லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் (47) என்ற ஏழை விவசாயியின் 17-வயது மகள் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தொடர்ந்து கிறிஸ்தவ மதமாற்ற வற்புத்தல், அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷமருந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி 2022 ஜனவரி 20ம் நாள் உயிரிழந்தார். பள்ளி ஆசிரியைகள் மற்றும் விடுதிக்காப்பாளர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிடுமாறு தொடர்ந்து உளவியல் ரீதியாக சித்திரவதை செய்ததும், மதம் மாற மறுத்ததால் கழிவறையை சுத்தம் செய்தல் உட்பட தண்டனை அளித்ததும் தான் தன்னை இந்த முடிவை நோக்கித் தள்ளியது என்று மரணத்திற்கு முன் அளித்த வீடியோ வாக்குமூலத்தில் தெளிவாக லாவண்யா குறிப்பிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

இந்த மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மகளின் மரணத்திற்கு நீதிகேட்டு லாவண்யாவின் பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

தமிழ்நாட்டில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. 2006ல் ஓமலூர் சுகன்யா, சென்னையில் 2009ல் ரஞ்சிதா, 2011ல் ரம்யா, 2015ல் உசிலம்பட்டியில் சிவசக்தி ஆகிய மாணவிகள் தாங்கள் படிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளில் தரப்பட்ட மதமாற்ற அழுத்தம் மற்றும் உளவியல் சித்ரவதைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவை செய்திகளில் பரவலாக வந்து விவாதிக்கப்பட்டவை. இதுபோக இன்னும் எத்தனையோ? இவற்றை முன்பே கீழ்க்கண்ட கட்டுரைகளில் பேசியிருக்கிறோம்.

ஏசுவுக்கான இந்து நரபலிகள்

கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி பலி: தொடரும் அவலம்

இந்தக் கொடுமைகள் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே இந்த சமீபத்திய நிகழ்வு காட்டுகிறது.


அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது:

அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத்திருக்கலாம்.
மிகவும் சுலபமான முடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம் மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.

அதை இந்த சமுதாயத்தின் தலை சிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப்படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப்படுத்தியிருப்பார்கள்.

குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை.
அவள் தேர்ந்தெடுத்தது கடினமான பாதை.
அவள் இன்னும் சில நாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
அவள் பெற்றோருக்கு மட்டும் நினைவில் வலியாக அவள் இருக்கக் கூடும்.
அவளைக் குறித்து எந்த எழுத்தாளனும் எழுதப் போவதில்லை. அவளது முடிவு எந்த திரைப்படத்திலும் சொல்லப்பட போவதில்லை.

ஆனால் அந்த குழந்தை தனது உயிரைக் கொடுத்தாள்.
தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.
தர்மத்தை கைவிடவில்லை.
தர்மத்துக்கான பலிதானியாக அவள் என்றென்றும் தீபமாக நிற்கிறாள்.

உணர்வுடைய இந்து சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும்
அவர்களுக்கான காவல்தேவதையாக அவள் நிற்கிறாள்.
தர்மத்தின் காவல் தேவதையாக அவள் நிற்கிறாள்.

அவள் நினைவு என்றென்றும் ஒவ்வொரு ஹிந்துவின் நினைவிலும் இருக்க வேண்டும் அவ்வாறு அந்நினைவு நின்று ஒளி கொடுக்க அக்குழந்தை தெய்வமாகவே போற்றப்பட வேண்டும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
நாம் எப்படி வாழ வேண்டுமென்பதைக் காட்டி
சனாதன தர்மம் உயிரினும் உயந்ததென்பதைக் காட்டிய அந்த குழந்தை இன்று இந்த மண்ணின் காவல் தெய்வம்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று அவளுக்கென்று தீபம் ஏற்றுவோம். அவள் நினைவாக ஒரு தெய்வ ஆலயமும் அவள் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் ஆலயத்திலும் ஒவ்வொரு குழந்தைகள் இந்து நூலகம் எழுப்புவதும் பாரத அரசே இக்குழந்தையின் நினைவை போற்றுவதும் அவசியமான விடயங்கள்.

கார்ட்டூன்: மனோஜ் குரீல்

கிறிஸ்தவ மதமாற்ற வெறி என்பது இன்றைக்கு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாகி வருகிறது . இப்போது ஒரு அப்பாவி ஹிந்து மாணவி தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் இதுகுறித்து மையமாக விவாதங்கள் நிகழ வேண்டும். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ பள்ளி கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும் நீதிமன்ற கண்காணிப்புடன் ஆய்வும், தணிக்கையும் வேண்டும். தமிழ்நாடு பாஜக இந்தப் பிரசினையை முன்வைத்து போராட்டங்களை நிகழ்த்தி வருகிறது. அரசியல் கட்சி பேதமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இந்துக்களும் இந்தப் பிரசினையில் மரணமடைந்த இந்துக் குழந்தைக்கு நீதி கேட்டுப் போராட வேண்டும். கிறிஸ்தவ ஆக்கிரமிப்பும், மதமாற்ற பிரசார வெறியும் அதிகரித்து வரும் சூழலில், நாளை இதே போன்ற நிலை உங்கள் குழந்தைக்க்கும் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணருங்கள்.

5 Replies to “லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி”

 1. தமிழக அரசு நல்லாட்சி கொடுக்கத்தான் விரும்புகின்றது, தமிழக பிரதான எதிர்கட்சி தலைவரான அண்ணாமலையின் தாக்குதல்களில் இருக்கும் நியாயத்தை பல இடங்களில் ஸ்டாலின் அரசு ஏற்றுகொள்கின்றது

  அது மின்சார நடவடிக்கை, ஆவின் நடவடிக்கை என பல இடங்களில் தொடங்கி இப்பொழுது பொங்கல் பொருட்களில் தரமில்லை எனும் புகார் அண்ணாமலையால் எழுப்பபடும் பொழுது அதற்கும் நடவடிக்கை எடுக்கபடும் என்கின்றார் முதல்வர்

  உண்மையில் இது நல்ல அணுகுமுறை

  ஆனால் பல விஷயங்களில் சரியானவற்றை ஏற்கும் தமிழக அரசு ஒரு விஷயத்தில் மட்டும் கனத்த மவுனம் சாதிக்கின்றது

  அது கிறிஸ்தவதரப்பின் மேல் திமுக காட்டும் அமைதி

  அது ஆழகவனித்தால் புரியும், வேறு விவகாரம் என்றால் உடனே பதிலளிக்கும் அரசுதரப்பு கிறிஸ்தவர் சம்பந்தபட்ட விஷயம் என்றால் பம்முகின்றது, அது பல இடங்களில் தெரிந்தது

  இப்பொழுது லாவண்யா எனும் மாணவி மதமாற்ற கும்பலால் தற்கொலை செய்தாள் எனும் குற்றசாட்டும் போராட்டமும் வலுக்கும் நிலையில் அந்த அமைதி நன்றாக தெரிகின்றது

  குறைந்தபட்சம் நீதிபதி தலமை, சிபிஐ விசாரணை என்று கூட அரசு தரப்பு வாயே திறக்கவில்லை

  இது மிகபெரும் சந்தேகத்தை தமிழகத்தில் ஏற்படுத்துகின்றது, விடுதலைபுலிகளையே தூக்கி எறிந்த திமுக கிறிஸ்துவதரப்பிடம் ஏன் இப்படி பம்முகின்றது எனும் கேள்வி எல்லா இடமும் எழுகின்றது

  இந்த இடத்தில் திமுக மற்றும் திகவின் பகுத்தறிவு கொள்கையும் அடிவாங்குகின்றது

  அதாவது திக, திமுக போன்றவையெல்லாம் பகுத்தறிவு இயக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம்

  அந்த இயக்கம் தமிழகத்தில் “இயேசுவே உண்மையான கடவுள், இயேசுவினை நம்பினால் மட்டும் வாழலாம்” என ஒரு மூட நம்பிக்கை விதைக்கபடுவதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம்

  இந்துமத மூடநம்பிக்கையினை சாடும் இவர்கள் பகுத்தறிவு ஏன் கிறிஸ்தவ மூடநம்பிக்கையில் சாடவில்லை?

  இந்து மூடநம்பிக்கை அதாவது அப்படி இவர்கள் சொல்வது கூட இன்னொரு மதத்தை சாடாது, அதையே மூடநம்பிக்கை என சொல்லி அழிச்சாட்டியம் செய்த கும்பல் இந்த கிறிஸ்தவ மூடநம்பிக்கை இதர மத மக்களின் நம்பிக்கையினை நோகடித்து உயிர்பறிக்கும்பொழுது ஏன் அமைதி?

  ஆக கொள்கை ரீதியாகவும், அரச நிர்வாகம் ரீதியாகவும் திமுக மிகபெரிய பின்னடைவினை சிறிய கிறிஸ்தவ கோஷ்டியிடம் ஏன் பெற்று தலைகுனிகின்றது என்பதுதான் புரியாத மர்மம்

  தமிழக சிறுபான்மை கோஷ்டிகளையும் காணவில்லை, சிறுபான்மை பாதுகாப்பு என்பது பெரும்பான்மை மதத்தோரை சீண்டி கொல்வது என நம்புகின்றார்கள் போல‌

  இவ்விடத்தில் இந்துக்களின் பலகீனத்தையும் ஒப்புகொள்ள வேண்டும், காஷ்மீர மாற்றுமத சிறுமியோ இல்லை இதர இந்து அல்லாதவர்களோ எங்கேனும் தேசமூலையில் தாக்கபட்டால் அந்த சிறுபான்மையினரால் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தமுடிகின்றது

  ராகுல், பிரியங்கா என எல்லோரையும் இழுத்துவரமுடிகின்றது அதை கண்டு கனிமொழி போன்றோரும் வருவார்கள்

  ஆனால் தமிழக இந்துக்களால் தங்கள் இழப்பை தங்கள் வலியினை அகில இந்திய அளவில் கொண்டு செல்லமுடியவில்லை, அதை இந்திய இந்துக்களின் வலியாக காட்ட முடியவில்லை

  ஏன் என்றால் அதுதான் இந்தியாவின் மர்ம கரங்களின் சக்தி

  இதையெல்லாம் இந்துக்கள் யோசிக்காதவரை அங்கு லாவண்யாக்களும் இன்னும் பலரும் பலியாகிகொண்டேதான் இருப்பார்கள், மானமும் உணர்ச்சியும் ஒவ்வொரு இந்துவுக்கும் வராதவரை, அகில இந்திய இந்துக்களோடு சேர்ந்து தமிழக இந்துக்கள் கைகோர்க்கா வரை இங்கு இவையெல்லாம் தொடரத்தான் செய்ய்யும்

  திமுகவும் அதன் அரசும், அதன் மூட நம்பிக்கை கொள்கைகளும் தமிழக கிறிஸ்தவ சக்திகள் முன்னால் பணிகின்றது என்பதைத்தான் லாவண்யாவின் மரணம் சொல்லி சென்றிருக்கின்றது

 2. மாணவியின் மரணத்தை வைத்து பா.ஜ.க அரசிய ஆதாயம் தேட கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்துகிறது-

  இதைக் கூறியவர் யார் தெரியுமா?- இன்றைய சிதம்பரம் தொகுதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த திருமாவளவன்-

  இதற்கு முன்பு திருபுவனம் ராமலிங்கம் படுகொலையின் பொழுது இவர் என்ன கூறினார் தெரியுமா?
  “இஸ்லாமியர்கள் ராமலிங்கத்தைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெட்டவில்லை

  உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்” என்று கொஞ்சம் கூட ஈரமேயில்லாமல் பேசியவர் –

  இவர்மட்டுமல்ல இவறைப் போன்ற பல அரசியல்வாதிகள் இங்கே வலுவான பதவிகளோடும், பலத்த பணபலத்துடன் வலம்வருகிறார்கள் –

  இவர்களுக்கு ஆதரவாக இங்கே ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள் –

  கொல்கத்தாவில் ஒரு 72 வயதான கன்னிகாஸ்திரி ஒரு திருட்டுக் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பொழுது ஊடகங்கள் பல வாரங்கள்…

  ஹிந்துக்கள் மீது பழியைப்போட்டு விவாதங்கள் நடத்தின, பிறகு குற்றவாளிகள் பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தபிறகு நவதுவாரங்களையும் மூடிக்கொண்டன_

  இங்கே, சென்னை IIT- யில் ஒரு கேரள இஸ்லாமிய மாணவியின் தற்கொலையைக் கூட ஹிந்து பயங்கரவாதம் என்று கூறி

  பல விவாதங்கள், போராட்டங்கள் நடந்தன, கனிமொழி முதல் ஸ்டாலின் வரை பல அறிக்கைகள் விட்டு போராட்டங்கள் நடத்தினர்-

  ஆஷிபா என்ற சிறுமிக்காக என்று இந்தியா முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்_

  இது போன்ற தனிமனிதர்கள் செய்யும் சில தவறுகளைக் கூட ஒட்டுமொத்த ஹிந்துக்களும் செய்தது போலவும்,

  ஹிந்துக்கள் அத்தனை பேரும் பயங்கரவாதிகள் போலவும் சித்தரித்தனர்_

  ஆனால், அன்று நடந்த ராமலிங்கம் படுகொலை தனிப்பட்ட இஸ்லாமியர்களால் அல்ல இஸ்லாமிய சித்தாந்தவாதிகளால் நடத்தப்பட்டது –

  இன்று நடந்த மாணவி லாவண்யா தற்கொலை என்பது கிறிஸ்தவ மதம்மாற்றும் கும்பல்களின் கொடுமைகளால் அரங்கேறியது –

  உண்மையில் இவர்கள் நேர்மையான அரசியல்வாதிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக வேண்டாம் குறைந்தபட்சம் மனிதர்களாக….

  கண்டிக்கக்கூட வேண்டாம், கொலைகாரர்களுக்கு முட்டுக்கொடுக்கும் கொடிய செயலையாவது செய்யாமல் இருக்கலாம் அல்லவா? –

  ஆனால், கொஞ்சம் கூட நெஞ்சம் அஞ்சாமல் செய்வார்கள்
  ஏனென்றால் அவர்களின் ஓட்டுப் பிச்சைக்காகவும், பணத்திற்காகவும் –

  இறுதியாக ஒன்று கூறுகிறேன்.

  இதை மட்டும் தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க போன்ற கட்சிகளில் இருக்கும் அப்பாவி ஹிந்துக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் –

  இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் ஒரு பா.ம.க நிர்வாகி, …..
  கொலையாவதற்கு முதல்நாள் கூட இஸ்லாமியர்களுடன் நல்லுறவாக இருக்கும் பல புகைப்படங்களைப் பதிவேற்றியவர், –

  இன்று மிஷநரிகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் அப்பா ….

  முருகானந்தம் கூட 30 வருடங்களாக தி.மு.க உறுப்பினர்தான் –

  ஆனால், மேற்கண்ட கட்சிகளைச் சேர்ந்த தலைமைகள் கூட தங்களுடைய சொந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த துயரங்களுக்குக் குரல் கொடுக்கவில்லை ….

  மாறாக குற்றவாளிகளுக்கே ஆதராவக இருக்கிறார்கள் காரணம் இவர்கள் ஹிந்துக்கள் –

  இறுதியாக ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்

  ஹிந்துக்களே, இங்கே குண்டுவைத்துக் கொள்பவன் உங்களை தி.மு.கவினராகவோ, வி.சி.கவினராகவோ பார்ப்பதில்லை

  ஹிந்துக்களாகவே பார்க்கிறான் (கோவை குண்டுவெடிப்பில் இறந்த பலர் தி.மு.கவினர்தான்)

  அதேபோல மதம்மாற்றும் மிஷநரிகளும் உங்களை அவர்களது ஆதரவு கட்சியினராகப் பார்ப்பதில்லை ஹிந்துக்களாகவே பார்க்கிறார்கள் –

  உட்சபட்சமாக நீங்கள் ஆதரிக்கும் கட்சித்தலைமைகள் கூட உங்களை ஹிந்துக்களாக மட்டுமே பார்க்கிறார்கள்,

  மாற்றுமதத்தினரால் நீங்கள் படுகொலை செய்யப்பட்டால் கூட அவர்கள் உங்களுக்கு குறைந்தபட்சம் ஆறுதல் கூட கூறமாட்டார்கள்

  மாறாக உங்களைப் படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றவே போராடுவார்கள்-

  முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள் –

 3. ஒருவர் சாகும் நிலையில் கொடுக்கபடும் வாக்குமூலம் உண்மையானது அதை ஏற்றுகொள்ளலாம் எனும் சட்டம் இந்தியாவில் உண்டு, அதனடிப்படையில் தீர்ப்புகளும் வழங்கபட்டிருக்கின்றன‌

  ஆனால் அந்த மாணவி வாக்குமூலம் தெளிவாக கொடுத்து செத்தபின்பும் சம்பந்தபட்டவர்கள்மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கும் செய்தி

  எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்றிகொண்டிருக்க முடியாது, உண்மைகள் ஒருநாள் வெளிவந்தே தீரும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை

  தமிழகத்தில் எக்காலமும் இந்துமதம் போராடி கொண்டேதான் இருக்கும்

  அது பாண்டிய சோழர் காலத்தில் புத்த சமணத்துக்கு எதிரான காலமாக இருந்தாலும் சரி, நாயக்கர் காலத்தில் ஆப்கானியருக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, இங்கு ஒரு எதிர்ப்பில்தான் அது இயங்கிகொண்டே இருக்கும்

  அந்த யுத்தத்தில் எப்பொழுதும் இழப்புகள் அதிகம், அந்த இந்துசேனைகள் இழந்த தியாக உயிர்கள் எண்ணற்றவை, அதில் ஒருவராக அந்த வீரமகள் இடம்பெற்றுவிட்டார்

  சட்டமும் அதிகாரமும் இன்று ஒப்புகொள்ளமறுப்பதை நாளை தர்மம் அவையேறி உலகுக்கே சொல்லும், அதுவரை அவள் நிம்மதியாக உறங்கட்டும்

 4. இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி நிர்பந்திக்கபட்டு அந்த வற்புறுத்தலை மிரட்டலை தாங்கமுடியாமல் மாணவி லாவண்யா இறந்திருக்கின்றார் என்பது இந்த ஆண்டின் மிக துயரமான விஷயம், இது இந்துக்களுக்கும் தேசிய அமைதிக்கும் சவால்விடும் விஷயம்

  இந்த விவகாரத்தில் மாநில அரசும் அதன் தலைவரும் வாயே திறக்கமாட்டார்கள் என்பதும் அவர்களின் துணைகளான கம்யூனிஸ்டுகள் தமிழ்தேசிய அமைப்புகள் மனித உரிமை போராளிகள் தலித் போராளிகளெல்லாம் கனத்த மவுனம் காப்பார்கள் என்பதும் எதிர்பார்க்கபட்ட ஒன்று

  அதிமுகவின் நிலைப்பாடு காங்கிரஸின் நிலைப்பாடும் இதுதான், அது ஆச்சரியமல்ல‌

  பெரும் அதிர்ச்சியும் சந்தேகமும் இந்து மடாதிபதிகளின் மவுனத்தில்தான் எழுகின்றது, எத்தனையோ இந்து மடங்கள் இங்கு உண்டு அங்கு மடாதிபதிகளும் ஆதீனங்களும் உண்டு

  ஒரு மடாதிபதியோ ஆதீனமோ கூட இந்த கொடுமையினை கண்டிக்காததுதான் ஆச்சரியம்

  பொதுவாக தமிழக பல மடாதிபதிகள் பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள் தமிழ் வழிபாடு தமிழ் சிவன் என அவர்கள் மதஅபிமானம் ஒருமாதிரியானது

  ஆனால் ஒரு இந்துபெண் உயிரிழந்த நிலையிலும் இவர்கள் கனத்த மவுனம் காட்டுவது திராவிட அமைப்புக்களுக்கு இவர்கள் துணைசெல்கின்றார்களா? ஏதும் வாய்திறந்தால் பாஜகவுக்கு அனுகூலம் என மவுனம் சாதிக்கின்றார்களா என்பதுதான் பெரும் அதிர்ச்சி

  இந்துமதத்துக்கு எதிராக இங்கு சில மாதங்களாக எழும் சவால்கள் கொஞ்சமல்ல நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் இடிபடும் பொழுதும் இப்பொழுது இந்துமாணவி மதமாற்ற கொடுமையால் செத்திருக்கும் பொழுதும் இந்த மடாதிபதிகளின அமைதி மனதை நோக வைக்கின்றது

  இவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகள் அல்ல, ஆனால் இவர்களெல்லாம் நாம் ஏதும் சொன்னால் அது பாஜகவுக்கு அனுகூலமாகும் என அரசியல்வாதி போல் சிந்திப்பது நிச்சயம் சரி அல்ல‌

  இந்துமதத்தை தாங்கவேண்டிய மடாதிபதிகள் அரசியல் யோசனையினை கொண்டிருந்தால் அது சிவநிந்தனைக்கு சமமான குற்றமாகும்

  சமணர் காலத்தில்தான் அப்பரும், சம்பந்தரும் செத்துபோன இந்துக்களுக்கு உயிர்கொடுத்து இந்து மதத்தினை தழைக்க செய்தார்கள்

  அவர்கள் வழிவந்த ஆதீனங்கள் இப்பொழுது இந்துபெண் நவீன திராவிட மிஷனெரிகள் காலகொடுமையில் செத்திருக்கும் பொழுது அமைதிகாப்பது அந்த மடங்களின் முன்னோடிகளுக்கு இவர்கள் செய்யும் மிகபெரிய துரோகமாகும்

  இன்று பிராமணன், சமஸ்கிருதம், இந்தியா, பாஜக என இந்த ஆதீனங்கள் அரசியலுக்காக மவுனம் காத்தால் பிரிதொரு நாளில் இவர்களுக்கே ஞானஸ்நானம் கொடுக்க இக்கோஷ்டி நிர்பந்திக்கும்பொழுதுதான் இதன் வீரியம் அவர்களுக்கு தெரியும்

  மடாதிபதிகளின் அமைதியும் சந்தர்ப்பவாத சிந்தனையும் மிகபெரும் அதிர்ச்சியும் தலைகுனியசெய்யும் கொடுமைகளாகும்

  இந்த விவகாரத்தில் அகில இந்திய அளவில் இந்து எழுச்சியினை ஏற்படுத்துவதில் பாஜக தமிழக தலமை தடுமாறுகின்றது

  இங்கு இந்துக்களுக்கு எக்காலமும் மிரட்டல் உண்டு, முன்பு கன்னியாகுமரி மாவட்ட சர்ச்சைகளில் மண்டைக்காடு விவகாரம், விவேகானந்தர் பாறை விவகாரங்களில் கொதிநிலை வந்தபொழுது வடக்கே இருந்து வாஜ்பாய், விஸ்வ இந்து பரிஷத், இன்னும் பல சாதுக்கள் வந்து இங்கு பெரும் பலம் கொடுப்பார்கள்

  மீனாட்சிபுர சம்பவம் போன்றவற்றில் இதனை அழகாக காணலாம்

  ஆனால் இப்பொழுதெல்லாம் தமிழக இந்துக்களின் சிக்கல் வெறும் அரசியலும் வறட்டு கூச்சலுமாக தமிழகத்துக்குள்ளே முடக்கபடுகின்றது இது சரியான கோணம் அல்ல‌

  இங்கே கோவில் இடிபட்டாலோ இல்லை இந்துக்கள் மேல் பல கொடுமைகள் திணிக்கபட்டாலோ அகில இந்திய அளவில் அதை இந்துக்கள் சிக்கலாக மாற்றும்வரை இங்கு பல விவகாரங்களில் முடிவு தாமதமாகும், தமிழக பாஜக இதனை அரசியல் தாண்டி யோசிக்கவேண்டும்

  தமிழக மடாதிபதிகள் ஆதீனங்களின் கடும் மவுனத்தை சிவனிடம் முறையிடுவதை தவிர என்ன செய்யமுடியும்?

  அந்த செங்காட்டு தேசிகனே இவர்களின் கடமையினையும் காரியங்களையும் வாழ்வின் நோக்கங்களையும் அவர்களுக்கு உணர்த்தட்டும் அதை தவிர நாம் சிவலிங்கம் முன்னால் என்ன பிரார்த்திக்க‌ முடியும்?

 5. வேடிக்கை பார்க்கும் தமிழக ஊடகங்கள்? சிறப்பான “சம்பவம்” செய்த ஆங்கில ஊடகம் !

  தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை முன்வைத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பெண்ணின் சாவிற்கு நீதி கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன, இந்த சூழலில் தமிழக மக்களுக்காக சேனல் நடத்தும் தமிழக ஊடகங்கள் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் காத்து வருகின்றன.

  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கூட ஜாதி மதம் பார்த்துதான் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன எனவும், உயிரிழந்த பெண் சாகும் தருவாயில் தன்னை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்ட பிறகும் ஏன் தமிழக ஊடகங்கள் ஒப்பிற்கு கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை அழைத்து விவாதம் நடத்தவில்லை எனவும் எதற்காக இந்த பாரபட்சம் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

  இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் முன்னின்று செய்யவேண்டிய பணியை ஆங்கில ஊடகங்கள் செய்துவருகின்றன, ஆங்கில ஊடகமாக CNN news18, உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோரிடம் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, இதன் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

  மாணவியின் பெற்றோரிடமே மாணவியை மதம் மாற சொல்லுங்கள் அவளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் பேசியதாகவும் இதனை பெற்றோர் மறுக்கவே அதன் பிறகே மாணவியை பாத் ரூம் கிளீன் பண்ண சொல்வது, வேலைக்கார பெண்ணை போல் நடத்தியதாக பெற்றோர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

  தமிழக ஊடகங்கள் முன்னின்று நடத்த வேண்டிய பணியை ஆங்கில ஊடகங்கள் முன்னின்று செய்து இருப்பது தமிழகத்தில் ஊடகங்களின் நம்பிக்கை தன்மையையும் நடு நிலையையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *