யோகமும் போகமும்

(1)

யோகத்தில் ஆழ்ந்திருக்கட்டும்
போகத்தில் ஆழ்ந்திருக்கட்டும்
பற்றில் ஆழ்ந்திருக்கட்டும்
பற்றற்றிருக்கட்டும்
பிரம்மத்தில் சித்தம் களிப்பவர்க்கு
ஆனந்தம் ஆனந்தம்
முடிவற்ற ஆனந்தம்.

— ஆதி சங்கரர், மோஹமுத்கரம் (பஜகோவிந்தம்) 19

யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா
ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீன꞉ ।
யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம்ʼ
நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ ॥19॥

ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும். ஞானியின் மனப்பாங்கு தர்மம் அதர்மம், விருப்பு வெறுப்பு முதலான அனைத்து இருமைகளையும் கடந்தது எனினும், உலக வியவகாரத்தில் அவரது செய்கைகள் தர்மத்திற்கு விரோதமில்லாத வகையிலேயே அமைந்திருக்கும். எனவே அவை இன்பத்தையே தரும், துன்பத்தையல்ல.

(2)

மனத்தகத்து அழுக்கறாத மௌனஞான யோகிகள்
வனத்தகத்து இருப்பினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மௌனஞான யோகிகள்
முலைத்தடத்து இருப்பினும் பிறப்பறுத்து இருப்பரே.

— சித்தர் சிவவாக்கியர்

மனத்தின் அழுக்கை (வாசனைகளை) அறுக்காத யோகிகள் வனத்திலிருந்தாலும் வாசனைகள் அவர்களை விட்டு அகலாது. வாசனைகளை அறுத்த யோகிகள் பெண்ணின் முலையைத் தழுவியிருந்தாலும் அவர்கள் பிறப்பறுத்தவரே ஆவர்.

(3)

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

— கம்பராமாயணம், பாலகாண்டம் கடிமணப்படலம்.

(மன்றல் – நல்வாசம்; தவிசு – ஆசனம்; வென்றி – வெற்றி; ஆர்வத்து – அன்புகொண்ட; எய்தி – நெருக்கமாக)

நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை உடைய வெற்றிவீரனான இராமனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் போன்ற சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த போகத்தையும் (பேரின்ப வாழ்வு) யோகத்தையும் (யோக நெறி) போல இருந்தார்கள்.

(4)

மிகுதியான பேச்சுக்களால்
வெற்றுத் தர்க்கப் புலம்பல்களால்
இங்கு ஆவதென்ன?
ஆண்மகன் எனில்
இரண்டில் ஒன்றை நாடவேண்டும் –
புதுப்புது மயக்கங்கள் களிப்புக்கள் தவிப்புகளுடன்
அழகிகளின் ஸ்தனபாரங்களில் கழியும்
யௌவனம்
அல்லது
வனம்.

— பர்த்ருஹரி, சிருங்கார சதகம் 72

கிமிஹ ப³ஹுபி⁴ருக்தைர்யுக்திஶூன்யை꞉ ப்ரலாபை꞉
த்³வயமிஹ புருஷாணாம்ʼ ஸர்வதா³ ஸேவனீயம் ॥
அபி⁴னவமத³லீலாலாலஸம்ʼ ஸுந்த³ரீணாம்ʼ
ஸ்தனப⁴ரபரிகி²ன்னம்ʼ யௌவனம்ʼ வ வனம்ʼ வா ॥ 72॥

வனம் என்று குறிப்பிட்டது அனைத்தையும் துறந்து தவவாழ்க்கை மேற்கொண்டு வனம் செல்வதை. யோகம் போகம் இரண்டுமே தீரனான மனிதனுக்கான வழிகள் என்று இங்கு கவி கூறுகிறார். பலவழிகளில் புலன்களையும் மனத்தையும் அலைக்கழிக்கும் போக வாழ்வைப் பல ஆடம்பரச் சொற்களிலும், ஒருமுகப்பட்ட மனதுடன் தனிமையை நாடிச் செல்வதை ‘வனம்’ என்ற ஒரே சொல்லிலும் கவி குறிப்பது ரசித்தற்குரியது. சிருங்கார சதகத்தில் இன்னும் சில பாடல்களும் இத்தகைய தள்ளாடும் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளன. இறுதியாக எழுதிய வைராக்ய சதகத்தில், போகத்தின் அர்த்தமின்மையைக் கூறி, துறவே நாடுதற்குரியது என்பதை பர்த்ருஹரி நிறுவுகிறார்.
இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *