தொடரட்டும் சீர்திருத்தம்

casteismதெய்வங்களில் தலித்துகளின் தெய்வம் மற்றும் தலித் அல்லாதோர் தெய்வம் என்று இருக்கிறதா?

இருக்கிறது என்று பெரும்பான்மையான இந்துக்கள் எண்ணுகிறார்கள். முக்கியமாக உயர்த்தப்பட்ட சாதியார் பலரிடம் இப்படி ஒரு தவறான குழப்பம் இருப்பது உண்மைதான். துரதிர்ஷ்டம்.

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று பேசி அழியும் அறிவிலிகாள்…” என்று பாரதியார் இவர்களை விளிக்கிறார்.

அவர்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரும் இடங்களில் பிரச்சினைகள் எழுந்தால் மட்டுமே இவர்கள் போராடுவார்கள். மற்ற சாதியார் வணங்கும் கோயில்களை இடித்துத் தள்ளினால்கூடக் கவலைப்பட மாட்டார்கள்.

எல்லாரும் பங்கு பெறும் ஒரு அரசியல் கட்சியில் இருந்தாலும், அந்த அரசியல் கட்சியைத் தங்கள் சாதிச் சங்கத்தின் மற்றொரு கிளையாக மாற்றவே இவர்கள் முயல்வார்கள். அந்தக் கட்சி அதை அனுமதிக்காவிடின், அந்தக் கட்சிக்குள்ளே இருந்து கொண்டே அந்தக் கட்சியை அழிக்கும் வேலைகளைச் செய்வார்கள். இவர்களது மனோநிலை பாவ்லோவின் பரிசோதனை ஜந்துக்கள் போல இப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது.

சாதிச் சங்கங்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்க இட ஒதுக்கீடு ஒரு முக்கிய மறைமுகக்  காரணமாக உள்ளது போல, இவர்களது இந்து சமூக அக்கறைக்குப் பின்னணியிலும் தங்கள் சாதியாரின் பொருளாதார லாபக்கணக்குக்கள்தான் இருக்கின்றன. தங்கள் சாதிக்கு லாபம் கிடைப்பதற்குத்தான் இந்து மதம் இருக்கிறது என்பது இவர்களது கணக்கு.

தன் சாதியா, சனாதன தர்மமா என்ற கேள்வி எழுந்தால் சனாதன தர்மத்தை அழுக்குத் துணிபோலப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விடுவார்கள். இப்படி எறியப்பட்ட இந்துத்துவர்களும் இங்கு உண்டு. தூக்கி எறியப்பட்டாலும், இந்துத்துவர்களாகவே இருக்கிற இந்தப் பெரியோர்களால்தான் இந்து மதம் உயிரோடு இருக்கிறது.   இந்து மதம் உயிரோடு இருப்பதால்தான் மானுடத்தன்மை இன்னமும் உயிரோடு இருக்கிறது.

macaulay_children3இந்தச் சாதிய வெறி அழிந்தால்தான் சனாதன தர்மம் தழைக்கும். ஒரு நாட்டின் நலனுக்கு ஒரு ஊரே அழியலாம் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுகிறது. ஆனால், மனு ஸ்ம்ருதியில் உள்ள மட்டமான கருத்துக்களுக்காக மனு ஸ்ம்ருதியைத் தூக்கிப் பிடிக்கும் ஆஷாடபூதிகள் இந்த விஷயங்களைக் கவனமாக நடைமுறையில் தவிர்த்துவிடுவார்கள்.

தன்னுடைய சாதியைச் சேர்ந்த ஒருவன் சுத்தமான பொறுக்கியாக இருந்தாலும் அவனுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். அவர்கள் சாதிக்கு நடந்த அநியாயங்களைக் காரணம் காட்டுவார்கள். இல்லாத ஒரு யூதனின் நடக்காத சிலுவையேற்றத்திற்காகக் கோடிக்கணக்கான யூதர்களைக் கொலை செய்த நாட்ஸிக் (Nazi) கிறுத்துவர்களுக்கும் இவர்களுக்கும் செயல்பாட்டு ஒற்றுமைகள் உண்டு. 

அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதிதான் இந்து மதம். அவர்களது  சாதிய வெறியைக் காப்பாற்றுபவர்கள்தான் செயல் வீரர்கள், சிந்தனைச் சிற்பிகள். மற்றவர்கள் எல்லாம் வெட்டி விமர்சகர்கள் மட்டுமே. அல்லது உபயோகித்துவிட்டுத் தூக்கி எறியப்பட வேண்டிய ஏமாளிகள்.

இந்த ஏமாளிகளின் குழுவில் பாரதியாரும், ராமானுஜரும், ஆதி சங்கரரும்கூட உண்டு.

யூரோப்பியரின், அரபியரின், கம்யூனிஸ்ட்டுகளின் மேலாதிக்கத்தை இந்தச் சாதியவாதிகள் எதிர்ப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, மற்றவரை அடிமைகளாக நடத்தும் அந்த உரிமை அவர்களுடையது. கிறுத்துவர்களும், இஸ்லாமியரும், கம்யூனிஸ்ட்டுகளும் அடிமை வியாபாரத்தில் இவர்களது போட்டியாளர்கள். 

குழந்தைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு குண்டு வீசும் ஆபிரகாமியர்களுக்கும், இந்து மதத்தின் பின்னால் நின்று கொண்டு சாதியம் பேசும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

இந்த உயர்த்தப்பட்ட சாதியார் மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகள்.   மனசாட்சியை விட, மெக்காலே போதனைக் கண்ணாடி அணிந்துதான் அவர்கள் சமூகத்தைப் பார்க்கிறார்கள். அந்தப் போதனைகள்தான் அவர்கள் மற்ற மானுடரோடு கொள்ளும் உறவுகளையும் நிர்ணயிக்கிறது.

casteமெக்காலேவின் இந்தக் கள்ளப் பிள்ளைகளும் ஆபிரகாமியர்களே.  கள்ளத் தகப்பனின் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமைப் படைப்புகள் இவர்கள். 

இந்தச் செயல்பாடுகள் உயர்த்தப்பட்ட எல்லாச் சாதியாரிடமும் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியாரிடமும் இருக்கின்றன. இங்கு யாருக்கும் வெட்கமில்லை. ஆனால், ஓரிரு சாதியார்கள் இந்தக் கீழ்த்தர நிலையைப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தயங்குவதே இல்லை. இந்தக் கீழ்த்தர நிலைக்குப் புனிதப் பொன்னாடையை இவர்கள் போர்த்துகிறார்கள்.

இவர்களை பாரதியாரும், விவேகானந்தரும், அம்பேத்கரும், நாரயண  குருவும்  அம்பலப்படுத்தினார்கள். எதிர்த்தார்கள்.

ஆனால், மற்ற இந்துக்கள் இந்தச் சாதிய வெறியர்களை அம்பலப்படுத்தத் தயங்குகிறார்கள்.  ஆஷாடபூதிகளை அம்பலப்படுத்தினால் நல்ல பக்தர்கள் கேவலப்படுவார்கள் என்று அவர்கள் எண்ணலாம். பொது ஜனங்களுக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது என்பதும் ஒரு காரணம்.

இந்த ஆஷாடபூதிகள் அதிகாரசக்திகளாக இருக்கிறார்கள் என்பது இரண்டாவது காரணம். அதை வைத்துக் கொண்டு தங்களது சாதியத்தை, கேவலமான இழிவாழ்வைக் காத்துக் கொள்கிறார்கள். சாதியத்தை எதிர்ப்பவர்களை இவர்கள் அழிக்கிறார்கள்.

இந்துத்துவத்திற்கு எதிரான பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று எண்ணும் மனப்போக்கு மூன்றாவது காரணம்.

இந்துத்வ ஜீவன் உயிர்ப்புடன் உள்ளவர்களில் பலர் வெறும் புலம்பலை மட்டுமே ஆயுதமாகக் கையில் வைத்திருக்கிறார்கள். பலனில்லை. வசவினால் வைரஸ் கிருமிகள் அழியாது. அகந்தை அற்று இருத்தலும், அறிதலும், அறிதல் வழி நடத்தலும், அறிவைப் பரப்புதலுமே வழி. ஆனால், விவேகானந்தர் வெறுத்த மந்த புத்திக்கு இவர்களும் விதிவிலக்கில்லை. துரதிர்ஷ்டம்.

macaulay_childrenஇந்தக் காரணங்களால் இந்தச் சாதியவாதிகள், இந்த மெக்காலேயின் கள்ளப் பிள்ளைகள், அவர்களது முதலாளிகளான ஆபிரகாமிய சாக்கடைப் புழுக்களோடு கள்ளத் தொடர்பில் பிழைப்பை நடத்துகிறார்கள்.

இந்தச் சாதியவாதிகளில் சில சாதியார் நடத்தும் பொது அமைப்புக்களில், பள்ளிகளில், சாதி அடிப்படையில் தனிப் பந்தி இன்னமும் நடக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால், அதுதான் உண்மை. மெக்காலேவின் சவம் உயிர்பெற்று எழும் ஒரு வெள்ளிக்கிழமைக்காக இவர்களது அமைப்புகளில் பிரார்த்தனைகள் நடக்கின்றன. இந்தப் பிரார்த்தனைகளைச் செய்ய ஒன்று கூடும் இடமாக  இந்த அமைப்புகளும் இருக்கின்றன.

நல்ல வேளையாக இந்தப் போலி-மானுடர்கள் மட்டுமே, நடைப்பிணங்கள் மட்டுமே, இந்துக்களில் இல்லை.  வேதங்களின் ஜீவரசம் அருந்தி உயிர் துடிப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். சாதியம் பேசும் வேஷதாரிகளை எதிர்ப்பது, ஏளனம் செய்வது சீர்திருத்திக்கொள்ளும் இந்துத்துவ இயல்பின் ஒரு பகுதியாக தொடரவே செய்கிறது.  அந்த ஒன்றுதான் நம்பிக்கை தருகிறது.

மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் ஒரு பாடலைச் சொன்னார்:

நீதியால் வந்த தொரு
நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு
நெறி
அறியான்

சாதிய உணர்வால், சாதி உயர்வு தாழ்வுகளால் ஏற்படும் வாழ்க்கை முறை இகழத்தக்க ஒன்று என்று சொல்லுகிறது இப்பாடல். இந்த சீர்திருத்தக் குரலை நாம் எங்கு பார்க்கலாம்?

கம்ப ராமாயணத்தில். ராமபிரானின் காருண்ய அம்பு ஏந்தி, உடலை விட்டுப் போகும் முன், கும்பகர்ணன் தன் தம்பியான விபீஷணனின் உயர்குணமாக ராமனிடம் இதைச் சொல்லுகிறான். எந்த புத்தகத்தை எரிக்க வேண்டும் என்று காலனியத்தின் கைக்கூலிகள் சிலர் சொன்னார்களோ அந்தப் புத்தகத்தில் இது இருக்கிறது. இங்கு எந்தக்  குணமானது உயர்வானது என்று போதிக்கப்படுகிறது என்று கவனியுங்கள்.

வேதகாலத்தில் இருந்து எழும் சமநிலையின் குரல், ராமாயணத்தின் ஊடாக இன்னும் தொடர்கிறது. இந்து மதத்தின் வரலாறு பற்றித் தெள்ளெனப் புரிதல் உடைய, வரலாற்றுணர்வும் உள்ள இன்னொருவர் சொல்கிறார்:

தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையிலான சாதி முறை ஒரு நோய்க்கூறு மனநிலை. அதை ஏற்க நீங்கள் மறுக்கும் போது அது மறைந்துவிடும்.

பிராம்மணர்கள் போல உட்சாதித் திருமணங்களைக் கடினமாக வலியுறுத்தும் சாதிகளிலும் கூட சாதிக் கலப்புத் திருமணங்கள், மதநூல்களில் சொல்லப்பட்ட படியோ அல்லது ரகசியமாக பாலியல் ஈர்ப்புகளாலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சாதிக் கலப்புத் திருமணங்களை நீங்கள் கடுமையாக எதிர்த்தாலும் அவை தொடர்ந்து வருங்காலத்திலும் நடக்கத்தான் செய்யும்.

எனவே, சாதிக் கலப்புத் திருமணங்களை தடை செய்துவிட்டால் பிராம்மணனின் மகனுக்கோ அல்லது க்ஷத்திரியனின் மகனுக்கோ முறையே பிராம்மண அல்லது க்ஷத்திரிய குணங்கள் இருக்கும் எனும் நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை. எல்லாச் சாதிகளும் மிகப்பண்டைய காலம் முதல் ஒன்றோடொன்று கலந்தே வந்துள்ளன என்பதால் எந்த சாதியும் எந்த குறிப்பிட்ட திறமைக்கும் தனிச் சொந்தம் கொண்டாடமுடியாது.

இதைச் சொன்னவர் யார் என்பதை வாசகராகிய நீங்களே கண்டுபிடித்து மறுமொழிப் பெட்டியில் சொல்லுங்கள். க்ளூ: இவர் ஒரு நாத்திகர்.

இந்து மதத்தின் வரலாறு பற்றி ஓரளாவாவது புரிதல் உள்ளவர்களுக்கு ஒன்று மிகத் தெளிவாகப் புரியும்: சாதி என்பது இந்திய சமூகத்தின் ஒரு சமூகப்பொருளாதார நிகழ்வு மட்டுமே. இதை உருவாக்கிய காரணிகள் மாறும்போது இதுவும் மாறும்.

மாறவேண்டும் என்கின்றன சனாதன தர்மத்தின் நூல்களும், வாழ்முறையும். மாற்றவேண்டும் என்கின்றனர் சனாதன தர்மவாதிகள்.

sahaja-100012சனாதன தர்மம் அறிந்தவர்கள், சீர்திருத்திக்கொண்டு வளரும் வாழ்முறையையே இந்துத்துவம் என்று தெளிந்துள்ளார்கள். இருப்பினும், சீர்திருத்திக்கொண்டு முன்னேறும் இந்துத்துவம் சீர்திருத்திக்கொள்ள வேண்டியது இன்னமும் இருக்கிறது.

இந்து மதத்தின் இப்போதைய தேவை சாதியத்தை அரக்கத்தனம் என்று அறிவித்து, அதை ஒழிக்க வேண்டும் என்று உரத்துப் பேசும் துறவியர்கள்.

தலித் துறவிகள் வேண்டும். அவர்களது ஆசிரமங்கள் புண்ணியத் தலங்களாக வேண்டும்.

அதுவரை பாரதியின் கனவுப் பாலங்கள் ஒதுங்கி இருக்கட்டும். அவசரமில்லை.

15 Replies to “தொடரட்டும் சீர்திருத்தம்”

  1. அருமையான கட்டுரை.
    இருளடைந்த மனங்களை திறக்கும் இந்த கட்டுரை என்று நம்புகிறேன்.

  2. மதிப்பிற்குரிய களிமிகு கணபதி,

    தங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். பழைய காலம் போயது. அக்காலத்தில் கால காலமாக வேறு பட்ட நடைமுறைகள் இருந்திருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப… மனிதாபிமான உணர்வோடு நமது தர்மத்தை வளர்ப்பது நம் முன்னுள்ள பொறுப்பாகும்.

  3. Pingback: Indli.com
  4. சிறந்த கட்டுரை. இந்த கட்டுரை முந்தய பதிவில் இடப்பட்ட பின்னுடதிற்கான பதில் என்று நினைக்கிறன் 🙂 தங்கள் கருத்துகளில் ஒரு சதவிகிதம் கூட நான் மறுப்பதற்கு இல்லை.

    \\ இதைச் சொன்னவர் யார் என்பதை வாசகராகிய நீங்களே கண்டுபிடித்து மறுமொழிப் பெட்டியில் சொல்லுங்கள். க்ளூ: இவர் ஒரு நாத்திகர் \\

    வேறு யார், பகுத்தறிவு குத்தகைகாரரும், ஆப்ரகாமிய மதங்களுக்கு சொம்பு தூக்குபவருமான பெரியார் அல்லது திருக்குவளை தீய சக்தி.

    Please kindly gothrough the attached news clippings, notices on the opposition of MK’s film Ponnar sankar in TN, which hurts the believes of 1.5 million people and their worry about the future youth. Literatures evidences to show how MK has changed the real story was also attached (in Tamil).

    Audio story played in rural folk – https://annamarstory.blogspot.com/

    Trailer of MK’s film – https://www.youtube.com/watch?v=98Ukp6c7hA4

    The real Annamr story written 600 years ago – https://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

    The film is going to be released soon before elections. Needful action is needed to ban the film.

    No response from the top BJP leader 🙁

  5. எந்தவொரு ஜாதியும் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தபடி இப்போது இல்லை. பல கலப்புகள் ஏற்பட்டு விட்டன . ஜாதி, நடைமுறையில் இருப்பதைக் காட்டிலும் மனத்தில்தான் அதிகமாக குடி கொண்டிருக்கிறது. ஒரு முறை நாராயண குரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாராம். அதே பெட்டியில் ஒரு நம்பூதிரி பிராமணனும் ஏறிப் பயணம் செய்தார். எதிரில் இருப்பவர் நாராயண குரு என்பது தெரிந்து அவரிடம், ‘இழவா இனத்தாருக்குக் கோவில் கட்டித்தரும் நபர் நீர் தானோ?” என்றாராம். நாராயண குருவும், ‘ஆம் அது அடியேன்தான்’ என்றார். ‘பிராமணர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார் நம்பூதிரி. நாராயண குரு சொன்னார், “அடியேன் கட்டிக் கொடுப்பது ஈழவர்களாகிய எங்களது சிவனுக்கு, நான் உங்கள் சிவன் பக்கம் வருவதே இல்லையே” என்றாராம். நம்பூதிரி வாயடைத்துப் போனார். (“பாரதியார் கட்டுரைகள்” — கட்டுரை ராகவ சாஸ்த்திரி – நம்பூதிரி 1 ). பிராமணர்கள்தான் ஜாதி பாகுபாடு அதிகம் பார்க்கிறார்கள் என்ற பிரமையை திராவிட இயக்கம் உண்டு பண்ணி விட்டது. இன்று பிராமணர்கள் அல்லாத மற்ற உயர் சாதியாரிடம் தான் தீண்டாமை எனும் கொடிய வியாதி பரவிக் கிடக்கிறது. மனதைத் தொட்டு, உண்மையை உள்ளவாறு சொல்லட்டும், இன்றும் கிராமங்களில் இரட்டைக் குவளை, வீட்டுக்குள் அனுமதிக்காதது இவற்றைப் பின்பற்றுபவர் யார் என்பதை. போலித்தனங்களால் எல்லாம் சமூகம் மாறாது. மாற்றத்தை விரும்பும் மனம் இருந்தால் போதும். அது யாரிடம் இருக்கிறது என்பதை காலம் பதில் சொல்லும். கலாச்சாரம், பழக்க வழக்கம், உணவு முறை இவைகளில்தான் பேதம் பார்க்கப்படுமே தவிர, பிறப்பால் அல்ல. பாரதி எந்த வகையிலும் ஏமாறவில்லை. உண்மையை உள்ளபடி உணர்ந்த ஞானிகளில் பாரதியும் ஒருவன்.

  6. @ Shri Hari

    —- வேறு யார், பகுத்தறிவு குத்தகைகாரரும், ஆப்ரகாமிய மதங்களுக்கு சொம்பு தூக்குபவருமான பெரியார் அல்லது திருக்குவளை தீய சக்தி.—-

    இந்த இரண்டு பேரும் நாத்திகர்கள் இல்லையே. அதைச் சொன்னவர் உண்மையிலேயே நாத்திகர்.

  7. அது அம்பேத்காராக இருக்க முடியாது. ஏனெனில் நாத்திகர் என்று சொல்லி இருக்கிறார்களே. எனக்கு தெரிந்து அம்பேத்கார் புத்த மதத்தில் சேர்ந்தாரே தவிர புத்த மதத்தில் சேருவதாக அறிவித்து , நாக்பூரில் ஒரு விழா நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை தன்னுடன் புத்த மதத்தில் சேர செய்தாரே தவிர, அதன் பின்னர் தான் அங்கும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை கண்டு பிடித்தார்.அம்பேத்கார் நாத்திகர் அல்ல.

    ஏனெனில் புத்தர் ஒரு ( Agnostic) ஆக்னேய வாதியே தவிர நாத்திகர் அல்ல. அவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. கடவுளைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. எனவே புதிர் போடாமல் விடையை சொன்னால் எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.

    களிமிகு கணபதிக்கு
    ஒரு மிக சிறந்த கட்டுரையை வழங்கிய உங்கள் பணி என்றுமே தொடரட்டும். இறை அருள் பெருகட்டும்.

  8. அதைச் சொன்னவர் பகுத்தறிவுப் பகலவனின் பாதையில் வீர நடை போடும் வீரமணி அவர்கள்.

  9. வணக்கம்

    ”””’அதைச் சொன்னவர் பகுத்தறிவுப் பகலவனின் பாதையில் வீர நடை போடும் வீரமணி அவர்கள்.””””’

    ரொம்பக் கஷ்டம், இதை நம்புவது. இவளவு யோசித்து எல்லாம் கி. வீரமணி பேசியிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.

  10. இந்த கட்டுரையை படித்தவுடன், எனக்கு ஒரு பக்கம் கோபமும், மறு பக்கம், இந்த இந்துத்துவ தற்குறிகளின் முட்டாள்தனத்தை நினைத்து பரிதாபமும்தான் ஏற்படுகிறது..

    இந்த கட்டுரை ஆசிரியர் களி கணபதி கிராமத்தில் வாழ்ந்தவரா என்பது தெரியவில்லை.. ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.. லட்சக்கணக்கான இந்துத்துவ முட்டாள்களில் ஒருவர் என்பது.. அவரின் முட்டாள்தனம், இந்த கட்டுரையின் முதல் வரிகளிலேயே தெரிகிறது.. சனாதன தர்மத்தையும் , பாரதிய கலாச்சாரங்கள் பற்றியும் எதுவும் தெரியாதவர் என்பது அப்பட்டமாக தெரிகிறது..

    முதலில் தர்மத்துக்கு வருவோம்.. தர்மங்களில் நிறைய வகை இருக்கிறது.. குல தர்மம், ராஜ்ய தர்மம், தேச தர்மம், ஸ்வதர்மம், சனாதன தர்மம் போன்றவை.. தர்மங்கள் யுகத்துக்கு யுகம் மாறுபடு.. சத்ய யுகத்தில் இருந்த தர்மங்கள் கலியுகத்துக்கு ஒத்து வராது.. அதனால்தான், மனு தர்மம் சத்ய யுகத்துக்கு மட்டுமே என்கிறது சாஸ்திரம்..

    கலியுகத்துக்கு பராசர தர்மமே பொருந்தும்.. கீழுள்ள வலைத்தளத்தில் அந்த புத்தகத்தை பதிவிறக்கலாம்..
    https://www.archive.org/details/ParasharaSmriti

    இந்த தர்மத்தில், குல தர்மம் என்பது தான் சாதி தர்மம்.. சாதி என்பது வெறும் சமூகப் பொருளாதார நிகழ்வு என்று ஆசிரியர் சொல்கிறார்.. அவருக்கும் சமூகப்பொருளாதாரம் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிய்மா என்று தெரியவில்லை..

    இன்றைக்கு இந்து மதம் என்ற ஒன்று இருப்பதே சாதி என்ற ஒரு சமூகக் கட்டமைக்களால் தான்.. சாதி மட்டும் இல்லையென்றால், இந்து மதமுமில்லை.. பாரதமும் இல்லை.. வெறும் வெள்ளைக்கார பாணியில் உருவாக்கப்பட்டு தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்தியா மட்டும்தான் இருக்கும்..

    ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொழில் அடையாளமாக் இருக்கும்.. அது வெறும் தொழிலாக இருக்காது.. அது தர்மமாக இருக்கும்.. அந்த தர்மத்தில், அவர்களின் தொழில் சார்ந்து, அவர்களின் தெய்வ வழிபாடும் இருக்கும்.. அவர்களின் கலாச்சாரம் இருக்கும்.. உதாரணத்துக்கு, வெள்ளாளருக்கும் காவக்காரர்களுக்கும், ஆடு கோழி பலியிடும் கலாச்சாரம்.. அதே சமயம் குயவர்களுக்கும், ஆசாரிகளுக்கும், பூணூல் போட்டு சைவ வழிபாடு இருக்கும்..

    ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக தெய்வங்கள் இருக்கும்.. அத்தெய்வத்துக்கு அந்த சாதியினருக்காக ஒரு கோயிலும் இருக்கும்.. ஒவ்வொரு சாதியினரும் அவரவர் குல தெய்வ கோயிலில் பண்டிகை கொண்டாடுவார்கள்.. இன்றைக்கு தலித் சமுதாயத்தினரும் பல குல தெய்வக் கோயில்களை கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் கோயிலுக்கு மற்ற சாதிக்காரர்கள் வரக்கூடாது.. மற்ற சாதியினரின் கோயில்களுக்கும் அவர்கள் போக மாட்டார்கல்.. ஒரு தலித் சாதியினர் இன்னொரு தலித் சாதியினரின் கோயிலுக்கும் செல்ல மாட்டார்கள்.. இது ஒரு எல்லா சமுதாயத்தினரும் ஒருவருக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு உடன்பாடு.. இதனால் தான் எந்த பெரும் பிரச்சினைகளும் சாதிகளுக்குள் வரவில்லை..

    இதுவரை நடந்த சாதி மோதல்களெல்லாம் மிஷனரிகளும் மார்க்சியவாதிகளும் தூண்டிவிட்டவைகள்.. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரும் சாதிப் போர்கள் வரவில்லை.. ஆப்ரிக்காவில், அவர்கள் ஒவ்வொரு பழங்குடியினரையும் மோத விட்டு அழித்த சதி வேலைகள் இங்கு இதுவரை நடந்தேறவில்லை..

    ஒவ்வொரு முறையும் சாதிப் பிரச்சினைகள் வரும்போது, ஏதாவது ஒரு சாதி விலகிப் போய்விடும்.. அல்லது விட்டுக் கொடுத்து போய்விடும்..

    இந்த உண்மைகளை ஏன் இந்த இந்துத்துவ முட்டாள்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

    இந்த டி.வி செய்தியில் கூட, மேல் ஜாதியினர் குழந்தைகள் தானே வெளியேறினார்கள்.. அவர்கள் போய் கீழ் ஜாதி குழந்தைகளையோ இல்லை அவர்கள் பெற்றோர்களையோ அடிக்கவில்லையே.. இது ஒரு நல்ல விஷ்யம்தானே? இது எல்லாரும் கடைபிடிக்கும் ஒரு வன்முறையற்ற ஒரு வழி முறைதானே? நமக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து ஒவ்வொருவரும் விலகி போவது சகஜம் தானே.. ஏன் இதை ஒரு பெரிய விஷ்யமாக உருவகப்படுத்தி, ஒரு வெறுப்பை இந்த கட்டுரை ஆசிரியர் துப்பி யிருக்கிறார்.

  11. அந்த உண்மையை நறுக்குத் தெரித்தாற்போல் சொன்ன நாத்திகர் வீர சாவர்க்கர்.

  12. சாதி என்பது பாரதிய சமுதாயத்தின் ஒரு வலுவான கட்டமைப்பு.. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கலாசசாரம், திருமண முறை இருக்கிறது.. அவர்கள் தங்கள் சாதியின் அடையாளம் தான் பிரதானமாக கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இந்த இந்துத்துவ முட்டாள்கள், வெள்ளைகாரன் கொடுத்த இந்துயிஸம் என்ற அடையாளத்தை பிடித்துக் கொண்டு, பாரம்பரியமாக பாரதிய சமுதாயத்திற்கு ஒப்பற்ற வலுவாக இருந்த சாதியை சாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சாதியை அரவணைத்து, சாதிய பிரச்சினைகளை தீர்த்து வைத்து, ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கத் தவறிவிட்டு, கிறித்துவ மிஷனரிகளின் பிரச்சாரத்தை அவர்களை விட வீரியமாக செயல் படுத்தும் ஒரு அவலத்தில் இருக்கிறார்கள்..

    கிறித்துவ மிஷ்னரிகள் நம் மக்களை இன்று வரை மாற்ற முடியாததற்கு, சாதிய கட்டமைப்பு மிகப்பெரிய காரணம்.. ஏனென்றால், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொழில் இருந்தது.. அது அவர்களுக்கு வாழ்வாதாரம்.. அதோடு, பிரிட்டிஷாரின் சுரண்டலில் ஏழ்மையின் விழிம்பிற்கு சென்று வறுமையில் வாடிய பொழுது, சாதிய கட்டமைப்பு தான் ஒரு ஆறுதலாகவும், ஆதாரமாகவும் இருந்துள்ளது.. இந்த கட்டுரை ஆசிரியர் கொக்கரிக்கும் இந்துத்துவம் அல்ல..

    இன்றளவும் கூட, ஒரு இந்து மதம் மாறுகிறார் என்றால், அவன் முதலில் விட்டு செல்வது அவனுடைய குலதெய்வத்தைதான்.. அவனுடைய சாதி ஆசாரத்தை பிறகு விடுகிறான்.. ஆனால், கிறித்துவனான பிறகும் அவன் தன் சாதியை விடுவதில்லை.. உதாரணம், கிறித்துவ வன்னியர்கள், கிறித்துவ நாடார்கள்..

    இந்த கட்டுறை ஆசிரியருக்கு இன்னும் ஏதாவது தகவல் தேவையென்றால், என் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும்.. மேலும் சில தகவல்களை தருகிறேன்..

  13. முக்கிய‌மான‌ ச‌ப்ஜெக்டை எடுத்துக் கையாண்ட திரு. க‌ளிமிகு க‌ண‌பதிக்கு வாழ்த்துக்க‌ள்.

    ஒவ்வொரு ம‌னித‌னின் உயர்வும் ,தாழ்வும் அவ‌ர‌வ‌ர் கையில்.
    எந்த‌ அள‌வுக்கு ஒருவ‌ன் நிதானமாக‌வும், பிற‌ருக்கு தொல்ல‌ கொடுக்காம‌லும், ச‌முதாய‌த்துக்கு உத‌வியாக‌வும், பொறுப்புட‌ன் செய‌ல் ப‌டுப‌வ‌னாக‌வும் இருக்கிறானோ, அந்த‌ அளவுக்கு அவ‌ன் ச‌முதாய‌த்தில் ம‌ற்ற‌வரால் உய‌ர்வாக‌ ம‌திக்க‌ப் ப‌டுகிராப். என‌வே இந்து ம‌தத்தின் ஆன்மீக‌த்தை, இந்திய‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ழ‌ங்கி அவ‌ர்க‌ள் தங்களை உய‌ர்த்திக் கொள்ள‌ உத‌வ‌ வேண்டும். இன்றைக்கு உண்மையில் ந‌ம்மிடையே பெரிய‌ வேறுபாடு இல்லை. வெவ்வெறு ச‌மூக‌த்தை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஹாஸ்ட‌லில் அருக‌ருகே அம‌ர்ந்து உண‌வு உண்கின்ற‌ன‌ர். ஒன்றாக‌ காலேஜ் க‌ட் அடித்து விட்டு விஜ‌ய் , சூரியா ப‌ட‌ம் பார்க்கின்ற‌ன்ர். இன்னும் முன்னேற்ற‌ம் தேவையாக‌ உள்ள‌து. கிராம‌ங்க‌ளில் ச‌மூக‌ பிரிவினை உள்ள‌து.

    இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து? அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து. ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌ கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர். ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.

    சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னுக்கு த‌ன்னால் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான். எந்த‌ அளவுக்கு ஒரு ம‌னித‌ன் க‌னவானாக‌ இருக்கிறானோ, அந்த‌ அள‌வுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து. எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

    பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

    ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து, ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

    அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

    வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.

    எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

    சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது. மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!

    மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது. அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.

  14. வணக்கம்

    /////குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர். ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.///

    சாதி என்ற கோட்பாடு எங்கே யாரால் எப்போது ஆரம்பித்தது என்று இங்கே யாருக்கும் தெரியாது, எழுதப் பட்ட சரித்திரங்களும் திரித்திரங்கள் (திரித்து எழுதியவை) ஆகி உள்ளன.

    வெறும் நான்கு வர்ணங்களாக இருந்த நமது கலாச்சாரத்திலே எண்ணிலடங்காத சாதிகளாய் திரிந்து உள்ளது. இவைகள் குழந்தை, மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட வேண்டும். இந்த சாதிக் கலவரத்தின் ஆணிவேர் என்ன என்று பார்த்தீர்களானால் தீண்டாமையே,

    முதலில் உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்ற உண்மை குழந்தைகளுக்கு அறிவுறுத்தப் படல் அவசியம்.

    சாதி அல்ல முதலில் வர்ணம் என்பது எதற்க்காக வகுக்கப் பட்டது என்பது பற்றி சரியான புரிதல் இல்லாமல் போனதுவே நமது துரதிர்ஷ்டம் எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *