வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

தமிழிலும் தமிழ்நாட்டிலும் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பாரதியாரைப் பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் ஓரளவுக்கு நிறைய எழுதப் பட்டிருக்கிறது என்பது நாம் உண்மையிலேயே பெருமை கொள்ளவேண்டிய விஷயம். ‘பாரதி இயல்’ என்று பெயர் தரும் அளவுக்கான ஆய்வுகளும் வந்துள்ளன.

ஶ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள “வேதம்  புதுமை செய்த பாரதி” (2024) இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது. பாரதி எப்படி ஒரு சம்பிரதாயமான தமிழ்க்கவியாகத் தொடங்கி மாபெரும் சிந்தனையாளராக பரிணமித்தார் என்பதைப் பேசும் பாரதிக் கல்வி (2010) என்ற அருமையான நூலை ஆசிரியர் முன்பே எழுதியிருக்கிறார். ஒருவகையில் அதன் இயல்பான தொடர்ச்சியாகவே இந்த நூலைக் கருதலாம்.

“வேதம் புதுமை செய்” என்று தான் புதிய ஆத்திச்சூடியில் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. “வேதரிஷிகளின் கவிதை” என்ற தலைப்பில் சில வேத ஸூக்தங்களை பாரதியார் தமிழாக்கம் செய்து அவற்றின் பொருளை விளக்கிக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் என்ற விஷயம் கூட தமிழர்களில் பலரும் அறியாத தகவல். ஆனால், “வேதம் புதுமை செய்தார்” என்பது இந்தச் சின்ன விஷயத்தை மாத்திரம் வைத்து அல்ல. வேத மெய்யியலில் பாரதியாரின் உறுதியான ஈடுபாடு என்பது அவரது கவிதைகள் உட்பட பலதரப்பட்ட எழுத்துகளிலும் வெளிப்படுகிறது என்பதோடு, சாதி வேறுபாடுகளை எதிர்த்த பாரதியின் சமதர்ம சிந்தனை, புதுமைப் பெண்ணைப் பாடிய அவரது பெண்விடுதலைச் சிந்தனைகள் ஆகியவற்றுக்கான தூண்டுதலும் வேத ரிஷிகளிடமிருந்தே வருகிறது என்பதையும் பல்வேறு மேற்கோள்களுடனும் ஆதாரங்களும் நூலாசிரியர் நிறுவிச் செல்கிறார்.

புதுச்சேரி வாழ்க்கையில் குள்ளச்சாமி போன்ற சித்தர்களுடனான தொடர்பும், அந்தக் காலகட்டத்தில் தீவிரமான வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஶ்ரீஅரவிந்தருடனான நீண்ட உரையாடல்களும் பாரதியிடம் இதுகுறித்த ஆர்வத்தை உண்டாக்கின. வேதமந்திரங்களுக்கான சடங்கு ரீதியான அர்த்தங்களையே பிரதானமாக முன்வைக்கும் சாயணாச்சாரியாரின் வேத பாஷ்யமே பாரம்பரியமாக அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனுடன் மாறுபட்டு ஶ்ரீ அரவிந்தர் மந்திரங்களின் குறியீட்டு ரீதியான “யோகரகசிய ஞானமொழி” என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். இதன்படி அக்னி என்பது வேள்வித்தீ மட்டுமன்று, உயிர்களின் அகத்திலே எழும் தீயுமாகும். இதே ரீதியில் இந்திரன், வருணன், சூரியன், அதிதி, உஷை என அனைத்து வேத தெய்வங்களையும் ஶ்ரீஅரவிந்தர் அர்த்தப் படுத்துகிறார். இதனை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார் என்று ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.  

“யாகம் என்பதில் முதலில் வருவது அக்னி. அதன் தழல்கள் மேல்நோக்கி எழுவன. அதன் இயக்கத்திலேயே மேல்நோக்கிப் போவதைக் குறிக்கும் படிவமாக அக்நி அர்த்தப் படுகிறது… ‘முதற்பெருங் கடவுளின் துணிவு, அஃதே தீ. அறிவு முதிர்ச்சி பெறும்போது இவன் மண்ணிலிருந்து வானத்தை நோக்கி எழுகிறான்.. இவனை உள்ளத்தே நிறுத்துகிறோம். அறிவும் துணிவும் ஒரு பொருளாகின்றன. வேள்வியின் வளர்ச்சியையும் ஏற்றத்தையும் அக்நி நடத்துகிறான்’ என்று எழுதுகிறார் பாரதி..”  (பக். 53).

உண்மையில் அக்கினிக் குஞ்சு என்ற பிரபலப் பாடலின் உருவகமும் கூட வேதத்தில் இருந்து வருவது தான்.

இத்திறக்கில் அமைந்துள்ள பாரதியின் கருத்துக்களைப் பல இடங்களிலிருந்து பொறுக்கி எடுத்து ஆசிரியர் நமக்களிக்கிறார்:

“ஒளியின் கதிர்களை ஆங்கு அசுரர் ஓரிருட் குகையில் மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனும் மருத்துக்களும் அசுரருடைய கோட்டையைத் தகர்த்து, உள்ளே புகுந்து அவ்வொளிக் கதிர்களை விடுவித்துக் கொடுக்கிறார்கள். வலிமை கொண்ட மந்திரங்களாலே, அதாவது மனோ நிச்சயங்களாலே, மனிதன் இவ்வுலகத்தில் அமரநிலை அடைகிறான்” (பக். 60)

“பிற்காலத்துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. ‘அநந்த சக்தி’யை ஒரு ரிஷிபத்தினி ஆக்கிவிட்டார்கள். அதிதி என்பது எல்லையில்லாத பரமாத்ம சக்தி. அஹங்காரம் பிரிவுபடுத்துகிறது, கட்டுப்படுத்துகிறது. நான் என்ற பிரிவுணர்ச்சி நீங்கும்போது மனிதன் எல்லையற்ற நிலையுடன் பொருந்துகிறான். அதுவே ‘அதிதியோகம்’ அல்லது ‘சக்தியோகம்’ என்று சொல்லப்படும். அதிதியின் மக்கள் ஆதித்யர். இது தேவருக்கெல்லாம் பொதுப்பெயர். ஸுர்யனுக்குச் சிறப்புப் பெயராக வழங்குகிறது. அதிதியைச் சரணடைந்தோரும் ஆதித்யரே ஆவர்” (பக். 61).

“தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம், நினக்கது சோமரசம்” என்று அறிவையே சோமரசமாகக் குறிப்பிடும் பாரதியின் வேள்விப் பாட்டு, மஹாசக்தி பஞ்சகம், மஹாசக்தி வாழ்த்து, யாகப் பாட்டு, ஜெயபேரிகை என்று பல கவிதைகளில் இந்தக் கருத்தாக்கமே நிறைந்துள்ளது. ஆனால் பாரதியாரின் வேதமெய்யியல் குறித்த இந்தப் பின்புலம் சரியாக அறியப் படாததால், இவை உணர்ச்சிகரமான பக்திப் பாடல்கள் என்பதைத் தாண்டி வாசிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது. “மிகச் சிறந்த சிந்தனையாளனாக அறிஞர்களாலும், தலைமுறைகளாலும் ஓர்ந்து அணுகி ஆராய்ந்து பயன்கொள்ளப் படவேண்டிய ஒரு மேதையைப் பக்தி மனப்பான்மைகள் ஆரவாரத்துடன் குணச்சித்திரமாகப் பெரும்பாலும் அணுகியிருப்பது ஒரு விதத்தில் அலுப்பாக இருக்கிறது” (பக். 59) என்ற ஆசிரியரின் ஆதங்கம் புரிந்துகொள்ளப் படவேண்டியது.

இந்த நூலில் ஒன்றுக்கொன்று தொடர்புறுத்திச் செல்லும் கட்டுரைகள் வடிவில் 50 அத்தியாயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக உள்ளது.   

பாரதி பாட்டில் சாதிக்குழப்பம் ஏன்? (பக். 168-173) என்ற கட்டுரையில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை என்று அழுத்தமாகக் கூறும் ஆசிரியர், இந்த வரியை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார். “பாரதியும் வர்ணதர்மமும்” (பக். 75-101) என்ற நீண்ட அத்தியாயம் வேத சம்ஹிதைகள், மகாபாரதம், தர்மசாஸ்திரங்கள், பாரதியாரின் கருத்துக்கள் என்று பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. வர்ணம் குறித்து ஹிந்து சாஸ்திரங்களுக்கிடையே உள்ள வேறுபட்ட கருத்துக்களையும் ஆசிரியர் சுட்டிக்  காட்டுகிறார்.

“பாரதியார் ஆழ்ந்து போற்றிய ரிக்வேத கால ரிஷிகளின் சமுதாயத்தில், சாதிகள், தொழில்கள், பிறப்பு என்பதெல்லாம் எப்படி இருந்திருக்கின்றன.. ஸூக்தங்கள் தெரிவிக்கும் கருத்து ரிஷிகள் பல தொழில்கள் செய்பவர்களாக இருந்தனர் என்பதே. இந்த நிலை மாறிப் பின்னால் பிறப்பின் ரீதியான பிரிவினைகள் தடித்துப் போய் வர்ண பேதங்கள் பிறவி சார்ந்தே அமைந்து போயிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து… எனவே, மனிதகுல சமத்துவம் உண்டாவதற்குத் தடையெண்ணங்கள் என்பதெல்லாம் வழக்கத்தால் உண்டாகும் மாற்றத்திற்கான தயக்கமும், அச்சமும் காரணமாக விளைவதே அன்றி அறிவுடைமையால் அல்ல. இதை நன்கு உணர்ந்த பாரதியார், அரசியல் மாற்றமே முதலில் வேண்டியது, அதுவே பின்னர் சமுதாய மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கருதினார்.. “ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபைகளில் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாததால் அந்த சபைகளின் மூலமாக இந்தியாவில் ராஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கைகளை நிறுத்தி விடலாம், பிறகு சமூக வாழ்விலும் அக்கொள்கை தானே பரவிவிடும்” என்று ‘ஜாதிபேத வினோதங்கள்’ என்னும் கட்டுரையில் எழுதுகிறார்” (பக். 266-67)   

சித்தர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் “மர்ம சங்கேத” மொழியை முன்வைத்து பாரதி எழுதிய ஒரு அபூர்வமான, சுவாரஸ்யமான ஆங்கிலக் கட்டுரையை ஆசிரியர் கவனப்படுத்துகிறார் – “பாரதி வெளிக்கொணர்ந்த தமிழ்மொழியின் Occult speech” (பக். 122-127). “வெடிபடு மண்டபத்திடிபல” என்று தொடங்கும் பாரதியாரின் ‘ஊழிக்கூத்து’ பாடல் அதன் ஓசை நயத்திற்காகவே பிரபலமாகி விட்டிருக்கிறது. அதன் பொருளாழம் பெரும்பாலும் கவனிக்கப் படுவதில்லை. இப்பாடலை பாரதி ஐந்து பகுதிகளாக அமைத்துள்ளதன் நயத்தைக் கூறி, இதே கருவைக் கொண்ட ராபர்ட் ஃப்ராஸ்ட், சுவாமி விவேகானந்தரின் கவிதைகளுடனும் ஆசிரியர் ஒப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பு (பக். 288-294). இதே போல, “காளிசக்தி எனும் வண்டு” என்ற பிரமிப்பூட்டும் பாடலின் மறைபொருளை ரிக்வேதத்தின் “அதிதி” என்ற பேரன்னை, சாக்த தரிசனம், நவீன அறிவியல், சங்கரரின் பிரம்மஸூத்ர பாஷ்யம் என்று பல கண்ணோட்டங்களின் துணைகொண்டு ஆசிரியர் தெளிவு படுத்துகிறார் (பக். 295-303). இப்பாடலின் “தழல் காலும் விழி நீலம்” “ஒன்றே யானால் உலகனைத்தும் சாகும்” ஆகிய வரிகளின் விளக்கம் அற்புதமாக உள்ளது.

ரிக்வேதத்தின் பாடல்களைப் போன்று அல்லாமல், உரைநடை கலந்த கவித்துவ மொழியைக் கையாள்பவை யஜுர்வேத மந்திரங்கள்.   இந்த நடையையே பின்பற்றி பாரதியாரின் வசன கவிதைகள் அமைந்துள்ளன என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார் (பக். 306). காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்பில் அமைந்த இந்த வசன கவிதைகளின் பேசுபொருளும் முழுமையாக வேதங்களைத் தழுவியே உள்ளது. “நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ஹாஸி” என்ற வேத வாக்கியமும் நேரடியாகவே இவற்றில் வருகிறது.

“தெய்வங்கள் நம்மை உண்பன. நமக்கு உணவாவன. உண்போனும் உணவும் ஒன்றிற்கொன்று பரஸ்பரம் ஆவது தெய்வ நிலையில். இதற்கெல்லாம் அடிப்படையான உணர்வு வாழ்க என்று முடிகிறது முதல் கிளை” (பக். 308).

பாரதியின் படைப்புகளில் சைவம், வைணவம், கணபதி வழிபாடு. சரஸ்வதி, ஞாயிறு, உஷை என்று ஒவ்வொன்றைப் பற்றியும் தனிக் கட்டுரைகள்.  பாரதியார் கவிதைகளில் நம்மாழ்வார், பெரியாழ்வார் பாசுரங்களின் ஆழமான தாக்கம் குறித்த இரண்டு கட்டுரைகள். பாரதியும் ஹெரால்ட் ப்ளூமும், பாரதியும் பதஞ்சலி யோகமும்  என்று இரண்டு நேர்த்தியான ஆய்வுக் கட்டுரைகள். பாரதியின் கருத்து நேர்மையையும், சத்திய தரிசனத்தையும் விளக்கும் “பாரதியும் யதார்த்த வாழ்வும் வேதரிஷிகளும்”, “வாழ்வின் நிதர்சனம்”, “பாரதியின் நடுநிலைப் பார்வை” ஆகிய கட்டுரைகள். இத்தகைய அரிய மணிகள் இந்த நூல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. தனது ஒவ்வொரு கருத்திற்கும், பாரதியார், ஶ்ரீ அரவிந்தர் மற்றும் வேத மந்திரங்களின் விரிவான மேற்கோள்களைத் தக்கபடி எடுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர்.   

வேதங்களின் மறைபொருள், அது தொடர்பான ஶ்ரீஅரவிந்தரின் எழுத்துக்கள், பாரதியாரின் ஒட்டுமொத்த படைப்புலகம் இம்மூன்றையும் குறித்த ஆழமான கல்வியும், புரிதலும் கொண்ட ஒரு பன்முக சிந்தனையாளரால் மட்டுமே எழுதப் பட்டிருக்கக் கூடிய சாத்தியம் கொண்ட நூல் இது. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் பெரும் புலமையைக் கோரும் பணி இது. இத்தகைய சிறப்பான நூலை அளித்துள்ள நூலாசிரியருக்கு பாரதி அன்பர்கள், ஆய்வாளர்களும் தமிழுலகமும் மிகவும் கடமைப் பட்டுள்ளனர்.

3 Replies to “வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்”

  1. //ஆனால் பாரதியாரின் வேதமெய்யியல் குறித்த இந்தப் பின்புலம் சரியாக அறியப் படாததால், இவை உணர்ச்சிகரமான பக்திப் பாடல்கள் என்பதைத் தாண்டி வாசிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது. “மிகச் சிறந்த சிந்தனையாளனாக அறிஞர்களாலும், தலைமுறைகளாலும் ஓர்ந்து அணுகி ஆராய்ந்து பயன்கொள்ளப் படவேண்டிய ஒரு மேதையைப் பக்தி மனப்பான்மைகள் ஆரவாரத்துடன் குணச்சித்திரமாகப் பெரும்பாலும் அணுகியிருப்பது ஒரு விதத்தில் அலுப்பாக இருக்கிறது” (பக். 59) என்ற ஆசிரியரின் ஆதங்கம் புரிந்துகொள்ளப் படவேண்டியது.//

    பக்தி பாடல்களில் பக்தர்கள் விவாதத்தையும் தத்துவத்தையும் தேடுவதில்லை. தேடினால் பாடல்கள் தியரிகளாகி விடும். தியரி இருக்க வேண்டிய இடம் நூலில். பாடுமிடத்தில் இல்லை.

    வேதமெய்யியல் குறித்து தேட அறிவு முதிர்ச்சி வேண்டும். எல்லாரும் ஜடாயுமாகவோ ஸ்ரீரங்கம் மோகனசுந்தரம் போலவே இருப்பார்களா ? இருக்க முடியுமா ?

    அவர்கள் வெறும் பக்தி பாடல்களாக பாடும்போது உங்களுக்கு அலுப்பு வருவது போல, உங்கள் வேத விளக்கங்களை கேட்டால் அவர்களுக்கும் அலுப்பாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    கோயிலில் பஜனை பாடும்போது பார்க்கவும். புரியும்.

    ஆழ்வார் பாசுரங்களை பாடும் மக்களும் அப்படித்தான். அவைகளுக்கு ஆச்சாரியர்கள் பலப்பல வியாக்கியானங்கள் எழுதியிருக்கிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் பாடுகிறார்கள் அல்லது பாராயணம் பண்ணுகிறார்கள். தடுக்க முடியுமா ? பரிகாசம் பண்ண முடியுமா ?

    பாரதியாரின் பக்தி பாடல்கள் அப்படியே இருந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையிலும் வாசிக்கப்படும். இல்லாவிட்டால் ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு நேர்ந்த கதியே இவைகளுக்கும் ஏற்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே வாசித்துக்கொண்டிருப்பார்கள்.

    பாரதியார் மக்கள் கவிஞர். அவர் அப்படியே இருக்கட்டும். வேத விளக்க கவியானால் நூலகத்தில் போய் அடைந்து கொள்வார். வேண்டுமா ?

    நீங்கள் அவரை எப்படியும் புரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையை எழுத வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை.

    “ஆளை விடு சாமி!” என்று மற்றவர்கள் போகட்டும்.

    Live and let live.

  2. //“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை என்று அழுத்தமாகக் கூறும் ஆசிரியர், இந்த வரியை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார்.//

    பாரதியாரை விடுங்கள். நூலாசிரியரை எடுங்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், சாதிகளில் பெருமை இருக்கிறது என்றே.

    பிராமண தான் பிராமணர் என்று பெருமையடைகிறேன். இப்படியே மற்றவரும், இன்ந சாதியில் பிறந்த பெருமை எனக்கு இருக்கிறது என்று. பிராமராக்களுக்குள்கூட, அய்யர், அய்யங்கார். அய்யங்காராக பிறந்ததால் பெருமை அடைகிறேன் என்று கமல்ஹாசனின் மூத்த மகள் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஓங்கிச் சொன்னார். இத்தனைக்கும் அவரை அக்ஷயா பள்ளியில் சேர்த்த போது கமலஹாசன், தனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை, எனவே போட மாட்டேன் என்று அப்ளிகேஷனை காலியாக விட்டுத்தான் சேர்த்தார்.

    அய்யங்காராக பிறந்ததால் பெருமை என்றால் என்ன பொருள்? மற்ற ஜாதிகளில் பிறந்தால், அதைவிடுங்கள்!, அய்யராக பிறந்தால் பெருமை எனக்கு வராது என்று பொருள். இதை நான் குறிப்பிட காரணம்: ஒரு ஜாதி பிரிவுகளுக்குள்ளேயே இந்த தம்பட்டம் என்றால் தனித்தனி ஜாதிகளுக்கு?

    சரி போகட்டும். என்ன பெருமை என்று ஸ்ரீரங்கம் மோகனசுந்தரம் சொல்வாரா? மேடையில் ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வார்?

    சொல்லவே முடியாது என்பதுதான் என் பதில். காரணம், இன்ன சாதியில் பிறக்க வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. இந்து மதத்தில் முற்பிறப்பில் செய்த பலனால் இப்பிறப்பில் மனிதராகப் பிறந்தோம். அதிலும் இந்த ஜாதியில் பிறந்த பலன் கிடைக்கிறது என்று சொல்வதால் (ஓரிடத்தில் வாசித்த ஞாபகம்) பெருமை கொள்கிறார்கள். பிறந்த உடன் விதிவசத்தால் குழந்தையைத் தூக்கி வேறிடத்தில் விட்டிருந்தால் அதன் ஜாதி அதற்குத் தெரியுமா ? எனவே பிறப்பு என்பது ஒரு ஆக்சிடன்ட். அதற்கு காது மூக்கு வைத்தது மதம்.

    பிராமண ஜாதியில் பிறந்தது பெருமை என்றால் என்ன பொருள் தொனிக்கிறது ? மற்ற ஜாதியில், குறிப்பாக கீழ்ஜாதி எனப்படுவோருள் பிறந்திருந்தால் கேவலம் என்றுதானே ?

    இவன் நெட்டை என்றால் பக்கத்தி நிற்பவன் குட்டை என்றுதானே பொருள்? இந்த வீட்டில் குடும்பப் பெண்கள் வசிக்கிறார்கள் என்று போர்டு போட்டால் (இது மஹாராஸ்த்ரா சங்கிலி நகரத்தில் உண்டு. பல தெருக்களில் விலைமாதர்கள் கணிசமாக வாழ்வது, பல வீட்டுக்கதவுகளை இரவில் தட்டிவிடாதபடி அந்த போர்டு தடுக்கும்), பக்கத்து வீட்டில் வாழுபவர்கள் விபச்சாரிகள் என்றுதானே பொருள்?

    எனவே சாதிகள் பெருமையே என்பது வெறும் ஈகோ. அப்பெருமையினால் சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உருவாகும். வழிந்தோர் நலிந்தோரை இழிவாக பழிக்க அது காரணமாகும்.

  3. பிராமண ஜாதியில் பிறந்தது பெருமை என்ற நினைப்பை கொண்ட ஒருவன் பற்றி ஒரு செய்தி சில வருடங்களுக்கு முன் வந்தது. கிரிமினல் கேஸ்.

    ராமநாதபுறத்தில் நடந்தது. ஓர் இளைஞன் தன் வளர்ப்பு தாய் தந்தையரை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டான். கைது செய்யப்பட்டான்.

    பின்புலம்:

    ஒரு பிராமணப்பெண் சரியான நடத்தையின்மை காரணமாக தன் உறவுகளால் கைவிடப்பட்டாள். பக்கத்து கிராங்களில் அங்குமிங்கும் அலைந்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது குழந்தை பிறந்தது. அப்படியே இறந்து கிடக்க ஊர் ஜனங்கள் அவளுக்கு ஈமச்சடங்கள் நடாத்தி முடித்துவிட்டு, குழந்தையை குழந்தையில்லா தம்பதியிரிடம் கொடுத்தனர். அக்கிராமம் ஒரு தலித்திய கிராமம். எல்லாரும் ஏழைகள்தான். எனினும் இப்பெற்றோர் முடிந்த அளவில் அக்குழந்தையை பாசமும் நேசமும் காட்டி வாலிபனாக்கினார். அவனும், தான் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியினனே என்று கவலை இல்லாமல் வாழ, வளர்ப்பு பெற்றோர் அவன் பூரவிக்கத்தை சொல்லவில்லை. பள்ளி முடித்து வாலிப பருவத்தில், அவன் தாய் ஒரு பிராமணப்பெண், அவள் உறவினர்கள் பக்கத்து கிராமத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னது விபரீதமாக போய் விட்டது. தான் ஒரு பிராமணன்; இந்த கேவலமான பறையர்கள் என்ன பறையனாக மாற்றிவிட்டார்கள் என்று கடுங்கோபமுற்று அவர்களை சுத்தியலால் அடித்துக்கொன்று விட்டான்.

    இது உண்மைக்கதை. ஏன் கொன்றான் ? பிராமணன் என்பது உயர்ந்த ஜாதி. இதுவல்லவா என் ஜாதி? இந்த ஈனப்பறையர்களோடு ஒருவனா நான்? என்ற உணர்வினால்தான்.

    சாதி பெருமை இப்படி கொலையிலும் முடியும். அதே மாவட்டத்தில் மறவர் சாதிப்பெருமை ஜாதிக்கலவரங்களில் முடிகிறது.

    ஸ்ரீரங்கம் மோஹனரங்கம், சுப்ரமணியன், ராமகிருஷ்ணன் என்று பெயர்கள் இருக்கின்றன உங்களுக்கு. அவை எதற்கு? பள்ளி, கல்லூரியில் சேர்க்கும்போது, வேலைக்கு சேரும்போது, உங்களை மற்றவர் அழைக்க, மற்றபடி உங்கள் வெறும் அடையாளமாக இருக்க மட்டும்தான். அப்பெயருக்கு வேறென்ன முலாம் பூச முடியும்?

    அது போலத்தான் சாதி. பிறந்தோம், அவ்வளவுதான். அதற்குமேல் நாம் உழைத்தாலதான் சாப்பிட முடியும். சாதி நாக்குவளிக்க கூட உதவாது.

    பிறகென்ன பெருமை ஸ்ரீரங்கம் மோகனசுந்தரம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *