ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை

சென்ற வாரம் முழுவதும் மகள்களுக்கு தேர்வுகள் இருந்ததால் ஞாயிறு மாலை தான் ராக்கெட்ரி: நம்பி விளைவு (தமிழ்) திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்தோம். அரங்கை விட்டு வெளியே வந்தவுடன் நான் செய்த முதல் வேலை imdb தளம் சென்று 10/10 கொடுத்தது.

ஒரு திரைக்கலைஞராக வாழ்ந்து வருவதன் ஜன்ப சாபல்யத்தை மாதவன் அடைந்து விட்டதற்கு இந்த ஒரு படமே போதும் என்று சொன்னால் கூட மிகையில்லை. அப்படிப்பட்டது இந்தத் திரைப்படத்தின் உண்மையான மதிப்பு. ஒரு சராசரி திரைப்பட ரசிகரை மட்டுமல்லாது, இஸ்ரோவையும், விண்வெளித்துறையையும் பற்றிய பல செய்திகளை அறிந்து, நம்பி நாராயணன் எழுதிய Ready to Fire புத்தகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களையும் கூட “வாவ்” சொல்ல வைத்திருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய வெற்றி. எனக்குத் தெரிந்த வரையில், ஒரு இந்திய அறிவியலாளரைப் பற்றி மிகச்சிறப்பாக எடுக்கப் பட்ட முதன்முதல் இந்திய சினிமா என்றே இதை சொல்வேன் (ராமானுஜனைக் குறித்த Man who knew Infinity அபாரமான திரைப்படம் தான், ஆனால் இந்தியத் தயாரிப்பு அல்ல). முயன்றால் இந்திய சினிமா தனது கைக்கு அடக்கமான பட்ஜெட்டிலும் எத்தகைய வீச்சை, உயரத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது.

இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். நடிகர்கள், காட்சி வடிவமைப்பாளர்கள், அனிமேஷன் கலைஞர்கள் அனைவரின் பங்களிப்புமே குறிப்பிடத் தக்கதாக இருந்தது. தனிப்பட்ட அளவில் மாதவனின் மிகப்பெரிய சாதனை இது. தொழில்நுட்ப பின்னணி கொண்ட நடிகர் என்ற பின்புலத்துடன், உண்மை சம்பவங்களாலான ஒரு சுவாரஸ்யமான சப்ஜெக்டுக்கு திரைக்கதை எழுத ஆரம்பித்து, அதில் ஒன்றிப்போய், அதன் நாயகனான நிஜ மனிதருடன் உணர்வுபூர்வமான ஒரு தொடர்பையும் பந்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டு, இயக்குனராக ஆவதற்கான எந்தத் திட்டமும் இல்லாத நிலையிலும் முதல்முயற்சியாக அதில் குதித்து, தயாரிப்பிலும் ஒரு பங்கை நல்கி, இறுதியில் இத்தகைய ஒரு நேர்த்தியான திரைப்படத்தைத் தந்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமல்ல. இறுதிக் காட்சியில் மாதவனின் இடத்தில் நிஜ நம்பி நாராயணன் வந்து உட்காரும் தருணம், இதை ஒரு நல்ல திரைப்படம் என்பதற்கும் மேலான ஒரு இடத்திற்குக் கொண்டு சென்று விட்டது.

எங்கள் அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, சராசரி ரசிகனுக்கு புரியுமா ரீச் ஆகுமா போன்ற தமிழ் சினிமாக்காரர்களின் முக்கியமான “கவலைகள்” எதுவும் இல்லமல், பல காட்சிகளில் தீவிரமான தொழில்நுட்ப விஷயங்களை எங்களைப் போன்ற டெக்னிக்கல் மக்கள் சகஜமாக பேசுவது போலவே அமைத்தற்கு ஒரு கூடுதல் பாராட்டு. அதோடு, அறிவியலாளர்கள் என்றால் ஒரு கொம்பு வைத்துக் கொண்டவர்கள் போலவோ சிடுமூஞ்சிக்காரர்களாவோ காண்பிக்க வேண்டும் போன்ற தத்துப்பித்து சினிமாத் தனங்கள் இல்லாமல் இயல்பாகக் காண்பித்ததற்கு இன்னொரு கூடுதல் பாராட்டு.

உண்மையில் ஷாருக் கான், சூரியா போன்ற நட்சத்திர நடிகர்கள் இல்லாமலேயே கூட இந்தப் படம் அதற்கு உரித்தான பார்வையாளர்களை, வெற்றியைப் பெற்றிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதில் தோன்றியதன் மூலம் இந்தப் படத்தின் பெருமையில் தங்களுக்கும் ஒரு பங்கை அவர்கள் தேடிக் கொண்டார்கள். நட்சத்திர மோகத்தின் அடிப்படையிலேயே சினிமாவைப் பார்க்க முடிவெடுக்கும் ஒரு திரளிடம் இந்தப் படம் சென்றுசேரவும் அந்தப் பங்களிப்பு உதவக் கூடும். தேசத்திற்காகவே தன் அறிவையும் ரத்தத்தையும் ஒட்டுமொத்தமாக அளித்த ஒரு மனிதனை அவமதித்த, கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக தேசத்தின் சார்பாக மன்னிப்புக் கேட்கும் காட்சியில் சூரியா நன்றாகவே நடித்தார். கட்டாயம் ஷாருக்கானும் அவ்வாறே செய்திருப்பார். அவர்களது சில படங்கள் மூலமாக இதுவரை பரப்பப்பட்ட நுட்பமான இந்திய விரோத, தேச நலனுக்கு எதிரான பிரசாரங்களுக்கான ஒரு பிராயச்சித்தமாகவே கூட இதைக் கருதிக் கொள்ளலாம்.

தங்களது லோக்கல் திரைப்படத் துறையை போட்டியிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரு மலிவான உத்தியாக மொழிமாற்று படங்களையே முற்றிலுமாக தடைசெய்திருக்கும் கன்னட சினிமாக் காரர்கள் கூட, ஒரு விதிவிலக்காக இந்தப் படத்தின் கன்னட மொழி வடிவத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ராக்கெட்ரி: நம்பி விளைவு ஒவ்வொரு இந்திய இளைஞரும் பார்த்து உள்வாங்க வேண்டிய ஒரு திரைப்படம். இதன் வெற்றி மேன்மேலும் இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் வர வழிவகுக்கும் என்று நம்புவோம்.


ராக்கெட்ரி திரைப்படத்தின் முக்கியத்துவத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இதையெல்லாம் வெளிப்படையாகக் காண்பிப்பது இன்றைய தலைமுறையினரிடம் தேசத்தை, அரசாங்கத்தைக் குறித்த எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தாதா? – இந்த “அக்கறையான” கேள்வியை சிலர் கேட்கின்றனர்.

முதல் விஷயம், படத்தின் காட்சிகளையும் வசனங்களையும் இந்திய சென்சார் குழு முழுமையாக பரிசீலனை செய்தபின்பு தான் படம் வெளிவந்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அடுத்து, முக்கியமான சம்பவங்களின் வருடங்களும் இடப்பெயர்களும் தெளிவாக படத்தில் காட்டப் படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் நிலை, உலக அரசியல் கொந்தளிப்புகள், கேரள மாநில அரசியல் முதலான விஷயங்களைப் பற்றிய எந்த வரலாற்றுப் புரிதலும் இல்லாத இன்றைய இளைஞர்கள் கூட அவற்றை ஊகித்துத் தொடர்புறுத்திக் கொள்ள உதவும் வகையில் நேர்த்தியாக படத்தின் கதையோட்டம் அமைந்துள்ளது. 1991-92 காலகட்டத்தில் சோவியத் ரஷ்யா சிதறுண்டு அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடையும் காலகட்டத்தில் தான் இந்தியா ரஷ்யாவிடம் கிரயோஜெனிக் இஞ்சின்கள் வாங்கும் ஒப்பந்தத்தை செய்கிறது. இஞ்சின்களின் முதல்கட்ட உதிரி பாகங்களைக் கொண்டுவந்ததன் சாகசம் படத்தில் அருமையாகக் காண்பிக்கப் பட்டுள்ளது. அப்போதைய இஸ்ரோவின் மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் தாரகையாகவும் இருந்த நம்பி நாராயணன் மீதான பொய்யான தேச துரோக குற்றச்சாட்டு, சிறையில் அவருக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்தது 1994ல். அப்போது கேரளத்தின் காங்கிரஸ் முதல்வராக இருந்த கருணாகரனைக் கவிழ்க்க கட்சிக்குள்ளேயே நடந்த சதிவேலையின் ஒரு பகுதியாக நம்பி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது மாநில காவல் துறையின் அராஜகங்கள், பொதுஜன அளவில் அவர் மீது பரப்பப்பட்ட வெறுப்பு எல்லாம் நடந்தேறியது என்பதும் முக்கியமான கோணம்.

அந்தக் காலகட்டத்தில் தான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்து கொண்டிருந்தன. இன்டர்நெட்டும் சமூக ஊடகங்களும் எல்லாம் இல்லை. அன்றைய இந்தியாவில் வெகுஜன பரப்புரையை கேள்வி கேட்பதற்கான இடமோ, மாற்றுக் கருத்துக்கான வெளியோ எதுவும் இருக்கவில்லை என்பது தான் நிஜம். அத்தகைய சூழலில் தான் இந்திய அரசு அமைப்புக்குள் இருக்கும் விலைபோன சில கயவர்களும், அராஜக மாநில அரசு இயந்திரமும், அரசியல் சதிகாரர்களும் ஒரு புள்ளியில் இணைந்து நம்பி நாராயணன் போன்ற ஒரு பெருமதிப்புக்குரிய விஞ்ஞானியின் மீது அப்படி ஒரு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. 1996ல் தான் சிபி.ஐ தனது விசாரணையை முடித்து அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தது. பின்1998ம் ஆண்டு தான் உச்சநீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி என்று அறிவித்தது. மிக முக்கியமான வழக்குகளைக் கூட நீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கும் வரலாற்று “சிறப்பு” மிக்க இந்திய நீதித்துறையின் வரலாற்றில் அது ஒரு சாதனை தான். ஆனால், தான் நிரபராதி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று நம்பி நாராயணன் பிடிவாதமாக இருப்பதால் இன்று வரை அந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நம்பி நாராயணனைக் குறித்த உண்மைக்கதை ஒருபக்கம் விரக்தியையும் மறுபக்கம் நம்பிக்கையும் தரக்கூடியது என்பதனாலேயே முக்கியமான ஒன்றாகிறது. நம்பி நாராயணனைப் போல இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தனி ஒருவராக போராடி தனது நேர்மையையும் உண்மைத் தன்மையையும் நிலைநாட்டுவதற்கான மன வலிமை நாட்டில் எத்தனை பேரிடம் இருந்திருக்கும், இந்த ஜனநாயகத்தில் அவர்களது கதி என்ன என்பதைக் குறித்த சிந்தனைகள் எழுகின்றன. 2022ல் இது போன்ற அரசு அத்துமீறல்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவு குறைந்திருக்கின்றன என்பது நமக்கு உள்ள ஒரு பெரும் ஆசுவாசம். அத்தகைய பிரக்ஞை உருவாவதற்கு மேற்கூறிய “அரச பயங்கரவாத” வரலாற்றுச் சம்பவம் குறித்த உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

இஸ்ரோ அறிவியல் வல்லுனர்கள் பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வகத்திற்குச் சென்று “திருட்டுத் தனமாக” தொழில்நுட்பத்தை அபகரித்து வருவதாகக் காட்டப் படுவது நாட்டின் மீதுள்ள மதிப்பைக் குறைக்காதா என்று அடுத்து ஒரு ஆட்சேபம் எழுப்பப் படுகிறது. அடிப்படையில் “ராக்கெட்ரி”யும் ஒரு வணிகத் திரைப்படம் என்பதால் மிகுந்த நாடகத் தன்மையுடன் அந்த விஷயம் காண்பிக்கப் பட்டுள்ளது. மற்றபடி, சிக்கலான ராக்கெட் தொழில்நுட்பத்தை எல்லாம் அவ்வளவு எளிதாக “திருடி” விட முடியாது என்பதை உணரக்கூடிய குறைந்தபட்ச புரிதலை இந்தப் படம் அதன் பார்வையாளர்களிடம் எதிர்பார்க்கிறது. சிபிஐ அதிகாரியிடன் பேசும் இடத்தில் நம்பி நாராயணனே இதை விளக்குவதாகவும் ஒரு காட்சி படத்தில் உள்ளது. மற்றபடி, ராணுவம், விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்கள் எப்போதுவே உலகளவிலான வல்லரசு ஆதிக்கப் போட்டியுடனும், ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை எப்படியாவது உறுதி செய்துகொள்ளவேண்டும் என்ற விழைவுடனும் தொடர்பு கொண்டவை. அவற்றை தட்டையான சரி/தவறு பார்வைகளுடன் அணுக முடியாது.

இது உண்மைகளின் காலம், அரசியல் சரிநிலைகளின் (Political correctness) காலமல்ல. முஸ்லிம் ஆட்சிக்காலத்தில் கோயில்களை இடித்து இந்துக்களைப் படுகொலை செய்த உண்மைகள் முதல் 1970களின் எமர்ஜென்சி கால உண்மைகள், இன்றைய ஜிகாதி ஸ்லீப்பர் செல்கள் குறித்த உண்மைகள் வரை எந்த உண்மைகளையும் தணிக்கை செய்யவேண்டிய அவசியமோ அழுத்தங்களோ இல்லாத ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம். ராக்கெட்ரி இந்த யுகத்திற்காக எடுக்கப் பட்டுள்ள ஒரு திரைப்படம்.

4 Replies to “ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை”

 1. செல்லும் இடமெல்லாம் அம்மக்களின் அடிப்படை வழிபாட்டை அழித்து, அவர்களின் நம்பிக்கைகளை தகர்த்து, சில அறியாமைகளை பயன்படுத்தி , மாயைகளை புகுத்தி வளர்ந்தமதம் கிறிஸ்தவம்

  பவுத்தம் இந்துமதத்தில் இருந்து உருவாகி பின் இந்துமதத்துக்கு எதிராக வளர்ந்தபொழுது இந்துமதம் தன் கடல் போன்ற கரங்களால் வளைத்து கொண்டது, புத்தனை ஒரு அவதாரம் என சொல்லி அணைத்து கொண்டது இதனால் பின்னாளில் இந்துமதம் புத்தமதத்தை தன்னுள் ஏற்றுகொண்டது, புத்தமதம் எழுப்பிய சவாலை இந்துமதம் முறியடித்தது

  ஆனால் யூதமதம் தனக்கு எதிராக எழும்பிய கிறிஸ்துவத்தை அழகாக இதர இனம் மேல் தள்ளிவிட்டு தன்னை தற்காத்து கொண்டது, யூத மதத்தை இல்லாது செய்திருக்கவேண்டிய கிறிஸ்தவம் அதன் தந்திர வேலையில் திசைதிருப்பபட்டு உலகெல்லாம் பரவிற்று

  போப் கட்டுபாட்டில் கிறிஸ்தவம் இருந்தவரை அது தான் கால்வைத்த இடமெல்லாம் போப்பின் ஆட்சியினை நிறுவிற்று அது முழுக்க அரசியல் ஆனால் எல்லா கட்டுப்பாடும் போப் கையில்தான் இருந்தது

  அவர்களின் முகமூடியான பள்ளி, கல்லூரி இன்னும் மருத்துவமனை என எல்லாமும் போப்பின் அதிகாரத்திலே இருந்தது

  திராவிட கழகத்தை உடைத்த அண்ணாதுரை போல போப்பின் திருசபையினை உடைத்தான் மார்ட்டின் லுத்தர், அதன் பின் இன்றைய திராவிட கோஷ்டிகள் போல ஏகபட்டவை பெருகிவிட்டன‌

  அன்று போப்பின் சபையில் பாதிரி ஆவதற்கு 7 வருட படிப்பு இன்னும் பலவகை பயிற்சிகள் உண்டு, பைபிளை பற்றிய பெரும் அறிவு புகட்டபடும், கத்தோலிக்க பைபிள் அல்லாது ஹீப்ரு லத்தின் என பலவகை படிப்புக்கள் உண்டு, கட்டுபாடுகள் நிறைந்த விதிகளும் தேர்வுகளும் உண்டு

  ஆனால் பிரிவினை சபைகளில் அப்படி எதுவும் இல்லை, பைபிளை வாசிக்க தெரிந்தால் போதும் ஒரு மைக் கிடைத்தால் போதும், குறிப்பாக அழுது ஒப்பாரிவைக்க தெரிந்தால் போதும் மதபோதகராகிவிடலாம் குடும்பம் குட்டி என செட்டிலாகிவிடலாம்

  இப்படித்தான் போலி கிறிஸ்தவம் உலகெல்லாம் பெருகிற்று, இதனில் பலநாட்டு உளவுதுறைகளும் ஏராளமான நாடுகளில் சர்ச் நடத்த தொடங்கினார்கள், சர்ச் கட்டுகின்றோம் என தெரிவித்தால் வெளிநாட்டில் இருந்து பணம் கொட்டி கொடுக்கபடும்

  அவை உண்மையில் மேல்நாட்டு சர்ச் பணமா இல்லை முறைகேடான பணமா என தெரியாமல் கர்த்தரின் கிருபை என இங்கு வாரி இறைக்கபடும் அப்பாவி மக்கள் சிக்குவார்கள்

  இந்த உளவுதுறைகளின் பயிற்சி , சர்ச் என வைக்கபடும் இந்த செக் சரியான நேரத்தில் முன்னெடுக்கபடும் தேர்தல் இன்னும் நாட்டின் முக்கிய திட்டங்களெல்லாம் பாதிரிகள் மூலம் எதிர்க்கவைக்கபடும்

  சுருக்கமாக சொன்னால் ஒரு தேசத்தின் உள்ளே படையெடுக்காமல், பொருளாதார தடை செய்யாமல் அந்நாட்டை சீர்குலைக்க சர்ச்சுகள் மூலமும் அது மயக்கும் மக்கள் மூலமும் செய்து காட்டலாம், உலகெல்லாம் எத்தனையோ நாடுகளில் நடப்பவை இவை

  இதைத்தான் இம்மாதிரி மோசடிகளைத்தான் கேரளாவில் “டிரான்ஸ்” என படமாக எடுத்தார்கள், அதை தமிழுக்கு மாற்றிதருகின்றார் அன்பர் Prakash

  இப்படம் போலி சர்ச்சுகளால் அது ஆசைகாட்டி ஏமாற்றபடும் மக்களை, இந்நாடும் சமூகமும் சந்திக்கும் சிக்கல்களை ஆழமாக எடுத்து வைக்கின்றது

  கிறிஸ்தவம் எனும் பெயரில் என்னென்ன விபரீதமான சிந்தனையும் தொழிலும் பரப்பபடுகின்றது, அப்பாவி மக்களும் தேசமும் குலைக்கபடுகின்றார்கள் என்பதையும் இதன் விபரீதமான விளைவுகளையும் படம் சொல்கின்றது

  வரும் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகின்றது, மோசடி கிறிஸ்துவ கும்பலால் எவ்வளவு கொடும் பாதிப்புக்கள் உண்டு என்பதை படம்பார்த்து தெரிந்துகொள்ளலாம்

  மதமாற்ற ஆபத்தும், போலி கிறிஸ்தவ மேடைகளின் மோசடியும் தெரிந்து கொள்ள இப்படம் பேருதவி செய்யும் எனும் வகையில் அந்த கும்பல்களின் குறியான இந்துமக்களும் தேசாபிமானிகளும் படத்தினை பார்த்து ஆதரவு தெரிவித்தல் அவசியம்

  காரணம் அவர்களின் குறி இந்துசமூகம் மட்டும்தான் என்பது கவனிக்கதக்கது

  இந்த நடுநிலைவாதிகள், சமய சார்பற்றவர்கள், மத நல்லிணக்க கோஷ்டிகளும் இப்படத்தை பார்த்தல் நலம், அவர்களின் அறியாமை நிச்சயம் விலகும்

  புற்றீசல் போல் அல்ல, புற்றில் இருந்து பாம்புகுட்டிகளாய் வரும் இந்த சபைகள் எவ்வளவு ஆபத்தானது என்பது படத்தினை கண்டால் விளங்கும், எவ்வளவுக்கு மதசுதந்திரம் எனும் பெயரில் தேசம்தனக்கு தானே சூனியம் வைக்கின்றது என்பதும் புரியும், இவர்களை கட்டுபடுத்தி வைக்கவேண்டிய கட்டாயமும் தெரியவரும்

  15ம் தேதி வெளிவரும் அப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

 2. அதிபராக பதவி ஏற்றபின் முதல் முறையாக மேற்காசியா பக்கம் வருகின்றார் அமெரிக்க அதிபர் பிடன்

  அமெரிக்காவில் டிரம்பரும் இஸ்ரேலில் நேதன்யாகுவும் இருந்தவரை அமெரிக்க இஸ்ரேலிய உறவுகள் வலுவாய் இருந்தன, இஸ்ரேல் என்ன செய்தாலும் டிரம்பர் 1 படி மேலே போய் ஆதரித்தார் இன்னும் ஈரானை போட்டு சாத்த துடியாய் துடித்தார்கள் என அவர்கள் உறவு வலுவானது

  டிரம்பருக்கு பின் அமெரிக்கா இஸ்ரேலுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, ஈரானை நொறுக்காதது ஏமனில் தீவிரவாதிகளை மன்னித்தது என பிடன் மேல் இஸ்ரேலுக்கு கடும் ஆத்திரமூட்டும் சம்பவங்களை பிடன் செய்தார்

  இந்நிலையில் சில கணக்குகளோடு இஸ்ரேல் வருகின்றார் பிடன், முன்பு ஜெருசலேம் இஸ்ரேலுக்கு என ஒரே போடாக போட்டிருந்தார் டிரம்ப், பிடன் அதை கலைப்பாரோ எனும் அச்சத்துடன் அவரை வரவேற்கின்றது இஸ்ரேல்

  அப்படியே பாலஸ்தீனதரப்பையும் சந்திக்கின்றார் பிடன், சுயாதீன பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸையும் அவர் சந்தித்து பேசுவார்

  இதை தொடர்ந்து பல பயணங்கள் அங்கே நடக்க இருக்கின்றன‌

  ரஷ்ய எண்ணெய் ஐரோப்பாவுக்கு நின்றுவிட்ட நிலையில் ஏதோ பல காரணங்களுக்காக அப்பக்கம் வருகின்றார் பிடன், என்னென்ன பேசுவார் என்பது இனிதான் தெரியும்

 3. நேற்று அமெரிக்காவின் நாசா புதிய பிரபஞ்ச படங்களை வெளியிட்டுள்ளது, இதுவரை ஒரே ஒரு அண்டத்தை அதாவது பால்வெளி எனும் ஒரே ஒரு அண்டத்தை மட்டும் வெளியிட்ட நாசா இப்பொழுது சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை படத்தை வெளியிட்டுள்ளது

  தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் ஒரு தொலைநோக்கியினை நிறுத்தி 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை எடுத்துள்ளது மானிட விஞ்ஞானம்

  இது 1960களில் அவர்கள் சொன்ன விஞ்ஞான கருத்தை மாற்றுகின்றது, முதலில் பால்வெளி அல்லது ஆகாய கங்கை என்றொரு அண்டத்தை மட்டும் சொன்னவர்கள் இப்பொழுது கூடுதல் அண்டம் உண்டு என்கின்றார்கள்

  இதை என்றோ சொன்னமதம்

  1008 ஜீவ அண்டம் என என்றோ சொன்னவர்கள் இந்துக்கள், இன்னொரு பூமி என்றோ இன்னொரு கிரகம் என்றோ கூட சொல்லாமல் அன்றே 1008 ஜீவ அண்டம் என்றார்கள்

  ஜீவ அண்டம் என்றால் உயிர்கள் வாழ தகுதியான அண்டம், இது போக இன்னும் சூட்சுமமாக ஏகபட்ட அண்டம் உண்டு என சொன்னது இந்துமதம்

  கண்ணனின் விஸ்வரூப தரிசனம் என்பதும் சிவனின் விஸ்வேஸ்வர தரிசனம் என்பதும் இந்த பிரமாண்ட பிரபஞ்ச வடிவமே, காசி விஸ்வநாதன் என்பது விஸ்வ எனும் பெரும் வடிவத்தின் பெயரே

  நாசா வெளியிட்ட படங்களை காணும் பொழுது, பாசுரங்களின் வரி நினைவுக்கு வருகின்றது

  “பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்” எனும் வரி அது

  அப்படியே சூரபத்மனும் இதர அசுரர்களும் அண்டம் தாண்டி சென்ற காட்சியும் நினைவுக்கு வருகின்றது

  இந்த அண்டங்களெல்லாம் நிரந்தரமாக இருப்பவை அல்ல, அவை நாசாவின் படத்தில் நிலையானதாக தோன்றலாமே தவிர எல்லாமே சுழன்று கொண்டிருப்பவை, எல்லாமே அசைபவை

  அந்த அசைவுதான் நடராஜரின் நடனமாக இந்துக்களால் சொல்லபடுகின்றது

  அந்த வெளிச்சமும் இருளும் ஒரு கருநீல நிறத்தை பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் அதைத்தான் “கண்ணன் மேனி கரு நீலம்” என்றார்கள், சிவன் விஷத்தை உண்டதால் மேனி நீலமாயிற்று என்றார்கள், அன்னையின் மேனி நீலம் என்றும் அவளை நீலவேணி என்றும் அழைத்தார்கள்

  படம் திருமூலரின் பாடல்களையும் நினைவுறுத்துகின்றது, இம்மாதிரியான பாடல்கள் நினைவுக்கு வருகின்றது

  “நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
  நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
  நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
  நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

  காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
  நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
  பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
  ஆரண மாய்உல காயமர்ந் தானே ”

  இந்துக்கள் என்றோ சொன்ன பெரும் மண்டபத்தின் ஒரு படியில் கால் வைத்திருக்கின்றது விஞ்ஞானம், எல்லா படிகளையும் கடந்து அந்த பிரமாண்ட மண்டத்தை அளந்து முடித்திருக்கும் இந்துமதம் விஞ்ஞானத்தை நோக்கி சிரிக்கின்றது

  இன்னும் பல நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் இன்னும் வளரலாம், வளர்ந்து இந்த பிரபஞ்சத்தை ஓரளவு அறியும்பொழுதே அது இந்துமதத்திடம் முழுக்க சரணடையும்

  பிரபஞ்சத்தில் பால்போல் தெரியும் அந்த அண்டத்தை நோக்கும் பொழுது “திருபாற்கடலில் பள்ளி கொண்டாயே” எனும் வரி காதோரம் ஒலிக்கின்றது

  ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் மின்னும்பொழுது ஆதிஷேஷனுக்கு ஆயிரம் தலைகள் உண்டு அவற்றில் மாணிக்கமும் வைரமும் மின்னும் என இந்துக்கள் சொன்னதும் அது சரியாக இங்கு பொருந்துவதும் ஆச்சரியமானது

  இந்துக்களின் ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை முழுமையானவை என்பதை எண்ணும்பொழுது ஆச்சரியம் மேலிடத்தான் செய்கின்றது

 4. அமைச்சர் பொன்முடி கல்லூரி மாணவர்களிடம் அரசியல் பரப்புகின்றார்கள் என அங்கலாய்ப்பது புட்டீன் வன்முறை கூடாது, காந்திவழிதான் சிறந்தது என சொல்வதற்கு சமம்

  தமிழக கல்வி நிலையங்களும் கல்லூரிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த காலம் ஒன்று உண்டு, பின்னாளில் திமுகவின் அண்ணாதுரையும் அன்பழகனும் கருணாநிதியும் இன்னும் திராவிட தளகர்த்ததர்களும் அங்கு உரையாற்ற புகுந்தபின் காட்சிகள் மாறின‌

  அதுவரை தேசியவாதிகள், திருவிக போன்ற அறிஞர்கள், கிவா ஜகநாதன் போன்ற மேதைகள்தான் கல்லூரிகளுக்கு பேச அழைக்கபட்டார்கள்

  இந்த திமுக கும்பலை தமிழறிஞர் என முத்திரையிட்டு பேச அழைத்தவை முதலில் கிறிஸ்தவ கல்லூரிகள் பின் மெல்ல மெல்ல அது எல்லா கல்லூரிக்கும் பரவிற்று

  தமிழ் எனும் பெயரில் தேசவிரோதத்தையும் பகுத்தறிவு எனும் பெயரில் இந்துவிரோதத்தையும் மெல்ல மெல்ல சொருகினார்கள், அண்ணா என்பவர் இவ்வகையில் செய்த விஷம் எல்லாம் கொஞ்சமல்ல‌

  இதுதான் அவர்களுக்கு இந்தி எதிர்ப்பு கலவரத்தில் கைகொடுத்தது

  1965களில் இந்தியா பாகிஸ்தானுடன் கடுமையாக மோதிகொண்டிருந்த காலத்தில், போரின் விளைவாக கொடும்பஞ்சம் நிலவிய காலத்தில் தேசபற்றோ தேசாபிமானமோ இல்லாமல் இந்தி எதிர்ப்பு கலவரங்களுக்கு மாணவர்களை அழைப்பது திமுகவுக்கு எளிதாயிற்று

  அதன் பின் ஆட்சி திராவிடகழகங்களிடம் சென்று கல்லூரி படிப்புகளிலும் பாடங்களிலும் எவ்வளவோ திரிபுகள் நடந்ததும், குப்பை இலக்கியங்களில் ஆராய்ச்சியும்., தேசவிரோதியும் இந்துவிரோதியும் பெரும் சிந்தனையாளர் போல் சித்தரித்த கொடுமை எல்லாம் நடந்தது

  பல்கலைகழகங்களின் நிலை பரிதாபமாய் ஆனதற்கு திமுக செய்துவைத்த கொடுமைகள் கொஞ்சமல்ல‌

  அப்படிபட்ட தமிழகத்தில் இப்பொழுது ஆளுநர் பேசுகின்றார், அவரின் பேச்சில் கூட துளியும் மதவாதமில்லை கட்சிவாதமில்லை மாறாக நாட்டுபற்று ஒன்றையே பேசுகின்றார்

  அவரின் பேச்சு முழுக்க மாணவர்கள் நாட்டுபற்றாளர்களாக வளரவேண்டும், படித்து நாட்டுக்கும் மக்களுக்கும் தேசியவாதிகளாக பயன்படவேண்டும் என்பதாகத்தான் இருக்கின்றது

  ஒருகாலத்தில் அல்ல எக்காலத்திலுமே திராவிடம் தமிழ் என பிரிவினைவாதம் பேசியது போல ஆளுநர் பேசவில்லை சரியாக பேசுகின்றார்

  அப்படிபட்ட நிலையில் ஆளுநர் பொன்முடி மதுரை பல்கலைகழக விழாவினை புறக்கணித்திருக்கின்றார் அதற்கு அவர் சொல்லும் காரணம் நகைசுவையானது

  கல்லூரிவிழாவுக்கு “சிந்தனையாளர்களை அழைக்காமல் நடக்கும் விழாவுக்கு” வரமாட்டேன் என்கின்றார்

  கொஞ்சகாலம் பின்னோக்கி சென்றால் “அப்துல் கலாம்” எனும் அருமையான விஞ்ஞானியும் தீர்க்கதரியும் ஜனாதிபதியாக இருந்தார், அவரை திமுக மேடைகளில் யாரேனும் பார்த்ததுண்டா

  இன்னும் அணு விஞ்ஞானி சிதம்பரம், ராக்கேஷ் சர்மா, என எத்தனையோ சாதனையாளர்கள் உண்டு, அவர்களை இவர்கள் அழைத்ததுண்டா?

  பெண் உரிமை என முழங்குவோர் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி டெசி தாமஸையோ இல்லை அடையார் புற்றுநோய் கழக தலைவர் சாந்தாவினையோ எந்த பல்கலைகழகத்துக்காவது அழைத்ததுண்டா?

  திமுக வரலாற்றில் ஒரு சிந்தனையாளர்களை அவர்கள் அழைத்து வந்து மாணவர்களிடம் பேசவைத்ததுண்டா? ஒரு காலமும் இல்லை

  அப்படிபட்ட திமுகவின் பொன்முடி அவர்கள் நீலிகண்ணீர் வடிப்பதெல்லாம் சிரிக்க வைக்கும் காமெடி அன்றி வேறல்ல‌

  திமுக விரும்பினால் தேசிய அளவில் புகழ்பெற்ற சிந்தனையாளர்களை அழைக்கட்டும், தேசிய உணர்வும் நாட்டுபற்றும் கொண்ட ராணுவ அதிகாரிகள் முதல் எவ்வளவோ பெரும் பிம்பங்களை அழைக்கட்டும் ஆளுநரே அழைத்துவருவார்

  நிச்சயம் திமுக உருவாக்கிய ஒரு சிந்தனையாளரும் இல்லை ஆ.ராசா, வை.கோ போன்றோரைத்தான் அவர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் அவ்வகையில் அவர்கள் நிலை பரிதாபமானது

  அதனால் சிந்தனையாளர்களுக்கு அங்கு தட்டுப்பாடு என்பதால் ஆளுநரிடம் முறைபடி கோரினால் அவர் நல்ல சிந்தனையாளார்களை கொண்டுவருவார், அமைச்சர் அதை முயற்சிக்கலாம்

  இந்த காமெடியெல்லாம் பார்க்கும் பொழுது எம்.ஜி ராமசந்திரனின் கல்லூரி விஜயம் நினைவுக்கு வருகின்றது

  அப்பொழுதும் கல்லூரிகளில் திமுக அரசியல் செய்துகொண்டிருந்தது, இலக்கியம் தமிழ் என புகுந்து வகையாக அரசியல் பேசினார்கள்

  ராமசந்திரன் இதையெல்லாம் கவனித்தார், தானும் ஒரு கல்லூரி கூட்டத்தில் பேசினார், அவர் மணிகணக்கில் இலக்கியம் என பொய் பேசவில்லை மறைமுக அரசியல் பேசவில்லை 4 வரியில் நச்சென சொன்னார்

  “மாணவர்களே, இன்று நான் மாகாண முதல்வர், எனக்கு இந்தியா முழுக்க செல்வாக்கு உண்டு, இந்திராகாந்தியிடம் எப்பொழுதும் பேசலாம், உலக நாடுகள் எங்கும் நான் சென்று வரலாம்

  என் வீட்டில் தினமும் 2000 பேருக்கு மேல் நான் உணவளிக்கின்றேன், எவ்வளவோ பெரிய மனிதர்கள் எனக்காக காத்திருக்கின்றார்கள்

  இப்படி எனக்கு எல்லாமும் இருந்தும் என்னிடம் இல்லாதது படிப்பு, ஆம் அதை இனி என்னால் வாங்கவே முடியாது

  உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது, நன்றாக வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள மாணவர்களாக நீங்கள் வரவேண்டும், இந்திய எதிர்காலம் உங்களிடம்தான் இருக்கின்றது”

  காலம் கடந்தும் அந்த மனிதன் பெரும் பெயரோடும் தீரா புகழோடும் நிற்கின்றார் என்றால் இதுதான் காரணம்

  திமுக அமைச்சர் பொன்முடி வேறு நல்ல காரணங்களை தேடுவது நல்லது, தனக்கு கொரோனா, அல்சைமர், காதுவலி, பல்வலி, இல்லை தும்மினாலே பரவும் விஷநோய் என எதையாவது சொல்லலாம், அடுத்த விழாவிற்கு செல்லாமல் இருக்க இம்மாதிரி தகுந்த காரணங்களை சொல்வார் என எதிர்பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *