய ஒன்றியம் கூட உண்டு

  அதில் நீர் குறிப்பிடுவது எந்த ஒன்றியம் என்பதுதான் தெரியவில்லை, இந்திய ஒன்றியம் என்றாவது சொல்லி தொலையும், நீர் சும்மா “ஒன்றிய அரசு” என்றால் நாங்களெல்லாம் அது ஐரோப்பிய ஒன்றியம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் என குழம்பி தவிக்கவேண்டி இருக்கின்றது

  சரி, இந்திய ஒன்றியம் என சொல்வதில் என்னய்யா தயக்கம்?” என கேட்டால் வழக்கம் போல் வெளிநடப்பு செய்திருப்பார் மு.க ஸ்டாலின்

  பாஜக உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்லுமுன் சரியான தயாரிப்போடு செல்வது நல்லது

  நல்ல கேள்வி எழுப்பி ஸ்டாலினை மடக்க சரியான வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டுவிட்டார் நாகேந்திரன், அந்த வாய்ப்பினை அடுத்த பாஜக உறுப்பினர்கள் தவறவிடமாட்டார்கள் என நம்புவோம்

  எனினும் அந்த பாஜக உறுப்பினர்களுக்கு நாம் சொல்லி கொள்வது இதுதான்

  அவர்கள் ஒன்றிய அரசு என்றால் தயங்காது நீங்களும் தமிழ் ஒன்றியம் , தமிழக ஒன்றிய அரசு, தமிழக ஒன்றிய முதல்வர், தமிழக ஒன்றிய அரசின் சபாநாயகர் என சொல்லலாம், எந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் இந்திய ஒன்றியம் என்றார்களோ அதே தத்துவபடிதான் தமிழகமும் ஒன்றியமாகத்தான் இங்கே அமைந்திருக்கின்றது

  அதை பாஜக உறுப்பினர்கள் அழுத்தி சொல்வது நல்லது

 2. பிறாமணா்கள் ஆதி சைவா்கள் சிவ பிறாமணா்கள் என்ற ஆராய்ச்சி நிறைய தகவல்களை அறிய உதவியது. ஆனால் யாரும் தமிழகத்தில் வாழும் பிறாமணா் பிள்ளை முதலியாா் . .அல்லாத பிறசாதி மக்களின் சமய கலாச்சார நிலை பற்றி எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. அதன் காரணம் ஏன் என்று தெரியவில்லை. அவர்களை அனைவரையும் எக்கேடும் கெட்டு தொலையுங்கள் என்று ஆதீனங்கள் கைவிட்டதால்தான் மத மாற்றங்கள் பெருகின. தொழில் முனைவோர்களாக உடல் உழைப்பு செய்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் குறைந்தபட்ட சமய அனுஷ்டானக்கல்வி தேவை என்பதை யாரும் அங்கீகரிக்கவில்லை. நாம் உருப்படாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

 3. பரம்பரை என்பது பிறப்பு வழியா இல்லை குரு சீட முறை வழியா ? உதாரணமாக ஆதி சைவ குருக்களிடம் ஒருவர் சீடனாக சேர்ந்து தீட்ஸை கேட்டு சீடனானல் அவரும் குருவின் ஆதி சைவ குலம் அக்கா முடியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *