கோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]

உன் கோதண்டம் ஊன்றிய நிலத்தில்
சிக்கியது சிறு தேரை

அந்த வில் கொண்டு நீ காத்த தர்மங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல

அதன் நாண் ஒலி
சங்கொலிபோல் ஆறுதல் தரும் பக்தர்களுக்கு

அதன் பொன்னிற பூண்கள்போல்
மின்னுபவை உலகில் இல்லை

அதன் அம்புகள்
ஒருபோதும் வீழ்ந்ததில்லை இலக்கடையாமல்

உன் கீர்த்தியோ அதனினும் பெரிது

உன் தர்ம யுத்தத்துக்கு சிறு கல் தூக்கிய உயிருக்கும்
ஆறுதலாய் உன் கை அடையாளம் தந்தாய்
உன் காலடி பணிந்தோரைத்
தோள் தொட்டு அணைக்கிறாய்
பகைவனுக்கும் அருளும் நன் நெஞ்சினன் நீ

தெரியாமல்தான் ஊன்றியிருப்பாய்
தேரை வந்து குதித்த சிறு நிலத்தில்
உன் கருணை மிகு கோதண்டத்தை

எறியப்பட்ட கற்களில் இருந்து தப்பிப்பதே
சிறு தேரையின் இலக்காகவும் இருந்தது

நீயும் தவறு செய்யவில்லை
தேரையும் தவறு செய்யவில்லை
ஆனால் அதன்மென்னுடல் மேல் அழுந்திப் பதிகிறது
உன் அளவுக்கு உயரமான உன் வில்

வானுயர்ந்து நிற்கும் பரந்தாமா
இருளை விரட்டும் சூரியன் போல்
துன்பங்களை விரட்டி ஒளிர்கிறது உன் முகம்
(தேரையின் மேல் தோல் மெள்ளக் கிழிகிறது)

வறண்ட நிலத்தில் பொழியும் நீர்த்தாரைகள் போல்
தேமதுர மொழிகள் கசிகின்றன உன் இதழிலிருந்து
(தேரையின் மென் சதைக்குள் ஊடுருவுகிறது
உன் வில்லின் கூர் நுனி)

ஆளுகைக்குட்பட்ட நிலத்தையெல்லாம் ஆசிர்வதிக்கிறது
உன் அபயக் கரம்
(தேரையின் ரத்த நாளத்தினுள் நீள்கிறது கூர் நுனி)

வீசும் தென்றலில் மென் மணியென இசைக்கிறது
பொன் வில்லின் குமிழ் சலங்கை
(தேரையின் இதயம் நோக்கி நெருங்குகிறது உன் வில்)

ஸ்வ தர்ம பரிபாலனத்தை விதிக்கிறாய்
உலகத்து உயிர்களுக்கெல்லாம்
கல்லினுள் தேரைக்கும் உணவுண்டு என்கிறாய்
கன்ணீர் துளிகளுக்கே இடமில்லை என்கிறாய்

ராம ராஜ்ஜிய முழக்கங்கள் கேட்டு
நாட்டாரின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது

மற்றவரால் துயர் என்றால் உன்னை அழைக்கலாம்
உன்னால் ஒரு துயர் என்றால்..?

முடிவற்று நீள்கிறது உன் அரசியல் சாசன அருளுரை

தேரையின் உடல் ஊடுருவி
கோதண்டம் தரை தொடும் நிமிடம்
உனக்கு உரைக்கக்கூடும்
அது அழுந்தப் பதிந்தது அதன் ஆன்மாவில் என்பது

அதிர்ந்து நீ குனிந்து பார்க்கும்போது
உன கருணைக் கண்களுக்குத் தெரியக்கூடும்
அதன் இறுதிக் கை கூப்பல்

உன் காதுக்குக் கேட்கக்கூடும்
அதன் இறுதி இதயத் துடிப்பு

சிறு தேரைக்கு இறப்பது கூட வருத்தமாயிருக்காது
உன் காலருகில்
உன் கோதண்டத்தால் கொல்லப்படுமென்றால்
அது அதன் பாக்கியமே

கைவிட்ட தருணங்களை மட்டுமல்ல
நீ காப்பாற்றிய தருணங்களையும் சேர்த்தேதானே
கணிக்கவேண்டும் உன் கருணையை

ஆனால்,
ஒரு பாவமும் அறியா
சிறு தேரையைக் கொன்ற பாவம்
உனை வந்து பீடிக்குமே ராமா…
அதற்காகவேணும் அரை நொடி
அருள்கூர்ந்து பார் அங்கு

மெள்ள உயர்ந்த
அண்ணலின் கோதண்டம்
அந்தரத்தில் மிதக்கிறது சிறிது நேரம்
முடிவற்று நீள்கிறது காலத்தின் ஒரு துளி

மீண்டும் இறங்குகிறது அண்ணலின் கை வில்

இம்முறை உடல் நெளிந்த தேரையின்
மென் தோல் வழுக்கி
கோதண்டம் நிலம் ஊன்றிய நொடியில்
கொப்பளிக்கிறது நன்நீரூற்று
ஜலகண்டபுரத்து நீரோடையில்
மூழ்கித் திளைக்கிறது சிறு தேரை

கரம் கூப்பிய்படி
நீருக்குள் இருந்தே நிமிர்ந்து பார்க்கிறது
மென் அலையில்
சிறு புன்னகையுடன் மிளிரும்
தன் தெய்வத்தின் திரு உருவை

அதன் பின் நீந்திச் செல்கிறது
எல்லையற்ற பாற்கடலில்
பாம்பணையில் மிதக்கும் பரந்தாமனின்
பாதாரவிந்தங்கள் நோக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *