சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

வாழ்க்கையில் சில விபரீதங்கள் தவிர்க்க இயலாதவை.

அப்படி ஒன்று அண்மையில் ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் பார்த்த சவுக்கு சங்கர் விதந்தோதல் பேட்டி. அதில் அவர் சாவர்க்கர் குறித்தும் பகத்சிங் குறித்தும் சொல்கிறார்.

சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதுமே மன்னிப்பு கடிதம் எழுதினார். சாவர்க்கர் இரண்டாம் உலக போரின் போது சிறையிலிருந்து பிரிட்டிஷாரிடம் என்னை விடுவித்தால் உங்களுக்கு படை திரட்டி உதவுவேன் என்று சொன்னார். இதையெல்லாம் சவுக்கு சங்கர் சிறையிலிருந்தவாறே படித்த நூல்களிலிருந்து தெரிந்து கொண்டதாக சொல்கிறார். அப்புறம் பகத் சிங்கின் ஜெயில் டைரியையும் படித்தாராமாம்.

சவுக்கு சங்கரின் அறிதல் திறன் மீது எப்போதுமே எனக்கு ஐயம் உண்டு. இப்போது அவருடைய கருத்தியல் நேர்மை மீது ஐயமே இல்லை. அன்னாருக்கும் கருத்தியல் நேர்மைக்கும் தொலைவு ஒளி ஆண்டுகளில்.

வீர சாவர்க்கர் அந்தமான் சிறைகளிலிருந்த போது அனுபவித்த கொடுமைகளில் லட்சத்தில் ஒரு பங்கை சவுக்கோ ஏன் சவுக்கின் குருவான நேரு பண்டிதரோ அனுபவித்ததில்லை.

சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகள் உச்ச கட்டத்தில் இருந்த கால கட்டம் 1910 முதல் 1915 வரை. பின்னர் அவை மிக மெதுவாக படிப்படியாகக் குறைந்தன. ஆனால் 1914 இல் அவை மிக உக்கிரமாக இருந்தன. இந்த சூழலில் சாவர்க்கர் மனு ஒன்றை அனுப்புகிறார்.

இந்த மனுவை பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படி வகைப்படுத்தியுள்ளது – விநாயக தமோதர சாவர்க்கரால் போர் காலத்தில் அரசாங்கத்துக்கு தனது சேவைகளை சமர்ப்பித்தலுக்கு பதிலாக அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வைக்கப்படும் மனு.

இந்த போர் காலம் என்பது முதலாம் உலகப்போர். இந்த போரில் காந்தியும் காங்கிரஸும் பிரிட்டிஷாருக்கு உதவுவது என முடிவெடுத்த கால கட்டம். அதே நேரம் சாவர்க்கர் கோரியிருப்பது அவருடைய தனிப்பட்ட விடுதலையை அல்ல. அனைத்து கைதிகளின் விடுதலையை.

இதே மனுவில் சாவர்க்கரின் இறுதி வரி முக்கியமானது. ‘இத்தனையையும் நான் உங்கள் முன் வைப்பது என்னை விடுதலை செய்ய என்று நீங்கள் கருதினால். என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறரை நீங்கள் விடுதலை செய்யுங்கள்.’

ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே ஒரு மனிதர் உடைந்துவிடுவார். அதிலும் தீவாந்திர தண்டனை. முதல் நான்கு ஆண்டுகளின் மிக கொடூரமான அவமானகரமான சித்திரவதைகள் – செக்கிழுப்பது முதல் தனிமை சிறையில் கைகால்களை அசைக்கமுடியாமல் வைக்கும் கட்டுகளுடன் வைக்கப்பட்ட மனிதர் ஒருவரால் அதன் பிறகும் ‘என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறரை விடுதலை செய்யுங்கள்’ என எழுத முடிகிறது.

அந்த மனவலிமை மட்டும் அல்ல. இந்த ஒருவரி இன்னொரு விஷயத்தையும் வெளிக்காட்டிவிடுகிறது. இன்னும் தன்னை விட பிற தேசபக்தர்களை வெளியே கொண்டு செல்லும் மனநிலையில் சாவர்க்கர் இருக்கிறார். அதாவது அவர் இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பிரச்சனையான மனிதரே. இதை வெளிப்படுத்தும் வரி அது. இந்த வரியே இந்த மனுவை நிராகரிக்க வைக்கும் நியாயத்தை அரசுக்கு அளிக்கும். இருந்தாலும் சாவர்க்கர் இதை சொல்கிறார்.

’I beg not to be released at all…’ தயை செய்து என்னை மட்டும் விடுதலை செய்ய வேண்டாமென்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். மற்ற அனைவரையும் விடுதலை செய்யுங்கள். அவர்களின் விடுதலையில் நான் மகிழ்வேன்,

இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது வீர விநாயக சாவர்க்கர் அந்தமானில் இருக்கவில்லை. அவர் இந்து மகாசபை தலைவராக இருந்தார். ஜப்பானிய இந்து மகாசபை தலைவரான ராஷ் பிகாரி போஸுடன் தொடர்பில் இருந்தார். இந்தியர்கள் அதிக அளவில் ராணுவத்தில் இருப்பதும் அவர்களுக்கு போர் அனுபவம் இருப்பதும் விடுதலை அடையும் பாரதத்தின் எல்லைகளை பாதுகாக்க அவசியம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அவருடன் போதிசத்வ அம்பேத்கரும் இவ்விஷயத்தில் தெளிவாக இருந்தார்.

எனவே தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?

வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா? வீர சாவர்க்கரின் காலடி மண் அல்ல அவரது காலணியில் ஒட்டிய தூசிக்குக் கூட சமமில்லாதவர்கள் இவர்கள் – அது சவுக்கு சங்கரோ அல்லது ராகுல் கண்டியோ.

சரி சவுக்கு சங்கர் பகத் சிங்கின் ஜெயில் டைரியை படித்தேன் என்றாரே – அதை நேர்மையாக படித்திருந்தால் கூட தெரிந்திருக்குமே – வீர சாவர்க்கரின் ஹிந்துத்துவ நூலான ஹிந்து பத பாதுஷாகியிலிருந்து பகுதிகளை எடுத்து தம் கைப்பட எழுதி அதை முக்கியமென சுட்டியும் காட்டியிருப்பார் பலிதானி பகத் சிங்.

ஆனால் சவுக்கு சங்கரிடம் நேர்மையையா எதிர்பார்க்கமுடியும்?

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

அந்தமான் சிறையிலிருந்து வீர சாவர்க்கர் எழுதிய கடிதங்களில் அவரது சிறைவாழ்வின் துயரங்கள் அதைமீறியும் சுடர்விடும் அவரது மன உறுதியும் வெளிப்படுகின்றன. இந்தக் கடிதங்களை அருமையாக வி.வி.பாலா தமிழில் மொழியாக்கம் செய்து “அந்தமானிலிருந்து கடிதங்கள்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகத்தை ஆன்லைனில் இங்கு வாங்கலாம். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய +91-81480-66645/46 ஆகிய எண்களில் அழைக்கவும்.

“வஹினியை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நான் விடுதலையாகி வந்தாலும் என்னை வரவேற்க அவர் இருக்க மாட்டார் என்பதை நினைக்கும் போது வருத்தம் அதிகமாகிறது. அவர் என்னுடைய தோழி. என்னுடைய சகோதரி மட்டுமல்லாமல் என்னுடைய அன்னையும் கூட. பெண்கள் உடன்கட்டை ஏறுவது போல அவர் மரணித்திருக்கிறார். தன்னுடைய அன்புக் கணவன் சிறை சென்று திரும்பமாட்டான் என்ற போதே இந்த இந்தியப் பெண்மணிகள் தங்கள் இதயத்தை நெருப்பில் பொசுக்கித் தியாகம் செய்து விடுகிறார்கள். தேசத்திற்காக உயிரை விடும் தியாகிகளைப் போலவே இவர்களும் தியாகிகளே. இந்த ஹிந்துப் பெண்கள் அமைதியாக தங்கள் தாய்நாட்டிற்காக, தங்கள் மதத்திற்காக இத்தகைய தியாகத்தைச் செய்கிறார்கள்..”

– கடிதங்களிலிருந்து ஒரு பகுதி

2 Replies to “சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்”

 1. அருமையான பதிவு. சவுக்கை விடுங்கள். ராகுல் (நடத்தையால் சிறுவன்) உட்பட பலர் சாவர்க்கரைப் பற்றி தவறாகவே எழுதி வருகின்றனர். தயவு செய்து இதை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழி பெயர்த்து ஊடகங்கள் மூலம் பரப்பவும்.

 2. தமிழகத்தில் விஞ்ஞானம் வேண்டும், புதிய புதிய அறிவியல் வேண்டும் என மேடைதோறும் முழங்கியவர் அய்யா ராம்சாமி

  தமிழரெல்லாம் இந்து புராணம், இந்து இதிகாசம், கோவில் வழிபாட்டு முறை என நேரத்தை வீணாக்காமல் சோவியத் ரஷ்யா போல நாத்திகம் பேசி விஞ்ஞானம் செய்யவேண்டும் என அழைப்பு விடுத்து கொண்டிருந்தார்

  அப்பொழுது அவருக்கு நண்பரானவர் கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடு

  நாயுடு ஏகபட்ட விஞ்ஞான விஷயங்களை கண்டறிந்த மாபெரும் விஞ்ஞானி, அதுவும் மக்களுக்கு தேவைபடும் அனைத்து கருவிகளையும் செய்து கொண்டிருந்த விஞ்ஞானி

  ஆனால் அவருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் மோதிற்று, நாயுடுவினை முடக்க பிரிட்டிஷ் அரசு கடும் வேகம் காட்ட தன் கண்டுபிடிப்பையெல்லாம் தெருவில் போட்டு எரித்தார் நாயுடு

  தமிழ்னுக்கு உரிமை பெற்றுகொடுத்தவர் என சொல்லபடும் ராமசாமி, தமிழனுக்கு மானமும் அறிவும் ஆடையும் போராடி பெற்றுகொடுத்தார் என சொல்லபடும் ராம்சாமி, தமிழன் ஜிடி நாயுடுவுக்கான என்ன போராட்டம் செய்தார் என்றால் பதிலே இல்லை

  ஜிடி நாயுடு ஆன்மீகவாதி அல்ல, பிராமணனும் அல்ல, குறளிவித்தை செய்தவரும் அல்ல, அவர் ஒரு விஞ்ஞானி, தமிழ் விஞ்ஞானி

  தமிழன் விஞ்ஞான கருவி உருவாக்கினால் தமிழன் வாழ்வான், பல்லாயிரம் பேருக்க்கு வேலை கிடைக்கும் , தமிழன் பெருமையும் தரணியில் உயரும், புதுபுது விஞ்ஞானிகள் உருவாகிவருவார்கள் எனும் நிலையில் ராம்சாமி வாயே திறக்கவில்லை

  “பிரிட்டிஷ்காரனை விட்டால் நாம் குண்டூசி கூட செய்யமாட்டோம்” என சொல்ல தெரிந்தவருக்கு , அருகில் இருந்த தமிழக விஞ்ஞானி தெரியாமலே போனது

  தமிழனுக்கு விஞ்ஞானம் வேண்டும் , பக்தி வேண்டாம் என கொடிபிடித்த ராம்சாமி இந்த நாயுடுவுக்காக செய்த போராட்டம் என்ன?

  பகுத்தறிவு என எல்லா இடமும் சென்று என்னனெம்மோ பேசியவர் ஒரு இடத்திலாவது நாயுடுவுக்கு ஆதரவாக பேசியது என்ன?

  ஒன்றுமே இல்லை

  இதுதான் அய்யா ராம்சாமியின் இனமான உணர்வு, அவர் பரப்பிய பகுத்தறிவு, அதவாது எக்காரணம் கொண்டும் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க அவர் தயாரில்லை, சொந்த தமிழன் பாதிக்கபட்டாலும் அவர் வாய் திறக்கவே இல்லை

  ஏன் என்றால் அதுதான் அய்யா ராம்சாமி, அவரின் பகுத்தறிவும் போராட்டமும் அப்படியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *