இந்து மதம் மீதும் இந்தியா மீதும் முன்வைக்கப்பட்டும் அவதூறுகளை எதிர்த்துப் போராடுவது என்பது ஒருவகையில் எந்தப் பலனையும் இன்றைய நிலையில் தரப்போவதில்லை.
இந்துக்களாகவும் இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கும் எளிய மக்களுக்கு இவை தொடர்பான எந்தவொரு விளக்கமும் பதிலும் தேவையே இல்லை.
இந்த எளிய மக்களில் இருந்து மதம் மாறுபவர்களும் அதனால் தேச விரோத சிந்தனையைப் பெறப்போகிறவர்களும் இந்தப் பதில்களினால் மனம் மாறப்போவதும் இல்லை. அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார உதவி, வேலை வாய்ப்பு, தொழில்வாய்ப்பு இவையே அவர்களை இந்து மதத்தில் நிறுத்திவைக்கும்.
இந்திய தேசியத்தின் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் ஒரு பாதிரியாரால் வாங்கித் தரப்பட்டு கிறிஸ்தவத்துக்கு வா என்று சொன்னால் இவர்கள் போய்விடத்தான் போகிறார்கள். வேலையையும் கடனுதவியையும் வாங்கிக் கொண்டு இந்தியா ஒழிக என்று கோஷம் போடவும் செய்வார்கள்.
அதிகாரவர்க்கத்தில் ஊடுருவியிருக்கும் இடதுசாரி, திராவிட, தமிழ் தேசிய க்ரிப்டோ குழுக்கள் இப்படியானவர்களுக்கு மட்டுமே அனைத்து அரசு திட்டங்களையும் கொண்டு சேர்க்கும்.
எனவே, நேர்மையான எளிய மனிதருக்கு இந்து மதம் தொடர்பாக எந்த பதிலும் விளக்கமும் சொல்லத் தேவையில்லை. நேர்மையற்ற எளிய மனிதருக்கு எந்த விளக்கம் சொன்னாலும் பலன் தரப்போவதில்லை. இந்துக்களின் இன்றைய துரதிஷ்ட நிலை இதுவே.
அடுத்ததாக, இப்படியான அவதூறுகள் மிகவும் தந்திரமாக முன்னெடுக்கப்படும். பொதுவாக தகுதியற்ற ஒருவர்தான் அதைச் சொல்வார். ஒரு சினிமா பிரபலமாக இருப்பார். ஆனால், அவர் வரலாற்று ஆய்வாளர் சொல்லவேண்டியதைச் சொல்வார். வேறொரு துறை சார்ந்த பிரபலமாக இருப்பார்; அவர் விஞ்ஞானி போல் பேசுவார். ஏதேனும் கட்சியில் பொறுப்பில் இருப்பார். ஆனால், இந்து மதத்தின் பண்டிதர் போல் அதிகாரபூர்வ வழிகாட்டி போல் பேசுவார்.
இது ஒருவகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களைப் போன்றது.
விளம்பரங்களில் வரும் நபர்கள் இந்த குளிர்பானமே சிறந்தது என்று ஆடிப் பாடுவார்கள். எழுதித் தரப்படும் பஞ்ச் டயலாக்கைப் பேசுவார்கள். அந்தப் பிரபலங்கள் லைம் லைட்டில் நீடித்து நிற்க இந்த விளம்பரங்கள் பெரிதும் உதவும். நல்ல காசும் கிடைக்கும்.
குளிர்பானம் நல்லதா… எப்படித் தயாரிக்கப்படுகிறது என்றெல்லாம் அந்த நடிகர்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
இது ஒரு பக்கமென்றால், இந்த சீயக்காய் பொடியை வாங்கித் தேய்க்கவில்லையென்றால் உங்களுக்கு நாசாவில் வேலை கிடைக்காமல் போய்விடும்; இந்த ரேஸரை உபயோகிக்கவில்லையென்றால் உங்களுக்குக் குழந்தையே பிறக்காது; இந்த சோப் உபயோகித்தால் நீங்கள் போராளியாகிவிடலாம் என்றெல்லாம் அறிவுபூர்வமாக சயிண்டிஃபிக்காக விளம்பரத்தில் அக்கறையோடு அறிவுரை சொல்வார்கள். பார்வையாளர்களின்/நுகர்வோரின் கவன ஈர்க்கவேண்டும் என்பது விளம்பரங்களின் அடிப்படைக் கோட்பாடு.
இந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கார்ப்பரேட் கம்பெனியின் விளம்பர நடிகர்கள் போன்றவர்கள். எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசி நடித்துவிட்டு காசு வாங்கிக் கொண்டு போய்கொண்டே இருப்பார்கள்.
இதில் ஜே.என்.யு., லயோலா போன்ற கல்வி மையங்கள், ஊடகங்கள் எல்லாம் இந்து விரோதம் கொண்டவர்களையே வளர்த்தெடுக்கும் என்பதால் இந்த விளம்பர நடிகர்களுக்கு கொள்கைப் பிடிப்பும் இருக்கும். நாம் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் உண்மையைப் பேசிவிடமாட்டார்கள். கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல் வேலை பார்க்காத கவுண்டமணியின் மாலைக்கண் வாரிசுகள் இவர்கள்.
இவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டிய ஒரே பதில்: உன் துறை சார்ந்து உனக்குத் தெரிந்ததை மட்டும் பேசு.
ஆனால், இப்படி நடப்பதில்லை. ஒட்டு மொத்த இந்து தரப்பும் பதறியடித்துக்கொண்டு பல்வேறுவிதமான பதில்களைச் சொல்லத் தொடங்குகிறது. பாஜக போன்ற இந்து ஆதரவு கட்சிகள் இது சார்ந்து களத்தில் இறக்கும்போது மட்டுமே ஓரளவுக்கு சரியான பதிலடி தரமுடியும். அவர்களுக்குப் பல வேலைகள், இலக்குகள் உண்டு என்பதால் அதற்கேற்பவே அவர்களுடைய எதிர்வினைகள் அமையும்.
நான் வால்ல தீ வைக்கப் போறேன். அலறியடிச்சுக்கிட்டு குறுக்க மறுக்க ஓடுவானுங்க பாருங்க… அவனுங்க எவ்வளவு கதி கலங்குவானுங்களோ அந்த அளவுக்கு எஜமான் எனக்குப் போட்டுக் கொடுங்க என்று பேசிவிட்டு அவதூறைச் செய்வான். ஆக, நாம் எந்த அளவுக்கு வீரமாக எதிர்வினை புரிகிறோமோ அந்த அளவுக்கு அவனுங்களுக்கு லாபம்.
பக்க எண் 21 பற்றி எதிர்த்தரப்பில் எந்தவொரு விளக்கமும் யாராலும் தரப்படவில்லை என்பதை இங்கு கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளவும். எதிர்க்க முடியாதவற்றை எதிர்க்கத் தேவையில்லாததுபோல் எதுவுமே நடக்காததுபோல் கடந்து செல்வதே சிறந்த எதிர்வினை.
அப்படியான ஒரு சொஃபிஸ்டிகேஷன் எதிரிகளுக்கு மட்டுமே இருக்கிறது. நமக்கு இல்லை. மேலேறிச் சென்று தாக்க முயற்சி செய்பவர்களைவிட மலைக் கோட்டையைக் கைப்பற்றியிருப்பவனுக்கு எப்போதுமே கூடுதல் சாதகம் தானே.
அடுத்ததாக, இந்துக்கள் மீதான அவதூறானது பொதுவாக மனு, ஆரியம், சம்ஸ்கிருதம், பிராமணியம் மீதான வெறுப்பாக மட்டுமே வெளிப்படும். ஜாதி பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் இந்த வகையிலேயே முன்வைக்கப்படும். இந்துக்களிலேயே பலரும் இதை நம்புவதால் இந்துத் தரப்பிலிருந்தே இதற்கு ஆதரவு அமோகமாகக் கிடைக்கும்.
திராவிட இயக்கத்தின் வெற்றிகரமான, தேய்வழக்குக் கொள்கை இது. தமிழகத்தில் நடக்கும் அனைத்து நல்லவற்றுக்கும் ஈ.வெ.ராவே காரணம்; எல்லா கெடுதலுக்கும் மனுவே காரணம் என்ற திருட்டு முட்டாள் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் இயக்கம் அது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்து மதம் மீதான வெறுப்பை மட்டுமே இவர்கள் கக்குவார்களே தவிர இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி நல்லதாக ஒரு வார்த்தை கூடச் சொல்லிவிடமாட்டார்கள். முதலில் அவற்றைத்தேடிக் கண்டுபிடித்துச் சொல்வது கடினம் என்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஒரு எஜமானருக்கு வெளிப்படையாக ஆதரவாக இருந்தால் இன்னொரு எஜமானருக்குக் கோபம் வந்துவிடும். எனவே இரண்டு பேருக்கும் பிடிக்கும்வகையில் இந்து வெறுப்பை மட்டுமே பேசிவிட்டு இருவருடைய சம்பளப்பட்டியலிலும் இருப்பதே நல்லது என்ற தெளிவான கணக்குகள் இவர்கள் அனைவருக்கும் உண்டு.
அடுத்ததாக, இந்துக்கள் மீதான அவதூறு ஒருவரால் செய்யப்படும்போது திரையுலக பிரபலங்கள், பிற துறை பிரபலங்கள், திராவிட இயக்கத்தினர், திராவிட இயக்கத்தின் கிளை அமைப்புகள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என அனைவரும் அந்த அவதூறுக்கு ஆதரவு தெரிவித்துக் களம் இறங்குவார்கள்.
இந்து மதத்துக்கு எதிராகப் பேசினால் அதனால் பலன் பெறப்போவது முதலில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளே. அதன் பின்னர், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி பலப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சூட்கேஸ் கனம் அதிகரிக்கும்.
தமிழ் தேசிய போராளிகளுக்கு நன்கொடையும் செல்வாக்கும் பெருகும். பிரபலங்கள் செய்யும் தொழிலில் அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். அரசியல் கட்சிகளின் அறிவுஜீவிகள், கொள்கைப்பிரசாரர்கள், கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோருக்கு அடுத்த கட்ட வாய்ப்புகள் பிரகாசமாகும். முக நூல், டிவிட்டர் போன்வற்றில் இந்த அவதூறை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு 200 ரூபாய் முதல் பல்வேறு ஆதாயங்கள் கிடைக்கும்.
இப்போது இந்த அவதூறுக்கு பதில் சொல்லும் நோக்கில் செயல்படுவதென்றால் இந்த அனைத்து தரப்பையும் எதிர்த்துப் பேசியாகவேண்டியிருக்கும். அது சாத்தியமே இல்லை.
இந்துவைப் பத்து பேர் பத்து திசையில் இருந்து அம்பெய்து கொல்கிறார்களென்றால் அந்தப் பத்து பேருக்கும் இந்து மட்டுமே ஒரே இலக்கு. இந்துவுக்கோ பத்து பேர் மீதும் ஒரே நேரத்தில் அம்பெய்தாகவேண்டியிருக்கும். ஒவ்வொருவர் மீதாக தனித்தனியாக எய்ய நேரம் இருக்காது. அதோடு, இதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பல நேரங்களில் மறைந்து நின்றே தாக்குவார்கள்.
ராஜராஜன் இந்து இல்லை என்ற அவதூறுக்குப் பதில் சொல்லும்விதமாக, கிறிஸ்துவும் நபியும் தமிழர் அல்ல என்று ஒரு பதில் சொன்னால் ராஜராஜன் இந்து அல்ல என்பதற்கான பதிலாக அது அமையாது. கருணாநிதி, திருமாவளவன், ஈ.வெ.ரா, கார்ல் மார்க்ஸ் எல்லாம் தமிழர் கிடையாது என்று சொன்னாலும் எடுபடாது.
முதலில் எதிர்த்தரப்பு பேப்பர் அட்டை முதல் பிரைம் டைம் வரை சுற்றி வளைத்து அடிக்கும் ஒரு அவதூறுக்கு பதில் சொல்வதென்றால் அதேபோல் அனைத்து மட்டங்களிலும் நம் பதில் இருக்கவேண்டும். அதற்கு இன்று வாய்ப்பே இல்லை. எதிரி கொத்து குண்டுகளை நம் மீது வீசுகிறான். நாம் கொசு பேட் மூலம் அவர்களைச் சுட்டு வீழ்த்துகிறோம். நாம் என்னதான் வலுவான பதிலைச் சொன்னாலும் எடுபடாமல் போய்விடுகிறது.
இதைச் சமாளிக்க ஒரே வழியென்னவென்றால் எதிரித் தரப்பில் இருந்தே இதற்கான வலுவான பதிலடியை வரவைக்கவேண்டும்.
ராஜராஜன் இந்து அல்ல என்று எதிர்த்தரப்பு தன் அல்லக்கையைக் கொண்டு சொல்லவைக்கும்போது அவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரை வைத்து அதற்கு பதிலடி தரவைக்கவேண்டும்.
ராஜராஜன் மொழியால் தமிழர்; மதத்தால் இந்து; இந்துவாக இருக்கும்வரைதான் ஒருவர் தமிழராக இருக்கவும் முடியும். நம் தமிழ் முன்னோர்களின் சாதனைகள் அனைத்துமே அவர்கள் இந்துவாக இருந்ததால் செய்தவையே. தமிழ் மொழியும் இந்து மதமும் இணைந்து பெற்ற குழந்தையே ராஜராஜன்.
ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்பவன், என் அம்மா என் அப்பாவுடன் படுத்து என்னைப் பெறவில்லை என்று சொல்கிறான்.
இந்து, தமிழ் என்ற இரு தரப்புகள் இணைந்து உருவாக்கிய ஒன்றில் இந்துத் தரப்பை மறுதலிப்பவர்கள் எல்லாரும், “அவர் என் அம்மாவின் கணவர்தான். ஆனால் என் அப்பா இல்லை” என்று வாக்குமூலம் தருபவர்களே என்று சேகர் பாபுவை வைத்துச் சொல்லவைக்கவேண்டும். அல்லது அற நிலையத்துறை தலைவரைக் கொண்டு சொல்லவைக்கவேண்டும்.
நாம் பேச வேண்டியவற்றை மற்றவரைக் கொண்டு பேசவைப்பதென்பது மத அரசியலில் பால பாடம். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் அதில் டாக்டரேட் முடித்துவிட்டிருக்கிறார்கள். நாம் பத்தாவது பாஸ் செய்யவாவது முயற்சிகள் எடுக்கவேண்டும்.
அதிகாரத்தைப் பயன்படுத்துபவருக்கே அதிகாரம் வந்து சேரும்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி வேந்தருக்கு
வாள்வீசு மளவுக்கே வாழ்வு.
(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).