எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?

[B.R. மகாதேவன் எழுதிய தங்கலான் திரைப்பட விமர்சனத்தை இங்கே வாசிக்கலாம். அதன் நீட்சியே இந்தக் கவிதை].

நிலம் பறிபோனதையொட்டி
நிலைதடுமாறிப் போனதை மீட்டெடுக்கவே
நினைவிலிப் புனைவுருவாக்கம் என்கிறாயா..?

ஒடுக்கப்பட்டவர்களுக்கு
உள்ளுக்குள் இருந்தே
ஓர் உடை வாள் தயாரிக்கிறேன் என்கிறாயா?

நல்லது…
வரலாறை
எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம்
யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

எதற்காகச் செய்கிறோம் என்பதே
எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

*

யாரின் பிரதிநிதி நீ?
யாரின் அரசியல் நீ பேசுவது?

நீ தலித்களின் பிரதிநிதியா..?
இன்று தலித்களில் இருப்பது யார் யார்..?

ஆதியில் நிலம் இருந்து
அதன் பின் பறிக்கப்பட்ட நீங்கள் ஒருபக்கம்
நிலம் பறிக்கப்படாமல் இருந்தும்
பட்டிக்குள் அடைக்கப்பட்ட
தேவேந்திரர் குலம் ஒருபக்கம்

நாவிதர், வண்ணார், அருந்ததியர்,
தோட்டி, வெட்டியார் என
உங்களாலும் ஒடுக்கப்பட்ட சேவை ஜாதிகள் ஒருபக்கம்

மலைவாழ், கானக வாழ் பழங்குடிகள் ஒருபக்கம்

தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட
இத்தனை பேரின்
வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு.

நிலம் பறிக்கப்பட்ட நீ பேசும் அரசியல்
உங்கள் எல்லாருடைய அரசியல் அல்ல.

டாக்டர், இன்ஜினியர், வக்கீல் ஆன பின்னும்
உன் ஜாதி ஏழை சகோதரருக்குக்கூட
இட ஒதுக்கீட்டைப் பங்கிட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத நீ
உன் ஜாதிக்கு அல்ல;
உன் கட்டப்பஞ்சாயத்துக் குழுவுக்கான
உயர் மட்டத் தலைவன் மட்டுமே

எனவே, அந்த அளவுக்கு
அறச்சீற்றம் கொண்டால் போதும்.

நிலம் பறிபோன பின்னும்
பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில்
நீ இருந்ததில்லை

பிரிட்டிஷாரின் ஆசன வாயைக் கழுவிவிட்டவர்களில்
நீ இருந்ததில்லை

நிலம் பறிபோன பின்னும் நீ
அடுத்தவரின் அக்குள் ரோமம் மழித்ததில்லை

நிலம் பறிபோன பின்னும்
நீ அழுக்குத் துணி, தீட்டுத்துணி துவைத்ததில்லை

இன்றும் உன் வீட்டுக்கு முன்னால் ஓடும் சாக்கடைகளை
உன் வீட்டு மலக்கிடங்குகளை
உன் மதுபானக் கொண்டாட்டங்கள் முடிந்து
நீ சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் குப்பைகளை
கைகளால்தான் நம் சகோதரர்கள் அள்ளுகிறார்கள்
நீ அதில் இல்லை.

அந்தக் கொடுமைகளை அனுபவித்தவர்களின் பேரில்
ஆரம்பித்த போராட்டம்
அதன் மூலம் அரசியல் சாசனத்தில் தரப்பட்ட
அத்தனை சலுகைகள், உரிமைகளை
இன்று அபகரித்துப் பறித்திருப்பது யார்?

வெள்ளை அறிக்கை வெளியிடுகிறாயா..?
நீலிக்கண்ணீர் வடிக்கும் நீலக் கும்பலே

அண்ணல் அம்பேத்கர் திரும்பி வந்தால் முதலில்
அடித்துவிரட்டுவது உங்களைத்தானிருக்கும்

சனாதனவாதி எங்களுக்கு
சமூக நீதி உணர்வு கிடையாது
சகோதரத்துவம் கிடையாது
என்கிறாய்

நீ கை தூக்கிவிடலாமே
விஷ வாயு தாக்கி இறக்கும்
நம் சகோதரர்களை

உன் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் படித்தால்
உடம்பெல்லாம் நாறும் என்று நினைக்கிறாயா?

படித்துப் பாஸானால்
வேலை கிடைக்கும் என்கிறாயா?

உன் டாக்டர் பையனுடன்
இன்ஜினியர் மகளுடன்
வக்கீல் சகோதரருடன்
போட்டியிட அவரால் முடியுமா?

ஓரிரு தலைமுறையில் கிடைத்த வசதியை
உடனே விட்டுத் தரவேண்டுமா என்கிறாயா?
அதுவும் கிடைக்காத அடி ஆழத்தில் அல்லவா
அந்த சகோதரன் இறந்து கொண்டிருக்கிறான்

வேங்கை வயலின் நாற்றம் ஒன்றுமேயில்லை
வெற்றுடம்புடன் இறங்க நேரும்
விஷ வாயுச் சாக்கடையின் முன்னால்

அடைப்பெடுக்க ராமனைக் கூப்பிட்ட கும்பல்
ஈ.வெ.ராவுக்கு அந்தரங்க மயிர் மழித்துக்கொண்டிருக்கிறதா?
அல்லது
அவன் உங்களுக்கு என்ன செய்துகொண்டிருக்கிறான்?

*

நில உடமை சமுதாயத்தில்
நிலமற்று இருந்ததே ஆகப் பெரிய ஒடுக்குமுறை என்கிறாயே
அத்தனை நிலத்திலிருந்தும்
அறுவடைக்காலத்தில்
அத்தனை ஜாதிகளுக்கும்தான்
அளந்து அளந்து தரப்பட்டன.

சேற்றில் கால் வைக்காமலே
சோற்றில் கை வைத்த வீடுகள் அவை.

நிலத்தை ஏமாற்றிப் பறித்த கதை பற்றிப் பேசவேண்டுமா?
புனைவு வரலாறை எதற்கு
புதிய புராணம்போல் கஷ்டப்பட்டு எழுதுகிறாய்?

கைக்கு எட்டும் தூரத்தில்
கட்டுக்கட்டாய் இருக்கின்றன
நவீன வரலாற்று நவீன ஆவணங்கள்

உன் ஐரோப்பிய எஜமானன்
மலையகத் தேயிலைத் தோட்டத்துக்கு
காலில் சங்கிலி கட்டி இழுத்துச் சென்ற தலித்களின்
கண்ணீர்க் கதைகளைப் படித்துப் பார்.

அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட
ஆஃப்ரிக்கர்களிடம் கேட்டுப் பார்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட
ஆதி குடிகளின் ஆன்மாக்களிடம் கேட்டுப் பார்

அதைவிட அண்மைய வரலாறு வேண்டுமா?
அறிவில்லா ஆலயம் சென்று பார்.

பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு ஏமாற்றிய
நீதிக்கட்சி, திராவிட இயக்க ஆண்டைகளின்
பட்டியல் புதையுண்டு கிடக்கிறது அங்கு

தங்க வேட்டைக்குத் தயாரா தங்கலானே?

ரியல் எஸ்டேட் நிலமே நம் உயிர் மூச்சு.
வா… நம் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருக்கும்
நீதிக்கட்சி பண்ணையார் கும்பல் மீது
நில மோசடி வழக்கு தொடுக்கலாம்

நம் கல்வியை யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது
வா நம் கண் முன் இருக்கும்
இந்த வரலாற்று ஆவணத்தை
கற்போம்; ஒன்று கூடுவோம்; கலகம் செய்வோம்

சொரணையே நம் வாழ்க்கை.
வா…
சொந்தக் காலில் நிற்போம்
சொந்தக் குரலில் பேசுவோம்

கை தூக்கிவிட்டதாகச் சொல்லும்
காலனியக் கயவர்களிடம் கேட்போம்
எங்கள் பூர்வ குடி அடையாளத்தை ஏன் பறித்தாய் என்று

மதம் மாற்ற விரும்பாத
எங்கள் மகத்தான ஆன்மிகத்தை ஏன்
மங்கச் செய்தாய் என்று

குளிர் பிரதேச உடையை
மித வெப்ப மண்டலத்தில் அணிவதா மேல்நிலையாக்கம்?

ஆண்டையின் குளிர் பிரதேச உடை
ஆண்டைக்கு நல்லது
அதுவும்
ஆண்டையின் குளிர் பிரதேச ஊரில் மட்டுமே
அவனுக்குமே நல்லது

அதை அவன் அவனுடைய அடையாளம் என்று
உலகமெல்லாம் அணியச் சொல்கிறான் ஆதிக்க வெறியில்
அடிமைபோல் அதைப் போட்டுக்கொள்வதிலா
உன் விடுதலை இருக்கிறது?

இங்கு வந்தால் உன் கோட் சூட்டைக் கழற்று.
அங்கு வந்தால் நான் அதை அணிகிறேன் என்பதுதானே
அறிவுள்ளவன் பேச வேண்டியது

உங்கள் பெண்களின் முலை மட்டுமா திறந்து கிடந்தன?
உயர் குடிப் பெண்களின் முலைகளும்தான் திறந்து கிடந்தன

ஜம்பர் வந்தபோது ஜம்பர் அணிந்தோம்
சானிட்டரி நாஃப்கின் வந்தபோது அதைப் பயன்படுத்தினோம்

அதற்கு முன் அது இல்லை என்றால்
அடக்குமுறை என்றா அர்த்தம் அடி முட்டாளே?

உலகம் பூராவும் புறப்பட்டுச் சென்று
ஆப்ரகாமிய மதங்கள் அழித்த பூர்வகுடிகளில்
எஞ்சியிருப்பது
சனாதன பூமியின் பூர்வ குடிகளான நாம் மட்டுமே

சரி…
எங்களால் ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதை
ஏற்றுக்கொள்கிறோம்.

மன்னித்துவிடு.

செய்த தவறுக்கு மேல் அவதூறு செய்யப்படுகிறோம்
செய்த தவறுக்கு மேல் பிராயச்சித்தம் செய்தும்வருகிறோம்.

இன்றும் ஒடுக்குமுறை தொடர்கிறது என்று சொன்னால்
அண்ணலைத்தான் நீ அவமதிக்கிறாய் என்று அர்த்தம்

தேசியத்தில் அதிகாரத்தில் இருந்தது
உன் மதச்சார்பற்ற மக்கள் பிரதிநிதிகளே

தமிழகத்தில் இன்றும் ஆட்சியில் இருப்பது
உன் சமத்துவ சகாய சற்குணவான்களே

உனக்குக் கீழே இருந்தவரை நீ ஒடுக்கியதைப்
பேசாமல் விட்டுவிடுகிறோம்.

உன் எஜமானர்கள்
உலகெல்லாம் செய்யும் ஒடுக்குமுறையை
எதற்காகப் பேசாமல் இருக்கவேண்டும்?

ஆஃப்ரிக்கப் பழங்குடிகளுக்கும்
அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கும்
ஆஸ்திரேலிய ஆதி குடிகளுக்கும்
அரேபியப் பழங்குடிகளுக்கும்
விடுதலைக்கான விடிவெள்ளி
நம் கீழை வானில்தான் மின்னுகிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்றவகையில்
உன் கண்ணில்தான் முதலில் தென்பட்டிருக்கவேண்டும்.
நீயோ மேற்குப் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறாய்

ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி
நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள்

அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?

அவள் சுட்டுவிரல் காட்டும் திசையில் ஒளிரும் விடிவெள்ளி
பிரபஞ்சத்தின் கண்ணீர்த்துளிபோல் மின்னிக் கொண்டிருக்கிறது

கார் மேக வண்ணனின் கிரீடத்தின் வைரம் போல்
முக்கண்ணனின் மூன்றாம் கண் போல்
புயலில் சிக்கிய கலங்களுக்கெல்லாம்
கரை காட்டும் குமரியின் மூக்குத்திக் கல் போல்
கருவானம் முழுவதும் படமெடுத்தாடும்
நாக தேவதை உமிழும் வைரக் கல்போல் மின்னுகிறது

நேற்றைக்கும் அது அங்கே ஒளிர்ந்துகொண்டிருந்தது.
இன்றைக்கும் அது அங்கே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
என்றைக்கும் அது அங்கே ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கும்.

உலகப் பூர்வகுடிகளின் விடுதலைக்காக
கிழக்கில் ஒளிரும் அந்த விடிவெள்ளி நோக்கி
எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?

[கவிதை ஆசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது]

2 Replies to “எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?”

  1. //எங்களால் ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதை
    ஏற்றுக்கொள்கிறோம்.
    மன்னித்துவிடு.
    செய்த தவறுக்கு மேல் அவதூறு செய்யப்படுகிறோம்
    செய்த தவறுக்கு மேல் பிராயச்சித்தம் செய்தும்வருகிறோம்.//

    இது தேவையா ?

    //இன்றும் ஒடுக்குமுறை தொடர்கிறது என்று சொன்னால்
    அண்ணலைத்தான் நீ அவமதிக்கிறாய் என்று அர்த்தம்//

    ரஞ்சித்திடம் ஏன் மஹாதேவன் மன்னிப்பு கேட்கிறார் ? புரியவில்லை. என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறீர்கள் ? இதுவும் புரியவில்லை.

    ஒடுக்கு முறை தொடர்கிறது என்று ரஞ்சித் மட்டுமல்ல எல்லா தலித்துகளும் (அரசு வேலை பார்ப்பவர்கள்) சொல்கிறார்கள். அதாவது நேரடியாக அல்ல, மறைமுகமாக. தலித்துகள் மட்டுமல்ல. ஒபிசிக்கலும் காண்டாகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் ரஞ்சித் மட்டுமல்ல. இந்திய முழுவதும் தலித்துகளும் மற்றவர்களும் சொல்கிறார்கள். பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால், அவள் உயர்சாதியாக ஆக இருந்தால் நாடே கொதிக்கிறது. தலித்தாக இருந்தால் இல்லை. இதை எல்லாரும் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தலித்துகள் மட்டுமல்ல. இதை பற்றி சொன்னால் அம்பேத்கர் கோபப்படுவாரா மஹாதேவன் ?

    ராமதாஸ் நீதிமன்ற பதவிகளில் பிராமணர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே நீதி கிடைக்கவில்லை எங்களுக்கு என்கிறார். இது ஒடுக்குமுறை அல்ல. ஆனால் இடஒதுக்கீடு பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்புகிறார்கள்.

  2. //உன் எஜமானர்கள்
    உலகெல்லாம் செய்யும் ஒடுக்குமுறையை
    எதற்காகப் பேசாமல் இருக்கவேண்டும்?//

    எஜமானர்கள் என்று ஆங்கிலேயனை குறிப்பிடுகிறார். ஆங்கிலேயன் தற்போது காலனி ஆதிக்கம் செய்யவில்லை. இங்கிலாந்து தன காலணிகளை விடுதலை விடுவித்து எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. காலனி நாடுகள் இன்று பிரிட்டிஷ் மன்னாரில் கீழ் காமன்வெல்த்து இயக்கத்தில் முழு மனதோடு சேர்ந்திருக்கின்றன. பிரிட்டிஷ் எண்ணத்தையும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. நேரு செய்தார் நாங்கள் விளக்குவோம் என்று பாஜ மோடி அரசு சொல்லவே இல்லை.

    காலனிகலீல் இருந்து வந்த குடியேறிய மக்களை இங்கிலாந்து இருகரம் நீட்டி வரவேற்று அணைத்து கொண்டது. அங்கு முந்தைய பிரதமர் உகாண்டாவிலிருந்து உயிருக்குத் தப்பி வந்தேறிய குடும்பத்திலிருந்து வந்த sunak . தான் ஒரு பெருமைக்கு ஹிந்து என்று சொன்னவர். எந்த பிரிட்டிஸ்காரனும் அதை விவாதப்பொருளாக்கவில்லை. அவரின் உட்துறை அமைச்சர் ஒரு தமிழ் தாய்க்குப் பிறந்தவர் (ப்ரெவர்மன்). அவர்கள் பள்ளிப்படங்களில் பிரிட்டிஷ் அரசின் காலனி ஆட்சி பெருமைகளை பறைசாற்றுவதில்லை. முன்னாள் பிரதமர் பிளேர் கறுப்பர் அடிமை வியாபாரத்திற்காக பகிங்கிற மன்னிப்பு கேட்டார். அவரை கேட்கக்கூடாதென்று எவருமே சொல்லவில்லை. அண்மையில் நடந்த பிளாக் ளைவ்ஸ் மேட்டர் என்ற இயக்கத்தின்போது அடிமை வியாயாரத்தில் சொத்து சேர்த்தவர் ஒருவரின் சிலை உடைக்கப்பட்டது. எவரும் எதுவும் சொல்லவில்லை.

    மக்கள் அங்கே காலத்தோடு மாறிவிட்டார்கள். ஏன் அவர்களைப்பற்றி ரஞ்சித் பேச வேண்டுமென்று மஹாதேவன் ஆசைப்படுகிறார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *