புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் சிவராம் காரந்த் எழுதிய ‘சோமன துடி’ நாவல் ஒரு வீழ்ச்சியின் குறியீடு. ஆனால் இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் சமீபத்திய திரைப்படமான ‘காந்தாரா’ (Kantara) ஒரு எழுச்சியின் குறியீடு.
ஒரு சிறு நிலத்தை பெற்று உழவு செய்ய வேண்டுமென நினைக்கும் பண்ணையடிமை சோமனுக்கு கிடைத்ததெல்லாம் தோல்வியுறு தருணங்கள் மட்டுமே.இதில் மதமாற்ற ஆசை காட்டப்படும் போதெல்லாம் அங்கே போனால் மட்டும் என்ன நடந்துவிட போகிறது? எல்லோருக்கும் நோவு வரும்,சாவு வரும் அதை இருந்தபடியே அனுபவிப்போம் என்று நினைக்கிறான் சோமன்.
இதை விட பல நூற்றாண்டுகளாக வழிபட்ட ‘பஞ்சுருலி’ தெய்வத்தை விட்டுவிட்டு எப்படி மதம் மாறுவது, அதனுடைய கோவத்திற்கு யார் ஆளாவது என்ற எண்ணமே அவனை அமைதிகொள்ள வைக்கிறது..
‘பஞ்சுருலி’ தெய்வத்தின் மீது துளு மக்களுக்கு இருக்கும் ஆழமான பிடிப்பு என்னவென்பதை ‘சோமனத்துடி’ தொடங்கி ‘காந்தாரா’ வரை பார்க்கிறோம். பஞ்சுருலி என்ற வராஹ தெய்வம் இந்த நவீன ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வதாகவே நான் புரிந்துகொள்கிறேன்..
தமிழில் ‘கர்ணன்’ என்ற திரைப்படம் தன் காழ்ப்பை நீக்கியிருந்தால்,அதன் வன்மத்தை மட்டுப்படுத்தியிருந்தால் காந்தாராவின் உள்ளுறை செம்மையை பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.கர்ணன் இந்த உலகத்தை எதிர்பக்கம் நிறுத்தி தன்னை சார்ந்தவர்களை ஒரு பக்கம் நிறுத்துகிறது.ஆனால் ‘காந்தாரா’ தெய்வத்தையும்,சகோதர சக்தியாக அரசை வர்ணித்து அதை தன் பக்கம் வைத்து,தீய சக்திகளின் துரோகத்தை எதிரே வைக்கிறது.
‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.தன் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை அது வேரோடு அழிக்கிறது.அதற்கு ஊடகங்களாக தன் மக்களில் ஒருவனையே பயன்படுத்துகிறது.
இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.
யார் தங்களை ஆள வேண்டும்,தங்களை பாதுகாக்க வேண்டுமென ‘பஞ்சுருலி’ தெய்வம் முடிவெடுக்கும் மாயத்தருணம் இறுதியில் வருகிறது.
இந்த மண்ணின் தெய்வங்களின் குரலை கேட்க விரும்பாத காலனித்துவ பார்வை கொண்ட அரசுகளும்,அதன் சட்டங்களும் இங்கே மக்களை ஆண்டால் நிம்மதி என்றும் கிடைக்காது.அந்த தெய்வங்களை புரிந்துகொள்ளும் அதிகாரத்துவமே,மக்களின் வாழ்வியல் அறத்தை உணர்ந்தது என போதிக்கிறது ‘காந்தாரா..நிற்க.
காந்தாராவில் அந்த மன்னன் பஞ்சுருலியிடம் கேட்டுப் பெரும் நிம்மதியை நம்மாலும் அடைய முடிகிறது.இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத்தன்மையை உணர முடிகிறது.அதனுடைய இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
இந்த நிலத்தின் மீதான அதிகாரம்,செல்வத்தின் மீதான தன் ராஜ்ஜிய இருப்பு ஆகிய இவற்றில் இல்லை தன்னுடைய ‘நிம்மதி’ என்று தேடி அலைந்து,’தாயை போன்ற அரவணைப்பையும்,தாய்மாமனைப் போன்ற பாதுகாப்பையும்’ தரும் தெய்வமான பஞ்சுருலியின் முன்னால் தன் வீரவாளை சரண் செய்யும் அரசன் இன்னும் கண் முன்னாலயே நிற்கிறான்..
எதை வேண்டுமானாலும் தருகிறேன் இந்த தெய்வத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்கிறான் அரசன்.எதை இழந்தாலும்,தங்களுடைய வேரான நம்பிக்கைகளை இழக்க விரும்பாத மக்கள் ‘பஞ்சுர்லி’ தெய்வத்தை கொடுத்தால் நாங்கள் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை என்கிறார்கள்.
மக்களுக்கு வனத்தை கொடுத்து,வாழையடி வாழையாக தன் குலம் தழைக்க ‘பஞ்சுருலி’ தெய்வத்தை தன் நாட்டிற்குமென அழைத்து செல்லும் மன்னன்,பாரதத்தின் பெருமரபிற்கு அடையாளமாக நிற்கிறான்.
இங்கே பேரரசர்கள் தோன்றினார்கள்,சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் என கடற்கரை மணலை விட அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டேதான் இருந்தார்கள்..
கடல்சூழ்ந்த இப்பேருலகில் பாரதம் ஒரு புண்ணிய பூமி.அந்த அடைதற்கரிய பெருமை செல்வத்தாலோ,வீரத்தினாலோ நிலைத்த பதமல்ல.பாரதத்தின் வேர் வீடுபேற்றினை சிந்திக்கும் தர்மத்தில் ஒளிந்துள்ளது.அந்த தர்மம் இங்கே உயிர்களுக்குள் செந்தழல் போல வந்தெழுந்தபடியே உள்ளது.
சங்கபாடலான புறநானூற்றில் மூவேந்தரும் ஒருங்கே அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று ஔவையார் பாடலில் வெளிப்படும்.எது நித்தியமாக உங்ளோடு வருவது என ஔவை அவர்களுக்கு அறிவுரை கூறும் பாடலாக அது அமைந்திருக்கும்.
பரந்து விரிந்த தேசமோ,வென்று கருவூலம் சேர்த்த செல்வமோ துணை வராது.உங்களுடைய தர்மமும்,நீங்கள் செய்த நல்வினையும் மட்டுமேதான் துணை வரும் என்று அவர்களுக்கு தன் போதனையை தருகிறார்..
பாரதத்தின் எல்லா மூலையிலும் இந்தக் குரல் எல்லா காலத்திலும் ஒலித்தபடியேதான் உள்ளது.மேகத்திற்குள் நீரைப் போல மாறாத பேரரறம் ஒன்று இந்நிலத்தில் வியாபித்து நிற்கிறது.எல்லாவற்றிற்கும் ஆதியாய் அறிவித்துணர முடியாத அந்த அறமே நம்மை இயக்குகிறது.
பொருளியலால் வாழ்வை அணுக விரும்பாத அல்லது அதை உதறுவதை பெருமையாக நினைப்பதை போதிக்கும் தத்துவம் இங்கேதான் உள்ளது..
‘காந்தாரா’ படத்தை பார்த்து முடித்த பிறகு இப்போது வரை மனதில் மகாகவி பாரதி சொன்ன வரிகள்தான் வந்து விம்முகிறது.
“தெய்வம் ஹிந்துக்களின் மேல் கடைக்கண் செலுத்திவிட்டது.நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும் கல்லும்,செப்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலையில் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில்,மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதி முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மகா ஞானிகளும்,சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்..”