மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

அருணகிரிநாத சுவாமிகளைக் காட்டிலும் கடையனையும் கடைத்தேற்றும் அருளாளர் வேறொருவருண்டா என்றால் அது ஐயமே. இசையின் மேதமையும், மொழியின் இனிமையும், மறைஞானத்தின் அடிமுடியறியொணாத ஆழமும் உயரமும் பக்தியின் பரவசமும் அனைத்தும் இணைவுறும் இடம் அருணகிரிநாதர்.

அவரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று அத்தோடு இவருமொன்று என்பது போல பார்க்கிறார்கள். தமிழகம் எங்கும் கொண்டாடப்பட வேண்டியது அவரது குருபூஜைத் திருநாள் (ஆனி மூலம்). அவரில்லை என்றால் தமிழுக்கு இனிமை ஒரு பெரும் பங்கு குறைவுதான்.

முருகப்பெருமான் அருளால் பாடியவர்.
தன்னை அழித்தும்
தன்னை தாழ்த்தியும்
உலக உயிர்கள் உய்ந்திட பாடியவர்.


ஆழமான ஞானக்கருத்துகளை நம் குழந்தைகளும் இனிய இசையுடன் பாட அருள் பொழிந்த மகா முனிவர்.

ஏற்கனவே எழுதியதென்றாலும் இங்கே மனதுக்கு வலு கொடுத்த பாடலொன்றை பகிர்கிறேன்:

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ.

இங்கு வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்:

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே.

இங்கு இந்திர அம்சமாக சுக்ரீவனும், பிரம்மன் அம்சமாக ஜாம்பவனும், அக்னி அம்சமாக நீலனும் ருத்ரரின் அம்சாவதாரமாகவே ஹனுமனும் வானர வர்க்கத்தில் பிறந்து ராமசேவை செய்தமையை சொல்லுகிறார். வானர வர்க்கத்தில் தெய்வாம்சம் பொருந்திய வானரர் உண்டு. எனில் மானுட வர்க்கத்திலும் அது ஏன் சாத்தியமில்லை? ராமசேவையை, ராஷ்ட்ர சேவையை தம் வாழ்க்கை பணியாக ஏற்றெடுக்கும் எவரும் எவ்வர்க்கத்தில் பிறந்தவரேனும் அவர்கள் வாழ்க்கை பயனும் பொருளும் அழகும் கொண்டதாக விரியும்.

எனவே மேலே சொன்ன பொருளற்ற உள்ளீடற்ற வாழ்க்கை, ராம சேவையாக ராஷ்ட்ர சேவையையும் ஜனநாராயண சேவையையும் ஏற்றெடுக்கும் போது பொருள் கொண்டதாக மாறும்.

அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே.

அயனின் படைப்பு எப்படி என்றாலும் இருக்கலாம். ஆனால் நல்ல குறிக்கோள் ஒன்றினால் உன்னதம் பெற்ற வாழ்க்கை அப்படி அல்ல. அப்போது நாம் அயனின் படைப்பு அல்ல, not anymore a random creation – an accidental combination of nucleotide sequences, அயனையும் புடைத்துச் சினந்து உலகம் படைந்த திருப்பரங்குன்ற பரம்பொருளின் படைப்பு – a purposeful life designed to serve the highest principle.

சோர்ந்து கிடக்கும் மனதுக்கு வலிமையையும், வேதனையுற்ற இதயத்துக்கு பக்தி எனும் மருந்தையும் அளிக்கும் அருளாளர்
நம் அருணகிரிநாத பெருமாள் காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *