ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

ஈ.வெ.ராமசாமி அவர்கள் குறித்து நடக்கும் விவாதங்கள் இருதரப்பிலுமே அருவருப்பை ஏற்படுத்துகின்றன.

ஈவெராவின் நிலைப்பாடு என்பது அவரது ஏதோ ஒரு சில வார்த்தைகளாலும் பேச்சுகளாலும் உருவாக்கப்பட்டவை அல்ல. அவரது ஒட்டுமொத்த பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் எடுத்துக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

இதில் பெண்கள் விஷயத்தில் அவரது நிலைபாடு என்ன என்பது தெளிவானது. பொதுவாக அது பெண்விடுதலைக்கு ஆதரவானது. பெண்களின் பாலியல் விடுதலையை அவர் வலியுறுத்தி பேசியது ஒரு சிறு அடிக்குறிப்பு மட்டும்தான். அது நிச்சயமாக ஆழ்ந்த பகுத்தறிவு சிந்தனையற்றது. பெண்விடுதலையாக மேலோட்டமாக தோன்றும் அந்த கருத்து உண்மையில் மோசமான பாலியல் சுரண்டலுக்கே வழிவகுக்கக் கூடியது. ஈவெராவிடம் ஆழமான கருத்துக்களையும் உண்மையான பகுத்தறிவையும் எதிர்பார்ப்பதுதான் இருக்கும் மூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை. ஆனால் பொதுவாக அவரது கருத்துக்களின் போக்கு பெண்விடுதலைக்கு ஆதரவானது. ஒரு சிலவரிகளை-அவை உண்மையா என்பதும் ஐயமே- கொண்டு ஈவெரா போன்ற ஆளுமையை முழுமையாக எடை போடுவது தவறு.

ஆனால் அவரது செயல்பாடு என்ன என்பது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.

உதாரணமாக, சாரதா சட்டம் என்று வரலாற்றில் புகழ்பெற்ற சட்டத்தை எடுத்துக்கொள்வோம். பால்ய திருமணத்தை சட்டபூர்வமாக தடைசெய்யும் முக்கியமான முதல் முயற்சி அந்த சட்டம். இன்று நரேந்திர மோதி அரசு பெண்களின் குறைந்த பட்ச திருமண வயதை 21 ஆக ஆக்கியிருப்பது இந்த சட்டம் அளித்த விதைதான். இந்த சட்டத்தை கொணர்ந்தவர் ஹிந்துத்துவரான ஹரிபிலாஸ் சர்தா. இந்த சட்டத்துக்காக போராடியவர்கள் தம்மை சனாதன தர்மவாதிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட இந்துக்களே. அதற்கு எதிராக கடும் ஆச்சாரவாத எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு ஆதரவாக பேசியவர்களும் தம்மை சனாதனிகள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்தான். பிரிட்டிஷ் அரசாங்கம் இதில் ‘சமயோஜிதமாக’ நடந்து கொண்டது. ஆரிய சமாஜத்தின் தயானந்த சரஸ்வதியே தம்மை சனாதன தர்மத்தின் மீட்பாளர் என கூறிய போதிலும் ஆச்சாரவாதிகளுக்கு அந்த பட்டத்தை பிரிட்டிஷ் மீண்டும் மீண்டும் கூறியது. டாக்டர் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டுக்காக இலண்டன் சென்றிருந்த போது தம் ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்து ஆச்சாரவாதிகளும் இஸ்லாமியவாதிகளும் சரதா சட்ட முன்வரைவு எதிர்ப்பு விடயத்தில் ஒருமித்து செயல்படுவதைச் சுட்டியிருப்பார். இதிலெல்லாம் ஈவெராமசாமியின் பங்கு என்ன என்பதை பார்த்தால் பூஜ்ஜியம். அவர் பின்னாட்களில் பேசிய பேச்சுக்கள் மட்டும்தானே தவிர களத்தில் செயல்பாடென்பது பூஜ்ஜியம் தான். அப்போது ஈவெரா ஒன்றும் தளர்ந்த கிழவரல்ல. நல்ல இளைஞர்தான்.

எனவே, சமூக முன்னேற்றம் ஒவ்வொன்றிற்கும் ஈவெராவே சர்வ அடிப்படையும் முழுமுதலுமான காரணம் என்பதும், சமூக முன்னேற்றத்துக்கு எதிராக தம் அரசியல் கருத்தியல் எதிரிகளை கட்டமைப்பதும், ஈவெராவாதிகள் செய்து வந்த பெரிய பிரச்சார உத்தி. சுத்தமான அயோக்கியத்தனம். இது இன்று மாறி அடித்திருக்கிறது.

என்ற போதிலும், ஈவெராவை குறித்த விமர்சனம் என்பது அவர் சொல்லியேயிருந்தாலும் – அவர் அப்படி சொன்னாரா என்பது ஐயமே – இப்படிப்பட்ட விளிம்பு நிலை கருத்துகளால் அல்ல. அவரது மைய கருத்தோட்டமே எதிர்கொள்ளப் பட வேண்டியது.

பெண்விடுதலை என்பது பாரத சூழலிலும் சரி, தமிழக சூழலிலும் சரி, ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் பலர். அதற்காக அன்று சமூக தேக்கநிலை ஆச்சாரவாதம் எனும் பெயரில் தலைவிரித்தாடியபோது அதை எதிர்கொண்டவர்கள் பலர். அவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு, ஈவெராவை கொண்டாடுவது அடிப்படையில் அநீதியான விஷயம். இல்லை அவர் பிரச்சாரம் மூலம் அதற்கான சூழலை உருவாக்கினார் என்றால் அதுவும் இல்லை. திருவிளையாடல் படத்தில் இறுதியில் தோன்றும் சிவனும் பார்வதியுமாக நிற்கும் சிவாஜி-சாவித்திரி தோற்றமும் ‘ஆண்பாதி பெண்பாதி நின்றானவன் சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்’ என்கிற கேபி சுந்தராம்பாள் குரலும் பெண்-ஆண் சமத்துவத்தை பொதுபுத்தியில் கொண்டு சேர்த்த அளவில் நூற்றில் ஒரு பங்கு ஏன் லட்சத்தில் ஒரு பங்கு ஈவெராமசாமி கொண்டுபோய் சேர்த்திருப்பாரா என்பது சந்தேகமே. பெண்விடுதலையை முன்னின்று கொண்டு சேர்த்ததில் பாரதி மற்றொரு அற்புதம்.

ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். அந்தண துவேசத்துக்கான வெறுப்பு மூலதனமாக சமூக சீர்கேடுகளை அவர் பயன்படுத்தினாரே ஒழிய சமூக நீதி என்பது அவருக்கு முதன்மையாக இருந்ததில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்குவது கீழ்வெண்மணி குறித்த அவரது அறிக்கைதாம். ஒரு மனிதன் எந்க அளவு கீழ்த்தரமாக மனசாட்சியில்லாமல் பேச முடியும் என்பதற்கு மிக சிறந்த உதாரணங்களில் ஒன்று ஈவெராமசாமியின் கீழ்வெண்மணி அறிக்கை.

ம.வெங்கடேசன்

இப்படி ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர். அவர் உயர் திரு. ம. வெங்கடேசன். தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈவெராவின் மறுபக்கம்’ ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அவர் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்தாக்கம் துரதிர்ஷடவசமாக அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தவர்களாலேயே ஈவெரா எதிர்ப்பைத் தாண்டி சமூகநீதி கருத்தியலாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான காரணங்களை நான் ஒரு காலத்தில் சார்ந்திருந்த இந்துத்துவ இயக்கத்தினர் அவர்களுக்குள்ளேயே எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. எப்படியோ, ஈவெரா அடிபடுகிறார், அந்த அளவுக்கு சந்தோஷம் என்று மகிழ்ச்சியடைவது இப்போது அல்ப ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால் தொலைநோக்கு பார்வையில் இந்து சமுதாய ஆரோக்கியத்துக்கோ நீடித்த இந்து ஒற்றுமைக்கோ நல்லதல்ல.

அதை செய்திருந்தால், சீமான் போன்ற பொய்யன்றி மெய்யறியாத பிரிவினைவாத இனவாத, அரசியல்வாதியின் முதுகில் பயணித்து ஈவெரா மீது அம்பு எய்ய வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் இன்று இந்துத்துவவாதிகளுக்கு ஏற்பட்டிருக்காது.

சமீபத்திய துக்ளக் ஆண்டுவிழா மேடையில் பழ.கருப்பையா இருந்தா’ர்’. முன்னர் சோ இவரை அழைத்திருந்தார். கருணாநிதியைத் தாக்கி பேசினார். ஆனால் பின்னர் இவர் திமுகவிடம் சரணடைந்தார். திராவிட கழக மேடைகளில் ஆதி சங்கரரை ஏக வசனத்தில் அசிங்கமாக பேசினார். அப்படிப்பட்ட மனிதனை அந்த ஆள் இன்று திமுகவை வசைபாடுகிறான் என்பதால் மேடையில் உட்கார வைக்கப் படுகிறார். ஆக, இவர்களுக்கு ஆதி சங்கரரிடமும் மரியாதை இல்லை. சீமான் எந்த இடத்திலும் தனித் தமிழ்நாடு கொள்கையை விட்டதில்லை. ஆனால் ஈவெராவை திட்டுவதால் சீமானை ஆதரிக்க வேண்டுமென்று சொல்லும் போது இவர்களுக்கு தேச ஒற்றுமை மீதும் உண்மையான அக்கறை இல்லை..

பொதுவாக இங்கே யாருக்கும் வெட்கமில்லை.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

2 Replies to “ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை”

  1. How toreach Thiru Ma. Venkatesan.
    His official address and contact number please.

  2. அந்த ஞானராஜசேகரன் விஷயத்தை மறைக்க எவ்வளவோ விஷயங்கள இறக்கிவிட்டாங்க‌

    ஆளுநரு விவகாரம், ராம்சாமி அய்யா, சைமன், இன்னும் டங்க்ஸ்டன் சுரங்கம், திருபரங்குன்றம் நவாஸ்கனின்னு எவ்வளவோ பேர இறக்கி விட்டு பார்த்தாங்க‌

    எதுவும் பெரிசா வரவே இல்ல‌

    கடைசியில “இரும்பு” குதிரைனு அவரையே இறக்கிவிட்டு காமெடி பண்றாங்க, அவரும் அது தெரியாம சிக்கி…

    இரும்பு உலக்கைய உரசி பொடியாக்கிய சம்பவம் கிருஷ்ண பகவான் காலத்துலே உண்டு, அப்பா சொல்லி படிச்சிருக்கோம், ஆக கிருஷ்ணன் காலத்துலே இரும்பு இருந்திருக்கு

    ராமாயணத்துல இரும்பு உண்டு இன்னும் எல்லா புராணத்திலும் அது வரும், கோவில்கள் வரலாற்றுல வரும்

    இதெல்லாம் இனி அவுக சொல்ல, இன்னும் புராண கதையெல்லாம் சொல்ல..ஹய்யோ ஹய்யோ

    தலைவர் அப்பவே சொன்னாரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *