சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..


’ஃபஸ்ட் சிங்கிள்’ போன்ற மிகைப்படுத்தல் எதுவும் இல்லாமல் சந்திரயான் பிரபலமாகிவிட்டது. மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் கடைசி பந்து சிக்ஸர் போன்று பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம்.

சந்திரயான் ஏதோ ‘ராக்கெட்’ சமாசாரம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதற்கும் மேலே.

இன்னும் இரண்டே கிமீ தூரம் இருக்க சந்திரயான்-2 ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முடியாமல் தொப் என்று கீழே விழுந்த போது பையன் நல்லா தான் படிச்சான், பரீட்சையில் மார்க் வாங்கவில்லை போன்ற மனோநிலைக்குச் சென்றோம். ஆனாலும், விண்வெளியை நாசா போன்ற பணக்கார நாடுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை அந்த ஒரே இரவில் இந்தியா மாற்றியது.

சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.

விண்வெளி என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பரவசமூட்டும் ஒரு சொல்லாக இருக்கிறது. புவி தனது அச்சிலே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றும் ஒரு கோளம் என்று ஆர்யபட்டா பொயு-499ல் கூறினார்.

இணை கோடுகளின் பண்புகள் (properties of parallel lines) என்ற பாடம் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருக்கிறது. அதிலிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். இந்த படத்தில் ‘A’ ‘B’ என்ற கோணங்களின் அளவு ஒன்றே என்று புரிந்துகொண்டு மேலே படிக்கவும்.

Properties of parallel lines

இந்த விஷயங்கள் எல்லாம் ஏதோ கட்டடம் கட்டும் கட்டட பொறியியலாளர்களுக்கு மட்டுமே பயன்படும் என்று நினைக்க வேண்டாம், இது புவியின் சுற்றளவை மிகத்துல்லியமாகக் கணக்கிட உதவும். மூன்றாம் நூற்றாண்டில் செயற்கைக் கோள்கள், கணினி இல்லாத காலத்தில் ஒரு கோல்மூலம் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.

எப்படி? எகிப்தில் வாழ்ந்த எரோடோஸ்தானிஸ் (Eratosthens) கோடையில் தன் வசிக்கும் இடத்தில் உள்ள கிணற்றில் சூரியன் நேராகப் பிரதிபலிப்பதைக் கண்டார். அப்போது நேர் வடக்கே உள்ள இன்னொரு இடத்தில் சூரியன் 7.2° கோணத்தில் நிழலை விழுவதைக் கண்டார். பார்க்க: கீழே உள்ள படம். கிணறு தெரிகிறதா ?

கிரேக்க மேதை Syene (A) என்ற இடத்தில் கிணறு சூரிய பிம்பத்தைப் பிரதிபலித்தது. அதே நேரம் சுமார் 800 கிமீ தொலைவில் ஒரு கம்பத்தை வைத்து அது 7.2° கோணத்தில் நிழலைப் பிரதிபலித்த இடம் Alexndria (B) (படத்தில் α இரண்டு இடங்களில் இருப்பதைப் பார்க்கலாம்.

இரு இடங்களுக்கும் உள்ள தொலைவை ஒட்டகத்தின் மூலம் பயணம் செய்து அளந்து, புவியின் சுற்றளவு 39,852 கிமீ என்று கணக்கிட்டார். இன்றைய செயற்கைக் கோள் பூமியின் சுற்றளவு 40,075 கிமீ என்று சொல்லுகிறது ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வெறும் ஒரு விழுக்காடு வேறுபாட்டில் கணக்கிட்டுள்ளார்!

அடுத்து புவி ஈர்ப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். புவி ஈர்ப்பு என்றவுடன் ஆப்பிள் கீழே விழுந்த கதையை நினைத்துக்கொள்வோம். அதன் பயன்பாடு என்ன என்று கேட்டால் உடனே பதில் சொல்லத் தெரியாது. இந்தப் பூமியின் கடல், மலைகள், பாலைவனம், காடுகள் என்று இருக்கிறது பூமியின் ஈர்ப்பு விசையைத் துல்லியமாகத் தெரிந்தால் இந்தப் பூமியின் வடிவத்தையும் துல்லியமாகச் சொல்லலாம்!

மெரினா கடற்கரையில் நின்று பார்த்தால் கடல் நீர் மட்டம் ஒரே மாதிரி இருப்பதைப் போல நமக்குத் தெரியும். கடலின் நீர் மட்டத்தின் கீழ் ஏற்றத் தாழ்வுகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. அதற்கு உதவுவது புவி ஈர்ப்புதான்! பார்க்க படம் – ஈர்ப்பு மாறும்!

ஈர்ப்பு விசையை எதற்கு அளக்க வேண்டும் அது அவ்வளவு முக்கியமானதா என்று நினைக்கலாம். நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் இறங்கியபோது குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டியவர், ஆறு கிமீ தள்ளி இறங்கினார். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையைச் சரியாக அறியாததால்.

பூமியின் ஈர்ப்பு விசை, நிலவின் ஈர்ப்பு விசை மிகச் சரியாக அளவிட்டால்தான் நாம் அனுப்பும் கோள்களைச் சரிவரச் செலுத்த முடியும்!

அடுத்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது சுற்றுப்பாதை (orbit). கோள்கள் பூமியை அதன் சுற்றுப்பாதையில் சுற்றுகிறது. கோள்கள் சுற்றும்போது பூமியின் வடதுருவம் தென் துருவம் பக்கம் வரும்போது புவி ஈர்ப்பு மாறுகிறது அந்தச் சமயத்தில் கோள்களை ஸ்டியரிங்கை வளைப்பது மாதிரி வளைத்து அதைச் சரி செய்ய வேண்டும்.

நாம் கார் ஓட்டுவது போல அதிகமாக வளைக்க முடியாது. 1° கீழ் வளைக்க வேண்டும். சுற்றுப்பாதை பயணம் என்பது திருமண வாழ்வு மாதிரி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ தேவை. கார் ஓட்டுவது என்பது இரு பரிமாணத்தைக் கொண்டது. சாலை சரியாக இருந்தால் போதும், ஆனால் அந்தரத்தில் பறக்கும் கோள்களுக்கு மூன்று பரிமாணம். பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் உதாரணமாகக் காற்றின் வேகம், சூரியனின் வெப்பம் போன்றவை. இந்தச் சவால்கள் இஸ்ரோவிலிருந்து கண்காணித்து கோள்களுக்குத் தகுந்த அறிவுரையைக் கொடுக்க வேண்டும். சூரியனின் வெப்பம் அதிகமானால் மூலக்கூறுகளின் அடர்த்தி (density) அதிகமாகும். இந்தச் சமயத்தில் கோள்களின் சாய்வைச் சரி செய்ய வேண்டும். சில சமயம் 0.15° அளவுக்குக் கூடத் திருப்ப வேண்டும், இல்லை என்றால் வழி தவறித் தொலைந்துவிடும்!

சூரியனுடன் இணைந்து சில கோள்கள் சுற்றுகின்றன. எவ்வளவு உயரத்தில் எவ்வளவு சாய்ந்த நிலையில் கோணத்தின் சுற்றுப்பாதை அமைத்தால் ஒரு நாளைக்கு எத்தனை முறை பூமியைச் சுற்றலாம் போன்ற கணக்குகளை விஞ்ஞானிகள் கணக்கு செய்து அனுப்புகிறார்கள்.

நாம் தீபாவளி ராக்கெட் விடும்போது அதன் தலையில் ஒரு சின்னக் கல்லைக் கட்டினால் அது மேலே செல்லாமல் நம் மீது பாயும். இதற்கு ராக்கெட் எடை கூடுதலாக இருப்பதுதான் காரணம். அதை மேலே அனுப்ப அதற்கு அதிக எரிபொருள் தேவை.

ஐந்து டன் ஏவுகணையை ஐந்து டன் விசையால் (force) மேலே செலுத்த முடியாது. அதைவிட அதிகமாக வேண்டும். விண்ணில் செலுத்தப்படும் ராக்கெடுக்கு எவ்வளவு எரிசக்தி, விசை, உந்து திறன் (thrust) என்று எல்லாம் முன்கூட்டியே சரியாகக் கணக்கிட்டுச் செயல்படுத்த வேண்டும். உந்துதிறன் ராக்கெடுக்கு பூமியின் புவி ஈர்ப்பைச் சமாளிக்க வேண்டிய வலிமை தேவை என்பதைக் குறிக்கும்.

புறப்படும் சமயம் (lift-off mass) சந்திரயான்-1 நிறை – 1380 கிலோ. சந்திரயான்-2ன் நிறை 3850 கிலோ. அதனால் மேலே செல்லச் செல்ல அதற்கு அதிக வலிமை தேவைப்படும். அப்படி மேலே செல்லும்போது, அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச் சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இன்று 3850 கிலோ கொண்ட ராக்கெட் அனுப்பும் நாம் 1967ல் முதல் ராக்கெட் அனுப்பியபோது அதன் எடை 70 கிலோதான். குறுக்களவு வெறும் 75மிமீ தான். மேலே சென்ற தூரம் 4.2 கிமீ. அன்று பலர் இந்தியா ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளை மேலே அனுப்பியது என்று கேலி பேசினார்கள்.

மற்றவர்கள் கேலி பேசியபோது இந்திய விஞ்ஞானிகள் மேலே சென்ற ராக்கெட் தங்கள் வைத்திருந்த குறிப்புகளுடன் ஒத்துப் போகிறதா என்று பார்த்தார்கள். அவை யாவும் சரியாக இருந்ததைக் கண்டு, அடிப்படையைக் கற்றுக்கொண்டு விட்டோம் என்ற சந்தோஷப்பட்டு, தங்களிடம் பெரிய ராக்கெட்செய்யும் வசதி இருந்தால் இன்னும் அதிக தூரம் அனுப்பலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். படிப்படியாக ராக்கெட் செய்து ஐம்பது ஆண்டுகளில் சந்திரயான் என்ற பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

பொதுவாக ராக்கெட் எல்லாம் இயற்பியல் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருப்போம். ஆனால் ராக்கெட்டுக்கு வேண்டிய எரிபொருள் எல்லாம் வேதியியல் சம்பந்தப்பட்டது. ராக்கெட்டுக்கு வேண்டிய உந்து சக்தியைத் தருவது புரொப்பலண்ட் எனப்படும் உந்து அமைப்பு. இது திட அல்லது திரவமாக இருக்கலாம். பல ரசாயனங்கள் எப்படி எவ்வளவு எரிக்க வேண்டும், எந்த வெப்ப நிலை என்று எல்லாம் சரியாகக் கணக்கிட வேண்டும்.

நாளை மனிதனை அனுப்பும்போது இதில் மருத்துவமும் சேர்ந்துகொள்ளும். மனிதன் விண்வெளியை நோக்கிப் போகும் உடம்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கேற்றாற் போலத் திட்டமிடவேண்டும்.
சுமார் இரண்டு லிட்டர் ரத்தம் மற்றும் திசு திரவம் விரைவாக இடம்பெயர்ந்து, கீழ் முனைகளிலிருந்து உடலின் மேல் பகுதிகளை நோக்கிப் போகும்போது, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இதயம் பாதிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் இதயம் மட்டும் இல்லை, சிறுநீரகங்களின் உப்பு மற்றும் நீர் வெளியேற்றத்தில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மனிதனும், மைகிரோ கிராவிட்டியும் என்று தனியாகக் கட்டுரையே எழுதலாம்.

GLSV என்ற சொல் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல். SLV – என்றால் Satellite Launch Vechile. இது மூன்று அல்லது நான்கு நிலை வாகனமாகும். சர்க்கஸில் கோமாளி மேலே ஏற ஏற தன் சட்டையைக் கழட்டிப் போடுவது போல, இதில் ஒவ்வொரு பாகமாக! அப்படிச் செல்லும்போது இதன் எடை குறைந்து கடைசியில் செயற்கைக் கோள் மட்டும் மேலே சுற்றுப்பாதையில் துப்பிவிடும்.

பார்க்க படம் : துப்பிவிடும்!

இதன் ஒவ்வொரு பாகத்திலும் திரவ எரிபொருளைப் பற்றவைத்தல் முறைகளில் இஸ்ரோ நல்தேர்ச்சி அடைந்தது, அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக! ஆனால் அதே சமயம் அவர்களைவிடச் செலவு மிக குறைவாகச் செய்கிறது. சந்திரயான் என்ன சிறப்பு?

சந்திரயான் மேலே கூறிய SLV சமாசாரம்தான் இது. ஆர்பிட்டர் என்ற ஒன்றை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆர்பிட்டரை மற்ற செயற்கைக்கோள் மாதிரி நிலவைச் சுற்றவிட்டுவிட்டு அதிலிருந்து ‘விக்ரமை’ நிலவுக்கு அனுப்பி, அதன் மேற்பரப்பில் தரையிறங்கும் அதுவும் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் முயற்சி, இதுவரை யாரும் செய்யாதது.

பூமியிலிருந்து சந்திரயான் எப்படிச் சென்றது என்று அறிந்துகொண்டால் நம் இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை வியக்கலாம்.

சந்திரயான்-1 சில ஆண்டுகளுக்கு முன் சென்று நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்து வரலாறு படைத்தது. ஆனால் சந்திரயான்வின் முக்கிய விஷயம் ‘சாஃப்ட் லேண்டிங்’ என்பதுதான். சந்திரனில் மனிதன் இறங்க இது ஒரு ‘Proof of concept’ என்று கூடச் சொல்லலாம்.

செயற்கைக் கோள் பற்றிப் படிக்கும் போது ‘பேலோட்’ என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கலாம். இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். ஒரு தபால் அனுப்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு கவர் மீது பெறுநர் முகவரி; உள்ளே கடிதமோ பொருளோ வைத்து அனுப்புகிறீர்கள். பெறுநர் என்ன செய்கிறார், கவரைப் பிரித்து போட்டு விட்டு உள்ளே இருக்கும் கடிதத்தை எடுத்துக்கொள்கிறார்.

உள்ளே இருக்கும் அந்த சமாசாரத்துக்குப் பெயர் தான் பேலோடு. ஒரு கவர் அதற்குள் இன்னொரு கவர் அதற்குள் இன்னொரு கவர் என்று… இருந்தால்?

கவருக்குள் இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்…. இப்படி. சந்திரயான்விலும் இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது. சந்திரயான்ல் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) என்ற மூன்று விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. மூன்று கருவிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பார்க்க படம் : பேலோட் ( படம் இஸ்ரோ)

ஆர்பிட்டர் ஒரு கவர் அதற்குள் விக்ரம் என்ற கவர் அதற்குள் ரோவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ராக்கெட் மேலே சென்றவுடன் ஆர்பிட்டரை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் புகுத்தும். படத்தில் 170 x 39120கிமீ என்று இருப்பதைக் கவனிக்கலாம். பூமிக்கு அருகில் 170 கிமீ தூரமும் அதிகபட்ச தூரமாக 39120 கிமீ புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் சுற்ற வேண்டும் என்று இஸ்ரோவிலிருந்து ஆர்பிட்டரைக் கட்டுப்பாடு செய்வார்கள்.

பூமியை ஐந்து முறை சுற்றி பிறகு நிலவின் சுற்றுப்பாதையில் நகர்த்திவிடும். மீண்டும் சில நாட்கள் சந்தினை சுற்றி சுற்றி அதன் அருகில் செல்லும். நிலவுக்கு அருகில் சென்றவுடன் 100கிமீ சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் கழன்று கொள்ளும். விக்ரம் நிலவைச் சுற்றி 30 கிமீ தூரத்தில் சுற்ற ஆரம்பிக்கும். (ஆர்பிட்டரின் பேலோட் விக்ரம் என்று புரிந்திருக்கும்).

விக்ரம் நான்கு நாட்கள் சந்திரனைச் சுற்றிய பிறகு அதிலிருக்கும் உயர் தெளிவுத்திறன் கேமரா ஒன்று வெளியே வந்து ‘எந்த இடத்தில் தரையிறங்கலாம்’ என்று பொருத்தமான இடங்களைப் படம் பிடித்து அனுப்பும்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்தப் படங்களை ஆராய்ந்து பொருத்தமான இடம் எது என்று தேர்வு செய்து அந்த வரைபடத்தை விக்ரத்துக்கு, வாட்ஸ் ஆப்பில் ‘லொகேஷன்’ அனுப்புவது போல, அனுப்புவார்கள். விக்ரம் அதைப் புரிந்துகொண்டு அந்த இடத்தில் தரையிறங்கத் திட்டமிட்டுத் தரையிறங்கும். இது தான் ‘சாஃப்ட் லேண்டிங்’ என்பார்கள்.

நேற்று 150 மீட்டர் உயரத்தில் இருந்த போது தரையிறங்குவதாக இருந்த இடத்தின் தரைப்பகுதியில் இடர் இருப்பதை உடனடியாக உணர்ந்த விக்ரம் லேண்டர், பக்கவாட்டில் நகர்ந்தது என்பதை நேற்று கவனித்திருக்க முடியாது.

சந்திரயான்-2 வின் விக்ரம் படங்களை அனுப்பி இஸ்ரோ தேர்ந்தெடுத்து அனுப்பிய பின் அது தரையிறங்கும் போது சுமார் 2 கிமீ தூரத்தில் தகவல் அனுப்புவது துண்டிக்கப்பட்டு ‘தொப்’ என்று கீழே விழுந்தது.

விக்ரம் லாண்டிங் செய்த பிறகு, அதிலிருந்து ஒரு சருக்கு மரம் மாதிரி ஒன்று வெளியே வந்து பிரக்யான் என்ற சின்ன வண்டியை வெளியே அனுப்பும். இதை ரோவர் என்பார்கள்.

ரோவரில் இதே போல உயர் திறன் படக்கருவி மற்றும் எஸ்ரே போன்ற கருவிகள் ரசாயனம், சுற்றுப்புறம், சூழ்நிலையைச் சோதிக்க மீட்டர், மானிட்டர் என்று பல கருவிகள் அதில் இருக்கும். இது எல்லாம் அதன் பேலோட்.

விக்ரம், பிரக்யான் இரண்டும் ஒரு ‘நிலவு நாள்’ வேலை செய்யும். ஒரு நிலவு நாள் என்பது நமக்கு 14 நாட்கள். ரோவர் சந்திரனை சுமார் 500கிமீ சுற்றும். ஆர்பிட்டர் நிலவை ஒரு வருடம் சுற்றும்.

ராக்கெட் அனுப்புவது என்பது எவ்வளவு கடினம் என்று புரிந்திருக்கும். சுமார் 0.9டிகிரீ தப்பு செய்தாலும் சுற்றுப்பாதை மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஈர்ப்பு விசை, உந்து சக்தி என்று எல்லாம் சரியாகக் கணக்கிட்டுச் செய்ய வேண்டும். இதில் எல்லாம் இஸ்ரோ தேர்ச்சி பெற்றுவிட்டது. மொத்தம் 3,84,000 கிமீ சென்று கடைசி ‘சாப்ட் லேண்டிங்’ மட்டும்தான் செய்ய வேண்டும். அதிலும் நேற்று முதல் வெற்றி! (இதுவரை மொத்தம் 38 மென்மையான தரையிறங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றி விகிதம் 52%.)

அடுத்த விண்வெளிக்கு விக்ரமிலிருந்து அனுப்பும் பேலோட் ஒரு இந்தியனாக இருப்பான். 2059ல் அத்திவரதர் வெளிவருவதற்குள் இந்தியா பல முறை நிலவைத் தொட்டுவிட்டு வந்துவிடும்!

பொதுவாக நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை நம்மையும் அறியாமல் நம்மிடம் இருக்கும். வெளிநாடு சென்றவர்கள் இதை கூடுதலாக அனுபவித்திருக்கலாம். கடந்த சில வருடங்களாக நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த மனப்பான்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று நிலவை மென்மையாக முத்தமிட்ட போது அந்த மனப்பான்மை முழுவதும் மறைந்து ’மதி நிறைந்த நன்னாளானது’.

நேற்று தரையிரங்கிய பின் என் நண்பரை அழைத்தேன் “சார் ’ஜெயிலர்’ படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் திரும்ப கூப்பிடுகிறேன்’ என்றான்.

(வலம் அக்டோபர் 2019ல் எழுதிய கட்டுரை சில மாற்றங்களுடன்).

குழந்தைத்தனமான படங்கள் : சுஜாதா தேசிகன்

(கட்டுரையாசிரியர் சுஜாதா தேசிகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..”

 1. நேரு இஸ்ரோவினை தொடங்கினார் எனும் வாதமெல்லாம் அர்த்தமற்றவை, அக்காலங்களில் அதாவது 1960களில் ஆசிய நாட்டுக்கு ஐநாவில் நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டும் எனும் கோஷம் இருந்தது

  உலகின் மாபெரும் ஜனநாயக நாடு எனும் வகையில் இந்தியாவுக்குத்தான் வாய்ப்பு இருந்தது ஆனால் அவர் சீனாவுக்கு விட்டுகொடுத்தார்

  ஐநாவில் சோவியத், சீனா என இரு கம்யூனிச தேசங்கள் வந்தது மாபெரும் தவறு, இந்த தவறுக்கு துணைபோனவர் அய்யா ஆசிய சோதி

  இவர் செய்த குழப்பத்தின் உச்சகட்டம் அணிசேரா நாடுகள் என்றோரு அமைப்பை வைத்திருந்தார், பஞ்சசீல கொள்கை எல்லாம் வைத்தார், இந்த அமைப்பில் இருந்த ஒருநாடும் உருப்படவில்லை இந்தியா உள்பட‌

  அணிசேரா நாடுகளின் பிரதான நோக்கம் அணுசக்தியினை ஆக்கசக்திக்கு பயன்படுத்துவது நாங்கள் அணுகுண்டுக்கு எதிரானவர்கள் என கிளம்பினார் நேரு

  சீனா எனும் பெரும் எதிரியிடம் அணுகுண்டு இருந்தபோதும் நேரு இதனையே சொன்னார், அப்படி அணுவின ஆக்கசதிக்கு பயன்படுத்துவோம் என்றுதான் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் போன்றோரை அழைத்து வந்தார்

  உலகுக்கே வழிகாட்டுவதாக சொல்லிகொண்டார் ஆனால் என்ன வழிகாட்டினார் என்பது தெரியாது

  அப்போது உலகம் விண்வெளி பந்தயத்தில் இருந்தது சோவியத் ரஷ்யாவின் கை ஓங்கியது, கென்னடி ஒருபடி மேலே சென்று ஒரு அமெரிக்கன் நிலவில் இறங்குவான் என சவால்விடுத்தார்

  தன் பலத்தைகாட்ட நிலாவின் ஒரு பகுதியினை உடைக்கபோவதாக சோவியத் சொல்ல உலகம் அதிர்ந்தது பின் அத்திட்டம் நடக்கவில்லை அல்லது சாத்தியமில்லை

  இந்த பரபரப்பான காலகட்டத்தில்தான் விண்வெளியில் அமைதியினை ஏற்படுத்து ஆய்வுகளை செய்வது எப்படி என ஒரு குழுவினை அமைத்தார் நேரு

  அது ஆலோசனை சொல்லும் குழுதானே தவிர விண்வெளி ஆய்வு ஏதும் செய்யாது, காஸ்மிக் கதிர்வீச்சு தொடர்பான சில ஆய்வுகளை செய்யத்தான் பாபா அந்த குழுவில் வலியுறுத்தினார்

  இந்த குழு பெயரளவில் இருந்தது 1962 ஆகஸ்டில் இது பற்றி பேச்சு வந்தது, அடுத்த இரு மாதத்தில்சீனா இந்தியாமேல் பெரும் அடியினை கொடுக்க எல்லம கலைந்தது

  நேரு ஒருமாதிரி ஆகிவிட்டார் விழுந்த அடி அப்படி, அத்தோடு மரித்தார் விண்வெளி ஆய்வெல்லாம் இல்லை

  சாஸ்திரி 1965 பாகிஸ்தான் போரின்போதே மறைந்தார்

  டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966ல் மறைந்துவிட அல்லது சர்ச்சையாக மரணித்துவிட எல்லாம் குழம்பிற்று

  இந்திரா 1969ல் இஸ்ரோவினை தொடங்கினாலும் விக்ரம் சாராபாயின் மர்ம மரணம் பெரும் பின்னடைவை கொடுத்தது

  பின் சதீஷ்தவானும் அப்துல்கலாமும் இன்னும் பலரும் விண்வெளி ஆய்வுகளை செய்தார்கள அந்த அனுபவத்தில் டி.ஆர்.டி.ஒ உருவானது எனினும் சக்திமிக்க ராக்கெட்டுகள், நிலா போன்ற பயணமெல்லாம் காங்கிரசுக்கு விருப்பமில்லை

  வாஜ்பாய் அதை அடுத்த படிநிலைக்கு மாற்றினார், மோடி அதனை இன்னும் உயர்த்தியிருக்கின்றார்

  ஆக நேருதான் விண்வெளி யுகத்தை தொடங்கினார் என்பது அய்யா ராம்சாமி ஐஐடி கல்விநிலைய்த்தை நிறுவினார் என்பதற்கு சமம்

 2. கிரீஸ்நாட்டில் இருந்து திரும்பியமோடி சிறிதும் சோர்வின்றி சந்திராயன் 3 வெற்றி விஞ்ஞானிகளை பெங்களூருவில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

  அப்போது அவரின் உரையும் பேச்சும் உருக்கமாக இருந்தது, எந்த மேடையிலும் உணர்ச்சிகளை காட்டாத மோடி தேசம்பெற்ற பெருவெற்றியின் விழா மேடையில் சற்று உணர்ச்சி மிகுதியால் கலங்கினார்

  நிச்சயம் அது மாபெரும் வெற்றி என்பது நமக்கு தெரியும், எவ்வளவு சவால்களை மறைமுக தடைகளை நாட்டுக்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் பெற்றோம் என்பது ஆள்வோருக்குத்தான் தெரியும்

  அவ்வகையில் அந்த தடைகளை தாண்டிய மகிழ்வில் அவர் அப்படி உருக்க்கமாக நின்றிருக்கலாம்

  ஆகஸ்டு 23 இனி இந்திய விண்வெளி தினம் என அறிவித்துவிட்டார் மோடி

  சந்திராயன் 3 இறங்கிய இடம் அதாவது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் “சிவசக்தி” என அழைக்கபடும் என பிரதமர் சொல்லியிருக்கின்றார்

  இங்கே சில அரைபதர்கள் , அறவே உலக விஷயம் தெரியாதவர்கள் அது எப்படி உலக அனுமதி இல்லாமல் நாமே நிலவில் பெயரிடமுடியும் கத்த தொடங்கிவிட்டன

  விஷயம் அப்படி அல்ல‌

  நிலாவில் எந்த நாடு கால்வைக்குமோ அந்த புள்ளிக்கு அவரவர் விரும்பிய பெயரை வைப்பார்கள், ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த இடம் tranquillity base என அழைக்கபடும் அதாவது கனத்த அமைதி நிலவும் முகாம் என பொருள்

  இன்னும் ரஷ்யாவும் சீனாவும் அவரவர் தேச அடையாளங்களை அங்கே பெயராக அமைத்திருக்கின்றன‌

  அப்படி இந்தியா முதன் முதலில் கலம் இறக்கிய இடத்தின் பெயர் “சிவசக்தி” என சூட்டபட்டிருக்கின்றது

  இந்த திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் அவர்கள் ஆண் விஞ்ஞானிகளோடு சேர்ந்து செய்த இந்த சாதனைக்காக பாரத மரபுபடி சிவசக்தி என பெயர் சூட்டியிருகின்றது இந்தியா

  இது நல்ல விஷயம், வாழ்த்துகுரியது

  உலகம் முழுக்க “சிவசக்தி” எனும் பெயர் இப்போது எதிரொலிக்கின்றது

  அப்பல்லோ என்பது கிரேக்க பெயர், லூனா என்பதும் மேற்கத்திய புராண பெயர், செங் இ என்பது சீனாவின் பண்டைய புராண அடையாள பாத்திரம்

  இந்தியா “சிவசக்தி” என தன் அடையாளத்தை நிறுத்தியிருக்கின்றது, தன் தெய்வத்தின் பெயரை பதித்திருக்கின்றது

  இந்த உலகில் யார் ஒரு இடத்தை புதிதாக அடைவார்களோ அவர்கள் அந்த இடத்துக்கு பெயரிடலாம் இது நியதி

  அமெரிக்கா கண்டமே அப்படி அடையாளமானது, ஆஸ்திரேலியா ஆனது இன்னும் பல விஷயங்கள் அப்படி அடையாளமாயின‌

  இப்படி தீவுகள் உண்டு, கடல்வழி நீர் சந்திப்பு உண்டு

  அப்படியே நிலாவில் இந்தியா நுழைந்த இடம் இனி “சிவசக்தி” இதில் ஒன்றும் சர்ச்சையல்ல, யாரின் அனுமதியினை பெற அவசியமுமில்லை

  “நாம் குறைந்த செலவில் , மிக குறைந்த செலவில் நிலாவுக்கு கலம் செலுத்தி உலகுக்கு வழிகாட்டியிருக்கின்றோம், இனி நம்மை தொடர்ந்து பலர் முயற்சிப்பார்கள் நம்மோடு சேர்ந்தும் முயற்சிப்பார்கள்

  உலகிற்கு பதியவாசலை திறந்துள்ளோம், நம் சாதனை நமக்கானது மட்டுமல்ல, உலகுக்கானது” என மோடி சொன்னதற்கு இந்திய விஞ்ஞானிகள் மட்டுமலல, தேசம் மட்டுமல்ல, உலகமே அதை வரவேற்று கைதட்டிகொண்டிருக்கின்றது

 3. சனாதனத்தை ஒரு நாளும் ஒழிக்க முடியாது!*

  – ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்,
  ‘சாணக்யா – யு டியூப் சேனல்’ நிறுவனர்

  ‘ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண் பூளை கலைஞ்சது’ என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அப்படித்தான், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பற்றி, ‘தினமலர்’ நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு செய்திக்குப் பின், சனாதனம் பற்றிய விவாதம் இன்னொரு முறை எழுந்திருக்கிறது.
  சனாதனம் பற்றி பேசுவதற்கு நான், தகுதியானவன் இல்லை. தகுதியானவர்கள் அமைதியாக இருப்பதாலும், எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டதாலும், நாமளும் எழுதி வைப்போமே என்பதே இந்தக் கட்டுரை.இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, பா.ஜ., பற்றிய விமர்சனமாக இருந்தால் அவர்கள் பதில் சொல்லட்டும் என விட்டு விடலாம்; அ.தி.மு.க., மீதான குற்றச்சாட்டாக இருந்தால், பழனிசாமி பார்த்துக் கொள்வார் என அமைதியாகலாம். இது, சனாதனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு ஹிந்துவும் பேச வேண்டும் என நினைக்கிறேன்.

  முன்னுரை முடிந்தது. இனி என்னுரை.

  சனாதனம் என்றால் என்ன என்று நான் சொன்னால், சண்டைக்கு வருவர். ஜாதி, மதம், எழுதுகிற நாளேடு எல்லாமே வம்புக்கு உள்ளாகும். அதனால், ஆரிய, வந்தேறி, பார்ப்பனர்கள் நடத்துகிற விக்கிப்பீடியா என்ன சொல்கிறது என தேடிப் பார்த்தேன்.

  Santana Dharma – is an endonym used by Hindus to refer to Hinduism.

  அதாவது, சனாதன தர்மம் என்பது இந்து மதத்தை குறிப்பிடுவதற்கான வார்த்தை என அர்த்தம்.

  சரி, அவர்கள் ஒருவேளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையாளாக இருக்கலாம் என்பதால், இந்த Britannica என்ன சொல்கிறது என எட்டிப் பார்த்தேன்

  Sanatana Dharma, in Hinduism, term used to denote the ‘eternal’ or absolute set of duties or religiously ordained practices incumbent upon all Hindus, regardless of class, caste, or sect.

  அதாகப்பட்டது, சனாதன தர்மம் என்பது பிரிவு, ஜாதி, இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், ஹிந்துக்களால் கடைபிடிக்கப்படும் நிலையான அல்லது முழுமையான கடமை மற்றும் மத வழக்கம்.

  அடப்பாவமே… அவர்களுமே இந்து மதத்தின் பூர்வீகப் பெயர் தான் சனாதனம் எனச் சொல்லிவிட்டார்களே… அமித் ஷா வேலையாக இருக்குமோ என அஞ்சி, சுப்ரீம் கோர்ட் ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று பார்த்தேன்…

  இந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் நாகரத்னா, ‘Hinduism is a way of life. Because of that India has assimilated everybody. Because of that we are able to live together’ என, ஒரே போடாக போட்டுவிட்டார்.

  ‘ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் இந்தியா எல்லாரையும் அரவணைக்கிறது. அதனால் தான் நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ முடிகிறது’ என்று இதற்கு அருஞ்சொற்பொருள். அவரும் பா.ஜ., தான் என யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  இப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மதத்தை ஹிந்து மதம் எனக் குறிப்பிடாமல் ஏன் இவர்கள் சனாதனம் என்றே அழைக்கின்றனர்?

  1. வழக்கு போட்டால் தப்பிக்கலாம்.

  2. யாரையோ சொல்வதாக அப்பாவி மக்கள் நினைத்துக் கொள்வர்.

  3. அப்போது தான், ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசிவிட்டு, ‘நான் எந்த மதத்துக்கும் எதிராக பேசவில்லை’ என சொல்ல முடியும்.

  அதையெல்லாம் விடுங்கள்…

  ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, தமிழகத்தில் காலம் காலமாக நடப்பது தானே… அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதவர்கள், திடீரென துாங்கி எழுந்து, இந்திரா காந்தி இறந்துவிட்டாரா என ‘ஷாக்’ ஆவது ஏன்? என்று ஒரு கேள்வி வரலாம்.

  இதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம், அரசு பதவியில் இருந்தவர்கள் இல்லை அல்லது, அரசு பதவியில் இருந்தபோது பேசியதில்லை. இப்போது, ஒரு அமைச்சரின் முன்னிலையில் இன்னொரு அமைச்சரே பேசியதால் தான் இவ்வளவு பரபரப்பும்.

  சரி, பேச்சுக்கு வருவோம்!

  சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; ஒழிக்கப்பட வேண்டியது.

  சூப்பர். அப்படியானால், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் இது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுமா? பிரதான கூட்டணியாக இருந்து, மும்பை விருந்து வழங்கிய சிவசேனா… என்ன சேனா? சிவசேனா… இந்தக் கூற்றை ஏற்குமா?

  சரி, எதனால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்? ஏனென்றால் அது வர்ணாசிரமத்தை வளர்க்கிறது; ஜாதியை துாக்கிப் பிடிக்கிறது என்கின்றனர்.

  முதலில் வர்ணாசிரமத்தை பார்ப்போம். வர்ணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஒரு அதிகாரப் படிநிலையாக தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாக குறிப்பிடவில்லை.

  ஒரு கட்சியில், எப்படி தலைவர், துணைத் தலைவர்,பொதுச்செயலர், பொருளாளர், மாவட்ட தலைவர்,நகரச் செயலர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அது போல நான்கு வர்ணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

  நான்கு வர்ணத்தவருக்கும் பூணுால் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களை, நல்ல / பொல்லா நாட்களில் பூணுால் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

  இந்த வர்ணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையை, தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின.

  இப்போதும் கூட அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தினரை அடுத்த வாரிசாக கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்படி அவரவர் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுத்த தொழில்நுட்பத்தின் விளைவாகத் தான் இந்த வர்ணாசிரமம், பிறப்பு அடிப்படையில் மாறியது.

  எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில்அது சாத்தியமில்லை. ஒரே காரில் பயணிப்பதால், உரிமையாளரும் டிரைவரும் ஒன்றில்லை.

  ‘எங்களை என்ன தாழ்த்தப்பட்டவர் என்று நினைத்தார்களா?’ என்று, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசுகிறார். ‘பட்டியல் சமூகத்துக்கு நாங்கள் போட்ட பிச்சை’ என இன்னொரு பிரமுகர் பேசுகிறார். பாகுபாடு காட்டுவது சனாதனம் என்றால், இவர்களுடைய பேச்சு என்ன தனம் என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  வர்ணாசிரமம் ஹிந்து மதத்தில் உள்ளது தான் என்று ஏற்கும் அதே நேரத்தில், ஜாதி பற்றி ஹிந்து மத நுால்கள் எவையேனும், எங்கேயும் பேசி இருக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்.

  ஜாதி என்பது ஒரு மதம் சார்ந்து உருவானது அல்ல. அந்தந்த சமூக குழுக்கள், அவர்களுக்கு உள்ளாகவே உருவாக்கிக் கொண்டது.

  அதனால்தான் நான்கு வர்ணங்களும், வடமொழி பெயரில் இருக்கும்; ஆனால் ஜாதிப் பெயர்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும். வன்னியர், நாடார், செட்டியார், முக்குலத்தோர் போன்றவை எல்லாம், வடமொழி பெயர்கள் என, யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  சரி, இந்த பாகுபாடு ஹிந்து மாதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? மற்ற மதங்களில் இல்லையா?

  கிறிஸ்துவத்திலும் பாகுபாடு இருக்கிறது என, என்னுடைய நேர்காணலில், அருட் தந்தை ஜெகத் கஸ்பரே ஒப்புக்கொண்டார். இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏன் குண்டு வெடிக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

  எனவே, மதங்கள் பாகுபாடு காட்டுவதில்லை; மதத்தின் பெயரால் மனிதர்கள் பாகுபாடு காட்டுகின்றனர்.

  அப்படியே ஹிந்து மதத்தில்ஏற்றத்தாழ்வு இருப்பது உண்மை என்றால், அந்த ஏற்றத்தாழ்வைத் தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மதத்தையே அழிப்போம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

  இந்த ஆண்டு ஆடி மாதம், சென்னை கோயம்பேடில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிகழ்ச்சியில், பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தி.மு.க., பிரமுகர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இப்போது கண்ணனை குற்றம் சொல்லாமல், ஒட்டுமொத்த தி.மு.க.,வையே ஒழிக்க வேண்டும் என யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

  சரி, சனாதானம் தான் பாகுபாடு பார்க்கிறது என்றால், அதே மேடையில் இருந்த பீட்டர் அல்போன்சை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆக்காததற்கு என்ன காரணம்? அவரே என் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், நான் கிறிஸ்துவன் என்பதால் தான், மாநிலத் தலைவர் ஆக்கப்படவில்லை என!

  சரி, ராமானுஜர் சனாதனவாதியா இல்லையா? அவரைப்பற்றி எதற்காக, ராமானுஜ காவியம் எழுதப்பட்டது?

  சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.,வில் அகில இந்தியத் தலைவராக ஒரு பட்டியலினத்தவர் இருந்திருக்கிறார். பட்டியலினத்தவர்கள் இரண்டு பேர், மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கின்றனர். சனாதனத்தை ஒழிக்கக் குரல் கொடுக்கும் கட்சியில் அது சாத்தியமா?

  சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அவற்றின் ஆணி வேராக இருக்கும் கோவில்களில் மூக்கை நுழைப்பது ஏன்? அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டியது தானே?

  சனாதனம் என்றால், அழியாதது என்று அர்த்தம். முடிவில்லாதது என்று பொருள். எப்போதும் இருப்பது. சந்திர சூரியர்கள் உள்ளவரை இருக்கும்.

  கடந்த, 1323இல், திருவரங்கத்தில் உல்லுக் கான், 12,000 வைஷ்ணவர்களின் தலையைத் துண்டித்த பின்னரும், சனாதனம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்துவாக இருப்பதற்கே ‘ஜிஸ்யா’ வரி விதித்தபோதும், சனாதனம் இருந்தது.

  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய அரண்மனை இல்லை; சனாதனத்தின் சாட்சியாக, அவர்கள் கட்டிய கோவில்கள் இருக்கின்றன.

  சர்வே ஜனா சுகினோ பவந்து (எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்) என சொல்லிக்கொடுத்த உபநிஷதம், சனாதானத்தின் அடையாளம்.

  ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார், சனாதனத்தின் உச்சம்.

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தமிழிலும், வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என வடமொழியிலும் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

  ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி.

  அடியேன் என்றும், தாசன் என்றும், தொண்டரடிப்பொடி என்றும், சிவனடியார் என்றும், பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

  அன்பே சிவம் என்பது சனாதனம்.

  அன்பே தகளியா ஆர்வமேநெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.

  நிற்க.

  தான் ஒரு கிறிஸ்துவன் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்ற அமைச்சர் உதயநிதியும், பெருமைக்குரிய கிறிஸ்துதவராக இருக்கும் பீட்டர் அல்போன்சும், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் அந்த மேடையில் இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

  அதை விட முக்கியமான விஷயம், அந்த மாநாட்டை நடத்தியவர்கள். த.மு.எ.க.ச., என்றழைக்கப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இவர்களுடைய குழுமம் தான் தமிழக அரசோடு இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன.

  ஆக, இவர்களுடைய நோக்கம் தெளிவாகிவிட்டது. அது நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

  ஏனென்றால் இது சனாதானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *