வனங்களும் நமது பண்பாடும்

வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை.

வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான ஆரண்யகப் பகுதிகள் (ஆரண்யகம் – காடு சார்ந்தது).

இதிகாச, புராணங்களில் வனங்கள்:

ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. இராமபிரான் அறவோருடன் இணைந்து ஸத்ஸங்கம் நடத்தியதும், அரிய அஸ்த்ரங்கள் பெற்றதும் , அரக்கரோடு பொருதியதும் அரண்ய காண்ட விவரிப்பு. பாண்டவர்கள் முனிவர்களிடம் அற நுட்பங்களை அறிந்ததும், பார்த்தன் பரமசிவனாருடன் மோதிப் பாசுபதம் பெற்றதும் வன பர்வத்தின் விவரிப்புகள்.

நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பண்டைய வனப் பெயர்கள் நமது இதிகாச, புராணங்களில் காணக் கிடைக்கின்றன. காளிதாஸரின் புகழ்பெற்ற நாடகம் ‘அபிஜ்ஞான சாகுந்தலம்’ அரண்யத்தை மையமாகக்கொண்டு அமைந்துள்ளது.

இராமபிரானின் வனவாசம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியதாக அமைந்தது. தம்மோடு அயோத்தியிலிருந்து அரணியம் நோக்கிக் கிளம்பிய ஒரு பெருங்கூட்டத்தை அண்ணல் தடுத்து நிறுத்தினார்; சுமித்ரா நந்தனரையும், மிதிலேச நந்தினியையும் அவரால் தடுக்க முடியவில்லை. தண்டக வனம் இன்றைய அமேசான் காட்டைப்போல் மிகக் கொடிய அடர்ந்த வனமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அச்சமின்றி, இளம் மனையாளோடு தண்டகவனம் புகும் அண்ணலை ’ஆத்மவான்’ என்றும், ’துர்தர்ஷ:’ என்றும் வால்மீகி முனிவர் வியந்து போற்றுகிறார் –

ப்ரவிஶ்ய து மஹாரண்யம் தண்டகாரண்யம் ’ஆத்மவான் |
ததர்ஶ ராமோ ’துர்தர்ஷ:’ தாபஸாஶ்ரம-மண்டலம் ||

அண்ணலின் திருச்சித்திரகூட வனப்பிரவேசத்தின்போது இந்த விவரிப்பு இல்லை. வனவாசம் முடியும் தருணத்தில் அண்ணல் தேவியைப் பிரிந்த ‘பஞ்சவடி’ தண்டகாரண்யத்தின் தெற்கெல்லை எனத் தெரிகிறது. சித்ரகூடம் என்பது பரதாழ்வான் அண்ணலின் பாதுகை பெற்ற தலம்.

இராவணன் மிக அருமையாகப் பேணிய எழில் மிக்க வனம் ‘அசோக வனம்’; அவனுக்குச் சினமூட்டவே ஆஞ்ஜநேயர் அதை அழித்தார்.

சுக்ரீவன் விரும்பிப் பேணிய வனம் ‘மது வனம்’; அதற்குத் தன் மாமனான ‘ததிமுகன்’ என்ற வானரனையே காவலுக்கு நியமித்திருந்தான்.

மகாபாரதத்தில், பாண்டவர் சூதில் தோற்றதும் நேராக மேற்கு நோக்கி நகர்ந்து ஸரஸ்வதி நதிக்கரையின் காம்யக வனத்தை அடைந்தனர்; த்வைத வனம் குறித்தும் காவியம் சொல்கிறது; அது காம்யக வனத்தின் ஒரு பகுதியாகலாம். பின்னர் அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசத்தின் வன எல்லைவரை வருகின்றனர். பின்னர் பழைய அகண்ட பாரதத்தின் மையப்பகுதி நோக்கி நகர்ந்து விராட எல்லைக்கு வருகின்றனர். விராட நகரத்தின் இன்றைய பெயர் பைராட் [BairAT – बैराठ ] . இது அமைந்திருப்பது இன்றைய ராஜஸ்தானத்தில். விராட நகரில் ஓராண்டு காலக் கரைந்துரைதலுக்குப்பின் அவர்களது வனவாசம் முற்றுப்பெறுகிறது. பாண்டவ வன வாசத்தில் அவர்களின் குருவான தௌம்யருடன் ஓர் அந்தணர் குழாமும் தர்மபுத்ரருடன் வனவாசம் கிளம்பியது. திரௌபதி அக்ஷயபாத்ரத்தின் உதவியால் அனைவரையும் முகம் கோணாமல் புரந்தாள்.

நைமிச வனம் – பதினெண் புராணங்களின் பிறப்பிடம்; கோமதி நதி தீரம்.

மது வனம் – த்ருவ மஹாராஜர் தவமியற்றி நக்ஷத்ர பதவியும் பெறக் காரணமான தலம். சத்ருக்நர் நகரமைத்து நாடாண்டதும் இங்குதான். கண்ணபிரான் மனமுகந்த ஸ்ரீ ப்ருந்தாவனம் இதன் ஒரு பகுதியே.

அம்பிகா வனம் – ஆயர்கள் ஸ்ரீவனத்திலிருந்து கிளம்பி யாத்திரையாக அம்பிகா வனம் சென்று சிவபூஜை செய்து வழிபட்ட தலம்; இது ஸரஸ்வதி நதி தீரத்தில் அமைந்திருந்தது. அங்கு ஒரு மலைப்பாம்பு நந்தரை விழுங்க முயன்றது; கண்ணபிரான் காப்பாற்றுகிறார்.

பதரீ வனம் – நாராயணர் நரனுக்கு திருவஷ்டாக்ஷரம் உபதேசித்த தலம். பத்ரிநாத், பதரிகாச்ரமம் என்பது இது தான் (பதரி – இலந்தை).

தாருகாவனம் – ஈசனார் முனிவர்களின் செருக்கை அழித்த தலம்.

அமரருலகில் அமரர்க்கதிபதி இந்திரனுக்குரிய எழில் வாய்ந்த வனம் ‘நந்தன வனம்’. இதிலிருந்த பாரிஜாதத் தருவைத்தான் கண்ணபிரான் “கற்பகக் காவு கருதிய காதலிக்கு, இப்பொழுது ஈவன் என்று, இந்திரன் காவினில் நிற்பன செய்து, துவாரகையின் நிலாத்திகழ் முற்றத்துக்கு” எடுத்துச் சென்று அதை ஆங்கு நிறுவுகிறார்.

சம்ஸ்கிருத அகராதியான அமர கோசம் வனத்தைக் குறிக்க்ப பல சொற்களைத் தருகிறது. அடவீ, அரண்ய, விபின, க³ஹன, கானன, வன, ஸத்ர, த³வ, தா³வ இவை எல்லாம் காட்டைக் குறிக்கும் வட சொற்கள்.

காட்டுத்தீ (தாவாநலம்):

இன்னல்கள் பல சூழ்ந்திருப்பினும் உலகவாழ்வில் உள்ள உருசி நம்மை விடுவதில்லை; ஆனால் வேதாந்தியர் உலக வாழ்க்கையையே நாற்புறமும் சூழ்ந்த காட்டுத்தீயெனக் கருதுவர்.இலக்கியம் பல இடங்களில் கொடிய காட்டுத்தீயையும் வருணிக்கிறது. குந்தி தேவி, காந்தாரி, த்ருதராஷ்ட்ரன் மூவரும் வனவாழ்க்கையில் காட்டுத்தீயில் சிக்குண்டு உயிர் துறந்ததாக பாரதம் கூறும்.

திருமங்கையாழ்வாரின் ‘தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்ற’வர்ணனையில் காட்டுத்தீ இடம் பெறுகிறது –

நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே !
கனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே !
காய்த்த வாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்த தீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே !

அமெரிக்காவில் லேக் டாஹு பார்த்துவரும்போது காட்டுத்தீ உமிழ்ந்த சாம்பல் துகள், புகை மண்டலத்தினூடே கார் விரைந்து சென்றபோது ஆழ்வார் விவரித்த அஹோபிலம் நினைவுக்கு வந்தது.

வானப்ரஸ்தம்:

காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. மன்னர்கள் மக்களுக்கு முடிசூட்டியபின் காடுறை வாழ்க்கையில் ஈடுபட்டுத் தவமியற்றினர். மரங்களும், மான்கூட்டங்களும் மிகுதி. அதனால் மரவுரியும், மான்தோலும் மிக எளிதாக அறவோரின் ஆடைத் தேவைகளைப் பூர்த்தி செய்தன.

கலியில் காடுகள் அழிவுறும், ஆகவே வானப்ரஸ்தம் எளிதாக இராது என அன்றே அதற்குத் தடை விதித்தனர் அறவோர். ச்ரமணப் பிரிவினரின் காடுறை வாழ்க்கை தொடர்ந்தது. வர்தமானரும், புத்தபிரானும் காடேகி ஞானமெய்தினர். இந்தியச் சமய வரலாற்றில் இவர்கள் மைல்கற்கள்.

தமிழ் இலக்கிய மரபிலும் இந்தக் காடுறை வாழ்க்கை விவரிக்கப் படுகிறது. தொல்காப்பியத்தில் தாபத வாகை என்று ஒரு பகுதி உள்ளது. கானகத்தில் அறவோரின் தவ வாழ்க்கையை (தாபத) விவரிக்கும் பகுதி இது.

அரிய கொள்கையர் ஆரழல் ஐந்தினுண்
மருவி வீடு வளைக்குறு மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி..

இவ்வாறு தாபதர்களின் அற வாழ்க்கை கூறப்படுகின்றது.

தமிழ்ப் பண்பாட்டில் காடுகள்:

குறிஞ்சியும், முல்லையும் தமிழர்தம் வாழ்வோடு தொடர்புடையவை.

 • பருத்துயர்ந்த பெரிய மரங்கள் நெருங்கிய காடு – ’வல்லை’.
 • சிறுமரங்கள் நிறைந்த காடு – ’இறும்பு, குறுங்காடு’.
 • சிறு தூறுகள் நிறைந்த காடு – ’அரில், அறல், பதுக்கை’.
 • மிக முதிர்ந்த முற்றிய மரங்கள் மிகுந்த காடு – ’முதை’.
 • அரசனது காவலில் உள்ள காடு – ’கணையம், மிளை, அரண்’.

வன வளம் மிகவும் பெருகியிருந்த காலத்திலும் வனம் பேணுதல் முக்கியமான கடமையாகவே கருதப்பட்டது.

மன்னர்கள் தலைநகருக்கண்மையில் ‘உபவனம்’ அமைத்தனர். தமிழ் இலக்கியம் அதை ‘உவவனம்’ என்று கூறும். மணிமேகலைக் காப்பியத்தில் உவவனம் வருகிறது. மிதிலையின் உபவனத்தில் பிராட்டியார் இளவல் இராமனை முதன்முதலில் பார்த்து மகிழ்வெய்தியதாக ஹிந்தி மொழியில் கோஸ்வாமி துளஸீதாஸர் இயற்றிய இராமகாதை கூறுகிறது.

நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர். வேளிர் குல மன்னர்களுக்கும் காவல் மரமிருந்தது. காளையார் கோயிலின் பழந்தமிழ்ப் பெயர் ‘கானப்பேரெயில்’.

‘கா’ வனத்தைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; மலையாளத்தில் ‘காவு’ என ஆகும்.

ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை.

மறைக்காடு, மாங்காடு, வெண்காடு, ஆலங்காடு, ஆர்க்காடு இவையும் புனிதத் தலங்களே. [ஆற்காடு என எழுதுவது தவறு; அதை ஒட்டி எழுந்த ‘ஷடரண்யம்’ எனும் சங்கத மொழிபெயர்ப்பும் தவறான புரிதலின் விளைவே].

 • திந்த்ரிணீ வனம் – திண்டிவனம் [புளியங்காடு]
 • கடம்ப வனம் – மதுரையம்பதி
 • வேணு வனம் – நெல்லையம்பதி
 • தில்லை வனம் – தில்லையம்பதி
 • ஆனந்தவனம் – காசியம்பதி
 • சாயா வனம் – திருச்சாய்க்காடு
 • செண்பக வனம் – மன்னார்குடி
 • செண்பக வனம் – தென்காசி

நெல்லி, ஆல், அத்தி, அரசு, வில்வம் போன்ற மரங்களை வெட்டத் துணிய மாட்டார்கள்; தல விருட்சமில்லாத சிவ ஆலயம் தமிழ்நாட்டில் கிடையாது. இறைவனுக்குத் தேர் செய்ய வரவழைக்கப்பட்ட தச்சர், மன்னர் மருது பாண்டியரின் பெயர் தாங்கியதால், வைகைக் கரையிலிருந்த மருத மரத்தை வெட்ட மறுத்தது பழைய நிகழ்ச்சி.

இத்தனை இருந்தும் நாம் வனம் பேணுவதில், மரம் வளர்ப்பதில் மெத்தனம் காட்டுகிறோம்.

(தேவ் ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு).

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *