ஒரு தவறான அரசியல்வாதி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அவருடைய அல்லது அந்தக் கட்சியின் பிரச்னை. எல்லா மக்கள் பிரதிநிதிகளுமே மோசமானவர்கள்தான்; எல்லா நேரங்களிலும் எல்லா தேர்தல்களிலும் அப்படித்தான் என்று சொன்னால் பிரச்னை நம் மீதுதான் இருக்கிறது. பழியை அரசியல்வாதிகள் மீது போட்டுவிட்டு நாம் தப்பிக்கமுடியாது. இந்நிலைக்கு மாற்று எதுவும் இல்லை. அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். அப்படி வாக்காளர்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதென்பது நீண்ட நெடிய பயணம்.
இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது. அரசியல்வாதி, கட்சி அல்லது தலைவர் எல்லாம் தாற்காலிகமே. அரசியல் விழிப்புணர்வே நிரந்தரமானது. அது ஒரு தனி நபரின் சிந்தனையாக, கருத்தாக இருந்தால் போதாது. மாற்றத்தை முன்னெடுக்கவேண்டியவர்களான நம் அனைவருடைய கூட்டு முயற்சியாகப் பரிணமிக்கவேண்டும்.
அண்ணாமலை எனும் திருப்புமுனை
ஆசிரியர்: சுரேஷ் குமார், தமிழில்: B.R.மகாதேவன்
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
பக்.: 256
விலை: ரூ 250/-
ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்கலாம்.
தொலைபேசி மூலம் வாங்க: 94459-01234 | 94459-79797
இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் (இந்துத்துவ சிந்தனையாளர், அறிஞர்) மற்றும் ஜே.சாய் தீபக் (இந்திய உச்சநீதிமன்ற வழக்குரைஞர், எழுத்தாளர்) ஆகிய இருவரும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்.
அரவிந்தன் நீலகண்டன்:
1967லிருந்து திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றன. வஹாபியிஸ – பிறர் மீதான வெறுப்பு அடிப்படைகளைக் கொண்ட திராவிட சித்தாந்தம் என்பது பிராமண வெறுப்பு மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில் அது இனவெறியை அடிப்படையாகக் கொண்ட ஹிட்லரின் நாஜியிஸம் போன்றதும் கூட. ஆனால் தமிழகத்தின் கலாசார, அரசியல் சூழ்நிலைகள் இந்த இனவாதக் கோட்பாட்டைப் பெருமளவுக்கு நீர்த்துபோகச் செய்திருக்கின்றன. வெறுப்புவாதம் எப்போதும் பொய்யுரைகளை அடிப்படையாகக் கொண்டே இயங்கும். பொய்மை ஒரு நாளும் உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்காது.
இருந்தும் திராவிட மாடல் என்பது அனைவரையும் உள்ளக்கக்கூடிய சமூக மேம்பாட்டு சித்தாந்தம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளப்படுகிறது.
இதற்கான காரணம் மிகவும் எளியது. வரலாற்றுப் பின்பலம் இதற்கு உண்டு. புண்ய பலம் என்றும் இதைச் சொல்லலாம். அது நிலத்தடி நீர் மட்டம் போன்றது. பூர்விகமாகக் கிடைத்த சொத்து. திராவிட சித்தாந்தத்துக்கு முந்தைய காலகட்டத்து அரசியல் சக்திகளின் தொலைநோக்குப் பார்வை, சமூக சீர்திருத்தங்கள், கலாசார தாக்கங்கள் ஆகியவற்றின் மூலமாக பல சாதகமான அம்சங்களை தமிழகம் பெற்றிருந்தது. உதாரணமாக கே.காமராஜர் ஆரம்பித்த மதிய உணவுத் திட்டம். அவருடைய ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் கட்டிய அணைகள்; தொடங்கிய தொழில்பேட்டைகள்; நேர்மையின் சிகரமான திரு கக்கன் ஜி முன்வைத்த முன்மாதிரி அரசியல்.
இந்தக் காலகட்டத்துக்கு முன்பாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தன் கவிதைகளினால் சமூக முற்போக்குக் கருத்துகளைக் கொண்டு சென்றிருந்த மகா கவி பாரதி.
விஜய நகர சாம்ராஜ்ஜிய மன்னர்களின் தியாகங்களின் மூலம் அந்நிய மதப் படையெடுப்புகளில் இருந்து தமிழகம் பாதுகாக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் மகத்தான சாதனைகளுக்கு அது பெரிய ஆதார சக்தியாகத் திகழ்ந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துகள் முழுவதும் ஐரோப்பாவுக்கு துறைமுகங்கள், துறைமுக நகரங்கள் மூலமாகவே சுரண்டப்பட்டன. அதன் உப விளைவாக கல்கத்தா, சென்னபட்டிணம் (தமிழகம்) போன்ற துறைமுக நகரங்கள் வளர்ச்சியடைந்தன.
வழிவழியாக வந்த இந்த பூர்விக ஆதாயங்கள், மரபுகளின் அடிப்படையில் திராவிட இயக்கம் கட்டமைக்கப்பட்டிருந்தால் தமிழகம் உண்மையிலேயே மகத்தான மாநிலமாக வளர்ந்திருக்கும். ஆனால், இந்த முன் ஏர் கிளறிச் சென்ற நிலம் முழுவதையும் பின் ஏர் தெளிவாக மண் அள்ளிப் போட்டு மூடிவிட்டது. லஞ்ச ஊழலை இயல்பான செயலாக்கிவிட்டனர். வாரிசு அரசியலைக் கொண்டுவந்தனர். குறைவான ஊழலா… ஊழலின் வேறு வடிவமா… மையப்படுத்தப்பட்ட ஊழலா… மையம் அழிந்த ஊழலா இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படியாகவே தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுவிட்டனர்.
இலவசங்களின் அரசியல், திருமங்கலம் ஃபார்முலா, வீட்டுக்கு-வோட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்பதெல்லாம் தேர்தலில் வாடிக்கையாகிவிட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் இந்த மலினங்கள் உச்சத்தை எட்டின.
இவை எல்லாம் ஒரே ஒரு விஷயத்தையே சுட்டிக்காட்டுகின்றன.
தமிழகத்துக்கு மாற்றம் தேவை. இந்த நூலின் ஆசிரியர் அறிவார்ந்த தரவுகளின் அடிப்படையில் அந்த மாற்றத்தின் உருவமாகச் சொல்லும் நபர்: அண்ணாமலை.
அண்ணாமலை மிகவும் இள வயதினர். எளிய பின்னணியில் இருந்து வந்தவர். இந்தியாவின் புகழ் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவராக வளர்ந்தவர். காவல் துறையில் துணிச்சலும் நேர்மையும் மிகுந்தவராகப் பணியாற்றினார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கியிருக்கிறார். தமிழக பாஜகவில் சேர்ந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து தமிழகத்தில் பாஜகவும் அதன் தாய் பரிவாரமான ஆர்.எஸ்.எஸும் சித்தாந்த மற்றும் சமூகச் செயல்பாடுகளில் கோமா நிலையில் இருந்துவருகிறது. விஷமே உணவானால் மரணமே வெல்லும் என்று அயன் ராட் சொன்ன புகழ் பெற்ற வாக்கியம் நினைவுக்குவருகிறது. தீமைகளுடன் நன்மைகள் சமரசம் செய்துகொண்டால் தீமைகளுக்கே அது எப்போதும் சாதகமாக அமையும்.
ஜே.டி.எஸ்., அல்லது ஜே.டி.யு என மதச்சார்பற்ற என்று அழைக்கப்படும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தபோதெல்லாம் கூட்டணிக்கட்சியே பாஜகவை விட அதிக ஆதாயம் அடைந்திருப்பதைப் பார்க்கமுடியும். உத்தவ் சிவசேனை, திமுக போன்ற வாரிசு பிராந்திய அரசியல் கட்சிகள் விஷயத்தில் இது இரட்டிப்பு உண்மையாகவே இருக்கிறது. 2001 மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழகத்தில் இந்து வாக்கு வங்கி என்ற ஒன்று இல்லை என்பது புரிந்ததும் மெள்ள பாஜகவிடமிருந்து திமுக விலகிச் செல்ல ஆரம்பித்தது. இறுதியில் 2004-ல் கூடுதல் நண்மை கிடைக்கும்வகையில் கூட்டணியை முறித்துக்கொண்டது. அதன் பிறகு அதிமுகவின் மீது ஏறிக் கொள்வதும் இறங்கிக் கொள்வதுமாக பாஜக உப்பு மூட்டை விளையாட்டு விளையாடிவருகிறது. இந்த இடத்திலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை அதிமுகவே தீர்மானித்துவந்திருக்கிறது.
அண்ணாமலையின் வருகையைத் தொடர்ந்து எல்லாமே மாறிவிட்டது. திராவிடக் கட்சிகள், ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றுடன் இனிமேல் எந்தவொரு கண்ணாமூச்சி விளையாட்டும் இல்லை என்று அவர் தெளிவாகப் புரியவைத்துவிட்டார். உள்ளும் புறமுமாக அவருக்குப் பல எதிர்ப்புகள் வந்தன. எனினும் அவர் உறுதியாக முன்னின்று சமாளித்துவருகிறார். திராவிட இருளில் இருந்து தமிழகத்தை மீட்க வந்திருக்கும் விடி வெள்ளி அண்ணாமலையே. ஆளுமை என்ற நிலையில் இருந்து ஒரு சகாப்தமாக (திருப்புமுனைத் தலைவராக) விரைவிலேயே மாறிவிட்டார்.
இந்த திருப்புமுனைப் பரிணாமத்தை தனது சொந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்களினூடாக விவரிக்கிறார் நூலாசிரியர். தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கும் நூலாசிரியர் சுரேஷ், என் அருமை நண்பரும் கூட. அரசியல் நிகழ்வுகளை கூர்மையாகவும் நடுநிலையோடும் அலசுபவர். அவருடைய தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணத்துவம் மற்றும் பன்னாட்டுப் பணி அனுபவங்கள் பற்றித் தனியே சொல்லத் தேவையில்லை. இந்த நூலில் ’அண்ணாமலை சகாப்தத்தை’ (அண்ணாமலை என்ற திருப்புமுனையை) தன் பார்வையில் அழுத்தமாக முன்வைக்கிறார். மிகுந்த பெருமிதத்துடனே இந்த மாற்றத்தைப் பார்க்கிறார். பல கோணங்களில் அதை விவரிக்கிறார். அண்ணாமலையின் பணிவு, அபாரத் துணிச்சல், அறிவார்த்த பேச்சுகள் என ஒவ்வொரு குணத்தையும் தீர்க்கமான பார்வையுடனும் தனது அனுபவங்கள் அடிப்படையிலும் நூலில் விவரிக்கிறார்.
ஊடகங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று அண்ணாமலை மீது ’பரபரப்புக் குற்றச்சாட்டு’ வைக்கப்படுவதுண்டு. அவர்களை அவமதிப்பதாகவும் விமர்சிப்பதுண்டு. இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஊடகத்தினரை இப்படி அண்ணாமலை திட்டி நொறுக்குவதை மக்கள் ஆர்வத்துடன் வரவேற்கவே செய்கிறார்கள். அண்ணாமலை ஊடகங்களை மட்டுமே இப்படி கடுமையாக விமர்சித்து நடந்துகொண்டிருந்தால் அவர்கள் அவரை எளிதில் புறக்கணித்திருப்பார்கள். அல்லது அவரை முன்கோபக்காரராகச் சித்திரித்து ஓரங்கட்டியிருப்பார்கள். அவர்களால் ஏன் அப்படிச் செய்யமுடியவில்லையென்றால், ஊடகங்கள் முன்வைக்கும் மிகவும் சவாலான கேள்விகளுக்குக் கூட அவர் ஆதாரபூர்வமான பதில்களை அர்ப்பண உணர்வுடன் முன்வைத்தும்வருகிறார். முன் தயாரிப்புகள் இன்றி, திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கில் மடத்தனமாகக் கேள்விகள் கேட்கும்போதுதான் அண்ணாமலை அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதுபற்றி நூலாசிரியர் விவரிக்கிறார்:
“பதில் சொல்லத் தகுதியான கேள்விகள் அனைத்துக்கும் அண்ணாமலை பொறுமையாகப் பதில் சொல்லிவருகிறார். தன்னையும் தன் கட்சியையும் விமர்சித்து வைக்கப்படும் கேள்விகளைக்கூட நிதானமாக எதிர்கொண்டு தெளிவாக பதில் சொல்கிறார். கேள்விகள் மிகவும் கடுமையாகக்கூட இருக்கக்கூடும். பொருட்படுத்தி பதில் சொல்லவேண்டியதாக இருந்தால் அந்தக் கேள்விகளை அவர் தவிர்ப்பதே இல்லை. பதில் சொல்லத் தீர்மானித்துவிட்டால் ஆத்மார்த்தமாக 100% அர்ப்பண உணர்வுடன் சரியான தரவுகளை முன்வைத்து பதில் சொல்வார். கேள்வியின் / பிரச்னையின் அடி ஆழத்துக்குச் சென்று அலசி ஆராய்ந்து பதில் சொல்வார். எளிமையான தரவுகளை முன்வைத்து உரையாடலின் / விவாதத்தின் போக்கைத் தீர்மானிப்பார். அவரை வலையில் வீழ்த்தச் செய்த சதியை எளிதில் முறியடித்து வெளியேறுவார்”.
இந்தப் புத்தகம் நேர்மையான தொனியில் எந்தவித முறையற்ற நியாயப்படுத்தலும் இன்றி எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மெளனப் புரட்சி நடந்துவருவதாக நூலாசிரியர் கருதுகிறார். தானும் அதில் ஓர் அங்கமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தே இந்த நூலை எழுதியிருக்கிறார்:
“அண்ணாமலை கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் சமூக வலைதளச் செயல்பாடுகள் மேலும் விரிவடைந்தன. வெறுமனே ஒரு பதிவை ரீ ட்வீட் செய்வதோ ஷேர் செய்வதோ அல்ல. புதிய பதிவுகளை உருவாக்கி அண்ணாமலை மற்றும் தமிழக பாஜகவுக்குத் தொடர்ந்து ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றனர். ஒத்த கருத்துடைய இந்த ஆதரவாளர்கள் பல்வேறு கூட்டங்கள், விவாதங்களில் பங்கெடுத்து வந்ததோடு அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்பட விருப்பத்தையும் தெரிவித்துவந்தனர். மலைக்கு ஆதரவானவர்கள், நரேந்திரமோதிக்கு ஆதரவானவர்கள், பாஜகவுக்கு ஆதரவானவர்கள் என இவர்களின் எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் இருந்தது. கட்சிக்கும் அண்ணாமலைக்கும் பொதுமக்கள் தொடர்புப் பிரதிநிதிகளும் பலர் இருந்தனர்.தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஆதரவு இல்லாமலே இவையெல்லாம் நடந்துவந்தன. யாரும் வெளியில் இருந்து தள்ளிவிடாமல் தானாகவே ஓடிய வண்டி இது”.
இந்த நூல் ஒருபக்கத்தில், அண்ணாமலை என்ற திருப்புமுனை பற்றி இந்த நூலைப் படிப்பவர்களுக்கு புரியவைக்கிறது. அதோடு நின்றுவிடாமல் அண்ணாமலையை சற்று சந்தேகத்தோடு அலச ஆரம்பித்து புகழும் நிலைக்கு மாறியிருக்கும் ஒரு நபருடைய பின்னூட்டமாகவும் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை விவரிக்கும் நூலாகவும் இருக்கிறது. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது.
ஜே.சாய் தீபக்:
தமிழகத்தின் ஆன்மிக பலமானது நூற்றாண்டுக்கு மேலாக திராவிட இயக்கமெனும் சாபக்கேட்டினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அரசியல் நீரோட்டம் உட்பட தமிழ் சமூகத்தின் ஆன்மாவில் ஆழமான அபாயகரமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து தமிழர் பெருமை, சமூக நீதி என்ற போர்வையில் இந்து விரோதம் மற்றும் அதன் தொடர்ச்சியான பிரிவினை இலக்குகளுடன் அது செயல்பட்டுவருகிறது. சமீபகாலமாக இந்த பிராந்திய, பிரிவினைவாதக் குரல் அருகில் இருக்கும் கர்நாடகாவுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. இது உடனடியாகத் தடுத்தாகவேண்டிய அபாயம்.
இந்தக் கொந்தளிப்பான சூழலில் அண்ணாமலையின் வருகை மாசடைந்துவரும் தக்ஷிண பாரதத்துக்கு மிகவும் அவசியமான தூய காற்றாக இருக்கிறது. அவருடைய எளிமை, மண்ணில் வேர் ஊன்றிய தன்மை, சிந்தனையில் தெளிவு, நிமிர்ந்து நிற்கும் தன்மை, கல்வித் தகுதிகள் இவையெல்லாம் பிராந்திய, தேசிய, சர்வ தேச களங்களுக்கு உகந்ததொரு தலைவராக அவரை ஆக்கியிருக்கின்றன. இந்த நூல் தமிழகம் மற்றும் பாரதத்தின் அரசியல் எதிர்காலமாகத் திகழவிருக்கும் அவருடைய அரசியல் பயணத்தின் ஆரம்ப கட்டம் தொடர்பான எளிய கோட்டுச் சித்திரமாக உருவாகியிருக்கிறது. பாரதிய இலக்குகளை பெருமளவுக்கு ஆதரிப்பவன் என்ற வகையில் இவருடைய அரசியல் பயணத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் நிச்சயம் கூர்ந்து கவனித்துவருவேன்.
சமூக நலனில் அதிக அக்கறைகொள்ளவும் பாரதத்தை மறு மலர்ச்சி அடையச் செய்யவும் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன்முன்வர இந்த புத்தகம் உந்துவிசையாக இருக்கும் என்று நம்புகிறேன். தத்தமது பலங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களை உற்சாகப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.
இந்த நூல் ஒரு காலத்தின் கட்டாயம் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. திராவகமும் விஷமும் கலந்து ,ஒன்றாக ,திராவிடம் என்ற பெயரில் மக்களை மிக மிக இழிவான நிலைக்கு கொண்டு சென்று,ஒரு குடும்பம் மட்டும் உயர்வான நிலைக்கு சென்று கொண்டு மக்களை முட்டாளாக்கும் இந்த அரசியலுக்கு மாற்றம் வேண்டும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .அதற்கு அண்ணன் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வேண்டும் வேண்டும்.