உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து, எவ்விதத் தொந்தரவும் இன்றிப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்.
கோவையில் அதிகமாக வளர்ந்து செழித்துப் படர்ந்திருந்த தமிழ்ப் பயிர்களையெல்லாம் நீக்கிவிட்டு, நடைபாதையைக் கண்டுபிடித்து நடப்பதே பெரிய காரியமாக இருந்தது. செம்மொழி மாநாட்டுக்குப்பின் கோவையே ‘களை’யாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்குத்துடன் அனைத்துத் தமிழ்ப் பெருங்குடி மக்களையும் வருக வருக என அழைத்திருந்தது. செங்கதிரால் மலரும் தாமரைகள்… உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் வளரும் கொங்குத் தமிழ்… என்றெல்லாம் வானுயர வளர்ந்திருந்த தமிழைக் கண்டு பெரும் இறுமாப்புடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நிறுவப்பட்ட அரங்குகளையும், இனியவை நாற்பதையும் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்த வண்ணம் இருந்தனர். வெள்ளிக் கிழமை மட்டும் அதைப் பார்க்க கிட்டத்தட்ட 70,000 பேர் வந்திருப்பார்கள். எனக்குத் தலை சுற்றியது. சனிக்கிழமை ஒரு லட்சம் மக்கள் பார்த்திருக்கக்கூடும். இதனால் சில இடையூறுகள் ஏற்பட்டன. சிறிய அளவிலான இடையூறுகள்தான்; பேருந்து நேரத்துக்குச் செல்லாது, நேரத்துக்குக் கிடைக்காது, உணவு கிடைப்பது போன்றவை. ஆனாலும் காவல்காரர்கள் திறமையாகவே இதனைக் கையாண்டார்கள் எனச் சொல்லவேண்டும்.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நுழைவாயிலின் கண்றாவித் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அதன் எதிரே அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி அரங்கினுள் நுழைந்தேன்.
மிகச் சிறிய புத்தகக் கண்காட்சி. மொத்தமே 125 பதிப்பகங்கள்தான் கலந்துகொண்டன. பதிப்பகங்கள் குறைந்த அளவே இருந்தன என்பதாலோ என்னவோ உள்ளரங்கக் கட்டமைப்பு, செய்யப்பட்டிருந்த வசதிகள் என எல்லாவற்றிலுமே பபாஸி சிறப்பாகச் செயல்பட்டிருந்தது.
காலநிலையும் பபாஸிக்கு ஒத்துழைத்தது! பெங்களூரு புத்தகக் கண்காட்சி போல, டெல்லி புத்தகக் கண்காட்சி போல அப்படி ஒரு குளிரான புத்தகக் கண்காட்சி. நல்ல காற்று, அதோடு மின்விசிறியும் சேர்ந்துகொள்ள, கிழக்கு பதிப்பகத்து அரங்கத்தின் அருகில் இருந்த இடத்தில் ஒரு கட்டிலைப் போட்டுத் தூங்கியிருந்தால், சொர்க்கத்தைப் பார்த்திருக்கலாம். வியர்வையே இல்லாத முதல் தமிழ்நாட்டுப் புத்தகக் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். மாலை 7 மணிக்கெல்லாம் பதிப்பாளர்களின் புகார்கள் தாங்காமல் மின்விசிறியை நிறுத்திவிட்டார்கள். அப்படி ஒரு குளிர்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் போல, எல்லா அரங்குகளுக்கும் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். இதனால் அங்கங்கே தண்ணீர் வைப்பது, பதிப்பாளர்கள் தேவைக்கும் அதிகமாகப் பிடித்து வைத்துக்கொள்வது, தேவையானவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போவது போன்ற கூத்துகளெல்லாம் நடக்காமல் போனது. இதனையே சென்னை புத்தகக் கண்காட்சிக்கும் செய்துவிடலாம்.
இதைவிட பபாஸி அசர வைத்தது இன்னொரு விஷயத்தில். ஒவ்வொரு அரங்கத்துக்கும் எல்லா நாளும் மதிய உணவை அழகாக பேக் செய்து கொடுத்துவிட்டார்கள். ஓர் அரங்கத்துக்கு இரண்டு எலுமிச்சை சாதம் (அல்லது வேறு ஏதோ ஒன்று) இரண்டு தயிர் சாதம். இதனை ஏன் தனியே குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட 600 பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் சென்னை புத்தகக் கண்காட்சியில், கல்யாண வீடு போல ஷாமியானா கட்டி, இலை போட்டுச் சாப்பாடு போடுவார்கள். அங்கே இடம் கிடைக்கவே அதிக நேரம் ஆகும். 11 மணிக்குத் தொடங்கும் சாப்பாடு, முடிய 3 மணி ஆகும். இதில் பதிப்பாளர்களின் குறை ஏகத்துக்கும் இருக்கும். இவை எல்லாமே இல்லாமல் ஆகிப் போனது கோவை புத்தகக் கண்காட்சியில். கோவை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட உணவின் தரமும் மிக நன்றாகவே இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இதனையே செய்துவிட்டால், இரண்டு இரண்டு பேராக உணவுக்குச் சென்று வந்து, அடுத்த இரண்டு பேர் சென்று வந்து என வீணாக நேரம் செலவாவதைத் தடுக்கலாம். இதனைச் செய்வது பற்றி பபாஸி பரீசிலிக்கவேண்டும். சாம்பார், வத்தக்குழம்பு, பொறியல், கூட்டு, அப்பளம், மோர் எனக் கல்யாணச் சாப்பாட்டை யாரும் கேட்கவில்லை. எல்லாருக்கும் தேவை, அந்தப் பசி நேரத்தில் ஏதேனும் ஓர் உணவு மட்டுமே. இப்படி பல வகைகளுடன் உணவு தருவதற்குப் பதிலாக, ஏதேனும் ஒரு கலவை சாதமும் தயிர் சாதமும் கொடுத்தால், அதை அதிகத் தரத்துடனும் வழங்கமுடியும்; தேவையற்ற நேர விரயத்தையும் தவிர்க்கமுடியும்.
கொடீசியா அரங்கில் வைத்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றதால், கழிப்பிட வசதி குறித்த பிரச்சினை ஏற்படவில்லை. திறந்த வெளி சிறுநீர்க் கழிப்பிடங்கள் பரந்து விரிந்து இருந்ததால், துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை. இந்த கழிப்பிட வசதிப் பிரச்சினையை பபாஸி எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியில் எதிர்கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை.
இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது.
கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம். அதில் சிலர் எங்களை அழைத்து, தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறதா எனக் கேட்டார்கள். காலச்சுவடு இதழில் வெளியாகியிருந்த, காலச்சுவடு அரங்கு எண் குறித்த விளம்பரத்தைப் பார்த்த சிலரும் காலச்சுவடை அழைத்து, இதே கேள்வியைக் கேட்டதாகத் தெரிகிறது.
இனியவை நாற்பது என்னும் நிகழ்ச்சியை முதல் நான்கு நாள்கள், புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு எதிரில் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கக் குவிந்த கூட்டத்தினர் பலர் அப்படியே புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். திங்கள் கிழமைக்குப் பின்னர், அந்த இனியவை நாற்பது அரங்கத்தை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கத்தினுள்ளேயே வைத்துவிட்டார்கள். இதனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனது.
புத்தகக் கண்காட்சியை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் அரங்கத்தின் உள்ளேயே வைத்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு நேரடியாகத் தொடர்பு கொண்டது புத்தகங்களாக மட்டுமே இருக்கமுடியும் என்றுதான் என் சிற்றறிவுக்குத் தெரிகிறது. ஆனால் தமிழை வளர்க்கப் புத்தகங்கள் தேவையில்லை என நினைப்பவர்கள் புத்தகக் கண்காட்சியை வெளியே கழற்றிவிட்டுவிட்டார்கள். அப்படிச் செய்யாமல் அரங்கத்தினுள்ளேயே வைத்திருந்தால், இந்தப் புத்தகக் கண்காட்சி, வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கும்.
கோவை புத்தகக் கண்காட்சி என்றாலே ஒருவித ஒவ்வாமைதான் பதிப்பாளர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ கோவையில் புத்தகக் கண்காட்சி நடைபெறவே இல்லை என நினைக்கிறேன். (உறுதியாகத் தெரியவில்லை.) அந்த அளவு கோவை புத்தகக் கண்காட்சி குறித்த தோல்வி பயம் நிலவி வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சி சிறப்பாக நடைபெற்றிருந்தால், கோவை புத்தகக் கண்காட்சியை, சென்னை, ஈரோடு, மதுரையைத் தொடர்ந்து ஒரு முக்கியமான புத்தகக் காட்சியாக மாற்றியிருக்கலாம்.
செம்மொழி மாநாட்டால், கடந்த ஆண்டுகளை விட கோவை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு, அதிலேயே பபாஸி மகிழ்ந்துவிடக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும் கோவையிலும் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற பபாஸி முயற்சிகளைச் செய்யவேண்டும்.
பல பதிப்பாளர்கள் கோவை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதே இல்லை. இந்த முறை பங்கேற்றவர்கள் கூட, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பதற்காகப் பங்கேற்றோமே அன்றி, புத்தகக் கண்காட்சிக்காக அல்ல என்று சொன்னார்கள். அடுத்த முறை பங்கேற்கப் போவதில்லை என்றும் சொன்னார்கள்! இந்த நிலையை மாறவேண்டும். பபாஸி நினைத்தால் இதனை எளிதாக மாற்றிவிடலாம். கோவை அப்படி ஒன்றும் புத்தகமே வாசிக்காதவர்கள் வாழும் கிரகமல்ல.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தது சரிதான். ஆனால் செம்மொழி மாநாட்டிலேயே அலைந்து திரிந்து ஓய்ந்து வருபவர்கள் புத்தகக் கண்காட்சியில் எவ்வித ஆர்வமும் காட்டாமல், நடக்க முடியாமல் சோர்ந்து போய், ஒரு தடவை பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஒரு நண்பர், ‘புத்தகங்கள் விற்பனைக்கு’ என்று அட்டை வைக்கலாமா என்று கேட்டார்.
செம்மொழி மாநாட்டுக்காக இல்லாமல், புத்தகக் கண்காட்சிக்காகவே வருபவர்கள் நிறையப் பேர் என்பதால், வந்தவர்களில் ஒரு புத்தகமாவது வாங்குபவர்கள் சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால் ஒரு புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெற்றிக்கு இது போதாது. புத்தகம் வாங்க நினைக்காதவர்கள் கூட உள்ளே வந்து புத்தகம் வாங்கவேண்டும். இதனால் உள்ளே வருபவர்களில் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்னும் சதவீதம் குறைந்தாலும், ஒட்டுமொத்த விற்பனை அதிகமாகும். சென்னை புத்தகக் கண்காட்சியில் நடப்பது இதுதான். எனவேதான் அங்கே புத்தகக் கண்காட்சி வெற்றியடைகிறது.
பெரும்பாலான பதிப்பகங்கள் விற்பனை மிக மந்தம் என்றுதான் சொன்னார்கள். கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தவரை நல்ல விற்பனை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல விற்பனைதான். கடந்த 3 முதல் 4 மாதங்களாக நிலவி வந்த காகிதப் பற்றாக்குறையால், நிறையப் புத்தகங்களை இருப்பில் வைத்திருக்க இயலவில்லை. இதனையும் மீறி நல்ல விற்பனை. எல்லாப் புத்தகங்களும் இருப்பில் இருந்திருந்தால் கோவையை இன்னும் அதிகமாகக் கலக்கியிருக்கலாம்.
அடுத்த முறை சரியான இடத் தேர்வு, நிறைய விளம்பரங்கள் என்று செய்தால், கோவை புத்தகக் கண்காட்சியை தமிழ்நாட்டின் முக்கியமான புத்தகக் கண்காட்சியாக மாற்றிவிடலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
சில துளிகள்:
* பாரதி புத்தகாலயம் நிறைய பதிப்பாளர்களின் புத்தகப் பட்டியலை ஒரு சிடியில் வெளியிட்டுள்ளது. இதில் எத்தனை பதிப்பாளர்கள் உள்ளார்கள், எந்த வடிவமைப்பில் உள்ளது என்பதெல்லாம் தெரியாது. தேடும் வசதி இருக்காது என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் இப்படி ஒரு சிடி தேவை என்னும் எண்ணம் எழுந்திருப்பதே பாராட்டத் தக்கது. இனி வரும் காலங்களில் இந்த நினைப்பு மெருகூட்டப்பட்டு ஒரு நல்ல சிடி நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
* புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டுச் செல்லும் நபர் ஒருவர், ‘கலைஞர் இறந்துட்டா தமிழை யார்தான் காப்பாத்துவா? நல்லவேளை, அவர் இருக்கும்போது இந்த செம்மொழி மாநாடு நடந்தது; அவருக்குப் பின்னாடி தமிழை யார்தான் காப்பாத்தப் போறாங்களோ…,’ என்றாராம். ஒரு நண்பர் என்னிடம் இதைச் சொன்னார்.
* வழக்கம்போல வித்தியாசமான வாடிக்கையாளர்கள். 54 ரூபாய் ஒரு புத்தகம் என்றால் 4 ரூபாய் குறைத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்ற கேள்விகள். அதிலும் ஒரு வாசகர், 200 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினார். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கொடுத்தார். அதில் ஒன்று முற்றிலும் இரண்டாகக் கிழிந்துவிட்ட நிலையில், கடைசியில் நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்தது. இது செல்லாது என்று சொன்னபோது, “இஷ்டம்னா இதை வெச்சிக்கிட்டுப் புத்தகத்தைக் கொடு, இல்லைன்னா புத்தகத்தை நீயே வெச்சிக்கோ,” என்றார். “இல்லை சார்,” என்று பணிவாகச் சொல்லிவிட்டு, பில்லை பணிவாக கேன்சல் செய்துவிட்டு, புத்தகத்தைப் பணிவாகத் திரும்ப வாங்கிக் கொண்டோம். ஒரு வாசகர் தனக்கு எல்லாப் பதிப்பகங்களும் 50 முதல் 60% வரை தள்ளுபடி தருவதாகச் சொல்லி, எங்களிடமும் அதைக் கேட்டு வாதாடினார். மீண்டும் பணிவான அதே பதில், “இல்லை சார்.”
* பாரதி புத்தகாலயத்தில் என்னைப் பார்த்த ஒருவர், ‘நீங்க இட்லிவடைதானே?” என்றார். இங்க வந்துமா என நினைத்துக்கொண்டே, “இல்லை, அதுல எழுதியிருக்கேன்,” என்றேன். நான் புத்தகக் கண்காட்சி பற்றிய எழுதிய பதிவுகளை வாசித்திருப்பதாகச் சொன்னார். அப்ப யார்தான் இட்லிவடை என்று என்னை அவர் கேட்டார். நான் இட்லிவடை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி, கோவை புத்தகக் கண்காட்சி பற்றி எழுதினாலும் எழுதுவேன் என்றும் சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.
* சுஜாதா புத்தகங்கள் – என்ன சொல்ல? இப்படி ஒரு ‘க்ரௌட் புல்லரை’ இனிமேல் பார்ப்பது அரிது. கிழக்கு பதிப்பகத்தைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொருவரும் சுஜாதாவின் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு அரங்கினுக்குள்ளே வந்தார்கள் என்றால் மிகையில்லை. அதிலும் சுஜாதாவுக்கான பெண் வாசகர்கள் – வாய்ப்பே இல்லை.
* ஒரு நண்பர் நெட்டில் என்ன நடக்குது என்று கேட்டார். தமிழ்ஹிந்து பற்றியும் சொன்னேன். அப்படி ஒரு வலைத்தளம் இருக்குதா என்ன என்றார். ‘சட்ட கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திரலாம்… நெஞ்சு கிழிஞ்சிருச்சே… எங்க முறையிடலாம்’ என்ற பாட்டு பின்னணியில் ஓடியதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
* நாவல் வடிவில் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம் எல்லாமே நன்றாக விற்பனை ஆயின. செம்மொழி மாநாட்டுக் காய்ச்சலாலோ என்னவோ, ஒவ்வொருவரும் வந்து சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று பதில் சொல்லி மாளவில்லை. யாராவது ஒருவரிடமாவது, “இளங்கோவடிகளே எழுதின ஓலைதான் இருக்கு, அதைத் தர்றதில்லை,” என்று சொல்லிவிட எழுந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டேன். காரணம் பணிவுதான், வேறென்ன. :>
* ஏதேனும் ஒரு பதிப்பகத்துக்குப் போய் ஏதேனும் ஒரு வாசகர் ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டு, அந்த ஏதேனும் ஒரு புத்தகம் அங்கே இல்லை என்றால், அந்த ஏதேனும் ஒரு பதிப்பகத்து நிர்வாகி மறக்காமல் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறார். வருபவர்கள் எல்லாம், நான் அங்கே கேட்டேன், இங்கே கேட்டேன், எல்லாரும் உங்க கடையிலதான் கிடைக்கும் என்று சொன்னார்கள் என்று சொல்லியவண்ணம் இருந்தார்கள். அவர்கள் கேட்ட புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்னும் விவரங்கள் எங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனைச் சொல்லி அனுப்பி வைத்தோம். இதற்கே ஒரு நாளில் கணிசமான நேரம் செலவானது. இது ஒரு சந்தோஷமான விஷயம்தான்!
* காலை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னார், “500 கோடில என்ன மாநாடு வேண்டியிருக்கு. வண்டில போறதுக்கு வர்றதுக்கு ஒழுங்கா ரோடு இல்லை…. அப்துல் கலாம் எல்லாம் இல்லாம ஒரு மாநாடா?…” என்றார். சரி ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருக்குமோ என சந்தேகம் வந்தபோது அவரே தீர்த்து வைத்தார், “நேத்து எஸ்.எஸ்.சந்திரன் கேட்டான் பாருங்க சார், தேசிய கீதத்துக்கே எந்திரிச்சி நிக்கமுடியலையே…”
நல்லவேளை, வீடு வந்துவிட்டது!
//500 கோடில என்ன மாநாடு வேண்டியிருக்கு. வண்டில போறதுக்கு வர்றதுக்கு ஒழுங்கா ரோடு இல்லை…. அப்துல் கலாம் எல்லாம் இல்லாம ஒரு மாநாடா?//
அது
சுமை கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்
https://www.envazhi.com/?p=19346
///அடுத்து தமிழ் வளர்ச்சிக்கு பெரும் நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்தார் முதல்வர். அதாவது ரூ 100 கோடி. செம்மொழி மாநாட்டுக்கு செலவு ரூ 311.5 கோடியாம். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி மட்டும்தானாம்!///
பேசாமல் மாநாடு நடத்தாமலே அந்த ரூபாய் நூறு கோடியைத் தமிழுக்கு ஒதுக்கியிருந்தால் ரூபாய் 311 .5 கோடி மிச்சமாகியிருக்கும்!
தமிழ்ஹிந்துவுக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்….
இட்லிவடையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை…
என்ன நடக்கிறது தமிழ்ஹிந்துவில்?!
ஒரு நண்பர் நெட்டில் என்ன நடக்குது என்று கேட்டார். தமிழ்ஹிந்து பற்றியும் சொன்னேன். அப்படி ஒரு வலைத்தளம் இருக்குதா என்ன என்றார். ‘சட்ட கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திரலாம்… நெஞ்சு கிழிஞ்சிருச்சே… எங்க முறையிடலாம்’ என்ற பாட்டு பின்னணியில் ஓடியதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
உண்மை! இன்னும் தமிழர்கள் குறிப்பாக இணையத்தில் உலா வரும் ஹிந்து தமிழர்கள் அனைவரும் தமிழ் ஹிந்துவை அறியுமாறு செய்ய வேண்டும்! நண்பர்களுக்கு சொன்னேன்! நன்றி!
//இட்லிவடையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை//
இட்லியும் வடையும் தமிழ் ஹிந்துக்கள் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த கொடைகள் அல்லவா…அதனால்தான் இட்லி வடை சமாச்சாரமும் இங்கு வரும். கோவை அண்மையில் உருப்படியாக நடந்த ஒரே விசயத்தை தமிழ்ஹிந்து எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும் சொல்லுங்கள்? மேலும் இட்லிவடையிலேயே வரவேண்டிய கட்டுரைன்னாலும் மஞ்ச பெயிண்ட் இல்லாம படிக்க எவ்வளவு நல்லாருக்கு யோசிச்சு பாருங்க
அய்யா,
இந்த செம்மொழி மாநாட்டில் பல நிறைவான விஷயங்கள் இருந்தாலும்
தங்களுக்கு மட்டும் மாநாடு முகப்பு, ரோடு, கருணாநிதி நிக்க முடியல என்ற விபரங்கள் பதிவு செய்ய எண்ணம். ஏனென்றால் கருணாநிதி எது செய்தாலும் தங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட நபர்கள் அதை பொறுத்து கொள்ளமாட்டிர்கள். முதல்வர் முதுமை காரணமாக எழ முடியவில்லை .திரு s .s .சந்திரன் அவர்களுக்கும் முதுமை வரும். காலம் பதில் சொல்லும்.
தமிழ் ஹிந்து – தனிமனித தாக்குதல் வேண்டாம். இந்த வலைபூ நல்ல கருத்துக்களுக்கு மட்டுமே.
நன்றி,
கோ . முனுசாமி
சென்னை.
ஐயா சென்னை கோ முனுசாமி,
அந்த முதுமைக்கு மருவாதி கொடுத்து அவர் பதவிலேர்ந்து விலக வேண்டியதானே சாமி? அவர் முதல்வரா இல்லேன்னு இப்ப இந்த கேள்வி இந்த எஸ் எஸ் சந்திரன் கேப்பாரா? நாமதான் கேக்க விடுவோமா?
தனிமனிதத் தாக்குதல் இல்லை அது, அது நம் சமுதாயத்தின் நிலை!
-அஞ்ஞானி
மு்துமையை ஏளனம் செய்யக் கூடாதுதான் .
ஆனால் திருதராஷ்ட்ரன் போல் சாகும் வரை, தான் ,தனது ,தனது குடும்பத்துக்கு என்று பேராசை கொண்டு வாழும் வாழ்வு ஏளனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாது.
தனி மனிதர்க்கே அது பொருந்தும். அதனால்தான் வானப்ரஸ்தம் என்ற ஒரு நிலை நம் வாழ்வில் கூறப்படுகிறது.
அப்படியானால் நாடாள்வோர் எப்படி இருக்க வேண்டும்?
இரா.ஸ்ரீதரன்
Promote & market https://www.tamilhindu.com to increase the reach.
As a visitors we can also help, by googling the site name(eventhough we knew) and visit the site from the google link. This will increase the page ranking.