இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்

பூமிதேவிஇன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது.

இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் செடி கொடிகளும் விலங்குகளும் இறைத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன. ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் உபநிடத வரி அனைத்து உயிர்களிலும் பிரபஞ்சமெங்கும் இறைத்தன்மை வியாபித்திருப்பதைக் கூறுகிறது. இந்து தருமத்தின் மற்ற அனைத்து கோட்பாடுகளும் அழிந்து இந்த ஒரு வரி பிழைத்திருந்தால் இந்து தருமம் மீண்டும் பழைய செழுமையுடன் மீண்டு வந்திட இயலும் என்பார் மகாத்மா காந்தி. இந்து தருமத்தில் வனங்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.
அதர்வ வேதத்தின் ‘பூமி வணக்கம்’ எனும் துதிப்பாடல் உலகின் மிகப்பழமையான சூழலியல் குறித்த ஆன்மநேய பிரகடனம் எனலாம்.

மனிதர்களிடையே பகைமை ஒழியட்டும். உயரங்கள் மேடுகள் சமதளங்கள் எல்லாம் யாருடையதோ பல்வேறு ஆற்றல்களுடைய மூலிகைகளை யார் தாங்குகிறாளோ அந்த பூமி நமக்கு பரந்த இடத்தை தரட்டும். நமது வாழ்வை வளமை நிறைந்ததாக ஆக்கட்டும். சமுத்திரங்களும் நதிகளும் இதர நீர் நிலைகளும் நிலைப்பெற்றுள்ளவளும், அனைத்து உயிர்களும் வாழ உறைவிடம் அளிப்பவளுமானவளும் நமக்கு உணவைத்தருவதும் தன்னில் பயிர்கள் நிரம்பிய வயல்களைக் கொண்டிருப்பவளுமானவளுமான பூமித்தாய் நமக்கு சிறந்த அறுவடையை அருளட்டும். பூமியின் நீர்வளங்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை அவை எல்லா திசைகளிலும் தங்கு தடையில்லாமல் இரவும் பகலும் பாலைப்போல பாயட்டும். பூமி தேவியே உன் மைந்தர்களாக உன்னில் வாழும் பலவித மனிதரும் நன்மை கொண்டவர்களாக தீங்கு இல்லாமல் வாழட்டும். உன்னை நான் தீங்கு செய்திடாமல் வாழ்வேனாக. உன்னிலிருந்து நான் எடுக்கும் வளங்கள் மீண்டும் உன்னில் விரைவில் உருவாகிட அருள்வாய் என்றெல்லாம் பூமித்தாய் வேதகால முனிவர்களால் வணங்கப்படுகிறாள்.

இந்துக்கள் வனங்களை மதித்தனர். அவற்றினை புனித இடங்களாகப் போற்றினர். தியானிக்க வனங்களையே தேர்ந்தெடுத்தனர், ஒருவர் தன் வாழ்க்கையின் இல்லறக்கடமைகளை முடித்த பின்னர் வனங்களுக்கு சென்று ஆன்மிக கடமைகளை மேற்கொள்வர். வாழ்க்கையின் இந்த நிலை வனப்பிரஸ்தம் என்றே அழைக்கப்படுகிறது. இந்து பாரம்பரியத்தில் மூன்று வித வனங்கள் கூறப்படுகின்றன. அவையாவன ஸ்ரீ வனம் – அதாவது பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் வனம், தபோவனம் – அதாவது ஆன்மிக சாதனையாளர்களின் தியானங்களுக்காக உருவாக்கப்படும் வனங்கள், மகாவனம் – அனைத்து உயிர்களும் தங்களுக்கு ஆபத்தில்லாத உறைவிடமாக தேர்ந்தெடுக்கும் வனங்கள். இந்த மூன்று வனங்களுமே பாதுகாக்கப்பட வேண்டிய வனங்களாகும். இந்து தருமம் வனங்களை தெய்வத்தன்மை கொண்டவையாக கருதுகிறது. இதன் விளைவாக பாரத தேசமெங்கும் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்ட தெய்வ வனங்கள் உள்ளன.

போபாலில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரீய மானவ் சங்கிரகாலயா எனும் அமைப்பு 4875 புனிதவனங்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றின் பரப்பளவு 39, 063 ஏக்கர்களாகும். ஆனால் இந்த கணக்கெடுப்பில் அடங்காமல் பல புனித வனங்கள் பாரதம் முழுவதும் உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனங்கள் கூட நலிவடைந்து வரும் இந்த காலகட்டதிலும் புனித வனங்களின் பரப்பளவு அப்படியே இருந்து வருகிறது என இந்திய வன நிர்வாகதுறையின் இயக்குநரே கூறுகிறார். இன்றைய தேதியில் கேரளாவிலும் 500ஹெக்டேருக்கு மேலாக 2000 நாக காவுகள் உள்ளன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவியலாளர்கள் 722 தனித்தனி பூ பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 304 காவுகள் இன்றும் உள்ளன. மிகச்சிறந்த மூலிகை செடிகள் கிடைக்கும் இடமாக இந்த காடுகள் அறியப்படுகின்றன. ஆனால் சூழலியல் உணர்வு என்பது இந்து தர்மத்தை பொறுத்தவரையில் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படுவதாகும்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் பி.எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்:

“எங்கும் ஒற்றைத்தன்மையே படர்ந்திருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் இயற்கையின் பன்மையை பாதுகாப்பது நமது நோக்கமா அல்லது நம் வாழ்விடத்திலேயே இயற்கையின் பன்மை திகழ வேண்டுமென நாம் விரும்புகிறோமா? பிந்தைய பார்வையே உயிர் மண்டலத்துக்கு (biosphere) வலு அளிக்கும் பார்வையாகும். அதுவே நம்மை பிரம்மத்தில் வேர் கொண்ட பிரபஞ்ச விருட்சம் எனும் கருத்தாக்கத்துக்கு அழைத்து வருகிறது. இதனையே நம் ஞானிகள் உபநிடதங்களில் கூறினார்கள். தத்வமஸி (நீ அதாகவே இருக்கிறாய்) என்பது ஒவ்வொரு தனிமனிதனும் பிரபஞ்ச சிருஷ்டியில் ஒரு அங்கம் என்பதனைக் காட்டுகிறது. எனவே மனித குலம் சுற்றுப்புற சூழலில் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகவும் அனைத்து உயிர்களிடமும் அன்பும் தயையும் கொண்டதாகவும் அமைய வழி கோலுகிறது. இதுவே புத்தத்தில் சர்வபூத தயை என கூறப்படுகிறது. ” (Ecology and Sustainable development பக்.183)

இந்து தருமத்தின் சுற்றுச்சூழல் சாதனைகளாக பலவற்றைக் குறிப்பிடலாம். சிலவற்றை இங்கே காண்போம்.

பத்ரி வனம்:

1993 இல் இமாலய சூழலியல் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பத்ரிநாத்தில் ஏற்படும் சூழலியல் மாசு குறித்து கவலையுற்றார்கள். பத்ரி நாத் கோவிலின் அர்ச்சகருடன் அதனைக் குறித்து பேசினார்கள். அர்ச்சகர் பத்ரிநாத்தின் மரங்கள் சிவனின் கேசங்களாக வர்ணிக்கப்படுவதை தம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எடுத்து சொல்லி மரங்கள் நடுவதை ஒரு புனிதப்பணியாக அங்கு புனிதப்பயணம் மேற்கொள்ளுபவர்க்ளுக்கு ஆக்கினார். முதலில் நட்ட மரக்கன்றுகள் யாவும் கடுமையான குளிரில் இறந்துவிட்டன என்றாலும் அடுத்ததாக அங்கேயே ஒரு மரக்கன்றுகளுக்கான நர்சரியை தொடங்கி அங்கே மிகவும் உயரமான இடங்களுக்கும் பக்தர்கள் சென்று மரக்கன்றுகளை நட்டனர். இன்று பத்ரி வனத்தை பாதுகாப்பது அங்கு செல்லும் புண்ணிய தீர்த்த யாத்திரைகாரர்களுக்கும் ஒரு புனிதகடமையாகியுள்ளது.

நிர்மால்ய உரம்:

இந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல் வரை – மட்க வைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு மண்ணிற்கு வளமளிக்கிறது. சிந்தியுங்கள். மும்பை பிரபாதேவி கோவிலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமைகளில் அது 200,000 ஆக அதிகரிக்கிறது. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஒரு நாளைக்கு சராசரி 120 கிலோ நிர்மால்யத்தினை உருவாக்குகிறது. செவ்வாய்கிழமை இது 200 கிலோ ஆகிறது. ஒரு மாதத்தில் 1000 கிலோ இயற்கை உரம் தயார். இறையருளுக்கு பாத்தியதையான மலர்களிலிருந்து கிடைக்கும் இந்த உரங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கிலோ உரம் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமோகமாக இவை விற்று அவை வந்த நாள் மதியமே தீர்ந்து விடுகின்றனவாம்.

இத்தனியார் திருக்கோவில்களின் டிரஸ்டிகளில் ஒருவரான சஞ்சய் பகவத் முந்தைய நாட்களை நினைவுகூர்கிறார். “அப்போதெல்லாம் முந்தைய நாட்களில் சுவாமிக்கு சார்த்திய மலரணிகள் (நிர்மால்யம்) அப்படியே குவியும். நகராட்சி குப்பை வண்டிகள் குப்பைக் கிடங்குகளில் தள்ளும். அது ஒன்றுதான் அவற்றினை நீக்கிடும் ஒரே வழி.” 2005 மே மாதத்தில் ‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ எனும் தன்னார்வ அமைப்பு கோவில் டிரஸ்டினை அணுகியது. “முதலில் டிரஸ்டிகள் மத உணர்வுகள், இடப்பற்றாக்குறை என்றெல்லாம் தயங்கினர், என்றாலும் நாங்கள் விளக்கிய போது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இப்போது இது மிக சுமுகமாக நடக்கிறது.” என்கிறார். இத்தன்னார்வ அமைப்பினைச் சார்ந்த பிரதிபா பேல்வல்கர். இப்போது நிர்மால்யா என்பதே இந்த இயற்கை உரத்தின் பெயர். பாக்டீரியங்கள் உள்ள மட்கிய உரக்கலவை இது. பூக்களிலுள்ள ஈரப்பதம் போக மரத்தூள் சேர்க்கப்படுகிறது. இந்த உயிரிக்கலவையின் உயிரிக்கூட்டம் ஆக்ஸிஜனுடன் 7-8 நாட்கள் வரை வினைபுரிகிறது. லிச்சேட் உருவாக்கத்தை தடுக்க தொடர்ந்து இது கலக்கப்பட வேண்டும். இது பின்னர் சூரிய ஒளியில் 1-2 நாட்கள் உலரவைக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. 35 நாட்களில் தரமான உரம் தயாராகிவிடும்.

ஏற்கனவே 2002 இல் மும்பை கிரஹக் பஞ்சாயத், பர்லேஸ்வர் திருக்கோவிலில் நிர்மால்யத்தினை உரமாக்கும் திருப்பணியில் பேல்வல்கர் வெற்றி அடைந்துள்ளார். எனவே சித்தி விநாயகர் கோவில் அதிகாரிகளை சம்மதிக்க வைப்பதில் அவருக்கு அத்தனை பிரச்சனை இல்லை என்றுதான் கூறவேணும். மும்பை எக்ஸல் தொழிற்சாலை நிர்மால்ய கொள்ளவினைக் குறைத்திட ஒரு இயந்திரத்தை வடிவமைத்து பர்லேஸ்வர் திருக்கோவிலுக்கு கொடுத்தது.கொள்ளவு குறைப்பு மூலம் மட்கும் நேரத்தினைக் குறைத்திட முடியும். சித்தி விநாயகர் கோவில் இதனை விலைக்கொடுத்தே வாங்கிக்கொண்டது. 15 நிமிட இயக்கம் மூலம் 60 சதவிகித கொள்ளவினைக் குறைத்திட இயலும். இது முழு நேரத்தினையும் குறைக்கிறது. 35 நாட்கள் ஆகிற நேரம் இங்கு 15 நாட்கள் ஆகிறது. திருப்பதி, ஷீரடி ஆகிய கோவில்களுக்கும் இந்நிர்மால்ய உர உற்பத்தியை விரிவாக்க பேல்வல்கர் திட்டமிடுகிறார்.

நம் ஊர் கோவில்களிலும் இவ்வாறு கோவிலுக்கு ஒரு உர உற்பத்தி மையம் தொடங்கினால் என்ன?

[நன்றி: ‘Down to Earth’ நவம்பர்-30,2005 மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் : டிசம்பர் 14-2005]

வெட்டி முறிச்சான் அம்மன் கோவில

வெட்டி முறிச்சான்தேசிய நெடுஞ்சாலை 47 இல் கன்னியாகுமரிக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்திருக்கிறது வெட்டி முறிச்சான் அம்மன் கோவில். அந்த தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து வரும் பாதையில் அந்த பகுதியில் நெடுந்துயர்ந்த ஆலமரங்களைப் பார்க்க முடியும். முன்பு அரசாங்கம் இந்த மரங்களை வெட்டி பாதை போட முயன்றது. அதனை அந்த வட்டார மக்கள் எதிர்த்தனர். எனவே காவல் துறை உதவியுடன் வெளியூர் ஆட்களைக் கொண்டு அந்த மரத்தினை வெட்ட முயன்ற போது அந்த மரத்திலிருந்து இரத்தம் பீறிட உறைந்திருந்த அம்மன் உக்கிரமாக காவலர் தலைவர் முன் வெளிப்பட்டாள் என்றும் அதனைத் தொடர்ந்து அந்த மரங்களை வெட்டாமல் சாலை அமைக்கப்பட்டது என்பது ஐதீகம். அந்த ஐதீகத்துக்கு சான்றாக இன்றும் அங்கு நல்ல குளிர் தரும் அம்மரங்கள் நிற்கின்றன. மரத்தை வெட்டுவதை தடுத்தமையால் அந்த அம்மனுக்கு வெட்டி முறிச்சான் அம்மன் என்று பெயர். இந்த சூழலியலுக்கு பொருந்தும் நிகழ்ச்சியை சுதை சிற்பமாகவும் செய்து வைத்துள்ளனர் பக்தர்கள்.வெட்டி முறிச்சான்

விவசாயிகளை வாழவைக்கும் பஞ்சகவ்யம்:

இயற்கை விவசாய விஞ்ஞானி டாக்டர் நடராஜன் மாசி மாத மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில் சென்றிருந்தார். அவரது வார்த்தைகளில்
“அந்த இரவு எங்கள் ஊர் திருப்பாண்டி கொடுமுடி ஈசனைத் தரிசிக்க சென்றேன். அங்கே அவன் திருவடிகளில் அந்த அற்புதம் சித்து விளையாட்டு நடந்தது. பூசைக்குப் பின் பஞ்சகவ்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நானும் சும்மா இராமல் எங்கள் குருக்கள் அய்யரைப் பார்த்து “என்ன சுவாமிகளே இந்த பஞ்சகவ்யத்தால் என்ன பலன்” என்று கேட்டேன். அவரும் இரத்தின சுருக்கமாக “இது வந்த நோயைப் போக்கும். இனிமேல் வரப்போகும் நோய்களை வராமல் தடுக்கும்.” என்று வெகு அழகாக சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இது அவர் சொல்லவில்லை! எனை ஆட்கொண்ட அந்த ஈசனே அவர் உருவில் சொன்னார் என்றே இன்றும் நான் நம்புகிறேன்.. அவர் சொன்ன வேளையில் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த பிரேசில் காரர் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாரே நாம் ஏன் பஞ்சாட்சரம் போன்ற இந்த பஞ்சகவ்யத்தின் ஐந்து பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என எண்ணினேன். அதன் விளைவே நம் பஞ்சத்தையும் பிணியையும் போக்க வந்துள்ள இந்த பஞ்சகவ்யா எனும் மாருந்தாகும். இது பயிர்களுக்கு விருந்தாகும்.”

தமிழ்நாட்டு தலவிருட்சங்கள் சில:

கபாலீஸ்வரர் கோவில், சென்னை – புன்நாகம்
ஆலங்காட்டப்பர் கோவில் – திருவள்ளுவர் மாவட்டம் – வடவிருட்சம்
மருத்தீஸ்வரர் கோவில் – காஞ்சி புரம் – வன்னி (ஷாமி) மரம்
அண்ணாமலை ஈஸ்வரர் – திருவண்ணாமலை – பகுல மரம்
மருத்துவனார் கோவில் – தஞ்சாவூர் மாவட்டம் – அர்ஜுன மரம்
திருமேனிநாதர் – விருதுநகர் மாவட்டம் – அஸ்வத மரம்
வேளப்பர் கோவில் – தேனி மாவட்டம் – மாமரம்
ராமநாதர் கோவில் – ராமநாதபுரம் மாவட்டம் – வில்வம்
அவிநாசி லிங்கேஸ்வரர் – கோவை மாவட்டம் – புடலை
அங்காள ஈஸ்வரி – கிருஷ்ண கிரி மாவட்டம் – வேம்பு
அர்த்தநாரீஸ்வரர் – நாமக்கல் மாவட்டம் – இலுப்பை
சொக்கநாதர் – மதுரை மாவட்டம் – கதம்ப மரம்
வைகுண்டநாதர் – தூத்துக்குடி மாவட்டம் – பாரிஜாதம்
நாகராஜர் – கன்னியாகுமரி மாவட்டம் – நாகலிங்கம்
ஸ்தாணுமாலைய சுவாமி கோவில் – கன்னியாகுமரி மாவட்டம் – கொன்றை

5 Replies to “இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்”

  1. அற்புதமான பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி. இந்துமதத்தின் இயற்கையை வணங்கும் தத்துவம் இன்று உலகத்திற்கு இன்றியமையாதது.

    வட துருவம் உருகி பனிப்பாறைகள் கறைந்துவரும் இன்றைய பயங்கர சூழலில் இமயத்தின் பனித்துருவத்தில் உறையும் ஈச தத்துவம் தேவையாகிறது.

    எங்கோ சுவனத்திலும், பரம மண்டலத்திலும் இறை இல்லை மாறாக என்னுள்ளும் இந்த இயற்கையிலுமே அவன் இருக்கிறான் என்ற உணர்வு கொண்ட இந்த மதக்கோட்பாடும், மண்ணை தன் தாயாக வணங்கும் நம் இந்து தாய் கலாசாரமும் இந்த அகிலத்தில் பரவட்டும்.

    ஒரு மரம் பத்து குழந்தைகளுக்கு சமம் என்கிறது வேதம். ஆம், இயற்கையில் ஒரு மரத்தின் சுற்றுப்புற சூழல் மதிப்பு என்ன என்று தெரிந்துகொள்வோம்!

    நன்றி

    ஜயராமன்

  2. ஒரு மரம் பத்து குழந்தைகளுக்குச் சமம் என்று சொல்லும் அந்த வேத வரியை இங்கே இடுங்களேன். அறிந்துகொள்ள ஆசை.

  3. Very good article and good information’s from vedas,
    I am looking forward to know more from vedas….

    mohamed ansari
    qatar

  4. வேப்ப மரம், அரசமரம் இரண்டுமே தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்துக்களால் வணங்கப்பட்டு வரும் மரங்கள் ஆகும். மரம் செடி கொடி ஆகிய அனைத்து தாவர வகைகளும் பரம்பொருளின் தோற்றங்களே ஆகும். இந்த உணர்வு மேலும் பரப்ப பட்டால் நாடு மேலும் நலம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *