(இந்தக் கட்டுரையை சுவாமிகளிடமிருந்து பெற்று நமக்கு அனுப்பி வைத்தவர் எஸ்.ராமன் அவர்கள்)
நம் பாரத நாடு இறைவனருள் பெற்ற ஒரு மிகப் பெரிய புனிதமான நாடு. காலங்காலமாக நம் நாட்டில் எல்லாத் திசைகளிலும் அவ்வப்போது பெரிய மகான்கள் அவதரித்துள்ளனர். இவை தவிர கணிதம், மருத்துவம், வானவியல் போன்ற அறிவியல் துறைகளில் வல்லமையுள்ளோரும் தோன்றியுள்ளனர்.
அவர்கள் மக்களுக்கு நல் வழியைக்காட்டி, அதனால் மக்கள் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகளை அடையவும், அவர்களே நல்ல முன்னுதாரணங்களாக, ஒழுக்கமெனும் பண்பாட்டினை மதித்து வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். இன்றும் நாம் அறிந்திராதபடி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
“அப்படிப்பட்ட பெரியோர்கள் என்ன செய்கிறார்கள்?”
நம் கண்ணுக்கும், அறிவிற்கும் புலப்படாத ஒரு பரம்பொருளின் அளவற்ற சக்தி நம் எல்லா உயிரினங்களையும் அன்புடன் காத்து, அவரவர் இயல்பிற்கு ஏற்ப நடத்துகிறது என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
அவ்வருள் சக்தியுடன், முன்னோர்கள் காட்டிய வழியுடன் அவர்கள் தொடர்பு கொண்டு, அவ்வருளால் மன ஒருமைப்பாடும், மன அமைதியும் பெற்று நம் மனித சமூகத்தை உயர்ந்த நிலைக்கு நடத்திச் செல்லுகிறார்கள். திடமான தன்னம்பிக்கை, அன்பு, பணிவு மற்றும் எச்செயலிலும் முடிவான விடை காணும் வரை பொறுமையாகிய விடாமுயற்சி போன்ற சீரிய குணங்களைக் கொண்டு வாழ்வில் உயரிய குறிக்கோள்களை அடையலாம் என மற்றவர்களுக்கு நிரூபிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்வை இக்காலத்திலும் நம்மில் எவரும் அடையலாம். இதற்கு சாதி, இன, மத பேதங்கள் எதுவும் தடையாகாது. அப்படிப்பட்ட உயர்வாழ்வுக்கான வழி தியானமே.
நமது இயல்பான நிலை இன்ப மயமானது.
ஆனால், இயல்பாகவே உள்ள தன் சுக இன்ப நிலையை மனமானது மறதியால் விட்டு விடுகிறது.
உடலின் இந்திரியங்கள் வாயிலாக வரும் உணர்ச்சிகளே இன்பமெனக் கருதி, தொடர்ந்து வெளி விஷயங்களையே பற்றிக்கொண்டு, ஓயாது செயல்படுவதால் தன இயல்பான சுக இன்பநிலையுடைய அமைதியை மனமானது இழக்கிறது.
அவ்விழப்பால் வரும் இருளால் சூழப்பட்ட மனம் கதிகலங்கி, குழம்பி, சிதறிப்போன நிலையை அடைந்து விடுகிறது.
இத்தகைய மனத்தைக் கொண்டிருக்கும் நாம் தன்னுள் தான் கட்டுப்பட்டிருந்த இயல்பு மாறி, எச்செயலிலும் தமக்கிருந்த கூர்ந்த கவனத்தில் குறைபாடு வருவதால் ஊக்கம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து, பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.
ஒரு கண்ணாடி லென்ஸ் வழியாக வரும் சூரிய ஒளிக் கதிர்கள் குவியும் மையத்தில் கதிரின் சக்தி மிகுந்து தீ உண்டாகிறது. அதுபோல், சிதறிப்போன மனதை, நம் பார்வையை ஒரு தெய்வீக உருவின் மேல் குறிவைத்துப் பழகினால் நாளடைவில் சிதறுண்ட மனம் ஒருமைப்பட்டு தன் இயல்பான அமைதியை அடையும். அப்போது நாம் சிந்தித்து செயல்படும் தன்மைகளில் ஒரு பெரிய மாறுதலைக் காணலாம். அப்படிப்பட்ட மாற்றத்தினால் நம் வாழ்வு ஒளிமயமாகி உங்களுக்கும் உங்களைச் சார்ந்தோருக்கும் நன்மை தரும்.
தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.
வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.
ஆரம்பத்தில் இடைவிடாது கண் திறந்தபடி தினமும் காலை, மாலை பத்து-பதினைந்து நிமிடங்களாவது ஜபித்தால் கண் பார்வையும் மனமும் தேர்ந்தெடுத்த உருவின் மீது குவிவதுடன், நாளடைவில் மனதில் ஓர் அமைதியும் தோன்றும்.
அடுத்தபடியாக உருவத்தின் மீது கண் திறந்து செய்த தியானத்தை விட்டு, தன் உள்ளத்தில் காணும் அதே உருவத்தையும் அதன் பெயரையும் கண் மூடியபடி பத்து-பதினைந்து நிமிடங்கள் தியானிக்க வேண்டும். இப்படி தினமும் தியானத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட வேளையை நிர்ணயித்துக்கொண்டு ஒரு நாளும் தவறாமல் செய்வது மிக நலம்.
எடுத்துக்கொண்ட உருவமோ அல்லது மந்திரமோ உயர்ந்த அமைதி கொண்ட ரூபமாகவும், குறைவான எழுத்துக்களுடைய மந்திரமாகவும் இருப்பது மிக முக்கியம். அது மனம் ஒருமைப்படுவதற்கு உதவும்.
இன்றைக்கு ஒரு வகை, நாளைக்கு வேறுவகை என்று உருவத்தையோ, மந்திரத்தையோ மாற்றலாகாது. மாற்றம் ஏதுமின்றி ஒரே சீராக அமைதியுடன் செய்யப்படும் ஜபம் விரைவில் நற்பயனை அளிக்கும்.
இப்படி நாம் தினமும் நம் வாழ்வில் உயர்ந்த அமைதியான நிலையை அடைந்து, தானும் தன்னைச் சார்ந்த எல்லோரும் வாழ்வில் எல்லாவித நன்மைகளை அடைய வேண்டுமென்று செய்த தியானத்தின் விளைவாக நாளடைவில் உங்கள் உள்ளங்களில் நீங்கள் இதுவரை காணாத ஓர் இன்பத்தையும், அலாதியான ஆழ்ந்த அமைதியான நிலையை அனுபவிப்பதையும் உணரத் துவங்குவீர்கள்.
இது உங்களை மேலும் தியானம் செய்யத் தூண்டும். இதனால் நீங்கள் தொடர்ந்து செய்யும் தியானம் உங்களில் மேலும் நிலைபெற்று உள்ளத்தில் தன்னிறைவையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
இப்படியாக தான் பெற்ற இவ்வரிய செல்வத்தை மேலும் வளர்க்கவும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் புதியதான ஒருமைப்பாடுடைய உற்சாக வேகத்தைக் கொடுததும், மனதில் நான், எனது, எனக்கு போன்ற தன்னல எண்ணங்களையும் போக்கும்.
அவைகளுக்குப் பதிலாக நாம், நமது, எல்லோருக்கும் என்ற பரந்த நோக்கமும் நம்மில் உருவாகி, அதன் விளைவாக தானும், தன குடும்பத்தாரும், தனது ஊர் மக்களும், தன் தேசம் மற்றும் உலகமுமே நற்பயன் அடைந்து, யாவரும் இன்பமாக இப்புவியில் வாழலாம் என்ற நோக்கத்தையும் வலுப்படுத்தும். நம் பாரத நாடு இதனால் முந்தைய காலத்தைப்போல் சீரும் சிறப்பும் இறையருளால் அடையும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் வல்ல இறைவன் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எந்த பாகுபாடும் அற்ற நிலையில் இருக்கிறார். அந்த ஏகனை தினமும் நினைத்து, போற்றி, வணங்கி நம்மை அவருக்கே அளித்து மாறா இன்பத்தை இவ்வாழ்நாளிலேயே பெற்று வாழ்வோம்.
இவை அனைத்தையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி, அனைத்து வீடுகளிலும் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் கூடி, உண்பது, உறங்குவது போல தியானமும் செய்தால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற்று மங்களமாக வாழலாம்.
இறைவனருள் நிச்சயமாக நம் எல்லோருக்கும் உள்ளது. இறைவனை நாம் உடமை ஆக்கிக்கொள்ள இயலாது. ஆனால் நாம் மற்றும் சகல ஜீவராசிகள் எல்லோரும் அவருடையதே. தெய்வம் ஒன்றே; அவரை அடையும் வழிமுறைகளே வேறுபட்ட நிலையில் வெவ்வேறு மதங்களாக உள்ளன. நாம் இறைவனில் ஒன்றுபடுவோம்.
ஓம் தத் சத்
தியானப் பாட்டு
கண்ணை மூடி அமர்ந்து கொள்
கடவுள் என்று நினைந்து கொள்
எண்ணிடாமல் எதையுமே
இறைவன் ஒன்றே நினைந்து கொள்
காணும் உலகை நினைப்பதால்
கடவுள் நினைவு போய்விடும்
வேணும் உறுதி முதலிலே
விரும்பித் தியானம் பண்ணுவாய்
எந்த வடிவில் கருதினும்
அந்த வடிவில் தோன்றுவார்
சொந்த வடிவம் பெயரிலார்
சுத்த மோன சின்மயம்
இன்ப மான ஒருபொருள்
இருக்கு துன்றன் நெஞ்சிலே
அன்பு கொண்டு தேடினால்
அளவில் லாத சுகமடி
எங்கும் உள்ள கடவுளை
இதய குகையில் காணலாம்
இங்கு கண்ட பிறகுதான்
இருப்ப தெல்லாம் அவன் மயம்
எண்ணம் அறியும் சாட்சியாய்
இறைவன் உன்னுள் இருக்கிறார்
எண்ணம் ஓய்ந்த இடத்திலே
இறைவன் வந்து தோன்றுவார்
எண்ணம் ஓய வழியைக் கேள்
இறைவன் ரமணன் மொழியைக் கேள்
எண்ணம் எழும்பும் தருணமே
யாருக் கெழுவ தென்றுபார்
எண்ணம் தனக்கே எழுவதால்
இந்த “நானார்?” என்றுபார்
எண்ணும் தன்னை நோக்கவே
எழுந்த எண்ணம் ஓய்ந்துபோம்
பார்க்கப் பார்க்க உன்னுளே
பரம ஞானம் பூக்குமே
பார்க்கும் அறிவைப் பார்க்கவே
பழகிப் பழகி வெற்றிக்கொள்
கற்கும் கல்வி பலவிலும்
கடவுள் கல்வி முதலிடம்
நற்சி றப்பு யாவிலும்
ஞான நிஷ்டை முதலிடம்
உடல் எடுத்த நோக்கமே
உண்மை இன்பம் துய்க்கவே
கடவுள் ஆகி நின்றுடல்
கழற்றி வீசிப் போகலாம்
தெய்வம் என்ப தருள்மயம்
ஜெகம் எலாமும் இருள்மயம்
மெய்எ தென்று நாடவே
விளங்கும் இந்த உண்மையே
வாழ்க ரமண சற்குரு
வாழ்க ஞான மார்க்கமே
வாழ்க ஆன்ம சாந்தியில்
வாழும் வாழ்வு வாழ்கவே!
– ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்
மிக அருமையான கருத்துக்களை எளிய நடையில் தந்தமைக்கு நன்றி.
///எங்கும் உள்ள கடவுளை
இதய குகையில் காணலாம்
இங்கு கண்ட பிறகுதான்
இருப்ப தெல்லாம் அவன் மயம்///
உள்ளத்துள் உரையும் பரம் பொருளை அங்கேயே காண்பதை விட்டு விட்டு பிரபஞ்சமெல்லாம் தேடும் மௌடீகத்தை எத்தனை எளிமையாக சாது அவர்கள் சுட்டுகின்றார்!
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே” என்ற வரி நினைவுக்கு வருகின்றது.
தியானம் என்னும் ஒரு அற்புதக் கலையை ஒரு அருமையான – எளிமையான – அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் ஒரு பாடல் மூலம் விளக்கி விட்டது இந்தக் கட்டுரை . மிக அருமை. தெவிட்டாத தேன்.
தியான ரொம்பவே மிக நல்லது
Very useful article.Expecting more of this kind articles. In the name of meditation the retail sales fake religious conventional conveyors convey the meditation conveniently to convert the innocent people. For roti, rupee and ruba-yuvathi the conversion is already successfully going on.With this now meditation is also taken by the hands of so called conveyors. Let them practice meditation in their life but it should not disturb other faith followers. Let the message reach all our people and follow it in our life.