எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]

எனதருமை இந்தியாவின் எருமைகளே
எதனால் உங்களுக்கு இப்படி ஓர் இழிநிலை
இப்போது வந்து சேர்ந்திருக்கிறது?

இன்று உலகில்
உன் மாமிச ஏற்றுமதியில் முதலிடம்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த
வான் புகழ் வல்லரசுக்குத்தானாமே

ஏற்றுமதிக்காக இன்று
உன் கழுத்து அறுக்கப்படும்போது
பாலை நிலத்துப் புனித வசனங்கள்
பாங்குடன் ஓதப்பட்டாகவேண்டுமாமே

அஷ்ட மார்க்க அருளுரைகள் மேல்
ஆணையிடச் சொன்னவரின் ஆதரவாளர்கள்தான்
அதிகம் உன்னை
ஆசை ஆசையாய் கொன்று தின்கிறார்களாமே

தென்னகத்துத் திரு நிறைச் செல்வி சாராய பாட்டிலைத்
திருக்கரங்களில் ஏந்தி நிற்பதுபோல்
வட புலத்து கங்கை மாதா
எருமைத்தலைகளை அணிந்து நிற்கிறாளா?

அகில உலகமும் படைக்கப்பட்டது
ஆபிரகாமிய அராஜகவாதிகளுக்கே என்று
உலகை அடித்து உலையில் போடுபவர்களுடைய
ஊனுடலைப் பெருக்க
உயிருடன் வெட்டப்படுன்றன ஒருபாடு எருமைகள்

நம் பூமியில் இன்றும்
உன்னை நம் உணவுக்காகக் கொல்வதைவிட
உலகின் உணவுக்குக் கொல்வதே அதிகம்
தின்பதற்கு ஆளின்றிப் போனால்தானே
கொல்வதற்கும் ஆளின்றிப் போகும்


உண்மைதான்
ஆதியிலிருந்தே நம் பூமியிலும்
உன் மீது அன்பிருந்திருக்கவில்லைதான்

மரண தேவனின் வாகனம் என்று
நம் மண்ணின் புராணங்களில் சொல்லப்பட்டதாலா?

அன்பே உருவான அன்னையும்
ஆக்ரோஷத்துடன் உன்னை அழித்ததாலா?

ஆரிய நிறம்’ கொண்டவர்கள்
அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் இருக்கும்
பசுவை அன்பாகக் கவனித்துக்கொள்ள
‘திராவிட நிறம்’ கொண்டவர்கள்
அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் இருந்தும்
உன்னை காக்க முன்வரவில்லையே

உன் உயிர் காப்பாற்றப்படவும்
உருவாகியிருக்கவேண்டுமா ஒரு மகிஷ புராணம்?
உன் மீது அன்பு சுரக்கவும்
வாழ்ந்து காட்டியிருக்கவேண்டுமா ஓர் அந்தணர் குலம்


பார் புகழ் பாரத மாதா
உன் வேதனையை
பாராத மாதாவாக இருந்தது தவறுதான்
ஆனால்,
அன்றெல்லாம் நீ
அளவோடுதானே கொல்லப்பட்டாய்

மேலும்
ஆதியில் நீ காட்டெருமையாகத்தானே இருந்தாய்
ஏர்க்காலில் பூட்டப்பட இடம் கொடுக்காத நீ
ஏன் சிலரின் இல்லங்களில் நுழைந்தாய்?

கரையுடைத்துப் பாயும்
காட்டாற்றில் குளித்து மகிழ்ந்த நீ
தேங்கிய குட்டைகளில்
திருப்திப்படத் தொடங்கியபோது
உனக்கான விதியை நீயே எழுதிக்கொண்டாயா?

உன் உதிரத்தை நீ பாலாகச் சுரந்தும்
உன் மீது சுரந்திருக்கவில்லைதான் போதிய கருணை

உன் உடம்பை உயிரோடு தந்தும்
உனக்குக் கிடைத்திருக்கவில்லைதான்
உரிய மரியாதையும்

ஆனால்,
நீ நடந்து வந்த காடு திறந்தேதான் இருந்தது
நீ இறங்கி வந்த மலை விரிந்தேதான் கிடந்தது
விவசாய பூமியின் விளிம்பில் ஏன் ஒட்டிக்கொண்டாய்
எனதருமை எருமை மாடே

காளையைப் போல் காயடிக்கப்படாததாலா
மூக்கணாங்கயிறு பூட்டி வண்டிகளை
முதுகொடிய இழுக்க வைக்காததாலா

இத்தனை காலம் நீ இங்கு வாழ்ந்தது
நீ விரும்பிய வாழ்க்கையில்லைதான்
என்றாலும்
இப்போது போல் நீ இழிநிலை எட்டியிருக்கவில்லை
இதற்கு முன் எப்போதும்.


ராமன் பேரில் போர் நடத்தி
ராவணனிடம் ராஜ்ஜியத்தை
நாங்கள் ஒப்படைத்த பாவம்
ஒட்டு மொத்தமும் உன் மீதுதானா இறங்கவேண்டும்?

அத்தனை பேராலும் கைவிடப்பட்டேனே என்று
ஆயுட் காலம் முழுவதும்
அரற்றுவதைவிட்டுவிட்டு
மனதுக்குள் மட்கிக் கிடக்கும் காட்டை முளைக்கச் செய்
அலங்காரக் கொம்புகளைக் கூர் தீட்டிக்கொள்

நடக்க மட்டுமே அல்ல கால்கள்
தூங்க மட்டுமே அல்ல இரவுகள்
தவறாக நீ எழுதிய உன் தலை எழுத்தை
நீயே திருத்தி எழுது


உன் வாழ்க்கையில் இருந்து
நாங்களுக்கும் கற்றுக்கொண்டாகவேண்டியிருக்கிறதா
ஓர் எளிய பாடம்
ஆசையாய் வளர்ப்பதெல்லாம்
அறுத்துத் தின்னத்தானா?
கொழுக்கவைக்கப்படுவதெல்லாம்
கூறுபோட்டு விற்கத்தானா?

துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும்
உன் பச்சிளம் கன்றின் சாபம்
யார் தலையில் விழும்?

கதறக் கதற இழுத்துச் செல்லப்படும்
உன் நிறை சூலியின் கண்ணீர்
யார் குடியைக் கெடுக்கும்?

கொல்லும் தேசத்தையா?
கொல்லச் செய்யும் தேசத்தையா?

உன் தலை எழுத்து திருத்தப்பட்டாலே
உலகின் தலை எழுத்து திருத்தப்படும்.

(யாராலும் பேசப்படாமலிருக்கும் பசுவதை தடுப்புப் போராட்டம் (1880-1894) பற்றி ஆவணப்படுத்தியதோடு எருமை வதை தடுப்புப் போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்த திரு தரம்பால் ஜி மற்றும் முகுந்தன் ஜிக்கு).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *