சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

779_bharatanatyam_stampபின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, ‘சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாங்கள் பரஸ்பரம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்ட நண்பர்கள். என் கருத்துக்களை வெகுவாக மதிப்பவர். இந்த பரஸ்பர உறவும் மதிப்பும் தான் அவர் என்னை இந்திய நடனங்களைப் பற்றி என்னை எழுதச் சொன்ன காரணம். அப்போது நான் ஒரு விபத்தில் கால் ஒடிந்து ஒன்றே கால் வருட காலம் படுக்கையில் கட்டுக்களோடு கிடந்தவன். வருடம் 1988. எனக்கு இந்தப் பொருள் பற்றிச் சொல்ல நிறைய இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானேன்? சந்தோஷமாக எழுதினேன். ஆனால் அவர் கட்டுரையைப் படித்த பின்னர் வெகுநாட்கள் யோசித்து, பின்னர் இதை பிரசுரிக்க மறுத்துவிட்டார். காரணம் சங்கீத் நாடக் பத்திரிகை சங்கீத நாடக அகாடமியின் அதிகார பூர்வ வெளியீடு. அவர் சொன்னார் – கருத்துக்களை வெளியிடத் தடையேதுமில்லை. ஆனால் அகில இந்திய புகழ் பெற்ற, அகாடமி பாராட்டும் விருதுகளும் பெற்றுள்ள நடனக் கலைஞர்களைப் பெயர் குறிப்பிட்டு வைக்கும் இம்மாதிரியான விமர்சனங்களை அகாடமியின் அதிகார பூர்வ பத்திரிகையில் வெளியிட இயலாது என்று.

நாங்கள் நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வெகுவாக மதிக்கும் நண்பர்கள். அவர் நிலை எனக்குப் புரிந்தது. இந்தக் கட்டுரையைத் தான், எழுதச் சொல்லிப் பின் பிரசுரமாகவில்லையே தவிர, இதன் பின்னரும் சங்கீத் நாடக் பத்திரிகையில் நான் நிறைய எழுதியிருக்கிறேன். அகாடமிக்காக தமிழகக் கலைஞர்களைப் பேட்டி கண்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அகாடமி நிகழ்த்திய சர்வ தேச, நாடக விழாக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன். புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஒரு நிகழ்வின் காரணமாக எங்கள் நட்புறவு பாதிக்கப் பட்டதில்லை. இம்மாதிரியான மறுப்புகளை நான் தமிழ் நாட்டிலும் சரி, தில்லியிலும் சரி, நிறையவே சந்தித் திருக்கிறேன். இருந்தாலும், தில்லியில் எனக்குக் கிடைத்த சுதந்திரத்தை, தமிழ்கத்தோடு ஒப்பிட்டு சமனப் படுத்த முடியாது. தமிழ்கத்தின் அறிவு ஜீவிகளோ, வேண்டாம், ”என்பிலதனை” ப் பற்றி பேசுவானேன்?

பின்னர் இதன் சுருங்கிய வடிவம் தில்லி பத்திரிகையில பிரசுரமானது.

இப்போது இது அன்று எழுதிய வடிவிலேயே தமிழில் தரப்படுகிறது. 22 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்று நாம் யோசிக்கலாம்.

(1)

ரண்டாயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையும் நீட்சியும் கொண்ட ஒரு மரபு, இடைப்பட்ட காலனிய ஆதிக்கத்தின் கீழ் மறக்கப் பட்டாலும், பின்னர் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது திரும்பக் கண்டெடுக்கப்பட்டு ஒரு மறுமலர்ச்சியாகப் பெற்றாலும், அதன் நீண்ட பழமை ஒரு சுமையாகவே இம்மரபின் மீது அமர்ந்து அழுத்துவதாகத் தோன்றுகிறது. இத்தகைய நீண்ட பழமையே ஒரு போதையாகவே செயல் படுகிறதோ என்னவோ. மறுமலர்ச்சி ஒரு மரபைத் தோற்றுவிக்காது, பழம் மரபையும் வடிவையுமே திரும்ப முன் வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. பழமையின் சுமை நம்மை, இன்று சிருஷ்டிபரமான செயல்பாடுகளுக்குச் சக்தியற்றவர்களாக்கி விடுகிறது போலும்!

நம் பழம் பாரம்பரிய சொத்துக்களை, மரபுகளைத் திரும்ப கண்டறிவதற்கும் நம் ஆளுமையைக் கண்டறிவதற்கும் கூட், தூண்டுதல்கள் நம்முள்ளிருந்து எழாது வெளிநாட்டிலிருந்து தான் பெறவேண்டியவர்களாக இருந்திருக்கிறோம். உதய் சங்கருக்கும் ருக்மிணி அருண்டேலுக்கும் ஒரு அன்னா பாவ்லோவா, “போய் உங்கள் பாரம்பரிய நடனங்களைக் கற்கச் செல்லுங்கள்” என்று சொல்ல வேண்டியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை அவரவர் துறையில் தோற்றுவித்த சக்திகளான இந்த முன்னோடிகளைக் குறை கூறுவதற்காக இதை நான் குறிப்பிட்வில்லை நம் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப இது நிகழும் ஒரு உண்மை என்பதைத் தான் சொல்ல விரும்புகிறேன். ஒரு உரத்த சிந்தனயின் பதிவாகவே நான் இதை எழுதிச் செல்லும்போது பின் வரும் கட்டங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாம் திரும்பத் திரும்ப சந்திப்போம். நம் பழ்மையின் பெருமைகளை நினைத்து அசைபோட்டுக் கொண்டே தொடரும் மந்தத் தன ஜீவிதத்திலிருந்து, சுகமான உறக்கத்திலிருந்து, வெளியிலிருந்து முதுகில் விழும் அடிதான் நம்மை விழித்தெழ வைக்கிறது.

முதலில், என்னைப் பற்றி, என் வீட்டைப் பற்றி, என் மக்களைப் பற்றியே பேசுவோமே. இல்லையெனில் தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள நடன மரபுகளைப் பற்றி நான் குறை சொல்வது தமிழுக்கு அன்னியமானவற்றை அங்கீகரிக்க மறுக்கும் பிராந்தியா வெறி என்று மற்றவர்கள் என்னைக் குத்திக் குதற பாய்ந்தோடி வரக்கூடும்.

உண்மைதான். இந்தியாவின் அகண்ட பரப்பில் வாழும் நம் எல்லோருக்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காஷ்மீரத்தில் பரதனின் நாட்டிய சாஸ்திலிருந்து தான் கதையே தொடங்குகிறது. பரதனுக்கும் முன்னால் சிலர் இருந்ததாகத் தெரிந்த போதிலும், பரதன் தான் நம் எல்லோருக்குமான இப்போது கிடைக்கும் அதிகாரபூர்வமான, மூல கிரந்தம். அதிலிருந்து தான் இந்தியாவின் எந்த நடன வடிவமும் தம் மரபின் ஆதாரங்களைப் பெறுகிறது. இதுவே ஒரு ஆச்சரியம் தரும் விஷயம் தான். பரந்த இந்திய துணைக்கண்டத்தின் அத்தனை பிராந்திய நடன மரபுகளும் தம் ஒவ்வொன்றின் வேறுபடும் நடனங்களின் வாசிக, ஆங்கிக ஆஹார்ய அபிநயங்களுக்கும் இன்னும் பல்வேறு பத்ததிகளுக்கும், லோக் தர்மிகளுக்குமான ஆதாரங்களை உள்ளடக்கிய நூலாக, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் அமையக்கூடும் என்பது வியக்கத்தக்க ஒரு நிகழ்வு.

(அபிநயங்கள் மற்றும் லோகதர்மி/நாட்யதர்மி வகைகள் குறித்த அறிமுகம் இங்கே).

இத்த்கைய ஒரு தொகுப்பு, விதிமுறை வகுப்பு சாத்தியமாக அந்த மூன்றாம் நூற்றாண்டு கஷ்மீரத்துக்கும், மற்ற இந்திய பிராந்தியங்களுக்கும் இடையே எத்தகைய தகவல் தொடர்பு வலைப் பின்னல் இருந்திருக்கக் கூடும்! அப்படி ஒரு பரந்தும் சிக்கலுமான ஒரு வலைப் பின்னர் இருந்திருந்தது என்று எடுத்துக் கொண்டால், இப்பின்னல் செயலற்றுப் போவதைக் குறிக்கும் இடைவெளிகளை, நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்கு நீளும் இடைவெளிகளை எப்படி விளக்கி சமாதானம் கொள்வது? கி.பி. 3-ம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு கி.பி. 8ம் நூற்றாண்டில் தான் நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணத்தக் காண முடிகிறது. 8ம் நூற்றாண்டே மிகவும் முன் தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள். தென்னிந்தியாவினுடையதைத் தவிர மற்ற எந்த பிராந்தியத்தின் லோக் தர்மியும் தேசியும் என்னவாக இருந்தன என்பது பற்றி எதுவும் தெரிவதில்லை.

silambu_for_danceஆனால், தென்னிந்தியாவின் தொடர்பு அறுந்ததில்லை. வேடிக்கை தான். ஆச்சரியம் தான். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் அன்றைய தமிழ் நாட்டில் பயின்று வந்த செவ்வியல் நடன மரபுகள் பற்றியும் (’மார்கி’) எண்ணற்ற கிராமிய கலை வடிவங்கள் பற்றியுமான (’தேசி’) தகவல்கள் அத்தனையும் தன்னுள் அடக்கிய கருவூலமாகத் திகழும் காப்பியம் ஒன்று உண்டு. சிலப்பதிகாரம் என்ற அக்காப்பியம் இயற்றப் பட்டதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னர், 13-ம் நூற்றாண்டில் அதற்கு உரையெழுத வந்த அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் காலத்தில் வழங்கிய இசை, நடன்ங்களைப் பற்றிய நூல்கள், பெருநாறை பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், அகத்தியம் போன்ற நூல்கள் தன் காலத்தில் முற்றாக மறைந்துவிட்டன என்றும், முறுவல், செயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நூலகளின் பெரும்பகுதி அழிந்து மிகுந்த பகுதிகள் கொஞ்சமே தனக்குக் கிடைத்துள்ளதாகவும் தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். எனவே சிலப்பதிகாரம் பேசும் இசை, நடனம் பற்றி அறிய தன் காலத்தில் கிடைக்கும் நூல்களின் எஞ்சிய பகுதிகளையே தான் மிகவும் சார்ந்திருக்கவேண்டியிருக்கும் தன் நிலைக்கு வருந்துகிறார். இருப்பினும், இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை, கி.பி. 3-ம் நூற்றாண்டின் பரதனின் நாட்டிய சாஸ்திரத்திற்கும், 5-ம் நூற்றாண்டின் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கும், பின்னர் மறுபடியும் இளங்கோ அடிகளுக்கும், சிலப்பதிகார உரை எழுத வந்த 13-ம் நூற்றாண்டு அடியார்க்கு நல்லாருக்கும் இடையே தொடர்ந்த் பரஸ்பர உறவும் அவ்வுறவினால் நிகழும் சம்வாதமும் ஒரு இடைவிடாத தொடர் எனத் தெரிகிறது.

சிலப்பதிகாரத்துக்கு முன்னர் கூட, 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க நூல்களிலிருந்து ஊர் ஊராக நாடு முழுதும் சென்று தம் இசையாலும், நடனங்களாலும் மக்களையும் மன்னனையும் மகிழ்வித்து வாழ்ந்த விறலியர்களை, பாணர்களைப் பற்றியும் அறிகிறோம். இந்த மரபின் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த வளர்ச்சியும் பரிணாமமும் தான் சிலப்பதிகாரம் பேசும் செவ்விய இசை, நடனங்களும் கிராமிய இசை, நடனக் கலைகளும் உருவாக வழிவகுத்தன. சங்க கால அகப்பாடல்கள் தான், பின்னர் 5-ம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டு வரை நீண்ட பக்தி காலத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. நான் இங்கு அதன் தொடக்கத்தையும் இறுதியையும் மாத்திரம் பேசினால் போதுமானது. பக்தி யுகத்தின் தொடக்கமாக வந்த 5-ம் நூற்றாண்டு காரைக்காலம்மமையார் சிவனின் தாணடவ நிருத்தத்தைக் கண்ட பரவசத்தை தன் பாடல்களில் கொண்டாடுகிறார். அது அன்றைய தமிழ் வழக்கில் ‘கொடுகொட்டி’ எனப் பெயர் பெற்றது. இதன் கடைசியாக, 9-ம் நூற்றாண்டு வைஷ்ணவக் கவிஞரான, நம்மாழ்வாரின் திருவாய்மொழி தான், தெனனிந்திய வைஷ்ணவ கோயில்களில் அரையர்கள் நிகழ்த்தும் அரையர் சேவை நடனத்திற்கான பாடல்களைத் தருகிறது. அரையர் சேவை என்ற நடன மரபு கி.பி. 954-1054-ல் வாழ்ந்த திருவரங்கத்து பெருமாள் அரையரால் தோற்றுவிக்கப்பட்டது. இன்றும் அந்த மரபு தொடர்வதை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் காணலாம்.

(2)

bharatanatyam_0110_sமிழ்நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் நீடித்த ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். நாடெங்கும் கோவில்கள் கட்டப்பட்டன. கோவில்கள் கலாச்சார வளர்ச்சிக்கு மையமாயின். கல்விக் கூடங்களாயின. பாட்டும் இசையும் நடனமும் முக்கிய இடம் பெற்றன. நடனக் கலைஞர்களில் சிறந்து விளங்குகிறவர்க்கு அரசரே தலைக்கோலி என்ற பட்டம் வழங்கி நிறைய பொருளும் பரிசுகளும் வழங்கும் ஒரு மரபு தொடர்ந்து இருந்து வந்தது என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிய வருகிறது. மேலும், அவர்கள் சிரமமின்றி வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான அளவு நிலமும் தானமாகத் தரப்பட்டது என்றும் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரமான மாதவி, ஒரு தலைக்கோலி ஆவாள். அவள் ஆடிய நாட்டியம் பற்றியும் அதன் வடிவங்கள், ஆடிய கருத்துக்கள் பற்றியும் சிலப்பதிகாரம் விவரமாகச் சொல்கிறது. தலைக்கோலி மாதவி ஆடிய நடனங்கள் செவ்விய மரபிலும், காதல் போன்ற மதம் சாராத பொருள் பற்றியும் இருந்ததாகவும், பொதுமக்களும் பெண்களும் குழுவாக ஆடியவை குரவைக் கூத்து போன்ற நாட்டுப்புற வடிவஙகளிலான நடனங்கள் என்றும் அவை பக்தி சார்ந்தும் மதம் சார்ந்தும், கண்ணனைப் புகழ்ந்து பாடுவனவாகவும் இருந்ததாக சிலப்பதிகாரச் செய்திகள் சொல்கின்றன. இன்னம் நிறைய நாட்டுப் புற வடிவங்கள் பேசப்படுகின்றன. அவை பற்றி தனியாகப் பின்னர் பேசலாம்.

இங்கு குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் சில்: தமிழ்நாட்டில் கலை, கலாச்சார வரலாறு பற்றி நமக்குத் தெரியவரும் காலத்திலிருந்தே, இந்த நடனக் கலைஞர்கள் சமூகத்தில் வெகுவாக மதிப்பும் கௌரவும் பெற்றிருந்தனர். மன்னர்களால் மதிக்கப்பட்டனர். சுதந்திரமாக எவ்வித கஷ்டங்களும் இன்றி தங்கள் வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தனர். கோவில்கள் கலைகளின் மையமாக உருவானதும், இசை, நடன கலைஞர்களுக்கு வாழும் வசதி தர நிலமும் பொருளும் தரப்பட்டதும் எல்லாம், முன்னர் இக்கலைஞர்கள் சமூகத்தில் பெற்றிருந்த கௌரவமான இடத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான். ராஜ ராஜ சோழ்னின் காலத்தில் (கி.பி. 11-ம் நூற்றாண்டில்) தஞ்சைக் கோவிலின் ஆதரவில் இருந்த இசை நடனக் கலைஞர்கள் நூற்றுக் கணக்கில் இருந்தனர்.

இத்தகைய ஒரு ம்ரபு 7-ம் நூற்றாண்டு பல்லவர்கள் ஆட்சி செய்த காலத்திலிருந்து தொடர்கிறதென்றாலும், சோழர் காலத்தில் அது பலம் வாய்ந்த, நாடு முழுதும் பரவலாகக் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு நியதியும் பாரம்பரியுமுமானது, ஒரு பேரரசாக சோழமன்னர்கள் தம் ஆதரவை பிரும்மாண்ட அளவில் ஸ்தாபித்த கீர்த்தி பெற்றதன் காரணமாக என்று சொல்ல வேண்டும். 9-ம் நூற்றாண்டிலிருந்து இசை பற்றியும் நடனம் பற்றியுமான நூல்கள், பின் அதற்கான உரை நூல்களும் பல இயற்றப்பட்டு வந்துள்ளதைப் பார்க்கிறோம். நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம், சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம் தொடங்கி சுத்தானந்த பிரகாசம் வரை – கடைசியாகச் சொலலப்பட்ட சுத்தானந்த பிரகாசத்தைத் தான் இன்றைய பரதநாட்டியம் தன் பயிற்சிக்கான ஆதார நூலாகக் கொள்கிறது. 8-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் தொடர்ந்து தோன்றியுள்ள உரையாசிரியர்களால் தான் இசையும் நடனமும் பாதுகாக்கப் பட்டும், பரப்பப் பட்டும், படிப்பிக்கப் பட்டும், பிரபலமாககப் பட்டும் வந்துள்ளன. தென்னிந்தியா அதற்கான பாதுகாப்பகமாக இருந்ததன் காரணத்தால் தான் இந்திய துணைக்கண்டம் முழுதும் அதனால் பயன்பெற முடிந்திருக்கிறது.

karana_sculptures_at_chidambaram_temple10-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த முகம் தெரியாத பெயர் தெரியாத சிற்பிகளுக்கு 3-ம் நூற்றாண்டு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை சற்று எண்ணி வியக்கலாம் நாம் இப்போது.. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம் கோவில்க்ளின் கோபுர வாசல் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் கரண சிற்பங்கள் இதற்கு அத்தாட்சி. இந்த சிற்ப விளக்கங்கள் இல்லாது போயிருந்தால், பரத நாட்டிய சாஸ்திரம் சொல்லும் கரணங்களை நம்மால் இன்று எப்படி திரும்ப கற்பித்து உருக்கொடுத்திருக்க முடியும்? அதன் பயிற்சி தலைமுறைக்குத் தலைமுறை, தொடர்ந்து வந்திருந்தாலே இடையில் கலைஞருக்குக் கலைஞர் மாற்றங்கள் நிகழும். எத்தகைய காட்சித் துணையும் இல்லாது, இரண்டாயிரம் வருடத்துக்கு முன் எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒன்றை இப்போது ஆடும் கலையாக எபபடி உருக்கொடுப்பது?

இடைப்பட்ட காலத்தில் உரையாசிரியர்கள் பல நூற்றாண்டு கால இடைவெளியில் தம் விளக்கங்களைத் தந்திருந்தாலும் அவர்கள் விளக்கங்களிலும் கூட கருத்து வேறுபாடுகளும் கரணங்களின் தொடர்ச்சி பற்றிப் பல்வேறு பார்வை வித்தியாசங்களும் இருக்கக் கூடுமல்லவா? மூல நூலையும் உரைகளையும் படி எடுத்தவர்கள் பாடபேதங்களையும் விட்டுச் சென்றிருப்பார்கள் தானே. உதாரணமாக, சகடாஸ்யம் என்பது சக்கரத்தைப் போல உடலை வளைப்பதா அல்ல்து ஒரு சக்கரத்தை உருட்டிச் செல்ல இடது கால் பின்னிருக்க வலது காலை முன்வைத்து சக்கரத்தைத் தள்ளுவதான் அபிநயமா?

தென்னிந்தியாவில் இதற்கு உதவியவை நந்திகேஸ்வரனின் அபிநய தர்ப்பணம் போன்றவையும் அவற்றைத் தொடர்ந்து வந்த உரை விளக்கங்களும் தான். அவ்விளக்கங்கள், இங்கு காணப்பட்ட நாட்டுப்புற நடனங்களையும் கருத்தில் கொண்டவை தான். தென்னாட்டுக் கோவிலகளில் காணும் கரண சிற்ப படிமங்களோடு அவை ஒவ்வொன்றும் நாட்டிய சாஸ்திரத்தின் எந்த ஸ்லோகத்தைக் குறிப்பன என்றும் செதுக்கப்பட்டிருந்தாலும், அச் சிற்பப் படிமங்கள் தென்னாட்டில் பயின்ற முறையைச் சார்ந்த படிம விளக்கங்கள் தான்.. உதாரணமாக, இந்த நடன படிமங்கள் எல்லாமே தமிழ் நாட்டில் இன்று பயிலும் பரதநாட்டிய பாணியிலான ஆதார நிலையான அர்த்தமண்டலியிலேயே (அரைமண்டியிலேயே) அமைந்தவை.

(3)

னவே இந்த மரபும் பாரம்பரியமும் இடையில் அறுபடாத, தொடர்ந்த வாழும் மரபும் பாரம்பரியமும் ஆகும். சோழ சாம்ராயம் முடிவுக்கு வந்தால், பாண்டியர்கள் அதைத் தொடர்ந்தனர். பாண்டியர்கள் விட்ட இடத்தில் இழையைப் பற்றி இன்னும் சிறப்பாகத் தம் ஆதரவைத் தொடர்ந்தவர்கள் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள். அவர்களைத் தொடர்ந்த நாயக்க மன்னர்களும் தம் பாரம்பரிய ஆதரவைத் தொடர்ந்தனர். நாயக்கர்கள் காலம் ஓய்ந்ததும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் தம் ஆதரவில் 19- நூற்றாண்டு முன் பாதி வரை இப்பாரம்பரியம ஜீவித்திருக்க செழித்து வளம் கூட்டச் செய்தனர். மராட்டிய அரசர்களில் ஒருவனான துலஜா கலைகளைப் போஷித்தவன் மட்டுமல்ல, சங்கீத சாராம்ருதம் என்ற நூலுக்கு காரணகர்த்தனும் ஆவான். அவன் இயற்றிய தியாகேசர் குறவஞ்சி என்னும் இசை நாடக நூல், சமீப காலம் வரை தொடர்ந்து நடிக்கப் பட்டு வந்தது. திருவாரூரின் பிரம்மோத்சவத்தின் ஊர்வலத்தின் போது கோவில் தாசிகள் தியாகேசர் குறவஞ்சியை நடனமாடிக்கொண்டு செல்வர். அந்நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடனமாடிச் சென்றவர் சமீபத்தில் தான் மறைந்தார். தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஸ்தாபித்த ‘தஞ்சை சரஸ்வதி மஹல் நூலகம், இசை, நாடகம் சார்ந்த பழம் ஏட்டுச் சுவடிகளின் பெட்டகமாகச் சிறந்து விளங்குகிறது. மருத்துவம் ஜோதிடம், போன்றவையும் அந்நூலகத்தில் உண்டு.

Balasaraswati
Balasaraswati

தேவ தாசிகள், 5-ம் நூற்றாண்டு, சிலப்பதிகாரம் சிறப்பித்த மாதவி முதல், 20-ம் நூற்றாண்டு, மைலாப்பூர் கௌரி அம்மாள், (ஆனந்த குமாரஸ்வாமி தன் Mirror of Gestures எழுத துணை நாடியது கௌரி அம்மாளைத் தான். அதை ஆனந்த குமாரஸ்வாமியே பதிவு செய்துள்ளார்), நம்மிடையே சில வருஷங்களுக்கு முன் வரை வாழ்ந்த பால சரஸ்வதி போன்றோர் வரை, இவர்கள் எல்லாம் பெரும் கலையாற்றல் பெற்றவர்கள். தாம் சார்ந்த கலையின் சிகரங்கள். சமூகத்தில் பெறும் கௌரவத்தைப் பெற்றவர்கள். நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். இந்த பாரம்பரியம் ஒரு அறுபடாது தொடர்ந்த பாரம்பரியம். இன்றும் சமீபத்திய பழமையிலும் சமூகத்தில் அந்தஸ்து பெற்றுவிட்ட, கலை உணர்வும் பண்பும் அற்ற பாமரர்களால் சிறுமைப் படுத்த்பட்ட காரணம், இவர்கள் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகப் பெற்று வந்த மன்னர் ஆதரவை இழந்ததே ஆகும். ஆனால் இவர்கள் வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள், தலைமுறை தலைமுறையாக அவர்கள் பயின்று பாதுகாத்து வந்த பாரம்பரியத்தின் கலைமதிப்பை, பண்பாட்டுச் சிறப்பை அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. ருக்மிணி தேவி பரத நாட்டியம் கற்க விரும்பிய போது, ஆனந்த குமாரஸ்வாமி தன் Mirror of Gestures எழுதக் கிளம்பியபோது அவர்கள் அண்டியவர்கள் இந்த தேவதாசிகள் தான். நான் சொல்ல விரும்புவது இந்த பாரம்பரியம் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ள ஒரு பாரம்பரியம், அது அறுந்தது சமீபத்தில் தான்.. அந்த நீண்ட பாரம்பரியத்தின் மதிப்புகளைக் காணத் தவறியது சமீப காலத்திலிருந்து சீரழிந்து வரும் இன்றைய நம் சமூக மதிப்புகள்.

இந்த மரபும் பாரம்பரியமும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றின் சுமையோடு வரும் ஒன்று. இத்தகைய ஒரு நீண்ட பாரம்பரியமோ சுமையோ இந்திய நிலப் பரப்பில் வேறு எந்த பிராந்தியத்திலும் காணாத ஒன்று. எனவே இக்கலையின் இன்றைய பயிற்சியாளருக்கு இது எவ்வித சுதந்திரத்தோடும், சிருஷ்டிகர பார்வையோடும், துடிப்பான செயல்பாட்டோடும் தோளில் சுமக்கவோ முன் செல்லவோ இயலாத பாரம் மிக்க சுமையாகியிருக்கிறது. நாம் வெறும் சரக்கு வண்டியாகிவிட்டோமா என்ன?

(தொடரும்)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

வெ.சா தனது கலை, இலக்கிய விமர்சனப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுறும் இந்தத் தருணத்தில்  இந்திய நடனங்கள் பற்றிய இக் கட்டுரைத் தொடரை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து.காம்  பெருமையடைகிறது.

10 Replies to “சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1”

 1. பரதக் கலை அதன் வரலாறு போன்ற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தைப் பற்றி, அறிவு மிக்கவர் எழுதும் தொடரைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு.
  ___________________________________________

  ஐம்பது ஆண்டு காலம் தொடர்ந்து, தனியனாக தைரியமாக எந்தவித காம்ப்ரமஸ்களும் செய்யாமல் விமர்சன சிலம்பாடுவது சாதாரண சாதனை இல்லை.

  காஸ்பரோவை விஸ்வநாதன் ஆனந்த் வென்ற போது சென்னையில் ஒரு குதிரை வண்டியில் வைத்து வீதி வலம் வரச் செய்து ஒரு பத்துப் பதினைந்து பேர் கொண்டாடினார்கள். இந்தியாவில், தமிழ்நாட்டில் அவ்வளவாவது நடந்ததே என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டிய சூழல்.

  ஐம்பது ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றும் ஒரு இலக்கிய ஜாம்பவானுக்கு அதுவும்கூட கிடையாது. அவருக்கும் அது போன்ற விஷயங்கள் பிடிக்காது.

  அவருக்குக் கண்ணுக்குத் தெரியாமல்தான் நமஸ்காரங்கள். காதுக்குக் கேட்காமல்தான் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு.

 2. இதைப் படித்த போது பாலகுமாரனின் செப்புப் பட்டயம் ஞாபகம் வந்தது. இந்தக் கதை முழுக்க முழுக்க தேவதாசி இப்படிச் சொல்வதை விட தேவரடியார்கள் பற்றியக் கதை. இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
  நல்ல பகிர்வு. இதை பகிர்ந்து கொண்டமைக்கு வெங்கட் சாமிநாதன் மற்றும் தமிழ்ஹிந்து தளத்திற்கு நன்றி

 3. இப்படி இசையையும் (குறிப்பாக நாகஸ்வரத்தையும்) நாட்டியத்தையும் பரம்பரையாக வளர்த்து வந்தவர்கள் இன்று அந்த தளங்களில் சற்றே பின் தங்கி விட்டார்கள் என்று எனக்குப் படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். இந்தக் கலைகளைப் பயிற்சி செய்து வந்தவர்களை தாழ்வாக நடத்தியதாலா? வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் துறைகளை ஆக்ரமித்துக் கொண்டதாலா? (நாகஸ்வரத்தை வாசிப்பவர்களில் இவர்கள் இல்லை!)அல்லது அனைவர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளாலா?

 4. ஆண்டுக் கணக்கில் அச்சுப்பிழை இருக்கிறது.

  “தமிழ்நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த ஒன்று”

  சௌந்தர்

 5. // ஆண்டுக் கணக்கில் அச்சுப்பிழை இருக்கிறது.

  “தமிழ்நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த ஒன்று”

  சௌந்தர் //

  அன்புள்ள சௌந்தர்,

  ஆம். ”ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் நீடித்த ஒன்று” என்று இருக்கவேண்டும்.. திருத்தி விட்டோம்.

  சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

 6. கட்டுரை நன்றாக இருந்தது , என்னுடைய ஊர் கும்பகோணம் அருகில் ” தேபெருமனல்லூர் ‘ ,வருடா வருடம் என் ஊரில் ” பிரகலாத சரித்ரம் ” என்னும் நாட்டிய நாடகத்தை நடத்தி வருகிறோம் … ” பிரகலாத சரித்ரம் ” நாடகம் தமிழ் நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும் நடக்கிறது , ஒன்று எண்கள் ஊர் மற்றும் மெலதூர் , அந்த காலத்தில் பத்து நாளைக்கு நாடகம் நடக்குமாம் இப்போதெலாம் ஒரு நாள் ராத்திரி நாடகத்தை நடத்துவதே பெரிய விஷயமா உள்ளது .. மேலும் எண்கள் ஊரில் நாடகம் தமிழ் இல் நடத்த படுகிறது … வருகிற 26 ஆம் தேதி இரவு நரசிம்ஹா ஜெயந்தி அன்று நடக்கும் நாடகத்தை காண நான் தமிழ் ஹிந்து அன்பர்களை அழைக்கிறேன் … என்னை 9345254778 , என்ன்ற எண்ணில் தொடரு கொள்ளலாம் .. தேபெருமனல்லூர் புகழ் பெற்ற ராகஹு கேது தளம் ஆனா திருநாகேஸ்வரம் தலத்தில் இருந்து மிக மிக பக்கம் . 3 கிலோ மீட்டர் –

  பிரகதீஸ்வரன் – கோயம்புத்தூர்

 7. Kindly show the links wherever given in a different colour than in the black as is given now. Some times they are missed.

 8. எனக்குப பிடித்த கட்டுரை
  ஸ்டாம்பில் காணப்படும் பெண்ணின் உருவம் சிவபாதசுவ்தரத்தின் மகள் என நினைவு சரியா? narasiah

 9. sorry sir, I am not able to help you. Your (Narasiah’s) eye for detail and historical perspective is something I can only envy.

  The presentation, format, illustrations etc etc. are the work of the editorial group. பெண்ணைச் சிங்காரித்து மணமேடையில் உடகாரவைத்தது அவர்கள் காரியம்.

 10. 22 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கமா இது. ? இந்திய நடனங்கள் குறித்து நேற்று கேட்டு இன்று எழுதிக் கொடுத்ததைப் போன்ற பொலிவு கட்டுரையில்.. இவையெல்லாம் பதிவுசெய்யப்படாவிட்டால் பழம்பெருமை மட்டுமே பேசி சமபாதத்தில் உறைந்தது போதாதென்று காணாமலும் போகும் இந்திய நடனங்கள்.

  அருமையான கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *