காலவெளி: பாரதியும் வான்கோவும்

உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். காலம் என்பதை உருவகப்படுத்துங்கள். உங்கள் உருவகம் என்னவாக இருக்கிறது? பெரும்பாலும் நதியின் ஓட்டம். வெள்ளம். சீராக இப்போது, அங்கே கொஞ்சம் வேகமாக, இங்கே சில சுழல்களுடன். ஆனால் நதியின் ஓட்டம். ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு செல்லும் பிரவாகம். கொஞ்சம் வேதாந்தி என்றால் காலத்தின் அந்த உருவக ஓட்டம் வட்ட பாதையொன்றில் அமையக்கூடும்.

இனி வெளி அல்லது space. அதே போல உங்கள் கண்கலை மூடிக்கொண்டு உருவகப்படுத்துங்கள். திசைகளும் மேடுகளும் பள்ளங்களும் வெற்றிடங்களிலும் நிறைந்திருக்கும் வெளி. பெருவெளி. அமைதியாக சலனமின்றி உருவமின்றி ஒரு இருப்பு.

பொதுவாக நாம் இப்படித்தான் உருவகப்படுத்துவோம். நம்மில் பெரும்பாலானோர்.

காலத்தை இருப்பாகவும் வெளியை பொங்கும் நீர் பிரவாகமாகவும் உருவகப்படுத்தினால்?

நவம்பர் 2018 இல் Scientific American வலைப்பகுதியில் பெர்னார்டோ கஸ்ட்ர்ப் (Bernardo Kastrup) எனும் அறிவியல் சிந்தனையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். காலத்தை நாம் உருவகிப்பதில் உள்ள சிக்கல்களைக் குறித்து அவர் விளக்கியிருந்தார்.

நாம் எப்போதுமே காலத்தின் ஓட்டத்தையும் அனுபவ உணர்வையும் இணைக்கிறோம். எந்த அளவுக்கு என்றால் காலத்தின் ஓட்டத்தோடு தொடர்பற்ற அனுபவ உணர்வென்பது சூடான ஐஸ்க்ரீம் என்பது போல பொருளற்ற ஒன்று. இவ்வாறு சூசன் ஷ்னெய்டர் (Susan Schneider) எனும் மற்றொரு அறிவியல் சிந்தனையாளர் சொல்லியதைச் சுட்டி, இப்படித்தான் நாம் உருவகிக்க பழகிக்கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் சொன்னார்: நாம் காலத்தின் ஓட்டத்தை உண்மையிலேயே உணர்கிறோமா? இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலமென? எது இறந்த காலம்? அது நிகழ்காலத்தின் நினைவுகள். நிகழ்கால நினைவுகளின்றி இறந்த காலமென்றொன்று உண்டா?

இப்படி சிக்கலாக பகுத்தாய்வு செய்து வாதிடுகிறார் கஸ்ட்ர்ப். அவர் சொல்ல வருவது என்னவென்றால் காலத்தை நாம் ஏன் ஓர் நிலப்பரப்பை ஒத்து உருவகிக்கக் கூடாது? நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலமெல்லாம் அந்த நிலப்பரப்பில் வெவ்வேறு பகுதிகளாக ஓரே இருப்பாக உள்ளன.

இப்படியாக போகிறது கட்டுரை.

ஆனால் கஸ்ட்ர்ப் இதை எழுதுவதற்கு 97 ஆண்டுகளுக்கு முன்னர் எட்டையபுரம் சுப்பிரமணியம் வயிற்றுப்போக்கால் திருவல்லிக்கேணியில் இறந்துவிட்டார். அவர் காளி உபாசகர். சக்தி மீது பெரும் வேட்கையும் பித்துக்களியும் கொண்டு எங்கும் சக்தியினை உணர்ந்து உணர்ந்து பாடுகிறவர்.

காளியைப் பாடுகிறார். காலம் வனமாக மாறுகிறது. அதில் அண்டமெனும் புடவி மரமொன்றாக நிற்கிறது. ஆதிசக்தியாம் பிரபஞ்ச பேருணர்வு ரீங்காரமிட்டு அவ்வனத்தில் வலம் வருகிறது. அதன் ஆறு கால்கள் ஆறு அத்துவாக்கள். ஷட்-அத்துவாதீத ரூபிணி அவள். அவள் ரீங்காரமே இந்த கால வனத்தை உருவாக்குகிறதோ? அந்த கால சிருஷ்டியில் காலம் உறைந்தெழுகிறதோ நம் பிரபஞ்சமெனும் புடவி? பெரும் பிரபஞ்ச வியப்புடன் சாத்தியங்கள் எண்ணிலியாக உள்ளடக்கி கவிதையை படைக்கிறார் மகாகவி.

98 ஆண்டுகளுக்கு பின்னர் கஸ்டர்ப் உயர் இயற்பியலும் இன்றைய அறிவியலின் தத்துவமும் பயின்று சிந்தித்து எழுதுகிற விடயத்தை அனாயசமாகத் தாண்டி செல்கிறது கவியின் தரிசனம். பாரதிக்கு நவீன இயற்பியல் தெரியாது. சமன்பாடுகள் தெரியாது. கணக்கு பிணக்கு ஆமணக்கு என்று கணிதத்தை விட்டு விலகிய நெல்லை சிறுவன்.

ஆனால் அவன் வரிகள் உயர்கணிதமும் நவீன இயற்பியலும் தொடாத உயரங்களை தொடுகின்றன. அவற்றுள் காளி புன்முறுவல் செய்கிறாள். வெளியை அவன் பிரவாகமாக பார்க்கிறான், சக்தி வெள்ளமாக.

Time becomes forest. Space becomes deluge in flow.

காலமாம் வனத்தில் அண்டக் கோலமாம் மரத்தின் மீது
காளிசக்தி என்ற பெயர் கொண்டு –
ரீங்காரமிட்டு உலவுமொரு வண்டு.

தழல் காலும் விழி நீலவண்ண மூல அத்துவாக்களெனும்
கால்களாறுடையதெனக் கண்டு – மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் – இந்த
விந்தையெல்லாம் ஆங்கதுசெய் கள்ளம்.

தொழில்நுட்பம் நாளை எப்படி வளரும் – மாய மந்திரம் போல என்பதை கொஞ்சம் கூர்த்த மதி கொண்ட எவரும் பாடிவிட இயலும். ஆனால், அறிவியல் சிந்தனையும் ஆழ்ந்த கற்பனையும் இணையும் உச்சங்களில், எவரும் எட்ட முடியாத உச்சங்களில், கடற்கரையில் காற்று வாங்க உலாவுவது போல உலாவிட, வெகு அரிதாகவே2, உலகமெங்கிலும், மானுட வரலாறனைத்திலும், மிக மிக சிலருக்கே முடியும்.

அத்தகையதோர் கவி தமிழகத்தில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். ஆனால் அப்படி வரம் கிடைத்தும் பாரதியை “அங்கீகரிக்க”, endorse செய்ய, சீமானை அழைக்கும் “தேசபக்தர்கள்” இருப்பதால் – கிடைத்தும் கொடுப்பினை இல்லாத பாவிகளாக இருக்கிறோம்.

ஒப்பிடுகிறேன்.

வாழும் காலத்தில் மன நல விடுதி ஒன்றில் அடைந்திருக்கிறான் வின்செண்ட் வான்கோ. பலகணி வழியாக வெளியில் பார்க்கிறான். இரவின் இருளில் கரும் நெருப்பென உயரும் சைப்ரஸ் மரங்கள். தாரா மண்டலங்கள்.

அவனுக்கு அவை சுழல்கின்றன. அண்டத்தின் பேரியக்கத்தை அவன் காண்கிறான், எதுவும் நிலையாயில்லை. அவை அனைத்திலும் இயக்கம். வெளியே வான் பரப்பில் இயக்கமின்றி இருக்கும் விண்மீன் புள்ளிகள் அவன் அகத்தில் சுழலும் இயக்கங்களாக விகசிக்கின்றன. அவன் அவற்றைத் தீட்டுகிறான்.

வின்செண்ட் வான்கோவின் ஓவியம் The Starry Night.

அண்மையில் 2024 இல் Physics of Fluids எனும் ஆராய்ச்சி இதழில் வந்த ஆய்வு தாள் ஒன்றின் சுருக்கம் – அதில் உள்ளபடியே.

Turbulent skies have often inspired artists, particularly in the iconic swirls of Vincent van Gogh’s The Starry Night. For an extended period, debate has raged over whether the flow pattern in this masterpiece adheres to Kolmogorov’s theory of turbulence. In contrast to previous studies that examined only part of this painting, all and only the whirls/eddies in the painting are taken into account in this work, following the Richardson–Kolmogorov’s cascade picture of turbulence. Consequently, the luminance’s Fourier power spectrum spontaneously exhibits a characteristic Kolmogorov-like power-law.

This result suggests that van Gogh had a very careful observation of real flows, so that not only the sizes of whirls/eddies in The Starry Night but also their relative distances and intensity follow the physical law that governs turbulent flows. Moreover, a “–1”-like power-law persists in the spectrum below the scales of the smallest whirls, hinting at Batchelor-type scalar turbulence with a high Schmidt number. Our study, thus, unveils the hidden turbulence captured within The Starry Night.

வான்கோ தற்கொலை செய்து கொண்டார். பாரதி அலட்சியப்படுத்தப்பட்டார். குறைந்த பட்சம் இன்று வான்கோ கொண்டாடப்படுகிறார் உரியவிதத்தில்.

பாரதி – அவர் பாடிய வரிகளின் ஆழமும் வீச்சும் இன்னும் நம்முள் சென்று சேரவே இல்லை. அவரது பாடல்களின் கவர்ச்சி வரிகளை மேடைகளில் முழங்கி அவரை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் பாரதிக்கு அருகதையானவர்கள்தானா?

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *