தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்

மதிப்பிற்குரிய மாண்புமிகு அவர்களுக்கு,

இந்த தீபாவளியன்று நீங்கள் வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பது குறித்து மிகவும் நன்றி. இதை அப்படியே நீங்கள் தொடர்ந்து செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

ஆன்மிக உணர்வும் தன்மானமும் கொண்ட இந்துக்களுக்கு தீபாவளிக்கோ அவர்களது எந்த பண்டிகைக்களுக்குமோ திமுகவினைச் சார்ந்த எவரும் அவர் முதலமைச்சர் என்றாலுமே கூட வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பதே எம் பண்பாட்டுக்கு செய்யப்படும் உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதையை உணர்ந்து வாழ்த்துகள் சொல்லாமைக்கு நன்றி.

தீபாவளி என்பது பண்டிகை மட்டுமல்ல. அது பாரத பண்பாட்டின் செழுமையின் உன்னதம். அதற்கு ஏனைய பண்டிகைகள் போல ஒற்றைக் காரணங்கள் இல்லை.

இப்பண்டிகை வராக மூர்த்திக்கும் பூமி அன்னைக்கும் பிறந்த நரகாசுரனை அதே வராக மூர்த்தி – பூமாதேவி அவதார அம்சங்களான ஸ்ரீ கிருஷ்ண சத்யபாமாவால் வதம் செய்யப்படும் நாள் என தென்னகத்தில் கொண்டாடப்படுகிறது. அதர்மியானவன் சொந்த மைந்தனென்றாலும் அவனை வதம் செய்யும் பாரத பண்பாடு எங்கே கடைமட்டத் தொண்டன் முதல் கணக்கற்றோர் செய்த தியாகத்தை ஒரு குடும்பம் மட்டுமே உண்டு மகிழும் கழகம் எங்கே! எனவே திமுகவினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதென்பது சரியானதல்ல. தீபாவளிக்கு கண்ணியமானதல்ல.

இப்பண்டிகை வட பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தனகிரி மலையை தூக்கிய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வானுறை பலி கவர் தெய்வமாக இந்திரன் ‘என்னை மட்டுமே வணங்க வேணும்’ என்று சொன்னதை எதிர்த்து இயற்கை அனைத்தும் இறைத்தன்மை கொண்டதென பரந்தாமன் பாருக்கு உணர்த்திய தினம். பாரத பண்பாட்டின் மற்றொரு ஆன்மிக உன்னத கோட்பாடு அது. அதனை புரிந்து கொள்ள போலி பகுத்தறிவுவாதிகளால் முடியாது. அத்துடன் வானுறை ஏக தெய்வ வணக்கக் கோட்பாட்டை உயர்ந்ததென மதிக்கும் பகுத்தறிவிலிகள் கழகத்தவர் என்பதால் தீபாவளிக்கு உங்கள் வாழ்த்துகள் எமக்கு தேவை இல்லை. அவை எம் பண்டிகையின் மாண்பை குறைக்கும் செயல்.

சீக்கிய குரு ஹரிகோவிந்த் அவர்களால் விடுதலை பெருநாளாக தீபாவளி உயர்ந்தது. பாயி மணி சிங்கின் பலிதானத்தால் தீபாவளி தர்ம பலம் கொண்டு மிளிர்கிறது.

தென்னாப்பிரிக்காவின் நிறதுவேஷ இனவாதத்துக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தில் தீபாவளிக்கு பெரும்பங்கு உண்டு. லஷ்மி தேவியும் ஸ்ரீ ராமரும் தர்மத்தின் சின்னங்கள். அவர்கள் அருள் தேவை என்று மானுட உரிமையின் உண்மையான உலகநாயகன் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். அப்படிப்பட்டவர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு உங்களைப் போன்றவர்களும் வாழ்த்து சொன்னால் தீபாவளியின் பெருமைக்கு அல்லவா இழுக்கு!

ஆனால் இப்படிப்பட்ட உன்னதமான ஒரு திருநாளுக்கு திமுக என்கிற அப்பட்டமான இனதுவேஷ கோட்பாடு கொண்ட கட்சியின் எந்த தலைவரும் வாழ்த்து சொல்வது எவ்வளவு அவமரியாதையான செயல்! அதனாலும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

வந்தேமாதரம்.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

One Reply to “தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்”

  1. Beautifully written, not that it would disturb the thick skinned Kazagam mob and its leader.
    Thanks AN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *