நண்பர் அருள் ஆரோன் அவர்கள் என் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். நான் மதிக்கும் நேசிக்கும் நண்பர். ரொம்ப நாளாயிற்றே அவர் பக்கம் சென்று பார்ப்போம் என்று போய் பார்த்தேன். இது கண்ணில் பட்டது.

கிறிஸ்தவ சபை – கத்தோலிக்கமோ பிரிவு/சீர்திருத்த சபையோ – அவர்களின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளையும் அவற்றில் உள்ள ஜனநாயக தன்மைகளையும் சூழலுக்கேற்றவாறு நேர்மறையாக தம்மை தகவமைக்கும் ஆற்றலையும் சிலாகித்து வருபவன் நான். இவை இந்துக்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என கருதுபவன்.
அதே சமயம் இப்படிப்பட்ட மோசடி வேலைகளில் மதமாற்றத்துக்காக ஈடுபடுவது – அதே அமைப்பு சார்ந்த வலிமையை இந்த மோசடிக்கு பயன்படுத்துவது – இதை என்னவென்று சொல்வது? இது மோசடி என தெரியாமலே நம்பிக்கை சார்ந்து கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கலாம். ஆனால் இந்த மோசடியை உற்பவித்தவர்களுக்கு சர்வநிச்சயமாக இது மோசடி என்பது நன்றாகவே தெரியும். ஆனால் மதமாற்றத்துக்காக இந்த மோசடி பயன்படுத்தப்படுகிறது. இதை எந்த விதமான மென்மையான வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. கீழ்த்தரமான மோசடி என்பதைத்தவிர.
ஏசு கதையில் ஏசுவின் விலாவில் குத்தப்பட்டதாக சொல்வார்கள். ஆனால் இந்த தோமா-வழி ஆதி கிறிஸ்தவம் என்கிற மோசடி நீங்கள் உயிர்த்தெழுந்ததாக நம்புகிற ஏசுவின் விலாவில் அல்ல முதுகில் குத்திய கத்திக்குத்தாக மட்டுமே காட்சியளிக்கிறது.
தோமா இந்தியா வந்தார் என்பதற்கோ, அவர் காலத்தில் சிலுவை இன்று காண்பது போன்ற காட்சியுடன் கிறிஸ்தவ சின்னமாயிற்று என்பதற்கோ அல்லது அவர் இங்கே கொல்லப்பட்டார் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை. முழுமையான கலப்படமற்ற பொய் இது.
இந்நிலையில் இந்துக்களிடம் ஒன்றை சொல்ல விரும்புவேன்.
இந்த மோசடியை மதமாற்ற கிருஸ்தவம் இந்த மண்ணில் ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டாக செய்து கொண்டு வருகிறது. இந்த மோசடியை வெளிப்படுத்தி கண்டித்ததில் நம்பிக்கை கொண்ட கிருஸ்தவர்களும் உண்டு. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மு.தெய்வநாயகம் வெளியிட்ட ‘திருக்குறள் விவிலியம் சைவசித்தாந்தம் ஒரு ஒப்பாய்வு’ என்ற நூல் இந்த மோசடி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். பின்னர் இதே பாணியில் பல முனைவர் பட்ட ஆய்வுகள் வந்துவிட்டன. மிக நுணுக்கமாக பல பத்தாண்டுகளாக இந்த செயல்பாடு நடைபெறுகிறது.
திராவிட இனவாதம், தனித்தமிழ் வெறிவாதம் இவற்றுடன் போலி கிறிஸ்தவ வரலாற்றை இணைத்து அது பொதுவெளியிலும் பரப்பப்படுகிறது.
இது எதிர்தரப்பில் எவ்வித ஒருங்கிணைந்த செயல்பாடும் இல்லாமல் விஷமென மெல்ல பரவியும் வருகிறது.
ஆனால் இதை செய்யும் கிறிஸ்தவர்கள் அவர்களை அறியாமல் மற்றொரு நன்மையை செய்திருக்கிறார்கள். இந்துக்களாக ஏசுவின் வரலாற்றுத்தன்மை குறித்து பேசுவது சரியாக இருக்காது. இந்து தருமம் வரலாற்று மைய சமயக்குடும்பம் அல்ல. அது ஆன்மிக சாதனைக்கான தருமம். கிறிஸ்தவம் அப்படி அல்ல. அது வரலாற்று மையம் கொண்டது. அதன் அடிப்படையில் மட்டுமே சுவர்க்கத்தை மீட்பை முன்வைப்பது. அதாவது இந்து தருமத்தின் அடிப்படை மையமற்றது. அதனை உடைக்க இயலாது. தண்ணீரை ஓங்கி அறைவது போல அது. ஆனால் கிறிஸ்தவத்தின் அடிப்படை நால்வர் பார்வையிலான ஏசு கதையினை ஒத்து இருந்தாக வேண்டும். இல்லையெனில் அதன் மையம் தகர்ந்துவிடும்.
இதை குறித்து தன்னளவில் ஒரு இந்து பேசுவது தகாது. அது பிற மத சீண்டல். ஆனால் எப்போது கிறிஸ்தவ மதமாற்றி ஒருவர் ‘உன் இந்து மதம் தோமா-வழி ஆதி கிறிஸ்தவம்’ என ஆரம்பிக்கிறாரோ அப்போது கிறிஸ்தவத்தின் ஏசுவின் அவரது சீடர்களின் வரலாற்று உண்மையை ஆராய்வதற்கான அனைத்து நியாயங்களும் கிடைத்துவிடுகின்றன.
இந்துக்கள் இதை முழு வீச்சுடனும் ஒருங்கிணைந்த பலத்துடனும் செய்ய வேண்டியது அவசியமாகவும் ஆகிவிடுகிறது. வெறுப்பின் துளியும் இல்லாது செய்யப்பட வேண்டிய கவசதாரணம் இது.
ஏற்கனவே இந்த மையத்தகர்ப்பு மேற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ இறையியலின் முன்னணி அறிஞர்கள் இதை விவாதிக்கின்றனர்.
ஆனால் எப்படி தரக்குறைவால் புறக்கணிக்கப்பட்ட சரக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களால் தள்ளிவிடப்படுமோ அப்படி காலாவதியான அடிப்படைவாத கிறிஸ்தவம் இந்தியாவில் தள்ளப்படுகிறது.
ஆனால் இந்துக்களிடம் இல்லாத ஒருங்கிணைப்பும் அமைப்பு சார்ந்த ஜனநாயகமும் கிறிஸ்தவ சபைகளின் வலிமைகள். அதன் நூற்றில் ஒரு பங்கு கொண்ட இந்து அமைப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்பதே உண்மை.
1984-85 என நினைக்கிறேன், டாக்டர்.ப. அருணாச்சலம் என்கிற தமிழறிஞரும் என் தந்தையாரும் இன்னும் சிலரும் தெய்வநாயகத்தின் இந்த புத்தகத்தில் இருக்கும் பொய்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி பேசிக்கொண்டிருந்த நினைவு எனக்கு உள்ளது. அப்போது எனக்கு 13-14 வயதிருக்கலாம்.
2008 இல் மயிலாப்பூர் கத்தோலிக்க பாஸ்ட்ரேட்டில் சர்வதேச திராவிட சமய மாநாடு எனும் நிகழ்ச்சியில் இதை எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதை என்னால் காணமுடிந்தது. அப்போது எனக்கு முப்பத்தேழு வயது.
இணையத்தில் பரவிய ஒரு வீடியோ நினைவிருக்கும். ‘ஐந்தவித்தான்’. மறைந்த நடிகர் ராஜேஷ் நடித்திருந்தார். அதற்கு முன் அசதோமா என்கிற பிரச்சாரப்படம். அதில் சாருஹாசன் நடித்திருந்தார். இதோ இப்போது இந்த கருத்தரங்கை காண்கிறேன். எனக்கு ஐம்பத்து நான்கு வயது.
இந்த போலி பிரச்சாரம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, நாளொரு பொய்யும் பொழுதொரு மோசடியுமாக வளர்ந்து வருகிறது. சீமானும் விஜயும் இந்த மோசடி வலையின் பல்வேறு சரடுகளில் (pun intended) அறிந்தோ அறியாமலோ இயக்கப்படுகிறவர்கள். திராவிடம், தனித்தமிழ் இயக்கம், வேத மறுப்பு போலி சைவம் அனைத்துமே இந்த பெரும் மோசடியின் அங்கங்கள்.
சாதிக்காக குலதெய்வம் என்று பேசுகிற இந்துத்துவர்களும் கூட இந்த மோசடிக்கு துணை போகிறார்கள். குல தெய்வம் குல மூதாதை – ஆன்மிக வடிவமல்ல. ஆன்மிக வழிபாடல்ல. அது மூதாதை வழிபாடு என்கிற கருத்தாக்கம் இந்த தோமா-கிறிஸ்தவ மோசடிக்கு பலியாக அருமையான கிரியா ஊக்கி; ஆனால் இன்றைக்கு இந்துத்துவ இயக்கங்களுக்கு கிறிஸ்தவ இஸ்லாமிய பூச்சாண்டி காட்டி சாதியை தக்க வைப்பதே அவர்களின் தலை சிறந்த தடுப்பரண். இதை விட இந்துக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் பிறிதொன்றில்லை.
எப்படி முருகன் வேறு சுப்ரமணியர் வேறு என்று பேசுகிற சுகி சிவம் அவரை அறியாமல் (அல்லது அறிந்தே) தோமா வழி கிறிஸ்தவ மோசடிக்கு துணை போகிறாரோ அதைவிட வக்கிரமாக ‘ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு குல தெய்வம்’ என்று பேசுகிற இந்துத்துவன் தோமா-வழி கிறிஸ்தவ மோசடிக்கு துணை போகிறான்.
இதற்கு வரப்போகும் மறுமொழிகளையும் என்னால் ஊகிக்க முடிகிறது. கிறிஸ்தவர்களைத் திட்டுவது., சாருகாசனை, கமலஹாசனை, சுகி.சிவத்தை, மறைந்த ராஜேஷை திட்டுவது. இத்யாதி.
ஆனால் அவர்கள் பொய்மையில் வலிமையடைந்து கொண்டிருக்கிறார்கள் நீங்களோ உண்மையினை காக்கவும் பரப்பவும் திராணியின்றி அல்லது திராணியும் வலுவும் இருந்தும் சோம்பலால் சுயநலத்தால் அந்த பொய்மை பரவ துணை போகிறீர்கள்.
இறுதி தலைமுறை தமிழ் இந்துக்களுக்கு வாழ்த்துகள்!
அண்மையில் மறைந்த நடிகர் ராஜேஷ் குமார் வித்தியாசமான மனிதர். மிகவும் முக்கியமானவர்.
திராவிட இயக்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். ஒருவித மேம்போக்கான ஆனால் மக்களை எளிதில் கவரக் கூடிய ஆன்மிக நாட்டம் உடையவர். சித்தர்கள், பிரபஞ்ச சக்தி, சோதிடம் எல்லாம் கலந்து கட்டி அடிப்பார். உரையாடுவார். இவையெல்லாவற்றுடனும் சேர்ந்து அவர் கிறிஸ்தவர்.

கிறிஸ்தவம், திராவிடம் இவற்றுடன் சோதிடத்தையும் சித்தர்களையும் பேசும் ஆன்மிகத்தை இணைப்பது எப்படி?
பதில்: தோமா வழி ஆதி கிறிஸ்தவம்.
தோமா-வழி ஆதி கிறிஸ்தவம் என்பது கடைந்தெடுத்த பொய். திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ள புனை கதை. ஆனால் அதன் உளவியல் வலிமை கிறிஸ்தவத்துக்கு இரண்டு வழிகளில் முக்கியமானது.
ஒன்று:
இரு தலைமுறைகளுக்கு முன்னால் மதம் மாறிய ஒரு கிறிஸ்தவரை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் பட்டதாரி. அல்லது செந்தமிழ் இலக்கியங்களில் ஆவல் கொண்டவர். மெதுவாக பக்தி இலக்கியங்களால் ஈர்க்கப்படுகிறார். மதமாற்றத்தால் மிகப்பெரிய ஆன்மிக பண்பாட்டிலிருந்து நாம் நீங்கிவிட்டோம். எதையோ பெரிதாக இழந்துவிட்டோம் என்பது புரிகிறது. ஆனால் கிறிஸ்தவத்தில் பிறந்தவர். முழுக்கு பெற்றவர். ஏசுவின் தியாகத்தை விசுவாசமாக ஏற்று அவரது இரத்தத்தால் தன் பாவங்கள் கழுவப்பட்டதாக விசுவாசிப்பவர். அவ்வாறு பாவங்கள் கழுவப்படாதவர்கள் நித்திய நரக நெருப்புக்கு ஆளாவார்கள் என நம்புகிறவர். பக்தி இலக்கியங்களில் ஆழங்கால் பட பட அவருக்கு நம்பிக்கை ஆட்டம் கொள்கிறது.
அவருக்கு தோமா வழி ஆதி கிறிஸ்தவ புனைவு மீண்டும் நம்பிக்கையில் வேரூன்ற வைக்கிறது. இதோ பார், இந்த ஆன்மிக இலக்கியங்களெல்லாம் உண்மையில் ஏசுவையே பாடுகின்றன. அவை ஏசுவுக்கானவை. தோமா வழி ஆதி கிறிஸ்தவத்திலிருந்து எழுந்தவை. எனவே நீ அவற்றை மறுவாசிப்பு செய். கிறிஸ்தவனாக மறுவாசிப்பு செய். திருக்குறள் சொல்லும் ஐந்தவித்தான் ஏசுவன்றி வேறுயார்? பொறிவாயில் என்பது ஐம்பொறிகள் அல்ல மாறாக பொறி=கருவி. எனவே சிலுவையில் ஐந்தவித்தான் என்பதே பொருள். “ஓர்நாமம் ஓர் உருவம் இல்லாருக்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என மாணிக்கவாசகர் பாடியது ஏசுவைத்தான். அவர் குதிரை வாங்க போனபோது கிறிஸ்தவ அருட் பணியாளரால் தடுத்தாட் கொள்ளப்பட்டு கிறிஸ்தவரானார். சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுகிறார் என காரைக்கால் அம்மையார் பாடியது மயானத்தில் மரணத்தை வென்ற ஏசுவையேதான்.
அந்த கிறிஸ்தவருக்கு இது பெரும் நம்பிக்கையை தரும். நாம் எதையும் இழக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏசுவுக்கான இலக்கியங்கள் ஆரிய பார்ப்பனத்தால் வீழ்ந்த இந்துக்களிடம் இருக்கின்றன. அவற்றை மீட்க வேண்டும்.
இனி ஒரு இந்துவை எடுத்துக் கொள்ளுங்கள். சராசரி இந்து. அவர் கோவில் செல்வார். சாமி கும்பிடுவார். அவ்வளவுதான். அவரிடம் இந்து மதம் குறித்து கேள்விகள் கேட்கும் போது அவருக்கு திருப்திகரமான பதில்கள் இருக்காது. இங்கு தோமா-வழி ஆதி கிறிஸ்தவத்தின் பதில்கள் சொல்லப்படும்.
பிள்ளையார் உண்மையில் ஏசுதான் தெரியுமா?
அட அதெப்படிப்பா?
விநாயகர் அகவல் அப்படீன்னு ஒரு நூல் இருக்கிறதே தெரியுமா?
நம் ஆள் சராசரி இந்து. அவர் பிள்ளையாரைப்பற்றி கேள்விப்பட்ட ஒரே புராண கதை அசிங்கமாக சீமான் சொன்ன ஒரு கதை மட்டுமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே ‘இல்லைங்க தெரியாது’ என்பார்.
அதை இவனுங்க மறைச்சுட்டானுங்க.
ஆரு?
பார்ப்பானுங்கதான் வேற யாரு.
நம் சராசரி இந்து ஏற்கனவே கழக உடன்பிறப்பு சுகி.சிவம் பேச்சைக் கேட்டிருப்பார். உடனே தலையாட்டுவார். இருக்கும். இருக்கும்.
இப்போது ஊழியர் சொல்லுவார். ‘குருவடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து’ அப்படீன்னு சொல்லியிருக்கு. பிள்ளையார் பிறந்ததுக்கு வந்து குருவா இருந்ததுக்கு வரலாற்று ஆதாரம் இருக்கா? எல்லாம் புராண புளுகுதான்.
நம்மாள் மனது சொல்லும் ‘ஆமா. சரிதானே!’
அது மட்டும் இல்லை அதுல ஔவையார் ஏசு சிலுவையில் நமக்காக பலியானதையும் சொல்லியிருக்கிறார்.
‘அப்படியா’ என்று அதிசயிப்பார் நம் பலியாடு.
’கோடாயுதத்தால் கொடுவினை களைந்து’ என்று ஔவையார் விநாயகர் அகவலில் சொல்லியிருக்கிறார். கோடாலி என்பது கொலை ஆயுதம். சாமிக்கு எதுக்கு கொலை ஆயுதம்? அதனால் கொடுவினை எப்படி போகும்? கோடாலான ஆயுதம் சிலுவை. அதில் ஏசு மரித்ததால் கொடுவினையான ஆதிபாவம் போய்விட்டது. இது எப்படி பொருந்துகிறது பார்.
நம்மாளுக்கு திரும்ப கேட்கலாம்தான். அப்ப அந்த
‘மூன்று மண்டலத்தில் முட்டிய தூணில்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக்கு அருளி’
அப்படீன்னெல்லாம் சொன்னதுக்கும் தோமா-வழி ஆதி கிறிஸ்தவ விளக்கம் இருக்கிறதா? என்று கேட்கலாம்.
ஆனால் பாவம், நம் சராசரி இந்து ‘விநாயகர் அகவல்’ என்கிற நூலை கேள்விப்படுவதே அந்த கிறிஸ்தவ ஊழியரிடமிருந்துதான்.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். விசுவாசிகளின் மந்தையிலிருந்து ஆடுகள் வெளியே போகாமல் இருக்கவும் வெளியே இருக்கும் ஆடுகளை மந்தையில் சேர்க்கவும் சிறப்பான ஒரு லேகியம் தோமா-வழி ஆதி கிறிஸ்தவம்.
வரலாற்று ஆதாரம் இல்லை. இந்து மத நூல்களை திரித்து பேசுகிற மோசடி. ஆனால் ஆரிய இனவாத கோட்பாடு, திராவிட இயக்கத்தின் அக்மார்க் பிராம்மண வெறுப்பு இவை அனைத்தையும் ஒருங்கே கொண்டு கூடவே கிறிஸ்தவ சிறப்பையும் கொண்டு உருவாக்கப்பட்ட கச்சிதமான ஆயுதம் தோமா-வழி ஆதி கிறிஸ்தவம்.
வேதம் எங்களுக்கு வேண்டாம். அது வெளியிலிருந்து கொண்டு வந்தது என்று சுகி. சிவம் பேசும் போது அவர் இந்த தோமா-வழி ஆதி கிறிஸ்தவத்துக்கு ஆடுகளை கொண்டு சேர்க்க போடும் ரோட்டுக்குத்தான் சல்லிகற்களை பொறுக்கி அடுக்கி தார் ஊற்றி முன் ஊழியம் செய்கிறார்.
ஆனால் மறைந்த நடிகர் ராஜேஷ் கிறிஸ்தவர். அவருக்கு ஆன்மிக ஈடுபாடு வருகிறது. திராவிட சார்பு இருக்கிறது. இயல்பாக அவர் வந்தடைந்த இடம் இந்த மோசடி கதையான தோமா-வழி ஆதிகிறிஸ்தவம். அதை பரப்பும் ‘ஐந்தவித்தான்’ என்கிற பிரச்சார திரைப்படத்தில் அவர் நடித்தார். நடித்தார் என்று சொல்லுவது கூட தவறு அவரது மதம் பரப்ப ஊழியம் புரிந்தார். அதில் வரும் எளிய ஃபார்முலா ஒன்றுதான்: இந்திய சமுதாயத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஆரிய பிராம்மணீய இந்து சமயம். இந்து சமயத்தில் இருக்கும் எல்லா நல்ல விடயங்களுக்கும் காரணம் தோமா-வழி ஆதி கிறிஸ்தவம்.
ராஜேஷ் அவரது மத சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறார். ஆன்மிக நாட்டம் ஏற்படுகிறவர்கள் அந்தமதத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கான ஒரு உளவியல் ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் மேற்கொண்ட அந்த தோமா-வழி ஆதி கிறிஸ்தவம் என்பது அப்பட்டமான மோசடி. வரலாற்று அடிப்படையற்ற மோசடி. இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் ஒருங்கே ஏமாற்றும் கீழ்மை.
ஆனால் அவரது நடிப்பாலும் அனைவரையும் கவரும் பேச்சுகளாலும் மதம் தாண்டிய ஒரு ஆளுமையை அவர் கவனமாக உருவாக்கியிருந்தார். அதனையே பயன்படுத்தி ‘ஐந்தவித்தான்’ மூலம் அவரது மதத்துக்கு ஊழியம் செய்தார்.
இந்த ஊழியத்துக்கு ஒரு முன்கள ஊழியம் உண்டு. அது நமக்கும் வேதத்துக்கும் தொடர்பில்லை என்பது. வேதம் வெளியே இருந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது என்பது. இந்து மதத்தாலேயே ஊன் உடல் வளர்த்து ‘சுகி’த்தவர்கள் இன்று கழக உடன்பிறப்புகள் கைதட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியே ’இவன் நமக்கே போட்டியா வளருராண்டா’ என வியக்க இந்த முன் கள ஊழியத்தை செய்கிறார்கள் என்னும் போது மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்கள் தனது தனிப்பட்ட ஆன்மிக தேடல்களுக்கும் அப்பால், தான் பிறந்த மதத்துக்கே விசுவாசமாக இருந்தார் என்பதை நினைக்க வேண்டியுள்ளது. சில ‘சுகி’த்தவர்களை போல் அவர் துரோகியல்ல. தரமற்றவரும் அல்ல. தனிமனித ஒழுக்கத்தையும் பண்பான நடத்தையையும் பேணியவர் என்றே கேள்விப்படுகிறேன். அமரரான ராஜேஷ் அவர்களுக்கு அஞ்சலி.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).