வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்

தலைப்பை படித்தவுடன் முதலில் இப்படி தோன்றலாம்: இது என்ன பிராமணர்கள் என்று தனிமைப்படுத்தி சொல்வது? அதே போல இனி போராட்டத்தில் செட்டியார்கள் பங்கு நாடார்கள் பங்கு என்றெல்லாம் புத்தகங்கள் வருமா?

ஆனால் உண்மை என்னவென்றால் இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. எல்லா சமுதாய கொடுமைகளையும் ஒட்டுமொத்தமாக பிராம்மணர்கள் மீது போடுகிறது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம். சனாதன தர்மமே எல்லா கொடுமைகளுக்கும் காரணம். அதுவே எல்லா சமுதாய கொடுமைகளுக்கும் -தீண்டாமை முதல் பெண்ணடிமைத்தனம் வரை- முட்டு கொடுக்கும் கருத்தியலாக இருக்கிறது. இதுதான் ஹிந்து மத வெறுப்பாளர்கள் வைக்கும் வாதம். இங்கே சாதியத்தையும் தீண்டாமையையும் ஆதரித்த பிராம்மணர்கள் அன்றைய சூழலில் ஒரு நிலைபாட்டை எடுத்தவர்கள் என்பதைத் தாண்டி அவர்களின் நிலைபாடே ஹிந்துமதம் என கற்பிக்கப்படுகிறது.

எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதனை நியாயப்படுத்திய அவர்கள் சக-மதத்தினரையும் சக-சாதியினரையும் அவர்கள் எதிர்த்தார்கள். எப்படி எதிர்த்தார்கள் என்றால் ஹிந்துமதத்தைத் திட்ட அதுதான் வழி என்று எதிர்க்கவில்லை. மாறாக அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள். பிராம்மணரல்லாதவர்களை விட இந்த பிராம்மணர்களின் தீண்டாமை-அணுகாமைக் கொடுமை எதிர்ப்பு மிகவும் கடினமானது. தங்கள் சுயசாதி மேன்மைக்கும் அவர்களின் சில மத பீடங்களுக்கும் எதிராக அவர்கள் நின்றார்கள். அதற்கான தார்மீக வலிமையை அவர்கள் ஹிந்து தர்மத்திலிருந்தே பெற்றார்கள்.

எனவே ஹிந்து மதம் என்று சொல்லும் போது அன்றைய சூழலில் தீண்டாமையை ஆதரித்தவர்களை மட்டும் சொல்வது திரிபுவாதம். பச்சையான வெறுப்பு. தீண்டாமையை ஆதரித்தவர்களைக் காட்டிலும் அதை எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் போராடியவர்களே அதற்காக இன்னல்களை மேற்கொண்டவர்களே ஹிந்து மதத்தின் உண்மையான பிரதிநிதிகள்.

ஒரு மரம் அதன் கனிகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது என்பார்கள். உண்மையில் ஒரு மரம் அதன் சிறந்த கனிகளைக் கொண்டே மதிப்பிடப் படவேண்டும். அதன் அழுகிய அல்லது புழுபூத்து கெட்டுப் போன கனிகளை கொண்டல்ல. ஒரு மரம் நல்ல கனிகளையும் மோசமான கனிகளையும் தருமானால், ஒரு விஷயம் தெளிவானது. மரத்தின் இயற்கை நற்கனிகளை அளிப்பது. மரத்தை நாம் சரியாக பராமரிக்காத காரணத்தால் அதில் மோசமான கனிகளும் ஏற்படுகின்றன. பிரச்சனை மரத்தில் அல்ல.நம்மிடம். சனாதன தர்மமே கனிதரும் மரம். அதிலுள்ள சில அழுகிய கனிகளைக் காட்டி மரத்தையே வெட்டி போடு என்று சொல்கிறவர்கள் அதிகமாகிவிட்ட சூழலில் நல்ல கனிகளை நமக்கு விளக்கிக் காட்டும் இந்த நூல் முக்கியமானது.

இதை எழுதிய வரலாற்றறிஞரும் சுகாதார தொழிலாளர்களின் தேசிய குழுத் தலைவருமான ம.வெங்கடேசன் அவர்களுக்கும் இதை பதிப்பித்துள்ள ஹரன் பிரசன்னா அவர்களுக்கும் தமிழ்ஹிந்து சமுதாயம் கடமைப்பட்டுள்ளது.

என் நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஹிந்துவும் வாங்கி படிக்க வேண்டும்.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள்
ஆசிரியர்: ம.வெங்கடேசன்
விலை: ரூ 110
சுவாசம் பதிப்பகம் வெளியீடு.
புத்தகத்தை ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.
தொலைபேசி மூலம் வாங்க: +91-8148066645

திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். பட்டியலினத்தவர்களின் கோவில் நுழைவைச் சாத்தியமாக்கிய இப்போராட்டத்தைக் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

வைக்கம் போராட்டத்தில் பல முக்கியமான தலைவர்கள் பங்கெடுத்தனர். ஆனாலும் இப்போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் குறித்து விவாதம் நடந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைப் பிராமணர்களுக்கு எதிராகச் சித்திரிப்பதில் சில அரசியல் சக்திகளுக்கு உள்நோக்கமும் ஆதாயமும் இருப்பது கண்கூடு. இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுநோக்கில் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

* வைக்கம் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பு என்ன?
* இந்தப் போராட்டத்திற்குப் பிராமணர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தனவா?
* இந்தப் போராட்ட வெற்றியில் பிராமணர்களின் பங்கு என்ன?

இந்தக் கேள்விகள் குறித்து ஆசிரியர் மா.வெங்கடேசன் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். மறைக்கப்பட்ட பலரின் முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

One Reply to “வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்”

  1. உன்மையில் ப்ராம்மணர்கள் இந்து மதத்தின் காவலர்கள் . ஆங்கிலேயர்கள் கிருத்துவ மதத்தை .இந்தியாவில் பரப்ப முடியாததற்கு காரணம் பிராம்மணர்கள் காரணம் .இது தான் உன்மையிலும் உணமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *