வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

pudhiya_thalaimurai_alien_attack_coverஅண்மையில் படித்தவற்றில் மிகவும் அயர்ச்சியை தந்தது “புதிய தலைமுறை” இதழில் வெளியாகியிருந்த “அறிவியல்” கட்டுரை “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா?” (மாலன் & யுவகிருஷ்ணா, “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா?”, புதிய தலைமுறை, 20 மே 2010).

மே இரண்டாம் தேதி இரவு சென்னையில் அதிசய ஒளியை வானில் பார்த்ததாக ஒரு ஆறுமுகம் சொல்வதில் ஆரம்பித்து. வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டில் சென்னைகு மேலே பறந்து சென்றதாக ‘ம’டிப்பாக்கம், ‘ம’யிலாப்பூர், ‘ம’ந்தவெளி பகுதிகளில் மக்கள் சொல்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பிக்கிறது “அன்னியர்கள் படையெடுத்து வருகிறார்கள்?” என புதிய தலைமுறை பத்திரிகையில் கவர் ஸ்டோ ரியாக வந்துள்ள கட்டுரை.

இந்த பறக்கும் தட்டு புரளி ஆடி அலையடித்து ஓய்ந்து போய்விட்ட விஷயம். அமெரிக்காவில் 1950களில் தொடங்கி 1970களில் உச்சம் கண்ட “பறக்கும்தட்டு” வியாதிக்கு பல காரணிகள். சமூக மற்றும் உளவியல் காரணிகள் அவற்றில் முக்கியமானவை. வளிமண்டல நிகழ்வுகள் தொடங்கி, விண்ணூர்திகளால் ஏற்படும் சில காட்சி மயக்கங்கள், விமானங்களில் செல்லும் போது விமானிகளுக்கு அண்மை கிரகங்களினால் ஏற்படும் காட்சி மயக்கங்கள் ஆகிய பல காரணங்களும் இந்த நிகழ்வுகளை விளக்க முடியும். இவை போக சில இரகசிய இராணுவ விண்ணூர்திகளும் வளிமண்டல ஆய்வு பலூன்களும் கூட பறக்கும் தட்டுகளாக பார்ப்பவர்களால் தவறுதலாக அறியப்படுவதுண்டு. என்றாலும் ஒரு சுவாரசியமான அறிவியல் விவாதத்துக்கு ஈர்க்கும் ஒரு உத்தியாக இந்த பறக்கும் தட்டு விஷயத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைத்து முன்னகர்ந்தால், அடுத்ததாக ஸ்டீபன் ஹாவ்க்கிங்கின் அண்மைய கருத்து ஒன்று பிரதானப்படுத்தப் படுகிறது. ’புதிய தலைமுறை’ கட்டுரை இவ்வாறு சொல்கிறது:

“அவர்களைத் தேடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வது மேல்” என்கிறார் ஹாக்கின்ஸ். ஏனாம்? “துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற நல்லெண்ணம்தான். “அவர்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும்” என்கிறார் ஹாக்கின்ஸ். “அவர்கள் தங்கள் கிரகத்தில் உள்ள வளங்கள் எல்லாம் தீர்ந்து போனதால் பிரம்மாண்டமான கலங்களில் அண்டவெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்பனை செய்கிறேன். மிகப்பெரிய முன்னேற்றங்களைக் கண்டவர்கள் நாடோடிகளாகத் திரிய வேண்டிய சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையில் அவர்கள் எந்த கிரகத்திற்குப் போகமுடியுமோ அங்கு போய் அங்குள்ள வளங்களை அபரித்துக் கொள்ள முயற்சிப்பார்கள்” என்கிறார். இதற்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். “அந்நியர்கள் இங்கு வந்தால் அதன் விளைவுகள் கொலம்பஸ் முதன் முதலில் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த மாதிரி இருக்கும். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்தது அங்கு ஏற்கனவே வசித்து வந்த பூர்வக் குடிகளுக்கு நல்லதாக அமையவில்லை” என்கிறார்.’

ஸ்டீபன் ஹாவ்க்கிங்கின் ஊகத்துக்கு வருவோம். ஒரு நாகரீகம், விண்வெளியின் அடர்ந்த மௌனத்தினூடே விண்மீன் மண்டலங்களைத் தாண்டி நம்மைத் தொடர்பு கொள்கிறதென்றால், சில அதி-தொழில்நுட்ப சாத்தியங்களின் மூலமே அது நடக்கமுடியும் –

ஒன்று, விண்வெளியினூடே ஆழ்துயிலில் அமர்த்தப்பட்டு, பின்னர் செயற்கை அறிவின் மூலம் தகுந்த கிரகம் கிட்டியதும் விழிப்படையச் செய்யும் தொழில்நுட்பம்; அல்லது செயற்கை விண்வெளி ஓடத்தில் தலைமுறைகளை கழித்தபடி இங்கு வந்தடையும் தொழில்நுட்பம். மற்றொன்று இன்றைக்கு அறிவியல் புதினங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் டெலிபோர்டேஷன் அல்லது பிரபஞ்சவெளியின் அதி-பரிமாண தாவல்கள் (Hyper-space jumps) மூலம் பயணிக்க முடியும் தொழில்நுட்பம்.

இதில் எந்தத் தொழில்நுட்பத்தையும் வந்தடையும் ஒரு அறிவினம் தன்னைத்தானே அணுத் தொழில்நுட்பம் மூலம் அழித்துக் கொள்ளும் சாத்தியத்தைத் தாண்டியதாகவே இருக்க வேண்டும். அத்தகைய பண்பாட்டு சமூகம் பிறிதொரு சமூகத்திடம் எவ்வாறு நடந்து கொள்ளும்? மிகப் பொதுவாக அன்புடனும் பரஸ்பர புரிதலுடனும் என்றுதான் கருதவேண்டும்.

stephen_hawkingஅனைத்து வேறுபட்ட நாகரீகங்களின் சந்திப்புக்களும் மோதலிலும் அழிவிலும்தான் முடிய வேண்டுமென்பதில்லை. ஹிந்துப் பண்பாடு கடல் கடந்து தெற்காசிய நாடுகளுக்கு பரவிய போது அங்குள்ள பண்பாடுகளை அழிக்கவில்லை. பௌத்தம் தாவோ ஞான மரபை அழிக்கவில்லை. ஷிண்டோ மதத்தை அழிக்கவில்லை. மாறாக அந்தந்த மண்ணின் மரபுகளுடன் இணைந்து புதிய ஆன்மிக-பண்பாட்டு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது, குங்ஃபூ, ஸென் என தொடங்கி ஹைக்கூ வரை. எனவே ஐரோப்பிய-ஆபிரகாமிய பார்வையின் பிற பண்பாடொழித்தலே வேற்றுக்கிரக பண்பாடாகவும் இருக்குமென நினைப்பது ஐரோப்பிய மையப் போக்கு என்றே -with all due respects to Hawking- கருத வேண்டியுள்ளது. இந்த ஐரோப்பிய மைய பார்வையை எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல்  ஒரு தமிழ் வார இதழான “புதிய தலைமுறை” வாசகர்களுக்கு வைக்கிறது.

அடுத்ததாக ஹாவ்க்கிங் சொன்ன கருத்துக்கள் இடம் பெற்ற டிஸ்கவரி சானல் நிகழ்ச்சியை “புதிய தலைமுறை” விவரிக்கிறது. யுரோப்பா ஜூபிடரின் சந்திரன்களில் ஒன்று. அதை ஒரு கிரகம் என சொல்லும் தகவல் பிழையை வேண்டுமென்றால் மன்னித்து விடலாம். ஆனால் ஒரு சில இணையச் சுட்டிகளுக்கு அப்பால், எவ்வித ஆழமான புரிதலும் இல்லாமல் அரைகுறையாக அறிவியலையும், முழுமையாக பரபரப்பையும் மட்டுமே முன்வைக்கும் ’புதிய தலைமுறை’ கட்டுரையை மன்னிக்க முடியாது.

ஏனெனில் வேற்றுலக உயிரினங்கள் குறித்த அறிவியல் ஊகங்கள் காத்திரமானவை. கடந்த ஐம்பதாண்டுகளாக பரிணமித்து வருபவை. கடந்த 25 ஆண்டுகளில் மிகச்சிறப்பாகவே முன்னேறியிருப்பவை. இந்த வேற்றுலக வாசிகளின் தேடல், என்ரிக்கோ ஃபெர்மி என்கிற புகழ்பெற்ற அறிவியலாளர் வேற்றுலக உயிர்களின் இருப்பு குறித்து தெரிவித்த ஒரு கருத்திலிருந்து தொடங்குகிறது எனலாம். 1950 ஆம் ஆண்டு ஒரு சாதாரண உரையாடலின் போது, ”இத்தனை விஸ்தீரணமான ஆகாய கங்கை விண்மீன்கள் மண்டலத்தில் ஒரு வேற்றுலகவாசி இருப்பது கூட அறியப்படாமல் இருப்பது விசித்திரமானது” என அவர் தெரிவித்தார். பின்னர் இதை ஒரு ஆராய்ச்சித் தேற்றமாக மைக்கேல் ஹார்ட் என்னும் கொஞ்சம் சர்ச்சைக்குரிய அறிவியலாளர் மாற்றினார். ’பெர்மி-ஹார்ட் முரண்’ என்று அறியப்படும் இம்முரண் இன்று இன்னும் விரிவடைந்துள்ளது. விண்கலன்களை விடுங்கள், ஏன் ரேடியோ அலைகள் மூலமாகக் கூட அந்த வேற்றுலக வாசிகள் நம்முடன் தொடர்பு கொள்ளவில்லை?

இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? நுண்ணுயிரிகளையும் விடுங்கள். உயிருக்கு மூல ஆதாரமான, சிக்கலான கட்டமைப்பு கொண்ட கரிம மூலக்கூறுகள் உயிரின் இருப்புக்கு அல்லது அண்ட வெளியில் உயிரின் தோற்றத்தின் சாத்தியங்களுக்கு கட்டியம் கூறாதா என்ன? கார்பன் அடிப்படையிலான கரிம மூலக்கூறுகள்தான் உயிர் கட்டமைப்பாக இருக்க வேண்டுமா? ஏன் சிலிக்கான் அடிப்படையில் அது அமையக் கூடாதா? நீர்தான் உயிரின் ஆதாரமாக இருக்க வேண்டுமா? ஏன் திரவ அமோனியா நீரின் இடத்தை எடுத்துக் கொண்டு ஒரு உயிர் பரிணமிக்கக் கூடாதா? இக்கேள்விகளுடனும் பிரச்சனை அணுகப்பட்டது. நிறமாலை பகுப்பாய்வு (Spectroscopic analysis) மூலம் அண்டவெளி ஆராயப்பட்ட போது, உயிரின் கட்டமைப்புக்குத் தேவையான பல சிக்கலான மூலக்கூறுகள் அண்டவெளியில் கிட்டியுள்ளன. சனிக்கிரகத்தின் சந்திரனான டைட்டனின் சூழலியலில் திரவ அமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது.

Jayant Vshnu Narlikar
Jayant Vshnu Narlikar

உயிரின் பரிணாமத்துக்கு தேவையான சில முக்கிய வேதிப்பொருட்களின் உருவாக்குதலுக்கும், தொடரும் பரிணாமத்துக்கும், இந்த துணைக் கோளில் நீரைவிட அமோனியா நன்றாக உதவக் கூடும். வெளிக்கிரக உயிர்கள் குறித்த ஆராய்ச்சி இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப்படுகிறது. வால்நட்சத்திர துகள்களில் கூட வேற்றுலக நுண்ணுயிரிகள் இருக்கலாமென ப்ரெட் ஹோயில் (Fred Hoyle) எனும் ஆங்கிலேய அறிவியலாளர் கருதினார். சில நிறமாலை ஆய்வுகள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்தும் படியாகவும் அமைந்தன. அண்மையில் ஹோயிலின் நீண்டநாள் நண்பரும் சக அறிவியலாளருமான ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் வளிமண்டல மேலடுக்குகளில் செய்த சில சோதனைகள் ஆணித்தரமாக புவி-சாரா நுண்ணுயிர்களின் இருப்பை நிறுவியுள்ளன. இதுவும் வேற்றுலக உயிர் குறித்த ஆராய்ச்சிதான். இன்னும் சொன்னால் புவிசாரா நுண்ணுயிரிகள் நம் வளிமண்டலத்தின் மீது முற்றுகையிட்டுள்ளன என்று கூட சுவாரசியமாக சொல்லலாம். ஹோயல் (ஹாக்கிங்கும்) உடல்சாராத மின்காந்த புலங்களில் ஏற்படும் சுழற்சிகளில் உருவாகக்கூடிய தற்காலிக பேரறிவுகள் குறித்து கூட ஊகித்திருக்கிறார்கள்.

ஆனால் ‘புதிய தலைமுறை’ கட்டுரை இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்கு தேவைப்பட்டது பறக்கும்தட்டும் ஹாலிவுட் பாணி அன்னிய படையெடுப்பும்தான் போல. ஏதோ “ஓஸோன் ஓட்டை வழியாக வந்திட்ட வேற்றுலக வந்தேறிகளே!” என, கைபர் போலன் கணவாய் கழக டயலாக்கை கட்டைத் தொண்டையில், சாரி எழுத்துருவில் போடவில்லையோ ’புதிய தலைமுறை’ வாசகர்கள் தப்பினார்களோ!

சில இடங்களில் நிகழ்தகவு குறித்து “புதிய தலைமுறை” பேசுகிறது. ஆனால் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு மிக அழகிய நிகழ்தகவு சமன்பாடு ஒன்றை தன் வாசகர்களுக்கு அளிக்கும் வாய்ப்பினை அறியாமையினால் அது இழந்து நிற்கிறது. ’டிரேக் சமன்பாடு’ எனப்படும் அந்த சமன்பாடு பல காரணிகளின் அடிப்படையில் வேற்றுலக பண்பாடுகளின் சாத்தியங்களை கணித ஊகம் செய்வதாகும். அக்காரணிகள் ஒவ்வொன்றும் அறிவியல் காரணிகள் மட்டுமல்ல, சமூகப் பரிமாணக் காரணிகளும் இணைந்தவை. இச்சமன்பாட்டை புகழ்பெற்ற வானவியலாளர் கார்ல்சாகன் விளக்குவதை கேளுங்கள்.

pioneer_plaqueசரி, அண்டவெளியில் இருக்கும் சாத்தியமுள்ள வேற்றுக்கிரக பண்பாடுகளை, அதிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திறன் கொண்ட உயிரினங்களை எவ்வாறு சந்திக்கலாம்? 1970களின் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட பயோனீர்-10 மற்றும் பயோனீர்-11 கலங்களில் இது குறித்து ஒரு பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.  அந்தக் கலங்கள் வேற்றுலக வாசிகளை சந்தித்தால் அவர்கள் நம்மைக் குறித்து தெரிந்து கொள்ள  நம் உயிரினம், நம் கிரகம்,  விண்வெளியில் அதன் இருப்பிடம் ஆகியவை குறித்த விவரங்கள் ஒரு தங்க முலாம் பூசப்பட்ட அலுமினிய தகடில் பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதைவிடவும் காத்திரமான முறையில் விண்வெளி பண்பாடுகளை சென்றடைய மின்காந்த அலைவரிசைகள் பயன்படுத்தப் படுகின்றன. அத்துடன், பிரபஞ்ச வெளியெங்கிருந்தும் கிடைக்கும் பல்வேறு மின்காந்த அலைகளில், குறிப்பிட்ட வெகுதொலைவு செல்லும் அலைவரிசைகளில் ஏதாவது பொருள்பொதிந்த, செயற்கையாக உருவாக்கப்பட்ட செய்திகள் வந்து சேர்கின்றனவா என்றும் தேடும் பெரும் செயல் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின் பெயர் SETI –  Search for Extra Terrestrial Intelligence.

பூனாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், நாராயண்காவ் எனும் இடத்தில் Giant Meterwave Radio Telescopes எனும் ரேடியோ அலை தொலைநோக்கிகள், வான்வெளியில் பல ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து பயணித்து ஒருவேளை ஏதேனும் செய்திகள் வருமா என்று துழாவி வருகின்றன.  இவை பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதால், இந்த தொலைநோக்கிகளில் நமது விண்மீன் மண்டலங்களை மேலும் தெளிவாகப் பார்க்க  அதிக சாத்தியம்  உண்டு.

உலகெங்கிலும் இத்தகைய ரேடியோ தொலைநோக்கிகள் வான்களத்தை துழாவுகின்றன. நமக்கு மிக அதிகமாகவே மின்காந்த அலை சமிக்ஞைகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை இயற்கையான தோற்றமுடையவை. விண்மீன்களிலிருந்தும் விண்வெளி பொருட்களிலிருந்தும் வருபவை. இவை போக, நம்முடைய தொலைதொடர்பு கட்டமைப்பிலிருந்தும் சமிக்ஞைகள் வேண்டிய அளவு வெளியாகி இத்தேடலை இன்னும் சிக்கலாகுகின்றன.

Telescope at NarayanGaon
Telescope at NarayanGaon

ஏனெனில் ”எழுகடல் மணலை அளவிடில் அதிகம்” நம்மை அடையும் சமிக்ஞைகள் எனலாம். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவை எங்கிருந்து வந்தன, வேற்றுலகவாசிகளிடமிருந்து வந்திருக்கக் கூடுமா என ஆராய வேண்டும். இதற்கு அபரிமிதமான  கணினி சக்தி தேவைப் படுகிறது. ஆனால் SETI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அற்பமானது. எனவே, SETI ஆராய்ச்சியாளர்கள் உலகெங்குமுள்ள கணினி பயன்பாட்டாளர்களின் (அட, உங்களையும் என்னையும் கூட சேர்த்துத் தான்) உதவியைக் கோருகிறார்கள். பெர்க்லியிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டால், உங்கள் கணினியின் பின்னணியில் அது செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி பின்னணித் திரியாக செயல்படும் இந்த ப்ரோக்ராமால் விண்மீன் மண்டலங்களிலிருந்து வரும் சமிக்ஞைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டவாறே இருக்கும். ஒருவேளை தலையில் ஆண்டனா கொண்ட பச்சைக் குள்ளர்கள் அனுப்பிய முதல் செய்தி உங்கள் கணினியால் கண்டுபிடிக்கப்பட்டாலும் படலாம்! ஆனால் நம் “புதிய தலைமுறை”க்கு இந்த தகவல்களை வாசகர்களுக்கு கொடுப்பதில் ஆர்வமில்லை. ராக்கெட் சித்தர் ரேஞ்சுக்கு இருக்கும் ஒரு யூட்யூப் சுட்டியை அனுப்பி அறிவியல் என்கிறது.
அட, அறிவியல் கூடவா போலி!

Carl Sagan at Darasuram Temple
Carl Sagan at Darasuram Temple

வேற்றுலகவாசிகளைத் தொடர்பு கொள்வது குறித்து கடுமையாக உழைத்து இந்த அறிவியல் சார்ந்த தேடலை பிரபலப்படுத்தியவர் கார்ல் சாகன். நிகழ்தகவு அடிப்படையிலும், வானியல் தரவுகள் அடிப்படையிலும், நம்முடன் தொடர்புகொள்ளும் தொழில்நுட்ப திறன் படைத்த வேற்றுலகவாசிகளின் இருப்பை சொல்லும் டிரேக் சமன்பாட்டை பிரபலமாக்கியவர் அவர். இந்த வேற்றுலகத் தேடலின் அடிப்படையில் மானுடத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தியவர். அணு ஆயுத எதிர்ப்பாளர். இவரைக் கண்டுகொள்ளாமலேயே செல்கிறது நமது “புதிய தலைமுறை”யின் போலி அறிவியல் கட்டுரை.

வேற்றுலகப் பண்பாட்டை நாம் சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் பண்பாட்டு சிக்கல்கள்-குழப்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கார்ல் சாகன் எழுதிய நாவல் “காண்டாக்ட்” (Contact) அதாவது தொடர்பு. (இதில் மையப் பாத்திரமாக ஒரு இறைநம்பிக்கையில்லாத, ஆனால் ஆழமான ஆன்மிகத்தன்மை கொண்ட ஒரு பெண் விஞ்ஞானி வருகிறார். அவர் தவிர ஒரு இந்திய பெண் விஞ்ஞானியும் கூட வருகிறார். அவர் ஒரு தலித்தை மணந்தவராகக் காட்டப்படுகிறார்.) இந்த நாவலில், குறிப்பாக ஆபிரகாமிய மதங்களில் இத்தகைய சந்திப்பு எத்தகைய இறையியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதையும் விவரித்திருப்பார்.

contact_carl_sagan1997 ல் இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வேற்றுக்கிரகவாசிகளைக் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை வரிசைப்படுத்தும் “புதிய தலைமுறை”  கட்டுரை, இந்த அறிவியல் சார்ந்த முக்கியமான திரைப்படம் குறித்து குறிப்பிடவேயில்லை. சரி, பறக்கும்தட்டு விஷயத்தையே எடுத்துக் கொண்டால் கூட, அதில் ஓரளவு இந்த நாட்டுப்புற வதந்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, அறிவியல் தனமாக தன்னை காட்டிக் கொண்ட படம் – ஸ்பீல்பர்க்கின் “Close encounters of the third kind”. இது குறித்தும் கூட எவ்வித தகவலும் இல்லை. ஒரு விதத்தில் ET இத்திரைப்படத்தின் தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்.

“புதிய தலைமுறை” கட்டுரை செய்வதெல்லாம் பறக்கும்தட்டு புரளிகளுக்கு அறிவியல் முலாம் பூசுவது மட்டுமே. பறக்கும் தட்டு புரளிகள் மூடநம்பிக்கையையும், பார்வை மயக்கத்தையும், உளவியல் காரணிகளையும் சார்ந்தவை. அவற்றுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்குமோ அல்லது வேற்றுலக உயிர் குறித்த உண்மையான தரமான அறிவியல் ஆய்வுக்குமோ எவ்விதத் தொடர்பும் இல்லை. அறிவியலை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அறிவியல் என்கிற பெயரிலாவது போலிகளை உருவாக்காமல், வளர்க்காமல் இருந்தால், அது “புதிய தலைமுறை” தன்னை நம்பும் வாசகர்களுக்குச் செய்யும் கைங்கரியமாக இருக்கும்.

“புதிய தலைமுறை” கட்டுரையை விடுவோம். வேற்றுக்கிரக உயிர்களின் இருப்பின் அடிப்படையில், சில முக்கியமான கேள்விகளை சிந்தித்துப் பார்ப்போம். அப்போது அது எத்தனை சுவாரசியமான சிந்தனைக் களமாக அமையும் விஷயம் என்பதை நாம் உணரலாம்.

எடுத்துக்காட்டாக, கட்டமைப்பு மூலக்கூறுகள் எவையாக இருந்தாலும் அதில் எழும் உயிர் எனும் விளைவும் – பரிணாமப் பாதைகள் எப்படி அமைந்தாலும் அதில் முகிழ்க்கும் பிரக்ஞை என்னும் விளைவும் –  பிரபஞ்சமெங்கிலும் ஒரே தன்மை கொண்டதாக இருக்குமா?  அவர்களின் இறையியல் எவ்விதமாக இருக்கும்? நாம் எதையும் இரட்டையாக காண்கிறோம். அறிவு-உணர்ச்சி, பகுத்தறிவு-கற்பனை, அறிவியல்-கலை, ஆண்தன்மை-பெண்தன்மை, யிங்-யாங்க்… இது நமது உயிரியலிலேயே உறைந்திருக்கும் விஷயம். நம் மூளை இருகோளங்களைக் கொண்டது. நாம் சந்திக்கும் வேற்றுக்கிரகவாசிகள் நான்கு அல்லது மூன்று கோளப்பகுப்புக்கள் கொண்ட மூளைகளைக் கொண்டிருந்தால்? அல்லது ஒரே கோளமான அனைத்தையும் ஒன்றுபடுத்தி மட்டுமே பார்க்க முடிந்த மூளையைக் கொண்டிருந்தால்? அல்லது கூட்டு அறிவு (தேனீக்களைப் போல) கொண்டிருந்தால்? அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்?

அவர்களின் உலகில் இசை இருக்குமா? இசை என்பது என்ன? இந்த கிரகத்தில் இந்த வளிமண்டல அழுத்தத்துக்கு ஏற்ப பரிணமித்த நம் காதுகள் மூலம் நம் மூளைக்கு இதம் தரும் வளிமண்டல அதிர்வுகளே அல்லவா? அப்படியானால், நம்மை விட அதிகமான வளிமண்டல அழுத்தத்தில் பரிணமித்த அறிவுயிர்களின் இசை ரசனை எப்படி இருக்கும்? அவர்களால் எம்.எஸ்.சுப்புலட்சுமியை ரசிக்க முடியுமா? ஹெவிமெட்டல் இசையை மென்மையான இசை என்பார்களா? இவையெல்லாம் மிகவும் சுவாரசியமான கேள்விகள்.

ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் அவர்களை எப்படிக் காண்பார்? அவர்களுக்கு ஆதிபாவம் உண்டா? ஏசு மரித்தது அவர்களின் பாவத்துக்கும் சேர்த்தா அல்லது இந்த பூமிக்கு மட்டும்தானா? அப்படியானால் அவர் ஒரு அவதாரம் மட்டும்தானா? ஆம் என்றால், அது ஏசுவின் தனித்தன்மையை அசைத்து, கிறிஸ்தவ இறையியலின் அடிப்படையையே அசைத்துவிடாதா? முகமது நபி இறுதி இறைத்தூதர் என்பது வேற்றுக்கிரகவாசிகளுக்கு பொருந்துமா? அவர்களுக்கு பொருந்தாது என்றால், அதாவது பிரபஞ்சத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது என்றால், ஏன் உலகின் பிற பகுதிகளுக்கு மட்டும் பொருந்த வேண்டும்?

advaita_abstractசுவாரசியமாக, அத்வைதமும் பௌத்தமும் மட்டுமே இந்த கேள்விகளை இறையியல் சங்கடங்கள் இன்றி கேட்கமுடிந்தவை என தோன்றுகிறது. ரஷ்ய அறிவியல் புனைவுகள் எழுதுபவரும் உயிரியலாளருமான யெபிரமோவ் பாரதத்தின் இந்து ஞான மரபின் மீது ஈர்ப்பு உடையவர். அவர், ”வேற்றுகிரக பண்பாடுகள் வெளித்தோற்றங்களில் என்னதான் வேறுபட்டிருப்பினும், அனைத்தும் ஒரே அறிவுத்தன்மைக் கொண்டவையாக அமையும்” என்று சொல்கிறார். கார்ல் சாகனின் புகழ்பெற்ற காண்டாக்ட் நாவலில் இது வேறுவிதமாக சுட்டப்படுகிறது. எந்த வேற்றுக்கிரக பண்பாடாகவும் அமையட்டுமே, எங்கும் வட்டத்தின் சுற்றளவை விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் அம்முடிவிலி எண் ‘பை’யாகத்தானே இருக்க வேண்டும்?

விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையைப் புன்னகையுடன் ஆமோதிப்பான். வேற்றுலகவாசிகளிலும் போதிசத்வர்கள் பிறப்பெடுக்க முடியுமென அவர்களின் ஜாதகக் கதைகளை ஆர்வத்துடன் தலாய்லாமா கேட்கக் கூடும்.

யார் கண்டது? பிற்கால தலாய்லாமா ஆண்ட்ரோமிடாவிலிருந்து கூட நமக்கு கிடைக்கலாம்.

இந்த விஷயங்களைக் குறித்து தெரிந்து கொள்ள சில நல்ல நூல்கள்:

  • கார்ல்சாகன் & ஷ்லெவோஸ்கி, Intelligent Life in the Universe, Emerson-Adams Press, 1998
  • கார்ல்சாகன், Cosmos, Ballantine books, 1985
  • பீட்டர் வார்ட் (Peter Ward), Life as we do not know it, : The NASA search for (and synthesis of) Alien Life, பெங்க்வின் 2005
  • பறக்கும்தட்டு மயக்கங்கள் குறித்து தெளிவு பெற: கார்ல்சாகன், The Demon-haunted World, Ballantine books, 1996 (குறிப்பாக பக்கங்கள்: 99-100, 71-2, 181-2)

11 Replies to “வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?”

  1. ஐயா,அருமை ஐயா!

    இதை போன்ற கட்டுரைகள் மேலும் நம் தமிழ்ஹிந்து-வில் தொடர வேண்டுகிறேன்.

    ஒரு சிறிய சேர்ப்பு ” தூமகேதுக்களே (விண்கற்களே அல்லது வால் நட்சத்திரங்களே) பூமியை உயிருள்ளவையாக ஆக்கியது என்பதனையும் புதிய தலைமுறையில் சேர்க்கவில்லை என்று கூறலாம் அல்லவா!?

    இந்த விண்கற்களே பூமியை கட்டுமானம் செய்து வளர்ச்சிக்கு வித்திட்ட சாதனங்களாக இருந்தது என்ற கூற்றும் சொல்லப்படவில்லை என்று சொல்லலாம் ஐயா!

    இந்த வால் நட்சத்திரங்களே சந்திரனை,பூமியின் பிள்ளையாக பிறக்க காரணம் ஆக இருந்தது என்பதையும் சொல்லவில்லை.

    அகமும் புறமும் ஹிந்துவுக்கு முக்கியம் என்று கருதுகிறேன்.புறத்தை அறிவதால் அதில் ஒன்றும் இல்லை என்று தெளிந்து அகம் அறிய நிறைய வாய்ப்புகளும் எளிமையும் உருவாகும் இல்லையா ஐயா?

  2. அட! நீங்கெ வேற. இத போய் சீரியஸா எடுத்துகிட்டு. யுவகிருஷ்ணா சும்மா லுல்லாலாய்க்கு எழுதறார். கிடைக்கிற நாலு புத்தகங்களை படிச்சுட்டு அத வெச்சு ஒரு பக்கம் போடுறார்…லூஸுல விடுவீங்களா”

  3. திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,
    நீங்கள் விமர்சனம் செய்யும் இந்த புத்தகம் ஒன்றும் One of Case இல்லை.
    முக்காலே மூணு வீசம் புத்தகங்கள் குப்பையான Pseudo Scienceஆன
    செய்திகளைத்தான் தருகின்றன. முக்கியமாக நோய்களை பற்றின செய்திகள்தான் இன்று விலை போகின்றன.

    உங்களின் கட்டுரையில் ஒரு இடம் தவறு என்று நான் கருதுகிறேன்.
    ஆப்பிரகாமிய மதங்களின் சிந்தனைகளின் படி, இரு நாகரீகங்கள் சந்திக்கும்
    போது அழிவில்தான் முடியும் என்பதை ஒட்டித்தான் Stephen Hawking
    தன் கருத்தை கூறியுள்ளார் என்று எழுதியுள்ளீர்கள்.

    நான் Stephen Hawking இடம் பெறும் Discovery Channel ஆவனப்படத்தையும் கண்டேன். அதை தொடர்ந்து அவர் இடம் பெற்ற
    CNN-Larry King Live நிகழ்ச்சியையும் கண்டேன். அவர் கூறியது
    இதுதான்.
    “நம்மைவிட பெரிய அளவில் அறிவியல் முதிர்ச்சி பெற்றவர்கள்தான்
    நம் பூமியை தொடர்பு கொள்ள முடியும். அவர்களுக்கு நம் வளங்களின்
    தேவை இருக்காது.”

    ஆனால் Discovery Channelல் என்ன ஆகும்? என்ன ஆகும்? என்று
    திரும்ப திரும்ப கேட்ட போது-நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
    என்று கூறினார். இதில் ஆபிரகாமிய சிந்தனை பற்றிய ஒப்பீடு
    தேவையில்லை என்பது என் கருத்து.

    நீங்கள் விமர்சனம் செய்யும் புத்தகத்தை போன்றுதான் Breaking Newsக்காக
    தங்களுக்கு தேவைப்படும் பதில் கிடைக்கும்வரை Discovery Channelம்
    விட வில்லை.

  4. அன்புள்ள அரவிந்தன்,

    நீங்கள் சில சமயங்களில் வேண்டாதவர்களுக்கெல்லாம் வேண்டாத கௌரவமும் மரியாதையும் கொடுப்பதாகத் தோன்றுகிறது. நான் மாலன் வகையறாக்கள் அரசியல், இலக்கியம், பத்திரிகை சம்படந்தமாகப் பேசினாலே நாம் மறுபேச்சில்லாமல் ஒதுக்கி மற்ற உப்யோகமான காரியங்களைப் பார்க்கவேண்டும் என்று நினைப்பவன். நீங்கள், உங்கள் நேரம் உபயோககரமாக செலவழிக்க வேண்டிய விஷ்யங்கள் நிறைய இருக்கும் போது புதிய தலைமுறையையும் மாலனையும் யுவ கிருஷ்ணாவுக்கும் பதில் சொல்ல நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

    ஹாக்கிங் கின் பயமுறுத்தலோ, கவலையோ, அதற்குப் பெயர் என்னவாக இருந்தாலும், வெளியுலக வாசிகளை ஹாலிவுட் சினிமா கற்பனை செய்வது போல, ஆண்டெனாவும், குள்ள சரீரமும், பச்சை நிறமும், வேடிக்கையாகத் தான் இருந்தது. அது ஸ்டீல்ப்ர்க் ஆக இருந்தாலும். ஜிகாதிகளுக்குக் காத்திருக்கும் ஜன்னத்தில் மதுவும் மங்கையர் கூட்டமும் போல, சந்தைகளில் விற்கப்படும் வண்ணப் படங்களில் நரகம் கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியில் தூக்கிப் போடுவார்கள், பாபிகளை என்பது போலத்தான் நம் இந்த உலக அனுபவங்களையும் ஆசைகளையும் தான் நீட்டித்துக் கொள்கிறோம் நம் கற்பனைகளிலும் துர்சொப்பனங்களிலும். அதை மீறி நாம் செயல்படமுடிவதில்லை. ஹாக்கிங்குக்கும் இருப்பது மனித மூளை தானே. அது எவ்வளவு கூரியதாக இருந்தாலும். அவர் கற்பனை உயர் கணித தீரங்களில் இல்லையே. அன்றாட அனுபவம் சார்ந்தது தானே.

    விடுங்கள் இருப்பினும், இதைச் சாக்கிட்டு நீங்கள் எழுதிய கட்டுரையிலிருந்து நீங்கள் படித்த புத்தகங்களின் சாரத்தையும் கொஞ்சம் எனக்குப் புரியும் அளவில், குணத்தில் புரிந்து கொண்டேன். இன்னும் தெரியாத ஜீவன்களிடம் நான் இதை வைத்து கதையளக்களாமே. மாலனிடமிருந்தும் புதிய கலாச்சாரத்திலிருந்து எதைக் கற்று என்ன கதை அளக்க முடியும்?

  5. அய்யா,
    மனிதனின் சிந்தனையை நல்ல விதமாக தூண்டுவதை காட்டிலும், அவனின் ஐயங்களை பெரிதுபடுத்தும் வகையில்தான் இப்பொழுது பெரும்பாலானான பத்திரிக்கைகள் செயல்படுவது வருததமான உண்மை.
    ஒரு விஷயத்தை பற்றி எழுதும் பொது, அது சம்பத்தப்பட்ட நூல்களையோ, அது பற்றிய செய்திகளையோ நன்கு வாசித்து விட்டு, வாசகனுக்கு தெளிவான, ஆக்கபூர்வமான, அறிவியல் உண்மை கலந்த விஷயத்தை பத்திரிக்கையில் வெளியிட்டால், அது உண்மயில் நல்ல பத்திரிக்கை தர்மம ஆகும்.
    அனால், எத்தனை பத்திரிக்கைகள் அப்படி செய்கின்றன?

  6. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பிரதீப் பெருமாள்,

    சரியாக சொன்னீர்கள். Cometary Panspermia ஒரு கவர்ச்சிகரமான அறிவியல் கருதுகோள். அதற்கு வலுச்சேர்க்கும் சில முக்கிய ஆதாரங்களும் உள்ளன. இது குறித்து 2002 இல் திண்ணையில் அடியேன் எழுதிய கட்டுரையின் சுட்டி இங்கே உள்ளது. ஏப்ரல் 2010, Scienific American பத்திரிகையில் ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் எழுதிய “Microbes in the Stratosphere” என்கிற எளிமையான அதே நேரத்தில் நல்ல அறிவியல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இந்த விஷயத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புக்களை அது பேசுகிறது.

    சீனு,

    பிரச்சனையே அவர்கள் எவ்வித புத்தகத்தையும் படிக்காமல் இந்த விஷயம் குறித்து கொஞ்சம் கூட அடிப்படை புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள் என்பதுதான். ஒன்றிரண்டு புத்தகத்தையாவது யுவகிருஷ்ணாவோ மாலனோ படித்திருந்தால் இப்படி ஒரு கட்டுரையை எழுதியிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் எடுத்துக் கொண்ட விஷயம் படு சுவாரஸியமான விஷயம் அதன் மூலம் பல விஷயங்களில் இளையதலைமுறைக்கு அவர்கள் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். யுவகிருஷ்ணா போன்றவர்களுக்கு இதன் மூலம் சொல்ல விரும்புவதெல்லாம் “முதல்ல கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்க அல்லது மூளையை பயன்படுத்த முயற்சி பண்ணுங்க பத்திரிகையாளரே” என்பதுதான்.

    பாலாஜி,

    ஸ்டீபன் ஹாவ்கிங்கின் பேட்டியை நான் பார்க்கவில்லை. டிஸ்கவரி சானல் இப்படி தரம் தாழ்ந்து போனதென்றால் வருத்தம்தான் வேறென்ன சொல்ல. ஆனால் பிபிஸி செய்தியில் அவர் கொலம்பஸ்-பூர்விக அமெரிக்கர்கள் சந்திப்பை ஒத்ததாக வேற்றுலகவாசிகள்-புவி சந்திப்பு இருக்கலாமென சொன்னதாகவே தெரிவிக்கிறது. ஐரோப்பிய-பூர்விகக் குடிகள் சந்திப்பு ஏன் அழிவில் முடிந்தது? முதலில் பூர்விகர்கள் ஒன்றும் பண்பாட்டிலோ அல்லது அறிவியல் தொழில்நுட்பங்களிலோ ஐரோப்பியருக்கு சளைத்தவர்களல்லர். ஆனால் அழிவுத்தொழில்நுட்பம் ஐரோப்பாவில் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. நிறுவன மதமும் சாம்ராஜ்ஜிய விரிவாதிக்கத்தை இறைவிருப்பாக தூபம் போட்டு வளர்க்கும் மதத்தலைமையும் அங்கு செயல்பட்டன. இரண்டாவதாக நோய்களை ஐரோப்பியர்கள் கொண்டு வந்தனர் பின்னர் அந்த நோய்களை ஆயுதமாக மாற்றினர். இவற்றையெல்லாம் செய்ய நிச்சயமாக கிறிஸ்தவ இறையியல் அதன் “Promised land” என்கிற கண்ணோட்டம் மூலம் உற்ற துணை புரிந்தது. எனவே இந்த ஒரே விதமாக மட்டுமே வேற்றுலகவாசி-புவிவாசிகள் சந்திப்பு இருக்கும் என கருதும் மனநிலை ஆபிரகாமிய மனநிலையை ஒட்டியதே என கருதினேன்.

    வெங்கட் சுவாமிநாதன்,

    //இதைச் சாக்கிட்டு நீங்கள் எழுதிய கட்டுரை//
    இக்கட்டுரையை எழுதிய முக்கிய காரணமே இதுதான். எதிர்வினை அல்ல என் நோக்கம். Broca’s Brain என்கிற தனது அறிவியல் கட்டுரைத் தொகுப்பு நூலில் கார்ல் ஸாகன் ஒரு விஷயத்தைச் சொல்லுவார். போலி-அறிவியல் விஷயங்களுக்கு மக்களிடம் ஈர்ப்பு இருக்கிறது. நமது ஊடகங்கள் உண்மையைக் காட்டிலும் பரபரப்பே நல்ல அங்காடி சரக்கு என்பதை தெரிந்து வைத்துள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த போலி-அறிவியலிடம் மக்களுக்கு ஏற்படும் ஈர்ப்பையே உண்மையான அறிவியல் குறித்த ஆரோக்கியமான ஈர்ப்பாக மாற்றமுடியுமா என பார்க்கலாம் என்பார். உதாரணமாக ஜோசியத்திலிருந்து வானவியல், பறக்கும்தட்டிலிருந்து வேற்றுலகவாசிகளை அறிவியல்பூர்வமாக தேடுதல், அதிலிருந்து உயிர்களின் தோற்றம் பரிணாமம் போன்றவற்றை விவாதித்தல், பெர்முடா முக்கோணம் என்கிற இல்லாத மர்மத்தை சாக்காக வைத்து ஆழ்கடல் நிலவியல் என. அதையேதான் இக்கட்டுரை மூலமும் செய்ய விரும்பினேன்.

    நன்றி

  7. பயனுள்ள கட்டுரை. சேதி பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல தொடக்கம் இது. மிக்க நன்றி அரவிந்தன். இது போன்ற கட்டுரைகளே மிக்க பயனுள்ளவை. தங்களின் அடுத்த கட்டுரையை ஆவலுடன்எதிர்பார்க்கிறோம்

  8. சுவாரஸ்யமாந கட்டுரை.
    தன்னிலிருந்து வித்தியாசமாக உள்ள எதையும் விரோத பாவத்துடன் பார்க்கும் மனப்பான்மை தான் பல மேற்கத்திய அறிவியலார்களையும் [ எல்லாரையும் அல்ல] பிடித்து ஆட்டுகிறது போலும்.
    சமீபத்தில் பிரமிடுகள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை நாஷனல் ஜாக்ராபிக் சானலில் பார்த்தேன்.
    ஏறிக் வான் டானிகன் என்ற ஒருவர் முன்பு புத்தகங்கள் எழுதி மண்ணில் நம்மால் விளக்க முடியாத அபூர்வ கட்டட மற்றும் கலைப்படைப்புகள் வேற்று கிரக வாசிகள் கைங்கரியம் என்றார்.அவர்கள் மண்ணுலக , அழகான பெண்களுடன் சேர்ந்து புதிய பரம்பரையை உருவாக்கினார்களாம். இதற்கு வாசுதேவ மேனன், செல்வா ராகவன் பட ரேஞ்சில் பெண்ணை நெருங்கும் வேற்றுலக ஆண் விஷுவல் வேறு.

    புரியாததை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.சான்றுகள் கிடைக்கும் வரை காத்திருக்கலாம்.சரிவர சான்றுகள் இன்றி எதோ கதை சொன்னால் கேட்பவர்கள் தலை எழுத்து என்பது போல..
    வேறு கலாச்சாரங்கள் தங்களை விட முன்னேறி இருந்தன என்று ஏற்றுக்கொள்ள முடியாத “கெரகங்கள் ” தான் வேறென்ன?
    சரவணன்

  9. நான் உங்கள் கட்டுரையைப் படித்தேன். குறையொன்றுமில்லை. நல்லதொரு சிந்தனை வீச்சாகவே இருந்தது. தொடருங்கள்.

  10. வேற்று கிரகவாசிகள் பூமியில் இருகிறார்கள்.யு tube சர்ச் பண்ணி பாக்கலாம்.aliens videos என்று சர்ச் செய்து பார்க்கவும் .மேலும் சில தகவல் இந்திய சீனா இரண்டு நாடுகளுக்கும் பொதுவான குறிபிட்ட எல்லையில் இல் underground இல் வசிகிறரகள்.

  11. good aricle and people like me can get good matter such as the above one. As a school teacher I always insist my students think of their own reason for any incident or effect to bring them new dimension in their thought. I recently joined in this site and almost many articles are fantastic and the feedback also nice. I wish this site should reach every individual thoughtful Tamizhan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *