குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், மதமாற்ற பிரச்சாரம் – இந்த இரண்டுமே கிறிஸ்தவ நிறுவனங்களில் நடக்கின்றனவா என்பதை ஒரு தமிழ் எழுத்தாளர் – அன்றைய தமிழ் எழுத்தாளர் – எனவே நேர்மையானவர் – இலக்கியத்தில் பதிவு செய்துள்ளார்.
1947ல் புதுமைப்பித்தன் எழுதிய அவதாரம் என்கிற சிறுகதையிலிருந்து:
”… கோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது. … “
”… பையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன.
இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான். …”
1947 இல் பாளையங்கோட்டையை களமாகக் கொண்டு எழுதப்பட்டது.
இன்றைக்கு பிரான்ஸில் மட்டும் 1950 இலிருந்து 2018 வரைக்குமான காலகட்டத்தில் 2,16,000 குழந்தைகள் பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டதை பட்டியலிடுகிறது. கத்தோலிக்க சபையில் ஊழியம் செய்யும் பாதிரியல்லாத கத்தோலிக்க ஊழியரால் 1, 14,000 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கட்டனராம். இதைப் போல 2008க்கு பிறகு பத்து ஆவணங்கள் பல மேற்கத்திய நாடுகளில் (ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) வந்துவிட்டன. பிரான்ஸில் இந்த விசாரணையை மேற்கொண்ட நீதிபதி (ஓய்வு) சொல்கிறார்: பிரான்ஸின் இந்த எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவானது.”
புதுமைப்பித்தன் இப்படி ஒரு விசயத்தை கற்பனையாக எழுதியிருப்பாரா? நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட அற்பத்தனம் அவரிடம் கிடையாது. அப்படியென்றால்?
சிறிது யோசியுங்கள்.
ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் காட்டிலும் அதிகமான நிறுவனரீதியான குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியாவில் காலனிய காலகட்டம் தொட்டே நடந்து கொண்டிருக்கலாம்.
குழந்தைகளை
என்னிடம்
வரவிடுங்கள் என்றார்
அவர்.
அதன் பிறகு
நடந்ததென்ன என்கிற
அந்த குழந்தைகள்
தரப்பை
சொல்ல
நற்செய்தியறிவிப்பவன்
எவனுக்கும்
அக்கறை இல்லை.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)