சாணக்கிய நீதி – 7

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

அத்தியாயம் 2-3

மாதா ஶத்ரு: பிதா வைரீ யேந பா3லோ ந பாடி2த: |

ந ஶோபதே ஸபாமத்4யே ஹம்ஸமத்4யே ப3கோ யதா2 || 2.11  ||

பதவுரை:  எந்தச் சிறுவன்/மி கற்பிக்கப்படவில்லையோ. (அவனு/ளுக்கு) அன்னை எதிரி, தந்தை பகைவர்;  அன்னங்கள் நடுவில் கொக்குபோல (அவன்/ள்) அவையில் (சிறந்து) விளங்குவதில்லை.    —    2.11

விளக்கம்‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’, ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’, என்பது நாமறிந்த பழமொழிகள்.  எண்ணும் எழுத்தும் என்பவை கல்வியே ஆகும். கல்வியறிவில்லாதவன் மரத்திற்கு ஒப்பாவன் என தமிழ் மூதாட்டி ஔவையும் இயம்பியிருக்கிறாள்.

வள்ளுவரும்,

“மகன் தந்தைக் காற்றும் உதவி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்,”

என்றே தந்தையின் கடமையைப் ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிறார்.  கடமையைச் செய்யாத எவரும் எதிரிதானே!  தாய் தந்தையைக் கடைசிக் காலத்தில் காப்பாற்றாத மகனைத் தாய் தந்தையரின் எதிரி என்றுதானே சொல்கிறோம். 

தந்தை பிள்ளையைக் கல்விகற்க அனுப்பாது போயினும், ஒரு தாய் அப்படி எப்பொழுதும் விடமாட்டாள்.  தான் வருந்தினாலும், தன் பிள்ளை படித்துப் பெரியவனா/ளாக வேண்டும் என்றுதான் விரும்புவாள். அதற்காகத் தன் தேவைகளைக்கூட விட்டுத்தரத் தயங்கமாட்டாள்.  அப்படியிருக்கும் தாயே தள்ளினால், அவளும் அந்த மகனு/ளுக்கு எதிரிதானே!

அப்படிக் கல்வியறிவு இல்லாத ஒருவன் வாழ்வில் எப்படி முன்னுக்குவர இயலும்?  கல்வியறிவு உள்ளவர் நடுவில் அவனை யார் மதிப்பார்கள்? காக்கையும் குயிலைப் போலக் கருப்பாக இருந்தாலும், அது குயில் கூட்டத்தின் நடுவே மறைந்தாலும், அது கரைந்தவுடனேயே, ‘எது காக்கை, எது குயில்?’ எனத் தெரிந்துவிடும் அல்லவா?

அதற்காகவாவது, காக்கை கரையவேண்டும்;  அது வாயைத் திறக்காதவரை அடையாளம் தெரியாமல் மறைந்திருக்கும்.  ஆனால், அன்னங்களுக்குள் நடுவில் நிற்கும் கொக்கை உடனே இனங்கண்டுகொள்ள இயலும். அதனால் மறைந்திருக்க இயலாது. 

அப்படித்தான் கல்வியறிவில்லாதவன் நிலையும் எனச் சாணக்கியர் செப்பியிருக்கிறார்.

இந்த அறிவுரை அரசுக்கு எப்படிப் பொருந்தும் என்று நாம் நினைக்கலாம்.  அனைவருக்கும் கல்வியறிவு வேண்டும் என்பதனால்தான் இலவசக் கல்வி, மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் நிறைவேற்றப்பட்டது.  பிள்ளைகளுக்குத் தாய்-தந்தையர் எதிரி-பகைவர் ஆகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எழுத்தறிவிக்கும் இறைவனாக அரசு ஆகியது.  இந்த அறிவுரையை அரசு பின்பற்றியதால்தான்  பல குழந்தைகள் கல்விபெற்று உயர்நிலையை அடைந்திருக்கின்றன.

லாலநாது3 பஹவோ தோ3ஷாஸ்தாடநாது3 பஹவோ கு3ணா: |

தஸ்மாத்புத்ரம் ச ஶிஷ்யம் ச தாட4யேந்ந து லாலயேது  || 2.12  ||

பதவுரை:  செல்லம் கொடுப்பதால் குற்றங்கள்தான் பெருகும்;  அடித்துத் (தண்டிப்ப)தால்  (நற்)குணங்கள் பெருகும்.  அதனால், மகனை/ளையும், மாணவனையும் செல்லம் கொடுக்காமல் அடித்துத் (திருத்துக) …    2.12

விளக்கம்நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகள் இருக்கும்.  கணவன் மட்டுமே பொருளீட்டுவார்.  எனவே, குழந்தைகள் வேண்டும் என்று கேட்பது அனைத்தையும் வாங்கித் தரமாட்டார்கள்.  மூத்த குழந்தைக்கு வாங்கிய துணிமணிகள்தான் பழையதானவுடன் அடுத்த குழந்தைக்குக் கிடைக்கும்.

ஏதாவது வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், குழந்தைக்கு அடிதான் விழும்.  அடித்துவிட்டுப் பெற்றோர் குழந்தை கேட்டதை வாங்கித் தர இயலவில்லையே என மனம் புழுங்குவர்.  ஆனால், அக்குழந்தை நினைத்ததையெல்லாம் பிடிவாதம் பிடித்து அடையமுடியாது,  இருப்பதைப் பகிர்ந்துதான் அனுபவிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளும்.

அதனால்தான் விவிலியமும், “பிரம்பைக் கையாளாவிடில் பிள்ளை கெட்டுப்போகும்,” என்று சொல்லியிருக்கிறது போலும்.

அதற்காக எதற்கெடுத்தாலும் பிள்ளைகளைக் குடித்துவிட்டுக் கண்மண் தெரியாது அடிக்கும் தகப்பனாக இருக்கவேண்டும் என எடுத்துக் கொள்ளக்கூடாது.

கேட்டதையெல்லாம் – அது சரியானது அல்ல என்று தெரிந்தாலும் – அதை உடனே வாங்கிக் கொடுத்து – அதை உடனே நிறைவேற்றி – அதிகச் செல்லம்கொடுத்துக் குட்டிச் சுவராக ஆக்கிவிடக்கூடாது என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

சான்றாக, சிலநாள்களுக்கு முன்னர், அமெரிக்காவில், வர்ஜீனியா மானிலத்தில், ஒரு ஆறுவயதுக் குழந்தை துப்பாக்கியை எடுத்துச் சென்று, தன் ஆசிரியையைச் சுட்டிருக்கிறது.[i]  அது தெரியாத்தனமாக, விளையாட்டுத் துப்பாக்கி என்று எடுத்துச் சென்று, தவறாகச் சுட்டிருக்கிறது என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், விசாரித்ததில் – வேண்டுமென்றுதான் அப்படிச் செய்ததாகப் போலீசாரிடம் சொல்லியிருக்கிறது.[ii]  தனது தாய் அனுமதியில்லாது வாங்கிய துப்பாக்கியை அக்குழந்தை எடுத்துச் சென்று ஆசிரியைச் சுட்டிருக்கிறது.  அந்த அளவுக்குத் துப்பாக்கி குழந்தை கைக்குக் கிடைக்கும்படி வைத்ததோடுமட்டுமின்றி, அதை எப்படிக் கையாளவேண்டும் என்று அந்தக் குழந்தைக்குத் தெரியும்படியும் வைத்ததல்லவா வினையாக முடிந்தது. குறைந்த பட்சம் துப்பாக்கி சுடமுடியாத வண்ணம் அதன் பாதுகாப்புத் தாளைப் (safety lock) போடாமலோ, அதில் குண்டு இல்லாமலே வைத்திருந்தால் ஆசிரியை தப்பித்திருப்பார்.

நினைத்துப் பார்க்கவே நமக்கு உடல் சிலிர்க்கிறதல்லவா?  எப்படிப்பட்டதொரு வளர்ப்பாக இருந்தால் – துப்பாக்கியால் சுட்டால் உயிர் பிரிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தும் அக்குழந்தை தன் ஆசிரியையே சுட்டிருக்க வேண்டும்?

இக்காலத்தில் குழந்தைகளை அடிப்பது சட்டவிரோதமான செயலாகும்.  ஆகவே, சாணக்கியர் கூறியதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல்,  எப்பொழுது கண்டிக்க வேண்டுமோ, அப்பொழுது நயமாகவும், பயமாகவும் சொற்களால் கண்டித்து வளர்க்கவேண்டும் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஶ்லோகேந வா தத3ர்த்தே2ந பாதே3நைகாக்ஷரேண வா |

அபந்த்4யம் தி3வஸம் குர்யாது தா3நாத்4யயந கர்மபி4:  || 2.13  ||

பதவுரை:  (ஒவ்வொரு) நாளும் (அறச்) செய்யுளுடனோ அல்லது அதன் பொருளுடனோ அதன் பகுதிகளுடனோ (அதன்) சொற்களைக் கற்பதோ, ஈதல் (போன்ற) செயல்களையும் விட்டுவிடாது செய்க   …   2.13

விளக்கம்மனம் ஒரு குரங்கு என்னும் பழமொழியை அனைவரும் அறிவர்.  ஒரு கணம்கூட ஒரு விடயத்தில் நில்லாது இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.  அதை நல்வழியிலோ, நற்செயல்களிலோ செலுத்தாவிடில் மனம், மனிதனைத் தீ வழிக்கும் இழுத்துச்செல்ல வாய்ப்புள்ளது.

அதனால்தான் சாணக்கியர் மனித மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, நல்வழியில் முன்னேற்றும் வழியைச் சொல்லித் தருகிறார்.

மனிதன் வழக்கத்திற்குக் கட்டுப்படும் பிறவி.  அதனால் எதையும் தினந்தோறும் செய்தால், அவ்வழக்கம் மனிதனிடம் நிலைத்து நிற்கும். 

திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், நாலடியார் போன்ற அறநூல்கள் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருக்கின்றன. வடமொழியில் கீதையும் ஈரடிச் செய்யுளாகவே இயற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் அவற்றின் ஒவ்வொரு செய்யுளையும் அதன் பொருளுடன் கற்பது மிகவும் நன்று;  அப்படி இயலாது போயின், அதன் ஒரு பகுதியையாவது மனதில் உருவேற்றினால், அடுத்தடுத்த நாள்களில் கற்கலாம். அத்தோடு நில்லாது, ஒரு நற்செயலைச் செய்வது நல்லது.  ஏழை, எளியவருக்கு  அமுதளிக்கலாம்.  கல்விக்கூடங்கள், கோவில்கள், நூல்நிலையங்கள் போன்ற அறக்கூடங்களுக்கு நம்மாலியன்ற நிதி உதவி கொடுக்கலாம்.  கல்வி கற்க வழியின்றி நிற்கும் ஏழை மாணவருக்குப் புத்தகம் அளிக்கலாம்.  திக்கிலாப் பெரியவரைப் பராமரிக்கும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் உரையாடி மகிழ்விக்கலாம்.

இப்படிக் கணக்கிலடங்கா நற்செயல்களில் ஏதாவதொன்றைச் செய்துவந்தால், மனம் தீவழியில் செல்லாது பண்படும்.

இதையே அரசும் செய்துவந்தால் நல்லரசாக விளங்கும்.

காந்தாவியோக: ஸ்வஜனாபமாந: ருணஸ்ய ஶேஷ: குந்ருபஸ்ய ஸேவா  |

3ரித்3ரபா4வோ விஷமா ஸபா4 ச விநாக்நிநைதே ப்ரத3ஹந்தி காயம்  || 2.14  ||

பதவுரை:  காதலி/லனையைப் பிரிதல், தன் இனத்தாரால் அவமானப்படல், தீராத கடன், தீய மன்னனுக்குப் பணியாற்றல், ஏழ்மை, தீயோருள்ள குழுவும் உடலை நெருப்பில்லாமலே (எரித்துக்) கொன்றுவிடும்  …   2.14

விளக்கம்முன்னர் ஒரு செய்யுளில் எது துன்பம் தரும், எது நிச்சயம் கொல்லும் என்று விளக்கிய சாணக்கியர், இச்செய்யுளில் எது உயிருடன் எரிப்பதற்கு ஒப்பான துன்பத்தைத் தந்து ஒருவரைக் கொல்லும் எனக் கூறுகிறார்.  புற்றுநோய் கறையான் அரிப்பதுபோல உடலை அரித்தெடுக்கிறது.  குஷ்டரோகம் சில வியாதிகள் உடல் உறுப்புகளைக் குறைக்கின்றன.  ஆனால், சில நிகழ்வுகள் மனிதரை உள்ளூர எரிப்பதுபோன்ற துன்பத்தைத் தந்து கொல்லும்.  அதற்குப் பட்டியல் தரப்படுகிறது.

காதலி/லன் என்றால் திருமணம் ஆகுமுன்னர் காதலிக்கப் படுபவர் என்று எண்ணக்கூடாது.  மனைவியும், கணவனும் ஒருவருக்கொருவர் காதலர்தான்.  அப்படி நேசிக்கப்படும் மனைவியின் பிரிவு தாங்கொணாத் துன்பத்தைத்தரும் என்பதற்கு இராமரே சான்று.  சீதையைப் பிரிந்து இராமர் வருந்துவதையும், அதுபோலச் சீதை இராமரைப் பிரிந்து துயருருவதையும், வால்மீகியும், கம்பரும் கவிநயத்துடன் எடுத்துரைக்கின்றனர்.

மனிதன் குழுவாழ் இனமாவான்.  தான், தன் உறவினர், நண்பர், தன் இனம் என்று சேர்ந்து வாழ்வதில்தான் மகிழ்வடைகிறான்.  வெளிநாட்டுக்குச் சென்றாலும், தன் மொழி பேசுவோர், தன் நாட்டார், தன் சமயத்தோரைச் சந்திப்பதிலும், அவருடன் தொடர்புகொண்டு வாழ்வதிலும் நிம்மதி அடைகிறான்.  அப்படியிருக்கும்போது, அவனுடைய இனத்தாரே, அவனை அவமானப்படுத்தினால் அடையும் துன்பம் தீயால் எரிவதற்கு நிகரானது. அதனால்தான், கொடியவருக்கு நாடுகடத்தல் என்ற தண்டனை முற்காலத்தில் வழங்கப்பட்டது.

அடுத்து, ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்,’ என்ற சொலவடையும் உள்ளது.  கடனைக் கழிக்காவிட்டால், கார், வீடு எல்லாம் ஜப்தியாகும்.  அதனால் மற்றவர்முன் தலைகுனியும் நிலையும் ஏற்படும்.

மன்னன் தீயவனாக இருப்பின், மக்கள் துன்புறுவர்.  அப்படியிருக்கையில், அவனுக்குப் பணிசெய்பவரின் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும்.  ஹிட்லர் கொடியவன்.  இலட்சக் கணக்கான யூதரைக் கொன்றுகுவித்தான்.  அவனிடம் பணியாற்றவர் அனைவரையும் பின்னால் இஸ்ரேல் அரசின் உளவுத் துறையான மொஸ்ஸாத் (Mossad) தேடித்தேடி வேட்டையாடி, கைதுசெய்து, மரணதண்டனை வாங்கிக் கொடுத்தது.[iii]  ஓடிஒளிந்தவர் என்று தாம் மாட்டிக்கொள்வோமோ என்றுதானே அணுஅணுவாக உயிருடன் செத்தனர்!

ஏழ்மை எப்படிப்பட்டது என்று சொல்லவே வேண்டாம்.  எதையும் வாழ்வில் அடையமுடியாது; வாழ்க்கை முன்னேற்றமும் தடைப்படும்.  ஆசைப்பட்டது எதையும் மனைவி, குழந்தைகளுக்கு எதையும் வாங்கித் தரமுடியாது, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குச் செலவு செய்யமுடியாது.  இதைவிடக் கொடுமை எவருக்கும் நேரலாமா?

நம்மைக் கவிழ்க்கவேண்டும் என் நினைத்து மறைமுகமாகச் செயல்படும் கூட்டமும் குள்ளநரித்தனமாகவே, செயல்படும். அப்படிப்பட்ட கூட்டத்தில், குழுவில், அலுவலகத்தில் செயலாற்றுவது நம்மை உயிருடன் எரிப்பதுபோலத்தான் இருக்கும்.  ஒழுங்காகச் செயலாற்றவும் இயலாது; செய்த வேலைக்கு நல்ல பெயரும் கிட்டாது; மேலும், பதவி உயர்வோ, கிடைக்கவேண்டிய சன்மானங்களும் கிடைக்காது போகும்.

நதீ3தீரே ச யே வ்ருக்ஷா: பரகே3ஹேஷு காமினி  |

மந்த்ரிஹீநாஶ்ச ராஜாந: ஶீக்3ரம் நஶ்யந்த்யஸம்ஶயம்  || 2.15  ||

பதவுரை:  ஆற்றங்கரையிலிருக்கும் மரங்களும், மாற்றான் வீட்டிலிருக்கும் காதலியும், அமைச்சரில்லா அரசனும் விரைவிலேயே  அழியும், ஐயமே இல்லை   …   2.15

விளக்கம்பொதுவாக ஆற்றங்ககரையில் ஈரப்பசை அதிகம்.  ஆதலால், அங்கு ஆற்று வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட விதைகள் முளைத்து, அதன் சத்தான வண்டல் மணலில் வேகமாகச் செழித்து வளரத் தொடங்கும்.  ஆற்றில் ஒரோர் ஆண்டும் வெள்ளம் வருவதில்லை.  அதுவும் பல்லாண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளத்தில் வந்த விதைகள் பொதுவான ஆற்றுப்போக்குத் தள்ளியே முளைத்து வளரும். 

ஆயினும், அப்படி வளரும் செடிகள் மரமானாலும், அவைகளுக்கு நித்யகண்டம்தான்.  மீண்டும் அப்படிப்பட்ட பெருவெள்ளம் வந்தால், அவைகளும் வேருடன் புரட்டி எடுக்கப்பட்டு அழிக்கப்படும். 

அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், அக்கணவனின் நிலை என்னாகும்?  ஒருபுறம் தான் இப்படி ஏமாற்றப்பட்டோமே, அன்பு மனைவிக்கு என்ன குறை வைத்தோம், தனது ஆண்மைக்கு என்ன குறைவு, தான் தனது இல்லாளை நடத்தியது சரியில்லையா என்று உருகுவதுடன், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.

அறவழி உரைக்கும் அமைச்சர் என்றும் அரசருக்கு வேண்டும்.[iv]  அப்படிப்பட்ட அமைச்சர்தான் உண்மையான அமைச்சர்.  அப்படியில்லாதவர் அமைச்சரே அல்லர். அந்த அரசனுக்கு அமைச்சரே இல்லை என்றுதான் வைத்துக்கொள்ளதான் வேண்டும். அப்பொழுது அரசனுக்குத் தகுந்த அறிவுரை நல்கப்படாது.  அரசனும் தீயவழியில் ஈடுபட்டோ, தவறான முடிவுகளை எடுத்தோ, அழிந்துபோவான்.

இது இக்காலத்துக்கும் – அரசரில்லா நாடுகளுக்கும் பொருந்தும்.  அன்று அரசர் செய்த வேலையை இன்று தலைமை அமைச்சரோ, ஆளுநரோ, நாட்டு அதிபரோதான் செய்கிறார்.  அவருக்குப் பல ஆலோசகர்கள் உளர்.  அந்த ஆலோசகர்கள் ஆள்பவருக்கு நல்ல ஆலோசனை நல்கவேண்டும்.  அப்பொழுதுதான் நாட்டையோ, மாநிலத்தையோ நல்லபடி நடத்த இயலும்.

(தொடரும்)


[i]       A 6-year-old shot his teacher in Virginia, police say, by Jeanine Santucci, USA TODAY, January 9, 2023

[ii]     Police share new details on 6-year-old who shot Virginia teacher, say incident was ‘intentional’, by Anna Kaplan, Today, Jan 10, 2023

[iii]   The Mossad Hunt For Nazis By Mitchell Bard, Jewish Virtual Library, https://www.jewishvirtuallibrary.org/the-mossad-hunt-for-nazis

[iv]  What makes a good prime minister?  By Alex Dean, Prospect, November 11, 2019

Series Navigation<< சாணக்கிய நீதி – 4சாணக்கிய நீதி -10 >>சாணக்கிய நீதி – 9 >>சாணக்கிய நீதி – 3 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *