அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

ராமர் என்றால் சும்மா அல்ல.

இந்த பாரத தேசம், இதன் ஆணிவேர், இந்த மண்ணின் மக்களிடம் இன்னும் எஞ்சியிருக்கும் அற உணர்வின் அடித்தளம் இந்துப் பண்பாடு. சீதாராமனின் சீலம், ராஜாராமனின் சரிதம், ரகுகுல ராமனின் வீரம் அதன் விழுமியங்கள். அதைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பது ஸ்ரீராமனின் திருப்பெயர். இதையெல்லாம் 2024 ஜனவரி 22ம் நாள் மீண்டும் மற்றொரு முறை நிரூபித்தது.

500-ஆண்டு போராட்டத்திற்குப் பின் இந்துக்கள் ஸ்ரீராமனின் ஜன்மபூமியை மீட்டெடுத்து அங்கு ஆலயம் எழுப்புவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்தக் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம், இதற்கு சாட்சியாக இருக்கிறோம் என்பதே ஒரு பெரிய பாக்கியம், என்பதை மீண்டும் எண்ணிப் பார்ப்போம்.


தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்களை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?

இராமாயணத்தில் வரும் ராம பட்டாபிஷேக காட்சியை நம் நாட்டின் கவிகளும், கலைஞர்களும் பலவிதமாக பரவசத்துடன் அனுபவித்துள்ளார்கள். கால தேச இடைவெளிகள் தாண்டி, ஒரு மாபெரும் கலாசாரமே நம் கண்முன் எழுந்து வரும் சித்திரம் அது. அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம். “ராமன் ராமன் ராமன் என்று மக்களிடையே அதே பேச்சு. அப்போது உலகமே ராமமயமாகி விட்டது” என்ற வால்மீகி மகரிஷியின் வாக்கு சத்தியமானதை இந்த தேசம் முழுவதும் நேரடியாக உணர்ந்தது.

ஏனெனில், ராம பட்டாபிஷேகம் என்பது ஏதோ பழங்கால அரசனின் பதவியேற்பு விழா அல்ல; தர்மத்தின், அன்பின், சகோதரத்துவத்தின், சேவையின், நல்லாட்சியின், சத்தியத்தின் முடிசூட்டு விழா. உலகில் உள்ள மக்களுக்கெல்லாம் தங்கள் உச்சியின் மீது கிரீடம் வைத்தது போல இருந்தது என்கிறார் கம்பர்.

”ஒத்த மூவுலகத்தோர்க்கும் உவகையின் முதிர்ச்சி உன்னில்,
தத்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது எனத் தளர்வு தீர்ந்தார்”

ராமராஜ்யம் என்பதன் விளக்கமாக இதைத் தான் நமது பிரதமர் தனது அபாரமான உரையிலும் சுட்டிக்காட்டினார்.

அயோத்தி ஜன்மபூமியில் அன்னியப் படையெடுப்பாளன் 1528ல் எழுப்பிய அவமானச் சின்னத்தை 1992ல் அகற்றி விட்டோம், பிறகு நீதிமன்றத்தின் அங்கீகரிப்புகாக 30 ஆண்டுகள் காத்திருந்தோம். இத்தனை காலமும் சும்மா இல்லை, ஒரு தவமாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். இந்தத் தவத்திலும் குறைபாடு இருந்தது போலும், அதனால் தான் இவ்வளவு காலம் பிடித்ததோ என்று தனது உரையில் ஸ்ரீராமரிடம் நெஞ்சுருகி மன்னிப்பு கேட்டார் பிரதமர்.

ஆனால் ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாரதியார் போற்றிய பிரதேசத்தில் இந்த மகோன்னத நிகழ்வின் கோலாகலமும் உற்சாகமும் கொண்டாட்டமும் இருந்தாலும், அதற்கு உரிய சிறப்புடனும் பரவலாகவும் இல்லை என்பது சற்று வருத்தம் தான்.

தமிழ்நாட்டில் 1950களில் ராமாயணத்தை எரித்து, ராமரின் திருவுருவங்களை அவமதித்தது ஒரு இந்து விரோத அரசியல் கயவர் கூட்டம். அந்தக் கூட்டத்தின் தலைவனின் சிலைகள் தமிழ்நாடெங்கும் துருத்திக்கொண்டு நிற்கின்றன. அந்த அதர்ம கொள்கைகள், அரக்க சித்தாந்தங்கள் மக்களின் மனதில் ஆணியறையப் பட்டுள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இந்த அவமானச் சின்னங்களை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்? அப்போது தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் நாள். அன்று ராமபட்டாபிஷேகமாக அது தமிழ்நாட்டில் கொண்டாடப் படும் என்று நம்புவோம். அதற்காக உழைக்கும் செயல்வீரர்களுக்கும் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் அயோத்தி அண்ணல் தனது அருளாசிகளை வழங்குவார்.

ஜெய் ஸ்ரீராம்.


“குழந்தை கண்ணன் நாம் அறிந்தவன். குழந்தை ராமன் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறான். அரசியல் காரணங்களுக்காக” என்கிறார் ஒரு எழுத்தாளர்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் எழுந்து வரும் மாபெரும் வரலாற்றுத் தருணத்தில், நாடெங்கும் ஸ்ரீராமர் திருநாமம் ஒலிக்க, உலகெங்கும் உள்ள இந்துக்கள் வைபவத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படி எதையாவது இஷ்டத்துக்கு சொல்லி வைத்து இதில் குழப்பம் விளைவிக்கலாம் என்ற அற்பத்தனம் தான் மேற்கண்ட வரிகளில் தெரிகிறது.

ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாட்டுக்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு. துளசிதாசரின் ஸ்ரீராமசரிதமானஸ் நூலில் பாலகாண்டத்தில் குழந்தை இராமனின் அழகு, லீலைகள், நான்கு சகோதரர்களின் குழந்தை விளையாட்டுக்கள் விரிவாக உள்ளன. என்னிடம் உள்ள கீதாபிரஸ் புத்தகத்தில் 12 பக்கங்களுக்கு இந்தப் பகுதி உள்ளது – சுமார் 70 பாடல்கள். இதில் கௌசல்யா தேவிக்கு விஸ்வரூபம் காண்பிப்பது, விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்ய வைத்திருப்பதை ராமன் உண்டு விடுவது எல்லாம் வருகிறது, இதுபோல துளசிதாசரின் வினய் பத்ரிகா என்ற நூலில் குழந்தை ராமன் பற்றி பல பாடல்கள் உண்டு (ட்டுமக சலத ராமசந்த்ர என்ற புகழ்பெற்ற பாடல் இதில் உள்ளது தான்). காக்கை வடிவில் வந்த காகபுசுண்டி முனிவருக்கு குழந்தை ராமன் அருள் புரிவது இத்யாதி லீலைகளும் உண்டு.

ராமலாலா என்ற ஒரு புத்தகமே கீதா பிரஸ் அழகிய படங்களுடன் வெளியிட்டுள்ளது. அயோத்தி, லக்னௌ, காசி ஆகிய பகுதிகளில் ராம்லாலா விக்ரஹங்கள் உள்ள கோயில்கள் உண்டு. இதன் தொடர்ச்சியாகத் தான் அயோத்தி ராமஜன்மபூமியில் ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நால்வரும் குழந்தை வடிவில் உள்ள மூர்த்திகள் 1948 முதல் தொடர்ச்சியாக பூஜையில் உள்ளன. உண்மையில் இந்த மூர்த்திகள் அப்போது வடிக்கப் பட்டவை அல்ல, அயோத்தியில் உள்ள ஒரு மடத்தில் முன்பே பூஜையில் இருந்தவை தான்.

ஸ்ரீராமகிருஷ்ணர் வரலாற்றில் அவருக்கு ஜடாதாரி என்ற சாது தான் பூஜித்து வந்த ராம்லாலா விக்ரஹத்தை கொடுத்ததும், வாத்சல்ய பாவத்தில் அதை ஸ்ரீராமகிருஷ்ணர் வழிபட்டு குழந்தை ராமனின் தரிசனம் பெற்றதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாட்டிலேயே, கேரளத்தில் பாலராம வர்மா என்று ராஜாவின் பெயர் இருந்துள்ளது.

எனவே, குழந்தை இராமன் என்ற மூர்த்தி பாரம்பரியமானது தான். அதில் எந்த சந்தேகமுமில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, குழந்தை ராமருக்கென்று கற்கோயில் இல்லாவிட்டாலும் “மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே” என்று தாலாட்டுப் பாடி சொற்கோயில் எழுப்பிவிட்டார் குலசேகராழ்வார்.

ராம் லல்லா கி ஜெய்.


அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி ஆலய பிரதிஷ்டைக்கான அழைப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை ஏற்றுக் கொள்ளாதது அதன் அரசியல். அதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால், பரம பவித்திரமான இந்த ஆலய பிரதிஷ்டையை “அரசியல் மாநாடு” என்று தூஷித்தது மட்டுமல்லாமல், நேரடியாகவும் தங்களது கூலிப்படைகள் மூலமாகவும் கீழ்த்தரமான எதிர்மறை பிரசாரங்களை தொடர்ந்து செய்து வந்தது காங்கிரஸ். இதன்மூலம் கோடிக்கணக்கான ராம பக்தர்களின், தர்மநெறிப்படி வாழும் இந்துக்களின் சிரத்தையையும் பக்தியையும் அந்தக் கட்சி அவமதித்து, காயப்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான இந்து விரோத நிலைப்பாடு என்று கட்சிக்குள்ளேயே உள்ள சில முக்கிய நபர்கள் சுட்டிக் காட்டியபோதும் தலைமையிலுள்ள நிர்மூடர்கள் திருந்துவதாயில்லை. ஆனால், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநில காங்கிரஸ் அரசுகளுக்கு ஏதோ கொஞ்சம் சுயபுத்தி இருப்பதானால் முழுமையான “ராம துரோகி” என்ற களங்கம் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்று மாநில அளவில் இந்த வைபவத்தை முன்னிட்டு நிகழும் கொண்டாட்டங்களை ஊக்குவித்தன.

1948ல் தொடங்கி, பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ராமஜன்மபூமியின் மீட்சியை ஒடுக்கவும், அழிக்கவுமே காங்கிரஸ் முயன்றது -1984ல் ராஜீவ் காந்தி அரசில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து ஜன்மபூமி வளாகத்தின் பூட்டை திறந்து விட்டது என்ற ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் தவிர்த்து நமது நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இப்படித் தான் ராமஜன்மபூமி இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்டன. போகட்டும். “தனக்கு எவ்வளவு தீங்கு செய்தவர்களும் ஒரு சிறிய நன்மையைச் செய்திருந்தாலும் அதை மட்டுமே கவனித்து கொண்டாடுவது ஸ்ரீராமரின் குணம்” என்கிறார் மகரிஷி வால்மீகி. இதனால் தான், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் அத்தனை ராம துரோக செயல்களுக்கும் கழுவாய் தேட கடைசியாக ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்ற ஸ்ரீராமருடைய திருவுள்ளத்தினால் தான், மாற்றுக் கருத்துகள் கொண்ட அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் ஸ்ரீராமஜன்மபூமி டிரஸ்ட் அழைப்பு விடுத்தது. ஆனால், ஸ்ரீராமரின் இந்த மகத்தான அனுக்ரஹ விசேஷத்தை காங்கிரஸ் தலைமையும் இன்னபிற இந்து விரோத கட்சிகளும் எட்டி உதைத்தன.

காங்கிரசின் இந்த “துர்புத்தி”யினால் அது மேன்மேலும் அழிவை நோக்கிச் செல்லும் என்று அயோத்தியின் சாது மகாத்மாக்கள் கூறினார்கள். அது கண்கூடாக உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

இந்துக்கள் அந்த மகத்தான தருணத்தில் கூட அப்படி உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து விடக் கூடாது, அரசியல் கட்சி அபிமானம், வெறி என்ற அசுரத்தனத்தை வைத்து அதை மறைக்கவேண்டும் என்று தான் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திருணாமுல், திமுக, சமாஜ்வாதி இத்யாதி அத்தனை அரசியல் கயவர்களும் தங்களது துஷ்பிரசாரங்களை நடத்தினார்கள். ஆனால், இந்தக் கட்சிகளின் தலைவன், தொண்டன், அபிமானிகளிலும், அவர்களது குடும்பங்களிலும் கூட கணிசமானவர்கள் அயோத்தி ராமர் கோயிலைக் கொண்டாடினார்கள். கடந்த ஒரு வருடத்தில் அயோத்தி சென்று ராம் லல்லாவை தரிசனமும் செய்தார்கள். இனிவரும் காலங்களிலும் கட்டாயம் அயோத்திக்கு புனிதப் பயணமும் மேற்கொள்ளத் தான் போகிறார்கள்.

ஆம், இந்த மகத்தான ஆலய பிரதிஷ்டையை சாத்தியமாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்கள் புரிந்த போர்வீரர்களின் பரம்பரைகள், சாதுக்கள், கரசேவகர்கள், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹி.ப, பாஜக, இந்து இயக்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்தப் பதிவின் ஆசிரியர் உட்பட ஸ்ரீராம ஜன்ம பூமி இயக்கத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஒரு சிறிய விஷயத்தை செய்தவர்களும் கூட தங்களைக் குறித்து வாழ்நாள் முழுவதும் நியாயமாகவே பெருமைப் படுவார்கள். அதே நேரத்தில், அறியாமையாலும், வீம்பாலும், அகந்தையாலும் இது எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், ராமர் கோயிலை வெறிகொண்டு எதிர்த்தவர்கள், இந்தப் பிரசினையில் இந்துக்களுக்கு நீதி கிடைத்ததை எண்ணி இன்னமும் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள் அந்த எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவந்தாக வேண்டும். பாரதம் எல்லாத் துறைகளிலும் புதிய வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஶ்ரீராமஜயம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *